• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
59
வெளியே லேசாக மழை தூற்றல் போட்டுக் கொண்டிருக்க, சிலு சிலுவெனக் காற்று வீசிக் கொண்டிருந்தது.

கண்மணி வெளியே எட்டிப் பார்த்து விட்டு சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டது.

கனகாம்பரியும் சின்னவர்களும் வீட்டின் நடுக் கூடத்தில் பாயை விரித்து அமர்ந்திருந்தார்கள்.

பாய் முழுவதும் ஏதேதோ சிறு சிறு பெட்டிகளும் பைகளும் கிடந்தன.

அவை அனைத்தினுள்ளும் சின்னவர்களுக்காக வாங்கி வந்த பரிசுப் பொருட்களும் தின்பண்டங்களும் கிடந்தன.

ஒரு பையைத் திறந்து
“இது தான் உள்ளி முறுக்கு ரொம்ப அருமையாக இருக்கும் சாப்பிட்டுப் பாருங்கள்”
என்றபடி எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடக் கொடுத்தாள்.

எல்லோரையும் விட விஷ்ணு சந்தோஷமாக வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான்.

“அக்கா இதை வீட்டில் செய்து கொடுக்க மாட்டாயா?”

“விஷ்ணு இந்த முறுக்கு உனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதா?”

“ஆமாம் அக்கா ரொம்பப் பிடித்திருக்கிறது”

“சரி சரி முதலில் இதைச் சாப்பிடு நாளைக்கு செய்து கொடுக்கிறேன்”

“அக்கா என்றால் அக்கா தான்”
என்றபடி முறுக்கு சாப்பிடுவதில் மும்முரமானான்.

ஒவ்வொருவருக்கும் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அவரவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தவளோ தன் பின்னாள் வந்து நின்றவனைக் கவனிக்கவில்லை.

அதற்குள் தங்கள் சித்தப்பாவைப் பார்த்த சின்னவர்களோ
“சித்தப்பா எப்போது வந்தீர்கள்”
என்றபடி அவனைக் கட்டிக் கொண்டார்கள்.

அவர்கள் போட்ட கூச்சலில் திரும்பிப் பார்த்தவள் திகைத்துத் தான் போனாள்.

இங்கே நடுக்கூடம் வரையில் இந்த அத்தான் வந்து நிற்கிறாரே என்னவாக இருக்கும்.

அந்தப் பொண்ணு எங்கே போய் விட்டாள் என்பது போல அவனிற்குப் பின்னால் எட்டிப் பார்த்தாள்.

அவள் எட்டிப் பார்ப்பதனைப் பார்த்தவனோ
“நான் மட்டும் தான் வந்திருக்கிறேன். வேறு யாரும் வரவில்லை”
என்றான் உணர்ச்சி அற்ற குரலில்.

அவனை ஒரு தடவை அண்ணாந்து பார்த்தவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

சின்னவர்களோ அவனைக் கட்டிக் கொண்டு தொங்கினார்கள்.

அவர்களை அணைத்துக் கொண்டவனின் பார்வை கனகாம்பரியின் கவிழ்ந்திருந்த தலை மீதே படிந்திருந்தது.

“மனோ, விஷ்ணு, பிரியா, மோகனா எல்லோரும் வீட்டுக்குப் போங்கள்”

“ஏன் சித்தப்பா… அங்கே போய் என்ன செய்வது”

“அங்கே உங்களின் வருணாச்சித்தி வந்திருக்கிறாள்”

“நிஜமாகவா அத்தான் அப்படி என்றால் போகிறோம்”
என்றபடி வீட்டுக்கு ஓடத் தொடங்கினார்கள் பிள்ளைகள்.

சின்னவர்கள் வீட்டின் படலையைத் தாண்டும் வரையில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனோ அவர்கள் அவ்விடம் விட்டுச் சென்றதும் இந்தப் பக்கம் திரும்பினான்.

சின்னவர்களையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளோ அவன் இந்தப் பக்கம் திரும்புவதைப் பார்த்ததும் பட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

கன நேரமாக அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே லேசாக நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளையே தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையைத் தொடர்ந்து விழி கொண்டு பார்க்க முடியாமல்
“மோர் ஏதாவது குடிக்கிறீர்களா?”
என்று கேட்டு வைத்தாள்.

“ஒரு வழியாக இப்போதாவது கேட்க வேண்டும் என்று உனக்குத் தோன்றியதே அதுவே போதும்”
என்றவன் எழுந்து கொண்டான்.

அவன் எழுந்து கொண்டதைப் பார்த்ததும் தானும் எழுந்து கொண்டாள் அவள்.

“ஏன் அம்பரி என்னைப் பார்த்ததும் ஏதோ பேய் பிசாசைப் பார்த்தது போல ஓடி வந்தாய்”

“அப்படி எல்லாம் இல்லையே நான் சாதாரணமாகத் தானே வந்தேன். எனக்கு இங்கே சிறிது வேலை இருந்தது”

“நிஜமாகவா சாதாரணமாகத் தான் வந்தாயா?”

“ஆமாம்”

“பாடல் கேட்டு இரசித்துக் கொண்டிருந்த வானொலியை அங்கேயே மறந்து விட்டு வரும் அளவிற்கு நீ சாதாரணமாக வந்திருக்கிறாய் அப்படித்தானே”
என்றபடி வானொலிப் பெட்டியை அவளிடம் கொடுத்தான்.

அப்போது தான் அவனது கையில் இருந்த தனது வானொலிப் பெட்டியைப் பார்த்தவள் விழித்துக் கொண்டு நின்றாள்.

அவள் விழித்துக் கொண்டு நின்ற விதத்தைப் பார்த்தவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.

அதுவரை ஏதோ பட்டும்படாமல் அவள் செய்ததை நினைத்துக் கடுப்புடன் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பினான்.

“எப்படி இருக்கிறாய் அம்பரி”

“நலமாக இருக்கிறேன்”

“படிப்பு எல்லாம் முடிந்து விட்டதா?”

“முடிந்து விட்டது”

“அடுத்த கட்டமாக என்ன செய்ய உத்தேசம்”

“அடுத்தது… இதே ஊர்ப் பள்ளிக் கூடத்தில் படிப்புச் சொல்லிக் கொடுக்க விருப்பம்”

“உன் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்”

“நன்றி”
என்றவள் நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவன் தெருவில் இறங்கி விட்டிருந்தான்.

எனக்கு என்ன தான் நடந்தது?
அவர் யாரைத் திருமணம் செய்தால் எனக்கு என்ன?
வீட்டிற்கு வந்தவரிடம் ஒழுங்காகப் பேசக் கூடவில்லை.
என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ. அவருக்கென்று வாங்கிய பரிசைக் கூடக் கொடுக்க முடியவில்லையே… என்று தனக்குள் பேசியபடி அவ்விடத்திலேயே அமர்ந்து விட்டாள் கனகாம்பரி.

அங்கே வெளியே சென்று கொண்டிருந்த புவியரசன் நேராகத் தனது வயலுக்குச் சென்றான்.

அவனுக்கு சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும் போல இருந்தது.

அவளது பாராமுகம் அவனை என்னவோ செய்தது.
இந்த அம்பரிக்குத் திடீரென என்ன தான் நடந்தது?
வழமையான வாயாடித்தனத்தைக் காணவில்லை.
வார்த்தைக்கு வார்த்தை அத்தான் அத்தான் என்று ஏலம் போடுவாளே அதைக் கூடக் காணவில்லை.
காத்துக் கறுப்பு ஏதும் அடித்து இருக்குமோ? எனச் சிந்தித்தபடியே வரப்பில் நடந்து சென்றான்.

அவன் கொழும்பில் இருந்த போது வருணா அவனை அழைத்து அழைப்புகளில் ஏதோ ஒரு உள்ளுணர்வு அடிக்கடி அவனுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும்.

ஏதோ ஒன்றை எங்கேயோ விட்டு வந்த உணர்வு, ஏதோ ஒரு அழைப்புக்காகச் செவிகள் ஏங்குவது போன்ற உணர்வு.

ஆனால் அது என்னவென்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை.
அதே உணர்வு இப்போதும் தோன்றியது.

அதைப் பற்றியே யோசித்தபடி சென்று கொண்டிருந்தான்.
அவன் நடந்து சென்ற பாதையின் வரப்பில் ஓரமாக ஒரு சிறு பூச்செடி நின்றிருந்தது.
அதில் இருந்த பூக்கள் அவனைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது.

ஏதோ உந்துதலில் அதனருகே சென்று சற்றுக் குனிந்து பார்த்தவனின் மனதில் ஏதோ மத்தாப்புச் சிதறுவது போன்ற உணர்வு சட்டென்று தோன்றியது.

இது நாள் வரையில் மனதில் மொட்டாக மூடியிருந்த ஒரு விடயம் மொட்டவிழ்ந்து விரிந்து வாசனை பரவியதும், தனது இனம் தெரியாத உணர்வும் அதற்கான அர்த்தமும் புரிந்ததில் அவன் முகமே பிரகாசமாகி வழமையான அவனது புன்னகை முகத்தில் குடி வந்தது.

அவன் சற்றே குனிந்து நின்ற செடி ஒரு கனகாம்பரச் செடி, அந்தப் பூவைப் பார்த்ததும் அவனுக்குச் சட்டென்று கனகாம்பரியின் முகமே மனதில் வந்து போனது.

அவளின் அத்தானென்ற அழைப்புக்காக மனம் கிடந்து தவிப்பது போலத் தோன்றியது.

அவளது சுட்டித்தனமும் துடுக்குத்தனமும் அவனைக் கட்டிப் போடும் கயிறு போலத் தோன்றியது.

அந்தச் செடியில் மலர்ந்து சிலிர்த்துக் கொண்டிருந்த கனகாம்பரப் பூக்களைப் பார்த்ததும் தான் அவனுக்குத் தனது உள்ளக் கிடக்கை புலப் பட்டது.

அவள் பாராமுகமாகக் கண்டு கொள்ளாமல் சென்றதால் நான் ஏன் இப்படி ஏதோ மாதிரி உணர்கிறேன் அதற்கென்ன காரணம் என்று யோசனையில் இருந்தவனுக்கு எல்லாமே வெட்டவெளிச்சமானது.

நான் அம்பரியைக் காதலிக்கிறேனா? அவளது பாராமுகம் என்னை வதைத்ததற்கும் இது தான் காரணமா ? எந்தப் பெண்ணிடமும் தோன்றாத உணர்வு அவளிடம் மட்டும் தோன்றியதற்கு இது தான் காரணமா?
என்று எண்ணியவன் அதற்கெல்லாம் ஆமாம் என்ற பதிலைத் தனது மனது கொடுக்கவும் இறக்கையின்றி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான்.

அவளின் மேல் தனக்குக் காதல் மலர என்ன காரணம் என்று யோசித்தவனுக்கு அழகழகான காரணங்கள் கிடைத்தன.

ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையில் ஒரு இலட்சியத்தை வைத்துக் கொண்டு அதை நோக்கி அவள் பயணிப்பது பிடித்திருந்தது.

யாரைப் பற்றியுமே யாரிடமும் புறம் பேசாத அவளது பண்பு பிடித்திருந்தது.

எப்போதுமே எதைப் பற்றியாவது அவள் பேசிக் கொண்டே இருப்பது பிடித்திருந்தது.

அவனைப் போல அவளும் விவசாயத்தையும் இந்த வயல் வாய்க்காலையும் உயிரென நேசிப்பது அவனுக்குப் பிடித்திருந்தது.

எந்த நேரமும் கலகலப்பாகப் புள்ளிமானைப் போலத் துள்ளித் திரியும் அவளது சுபாவம் பிடித்திருந்தது.

இன்னும் எத்தனையோ சிறு சிறு காரணங்களுக்குக் கூட அவளைப் பிடித்திருந்தது.

அவளைத் தினமும் பார்க்கும் போது தோன்றாத உணர்வுகள் அவளைப் பார்க்காமல் கொழும்பில் இருந்த போது தோன்றிய போது கூட அதை ஏதோ அவள் மேல் கொண்ட நட்பு என்றே நினைத்திருந்தான்.

ஆனால் இன்றல்லவா அவனது கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது.

விவசாயம் மட்டுமே தன் கனவு, இலட்சியம், உயிர், வாழ்க்கை என்று இது நாள் வரையிலும் நினைத்துக் கொண்டிருந்த புவியரசனின் மனதில் தனக்கே தனக்கென்று ஒரு சிம்மாசனத்தைப் போட்டு அதில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டாள் கனகாம்பரி.

“மனசெல்லாம் மத்தாப்புச் சிதற
தொலைகிறேனடி உனது விழிகளில்

உயிர் வரை உன் நினைவு தீண்ட
விதையாய் விழுந்து விருட்சமானவளே!

இலக்கியங்களில் படித்த காதலை
உணர்கிறேன் பெண்ணே இன்று உன்னால்

இதயத்தை நீ திருடிச் செல்ல
அதைக் கைகட்டி ரசிக்கிறேனடி

கனவெல்லாம் உன்னைக் கைப் பிடிக்கும்
நாட்களைச் சுமந்தே செல்கிறது பெண்ணே!”

என நொடியில் அவனது உள்ளத்தில் ஒரு கவிதை மலர்ந்தது.

“பரவாயில்லையே நமக்கும் கவிதை யோசிக்க வருகிறதே…. காதலிக்கும் ஆட்கள் போலக் கவிஞர்கள் கிடையாது என்று பாடல் எழுதி வைத்தது உண்மை தான் போல”
என்றபடி தனது முடியை அழுந்தக் கோதிக் கொண்டான் புவியரசன்.

ஏற்கனவே அழகாக இருந்த வயலும் வாய்க்காலும் குளமும் அவன் பார்வையில் இரட்டிப்பு அழகானது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"காணும் காட்சி யாவிலும் ஏனோ உன் முகம் தோன்ற

காகிதங்கள் எங்கும் என் பேனா தானே எழுதும் உன் பெயர்

காசு பணம் கொட்டிக் கொடுத்தாலும் உன் அன்புக்கு ஈடாகுமோ?

காத்துக் கிடக்கிறேனடி காரிகை உன் கரம் பற்றிட

காகிதக் கப்பலோ கானல் நீரோ இல்லையடி என் காதல்

காலங்கள் ஓடினாலும் வற்றிடாத கடலை விட ஆழமானதடி என் காதல்!"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top