• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கம்பர்மலையின் எல்லையில் கோவில் கொண்டிருக்கும் அம்மன் கோவிலில் திருவெம்பாவைப் பூஜைக்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன.

மார்கழி மாதத்துத் திருவெம்பாவை என்றாலே மனதில் ஏதோ இனம் புரியாத உணர்வு தோன்றிப் பக்திப் பரவசத்தைத் தூண்டச் செய்து விடும்.

அம்மனுக்குச் சூட்டுவதற்காக வெண்தாமரைகளையும் செந்தாமரைகளையும் குளத்திலிருந்து பறித்துக் கொண்டிருந்தார் குருக்கள்.

அவர் மலர்களைப் பறிப்பதை வேடிக்கை பார்த்தவாறு கரையில் நின்றிருந்தாள் கனகாம்பரி.

“வேடிக்கை பார்த்தது போதும் கனகா இதைக் கொஞ்சம் வாங்கி வைத்திரு”
என்றபடி ஒரு கூடைப் பூக்களை அவளிடம் கொடுத்தார் அம்மன் கோவில் குருக்கள்.

கரையிலே இருந்த படிக்கட்டில் அமர்ந்தபடியே குருக்கள் கொடுத்த தாமரை மலர்களில் மாலை தொடுக்கத் தொடங்கினாள் அவள்.

அதே நேரத்தில் கோவிலின் குளத்துக்கு சற்றே தள்ளி இருந்த வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தான் புவியரசன்.

அவன் இடையிடையே மாலை தொடுத்துக் கொண்டிருந்தவளை இரசிக்கவும் தவறவில்லை.

ஏதோ உந்துதலில் வயலோரம் விழிகளை உலாவ விட்ட கனகாம்பரி அங்கே புவியரசனைக் கண்டதும் சட்டென்று எழுந்து கோவிலினுள்ளே சென்று விட்டாள்.

மீண்டும் அவளைப் பார்ப்பதற்காகத் திரும்பிய புவியரசன் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவளைத் தேடிச் சலித்துப் போனான்.

கண்டிப்பாக தன்னைப் பார்த்து விட்டுத் தான் அவள் அங்கிருந்து எழுந்து போயிருப்பாளோ என்று தோன்றியது.

மீண்டும் ஏன் இவ்விதம் செய்கிறாள் என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால் அவனுக்கு அதற்கான விடை தான் கிடைக்கவில்லை.

அதே யோசனையுடனேயே தனது வயல் வேலைகளை முடித்து விட்டு வீடு சென்றான் புவி.

அங்கே வீட்டில் ஒரே பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள் சுந்தரவல்லி.

“பெரியண்ணி இவ்வளவு பரபரப்பாக வேலை செய்கிறீர்களே எங்காவது செல்லப் போகிறீர்களா?”

“வா புவி… உன்னைத் தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்”

“ஏன் பெரியண்ணி என்ன விஷயம்”

“நாங்கள் எல்லோரும் இன்று கனகம் வீட்டுக்குப் போக வேண்டும்”

“அம்பரி வீட்டுக்கா அண்ணி”

“ஆமாம் அந்த அம்பாரி வீட்டிற்கு தான்”

“ஐயோ பெரியண்ணி அது அம்பாரி இல்லை அம்பரி”

“அது எனக்கும் தெரியும் சும்மா சொல்லிப் பார்த்தேன்”
என்று சிரித்தபடி வேலைகளை முடிக்கத் தொடங்கினாள் சுந்தரவல்லி.

அதே நேரத்தில் அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் மீனாட்சியும் வருணாவும்.

“அக்கா நானும் வர வேண்டுமா?”

“ஏன் மீனா நீ இந்தக் குடும்பம் இல்லையா?”

“ஐயோ அப்படி இல்லை அக்கா”

“பிறகு ஏன் இந்தக் கேள்வி”

“இல்லை அக்கா எல்லோரும் அங்கே வந்தால் இங்கே வீட்டுக்குக் காவல் யார்? என்று தான் கேட்க வந்தேன்”

“இவ்வளவு பெரிய வீட்டை யாரும் தூக்கிக் கொண்டு போய் விட மாட்டார்கள் மீனா”

“அதில்லை அக்கா”

“ஏன் மீனா… கனகம் வீட்டிற்கு வருவதற்கு உனக்கு இஷ்டம் இல்லையா?”

“வருகிறேன் அக்கா”
என்று சலிப்புடன் சொல்லிய படி தானும் வேலைகளில் ஈடுபட்டாள் மீனாட்சி.

அப்போது வருணாவைப் பார்த்த சுந்தரவல்லி
“வருணா நீயும் எங்களுடன் கிளம்பி வருகிறாயா?”
என்று கேட்டாள்.

அதற்குப் பதிலைச் சொல்ல மீனாட்சி வாயைத் திறக்கும் முதல்
“அக்கா நானும் வருகிறேன். எங்கே என்னை அழைக்க மாட்டீர்களோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்”
என வருணா முந்திக் கொண்டாள்.

தங்கையை முறைக்க முடியாமல் தனது எரிச்சலைப் பாத்திரத்தில் காட்டி அதை வேகமாக உருட்டினாள் மீனாட்சி.

மீனாட்சியின் சுபாவத்தை அறிந்திருந்த சுந்தரவல்லியோ புன்னகைத்தவாறு
“ஏன் மீனா பாத்திரம் உன்னை என்ன கேட்டது வாயில்லாத அந்த ஜீவனை இப்போது ஏன் இப்படி உருட்டுகிறாய்”
என்று கேட்டாள்.

அதற்கு மீனாட்சியோ தனது முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி இளித்து வைத்தாள்.

“அண்ணி இப்போது எதற்குப் பற்பொடிக்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள்”
என்று தன் பங்குக்குத் தன் சின்னண்ணியைக் கிண்டல் செய்தான் புவியரசன்.

“கொழுந்தனாரே நீங்களுமா”?”

“சரி சரி மன்னித்து விடுங்கள் சின்னண்ணி”

“மன்னிப்பெல்லாம் எதற்குக் கொழுந்தனாரே நீங்கள் இப்படிப் பேசுவது கேட்பதற்குச் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது”

“நிஜமாகவா?”

“அதற்காகத் தினமும் என்னையே குறி வைத்துத் தாக்கக் கூடாது. மற்றவர்களும் பாவம் தானே அவர்களையும் அவ்வப்போது கிண்டல் செய்யுங்கள்”

“சின்னண்ணி நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்களா? கேலி செய்கிறீர்களா? என்றே தெரியவில்லை.”

“அட நீங்கள் வேறு கொழுந்தனாரே அது எனக்குக் கூடத் தான் தெரியவில்லை”
என்று மீனா சலித்துக் கொள்ளவும் அங்கே இருந்தவர்கள் பக்கென்று சிரித்து விட்டார்கள்.

அவர்களுடன் மீனாட்சியும் இணைந்து கொண்டாள்.

ஒரு வழியாக வேலைகளை முடித்து விட்டு எல்லோரும் ஆளாளுக்கு ஏதேதோ பேசிச் சிரித்தபடி சின்னராசாவின் வீட்டிற்குப் படிப்பு முடித்து விட்டு வந்த கனகாம்பரியைப் பார்க்கச் சென்றார்கள்.

மீனாட்சியும் ஏதோ கடமையே என்பதற்காக அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

மீனாட்சி எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாமல் உடனுக்குடன் பேசும் ரகம். தான் பேசுவதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்கிற தயக்கம் எல்லாம் அவளுக்கு எப்போதுமே இருந்ததில்லை.

அவளது கணவன் எழிலரசனில் இருந்து அந்த வீட்டுக் கடைக்குட்டி புவியரசன் வரையில் அனைவருமே அவளது சுபாவம் அறிந்து அதற்கேற்பவே அவளுடன் பேசிக் கொள்வார்கள்.

அவள் பேசுவது சில சமயங்களில் மனதைத் தைத்தாலுமே அவளாகவே அதை உணர்ந்து வந்து அதற்கு மன்னிப்புக் கேட்கும் வரை அவளை யாரும் குத்திப் பேச மாட்டார்கள்.

அவளுக்கு நிறையவே விட்டும் கொடுப்பார்கள்.

விட்டுக் கொடுக்கும் உறவுகள் கெட்டுப் போவதில்லை என்பதற்கிணங்க நடந்து கொள்வதால் தான் அவர்கள் குடும்பம் உடையாமல் இன்றும் நிலைத்து நிற்கிறது.

மீனாட்சியின் பேச்சு சில சமயங்களில் பெரிய சண்டையாகாமல் அந்தக் குடும்பத்தினர் நடந்து கொள்வார்கள்.

மீனாட்சி கனகாம்பரியின் வீட்டிற்கு வரத் தயங்குவதற்கும் அவளிடம் ஒரு காரணம் இருந்தது.

கங்கையமரன் தனது மூத்த மகளை அவளிஷ்டம் போலவே நடத்தியதால் அவளுக்கு அவள் விருப்பம் தான் எப்போதுமே பிரதானமாக இருந்தது.

அந்த விருப்பங்களில் ஒன்று தன் தங்கையைத் தனது கொழுந்தனாருக்கு கட்டி வைக்க வேண்டும் என்ற விருப்பம்.

அந்த விருப்பம் மனதில் தோன்றியதில் இருந்து அவளுக்கு ஏனோ கனகாம்பரியிடம் ஒரு விதப் பிடிப்பின்மை தோன்றத் தொடங்கி விட்டது.

அது ஏனெனில் புவியரசன் கனகாம்பரியிடம் பேசும் போது மட்டுமே ஏனோ சந்தோஷமாகப் பேசிக் தொலைகிறான்.

ஒரு வேளை அவளைத் தான் காதலிக்கிறேன் என்று வந்து நின்றால் இங்கே வீட்டில் யாருமே மறுக்கப் போவதுமில்லை. பிறகு அவளது விருப்பம் என்ன ஆவது என்று எண்ணிக் கொண்டாள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻

அங்கே தீடீரென வாசலில் கூட்டமாக வந்து நின்ற குடும்பத்தினரைப் பார்த்ததும் கனகாம்பரிக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்று தானே நினைக்கிறீர்கள்.

அப்படி நடந்தால் அது கனகாம்பரியின் சுபாவமாக இருக்காதே, அவள் வழமை போலத் தனது கலகலப்பான சுபாவத்துடனேயே நடந்து கொண்டாள்.

“குடும்பமாக எங்கே கிளம்பி விட்டீர்கள் எல்லோரும் என்னைப் பார்க்கத் தான் வந்தீர்களா? அப்பாவும் ஆச்சியும் வெளியே போய் இருக்கிறார்கள்.

பரவாயில்லையே நல்ல பழக்கம் தான் வெளியூருக்குப் போய் வந்தால் அந்த நபரைக் குடும்பமாகப் பார்க்க வருவது என்பது நல்லது தான்… ஆமாம் சுந்தரிக்கா எனக்காக உங்கள் கைப்பக்குவத்தில் என்ன கொண்டு வந்து இருக்கிறீர்கள்”
எனக் கடகடவெனப் பேசிக் கொண்டிருந்தவள் அப்போது தான் வாசலில் நுழைந்து கொண்டிருந்த புவியரசனையும் வருணாவையும் பார்த்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

கனகாம்பரியின் அருகே நின்றிருந்த மீனாட்சி அவளது காதுகளுக்கு மட்டும் கேட்கும் படியாக
“ஜோடிப் பொருத்தம் ரொம்பவும் அருமையாக இருக்கிறது அப்படித் தானே கனகா”
என்று சொன்னாள்.

அதைக் கேட்ட கனகாம்பரிக்கு ஏனோ அதை ஒத்துக் கொள்ள மனம் முரண்டு பிடித்தது.

அவளுக்கு என்ன தான் வேண்டும் என்று அவளுக்கே புரியவில்லை.

மீனாட்சி கேட்டதற்குப் பதிலாகச் சிரிக்கிறேன் பேர்வழியென்று இளித்து வைத்தவளோ மறந்தும் கூடப் புவியரசனின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

அவனோ இவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.

நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென அமைதியானதைப் பார்த்த அழகரசன்
“என்ன பிள்ளை… மடை திறந்த வெள்ளம் போலப் பேசிக் கொண்டு இருந்து விட்டு இப்படி அமைதி ஆகி விட்டாயே”
என்றபடி சிரித்தான்.

“பேசிக் கொண்டே இருந்தால் அக்காவுக்கு வாய் நோகாதா? அதனால் தான் இந்த அமைதி”
என்றபடி அவளுக்கருகில் சென்று நின்றான் விஷ்ணுபிரியன்.

“ஆமாம் ஆமாம்”
என்று அதற்குப் பின்பாட்டுப் பாடினார்கள் அவனது சகோதரர்கள்.

அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்ட கனகாம்பரி எல்லோருக்கும் குவளை நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்ன கனகா பச்சைத் தண்ணீர் மட்டும் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறாயா?”
என்று சட்டென்று கேட்டாள் மீனாட்சி
அவளது கேள்விக்குக் கனகாம்பரி பதில் சொல்வதற்கு முன்பாக மீனாட்சியின் தவப் புதல்வன் விஷ்ணுப்பிரியன் முந்திக் கொண்டான்.

“அம்மா… அக்கா ஒன்றும் உங்களைப் போல இல்லை. நிறையத் தின்பண்டங்கள் இப்போது வரும் பாருங்கள்”
எனக் கனகாம்பரிக்கு வக்காலத்து வாங்கினான்.

மகன் திடீரெனச் சொன்னதைக் கேட்டதும் சிறிது நேரம் பேச்சற்று அவனை முறைத்துப் பார்த்தாள்.

ஆனால் விஷ்ணுவோ தாயைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

அவனது கவனம் முழுவதும் அக்கா தனக்கு என்ன பலகாரங்கள் தரப் போகிறாள் என்பதிலேயே நிலைத்திருந்தது.

மீனாட்சியைப் பார்த்த கனகாமாபரி
“மீனாக்கா… வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் அருந்தக் கொடுப்பது நமது சம்பிரதாயம் உங்களுக்குத் தெரியாதா?”
என்று கேட்ட படி சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

அவள் மீண்டும் சமையலறை நோக்கிச் செல்லத் திரும்புவதைப் பார்த்த சுந்தரவல்லியோ அவளுடன் தானும் சென்றாள்.

“அக்கா… ஏதாவது வேண்டுமா?”

“எனக்கு ஒன்றும் வேண்டாம் கனகம்… நான் உனக்கு உதவிக்கு வந்தேன்”

“அடடா நன்றி அக்கா”

“ஏய் இதற்கெல்லாம் எதற்கு நன்றி… ஒரு ஒத்தாசை தானே…”

“சும்மா சொல்லக் கூடாது அக்கா… நிலமை அறிந்து உதவுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்”

“சும்மா போடி…”

“உண்மை தான் அக்கா… நான் வேண்டுமென்றால் சத்தியம் செய்யட்டுமா?”

“அடப் போடி இவளே.. சரி என்னைப் புகழ்ந்து தள்ளுவது இருக்கட்டும் உன் படிப்பெல்லம் முடிந்து விட்டது தானே… எங்கள் உறவுப் பெண் படித்து முடித்து ஊருக்கு வந்திருக்கிறாளே அவளைப் பாராட்டி நலம் விசாரிக்கத் தான் நாங்கள் குடும்பமாகவே வந்தோம்”

“நிஜமாகவா அக்கா… படிப்பெல்லாம் முடிந்து விட்டது அக்கா... மாசி மாதத்தில் இருந்து பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும் அக்கா… நானும் வாத்தியாரம்மா தான் தெரியுமா?”

“உன் பாட்டியிடம் சொல்லி உனக்கு முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்ல வேண்டும்”
என்றபடி கனகாம்பரிக்குத் திருஷ்டி கழிப்பது போல விரல்களை நெட்டி முறித்தாள் சுந்தரவல்லி.

அவளது செய்கையில் சந்தோஷமாக உணர்ந்தவளோ சட்டென்று சுந்தரவல்லியை இறுகக் கட்டிக் கொண்டாள்.

தன்னைக் கட்டிக் கொண்டவளை ஒரு தாயன்புடன் அணைத்து விடுவித்த சுந்தரவல்லி
“சரி சரி இந்தப் பாசப் பயிரைப் பிறகும் வளர்த்துக் கொள்ளலாம். அங்கே விஷ்ணுக்குட்டி வழிமேல் விழி வைத்து உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பான் சீக்கிரமாக வா போகலாம்”
என்றபடி இரண்டு பலகாரத் தட்டுக்களை எடுத்துக் கொண்டு முன்னே நடந்தவளை இன்னும் இரண்டு பலகாரத் தட்டங்களுடன் தொடர்ந்தாள் கனகாம்பரி.

பலகாரத் தட்டுக்கள் வருவதைப் பார்த்த விஷ்ணு கைகளைத் தட்டியபடி துள்ளிக் குதித்தான்.

அவனைப் பார்த்த மற்றவர்கள் வாய் விட்டே சிரித்தனர்.

“என் மானத்தைக் கப்பலேற்றாமல் சும்மா இரு விஷ்ணுக் குட்டி”
என்று மகனைக் கடிந்து கொண்டாள் மீனாட்சி.

“சின்னப் பையன் தானே சின்னண்ணி இதில் என்ன இருக்கிறது அவனைத் திட்டாதீர்கள்”
என்றபடி விஷ்ணுவை இழுத்துத் தன்மடியில் இருத்திக் கொண்டான் புவியரசன்.

அண்ணன் சித்தப்பாவின் மடியில் அமர்வதைப் பார்த்த கானப்பிரியா எழிலரசனின் மடியில் இருந்து வேகமாக இறங்கி ஓடி வந்து புவியின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“அக்கா செய்யும் இனிப்பே தனி ருசி தான்”
என்று சிலாகித்தபடி அதைக் கொறிக்கத் தொடங்கினான் விஷ்ணு.

“அதெல்லாம் கடையில் இருந்து வாங்கிய இனிப்புகள்… கனகாவிற்கு இனிப்பின் பெயர்களே தெரியாது பிறகெப்படி அவள் அதைச் செய்திருக்க முடியும். ஆனால் வருணாவிற்கு நிறைய இனிப்புகள் செய்யத் தெரியும் இல்லையா வருணா”
என்று இடையில் புகுந்த மீனாட்சி அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வருணாவையும் தன் பேச்சுக்குள் இழுத்து விட்டாள்.

திடீரெனத் தன் பெயர் அடி படவும்
“என்னக்கா என்ன கேட்டீர்கள்”
என்று திடுக்கிட்டுத் தமக்கையைப் பார்த்தாள் வருணா.

“உனக்கு நிறைய இனிப்புகள் செய்யத் தெரியுமென்று உன் அக்காள் சொல்கிறாள்”
என்று எடுத்துக் கொடுத்தான் எழிலரசன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் தனது தலையில் கைவைத்தபடி
“என்னது எனக்கு நிறைய இனிப்புகள் செய்யத் தெரியுமா? இது எப்போதிலிருந்து எனக்கே தெரியாதே… அக்கா எனக்கு இனிப்பின் பெயர்களே ஒழுங்காகத் தெரியாது இதில் எங்கிருந்து இனிப்பு செய்யத் தெரிவது நல்ல வேடிக்கை தான்”
என்றாள் பாவமாக.

“பார்த்தீர்களா அம்மா சித்திக்கு இனிப்புப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை ஆனால் அக்காவிற்குத் தெரியும் தெரியுமா?”
என்றான் மறுபடியும் விஷ்ணு.

தங்கை காலை வாரி விட்டதால் கடுப்பாக இருந்தவளோ அதை ஏற்க மறுத்து
“வருணா படிப்பு படிப்பு என்று இருந்ததால் பாவம் அவளால் அதை எல்லாம் தெரிந்து கொள்ளவே முடியவில்லை”
என்றாள் வேகமாக.

“ஐயோ அக்கா அப்படி இல்லை அந்தக் கைப்பக்குவம் எனக்குக் கைவரவேயில்லை அதனால் அப்பா தான் கைகூப்பி… அம்மா தாயே நான் கடையிலேயே இனிப்பு வாங்கி உண்கிறேன். நீ இனிப்பு என்று சொல்லிச் செய்யும் இம்சைகளைத் தாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்”
என்றாள் வருணா சோகமாக.

“நீ பேசாமலேயே இருக்க மாட்டாயா? என் காலை வாருவதே உனக்கு வேலையாகி விட்டது. பேசாமல் நீ கொழும்பிலேயே இருந்திருக்கலாம். அப்போது தான் நான் உன் பெருமை பேசும் போது குறுக்கே குறுக்கே பேசாமல் இருந்திருப்பாய்”
என்று தங்கையைப் பார்த்து மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் மீனாட்சி.

“ஏன் மீனா நம் கனகம் கூடப் படிப்பு படிப்பு என்று இருந்த பெண் தானே அவளுக்கு மட்டும் இதையெல்லாம் தெரிந்து கொள்ள நேரம் கிடைத்து இருக்குமா? என்ன?”
என்று கேள்வி கேட்டாள் சுந்தரவல்லி.

“ஆனால் இந்த வாண்டுகள் செய்யும் அலப்பரையைப் பாருங்கள் கனகாவுக்கு ஏதோ இனிப்புப் பற்றி நிறையத் தெரியும் போல அலட்டிக் கொள்கிறார்கள் அவளுக்கு ஒரு பத்து இனிப்பின் பெயர் கூடத் தெரிந்திருக்காது”
என்று அப்போதும் மீனாட்சி அலுத்துக் கொண்டாள்.

“அக்கா இது நம் மானப் பிரச்சினை ஒரு பத்து இனிப்பின் பெயரைச் சொல்லி விடு அக்கா”
என்றான் மனோப்பிரியன்.

ஒருவேளை கனகாம்பரி பத்து இனிப்புகளின் பெயரைச் சொல்லி விட்டால் என்ன செய்வது என யோசித்த மீனாட்சி
“ஒரு நாற்பது இனிப்புகளின் பெயரைச் சொல்லு பார்க்கலாம் கனகா… நீ கெட்டிக்காரி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்”
என்றாள் சட்டென்று.

அத்தனை நேரம் அங்கு நடந்த சம்பாஷணையிலும் புவியரசனின் விழிகள் கனகாம்பரியையும் அவளது முகபாவனைகளையுமே கவனித்துக் கொண்டிருந்தன.

அன்றொரு நாள் அவள் கடகடவென நெல்லின் வகைகளைச் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஆனால் அது வேறு விஷயம் இது வேறு விஷயம் இவள் தான் சாப்பாட்டு ராணி ஆயிற்றே… இனிப்பின் பெயர்களை எப்படிச் சொல்வாள்… என்று யோசித்தபடியே அவளையே பார்த்திருந்தான்.

இதற்குப் பிறகும் பேசாமல் நிற்பதில் அர்த்தமில்லை என நினைத்த கனகாம்பரி இனிப்பின் பெயர்களைச் சொல்லத் தொடங்கினாள்.

பாசிப்பருப்புப் பாயாசம்

அவல் சேமியா பாயாசம்

ஜவ்வரிசிப் பாயாசம்

இளநீர்ப் பாயாசம்

மரவள்ளிக் கிழங்குப் பாயாசம்

பனங்கற்கண்டுச் சேமியாப் பாயாசம்

பருப்புப் பாயாசம்

அரிசிப் பாயாசம்

தாமரைப் பூ விதைப் பாயாசம்

கொண்டைக் கடலை லட்டு

சக்கரை வள்ளித் தேங்காய் லட்டு

பாசிப் பருப்பு லட்டு

பூந்தி லட்டு

கருப்பட்டிப் பூந்தி லட்டு

பாதாம் பொட்டுக் கடலை லட்டு

கறுப்பு உளுந்து லட்டு

அவல் லட்டு

பாதாம் முந்திரி அல்வா

காய்ந்த ரோஜாப்பூ அல்வா

வெண்டைக்காய் அல்வா

மாம்பழக் கோதுமை அல்வா

சுரைக்காய் அல்வா

கோதுமை அல்வா

முந்திரிப்பால் அல்வா

கரட் அல்வா

மரவள்ளிக் கிழங்கு அல்வா

தக்காளி அல்வா

பேரிச்சம்பழ அல்வா

கோதுமைப்பால் கருப்பட்டி அல்வா

பப்பாளி அல்வா

தினை அல்வா

வாழை இலை அல்வா

நெய்க் கேசரி

கரட் கேசரி

ரவாக் கேசரி

சாமைக் கேசரி

பால் கேசரி

பால் கோவா

மைதா மிட்டாய்

பனங்காய்ப் பணியாரம்

வாழைப்பழப் பணியாரம்

பயத்தம் பணியாரம்

மோதகம்

கொழுக்கட்டை


தேன் குழல்

நீங்கள் கேட்டதை விடவும் ஐந்து அதிகமாகச் சொல்லி விட்டேன் அக்கா இப்போதாவது என்னைக் கெட்டிக்காரி என்று ஒத்துக் கொள்கிறீர்களா?”
என்று கண்சிமிட்டிக் கேட்டவளைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் புவியரசன்.

மீனாட்சியோ வாயடைத்துப் போய் நின்றிருந்தாள். சமையல் கலையில் தேர்ச்சி பெற்ற அவளுக்கே சட்டென்று இத்தனை இனிப்பின் பெயர் சொல்ல வந்திருக்காது என்பது தான் உண்மை.
அவளை அறியாமலேயே கனகாம்பரியின் கைகளைப் பற்றிக் குலுக்கினாள்.

வருணாவும் அவளருகே வந்து
“நிஜமாகவே நீங்கள் கெட்டிக்காரி தான்”
எனக் கைகுலுக்கிப் பாராட்டினாள்.

எல்லோருமே கனகாம்பரியைப் புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.

இப்படியே கனகாம்பரியின் அருமை பெருமைகளைப் பேசி விட்டு எல்லோரும் கிளம்பினார்கள்.

அந்த நேரத்தில் சுந்தரவல்லியும் கனகாம்பரியும் சமையலறையில் பேசுவது கடைசியாக நின்ற புவியரசனுக்குக் கேட்டு விட்டது.

“எப்படியடி இத்தனை பெயர் சொன்னாய்… நீ கெட்டிக்காரி தான்… இத்தனை இனிப்பு உனக்குச் செய்யத் தெரியுமா?”

“அட அக்கா நீங்கள் வேறு… இனிப்பின் பெயர்களைத் தானே கேட்டார்கள் எனக்குச் செய்யத் தெரிந்த இனிப்பைப் பற்றிக் கேட்கவில்லையே”

“ஆமாம் கேட்கவில்லை அதற்கு என்ன”

“அக்கா நான் சொன்ன இனிப்பின் பெயரெல்லாம் நான் சாப்பிட்ட இனிப்புகளின் பெயர்… சாப்பாடு பற்றி நமக்குத் தெரியாததா… இனிப்பு செய்யத் தெரியாது ஆனால் நன்றாகச் சாப்பிடத் தெரியும் என்றா அங்கே சொல்ல முடியும்”

“பரவாயில்லை நீ பிழைத்துக் கொள்வாய்… எனக்கு ஒரேயொரு ஆதங்கம் தான் இத்தனை இனிப்புக்களை நான் கண்ணால் பார்த்தது கூட இல்லை… ஆனால் நீ அதை உள்ளே வேறு தள்ளியிருக்கிறாய்”

“அடடா”

“நன்றாகச் சிரி மகளே… அங்கே நீ இனிப்பின் பெயர்களைச் சொல்லும் போது விஷ்ணுக்குட்டி உன்னைப் பார்த்த பார்வையை நீ பார்த்திருக்க வேண்டும்… இனிமேல் உன் நிலமை கொஞ்சம் பரிதாபம் தான்… உனக்கு அத்தனை இனிப்பும் செய்யத் தெரியும் என்ற குஷி அவனுக்கு”

“ஆத்தாடி அப்படியா? ஆனாலும் எனக்கும் ஒரு பத்து இனிப்பு செய்யத் தெரியும் அக்கா…”
என்றபடி சிரிக்கத் தொடங்கினாள் கனகாம்பரி.

அவர்களது சம்பாஷணையைக் கேட்டவனுக்கோ சிரிப்புச் சிரிப்பாக வந்தது. பரவாயில்லை சமாளித்து விட்டாள் என்று அவளை மெச்சிக் கொண்டான்.

ஒருவரை நமக்குப் பிடித்து விட்டால் அவர்கள் என்ன செய்தாலும் நமக்குப் பிடிக்கும் அதே போலத் தான் புவியரசனுக்குக் கனகாம்பரி எது பேசினாலும் என்ன செய்தாலும் ரொம்பவும் பிடித்திருந்தது.

அவளைப் பற்றியே யோசித்தபடி வெளியே வந்தவனுக்கு மீனாட்சி சொன்ன வார்த்தைகள் ஈட்டியெனக் காதில் இறங்கியது.

மீனாட்சி சொன்ன வார்த்தை
“வெளியூருக்கு எல்லாம் சென்று படித்த பெண் அங்கே யாரையாவது காதலிக்காமலா இருப்பாள்”
என்கிற வார்த்தை தான் அது.
அவள் போகிற போக்கில் அந்த வார்த்தைகளை உதிர்த்து விட்டாள்.

ஆனால் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டான் புவியரசன்.

நான் எப்படி அவள் பக்கத்தில் இருந்து சிந்திக்காமல் போனேன்.
என்னைத் தான் அவள் காதலித்தாக வேண்டும் என்கிற அவசியம் ஒன்றும் இல்லை அல்லவா?
கடைசியில் என் காதலும் சங்க காலத்து ஒரு தலைக் காதலாகிப் போய் விடுமா?
அதனால் தான் என்னைப் பார்த்ததும் அந்தப் பாராமுகமாக இருக்குமோ?
வேண்டுமென்றே என்னைத் தவிர்ப்பதற்கும் இது தான் காரணமோ?
என்று உள்ளுக்குள் வெந்து போனான் புவியரசன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"உன்னையே நினைத்தபடி என் வாழ்வு பூரணமாகி விடும் பெண்ணே

நீ நேசிக்காமல் போனாலும் உன் நினைவுகள் கல்வெட்டாய் என் நெஞ்சில்...

கடைசியில் நானும் ஒருதலைக் காதலை சுமப்பவனாய் போவேனோ?

உன் சந்தோஷத்தை தூரமாய் ஒரு ஓரமாய் ரசித்தபடி வாழ்ந்து விட்டு போவேனடி...

உன் சந்தோஷமே என் சந்தோஷமென தத்தெடுத்துக் கொண்டேனடி"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top