• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
பங்குனி மாதத்தில் நெற் கதிர்கள் தலையைக் குனிந்து பூமியைப் பார்த்தபடி பருவ மங்கை போல நாணிக் கோணி நின்றது.

அறுவடைக் காலம் நெருங்கி விட்டதால் வயலெல்லாம் நெல்லறுக்கும் அரிவாளும் கையுமாக பலர் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.

வரப்போரமாக உணவுப் பொட்டலங்களையும் தூக்கு வாளிகளையும் வைத்து சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதில் சிலர் தாமரை இலையில் உணவை வைத்துச் சாப்பிட்டார்கள் ஒரு சிலர் வாழையிலையில் வைத்துச் சாப்பிட்டார்கள்.

புவியரசனின் வயல்களில் நெற்கதிர்கள் முழுவதும் அறுவடையாகியதோடு மாடுகள் கொண்டு நெல்லைச் சூடு மிதித்து வைக்கோலைத் தனியாகவும் நெல்மணிகளைத் தனியாகவும் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அவனது அதீத உழைப்பினால் களஞ்சிய அறையில் நெல்முட்டைகள் நிறைந்து கொண்டிருந்தன.

புது நெல்லில் அம்மனுக்கு முதல் பொங்கல் போடுவதற்காகப் புவியரசனின் குடும்பமே அம்மன் கோவிலின் முகப்பில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

சுந்தரவல்லி அந்தப் பொங்கலுக்குக் கனகாம்பரியையும் அழைத்திருந்தாள்.

முதலில் கனகாம்பரிக்கு அங்கு செல்வதில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை.

இரண்டு மாதங்களாகி விட்டது அவள் புவியரசனைப் பார்த்து, சரி இதே சாக்கில் அத்தானை ஒரு முறை பார்ப்போமே என்ற எண்ணத்தில் அவள் கோவிலுக்கு வந்து விட்டாள்.

அவளுக்கு ஏனோ புவியரசனையும் வருணாவையும் ஒன்று சேரப் பார்ப்பது பிடித்தமாக இருக்கவில்லை.

அதற்கான காரணமும் அவளுக்கு விளங்கவில்லை.

ஒரு வேளை வருணா பட்டணத்துக்காரி என்பதால் வந்த பொறாமையாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்வாள்.

உடனேயே அதற்காக இல்லை என்றும் தானே பதிலளித்து விடுவாள்.

அவளுக்கு எத்தனை பட்டணத்துக்காரிகள் தோழிகளாக இருக்கிறார்கள் அப்படி இருக்க எப்படி வருணா மீது அவள் பட்டணத்துக்காரி என்பதால் பொறாமை வருமென்று நினைத்துக் கொள்வாள்.

அப்படியானால் அத்தானை வேறு பெண்ணோடு ஜோடியாகப் பார்ப்பது தான் பிடிக்கவில்லையா? அதனால் அவர்களை ஜோடியாக இனிமேல் பார்க்க நேரக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் அதிகமாக வயல்வெளிகளில் சுற்றுவதில்லை.

இன்று தான் புவியரசனது வயல்களில் அமோகமாக நெல் விளைந்ததால் பொங்கல் போட வேண்டுதல் வைத்திருந்தார்கள்.

அதைச் சாக்காகக் கொண்டு ஒரு முறை அத்தானைப் பார்த்து அவரது கடினமான உழைப்பைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று கோவில் வந்திருந்தாள்.

அவளது அதி முக்கியமான வேண்டுதலாக வருணா கோவிலுக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது.

அவளது வேண்டுதலுக்காகவோ என்னவோ தெரியவில்லை வருணா கோவிலுக்கு வரவில்லை.

கனகாம்பரியின் மைவிழிகள் புவியரசனைத் தேடி அங்குமிங்கும் அலைந்தன.

இதற்கு நடுவே புவியரசனோ என்றுமில்லாத சந்தோஷத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவனது அளவற்ற சந்தோஷத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவது தனது இலட்சியமான விவசாயத்தில் அவன் அமோக விளைச்சல் கண்டது.

அதற்காக உண்மையிலும் அவன் பூரித்துப் போய் இருந்தான்.

எங்கே மற்றவர்கள் தனது இலட்சியப் பாதையைக் கேலியாகப் பார்க்கும் அளவிற்கு விவசாயம் நாசமடைந்து விடுமோ என்றெல்லாம் பதற்றமாக இருந்தவனுக்குப் பூமியில் புதையல் கிடைத்தது போல நெல் விளைச்சல் கிடைத்தது.

இது அவனது சந்தோஷத்திற்கான முதல் காரணம்.

இரண்டாவது அவனது காதல் சம்பந்தப்பட்டது. எங்கே அம்பரி மனதில் வேறு யார் மீதாவது காதல் இருக்குமோ அப்படி இருந்தால் என்ன செய்வது என்ற அவனது கேள்விக்குச் சரியான பதில் கிடைத்திருந்தது.

வழமை போலக் கண்மணியிடம் தனது உள்ளக்கிடக்கை பற்றிக் கனகாம்பரி பேசிக் கொண்டிருந்த போது அதை எதிர்பாராமல் புவியரசன் கேட்க நேர்ந்தது.

அதைக் கேட்டதில் இருந்து அவனுக்கு வானத்தில் மிதப்பது போன்றதொரு உணர்வு ஏற்படத் தொடங்கி விட்டிருந்தது.

கண்மணியிடம் கனகாம்பரி எனக்கு யார் மீதும் ஈடுபாடில்லை நான் அப்பா காட்டுபவருக்குத் தான் கழுத்து நீட்டப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததைத் தான் புவியரசன் கேட்டு விட்டு ஒரே சந்தோஷம் ஆகி விட்டான்.

அம்பரி யாரையும் நேசிக்காமல் இருந்தாலே போதும் அப்போது தானே எனது நேசத்தை அவளிடம் வெளிப் படுத்தும் போது தடைகள் ஏதும் இல்லாமல் இருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு நிறையவே இருந்தது.

அவனது தடைகள் எல்லாம் அகன்ற நிலையில் சந்தோஷமாக வளைய வந்தான் அவன்.

கோவிலுக்கு இன்னும் கூடப் புவியரசன் வந்து சேராமல் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தான்.

“எழில்தம்பி சீக்கிரமாகப் புவியை வரச் சொல்லுங்கள்”

“இதோ அண்ணி நானே போய் அழைத்து வருகிறேன்”

“அவன் கோவிலுக்கு வருவதற்குத் தயாராகி விட்டானா?”

“ஆமாம் அண்ணி தயாராகி விட்டு, வயலில் மேற்பார்வைக்குச் சென்றிருக்கிறான். நான் அழைத்து வருகிறேன்”

“அவன் கையாலே தான் முதல் கைப்பிடி அரிசி போட வேண்டும் சீக்கிரமாக அழைத்து வாருங்கள் தம்பி”

“சரி அண்ணி”
என்றபடி வயல் நோக்கி விரைந்தான் எழிலரசன்.

சின்னண்ணனைத் தொலைவில் பார்த்ததுமே மற்றவர்களிடம் வேலையை ஒப்படைத்து விட்டு அவனை நோக்கிச் சென்றான் புவியரசன்.

“மன்னித்து விடு சின்னண்ணா வயலில் இருக்கும் போது கோவிலைப் பற்றி மறந்தே போய் விட்டேன் நல்ல வேளை உங்களைப் பார்த்ததும் தான் கோவிலில் பொங்கல் என்பதே நினைவு வந்தது”

“அது பரவாயில்லை அரசா… வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை இன்னும் இருக்கிறதா?”

“கிட்டத்தட்ட முடிந்து விட்டது அண்ணா”

“சரி சரி சீக்கிரம் வா அரசா… அண்ணி உன்னைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்”
என்றபடி தம்பியோடு அம்மன் கோவிலை நோக்கித் திரும்பி நடந்தான் எழிலரசன்.

கோவிலின் கோபுர வாசலுக்கு முன்பாகப் பெரிய செங்கற்கள் வைத்து அடுப்பாக்கிப் பெரிய மண்பானை ஒன்றை வைத்திருந்தார்கள்.

பசும்பால் , எள்ளுருண்டை, முக்கனிகள், வடை, மோதகம் என நைவேத்தியப் பொருட்கள் தயாராக இருந்தன.

சுந்தரவல்லி அடுப்பை ஊதுவதும் வயல் பக்கத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

மீனாட்சி பூஜைத் தட்டை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

கனகாம்பரியோ பூமாலை தொடுத்துக் கொண்டிருந்தாள்.

வருணா வரவில்லை என்பதில் கொஞ்சம் திருப்தி அடைந்திருந்தவளுக்குக் கோவிலின் எந்தப் பக்கத்திலும் புவியரசனைக் காணாதது ஏமாற்றமாக இருந்தது.

எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தவள் வயலோரமாக வந்து கொண்டிருந்த புவியரசனைப் பார்த்து விட்டாள் அவளது முகம் தாமரைப் பூப் போல மலர்ந்தது.

அதே நேரத்தில் கிழக்கு வாசலில் நுழைந்து கொண்டிருந்த வருணா புவியரசனைப் பார்த்ததும் அவன் பக்கம் ஓடினாள்.
இதையும் பார்த்த கனகாம்பரிக்கு முகம் உடனே வாடிப் போயிற்று.

இது சரியில்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் புவி அத்தானைப் பார்க்காமல் விலகி இருப்பது தான் எனக்கு நல்லது என நினைத்துக் கொண்டவள் குனிந்த தலை நிமிராமல் தனது வேலையையில் கருத்தைச் செலுத்தினாள்.

பூமாலை கட்டி முடிந்ததும் அதைக் கையில் ஏந்திப் பொங்கல் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்க்காமல் வந்ததால் அப்போது தான் கோவிலினுள் வந்த புவியரசன் மீது மோதிக் கொண்டாள்.

அவனது நாடி இடித்த வேகத்தில் நெற்றியில் கொஞ்சம் பலமாகவே அடி பட்டு விடவே வலி தாங்க முடியாமல் பூமாலையைக் கை தவற விட்டாள் கனகாம்பரி.

பூமாலை அவனது காலடியில் விழப் போகவே சட்டென்று பூமாலை காலடியில் விழாமல் பிடித்துக் கொண்டான்.

“ஏய் பார்த்து வரக் கூடாதா அம்பரி”

“பார்த்து வந்திருந்தால் நான் ஏன் மோதப் போகிறேனாம்”

“சரி சரி… நெற்றி வீங்கி இருக்கிறது பார்”

“பரவாயில்லை இருக்கட்டும்”
என்றபடி நகர்ந்து போய் விட்டாள் கனகாம்பரி.

இவளுக்கு இப்போது என்ன நடந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் முன்னால் சிரித்த முகத்துடன் தானே இருந்தாள்.
இப்போது இவளுக்கு என்ன நடந்தது. இவள் இப்படி விலகி விலகி ஓடுவதற்கு முதலில் முடிவைக் கொண்டு வர வேண்டும்.
என மனதினுள் நினைத்துக் கொண்டான் புவியரசன்.

பொங்கலுக்கு வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்த சுந்தரவல்லிக்கும் மீனாட்சிக்கும் அருகே வந்து பேச்சுக் கொடுத்தார் தெரிந்த பெண்மணி ஒருவர்.

“சும்மா சொல்லக் கூடாது சுந்தரி… உங்கள் கொழுந்தன் கெட்டிக்காரன் தான்… விவசாயம் விவசாயம் என்று அவன் பிதற்றிக் கொண்டு அலைகிறான் என்று நினைத்து இருந்தோம். ஆனாலும் அவன் சாதித்து விட்டானே”

“உங்கள் எல்லோருக்கும் தான் அக்கா அது பிதற்றலாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் எங்களுக்குப் புவி மீது நம்பிக்கை இருந்தது”

“ஆமாம் அக்கா எங்கள் கொழுந்தன் என்றால் சும்மாவா? இந்த ஊரிலேயே அவருக்குக் கிடைத்த இந்த வெற்றி போல யாருக்கும் கிடைக்கவில்லை தெரியுமா?”

“உண்மை தான் மீனா உங்கள் கொழுந்தன் படிப்பை விட விவசாயத்தை எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் அவனுக்கு இவ்வளவு பயன் கிடைத்திருக்கும். சாதிக்கத் துடிப்பவர்கள் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு உங்கள் கொழுந்தன் ஒரு உதாரணம்”

“உண்மை தான் அக்கா”

“சரி அதெல்லாம் இருக்கட்டும். எப்போது கொழுந்தனுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்.”

“இந்த வருடத்திலேயே திருமணம் செய்வதாக ஒரு எண்ணம் இருக்கிறது அக்கா”

“அதெல்லாம் பரவாயில்லை சுந்தரி. உங்கள் கொழுந்தனுக்குத் தோதான பெண் வேண்டுமே… அவனுடன் சேர்ந்து விவசாயத்தையும் கவனிப்பவளாக இருக்க வேண்டும்”

“ஆமாம் அக்கா அது ரொம்ப முக்கியம்”

“சரி நீங்கள் பொங்கல் வேலையைக் கவனியுங்கள் நான் வருகிறேன்”
என்றபடி அந்தப் பெண்மணி சென்று விட்டார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி சிறு யோசனையுடன் சுந்தரவல்லியிடம் திரும்பினாள்.

“ஏன் ஏன் நம் கொழுந்தனைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் இங்கே வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டுமா அக்கா?”

“ஆமாம் மீனா… அப்படி வயலில் இறங்கி வேலை செய்வதற்கு முகம் சுழிக்காத பெண்ணைத் தானே அவனும் விரும்பித் திருமணம் செய்வான்”

“அப்படியா? அப்படியானால் கொழுந்தன் இந்த ஊரை விட்டு வெளியூரில் போய் இருக்கச் சம்மதிக்க மாட்டாரா?”

“எப்படிச் சம்மதிப்பான் அவனுக்குத் தான் விவசாயம் அத்தனை முக்கியம் ஆயிற்றே… அது போக கொழும்பில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வந்து குதித்தவன் ஆயிற்றே அதில் இருந்தே தெரிகிறது புவிக்கு இந்த ஊரும் மண்ணும் தான் உயிர் என்று”

“ஆனாலும் அக்கா…”

“மீனா இந்தப் பேச்சைப் பற்றிப் பிறகு பேசலாம் அரிசி எடுத்து வா… நான் புவியை அழைத்து வருகிறேன்”
என்றபடி சுந்தரவல்லி புவியரசனுக்கு அருகில் சென்றாள்.

“புவித்தம்பி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் . சீக்கிரமாக வா பொங்கலுக்கு முதல் கைப்பிடி அரிசி நீ தான் போட வேண்டும்”

“ஏன் பெரியண்ணி நீங்களே முதல் பிடி அரிசியைப் போடுங்கள் அது தான் சரியாக இருக்கும்”

“அப்படியெல்லாம் இல்லை புவி உனது உழைப்பில் விளைந்த நெல் இது நீ தான் முன் நின்று நடத்த வேண்டும்”

“அண்ணி நான் ஒன்று கேட்டால் செய்வீர்களா?”

“கேள் புவி... நீ கேட்கும் போது செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறேன்”

“அப்படியானால் முதல் பிடி அரிசியைப் பொங்கல் பானையில் போடுங்கள்”

“புவிப்பா…”

“அண்ணி விவாதம் வேண்டாம் எனக்கு அம்மா இல்லாத குறையே தெரியாமல் வளர்த்தவர் நீங்கள்… எனக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் அதில் முதல் உரிமை உங்களுக்குத் தான் போடுங்கள் அரிசியை…”

“டேய் டேய் இப்படிக் கண்ணை வியர்க்க வைக்காதேடா…”
என்றபடி ஒரு பிடி அரிசியை எடுத்துக் கண்ணை மூடி வேண்டியபடி பொங்கல் பானைக்குள் போட்டாள் சுந்தரவல்லி.

அவளது மனதே குளிர்ந்து போய் இருந்தது. புவிக்குத் திருஷ்டி சுத்துவது போல விரல்களை நெரித்தபடி
“இப்படி எல்லாம் பேசி எனக்கு மயக்கம் வர வைக்காதே புவிப்பா”
என்றபடி லேசாகக் கண் கலங்கினாள்.

“உண்மையைத் தானே அண்ணி சொன்னேன்”
என்றபடி புன்னகைத்தான் புவியரசன்.

“சரி சரி இருவரும் பாச மழை பொழிந்தது போதும் பொங்கல் பானையைக் கவனியுங்கள்”
என்றபடி சிரித்தான் அழகரசன்.

அனைவரும் சேர்ந்து பொங்கல் பொங்கி முடித்து விட்டுக் கோவிலுக்கு வருவோர் அனைவருக்கும் காட்டுப் பூவரசு இலையில் பொங்கலை வைத்துக் கொடுத்தனர்.

எல்லோரும் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து சுடச்சுடப் பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“கொழுந்தனாரே எனக்கொரு சந்தேகம்”

“அடடா தொடங்கி விட்டாளா… இனிமேல் ஒரு சந்தேகம் ஓராயிரம் சந்தேகமாகும் மாயத்தைப் பாருங்கள்… அப்படித் தானே மீனா?”

“சும்மா இருங்கள் அத்தான் உங்களுக்கு எப்போதுமே என்னிடம் வம்பிழுப்பதே வேலை ஆகி விட்டது”

“அது தானே உனக்கு வேறு வேலையே இல்லையா பேசாமல் இருடா எழில்… நீ கேட்க வந்ததைக் கேள் பிள்ளை…”

“அப்படிச் சொல்லுங்கள் அழகுமாமா… இவருக்கு வேறு வேலையே இல்லை”

“சரி சரி அண்ணா நான் வாயைத் திறக்கவில்லை போதுமா?”
என்றபடி வாயை மூடிக் கையால் பொத்திக் கொண்டான் எழிலரசன்.

அவனது செய்கையைப் பார்த்ததும் மற்றவர்களுக்குச் சிரிப்பு வந்தது.

அதே நேரத்தில் கனகாம்பரிக்குப் பக்கத்தில் சற்றே தள்ளி இருந்த விஷ்ணு மெதுவாக அவளக்குருகே வந்து அவளது காதுகளில்
“அக்கா வெளியே வருகிறாயா?”
என்று கேட்டான்.

அவளும் மற்றவர்களுக்குத் தெரியாமல் ஏன் என்று சைகையில் கேட்டாள்.

“தேங்காய் உடைக்கிறார்கள் அக்கா… வா நாம் போய் தேங்காய்ச் சொட்டு எடுத்துச் சாப்பிடலாம்… தேங்காய்ச் சொட்டைப் பொங்கலோடு சேர்த்துச் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்”
என்று அவளுக்கு ஆசை காட்டினான்.

“டேய் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்”

“அக்கா… என்னக்கா இப்படிப் பேசுகிறாய்… நீயெல்லாம் எப்போது தேங்காய் உடைப்பார்கள் எப்போது தேங்காய்ச் சொட்டுப் பொறுக்கலாம் என்று தானே பார்த்துக் கொண்டு நிற்பாய்… மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவே மாட்டாயே”

“அப்படி இல்லை விஷ்ணு எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கும் போது நாமிருவரும் எழுந்து போனால் நன்றாக இருக்குமா?”

“அக்கா சும்மா எதையாவது சொல்லாதே சரியா… இப்போது நீ வருகிறாயா இல்லையா?”

“சரி சரி வருகிறேன் சத்தம் போடாதே”
என்றவள் மற்றவர்களைப் பார்த்து விட்டு மெதுவாக நழுவினாள்.

இவர்கள் இருவரையும் வேறு யாரும் கவனிக்கவில்லை ஆனால் புவியரசனது கண்கள் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தது.

இருவரும் பேசியது கூட அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.

கனாம்பரியும் விஷ்ணுவும் எழுந்து போனதும் மற்ற வாண்டுகளும் எழுந்து ஓடினார்கள்.

தொடர்ந்து அவர்களைக் கவனிக்க முடியாமல் புவியரசனை மீனாட்சியின் கேள்வி திசை திருப்பியது.

“ஏன் கொழுந்தனாரே நீங்கள் இந்த ஊரை விட்டு வேறு எங்கேயும் போக மாட்டீர்களா?”

“ஏன் சின்னண்ணி அது எப்படி முடியும் ஏதாவது தேவைக்கு வெளியூருக்குப் போகத் தானே வேண்டும்”

“நான் அதைக் கேட்கவில்லை கொழுந்தனாரே”

“நீ எதைக் கேட்கிறாய் என்று தெளிவாகச் சொன்னால் தானே தெரியும் மீனா”

“மாமா… உங்கள் தம்பியைக் கொஞ்சம் பாருங்கள்”

“சரி பிள்ளை பார்க்கிறேன்”

“ஐயோ மாமா அவரைப் பாருங்கள் என்றால் பார்த்துக் கொண்டே இருந்தால் சரியா? பேசாமல் இருக்கச் சொல்லுங்கள்”

“சரி சரி எழில்… கொஞ்ச நேரம் பேசாமல் இருடா”

“எழில் தம்பி மீனாவைக் கொஞ்சம் பேச விடுங்கள் அவளது முகத்தைப் பாருங்கள் எப்படிக் கோணலாகி விட்டது”


“நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கள் சின்னண்ணி”

“அதில்லை கொழுந்தனாரே இந்த ஊரை விட்டு வேறு ஊரில் வசிக்கப் போவீர்களா? மாட்டீர்களா?”

“அப்படி ஒரு எண்ணமே எனக்கில்லை சின்னண்ணி ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

“இல்லை எப்படியும் திருமணம் செய்து கொண்டால் போய்த் தானே ஆக வேண்டும்”

“அந்தப் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகத் தான் அவனுக்கு ஊரோடு பெண் பார்த்து வைத்திருக்கிறோம் மீனா”

“என்னக்கா சொல்கிறீர்கள் ஊரோடு பெண் பார்த்திருக்கிறீர்களா?”

“ஆமாம் மீனா… அது எப்போதோ முடிவாகி விட்டது. இவன் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வேண்டியது தான் தாமதம் தடபுடல் செய்து விடலாம்”

“ஆமாம் பிள்ளை பெண் கூட அவன் விரும்பிய பெண் தான்… இருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றிய பிறகு திருமணம் பற்றி எல்லோருக்கும் தெரியப் படுத்தலாம் என்று இருந்தோம்”

“ஆமாம் மீனா… பெண் யார் தெரியுமா? நம் கனகம் தான்”

“என்னது”

“ஆமாம் மீனா… சின்னராசா சித்தப்பாவிடம் இது பற்றி எப்போதோ பேசி விட்டோம் அவரும் சம்மதம் சொல்லி விட்டார்”
என்றபடி சுந்தரவல்லி பூஜைப் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள்.

அழகரசனும் அவளோடு இணைந்து கொண்டான்.

ஆனால் மீனாட்சி தான் வாயடைத்துப் போய் நின்றாள்.

இது எப்போது நடந்தது நான் என் தங்கையைத் திருமணம் செய்து வைக்கலாம் என்று கணக்குப் போட்டிருந்தேனே எல்லாம் வெறும் கனவாகவே போய் விட்டது போலவே என நினைத்தபடி முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் மீனாட்சி.

அக்காவின் முகம் வாடி இருப்பதைப் பார்த்த வருணா அவளருகே வந்தாள்.

“என்னக்கா ஏன் முகத்தை இப்படித் தூக்கி வைத்திருக்கிறாய்… பொங்கல் ருசி உனக்குப் பிடிக்கவில்லையா? ஆனால் ருசி நன்றாகத் தானே இருந்தது.”

“இவள் ஒருத்தி இங்கே குடியே முழுகப் போகிறது. பொங்கல் ருசியா இல்லையா என்று பார்க்க வந்து விட்டாள்”

“என்னக்கா என்ன முழுகி விட்டது எங்கே ஒன்றையும் காணவில்லையே”

“கடுப்பேற்றாதே வருணா”

“சரி சரி என்ன விஷயம் என்று சொல்லு அக்கா”

“அவர்கள் பேசும் போது நீயும் இருந்தாய் தானே”

“இல்லை அக்கா நான் தண்ணீர் எடுத்து வரப் போய் இருந்தேன் நீ பார்க்கவில்லையா? ஏன் என்ன நடந்தது?”

“கொழுந்தனாருக்குத் திருமணம் செய்யப் பெண் பார்த்து விட்டார்களாம்”

“நிஜமாவா? யார் அந்த அதிஷ்டசாலி”

“வேறு யார் இவள் கனகா தான்”

“அடடா ஒரு வழியாக அரசருக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. கேட்பதற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது”

“என்னடி உளறுகிறாய்… உனக்கு வருத்தமாக இல்லையா?”

“நீ தான் உளறுகிறாய் அக்கா… எனக்கு என்ன வருத்தம்”

“நானும் அப்பாவும் கொழுந்தனுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசித்து வந்திருந்தோம்”

“என்னது… என்னக்கா பிதற்றுகிறாய். என்னைக் கேட்காமல் உங்கள் இஷ்டம் போல என்னவெல்லாம் செய்யப் பார்த்து இருக்கிறீர்கள்… நல்லவேளை நீ லூசுத்தனமாக இது பற்றி அங்கே ஒன்றும் உளறி வைக்கவில்லை”

“ஏய் என்னடி இப்படிப் பேசுகிறாய்”

“வேறு எப்படி அக்கா பேச வேண்டும். என்றைக்காவது உங்களிடம் வந்து அரசனை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டு இருக்கிறேனா? நானே படிக்கும் இடத்தில் ஒருவரை விரும்புகிறேனே அதை எப்படி அப்பாவிடம் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருக்கிறேன்… நீ என்னவென்றால் இப்படி உளறுகிறாய்… நல்ல வேளை என்னிடம் இப்போதாவது சொன்னாயே”

“என்னடி சொல்கிறாய்… நீ காதலிக்கிறாயா? சரி சரி எது எப்படியோ உன் சந்தோசம் தான் முக்கியம்… என்ன ஒன்று எங்கள் கொழுந்தனைக் கட்டிக் கொண்டால் சந்தோஷமாக இருப்பாயே என்று நினைத்தேன்… நீ தான் வேறொருவரை விரும்புகிறாயே அது பற்றி நான் அப்பாவிடம் பேசுகிறேன் நீ கவலைப் படாதே… என்னையும் மன்னித்து விடு”

“மன்னிப்பெல்லாம் எதற்கு அக்கா… முடிவு எடுப்பதற்கு முதல் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் கூடிப் பேசினால் பிரச்சினை எளிதில் முடிந்து விடும் அவ்வளவு தான்… சரி அக்கா நான் அரசனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வருகிறேன்”
என்றபடி ஓடிப் போனாள் வருணா.

வாண்டுக் கூட்டத்துடன் தேங்காய்ச் சொட்டுக்களைப் பொறுக்கிக் கொறித்துக் கொண்டிருந்தவளைத் தூணில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் புவியரசன்.

அவள் உடுத்தி இருந்த செம்மஞ்சளும் சிவப்பும் கலந்த பாவாடை தாவணி அவளது மாநிறத்திற்கு எடுப்பாக இருந்தது.

அவளது பெயருக்கு ஏற்றாற் போலத் தலை நிறையக் கனகாம்பரப் பூ மாலை வைத்திருந்தாள்.

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவள் அத்தனை அழகி இல்லை. சுமாராகத் தான் இருப்பாள்.

ஆனாலும் ஒருவரின் குணமும் பண்பும் நமக்குப் பிடித்து அவரை நேசிக்கத் தொடங்கி விட்டால் அவரது ஒவ்வொரு சிறு சிறு செயலையும் ரசிக்கத் தோன்றுவதோடு உலகிலேயே அவர் தான் பேரழகு என்பது போலத் தோன்றும்… அதே நிலை தான் இப்போது புவியரசனுக்கும்.

அவனுக்குக் கனகாம்பரியின் குணமும் பண்பும் பிடித்ததால் தான் அவளை நேசிக்கத் தொடங்கினான்.

அவனது நேசம் விருட்சமாக வளரத் தொடங்கிய போது தான் அவளையும் அவளது செயல்களையும் ரசிக்கத் தொடங்கினான்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"காதல் வந்தால் கிறுக்கல் கூடக் கவிதையாகும் மாயமென்ன

காகம் கரையும் சத்தம் கூடக் கானம் கேட்பதாய் தோன்றுவதென்ன...

காதுபட யாரும் திட்டும் போது கூட சிரிப்புடன் கடக்க முடிவதென்ன...

காணும் யாவுமே அழகழகாய் தோன்றித் தொலைவதென்ன...

காதல் பைத்தியம் என்னைக் கூட விட்டு வைக்கவில்லையடி..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top