• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
அடுத்த நாள் காலையில் இருந்தே கனகாம்பரியின் வீடு பரபரப்பாக இருந்தது.

இன்று மணமகன் வீட்டில் இருந்து வருவதால் அவர்களுக்குக் குடிக்கவும் உண்ணவும் உணவு வகையறாக்களைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அத்துடன் இன்று கனகாம்பரி புடவை கட்டித் தயாராக இருக்க வேண்டும்.

இன்றைய நாளில் புவியரசன் வீட்டில் இருந்து உளுத்தம்புட்டுக் கொண்டு வருவார்கள்.(உளுத்தம்மாவும் அரிசிமாவும் கலந்து செய்யும் இனிப்புப் பண்டம்)

மாப்பிள்ளை வீட்டினர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகக் கனகாம்பரி தயாராகத் தொடங்கினாள்.

பச்சைப் பட்டுப் புடவையும் தலை நிறையக் கனகாம்பரப் பூவுமாகத் தயாராகி நின்றவளுக்குத் திருஷ்டி சுத்திப் போட்டார் பர்வதப் பாட்டி.

அதே நேரத்தில் அழகரசன் வீட்டில் இருந்து பலகாரப் பழத்தட்டுக்களுடன் கனகாம்பரி வீடு நோக்கிப் புறப் பட்டார்கள்.

புவியரசனைத் தவிர எல்லோருமே புறப்பட்டார்கள்.

“ஏன் மீனா அதென்ன தனியாக ஏதோ மூடி வைத்து இருக்கிறது”

“அது கனகாவுக்கு என்று தயாரித்த புட்டு அத்தான்”

“அப்படியானால் ரொம்ப ருசியாக இருக்கும்.”

“அதை அவள் உண்ணும் போது அவளது முகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்”

“இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிகிறது பார்ப்போம்”
என்றபடி முன்னே சென்றான் எழிலரசன்.

அங்கே கனகாம்பரி வீட்டில் இவர்களை வரவேற்று உபசரித்தார்கள்.

மீனா தான் தனியே எடுத்து வைத்திருந்த புட்டைக் கனகாம்பரிக்குக் கொடுத்தாள்.

அதைச் சாப்பிட்டவளின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது.

“மீனா என்னடி இது”

“அதுவா அத்தான் நேற்றுக் கொழுந்தனாருக்குக் கொடுத்த கொழுக்கட்டையினுள் பச்சை மிளகாய் வைத்தது போல… இன்று இவளுக்குத் தயாரித்த புட்டில் அதிகமாக மிளகுத்தூள் போட்டுத் தயாரித்தோம்”

“அடிப்பாவி…”

“என்ன அடிப்பாவி… நம் திருமணத்தின் போது எனக்கும் இப்படித் தான் நடந்தது”

“ஆனால் பாரேன் மீனா… பிள்ளை ஒன்றும் பேசாமல் அதைச் சாப்பிடுகிறாள்.”

“அது தானே அத்தான்…”

“என்ன பிள்ளை பேச்சு மூச்சில்லாமல் அந்தப் புட்டைச் சாப்பிடுகிறாய்”

“எழிலத்தான் நேற்று என் புவியத்தான் எனக்காகப் பச்சைமிளகாய்க் கொழுக்கட்டை சாப்பிட்டாரே அது தான் நானும் இதைச் சாப்பிடுகிறேன்”

“அடடா அடடா எனக்குப் புல்லரிக்கிறது”
என்று சிரித்தான் அழகரசன்.

அதன் பின்னர் எல்லோரும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் பேசிக் கொண்டார்கள்.

இன்றிலிருந்து வரும் முதலாவது செவ்வாய்க்கிழமை பொன்னுருக்கலுக்கும், திருமணத்திற்கும் நாளும் நேரமும் பஞ்சாங்கத்தைப் பார்த்து எடுக்க வேண்டும் என்று பேசியபடி எல்லோரும் விடைபெற்றார்கள்.

அன்றிரவு வானத்தில் தெரிந்த சந்திரனைப் பார்த்தபடி நெடு நேரமாக அமர்ந்திருந்தாள் கனகாம்பரி.

அவளால் இதை நம்பக் கூட முடியவில்லை.
அத்தானின் காதல் கிடைத்து அது திருமண நாள் வரை வந்து விட்டதே என்று அவளுக்கு இப்போதும் அதை நம்ப முடியவில்லை.

இதெல்லாம் நிஜம் தானா எனத் தன்னைப் பத்தாவது தடவையாகக் கிள்ளிக் கொண்டாள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

காதலித்தவர்கள் எல்லோரும் திருமண பந்தத்தில் இணைவதில்லை.
சிலருக்கு மட்டுமே அந்த அற்புதம் நிகழும்.

இவளுடன் வாழ்ந்தால் தான் என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று ஒரு ஆணும்
இவனுடன் வாழ்ந்தால் நான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வேன் என்று ஒரு பெண்ணும்
ஆசைப் பட்டு ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ளும் போது அந்த ஆசை ஈடேறினால் எப்படி இருக்கும்?

அத்தனை சந்தோஷத்தில் திளைத்தார்கள் புவியரசனும் கனகாம்பரியும்.

இரு வீட்டாரும் கூடிப் பேசி பஞ்சாங்கம் பார்த்து, வைகாசி மாதத்தில் ஒரு திகதியைத் திருமண நன்நாளாகக் குறித்துக் கொண்டார்கள்.

அதோடு பொன்னுருக்கலுக்கும் நல்ல நாளை நிச்சயித்தார்கள்.

திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப் பொருள் படுகிறது. அதாவது இரு இதயங்கள் இணைதல் எனக் கூறலாம்.
பொதுவாகக் காதல் என்பது இரு இதயங்கள் இணைவதாகவும் திருமணம் என்பது இரு குடும்பங்களின் சங்கமம் என்றும் பொருள் கொள்ளப்படும்.

இந்தத் திருமணத்தால் அழகரசனின் குடும்பமும் சின்னராசாவின் குடும்பமும் தமது முன்னைய உறவைப் புதுப்பித்துக் கொண்டார்கள்.

திருமண நாள் வைகாசி மாதம் இருபத்தைந்து என்று உறுதி செய்யப் பட்டது.

வைகாசி முதலாம் திகதியே திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்று பட்டியலிட்டு, உறவினர்களது வீடுகளுக்குச் சென்று அழைப்பு விடுத்தார்கள்.

“சித்தப்பா… தாலி கட்டும் சடங்கைக் கோவிலில் வைக்க விருப்பமா? அல்லது வீட்டிலேயே மணப் பந்தல் அமைத்துக் கொள்வோமா?”

“சுந்தரி… எனக்கு இருப்பதோ ஒரே ஒரு பெண் அதனால் நான் வீட்டிலேயே அவளது திருமணத்தைச் செய்யலாம் என்று ஆசைப் படுகிறேன்”
எனச் சிறு தயக்கத்துடன் சொன்னார் சின்னராசா.

“அதற்கு ஏன் சித்தப்பா இவ்வளவு தயக்கம்… பெண்ணைப் பெற்றவர் நீங்கள்… நீங்கள் சொல்லும் வகையில் தான் திருமணம் நடக்கும் சித்தப்பா”
என்று சிரித்தபடி கூறினாள் சுந்தரவல்லி.

“மாமா இன்னொரு விஷயம் திருமணம் இருபத்தைந்தாந் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதனால் பதினான்காம் திகதி பொன்னுருக்கலை வைத்துக் கொள்ள வேண்டும்”

“நானும் இதைப் பற்றிப் பேசலாம் என்று தான் நினைத்திருந்தேன் அழகரசா!”

“ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவதை விட இங்கே எங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறோம் மாமா”

“அதனால் என்ன அழகரசா! தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள்”

“நன்றி மாமா… எழிலா! நீ போய் முள்முருங்கை மரம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து விட்டு வா”

“சரி அண்ணா”
என்றபடி அந்த வேலைக்குப் புறப்பட்டான் எழிலரசன்

அடுத்ததாக மணமகனுக்கும் மணமகளுக்கும் புத்தாடை எடுப்பது பற்றிய பேச்சு அடி பட்டது.

மணமகளுக்கான பட்டுச் சேலை, தாலிக்கூரை எல்லாமே மணமகன் வீட்டாரே எடுப்பது வழமை

“புவித்தம்பி… தாலிக்கூரைப்பட்டு தவிர மற்றப் பட்டுச் சேலை இருக்கிறது தானே அதை என்ன நிறத்தில் எடுக்கலாம்”

“உங்களுக்குத் தெரியாததா பெரியண்ணி… நீங்களே பார்த்து எடுங்கள்”

“எனக்கும் தெரியும் தான் புவி… இருந்தாலும் அந்தப் பட்டை நீ தேர்வு செய்தால் நம் கனகம் ரொம்ப சந்தோஷப் படுவாள்”

“எனக்குத் தேர்வு செய்யத் தெரியாது பெரியண்ணி”

“அடடா இதெல்லாம் ஒரு பெரிய வேலையே இல்லை புவி… நீ வந்து பார் கனகத்திற்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை எடு அவ்வளவு தான் விஷயம் முடிந்தது”

“சரி அண்ணி வருகிறேன்”
என்றபடி புடவைக் கடைக்குச் சென்றவனுக்கோ ஒரே மலைப்பாக இருந்தது.

எத்தனை விதமான ரகத்தில், நிறத்தில் புடவைகள் குவிந்து கிடந்தன.

இதில் ஒன்றை எப்படித் தெரிவு செய்வது, ஒரு வேளை நான் தேர்வு செய்து கொடுப்பது அம்பரிக்குப் பிடிக்காமல் போனால் என்ன செய்வது… அதனால் கவனமாக அவளுக்குப் பொருத்தமாக அவளுக்குப் பிடித்த நிறத்தில் பார்க்கலாம் என நினைத்தபடி ஒவ்வொரு புடவையாக நிதானமாக எடுத்துப் பார்த்தான்.

தோடம்பழ நிறத்தில் இருந்த புடவைகளைப் பார்த்ததும் ஒரு நொடி அங்கே தேங்கி நின்றான்.

புடவை முழுவதும் தோடம்பழ நிறத்தில் இருக்க, அதன் கரையோ சிவப்பு நிறத்தில் மின்னியது.

உடல் முழுவதும் நூலினாலும் பூக்களினாலும் அலங்காரம் செய்திருந்தார்கள்.

புடவையும் அதன் நிறமும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
அதையே தன் அம்பரிக்காகத் தேர்வு செய்தான் அவளின் புவியத்தான்.

திருமணத்திற்கு இன்னும் பதினொரு தினங்களே இருந்த நிலையில் வேலைகள் தொடங்கியது.

அதோடு சேர்த்து ஊரிலேயே சபைக்கு சமைப்பதில் பிரபலமான சமையற்கார ஐயாவை முன் பணம் கொடுத்து அழைத்தார்கள்.

மணமக்களுக்குப் போடும் மாலைகள், நாதஸ்வர மேளம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார்கள்.

ஒன்றில் கூடக் குறை கண்டு பிடிக்காத அளவில் வேலைகள் படு கச்சிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

திருமணநாளுக்கு பத்து நாளுக்கு முன்பாக பொன்னுருக்கல் நடைபெறுவதற்கான வேலைகள் புவியரசன் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

மணமகன் வீட்டில், திருமண நாளுக்கு முதல் நாள் வரும் ஏதாவது ஒரு சுபநாளில் மணமகள் கனகாம்பரியைத் தவிர மணமகளது உறவுக்காரர்கள் நண்பர்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள்.

பெண் வீட்டார் இதன் போது ஏதாவதொரு இனிப்புப் பண்டம் கொண்டு வருவது யாழ்ப்பாணத்தில் தொன்று தொட்டு வரும் பழக்கமாகும்.

அநேகமாகக் கொழுக்கட்டை தான் கொண்டு வருவார்கள்.

கனகாம்பரி வீட்டில் இருந்து பத்து உறவுக்காரர்கள் புவியரசன் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

புவியரசன் வீட்டு முன் வாசலிலே முறைப்படியாக நன் மங்கலமாக நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்ச்செம்பு மற்றும் குங்குமம் சந்தனம் வைத்திருந்தார்கள்.

அதுமட்டுமின்றி பொன்னுருக்கும் இடத்தில்

ஒரு நிறைகுடம்

இரண்டு குத்து விளக்குகள்

இரண்டு தேங்காய்

மாவிலை

வெற்றிலை பாக்கு

வாழைப்பழம்

மஞ்சள் கட்டை

தேசிக்காய்

அறுகம்புல்

பூக்கள்

ஒரு சட்டியில் தண்ணீர்

தேங்காய் உடைக்கக் கத்தி

விபூதி

குங்குமம்

சந்தனம்

மஞ்சளிற் பிள்ளையார்

சாம்பிராணியும் தட்டும்

கற்பூரத் தட்டு

முதலான பொருட்களை எடுத்து ஆயத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி.

அதன் பிறகு எழிலரசனும் மீனாட்சியும் வீட்டில் வேலைகளைக் கவனிக்க, அழகரசனும் சுந்தரவல்லியும் ஆலயத்திற்குத் தயாரானார்கள்.

“சுந்தரம் தங்கநாணயத்தை எடுத்து வா”

“அத்தான் நான் ஏற்கனவே ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் பூ பழம் வைத்து தங்க நாணயத்தையும் வைத்து விட்டேன்… இனிக் கோவிலுக்குச் செல்வது தான் வேலை”

“சரி சுந்தரம் அந்தத் தட்டை எடுத்து வா பூஜைக்கு நேரம் நெருங்கி விட்டது”

“சரி அத்தான்”
என்றபடி திருமாங்கல்யத்துக்குரிய தங்கநாணயம் வைத்த தட்டை எடுத்து வந்தாள் சுந்தரவல்லி.

இருவரும் அம்மன் கோவிலுக்குச் சென்று அதை அர்ச்சகரிடம் கையளித்தார்கள் அவரோ அம்மனின் பாதத்தில் அந்தத் தட்டத்தை வைத்துப் பூஜை செய்து மீண்டும் இவர்களிடம் கையளித்தார்.

பூஜை செய்து எடுத்து வந்த அந்தத் தட்டத்தைத் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் கொண்டு வந்து வைத்தாள் சுந்தரவல்லி.

பொன்னுருக்கும் நேரம் நெருங்கவும் புவியரசனை அழைத்து அந்தத் தட்டத்தை அவனிடம் கொடுத்தாள் அவனது சின்னண்ணி.

“என்ன சின்னண்ணி இது”

“கொழுந்தனாரே இது தான் தாலி செய்வதற்கு வேண்டிய தங்க நாணயம் இதை நீங்கள் தான் ஆசாரியாரிடம் கொடுக்க வேண்டும் அது தான் முறை”

“அப்படி வேறு இருக்கிறதா?”
என்றபடி தங்கநாணயம் இருந்த தட்டத்தை ஆசாரியாரிடம் கொடுத்தான் புவியரசன்.

ஆசாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி, தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலியவை வைத்து, தேங்காய் உடைத்துப் பூஜை செய்து, பொன்னை உருக்கினார்.

தாய்மாமனை வரச் சொல்லுங்கள் என்று முன்னே நின்ற பெரியவர்கள் அழைத்தார்கள்.

“அத்தான் கனகாம்பரிக்குச் சொந்தத் தாய்மாமன் இல்லை இப்போது யாரை அழைப்பது. இது பற்றி நாங்கள் ஒன்றுமே யோசித்து வைக்கவில்லையே”

“ஏனம்மா நான் அந்தப் பிள்ளையின் தாய்மாமனாகச் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முன்னின்று செய்கிறேனே”
என்றபடி முன் வந்தார் மீனாட்சியின் தந்தை கங்கையமரன்.

புவியரசனுக்கு ஊருக்குள்ளேயே பெண் பார்த்தாகி விட்டது என்பதைக் கேள்விப் பட்ட கங்கையமரனுக்கு முதலில் கடுப்பாகத் தான் இருந்தது.

அதன் பிறகு வருணா, தான் ஒரு பையனைக் காதலிக்கிறேன் என்று வந்து நின்ற போது, சரி நம் பொண்ணுக்கு இது தான் போலும் விதி என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.

அதுமட்டுமின்றி விஷேஷத்துக்காக இங்கே வந்து தங்கியவருக்குக் கனகாம்பரியின் சுபாவத்தைப் பார்த்ததும் அவளைப் பிடித்துப் போய் விட்டது.

அதனால் தான் இப்போது தாய்மாமனாக முன்நிற்கத் தானாகவே முன் வந்தார்.

“அடடா ரொம்ப சந்தோஷம் மாமா… இங்கே வாருங்கள் இந்தச் சால்வையைத் தலைப்பாகையாகக் கட்டிக் கொள்ளுங்கள். தேங்காயை உடைத்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றித் தீயைத் தணியுங்கள்”
என்றபடி ஒரு தேங்காயையும் தேங்காய் அடிக்கும் கத்தியையும் எடுத்துக் கங்கையமரனிடம் கொடுத்தான் அழகரசன்.

அவன் சொன்னபடியே தேங்காயை உடைத்து இளநீரை உருக்கிய தணல் மீது ஊற்றினார் கங்கையமரன்.

அதற்குப் பிறகு ஒரு தட்டத்தில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து, புவியரசனிடம் ஆசாரியார் கொடுத்தார்.

“புவிப்பா அதை வந்திருக்கும் சபையோருக்குக் காண்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியாருக்கு அரிசி, காய்கறிகளுடன் தட்சணையை உன் கையால் கொடு”
என்று சுந்தரவல்லி புவியரசனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

பெரியண்ணி சொன்னபடி செய்தவன் உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்வதற்காக ஒப்படைத்தான்.

அதற்குப் பிறகு வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்கள்.

“பெரியம்மா இப்படித் தினமும் விஷேசம் நடக்குமா?
என்று சுந்தரவல்லியைப் பார்த்து விஷ்ணு கேட்டான்.

“ஏன் கண்ணா”

“இப்படித் தினமும் விஷேசம் நடந்தால் விதம் விதமாகச் சாப்பிடச் செய்வார்கள் தானே”

“தினமும் விஷேசம் நடக்காது கண்ணா… ஆனாலும் உன் சித்தப்பாவுக்குத் திருமணம் ஆகும் வரையும் அதற்குப் பிறகு ஒரு இரண்டு வாரங்கள் வரையும் ஒரே விஷேசமாகத் தான் இருக்கும்”

“உண்மையாகவா பெரியம்மா”

“உண்மையாகத் தான் கண்ணா”
என்று சுந்தரவல்லி சொன்னதைக் கேட்டதும் சந்தோஷமாகக் குதித்து ஓடினான் விஷ்ணு.

அவனது சந்தோஷத்தைப் பார்த்து முறுவலித்தபடி வேலைகளைக் கவனித்தாள் அவனது பெரியம்மா.

மணப்பெண்ணுக்குத் தோழியாக மணமகனது சகோதரியையும், மணமகனுக்குத் தோழனாக மணப்பெண்ணின் சகோதரனையும் நிறுத்துவார்கள்.

சகோதரனோ சகோதரியோ இல்லாதவர்கள் யாராவது வேண்டப்பட்ட உறவினர்களைத் தோழனாகவும் தோழியாகவும் நிறுத்துவார்கள்.

அதன்படி மணப்பெண் தோழியாக வருணாவையும் மணமகன் தோழனாகச் சுந்தரவல்லியின் தம்பி கணேசனையும் நிற்க வைப்பதாக முடிவெடுத்தார்கள்.

விருந்துபச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே விருந்தில் ஒரு பகுதியைத் தோழியாக நிற்கப் போகும் பெண் மணமகளுக்குக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும்.

“வருணா இங்கே வா நான் கொடுப்பதை இப்போது நீ கனகத்திடம் கொண்டு சென்று கொடுக்க வேண்டும்”
என்று வருணாவை அழைத்தாள் சுந்தரவல்லி.

“நீங்களும் வாருங்கள் அக்கா”

“இல்லை வருணா… கன்னிக்கால் ஊன்றுவதற்குரிய வேலைகளைக் கவனிக்க வேண்டும். நான் அந்த வேலைகளைப் பார்க்கிறேன். நீ மீனாவை அழைத்துக் கொண்டு செல்”

“சரி அக்கா நான் போகிறேன். வருணா வா”
என்றபடி வருணாவுடன் மீனாட்சி புறப்பட்டுச் சென்றாள்.

அவர்கள் சென்ற பிறகு புவியரசனும் அழகரசனும் இருந்த இடத்திற்குச் சென்றாள் சுந்தரவல்லி.

“அத்தான் இங்கே வாருங்கள் முதன் முதலாக இனிப்புப் பலகாரம் செய்ய வேண்டும் என்பதால் அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைக்க வேண்டும். அப்போது தான் கன்னிக்கால் ஊன்றிய பின் பலகாரம் சுடலாம்”

“நீ ஒன்றும் செய்ய வேண்டாம் சுந்தரம் இங்கே வந்து சற்று ஓய்வாக அமர்ந்து கொள். அரியதரத்திற்கு வேண்டிய மாவை நான் குழைத்து வைக்கிறேன்”

“நீங்களா? வேண்டாம் அத்தான்”

“என்னடி உன் அத்தான் மீது நம்பிக்கை இல்லையா? நீ இருந்து வேடிக்கை மட்டும் பார் எல்லா வேலைகளையும் நானும் எழிலும் செய்கிறோம்”

“என்னத்தான் விளையாடுகிறீர்களா? நான் இங்கே ஒய்யாரமாக அமர்ந்திருக்க நீங்கள் மாவைக் குழைப்பீர்களா? யாரும் பார்த்தால் என்னை என்ன சொல்வார்கள்”

“யாரும் ஒன்றும் நினைக்க மாட்டார்கள் நீ இங்கே வா”
என்றபடி மனைவியை இழுத்து அருகே இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்த்தி விட்டு அரியதரம் செய்ய வேண்டிய மாவைக் குழைக்கத் தொடங்கினான் அழகரசன்.

தன் அத்தான் செய்வதைக் கன்னத்தில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் அவனது மனைவி.

அந்த வேலை முடிந்ததும் எல்லோரும் வெளியே வந்தார்கள்.

இன்றே முகூர்த்தக்கால் ஊன்றும் சடங்கு மணமகன் வீட்டிலும் மணமகள் வீட்டிலும் நடந்தாக வேண்டும்.

அதற்காகவே முள்முருங்கை மரத்தில் இருந்து ஒருதடியை வெட்டி எடுத்துக் கொண்டு வந்திருந்தான் எழிலரசன்
“எழில்… இந்த முள்முருங்கைத் தடியை அங்கே ஈசான மூலைக்குக் கொண்டு வா. அங்கே தான் ஊன்ற வேண்டும்”
என்றபடி வீட்டு வளவின் வடகிழக்குப் பக்கம் சென்றான் அழகரசன்.

வெட்டிக் கொண்டு வந்திருந்த முள்முருக்கந் தடியின் மேல் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி விட்டான் எழிலரசன்.

அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் புவியரசன்.

பெரியவர் என்ற முறையில் கங்கையமரன் அந்த முள் முருக்கம் தடியை ஈசான மூலையில் ஊன்றினார்.

ஊன்றிய தடிக்குத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டினான் அழகரசன்.

அதனடியில் நவதானியங்கள் இட்டு நீர் பால் ஊற்றி மரத்திற்கு திருநீறு சந்தனம் குங்குமம் சாற்றி விட்டாள் சுந்தரவல்லி.
அது நன்கு வளர வேண்டும் என்று நினைத்துக் கும்பத் தண்ணீரையும் சேர்த்து ஊற்றினாள்.

“சுந்தரம்… மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வா”

“ஏற்கனவே செய்து வைத்திருக்கிறேன் அத்தான்”

“சும்மா சொல்லக் கூடாது சுந்தரம்… உனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறதே”

“அத்தான் என்னைப் பாராட்டுவதை விட்டு, மஞ்சளில் செய்த பிள்ளையாரை வைத்து வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, தேங்காய் உடைத்துத் தூபதீபம் காட்டிப் பந்தற்காலை ஊன்றுங்கள்”

“சரி சரி அந்தத் தேங்காயை எடு”
என்றவன் தேங்காயை உடைத்துத் தூபதீபம் காட்டிப் பந்தற் காலை ஊன்றினான்.

அதைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடர்ந்தது.

“சரி சரி கிளம்புங்கள் கனகம் வீட்டிலும் இதே போலப் பந்தற்கால் ஊன்ற வேண்டும்”
என்றபடி அனைவரையும் துரிதப் படுத்தினாள் சுந்தரவல்லி.

தன்னருகே நின்றிருந்த புவியரசனைப் பார்த்து
“இதோ பார் புவிப்பா இன்றிலிருந்து திருமணம் நடைபெறும் வரையில் நீயும் கனகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது”

“என்ன அண்ணி உண்மையாகவா”

“உண்மையாகத் தான் புவிப்பா”

“நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளத் தானே வேண்டும்”

“ரொம்பத் தான் அலுத்துக் கொள்கிறாய் புவிப்பா”
என்றபடி வாய் விட்டுச் சிரித்தபடி சென்று விட்டாள் சுந்தரவல்லி.

இரு வீட்டிலும் கொல்லைப் புறமாகக் கொட்டகை போட்டு அடுப்பு மூட்டிப் பலகாரங்கள் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

கல்யாணத்திற்கு வேண்டிய பலகாரங்கள் எனும்போது பையித்தம் பணியாரம், அரியதரம், சிப்பிசோகி, கடல்மோதி, நெய் முறுக்கு, லட்டு என்பவை பிரதானமானவையாக இருந்தன.

பலகாரங்களைச் சுட்டுப் பனையோலையினால் இழைக்கப் பட்ட பெட்டிகளினுள் முதலில் போட்டு வைத்தார்கள்.

திருமணத்திற்கு ஐந்து நாட்கள் இருக்கையில் சுந்தரவல்லி மீனாட்சியை அழைத்துக் கொண்டு கனகாம்பரி வீட்டிற்குச் சென்றாள்.

“அக்கா இன்று என்ன சடங்கு இருக்கிறது”

“மீனா இன்று முளைப்பாலிகை போட வேண்டும்”

“ஓ அப்படியா அக்கா”

“அநேகமாக முளைப்பாலிகை போடுதலைப் பொன்னுருக்கலன்று செய்வார்கள்… நாங்கள் அதை இன்று செய்கிறோம்”
என்றபடி கனகாம்பரி வீட்டில் நுழைந்தாள் சுந்தரவல்லி.

“வாருங்கள் அக்கா, வாருங்கள் மீனாக்கா… இந்தப் பாட்டியைப் பாருங்கள்… என்னை வெளியே எங்கேயும் போக விடுகிறார்கள் இல்லை”
என்று புகார்ப் பத்திரிகை வாசித்தாள் கனகாம்பரி.

“கனகா நீ இப்போது சின்னப்பிள்ளை இல்லை… உனக்கென்று பொறுப்புகள் வந்து விட்டது புரிந்ததா? பாட்டி சொல்வதைக் கேட்டு நல்ல பெண்ணாக வீட்டிலேயே இரு”

“என்ன மீனாக்கா நீங்கள்… இங்கே வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க எனக்குப் போரடிக்கிறது”

“அதனால் என்ன கனகம்… அது தான் உன் மெய்க்காவல் படை இருக்கிறதே அவர்களை அழைத்து வந்து இங்கே வைத்திரு உனக்கு நேரம் போவதே தெரியாது”

“அட நீங்கள் வேறு சுந்தரி அக்கா… இப்போது எல்லாம் உங்கள் புத்திர புத்திரிகள் என்னைக் கண்டு கொள்வதே இல்லை தெரியுமா?”

“அடடா அப்படி என்றால் தான் நீ அடக்கமாக வீட்டில் இருப்பாய் கனகா”

“சும்மா போங்கள் மீனாக்கா”
என்றபடி உள்ளே போய் விட்டாள் கனகாம்பரி.

“அவளோடு பிறகு பேசிக் கொள்ளலாம் மீனா முதலில் இங்கே வா… நமக்கு வேலை இருக்கிறது… பக்கத்து வீட்டு ஈஸ்வரி அக்காவையும் வரச் சொல்”
என்றபடி வாங்கி வைத்திருந்த மூன்று மண்சட்டிகளையும் எடுத்துக் கொண்டு வந்தாள் சுந்தரவல்லி.

அந்த மண்சட்டிகளில் மண் நிரப்பி நீர் ஊற்றி வைத்து விட்டு,
நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள்ளு, கொள்ளு, உளுந்து, கடலை முதலான நவதானியங்களைப் பாலில் ஊறவைத்து அந்த மண்சட்டிகளில் தூவினாள்.

பக்கத்து வீட்டு ஈஸ்வரி அக்காவும் வந்து ஆளுக்கொரு மண்சட்டியைத் தயார் செய்தார்கள்.

நவதானியங்களைத் தூவியதும் நீரையும் பாலையும் மூன்று முறை தெளித்தார்கள்.
பின்னர் அந்த மூன்று மண்சட்டிகளையும் சுவாமி அறைக்குள் கொண்டு போய் வைத்தார்கள்.

அந்த நேரத்தில் வெளியே வந்த கனகாம்பரி, சுந்தரவல்லியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“அக்கா இதெல்லாம் எதற்கு”

“நவதானியங்கள் போட்ட இந்த மூன்று மண் சட்டிகளையும் திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும் கனகம்”

“அது ஏன் அக்கா”

“முளைப்பாளிகை இடுவதைக் கேட்கிறாயா? திருமணம் செய்து கொள்ளப் போகும் நீயும் புவியும் மற்றும் உங்கள் குடும்பமும் முளை விட்டுப் பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதற்காக”

“அடடா நல்லதொரு முறை தான்”

“இதைத் தான் 'விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்' என்கிறது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானதைத் திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்”

“அக்கா உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறதே நீங்கள் கெட்டிக்காரி தான்”
என்று அவளைப் பாராட்டினாள் கனகாம்பரி.

அன்றிரவு வானத்தில் தனியே வலம் வந்த சந்திரனைப் பார்த்துக் கொண்டே புவியரசனைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள் கனகாம்பரி.


💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
“தொட முடியாதோ என்றிருந்த என்னாசையை நிறைவேற்றிக் கொடுத்து என் கனவுக்குப் பாதை போட்ட என்னவனே

நான் உனக்காகவே உன்னில் என்றென்றும் உயிராய் இருப்பேன் என்று இந்த நிலவைச் சாட்சியாய்க் கொண்டு உரைக்கிறேன்

ஊரறிய உன் கரம் பிடிக்கும் அந்த நாள் இன்றைய நாளாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது

உன்னோடு சேர்த்து உன் கனவுகளையும் நான் உயிர் உள்ளவரை நேசிப்பேன் என்னுயிரே”

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
 
Top