• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கிழக்கு வானின் கீழ்த் திசையில் தன் மெல்லிய கதிர்களைக் கொண்டு மெது மெதுவாக எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தான் சூரியதேவன்.

அவனின் மெல்லிய ஒளிக் கற்றைகளை, ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் இலைகள் மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் சூரிய ஒளிக்குத் துணை புரிவது போல மெல்லிய காற்று இலைகளை அசைத்து அசைத்து ஒளிக் கற்றைகளின் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது.

இனிய காலைப் பொழுதில் சூரியனின் இளங் கதிரைத் தனது கண்களை மூடியவாறு உள்வாங்கிச் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான் புவியரசன்.

இமைகள் மூடி அமைதியாக இருந்த போதும் அவனது இதயத்துள் ஒரு வித சஞ்சலம் குடி கொண்டிருப்பதை அவ்வப்போது அழுந்த மூடிக் கொண்ட உதடுகள் பறை சாற்றிக் கொண்டே இருந்தது.

அவனது கனவுப் பாதை நீண்டு கிடக்கிறது… இடையில் தடைச் சுவராக இது என்ன? ஒரு புதுவிதக் குழப்பம்…

அவன் தனியனாக இருந்திருந்தால் இந்தத் தடையை எப்போதோ தகர்த்து விட்டுப் போய்விட்டிருப்பான்.

ஆனால் அவனைச் சுற்றி உறவுகளின் அரண் இருப்பதால் அவனால் சட்டென்று சுயநலமாக முடிவு எடுக்க முடியவில்லை.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கக் கூடிய விடயமாக இருக்கலாம்.

ஆனால் அவனைப் பொறுத்தவரை இது ஒரு வேண்டாத சுமையாகவே இப்போது தென்படத் தொடங்கி விட்டது.

வாழ்க்கையில் தன் இலக்கை எட்டிய பிறகே அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவன் இருந்தான்.

அப்படி இருக்கும் அவனிடம் வந்து 'திருமணம் செய்து கொள்' என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்.

எரிச்சலா? கோபமா? இயலாமையா? என்று இனமறியாத வகையில் அவன் மனம் சஞ்சலத்துக்கு உள்ளாகி விட்டிருந்தது.

புவியரசன் தாய் தந்தை இல்லாமல் அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்தவன்…
அண்ணன்களின் திருமணத்தின் பின்னர் இவன் நிலை என்னவாகுமோ எனக் கவலை கொள்ளாத அளவிற்கு அவனது அண்ணியர் கூட அவனைத் தங்கள் உடன் பிறந்தவனாகவே பாவித்தது அவனது அதிஷ்டமானது.

அப்படி அமைந்த உறவுகளை எடுத்தெறிந்து பேசவும் முடியவில்லை அவன் பேசவும் மாட்டான்.

திருமணத்திற்குச் சம்மதம் சொல்லவும் முடியவில்லை.

மற்றவர்களைப் போல நடப்பது நடக்கட்டுமே என்று எதையும் எடுத்துக் கொள்ளும் அந்தக் குணம் புவியரசனிடம் அறவே இருக்கவில்லை.

என்ன நடந்தாலும் இறங்கி நின்று போராட வேண்டும் என்ற குணம் கொண்டவன் அவன்.

இத்தனைக்கும் புவியரசனின் தமையன்களான அழகரசனும் எழிலரசனும் தங்கள் தம்பியைப் பட்டணத்திற்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவில் வாழ்பவர்கள்.

ஆனால் புவியரசனின் கனவோ வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டிருந்தது.

அவனுக்குப் படிப்பை விடவும் விவசாயம் இஷ்டமாக இருந்தது.

அதிலும் விவசாயம் என்றால் அவனுக்கு அலாதிப் பிரியம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த விடயத்தை வீட்டில் அண்ணன்களிடம் சொல்லி எப்படியாவது விவசாயத்திற்குள் கால் பதிக்க வேண்டும் என்று அவன் திட்டம் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில்…
கடலோரம் கட்டி வைத்த மணல் வீட்டை அலைகள் வந்து அள்ளிக் கொண்டு போனது போல அவனது கனவுகள் சட்டென்று கலைந்தது போலானது.

ஆனாலும் அவனொன்றும் கடலோரத்து மணல்வீடாகத் தனது கனவுகளைக் கட்டவில்லையே புத்தியோடும் மனதோடும் போராடி உள்ளத்தில் உடையாத கனவுக் கோட்டையை அல்லவா கட்டி வைத்திருக்கிறான்.

அப்படி இருக்கையில் இது என்ன சஞ்சலம் இது தேவையற்ற சஞ்சலம் தானே…
வீட்டில் என் முடிவைத் தெளிவாக எடுத்துச் சொன்னால் என்னைக் கட்டாயப் படுத்தவா போகிறார்கள்.

எனத் தன் பிரச்சினைக்குத் தானே ஒரு முடிவையும் தேடிப் பிடித்துக் கொண்டான் புவியரசன்.

ஒரு முடிவுக்கு வந்த பின்னரே அவனால் சூரிய நமஸ்காரத்தை நிம்மதியாக மேற் கொள்ள முடிந்தது.

சிறு வயதில் இருந்தே தந்தையுடன் வயலுக்கு வந்து போன அவனுக்கு வயலும் வரப்பும் நீரோடும் வாய்க்காலும் பெரிய விலைமதிப்பு இல்லாத சொத்துக்களாகவே தோன்றத் தொடங்கின விட்டது.

அவனைப் படிக்கச் சொல்லிப் பள்ளி அனுப்பிய போதோ ஏதோ அறிவுக்குப் படித்தால் போதும் என்றே எண்ணிப் படித்தவன் அவன்.

ஆனாலும் இயல்பிலேயே அவன் புத்திசாலி என்பதால் அவனை மேற் படிப்புக்கு அனுப்பிப் பெரிய வைத்தியர் ஆக்க வேண்டும் என்று அவனது வீடே கனவு கண்டது.

ஆனால் அவனது கனவுகள் இங்கே அவனது ஊரின் வயலுக்குள் புதைந்து கிடக்கின்றன என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கிராமத்துக்கே உரிய தனி மெருகோடு ஊரின் நடுநாயகமாக இருந்த வீட்டின் முற்றத்தில் போடப் பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான் புவியரசனின் மூத்த சகோதரனான அழகரசன்.

அவனுக்கு அருகே கீழே வெறும் தரையில் அமர்ந்து, செம்பில் இருந்த பசுப்பாலைப் பித்தளைக் குவளைகளில் ஊற்றிக் கொண்டிருந்தாள் அவனது மனையாள் சுந்தரவல்லி.

“அக்கா… அக்கா…”
என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் புவியரசனின் இரண்டாவது அண்ணி மீனாட்சி.

“வெளியே இருக்கிறேன் மீனா…”

“அக்கா… கொழுந்தனார் வந்து விட்டாரா?”

“இல்லை மீனா… தம்பி இன்னும் வரவில்லை… அவனிடம் நிறைய பேச வேண்டும்…”

“மாமாவிடம் ஏதும் சொன்னாரா?”

“தெரியவில்லை மீனா… இதோ கேட்கிறேன்”
என்றவாறு அழகரசன் பக்கம் திரும்பினாள் அவன் மனைவி.

“அத்தான் உங்களிடம் புவித் தம்பி ஏதும் சொன்னதா?”

“இல்லை சுந்தரம்… காலையில் நான் எழுவதற்கு முன்பே அவன் வெளியே போய் விட்டான்…”

“ஒரு முடிவு சொல்லாமல் இந்தத் தம்பி எல்லோரும் தூங்கிய பிறகு வீட்டுக்கு வருவதும் எழுவதற்கு முதல் வெளியே போவதுமாக ஏன் இப்படிச் செய்கிறான்…”

“அது தான் எனக்கும் புரியவில்லை சுந்தரம்”
என்றான் அழகரசன் யோசனையுடன்.

புவியரசனின் இரண்டாவது அண்ணன் எழிலரசனும் வந்து தமையன் அருகில் அமர்ந்து கொள்ள, ஒரு குவளைப் பசுப்பாலை அவனிடம் நீட்டினாள் அவன் அண்ணி.

“நன்றி அண்ணி”

“என்ன எழில்தம்பி இதற்கு எல்லாம் நன்றி சொல்லக் கூடாது என்று நானும் சொல்லிச் சொல்லிச் சோர்ந்து போய் விட்டேன்.”

“பழக்க தோஷம் அண்ணி”

“சரி சரி… புவித்தம்பி உங்களிடம் ஏதும் சொன்னானா?

“இல்லையே அண்ணி இரண்டு நாளாக அவனுடன் நின்று பேசக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்”

“உங்களுக்கு நேரம் இருந்திருந்தாலும் அவன் நின்று பேசி இருப்பானா தெரியவில்லை தம்பி.”

“ஏன் அண்ணி ஏதும் விஷயமா?”

“அது தான் தம்பி நான்கு நாளைக்கு முன்பாக அவனது திருமணம் பற்றிப் பேசினோமே நினைவு இருக்கிறதா?”

“அட அது மறக்குமா அண்ணி… சம்மதம் சொல்லி விட்டானா?”

“அட நீங்கள் வேறு தம்பி அவனை ஆளையே பிடிக்க முடியவில்லை. இதில் எங்கிருந்து அவன் சம்மதம் சொல்வது”
இவ்விதம் சம்பாஷணை போய்க் கொண்டிருந்த போது புவியரசன் வீட்டு வாசலினுள் நுழைந்தான்.

அதை உள்ளே சமையற் கட்டில் இருந்து சாளரத்தின் வழியே பார்த்த மீனாட்சி வேகமாக வெளியே வந்தாள்.

அவள் வந்த வேகத்தைப் பார்த்த அழகரசன்
“ஏய் பிள்ளை… என்ன இந்த ஓட்டம் என்ன விஷயம்…”
என்றான் புரியாத பார்வையுடன்.

“அதில்லை மாமா… கொழுந்தனார்...”
என்ற படி வீட்டு வாசலைப் பார்த்தாள் மீனாட்சி.

அப்போது தான் மற்ற மூவரும் புவியரசனைப் பார்த்தார்கள்.

அமைதியாக வந்தவன் அண்ணன்களுக்கு நடுவே இருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டான்.

அவனது முகத்தைப் பார்த்த சுந்தரவல்லிக்கு அவன் ஏதோ சொல்ல வந்திருக்கிறான் என்பது நன்றாகவே புரிந்தது.

அதை அவனே மனம் திறந்து சொல்லட்டும் என்று பேசாமல் அவனுக்கும் ஒரு குவளைப் பசுப்பாலை எடுத்து நீட்டினாள்.

“வேண்டாம் பெரியண்ணி”

“வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொள்ளடா…”

“இல்லை அண்ணி…”

“இதோ பார் புவி எதுவாக இருந்தாலும் இதை முழுவதும் அருந்தி விட்டு அதற்குப் பிறகு நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு…”
என்றாள் சிறிது கண்டிப்பான குரலில்.

அந்தக் கண்டிப்பான குரலிலும் ஒரு வித பாசம் இழையோடுவதைப் புவியரசன் உணராமல் இல்லை.

அதனால் அன்னையின் பேச்சுக்குக் கட்டுப் பட்ட குழந்தை போல அண்ணி கொடுத்த குவளைப் பாலை வாங்கி மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தான்.

அவனையே பார்த்திருந்த சுந்தரவல்லி மெல்லப் பேச்சுக் கொடுத்தாள்.
“இப்போது சொல்லுப்பா உனக்கு என்ன சொல்ல வேண்டும்”

“……..…………”

“புவி இந்த வீட்டில் உன் விருப்பத்தை மீறி எதுவும் நடந்து விடாது. அதற்கும் மேலாக உனக்கு எது நல்லது எது கெட்டது என்று யோசித்துத் தான் நாங்கள் முடிவே எடுத்துக் கொள்வோம்”

“அண்ணி எனக்குத் திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை”
அவனது பதிலைக் கேட்டதும் சுந்தரவல்லியைத் தவிர மற்ற மூவரும் அதிர்ந்தனர்.

“என்ன அரசு உன் பேச்சு… ஏன் இப்படிபேசுகிறாய்”
என்றான் மூத்தவன் அழகரசன்.

“அது தானே அரசா ஏன் உனக்குப் பிடிக்கவில்லை. ஒரு வேளை நீ யார் மீதும் பிரியம் வைத்து இருக்கிறாயா?”
என்றான் இளைய தமையன் எழிலரசன்.

“யார் மேலாவது இஷ்டப் பட்டால் கூச்சப் படாமல் சொல்லுங்கள் கொழுந்தனாரே பேசிப் பரிசம் போட்டு விடுவோம்”
என்றாள் இளைய அண்ணி மீனாட்சி தன் பங்குக்கு.

சுந்தரவல்லி மட்டுமே ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

தன் மனைவி அமைதியாக இருப்பதைப் பார்த்த அழகரசன்
“சுந்தரம் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்… நீயாவது இவனுக்குப் புத்திமதி சொல்லு”

“புத்திமதி சொல்லும் அளவிற்கு அவன் என்ன தவறு செய்து விட்டான் இப்போது?”

“ஏய் என்ன நீ இப்படிச் சொல்லுகிறாய்”

“எப்படிச் சொல்லுகிறேன் நீங்கள் சிறிது நேரம் பேசாமல் இருங்கள்”
என்றவாறு புவியரசன் பக்கம் திரும்பினாள் சுந்தரவல்லி.

“தம்பி நீ சொல்லு… எதையோ சொல்லுவதற்குத் தானே வந்து இருக்கிறாய். தைரியமாகச் சொல்லு”

“அண்ணி எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்…”

“சரி வேண்டாம்… “
என்று சொன்ன சுந்தரவல்லியை முறைத்தான் அவன் கணவன்.

“சும்மா என்னை முறைக்காதீர்கள் அத்தான். அவனது விருப்பம் தான் முக்கியம்…”
என்றவாறு புவியரசனை மேலே சொல்லுமாறு சொன்னாள்.

“அண்ணி எனக்கு விவசாயத்தில் தான் ஈடுபாடு… அதனால் எனக்கு இப்போது எதுவும் வேண்டாம்.”

அதைக் கேட்டிருந்த பெரியவனோ
“ஏய் அரசு அப்படியென்றால் உன் படிப்பு”

“எனக்குப் படிப்பதில் இஷ்டம் இல்லை அண்ணா”

“என்னடா உனக்கு ஆயிற்று. என்ன தான் பிரச்சினை”
என்று கோபமான அழகரசனைச் சுந்தரவல்லி சமாதானப் படுத்தினாள்.

“அத்தான் அவன் விருப்பம் போல விடுங்கள். அவன் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. நல்லது எது கெட்டது எது என்று அறியும் அளவிற்கு வளர்ந்த பெரிய பையன்”

“என்ன சுந்தரம் நீயும் புரியாமல் பேசுகிறாய். அவனை வைத்தியராக்கிப் பார்க்க வேண்டும் என்பது எங்கள் கனவு தெரியுமா?”

“ஆனால் அத்தான் அவனது கனவு அது இல்லை என்றான பிறகு இதெல்லாம் வீண் விவாதம் என்று தான் நான் சொல்லுவேன்”

“இல்லை சுந்தரம்”

“விடுங்கள் அத்தான் நம் வீட்டுப் பிள்ளையின் சந்தோசம் தானே முக்கியம். அந்தச் சந்தோசம் அவனுக்கு விவசாயத்தில் கிடைக்கிறது என்றால் நாம் தானே துணையாக நிற்க வேண்டும்.”

“என்ன சந்தோசமோ எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் பெரிய படிப்புக்கு ஆசைப் பட இவன் மட்டும் இந்த விவசாயத்தைக் கட்டிக் கொண்டு தொங்குகிறான்.”

“அத்தான் அவனை நாங்கள் தானே புரிந்து கொள்ள வேண்டும்.”

“என்னவோ செய்து கொள்ளுங்கள் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் அதற்கும் திருமணம் வேண்டாம் என்று இவன் சொல்வதற்கும் என்ன சம்மந்தம் சுந்தரம்”
என்ற அழகரசனுக்குப் பதில் சொல்ல முடியாமல் புவியரசனைத் திரும்பிப் பார்த்தாள் சுந்தரவல்லி.

“அது தானே அதற்கு என்ன பதில் அரசா”
என்றான் எழிலரசனும்.

அவர்களது கேள்விக்கு விடையாக
“ஒரு மூன்று வருடங்கள் போகட்டும் அண்ணி அதற்குப் பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாமே… தயவு செய்து மறுப்பு சொல்லி விடாதீர்கள்”
என்று புவியரசன் வேண்டிக் கேட்டுக் கொள்ளவும் அவனைக் கனிவுடன் பார்த்தாள் சுந்தரவல்லி.

“சரி சரி உன் விருப்பம் போல் நடக்கட்டும் தம்பி. ஆனால் ஒன்று சரியாக மூன்று வருடங்கள் மட்டும் தான் உனக்கு அவகாசம் புரிந்ததா?”
என்றவளின் பதிலில் புவியரசனின் முகம் சட்டென்று பிரகாசமானது.

“நன்றி நன்றி அண்ணி”
என்றவாறு குதூகலத்துடன் தன் அண்ணியின் கைகளைப் பற்றிக் கொண்டவனின் தலையில் கைவைத்துத் தானும் தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள் அவனது நலனையே என்றும் விரும்பும் அவன் அண்ணி.

அதன் பிறகு தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதும் தங்கள் தம்பிக்காகத் தாங்களும் சம்மதம் சொன்னார்கள் அழகரசனும், எழிலரசனும்.

வீட்டை விட்டு வெளியே வந்த புவியரசனது கால்கள் அவனை அறியாமலேயே வயல் பக்கமாக நடை போடத் தொடங்கியது.

ஏதோ இனம் புரியாத ஒரு வித உணர்வு உள்ளமெங்கிலும் ஊற்றெடுப்பதை அவனால் உணர முடிந்தது.

அந்த உணர்வைக் கண்களை மூடி அனுபவித்தான் புவியரசன்.

அவனது கனவுகள் தொடுவானமாய் தொலைவில் இருந்த போதும் அதைத் தொட்டு விடும் வேகம் அவனுள் ஊற்றாய்ப் பெருகி வழிந்தது.

அவனது கனவுகள் நிறைவேறுமா இல்லை வெறும் கனவாகவே போய் விடுமா என்பதைக் காலம் தான் சொல்லும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“கனவுகள் எங்கோ தொலைவில் தொடுவானமாய் – அதைத்
தொட்டு விடும் என் எண்ணம் நிச்சயம் ஈடேறும்”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top