• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
அதிகாலையிலேயே வானம் சாம்பல் நிறத்தைப் பூசிக் கொண்டு மப்பும் மந்தாரமுமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது…

ஒரு விதமான குளிர் எங்கும் ஊடுருவி அனைத்தையும் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்த நேரமது…

கனகாம்பரியின் வீட்டின் முன் மாடத்தில் தொங்கிக் கொண்டிருந்த கூண்டில் கண்மணி சிறகுகளைப் படபடவென அடித்துத் கொண்டிருந்தது…

அப்பொழுது வெளியே வந்த பர்வதப் பாட்டி கூண்டுக் கதவைத் திறந்து விட்டுத் தனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்…

கண்மணியோ தனது வேலையைப் பார்க்கச் சென்றது…
கனகாம்பரியின் அறையின் சாளரக் கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும்…

கண்மணி சாளரத்தின் விளிம்பில் அமர்ந்தபடி கனகாம்பரியை எழுப்புவதற்காகக் கீச்சிட்டுக் கொண்டே இருக்கும்…

அவள் எழுந்து வெளியே வரும் வரையில் அது தனது பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும்…

வழமை போல அன்றும் கண்மணி கீச்சிடும் ஒலியில் கனகாம்பரி மெதுவாகக் கண்களை விழித்துப் பார்த்தாள்.

தோட்டத்தில் மொட்டவிழ்ந்திருந்த நறுமண மலர்களின் சுகந்தம் நாசி வருடிச் செல்லவே, அந்த சுகந்தத்தின் இனிமையை நன்கு சுவாசித்தவாறு தன் போர்வையை இழுத்து மூடியபடி அடுத்த பக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள் அவள்…

அதிகாலை நேரத்தில் வருகின்ற நித்திரையே ஒரு தனி சுகம் தான் அல்லவா!
அதைத் தியாகம் செய்ய அவளுக்கு மனமில்லை போலும், போர்வைக்குள்ளேயே குடி புகுந்தவளுக்கு வெளியே வருவதற்கே சுணக்கமாக இருந்தது…

ஆனாலும் கண்மணியோ அவளை விடுவதாக இல்லை… தொடர்ச்சியாகக் கீச்சிடத் தொடங்கியது…

“ஏய் கண்மணி கொஞ்சம் பேசாமல் இருக்க மாட்டாயா…”

“கீகீ… கீகீ… கீகீகீகீ…”

“அது சரி உனக்குத் தூக்கம் போய் விட்டது அது தான் இந்தக் கூப்பாடு… இரு வருகிறேன்”
என்றவாறாக எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தாள்.

நேற்றிரவு அவளால் ஒழுங்காகத் தூங்க முடியவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது.

தந்தை எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார். எவ்வளவு திருப்பிக் கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பதை அவள் எப்பாடு பட்டாவது அறிந்த கொள்ள வேண்டும்.

முதல் நாளிரவு அதைப் பற்றிப் பாட்டியிடம் கேட்ட போது அவர் ஒன்றும் சொல்லாமல் நழுவி விட்டார்.

அதற்குப் பிறகு அவரிடம் இருந்து கடன் விபரம் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியாது என்பது கனகாம்பரிக்குப் புரிந்து போய் விட்டது.

அத்தோடு தானும் ஏதாவது வருமானம் ஈட்டித் தரும் வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது.

அதைப் பற்றியே அவளது சிந்தனை கடந்த இரண்டு வாரமாக இருந்ததால், அவளால் ஒழுங்காகத் தூங்க முடியவில்லை.

அவளுக்கு ஊருக்குள் இரண்டு மூன்று வாண்டுகள் தோழர்களாக முளைத்து இருந்தார்கள்.

தந்தை போட்ட கட்டுப் பாட்டினால் அவர்களோடு எந்த நேரமும் அவளால் சுற்றிக் கொண்டு இருக்க முடிவதில்லை.

சில சமயங்களில் தகப்பன் வேலை விடயமாகப் பக்கத்து ஊருக்குச் சென்று விட்டால் போதும் கனகாம்பரிக்கு இறக்கைகள் முளைத்து விடும்.

தன் நண்பர் பட்டாளத்துடன் வயல் வரப்பெல்லாம் ஒரு சுற்றுச் சுற்றாமல் வீட்டுப் பக்கம் வரவே மாட்டாள்.

இன்றும் அப்படித்தான் தகப்பன் வேலை விஷயமாக அதிகாலையிலேயே பக்கத்து ஊருக்குப் புறப்பட்டு விட்டார்.

அதனால் அவள் விரைவாக வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, கண்மணியோடு வெளியே செல்லத் தயாரானாள்.

வழமையாக அவள் இந்த மாதிரிச் செல்லும் போது தின்பண்டங்கள் எடுத்துச் செல்வாள்.

ஏனெனில் அவளும் அவளது வாண்டுக் கூட்டமும் உணவுப் பிரியர்கள்.

அதிலும் அந்த விஷ்ணு இவள் கொண்டு செல்லும் தண்ணீரையே ஆஹா ஓஹோ என்று இரசித்துக் குடிப்பான்.
தின்பண்டங்கள் கொண்டு சென்றால் சொல்லவா வேண்டும்.

தூக்கு வாளி முழுவதும் மஞ்சள் லட்டு, வெள்ளைப் பணியாரம், காரக் கொழுக்கட்டை என்று நிரப்பிக் கொண்டு அவள் தனது ஊர்வலத்திற்குச் செல்லத் தொடங்கினாள்.

கனகாம்பரியின் வீட்டில் இருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் ஒரு மாஞ்சோலை இருந்தது.

அங்கு ஏராளமான இனத்தைச் சேர்ந்த மாங்கன்றுகளை வளர்த்து வந்தார்கள்.

அதில் அநேகமானவை பெரிய விருட்சங்களாக வளர்ந்து காய்களைத் தொங்க விட்டுக் கொண்டு நிறைவாக நின்றிருந்தன.

வைரக்கண்டி, கறுத்தக்கொழும்பான், கிளிச்சொண்டு,விளாட்டு, வெள்ளடியன், பங்கனப்பள்ளி, ருமானி, சேலம், மல்கோவா, அல்போன்சா, சிந்தூரா எனப் பதினொரு வகையான மாங்கனிகளைக் கொடுக்கும் மாமரங்கள் அந்த மாஞ்சோலை எங்கும் நிறைந்திருந்தன.

அந்த மாஞ்சோலை யாருடையது என்று இது நாள் வரையிலும் கனகாம்பரிக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவளது தோழர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை.
அவளுக்கும் அவளது நண்பர் பட்டாளத்திற்கும் தெரிந்ததெல்லாம் அந்த மாஞ்சோலையில் நிற்கும் மாமரங்களின் மாங்காய்கள் மிக மிக ருசியானவை என்பது மட்டும் தான்.

தொலைவில் வயல் வரப்பில் கையில் தூக்கு வாளியுடன் வந்து கொண்டிருந்த கனகாம்பரியைப் பார்த்ததும் மாஞ்சோலைக்குள் நின்றிருந்த நண்பர் பட்டாளத்திற்கு அத்தனை சந்தோஷம்.

அந்தச் சந்தோஷம் அவளைப் பார்த்ததுமா? இல்லை அவளது கையில் இருந்த தூக்கு வாளியைப் பார்த்ததுமா? என்பது அந்த வாண்டுகளுக்குத் தான் வெளிச்சம்.

கனகாம்பரிக்கு முன்பாகப் பறந்து வந்த கண்மணி ஒரு மாமரத்துக் கிளையில் அமர்ந்தபடி சுற்றுமுற்றும் நோட்டம் விட்டது.

மாங்காய்களைத் திருடும் இந்தக் கொள்ளையர் கூட்டத்துக்குக் கண்மணி தான் ஒற்றன்.

தொலைவில் யாரேனும் வருவது போல இருந்தால் அது கீச்சிட்டுச் சமிக்ஞை கொடுக்கும்.

உடனே எல்லோரும் மரத்தின் அடர்ந்த கிளைக்குள் பதுங்கிக் கொள்வார்கள்.

ஒரு முறை கூடத் தோட்டத்துக்கு உரிமையானவர்களிடம் ஒருவர் கூடச் சிக்கிக் கொண்டதில்லை.

மாஞ்சோலைக்குள் வந்த கனகாம்பரி இளைப்பாறுவதற்காக ஒரு கிளையில் தாவி ஏறி அமர்ந்து மாமரத்தில் சாய்ந்து கொண்டாள்.

கீழே நின்று அவளையும் அவளது கையில் வைத்திருந்த தூக்கு வாளியையும் மாற்றி மாற்றிப் பார்த்தபடி நின்றிருந்தார்கள் அவளது கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

அதில் மனோப்பிரியன் ஒன்று அவனது தங்கை கானப்பிரியா ஒன்று இவர்கள் இருவரதும் ஒன்று விட்ட சகோதரன் விஷ்ணுப்பிரியன் ஒன்று, மற்றும் அவனது சகோதரியும் இவர்கள் எல்லோரையும் விடவும் சின்னவளுமான மோகனப்பிரியா ஒன்று என மொத்தம் நால்வர்.

மனோப்பிரியனுக்கு எட்டு வயது, கானப்பிரியாவுக்கு ஆறு வயது, விஷ்ணுப்பிரியனுக்கும் ஆறு வயது, மோகனப்பிரியாவுக்கு நான்கு வயது.

கனகாம்பரியோடு இவர்களது நட்புத் தொடங்கிக் கிட்டத் தட்ட ஒரு வருடம் முடிவடைந்து விட்டது.

“என்னையே ஏன் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள். ஆளுக்கொரு மாங்காய் என்றாலும் பறித்துக் கொண்டு வாருங்கள். இங்கிருந்து போய் விடலாம்”
என்றவளையே பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தார்கள் மற்றைய நால்வரும்.

கனகாம்பரிக்குப் புரிந்து போய்விட்டது அவளது கையில் இருக்கும் தூக்கு வாளியைப் பார்த்த பின்னரும் மாங்காயைப் பறித்துக் கடிக்க அவர்களுக்கு மனமே இல்லை என்பது.

மெல்லப் புன்னகைத்தபடி தூக்குவாளிக்குள் நிறைந்திருந்த தின்பண்டங்களை அவர்களுக்கு முன்னால் கடை பரப்பத் தொடங்கினாள் அவள்.

தன் இரண்டு கை முழுவதும் மஞ்சள் லட்டுக்களை அள்ளிக் கொண்டு நின்ற விஷ்ணுப்பிரியனைப் பார்த்த கனாகாம்பரி
“பேசாமல் உனக்கு உணவுப்பிரியன் என்று பெயர் வைத்திருக்கலாம் விஷ்ணு”
என்று சொல்லிச் சிரித்தாள்.

அதற்கு விஷ்ணு… அப்போது தான் விழுந்து முளைக்கத் தொடங்கிய அத்தனை பற்களையும் காட்டி இளித்து விட்டுத் தன் வேலையைச் செய்யத் தொடங்கினான்.

அவன் லட்டை உண்ணும் விதத்தைப் பார்த்துச் சிரித்தபடி திரும்பியவள் மோகனப்பிரியாவைப் பார்த்ததும் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

அவள் ஒரே ஒரு லட்டைக் கடிப்பதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

அவளது லட்டை வாங்கி விட்டு
“இதோ இது தான் உனக்கு ஏற்றது”
என்றபடி இரண்டு வெள்ளைப் பணியாரங்களை எடுத்து அவளிடம் கொடுத்தபடி அவளைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள்.

தின்பண்டங்கள் அத்தனையையும் ஒன்றும் மீதம் வைக்காமல் உண்டு முடித்தார்கள்.

விஷ்ணு கையில் இரண்டு லட்டு வைத்திருந்தான். மோகனாவும் ஒரு வெள்ளைப் பணியாரம் வைத்திருந்தாள்.

அடுத்த கட்டமாக மாங்காய்களைப் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார்கள்.

மரத்தின் மீது ஏறியது மனோப்பிரியன் மட்டும் தான். மற்றவர்கள் கீழே நின்று அவனை வேடிக்கை பார்த்தார்கள்.

அந்த நேரம் பார்த்துக் கண்மணி படபடவெனச் சிறகுகளை அடித்தபடி கீச்சிடத் தொடங்கியது.

யாரோ வருகிறார்கள் என்பதை உணர்ந்த மனோப்பிரியன் பறித்த மாங்காயைக் கைதவற விட்டான்.

அவன் கையில் இருந்து தவறிய மாங்காய் கனகாம்பரியின் உச்சந்தலையில் நச்சென்று விழுந்தது.

அது விழுந்த வேகத்தில் வலி தாங்காமல் அவள் ஆவென்று கத்தினாள்.

அதைப் பார்த்த கானப்பிரியா அவளது வாயைப் பொத்தியபடி
“அக்கா கத்தாதீர்கள்… யாரோ வருகிறார்கள்.”
என்று சொன்னாள்.

அவளைக் கலங்கிய கண்களால் பார்த்த கனகாம்பரி அவளது கையை எடுத்தபடி
“அடிப்பாவி மகளே… நான் என்ன வேண்டுமென்றா கத்தினேன்… உன் அண்ணன் பார்த்த வேலையடி இது”
என்றபடி லேசாகக் கண்ணைக் கசக்கிக் கொண்டே உச்சந் தலையைத் தேய்த்து விட்டாள்.

அந்த நேரத்தில் யாரோ நபர்கள் கலகலத்துச் சிரித்தபடி மாஞ்சோலைக்கு நடுவே இருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

“அக்கா தொலைந்தோம் வகையாக மாட்டிக் கொள்ளப் போகிறோம்”
என்றவாறு அழுவது போல மூக்கை உறுஞ்சினாள் கானப்பிரியா.

மேலே மரத்தில் இருந்தவனோ கிளைகளுக்குள் பதுங்கியபடி
“எங்கேயாவது பதுங்கிக் கொள்ளுங்கள்”
என்று மற்ற நால்வருக்கு மட்டும் கேட்கும் வகையில் கத்தினான்.

கனகாம்பரிக்குச் சில நொடிகள் என்ன செய்வது என்பதே தெரியவில்லை.

அவள் மேலே கிளைகளுக்குள் இருந்தவனை அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தாள்.

“அக்கா இங்கேயே பார்த்து என்னைக் காட்டிக் கொடுக்காமல் எங்காவது போய் மறைவாக நில்லுங்கள்”
என்றான் மனோப்பிரியன் உண்மையான பதட்டத்துடன்.

அதோ மூன்று ஆண்கள் வருவது நன்றாகவே தெரிகிறது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது.

“வகையாக மாட்டிக் கொண்டோம். மானமே போகப் போகிறது. கடவுளே எப்படியாவது எங்களைக் காப்பாற்று.”
என்று கனகாம்பரி வேண்டிக் கொண்டாள்.

அவளையே பார்த்திருந்த கானப்பிரியா கைகளைக் கூப்பியவாறு ஏதோ முணுமுணுத்தபடி தானும் வேண்டிக் கொண்டாள்.

“அம்மா தாயே… இந்த முறை எங்களை நீ காத்து நின்றாய் என்றால்… நூற்றியெட்டு முறை தோப்புக்கரணம் போடுகிறேன்”
என்று வாய்விட்டே வேண்டிக் கொண்டாள் கனகாம்பரி.

இவளும் பதறியபடி இருக்க, கானப்பிரியா கடவுளை வேண்டியபடி இருக்க, மனோப்பிரியன் கிளைகளுக்குள் பதுங்கியபடி இருக்க, கண்மணி கீச்சிட்டவாறு இருக்க, இருவர் மட்டும் எந்த எண்ணமும் இல்லாமல் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள்.

ஒன்று விஷ்ணுப்பிரியன் மற்றையது மோகனப்பிரியா.
விஷ்ணு கையில் மீதம் வைத்திருந்த லட்டுகளை விட மனமில்லாமல் அதைக் கடிக்கக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தான்.

கனகாம்பரி மரக்கிளையில் சாய்ந்து இருக்கையில், அவளது மடியில் அமர்ந்திருந்த மோகனப்பிரியா கொழுக்கட்டைகளைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவளது பிரச்சினை.
இருவரும் மற்றவர்களை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

கனகாம்பரிக்கு இருவரையும் பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

தோட்டக்காரர் திட்டினால் என்ன செய்வது பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு நிற்க வேண்டியது தான்.
இந்த விஷயம் மட்டும் அப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான் என்று ஏதேதோ யோசித்துக் கொண்டே இருந்தவள் கிளையில் இருந்து கீழே இறங்கி நிற்க வேண்டும் என்பதை மறந்து போனாள்.

இவர்களை நோக்கி வந்து நின்றவர்களை அப்போது தான் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்.

அதற்குள் கானப்பிரியா “புவிச்சித்தப்பா” என்றபடி சிரிக்கத் தொடங்கினாள்.

வந்தவர்களும் அப்போது தான் இவர்களைப் பார்த்தார்கள்.

“ஏய் வாண்டுகளா! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”
என்றபடி அவர்களுக்கு அருகே வந்தான் அழகரசன்.

அவர்களைப் பார்த்ததும் தான் கனகாம்பரிக்கு மூச்சே வந்தது.

“அடடே அழகத்தான் நீங்களும் மாங்காய் திருடத்தான் வந்தீர்களா?”
என்றாள் விரிந்த புன்னகையுடன்…

அழகரசனுக்கு அருகே நின்றிருந்த எழிலரசனும் புவியரசனும் “என்னது” என்றார்கள் அவளைக் கேள்வியாகப் பார்த்து…

“இல்லை ஏதோ சத்தம் கேட்டதும் இந்தத் தோட்டத்துக்குச் சொந்தமானவர்கள் தான் வந்து கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்து நாங்கள் ஆறு பேரும் பயந்து விட்டோம் எழிலத்தான்” என்ற கனகாம்பரியையும்
“ஆமாம் சித்தப்பா… பார்த்தால் நீங்கள் வந்து நிற்கிறீர்கள்”
என்ற கானப்பிரியாவையும்
புரியாமல் பார்த்தார்கள் வந்த மூவரும்…

“நல்ல வேளை அழகத்தான் வேறு யாரேனும் வந்திருந்தால் எங்கள் ஆறு பேருக்கும் திருடர் பட்டம் கட்டியிருப்பார்கள்… ஆனால் பாருங்களேன் இந்தத் தோட்டத்து மாங்காயின் ருசி உங்களைக் கூடத் திருட்டுத்தனம் செய்ய வைத்து விட்டதே…”
என்றவளைப் பார்த்திருந்த மற்ற மூவரும் லேசாகப் புன்னகைத்தார்கள்.

அதிலும் அழகரசன்
“அது சரி பிள்ளை… நாங்கள் வந்த நேரம் தொட்டு ஆறு பேர் ஆறு பேர் என்கிறாயே… நான்கு பேர் தானே நிற்கிறீர்கள்?”
என்றான் கேள்வியாக…

“இருவர் மரத்தில் இருக்கிறார்கள்”
என்றபடி கண்மணி இருந்த மரத்தையும் மனோ மறைந்திருந்த மரத்தையும் காட்டினாள்.

அப்போது தான் கிளையில் அசைவை உணர்ந்த அழகரசன்
“மனோ கீழே இறங்கி வா…”
என்றான் கொஞ்சம் குரலில் அழுத்தம் கொடுத்து…

தந்தையின் குரல் கேட்டதும் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் சரசரவென இறங்கி வந்தான் மனோ.

அவன் இறங்கி வந்த வேகத்தைப் பார்த்த கனகாம்பரிக்குத் தலை கிறுகிறுத்தது.

“ஆக மொத்தம் நீங்கள் ஐந்து பேரும் மாங்காய் திருட வந்து இருக்கிறீர்கள்”
என்ற அழகரசனின் கேள்விக்கு
மற்றவர்கள் ஆமாம் சாமி என்பது போலத் தலையை ஆட்டினார்கள்.

“பிள்ளை உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தத் தோட்டத்தை நாங்கள் விலை கொடுத்து வாங்கி ஐந்து மாதங்கள் ஆகிறது”
என்றான் அழகரசன்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவளோ “என்னது” என்று அதிர்ந்து போனாள்.

“அத்தான் அப்படியென்றால் சொந்தத் தோட்டத்திற்குள்ளேயே திருட வந்த உங்கள் பிள்ளைகளை எண்ணிச் சிரிப்பதா? இல்லையெனில் இங்கே நிற்பவர்களில் நான் மட்டும் தான் திருடி என்பதை நினைத்து அழுவதா?”
என்றாள் உதட்டைப் பிதுக்கியபடி…

அவளது அதிர்ச்சியையும் அவள் சொன்னவற்றையும்
பார்த்ததும் லேசாகப் புன்னகைத்தபடி தலை முடியை அழுந்தக் கோதிக் கொண்டான் புவியரசன்.

“அத்தான் ஊருக்குள்ளே எதெது உங்கள் தோட்டம் , வயல் என்பதை முதலில் சொல்லி விடுங்கள்… இப்படி அசடு வழிய நிக்காமல் தப்பிக் கொள்ள அது உதவியாக இருக்கும்”
என்றவளைப் பார்த்துச் சிரித்தபடி
அவர்களுக்கு வேண்டிய மாங்காய்களைப் பறித்துப் போட்டார்கள் மற்றவர்கள்…

எல்லோரும் கலகலத்துப் பேசிச் சிரித்தபடி இருக்க, ஒருவன் மட்டும் வந்த வேலையைக் கவனித்தான்.

ஆம் புவியரசன் மட்டும் நிறத்திருந்த மாங்காய்களைப் பறித்துக் கொண்டு வந்த கூடைகளை நிரப்பத் தொடங்கினான்…

கனகாம்பரிக்கு… அழகரசன் , எழிலரசன் , புவியரசன் தூரத்து உறவு அதோடு இவர்கள் அவளுக்கு அத்தான் முறை. ஒரே ஊரில் இருப்பதால் ரொம்பப் பழக்கமும் கூட…

அழகரசன் தன் தம்பிக்குப் பார்த்து வைத்த பெண்ணும் கனகாம்பரி தான்… இது சம்பந்தப் பட்ட இருவருக்கும் தெரியாது…

அவர்கள் இருவருமே தங்கள் இலட்சியப் பயணத்தைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்ததால் மற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

ஆனாலும் கனகாம்பரிக்குத் தன் திருமணம் குறித்துப் பெரிய கனவும் இருந்தது. தன் படிப்புக்காக அந்தக் கனவைத் தள்ளி வைத்திருந்தாள்.

கனகாம்பரி கலகலப்பான சுபாவம் என்றால் புவியரசன் அமைதியான சுபாவம்…

அவளுக்கு எப்போதுமே பேசிக் கொண்டு இருக்கப் பிடிக்கும் என்றால் அவனோ அமைதியாக இருப்பதையே விரும்புவான். ஆனாலும் நன்றாகப் பேசுபவர்களை அவனுக்குப் பிடிக்கும்.

வேலையில் மும்முரமாக இருந்த புவியரசனின் அருகில் சென்றவள்
“ஏன் புவியத்தான் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு வேலை செய்யலாமே”
என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்கு அவளைப் பார்த்துப் புன்னகைத்ததோடு சரி அவன் வாயைத் திறக்கவில்லை…

“ஏன் அத்தான் வாயில் கொழுக்கட்டையா?”
என்றாள் அவனது புன்னகையில் கடுப்பாகி…

அவன் அதற்கும் ஒரு புன்னகையைப் பரிசாக்கி விட்டு மாங்காய்களைப் பறிக்கத் தொடங்கினான்.

இதற்கு மேலும் இவனுடன் பேசிப் பிரயோசனம் இல்லை என்பதைப் புரிந்தவள் மற்றவர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தாள்.

“அழகத்தான், எழிலத்தான் உங்கள் தம்பியைக் கட்டிக் கொள்ளப் போகும் சீமாட்டி ரொம்பப் பாவம்”
என்றாள் சிறு ஆதங்கத்துடன்…

அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு லேசாகச் சிரித்தபடி
“ஏன் பிள்ளை அப்படிச் சொல்கிறாய்?”
என்றார்கள்.

“ஒரு வார்த்தை பேசுவதற்கே கூலி கேட்பார் போல உங்கள் தம்பி… பேசாமல் அவருக்கு ஒரு வாயாடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விடுங்கள் அத்தான். அவள் பேசுகிற பேச்சில் இவருக்கு காதில் இரத்தம் வடிய வேண்டும்”
என்றவளை ஏறிட்டுப் பார்த்த இருவரும்
“அப்படியே செய்து விடுவோம் பிள்ளை”
என்றார்கள் கோரஷாக…

“அது சரி பிள்ளை… உனக்கு எப்படிப்பட்ட புருஷன் வேண்டும். உன்னைப் போல வாயாடியாகவா?”
என்று கேட்டான் எழிலரசன் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

“இல்லை இல்லை அத்தான். எனக்கு வாயாடிப்புருஷன் வேண்டாம். எனக்கு அமைதியான புருஷனே போதும்.”
என்றபடி லேசாக வெட்கப் பட்டாள்.

அவளது வெட்கத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்த மற்றவர்கள்
“அது சரி உன் புருஷனுக்கும் சேர்த்து நீயே பேசி விடுவாய் என்பதால் அவன் அமைதியாகவே இருந்து விடலாம் தான். ஆனாலும் அவன் பாவம் காதில் இரத்தம் வடிய வைக்கப் போகிறாய்”
என்றார்கள்.

“போங்கள் அத்தான் நானொன்றும் அவ்வளவு பெரிய வாயாடி கிடையாது”
என்று சொல்லிய படி வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“வறண்ட பாலையெனக்
கிடக்கும் என் மனத் தரைமீது நான் கேட்காமலேயே மழையெனப் பொழியப்
போவது யாரோ?
இலையுதிர் காலமென
இருக்கும் என் வாழ்வில் வசந்தகாலத்துத் தென்றலாகி வீசப் போவது யாரோ?
மூங்கிலென நிற்கும்
என்னைப் புல்லாங்குழல்
ஆக்கி இசைக்கப் போவதும் யாரோ?”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top