• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
தெற்குப் பக்கமாக மழை மேகங்கள் அணிவகுத்து நிற்க, முழுநேரமும் வானம் பூமி மீது மழைமாரி பொழிந்து கொண்டிருந்தது.

புரட்டாசி மாதத்தில் விதைக்கப்பட்ட மொட்டைக் கறுப்பன் நெல்லு இப்போது கார்த்திகை மாதத்தில் மழையை உள் வாங்கி முழங்கை அளவில் வளர்ந்து நின்றது.

எங்கு பார்த்தாலும் பச்சை நிறத்தில் நெல் வளர்ந்து நின்று பார்ப்போரை வசீகரித்துக் கொண்டிருந்தது.

அந்த வயலையே பெருமூச்சுடன் பார்த்தபடி மாட்டுவண்டியில் வந்து கொண்டிருந்தார் சின்னராசா.

அவருடன் அவரது பக்கத்துத் தெருவில் குடியிருக்கும் கணபதி வாத்தியார் கதையளந்தபடி வந்து கொண்டிருந்தார்.

“சின்னராசா… உன் பெண்ணுக்கு எப்போது கல்யாணம்”

“அதற்கு நேரமும் காலமும் இன்னும் கூடி வரவில்லை வாத்தியாரே… அவளுக்கு இப்போது தானே வயது இருபத்திநான்கு”

“அட என்னப்பா நீ… இப்படிப் பேசுகிறாய்… நம் ஊர்ப் பெண் பிள்ளைகள் இருபத்தியொரு வயதிலேயே கையில் குழந்தையோடு நிற்கிறார்கள்…”

“அப்படியே தெருவில் குடுமிப் பிடிச் சண்டை போட்டுக் கொண்டும் நிற்கிறார்கள் என்று சொல்லுங்கள்”

“எல்லோரும் அப்படியில்லை சின்னராசா”

“எல்லோரும் அப்படியில்லை தான் வாத்தியாரே… ஆனாலும் அவர்களுக்கும் ஒரு குடும்பத்தைக் கொண்டு நடத்தும் பக்குவம் வேண்டாமோ?”

“இப்போது என்ன தான் சொல்ல வருகிறாய் சின்னராசா”

“நான் சொல்ல வருவது இருக்கட்டும் வாத்தியாரே… நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்”

“அது வந்து… உன் பெண்ணும் சிறு பிள்ளைகள் போல ஊரைச் சுற்றுகிறாளே அவளுக்கு எப்போது கால்கட்டு போடப் போகிறாய்”

“வாத்தியாரே என் பெண் விரும்பியது போல அவளைப் படிக்க வைக்கத்தான் என்னால் முடியவில்லை… அவள் திருமணத்தையாவது அவள் இஷ்டம் போல நடத்தி வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்…”

“அதற்காக என்ன செய்யப் போகிறாய”

“இப்போது தானே இருபத்திநான்கு வயது முடிந்து இருக்கிறது. ஒரு இரண்டு வருடங்கள் போகட்டுமே ஒன்றும் அவசரமில்லை”

“இருந்தாலும்…”

“வாத்தியாரே… என் பெண் கொஞ்ச நாளைக்குச் சுதந்திரமாக இருக்கட்டும்… திருமணம் செய்து கொண்டால் அவள் உலகமே அடியோடு மாறி விடும்… எனக்கு இருப்பதுவும் இவள் மட்டும் தானே…”
என்று லேசாகக் குரல் தடுமாறப் பேசிய சின்னராசாவை ஆதுரத்துடன் பார்த்தார் கணபதி வாத்தியார்.

“நான் ஒன்றும் உன் பெண்ணைத் தவறாகச் சொல்லவில்லை சின்னராசா. சிறு பிள்ளையைப் போல அவள் ஊரை வலம் வருவது கூடப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது தான்… ஆனாலும்…”
என்று இழுத்தார்.

“ஆனாலும் என்ன வாத்தியாரே… தயங்காமல் சொல்லுங்கள்”

“சின்னராசா இது கிராமம்… இங்கே யாரேனும் தவறாகப் பேசி விட்டால்”

“புரிகிறது வாத்தியாரே… பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள். என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும் தானே…”

“உன் போன்ற தகப்பன் கிடைக்க… நம் கனகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சின்னராசா.”

“அட நீங்கள் வேறு வாத்தியாரே… என் கஷ்டத்தை உணர்ந்து தன் கனவையே தூரப் போட்ட என் மகள் கிடைக்க நான் தான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்”
என்று மனமிளகச் சொன்னார் சின்னராசா.

அவர் இப்படிப் பேசும் போது அதைக் கனகாம்பரி கேட்டிருந்தால் மயக்கம் போட்டே விழுந்திருப்பாள்.

என் தந்தையா இப்படிப் பேசுவது என்று அதை நம்ப முடியாமல் அது நிஜமா கனவா என்று பார்க்க பக்கத்தில் இருக்கும் யாரையாவது கிள்ளிக் கூட வைத்திருப்பாள்.

…………………………………………………………………………

அம்மன் கோவிலின் ஒலிபெருக்கியில் கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்தப் பக்திப் பரவசமான கவசம் காற்றோடு வந்து காதோடு கலந்து மனதுக்குள் சங்கமமானது.

வயலோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சீமெந்துக் கட்டில் அமர்ந்தபடி சற்றுத் தூரத்தில் இருந்த அம்மன் கோவிலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள் பர்வதப் பாட்டியும் பேர்த்தியும்.

“ஏன் கனகம் உனக்குப் படித்து என்னவாக வர விருப்பம்”

“ஆச்சி… என்னைக் கனகம் என்று நீங்கள் அழைக்கும் போது அது கடகம் என்று என் காதுகளுக்கு விழுந்து தொலைக்கிறது”

“அப்படியா சங்கதி… அப்படியென்றால் உன்னைக் கடகம் என்று அழைக்கிறேன் அப்போது தான் கனகம் என்று உனக்குக் கேட்கும்”
என்று சொல்லி விட்டுப் பர்வதப் பாட்டி மெல்லச் சிரித்தார்.

பாட்டியின் புன்னகையையே பார்த்திருந்த கனகாம்பரி
“ஆச்சி… நீங்கள் சிரிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா? என் கண்ணே பட்டு விடும் போல இருக்கிறது”
என்று சொல்லிப் பாட்டிக்குத் திருஷ்டி கழிப்பது போல விரல்களை நெட்டி முறித்தாள்.

“பிள்ளை நீ பேச்சை மாற்றாமல் நான் கேட்டதற்குப் பதில் சொல்லு… நீ வாத்தியாரா? வைத்தியரா? என்னவாக வர விருப்பப் படுகிறாய்”

“நான் இந்தக் கம்பர்மலைக் கிராமத்திற்கு வாத்தியாரம்மாவாக வர விருப்பப் படுகிறேன் பாட்டி”

“உன் விருப்பம் நிறைவேற நான் அந்த அம்மனுக்கு நேர்த்தி வைத்திருக்கிறேன் பிள்ளை… பார்ப்போம் அதைப் பார்க்கும் வரை இந்த உயிர் தங்குமா? தெரியவில்லை.”

“என்ன பேச்சு இது ஆச்சி…”
என்றபடி முகத்தைத் தூக்கி வைத்திருந்தவளைத் தன் பக்கமாகத் திருப்பி
“சரி சரி… வயது போன காலத்தில் ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன் மன்னித்து விடு ஆத்தா…”
என்றார் இறைஞ்சுதலாக…

அவளும் போனால் போகட்டும் என்று மன்னித்து விட்டாள்.

அதன் பிறகு அவர்களது சம்பாஷணை படிப்பைத் தாண்டித் திருமணத்தில் வந்து நின்றது.

“உனக்கும் காலநேரத்தில் ஒரு கல்யாணம் செய்து வைத்து உன் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று இந்த ஆச்சிக்கும் ஒரு விருப்பம் தான்”
என்றவர் தொடர்ந்து
‘நான் தான் இருப்பேனா?’
தெரியவில்லை என்று சொல்வதற்கு வாயெடுத்து விட்டு அதை அப்படியே சொல்லாமலேயே விட்டு விட்டார்.

சாவைப் பற்றிப் பேசி இவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவருக்கென்ன வேண்டுதலா? அதனால் சட்டென்று வேறு கேள்வி கேட்டார்.

“ஏன் பிள்ளை உனக்கு வரப் போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?”

“அது யார்… ஆச்சி எனக்கு வரப் போகிறவர்”
என்று லேசாகச் சிரித்தபடி கேட்டவளைப் பார்த்த பர்வதப் பாட்டி
“அது தானடி பெண்ணே ஊரறிய உன்னைக் கைப்பிடிக்கப் போகும் மணவாளன்”

“ஓ… அந்த அவரைக் கேட்டீர்களா?”

“ஆமாம் அந்தச் சுவரைத் தான் கேட்கிறேன்”
என்றபடி சிரித்தார் பாட்டி.

பாட்டி கேட்ட கேள்விக்குக் கோவில் கோபுரத்தைப் பார்த்தபடி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் கனகாம்பரி.

“பிள்ளை… நான் கேட்டது உனக்குக் கேட்கவில்லையா?”
என்று லேசாகப் பேர்த்தியை உலுக்கினார் பாட்டி.

அவர் அசைத்ததும் தானாகவே
“எனக்குப் புவியத்தானைப் போலப் பண்பானவர் தான் கணவனாக வேண்டும் ஆச்சி”
என்று பட்டென்று சொன்னவள் சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு தன் தலையில் கொட்டிக் கொண்டு பாட்டியைப் பார்த்தாள்.

“நான் ஏன் இப்போது அத்தானை நினைத்துக் கொண்டேன்”
என அவளது மனசாட்சி அவளிடமே கேள்விக்கணையைத் தொடுத்தது.

அவள் சொன்னதைக் கேட்ட பர்வதமோ
“யார் அது… நம் கலையரசனுடைய மூன்றாவது மகனையா? நீ கட்டிக் கொள்ள விரும்புகிறாய்”
என்று ஆவலே உருவாகக் கேட்டார்.

பாட்டி சொன்னதைக் கேட்டுப் பதறியவள்
“ஐயோ… என்ன ஆச்சி நீங்கள் நான் எங்கே அப்படிச் சொன்னேன்… அவரைப் போல என்று தானே சொன்னேன்”
என்றாள்.

பேர்த்தியின் முடியைக் கோதியவாறு
“அடி பெண்ணே… அவரைப் போல என்றால் அவர் என்று தான் அர்த்தப் படும் இது உனக்குத் தெரியவில்லையா?”

“பாட்டி நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை… நீங்கள் எப்படிப்பட்ட கணவன் வர வேண்டும் என்று கேட்டீர்கள். அதற்குத் தான் புவியத்தானைப் போல என்று சொன்னேன்”
எனப் படபடத்தாள் கனகாம்பரி.

பேர்த்தியின் படபடப்பைச் சிறு முறுவலுடன் பார்த்தவர்
“இரு பிள்ளை… ஏன் பதறுகிறாய். உனக்கு ஒரு பழமொழி தெரியுமா? அது உனக்கு இப்போது மிகப் பொருந்தும்”
என்றார்.

“என்ன பழமொழி அது”

“கையில் வெண்ணெய் இருக்க… நெய் வாங்க அலைவானேன்… என்பது தான் அந்தப் பழமொழி”

“இது எனக்கு எப்படிப் பொருந்தும் ஆச்சி”

“புவியரசன் இருக்க, புவியரசனைப் போல வேறொருவன் எதற்கு என்று கேட்கிறேன்…”

“ஓ ஆச்சி… வெண்ணெய் நம் புவியத்தான்… நெய் அந்த வேறொருவனா? நல்ல விளக்கம் ஆச்சி”
என்று மெல்லச் சிரித்தாள் கனகாம்பரி.

“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது பிள்ளை. நான் உண்மையாகத் தான் சொல்கிறேன். புவிப்பையனை விடவும் உனக்கு நல்ல பையன் கிடைப்பானா?”
என்று சொன்ன பாட்டியை ஒரு மார்க்கமாகப் பார்த்த கனகாம்பரி

“ஆச்சி… இன்னும் சிறிது நேரம் உங்களோடு இருந்தேன் என்றால் என் வாயாலேயே புவியத்தானை நான் விரும்புகிறேன் என்று சொல்ல வைத்து விடுவீர்கள்… ஆளை விடுங்கள்”
என்று சொல்லியபடி எழுந்து ஓடினாள்.

வரப்பில் ஓடும் தன் செல்லப் பேர்த்தியைப் பார்த்த பர்வதம்
“இந்த மகராசிக்கு ஏற்ற மகராசன் புவி தான்”
என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

அப்படியே அம்மன் கோவில் கோபுரத்தைப் பார்த்துத் தான் நினைத்தது நிறைவேற வேண்டும் என்றும் மானசீகமாக வேண்டிக் கொண்டார்.

வயலின் நடுவாக வரப்பில் ஓடியவளைத் தொடர்ந்து பறந்து போனது கண்மணி.

அவளுக்கு முன்பாகக் குளத்தோரம் இருந்த பூவரசமரத்தில் இருந்தபடி அவளைப் பார்த்துக் கீச்சிட்டது.

வேகமாக ஓடி வந்தவள் மூச்சிரைத்தபடி கண்மணியைப் பார்த்துப் பேசினாள்.

“கேட்டாயா? கண்மணி… ஆச்சி சொன்ன விஷயத்தை… எனக்குத் தலையே கிறுகிறுத்து விட்டது தெரியுமா?”

“கீ… கீ… கீ… கீ…”

“புவியத்தான் எனக்கு உறவுக்காரர் தான்… ஆனால் அவர் குடும்பம் இந்த ஊரிலேயே பணம் படைத்த குடும்பம்… அவருக்குப் பட்டணத்தில் தான் பெண் பார்ப்பார்கள் என்று ஊரே பேசுகிறது… இது தெரியாமல் இந்த ஆச்சி ஏதேதோ கற்பனை செய்கிறார்கள்”

“கீ… கீ… கீ… கீ…”

“இந்த விஷயம் அந்தக் குடும்பத்திற்குத் தெரிந்தால்… அவர்களுக்குத் தெரிவது இருக்கட்டும் புவியத்தானுக்குத் தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார் நீயே சொல்லு”

“கீகீகீ… கீகீகீ… கீகீகீ… கீகீகீ…”

“நீ ஏன் இப்படிச் சத்தம் போடுகிறாய்… என்னைப் பற்றிப் புவியத்தான் தவறாகத் தான் நினைப்பார் இல்லையா?”
என்று சொல்லிக் கொண்டே போனவள்

“உன்னைப் பற்றி நான் ஏன் அம்பரி… தவறாக நினைக்க வேண்டும்”
என்ற குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அங்கே நின்றவனைப் பார்த்ததும் பிரபஞ்சமே வேலை நிறுத்தம் செய்தது போலக் கனகாம்பரி திகைத்து விழித்து நின்றாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"மனதின் ஓரத்தில் என்னை அறியாமல்
உன்னை நேசிக்கத் தொடங்கி விட்டேனா?

எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்டாற் போல என்ற பழமொழிக்கு நான் தான் எடுத்துக்காட்டா?

எது எப்படியோ உன் பண்பும் குணமும் இந்தப் பேதையை ஈர்த்தது தான் உண்மை

எந்த ஆண்மகனும் இப்படி என் மனதைச் சலனப் படுத்தவில்லை... சலனப் படுத்த நான் இடம் கொடுக்கவுமில்லை...

நீ மட்டும் எப்படி நுழைந்தாய் கள்வனே?"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top