• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கம்பர்மலைக் கிராமத்தின் தொடக்கப் பகுதியில் வரிசையாகப் பத்துக் கொன்றல் மரங்கள் செழுமையாக வளர்ந்து நின்றன.

மஞ்சள் மலர்களைச் சரஞ்சரமாகத் தொங்க விட்டுக் கொண்டு காற்றில் அசைந்து அசைந்து ஊருக்கு வருவோரை வருக வருக என்பது போல வரவேற்றுக் கொண்டிருந்தன.

போதாக்குறைக்குக் கொன்றல் மரங்கள் வருவோர் மேல் மலர்களைச் சொரிந்து கொண்டும் இருந்தன.

ஊரை ஒட்டி ஒதுக்குப் புறமாக ஒரு பெரிய வளவொன்று கலையரசன் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தது.

அதன் பரப்பே ஒரு பெரிய வயல்வெளியை உள்ளடக்கியது போலக் காட்சி அளித்தது.

அந்தக் காணியில் ஏராளமான பயனுள்ள மரஞ்செடி கொடிகள் நாட்டப் பட்டுப் பராமரிக்கப் பட்டு வந்தது.

பப்பாளி

அகத்தி

ஆலமரம்

மரமூங்கில்

கறிவேப்பிலை

அறக்கீரை

அசோகமரம்

பலாமரம்

வாழை மரம்

நாவல் மரம்

இந்தியன் முருங்கை

கொழும்பு வெற்றிலை

சதைக்கரைச்சான்

ஜம்பு நாவல்

பால் அறுகு

கருந்துளசி

அம்மன்துளசி

விஷ்ணு துளசி

வல்லாரை

பொன்னாங்கண்ணி

கற்பூரவள்ளி

பிரண்டை

திருவாத்தி

பச்சைப்பசளி

பருப்புப் பசளி

சிவப்புப் பசளி

திப்பிலி

மருதோண்டி

கற்றாழை

கொரக்காப்புளி

கரிசலாங்கண்ணி

திருநீற்றுப்பச்சை

புங்கை மரம்

பாரியாதம்

நெல்லி

கச்சை நெல்லி

தென்னை

என்று பலவகை மரஞ்செடிகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வளர்ந்து நின்றன.

காணிக்கு நடுவாக ஒரு ஓட்டு வீடும் கொஞ்சம் தள்ளி ஓரமாகப் பெரிய தண்ணீர்த் தொட்டி ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது.

அந்த இடத்தைப் பார்ப்பதற்கு நம் முண்டாசுக் கவி என்றோ ஒரு நாள் பாடி வைத்த,

காணி நிலம் வேண்டும்...பராசக்தி
காணி நிலம் வேண்டும்...அங்கு
தூணில் அழகியதாய்...நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்...அந்தக்
காணி நிலத்திடையே...ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்...அங்கு
கேணி யருகினிலே...தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு...தென்னைமரம்
பக்கத்திலே வேணும்...நல்ல
முத்துச் சுடர்போலே...நிலாவொளி
முன்புவர வேணும்...அங்கு
கத்துங் குயிலோசை... சற்றே வந்து
காதிற்பட வேணும்... என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே... நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
என்ற பாடலை நன்றாகப் படித்துவிட்டு அமைத்தது போல இருந்தது.

மனது சந்தோஷமாக இருந்தாலும் கவலையாக இருந்தாலும் புவியரசன் தஞ்சம் புகும் இடமும் இது தான்.

மேடை போலக் கட்டப் பட்டிருந்த ஒரு இடத்தில் அமர்ந்து அந்த இடத்தையே பார்வையில் ஆராய்ந்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் புவியரசன்.

அவன் காணியின் வாசலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த விதத்திலேயே யாருடைய வரவையோ எதிர்பார்த்திருப்பது போலத் தெரிந்தது.

வாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே வருவது யாரென்று அப்படியே தெரிந்தது.

மெய்க்காவல் படை போல வாண்டுக் கூட்டம் முன்னே வரக் கண்மணியோடு பின்னே வந்து கொண்டிருந்தாள் கனகாம்பரி.

அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.

“புவியத்தான் எதற்காக என்னை வரச் சொல்லி இருப்பாரோ தெரியவில்லையே… என் படிப்பு விஷயம் பற்றி ஏதாவது பேச நினைக்கிறாரோ என்னவோ… அது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது”
என்றவாறெல்லாம் அவளது எண்ணவோட்டம் ஓடிக் கொண்டிருந்தது.

அதை எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வழமை போல
“என்ன புவியத்தான் எதற்காக என்னை வரச் சொன்னீர்கள்”
என்று ஆர்ப்பாட்டமாக அவனுக்கருகே அமர்ந்து கொண்டாள்.

எடுத்த எடுப்பிலேயே
“உன் படிப்புத் தொடர்பாக என்ன முடிவு செய்திருக்கிறாய்?”
என்று புவியரசன் கேட்டான்.

இந்தக் கேள்வியையே அவனிடம் எதிர்பார்த்திருந்ததால்
“அது தான் அன்றே சொன்னேனே அத்தான்… எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லையென்று”
என்று பதில் சொன்னாள் கனகாம்பரி.

புவியரசனோ வேறொன்றும் சொல்லாமல் அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனது விழிகளைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

“உண்மையான பதில் சொல்லப் பிடிக்கவில்லை என்றால்… என் முகத்தைப் பார்த்து, உன்னிடம் அதைப் பற்றிச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை என்று தாராளமாகச் சொல்லி விடு”
என்றவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளோ அவனது விழிகளில் தெரிந்த லேசான கோபத்தில் சட்டென்று தன் மனம் திறந்து பேசினாள்.

“அப்படியெல்லாம் இல்லை அத்தான்… உங்களிடம் என் பிரச்சினையைச் சொல்லி உங்களைச் சங்கடப் படுத்த வேண்டாம் என்று நினைத்தேன்”

“………………………….”

“அப்பாவால் என்னை மேற் கொண்டு படிக்க வைக்க முடியாதாம். அவருக்கும் ஏதோ கடன் தொல்லை. எனக்குத் தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை.”

“……………………………”

“அவர் இப்படிக் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கும் போது நான் எப்படி அத்தான் மேற்படிப்புக்குப் பணம் கேட்க முடியும்”

“………………………….”

“இதெல்லாவற்றையும் உங்களிடம் எப்படிச் சொல்வதென்று தான் சொல்லவில்லை”

“…………………………..”

“என்ன அத்தான் ஒன்றுமே சொல்லாமல் பேசாமல் இருக்கிறீர்களே?”

“நான் சொல்லுவதை நீ கேட்பாயோ என்னவோ அதனால் தான் யோசிக்கிறேன்”

“என்னத்தான் நீங்கள் சொல்வதை கேட்காமல் நான் என்ன காதுகளைப் பொத்திக் கொண்டா இருக்கிறேன்”
என்று பதில் சொன்னவள் அவனது முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள்.

“சிறிது நேரமாவது விளையாட்டுத் தனமாக இருக்காமல் நான் சொல்வதைக் கொஞ்சமாவது கேள் அம்பரி”
என்று சொன்னவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் தனது வாயைக் கையால் மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

அவளது செய்கை அவனுக்கு லேசான சிரிப்பை உண்டாக்கினாலும் விஷயம் பெரிது என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“அம்பரி... நீ வேறு ஏதாவது முயற்சி செய்து பார்த்தாயா?”

“இல்லை அத்தான்”

“அம்பரி கஷ்டப் படாமல் எதுவும் நமக்கு எளிதில் கிடைத்து விடாது. நீ ஒரு முயற்சி கூடவா செய்யவில்லை. அப்படியானால் உன் இலட்சியம் என்ன வெறும் கனவு மட்டும் தானா?”

“நான் என்ன முயற்சி செய்வது அத்தான். எனக்கு ஒன்றுமே தெரியாதே”

“நன்றாக வாயைத் திறந்து எல்லோருடனும் சண்டை மட்டும் போடத் தெரியுமா?”

“அப்படியெல்லாம் இல்லை அத்தான்”

“எப்படியெல்லாம் இல்லை. இதோ பார் அம்பரி உனக்கு நான் ஒரு வழி சொல்கிறேன். அது உன் கனவை அடைய நல்ல வழியாக இருக்கும்.”

“என்ன வழி அத்தான் அது”
என்று நிஜமான ஆர்வத்துடன் கேட்டாள் கனகாம்பரி.

“சொல்கிறேன் சொல்கிறேன் அதைச் சொல்லத் தானே உன்னை அழைத்தேன்”
என்றவனை அடங்காத ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“நீ மேற் படிப்பு படிப்பதற்கு வேண்டிய மொத்தப் பணத்தையும் உனக்கு ஒரு இடத்தில் இருந்து வாங்கிக் கொடுக்கிறேன்”
என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்
“ஐயோ வேண்டாம் அத்தான். யாரிடமும் எனக்காக நீங்கள் ஒன்றும் பணம் கேட்க வேண்டாம்”
என்று கிட்டத்தட்ட கத்தியவளை முறைத்துப் பார்த்தான் புவியரசன்.

அவனது முறைப்பில் மீண்டும் அமைதியானவளிடம்
“நான் சொல்ல வருவதை முழுமையாகக் கேட்டு விட்டு அதன் பிறகு பதில் சொன்னால் போதும் அம்பரி. இடையிடையே இப்படிக் கத்தி வைக்காதே.”
என்று சிடுசிடுத்தான்.

“பெரியண்ணாவிடம் இது பற்றிப் பேசி இருக்கிறேன். அவரும் சரி என்று சொல்லி விட்டார். உன் மேற்படிப்புக்கான மொத்தச் செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்”
என்று சொல்லி முடித்தவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கனகாம்பரி.

அவளது முகத்திற்கு முன்னால் சொடக்குப் போட்டவன்
“என்ன?”
என்றான் உற்சாகமாக.

அவனது உற்சாகம் ஏனோ அவளைத் தொற்றிக் கொள்ளவில்லை.
“எனக்கு இதில் விருப்பம் இல்லை”
என்று சட்டென்று பதில் சொன்னாள் அவள்.

“ஏன் ஏன் விருப்பம் இல்லை. இவனெல்லாம் எனக்குப் பணம் கொடுக்க வந்துவிட்டானா? என்று நினைக்கிறாயா?”

“ஐயோ அப்படியில்லை அத்தான்”

“இதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது”

“எனக்கு யாரிடமும் கையேந்திப் பழக்கம் இல்லை”

“உன்னை யார் இப்போது கையேந்தச் சொன்னது”

“உங்களிடம் பணம் வாங்கச் சொன்னால் அதற்கு வேறு என்ன அர்த்தம்”

“மண்டு. நான் என்ன இலவசமாகவா கொடுக்கிறேன். நீ படித்துப் பெரிய வாத்தியாரம்மாவாக வந்த பிறகு வாங்கிய பணத்தைக் கொடுத்து விடு. என்ன கொடுப்பாய் தானே”
என்று அவளைச் சகஜமாக்குவதற்கு முனைந்தான் அவன்.

அவளோ அதை ஏற்றுக் கொள்ளவதா வேண்டாமா என்ற பதிலில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.

ஒருபக்கம் தன் கனவை நிறைவேற்ற அவன் சொல்வதைச் சரியென்று சொல்ல வேண்டும் போல இருந்தது. மறுபக்கம் அப்பாவுக்குத் தெரிந்தால் தன் கதி அதோகதி ஆகி விடுமே என்ற பயமும் இருந்தது.

அவளது மௌனத்தைப் பார்த்திருந்தவனுக்கு லேசாகக் கடுப்பானது.

“முடிவாக என்னதான் சொல்கிறாய் அம்பரி. இப்படியே அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்”
என்றான் தன் எரிச்சலை மறையாத குரலில்.

“அப்பா என்ன சொல்வாரோ..”
என்று இழுத்தவளை இடைமறித்தவன்
“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”
என்றான்.

அவனது பதிலில் அரண்டவளோ
“ஐயோ அத்தான் இதைப் பற்றி அப்பாவிடம் ஒன்றும் கேட்டு விடாதீர்கள். அவர் என்னைக் கொன்றே போட்டு விடுவார். என் கனவு கனவாகவே போகட்டும். எனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்”
என்று படபடத்தாள்.

"ஏய் நீ என்ன..."
என ஏதோ சொல்ல வந்தவனை இடை மறித்து
"அத்தான் இதைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம் எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை”
என்றாள் எங்கோ பார்த்தபடி.

"யாருடைய உதவியும் தேவையில்லையா? நீ புரிந்து தான் பேசுகிறாயா?"

"............................."

"என்ன அம்பரி நீ... நீயும் முயற்சி செய்ய மாட்டேன் என்கிறாய்... நான் செய்யும் முயற்சியையும் வேண்டாம் என்கிறாய்... வேறு என்ன தான் செய்யப் போகிறாய்?"

"அது தான் புவியத்தான்... நான் படிக்கவே போவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன்"

"ஐயோ ஈசனே! இந்தப் பிள்ளைக்குக் கொஞ்சமாவது புத்தியைக் கொடு..."

"புவியத்தான்..."

"நான் சொன்ன விடயத்தில் நீ என்ன குறை கண்டாய்... இனமாகப் பணம் கொடுக்கவில்லையே?"

"வேண்டாம் அத்தான்... இது போகாத ஊருக்கு வழியைக் கேட்பது போன்ற விடயம்"

"ஏன் நீ அப்படி நினைக்கிறாய்... வழியைக் கேட்டு வைத்தால் மனம் மாறும் போது அந்த ஊருக்குப் போகலாம் அல்லது வேறு யாருக்காவது பாதை சொல்லப் பயன் படும் தானே... பெரிதாக வந்து விட்டாள் பழமொழி சொல்வதற்கு"
என்றவன் அவளது முகத்தைப் பார்த்தான்.

"எனக்கு யாருக்கும் தொந்தரவாக இருக்கப் பிடிக்கவில்லை"
என்றாள்.

அவளது லேசாகக் கலங்கிய விழிகளையும் அவள் சொன்னதையும் கேட்டவனுக்கோ அவளைச் சமாதானம் செய்வதே பிரதானமாகப் பட்டது அதனால்
“சரி சரி நான் இனிமேல் ஒன்றும் கேட்க மாட்டேன் போதுமா?”
என்று விட்டு எழுந்து போய் விட்டான்.

அவன் சென்ற திக்கையே பார்த்தபடி வெகு நேரமாக அமர்ந்திருந்தாள் கனகாம்பரி.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
"நியாயமான விருப்பங்கள் கூட பணமில்லையேல் கானல் நீர் தானோ!

எனக்காய் நீ யோசிக்கிறாய் நீ மனிதருள் மாணிக்கம் தான்...

எத்தனை பேர் என் போல் கனவுகளை வெறும் கனவாகவே சுமக்கிறார்கள்...

அவர்கள் கனவுகள் ஈடேற உன் போல யார் கை கொடுப்பார்?"

பணம் படைத்தவரெல்லாம் உன் குணம் பெற வேண்டுமென வேண்டுகிறேன்..."

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Top