• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கனகாம்பரியின் வீட்டு நடுக் கூடத்தில் அழகரசனும், எழிலரசனும், சுந்தரவல்லியும் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களையே பார்த்தவாறு என்ன விஷயம் என்பது போல அமர்ந்திருந்தார்கள் பர்வதப் பாட்டியும் சின்னராசாவும்.

கணவனின் முகத்தை இன்னொரு முறை பார்த்து விட்டுச் சின்னராசாவின் பக்கம் திரும்பிப் பேசத் தொடங்கினாள் சுந்தரவல்லி.

“வணக்கம் சித்தப்பா… என்ன இது குடும்பமாக உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்”
என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறு ஆமாம் என்பது போலத் தலையை அசைத்தார் சின்னராசா.

மீண்டும் ஒரு முறை கணவனைத் திரும்பிப் பார்த்தவள்.
“சித்தப்பா… எங்கள் புவித்தம்பிக்கு உங்கள் மகளைப் பெண் கேட்பதற்காக வந்திருக்கிறோம்”
என்று சட்டென்று விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.

அவள் சொன்னதைக் கேட்ட சின்னராசாவும் பர்வதப் பாட்டியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டார்கள்.

அந்த அதிர்ச்சிக்கும் ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்தது.

ஊரில் ஜாடைமாடையாக ஒரு பேச்சு இருந்து வந்தது.

புவியரசனுக்குக் கொழும்பில் (இலங்கையின் ஒரு மாவட்டம்) இருக்கும் அவனது மாமனின் மகளைத் தான் மணம் முடித்துக் கொடுக்கப் போகிறார்கள் என்ற பேச்சு.

இந்தப் பேச்சு இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் இந்த அதிர்ச்சி.

பதில் பேசாமல் அதிர்ந்து போய் இருந்த மற்ற இருவரையும் பார்த்து
“என்ன சித்தப்பா பதிலே சொல்லாமல் அதிர்ந்து போய் இருக்கிறீர்கள்”
என்று கேட்டாள் சுந்தரவல்லி

அவளது கேள்விக்குத் தான் நினைத்ததை அப்படியே ஒப்புவித்தார் சின்னராசா.

அவர் சொன்னதைக் கேட்டதும் மற்றைய மூவரும் லேசாகச் சிரித்தார்கள்.

“ஊரில் உள்ளவர்கள் நாலு விதமாகக் கற்பனை செய்து பேசத் தான் செய்வார்கள் அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க முடியுமா? மாமா”
என்றான் அழகரசன்.

“எங்கள் புவிக்கு உங்கள் மகளை மணம் முடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து சித்தப்பா… நீங்கள் அவசரப் படாமல் நன்றாக யோசித்துப் பதிலைச் சொல்லுங்கள்”
என்று சொன்ன சுந்தரவல்லி இன்னொரு விஷயத்தையும் சொன்னாள்.

“இன்னொரு விஷயம் சித்தப்பா… இந்தத் திருமணம் மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் நடைபெறும்.
இவ்வளவு சீக்கிரமாக வந்து நாங்கள் பேசக் காரணம்… நீங்கள் வேறெங்கும் மாப்பிள்ளை பார்த்து விடக் கூடாதே என்பதற்காகத் தான்”
என்று விளக்கங் கூறினாள்.

“இப்படி ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டுப் போவதற்கு என் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான் நான் சொல்வேன்”
என்றபடி லேசாகக் கண் கலங்கினார் சின்னராசா.

“உங்கள் மகள் எங்கள் வீட்டுக்கு மருமகளாக வர நாங்களும் தான் கொடுத்து வைத்திருக்கிறோம்”
என்றாள் சுந்தரவல்லி வெள்ளந்தியாக.

“இன்னுமொரு முக்கியமான விஷயம் மாமா…”
என்று இழுத்தான் எழிலரசன்.

“என்ன தம்பி சீதனம் பற்றிய விவகாரமா? இப்போது என்னிடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்குச் சொத்து என்று ஏதும் இல்லை என்றாலும் மூன்று வருடத்துக்குள் நான் ஏதேனும்…”
என்று சொல்லிக் கொண்டே போன சின்னராசாவை இடை மறித்தான் அழகரசன்.

“என்ன மாமா பேச்சு இது... உங்கள் மகளை எங்கள் வீட்டுக்கு மருமகளாக அனுப்புவதற்கு நாங்கள் தான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். இன்னொரு முறை சீதனம் அது இது என்று பேசி எங்களைச் சங்கடப் படுத்தாதீர்கள்.”
என்றான்.

“ஆமாம் மாமா ஊர் உலகத்தில் எப்படியோ எங்கள் வீட்டில் நாங்கள் பெண்ணுக்குச் சீதனம் கொடுத்துத் தான் கட்டிக் கொள்வோம். இது உங்களுக்குத் தெரியாதா? மறந்து போனால் மறுபடியும் நினைவு படுத்துகிறேன்”
என்று இடையிட்டுப் பேசினான் எழிலரசன்.

கலையரசன் குடும்பத்தில் அவரது காலத்தில் எப்படியோ ஆனால் அவரது மகன்கள் திருமணத்தின் போது சீதனம் வாங்கித் திருமணம் செய்யவில்லை.

ஊரில் அதைப் பெருமையாக மற்றவர்கள் பேசிய போதும் இதில் பெருமை பேச என்ன இருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால் சீதனம் வாங்குவது என்பது சரியில்லை தானே.

இன்னும் சொல்லப் போனால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு சீதனம் கொடுப்பதாக இருந்தால் இருவரும் தான் சீதனம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டுப் பெண் தான் சீதனம் தர வேண்டும் என்பது நியாயமில்லை.

பிறந்த வீட்டை விட்டு நமக்காக நம் வீட்டிற்கு வந்து, நம் குழந்தைகளை வயிற்றில் சுமந்து பிரசவம் எனும் உயிர் போகும் வலியை அனுபவித்துக் குழந்தைகளைப் பெறும் மனையாளே நமக்குத் தேடி வந்த செல்வம் தான் இதில் சீதன் வேறு வேண்டுமா? எனச் சொன்னவன் அழகரசன்.

“மன்னிக்க வேண்டும் தம்பி. பெண்பிள்ளையைப் பெற்று விட்டோமே அவளது திருமணத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்கிற பதற்றத்தில் உங்களைப் பற்றி மறந்தே போய் விட்டேன்”

“அடடா இதற்கெல்லாம் எதற்கு மாமா மன்னிப்புக் கேட்கிறீர்கள்”

“தம்பி ஏதோ முக்கியமான விஷயம் என்று சொன்னீர்கள்”

“ஆமாம் மாமா… எப்படியும் மூன்று வருடங்கள் சும்மா தானே போகப் போகிறது. அந்த நேரத்தில் நம் கனகத்தை மேற் படிப்புப் படிக்க அனுப்பினால் என்ன?”

“அது வந்து…”

“மாமா… தயவு செய்து மறுத்து விடாதீர்கள்… நீங்கள் சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். மற்ற விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”

“ஆனால் அதற்கு நிறைய செலவாகுமே தம்பி… அவ்வளவு…”

“அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் மாமா… உங்களைச் சம்மதம் மட்டும் தான் சொல்லச் சொன்னோம். அது போக இந்த நொடியில் இருந்தே கனகம் எங்கள் வீட்டு மருமகள். அவள் படிப்பு எங்கள் பொறுப்பு.”

“உங்களுக்குத் தான் எவ்வளவு பெருந்தன்மை. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லாமே கனவு போல் இருக்கிறது”

“எங்கள் வீட்டுக்கு வரப் போகும் பெண் படித்தால் எங்களுக்கும் தானே பெருமை. எல்லாமே ஒரு சுயநலம் தான் மாமா.”
என்று இலகுவாகப் பேசினான் அழகரசன்.

அவன் சொன்னதைக் கேட்டு லேசாகப் புன்னகைத்தபடி கனகாம்பரியின் மேற்படிப்புக்குச் சம்மதம் சொன்னார் சின்னராசா.

“இன்னொரு விடயம் மாமா… மேற்படிப்புக்கான செலவு எங்கள் வீட்டில் இருந்து செய்யப் பட்டதாக யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமாகக் கனகத்திற்குத் தெரியவே வேண்டாம். அந்தச் செலவு நீங்கள் செய்ததாகவே இருக்கட்டும்”

“இவ்வளவு பெரிய உதவியை எப்படி மறைக்க முடியும் தம்பி…”

“மறுபடியும் உதவி என்று சொல்லி எங்களை அந்நியப் படுத்தாதீர்கள் மாமா. கனகத்தின் படிப்பு நல்ல படியாக முடியும் வரையேனும் நாங்கள் அமைதியாக இருப்பது நல்லது என்று தோன்றுகின்றது”
என்ற அழகரசனின் பதிலுக்கும் லேசாகப் புன்னகைத்தவாறே தலையை ஆட்டி வைத்தார் சின்னராசா.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

முற்றத்து மாமரத்துக்குக் கீழே போடப் பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமராமல் அங்குமிங்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் புவியரசன்.

அவனது பார்வை மட்டும் வாசலிலேயே இருந்தது.

அவனது இந்த நிலைகொள்ளாத பரபரப்புக்கும் ஒரு காரணம் இருந்தது.

கனகாம்பரி இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தான் அவள் தனக்கு உறவுக்காரி என்பதே புவியரசனுக்குத் தெரியும்.

அழகரசனும் எழிலரசனும் கனகாம்பரியுடன் சகஜமாகப் பழகும் அளவிற்குக் கூடப் புவியரசன் பழக மாட்டான்.

தான் உண்டு தன் வேலை உண்டென இருந்து விடுவான்.

புவியரசனுக்கு வாழ்க்கையில் ஒரு இலட்சியத்தை வைத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணிப்பவர்களை ரொம்பவும் பிடித்து விடும்.

அதே போலத் தான் கனகாம்பரியின் இலட்சியம் பற்றிக் கேள்விப் பட்டதிலிருந்து அவள் மேல் அவனுக்கு ஒரு தனி மரியாதையே உருவாகத் தொடங்கி இருந்தது.

கனகாம்பரியின் மேற்படிப்பு விஷயத்தில் அவளை விடவும் இவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.

அதனால் தான் அவள் தனக்குப் படிக்கும் ஆர்வம் இல்லையென்று சொன்னதும் கடுப்பாகி விட்டான்.

கனவை அடைவதென்பது சுலபமான காரியம் இல்லை என்றாலும் அவள் கொஞ்சமேனும் முயற்சி எடுக்கவில்லையோ என்கிற கோபம் அவனுக்கு வந்தது.

பிறகு அவளுக்குப் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினை தான் அவளது திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டான்.

அதற்குப் பிறகு தூங்கும் போதும் வேறு வேலைகளில் ஈடுபடும் போதும் அவளுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்றே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் இது விஷயமாகப் பெரியண்ணனிடம் பேசிப் பார்த்தால் என்னவென்று அவனுக்குத் தோன்றவே அதை உடனடியாகச் செயல்படுத்தினான்.

அதற்குத் தக்க பலனும் உடனேயே கிடைத்தது.

கனகாம்பரியின் மேற்படிப்புக்கு வேண்டிய பணத்தை நாங்கள் கொடுக்கலாம் என்று அழகரசன் சொல்லி விட்டான்.

அதைப் பற்றிக் கனகாம்பரியிடம் பேசப் போனால் அவளோ ஒரேயடியாக மறுத்து விட்டாள்.

தங்களிடம் பணம் பெருவதைத் தன்மானப் பிரச்சினையாகப் பார்க்கிறாளோ என்று கூட அவனுக்குத் தோன்றத் தொடங்கி விட்டிருந்தது.

எப்படியாவது அவளது படிப்பைத் தொடர வைக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவனுக்கு இந்த எண்ணம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை.

நேராகப் பெரிய அண்ணியிடம் போய் நின்றான்.

“பெரியண்ணி உங்களிடம் ஒரு விடயம் சொல்ல வேண்டும்”

“என்ன தம்பி என்ன விடயம்.”

“அது வந்து… எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அண்ணி”

“என்ன தம்பி என்னிடம் என்ன தயக்கம்… சும்மா சொல்லுங்கள்”

“அண்ணி… எனக்குத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் அம்பரியைத் தான் செய்து வைக்க வேண்டும்”

“புவித்தம்பி… உனக்குத் திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னாயே. என்ன இது திடீரென வந்து இப்படிச் சொல்கிறாய்”

“இப்போது கூட நான் ஒன்றுமே சொல்லிவிடவில்லையே அண்ணி”

“அப்படியா? அப்படியானால் நீ சொன்னதற்கு என்ன அர்த்தமாம்”
என்று சிறு புன்னகையுடன் கேட்டாள் சுந்தரவல்லி.

“அண்ணி… ஒருவேளை நீங்கள் வேறெங்கும் பெண் பார்க்கக் கூடாது என்று கூட அதற்கு அர்த்தம் கொள்ளலாம்”
என்றவனின் காதை வலிக்காமல் திருகிய படியே
“படவா… யாரடா அந்த அம்பாரி”
என்றாள் மீண்டும் சிரிப்புடன்.

“ஐயோ அண்ணி… அது அம்பாரி இல்லை அம்பரி… ஒரு நொடியில் அம்பரியை அம்பாரி ஆக்கி விட்டீர்களே”
என்று வாய் விட்டே சிரித்தான் புவியரசன்.

“ஓ அம்பரியா… சரி சரி யார் அந்தப் பொண்ணு”
என்று புவியிடம் கேள்வி கேட்டாலும் சுந்தரவல்லிக்கு உள்ளூரச் சிறிது நெருடலாகவே இருந்தது.

கனகாம்பரியை இவனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நாங்கள் பார்த்தால் இவன் வேறு பெண்ணையல்லவா விரும்புகிறான்.

நல்ல வேளை அங்கே போய்ப் பேசி நிச்சயம் செய்யவில்லை.
இல்லாவிட்டால் எல்லோருமே சங்கடத்தில் மாட்டியிருக்க வேண்டியது தான். என்று யோசித்தாள்.
அந்த யோசனையே வேண்டாம் என்பது போலப் பதிலளித்தான் புவியரசன்.

“என்ன அண்ணி அம்பரியைத் தெரியாதா? சும்மா வேடிக்கை செய்யாதீர்கள்”

“நிஜமாகவே தெரியவில்லை புவி. யார் அது”
என்று சொன்னவளின் முகத்தில் வேடிக்கைத் தனம் இல்லை என்பதைப் பார்த்தவனுக்கு அப்போது தான் ஒரு விஷயம் புரிந்தது.

கனகாம்பரியை இவர்கள் கனகம் என்றல்லவா அழைப்பார்கள்.
அவளை அம்பரி என்ற பெயரில் தான் அழைப்பது இவர்களுக்குத் தெரியாதல்லவா என்று யோசித்தான்.

“அண்ணி… கனகம் தான் அந்த அம்பரி”
என்று சொன்னவனை வாயைப் பிளந்தபடி பார்த்தவளோ
“அடடா செல்லப் பெயர் வைத்து அழைக்கும் அளவிற்குப் போய்விட்டதா? என்ன புவி காதலா?”
என்று தன் பங்குக்குக் கேட்டு வைத்தாள்.

அண்ணியின் அந்தக் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவன்
“எனக்கா காதலா அப்படியெல்லாம் கிடையாது. அவளுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்”
என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அண்ணி தன் பதிலுக்காகக் காத்திருப்பதனை உணர்ந்தவன் வழமைபோல லேசாகப் புன்னகைத்தான்.

அவனது புன்னகையைப் பார்த்து சுந்தரவல்லி அவனுக்குத் திருஷ்டி கழிப்பது போல விரல்களால் சொடக்கிட்டுக் கொண்டபடியே
“இதே போல எப்போதுமே சந்தோஷமாக இருடா”
என்று மனமாறாச் சொல்லியபடி அடுக்களைக்குப் போகத் திரும்பினாள்.

சொல்ல வந்த விடயத்தைச் சொல்லாமல் அண்ணியைப் போக விடக்கூடாதே என நினைத்தவன்
“அண்ணி நான் சொல்ல வந்ததையே நீங்கள் கேட்காமல் போகிறீர்களே”
என்றான் வேகமாக.

“என்ன புவிப்பா நீ சொன்னது போல நடத்த வேண்டியது என் பொறுப்பு போதுமா? வேறென்ன வேண்டும்”

“அண்ணி… அம்பரி மேற் படிப்புப் படிக்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். ஆனால் அங்கே அவள் வீட்டில் அவ்வளவு பணம் இல்லை. நாங்கள் கொடுத்தாலும் அவளது தந்தைக்குத் தெரியாமல் வாங்கிக் கொள்ள மாட்டாள். அது தான்…”
என்று இழுத்தவனை இடைமறித்தாள் சுந்தரவல்லி.

“புவிப்பா… உன் அண்ணியிடம் சொல்லி விட்டாய் அல்லவா! மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்”
என்று சொல்லி விட்டுப் போனாள் சுந்தரவல்லி.

தான் சொன்னதை வெறும் வாய் வார்த்தையாக விட்டு விடாமல் அதைச் செயலில் காட்டினாள்.

அதன் எதிரொலி தான் இன்று அழகரசன் குடும்பம் சின்னராசா வீட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தக் காரணம்.

அதனால் தான் அங்கு என்ன நடந்தது என்று அறியும் ஆர்வத்தில் வாசலுக்கும் அறைக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான் புவியரசன்.

அவனது மனதினுள் ஏராளமான கேள்விகள் எழ எழ அவை எல்லாவற்றிற்கும் தானே பதிலும் சொல்லிக் கொண்டே இருந்தான் அவன்.

“உனக்கு ஏன் அம்பரி மீது இத்தனை அக்கறை?”

“என்னைப் போலத் தாயில்லாத பெண் அவள். அது போக எனக்கு உறவுக்காரியும் கூட. அதனால் தான் இந்த அக்கறை”

“ஏன் உன் உறவுக்காரப் பெண்கள் என்று வேறு யாருமே இல்லையா? அல்லது அவர்களில் தாயற்ற பெண்கள் என்று தான் யாருமே இல்லையா?”

“இருக்கிறார்கள் தான். ஆனால் அம்பரியைப் போல யாருமே கனவை அடைய முடியாத இக்கட்டில் மாட்டிக் கொள்ளவில்லையே”

“சரி அப்படியே இருக்கட்டும். நீயாகவே அவளுக்கு உதவ முன் வந்த போது அவள் தான் அதை மறுத்து விட்டாளே. அதை அப்படியே விட்டுவிட்டு வராமல் அதையே ஏன் பிடித்துக் கொண்டு தொங்குகிறாய்?”

“நான் உதவி செய்ய முன் வருவது அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது போல. அதற்காக அப்படியே விட முடியாது தானே…”

“அது தான் ஏன் உன்னால் விட முடியவில்லை?”

“அது தான் சொன்னேனே அவள் என் உறவுக்காரி”

“சரி அப்படியே வைத்துக் கொள். எதற்காக அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று உன் வீட்டில் சொன்னாய்?”

“அது… அது அப்படிச் சொல்லி அவள் வீட்டில் சம்மதம் வாங்கி விட்டுப் பணத்தைக் கொடுத்தால் அதை மறுக்க முடியாது தானே”

“அப்படியானால் அவள் மீது இருப்பது வெறும் அக்கறை மட்டும் தானா?”

“ஆமாம்”

“அதென்ன திருமணம் செய்யப் போகும் பெண் என்று சொல்லிக் கொண்டு அவளைப் படிக்க வைக்கும் அளவிற்கு அவள் மீது அக்கறை?”

“மறுபடியுமா… அவள் மீது அக்கறை மட்டும் தான் வேறொன்றுமில்லை. அதோடு அவள் பெரிய இடத்திற்கு வந்ததும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடப் போகிறாள்.”

“நம்பி விட்டேன்”

“நம்பாது விட்டாலும் அவள் மீது எனக்கு அக்கறை மட்டும் தான் போதுமா”
என்றபடி தன் மனசாட்சிக்குத் தானே பதிலடி கொடுத்தான் புவியரசன்.

புவி தன்னுடைய மனசாட்சியுடன் மல்லுக்கட்டி முடிவுக்கு வந்த வேளை கனகாம்பரியின் வீட்டிற்குச் சென்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

வாசலில் நுழையும் போதே முகமெல்லாம் பிரகாசமாக வந்த அண்ணி சுந்தரவல்லியைப் பார்த்ததுமே போன விஷயம் பழம் என்பதனைப் புவியரசன் நன்றாகப் புரிந்து கொண்டான்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

தான் ஏன் இப்படி குதூகலமாக உணர்கிறேன் என்று அவனுக்கே புரியவில்லை.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"என் மனச்சாட்சியே என்னைக் கேள்வி கேட்கிறதடி பெண்ணே! உன்னால்

நான் கூட இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறேனடி பெண்ணே! உன்னால்

வானமெங்கும் வானவில் தோற்றங்கள் காண்கிறேனடி பெண்ணே! உன்னால்

தோற்கவே பிடிக்காத எனக்கு இப்போது தோற்கப் பிடிக்கிறதடி பெண்ணே! உன் முன்னால்

உனக்காகவும் உன் கனவுக்காகவும் முன் நிற்பேனடி பெண்ணே! முடியும்வரை என்னால்...

இவையெல்லாம் எப்போது புரியுமடி பெண்ணே! தெரிந்து கொள்வேன் நீ சொன்னால்"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top