• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கிருஷ்ண தாணு ரதி - பேதையின் கனவு

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
பேதையின் கனவு

திட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை, மதியம் 12 மணி..

“ஸ்டூடென்ட்ஸ், இது தான் உங்க பள்ளிக்கூட வாழ்க்கையோட கடைசி நாள் சோ எல்லோரும் சொல்லுங்க, உங்க லட்சியம் என்ன‌?? ஏன் நீங்க அதுவாக ஆசைப்படுறீங்க??”

என்று பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியை கேட்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறினர். அப்போது ஆசிரியை

“வேதவள்ளி நீ என்னவாம்மா ஆகப்போற??”

என்று கேட்க அதற்கு வேதவள்ளி

“நான் மகப்பேறு மருத்துவர் ஆகப்போறேன்‌ டீச்சர். ஏன்னா என் பக்கத்து வீட்டு அக்காவுக்கு கல்யாணம் பண்ணி மூனு வருடம் ஆகியும் குழந்தை இல்லை அதுக்காக இன்னைக்கும் அவங்கள நிறைய பேர் தப்பா பேசிட்டு இருக்காங்க. அதனால நான் நல்லா படிச்சு ஒரு பெரிய மகப்பேறு மருத்துவர் ஆகி இது போல குழந்தை‌ பிரச்சனை இருக்குறவங்களுக்கு நான் இயற்கையாகவே குழந்தை பெற்றுக் கொள்ள உதவப்போறேன் டீச்சர்.”

என்று கூறி முடிக்க ஒரு நிமிடம் வேதவள்ளியின் லட்சியத்தை கேட்ட ஆசிரியை அவளுக்கு கைதட்டல்களை பரிசாக கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

அதேநேரம் வேதவள்ளியின் வகுப்பறைக்குள் நுழைந்த ப்யூன் நேராக வகுப்பாசிரியையிடம் வந்து ஒரு சீட்டை நீட்ட உடனே வகுப்பாசிரியை

“வேதவள்ளி உன்னை கூட்டிட்டு போக உன் அம்மா வந்திருக்காங்க நீ வீட்டுக்கு கிளம்பலாம்.”

என்று கூற, உடனே எட்டி வாசலில் காத்துக்கொண்டிருந்த தன் அன்னையை பார்த்துவிட்டு தன் புத்தகப் பையை சரிசெய்தவள் பின்பு அதை எடுத்துக்கொண்டு அவளது அன்னையுடன் கிளம்பினாள். போகும் வழியெங்கும் தன் அன்னையை கேள்வியாய் கேட்க அவரோ அவளை பார்த்து

“உங்க பாட்டிக்கு உடம்புக்கு முடியலையாம். கடைசியா ஒருதடவை நம்மள பார்க்க ஆசைப்படுறாங்களாம். அதனால நாம இப்ப அவங்கள பார்க்க அவங்க வீட்டுக்கு போறோம்”

என்று கூற இதை கேட்டவள் ஒன்றும் பேசாது தன் தாய் அமுதவள்ளியுடன் நடக்க இருவரும்
அவர்களது வீட்டிற்கு வர, அங்கு அவர்களுக்காக ஒரு வெள்ளை‌ நிற இனோவா கார் காத்திருந்தது. அதில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்ததும் கார் கிளம்பியது.

அமுதவள்ளி, இவர் சூரக்கோட்டையை சேர்ந்த வேதவள்ளி மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். வறுமை என்றால் என்னவென்றே தெரியாது வளர்ந்தவள் இன்று ஒருவேளை உணவிற்காக கூலி வேலை செய்கிறாள்.

ஆம் அப்போது அமுதவள்ளிக்கு 19 வயது. அதே வீட்டில் வேலை செய்த மாமன் முறை கொண்ட தங்கதுரை என்பவருடன் அவள் காதல்வயப்பட, இருவரும் ஒருநாள் இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேறி தங்கதுரையின் ஊரான திட்டைக்கு சென்று தங்களுக்கென ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

அன்று முதல் தங்களுக்கும் அமுதவள்ளிக்கும் உள்ள அனைத்து உறவுமுறைகளையும் முறித்துக் கொண்டனர் அவளது தாய் வீட்டினர். இருப்பினும் அவ்வப்போது வேதவள்ளி அவ்வூரிலிருந்து வந்து செல்லும் உறவினர்களிடம் தன் மகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொள்வார்.

ஒருவருடத்திற்கு பிறகு பெண் குழந்தையை ஈன்றெடுத்த அமுதவள்ளி அதற்கு வேதவள்ளி என்று தன் அன்னையின் பெயரை சூட்டி ஆனந்தமடைந்தாள். இப்படியே நாட்கள் நகர ஒருநாள் பின்பக்க தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தங்கதுரை சர்பம் தீண்டி உயிரிழந்தார்.

அன்றுமுதல் குடும்ப பாரம் தன் தோல் மீது விழ அதை சிரம்பட தூக்கி சுமக்க ஆரம்பித்தவள் யாரிடமும் கை ஏந்தாமல் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதும் அருகில் உள்ள செங்கல் சூலையில் தினக்கூலி வேலைக்கு செல்வதுமாய் தன் வருமானத்தை ஈட்டியபடி தன் மகளின் படிப்பையும் வீட்டு செலவையும் சமாளித்து வந்துக் கொண்டிருக்கிறாள்.

சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ராஜமாணிக்கம் இறந்துவிட அவரையே நினைத்து வாடிய வேதவள்ளிக்கும் இப்போது உடல்நலம் குன்ற ஆரம்பித்திருக்கிறது. அதனால் தானும் தன் கணவன் போல எங்கே இறந்துவிடுவோமோ என்ற அச்சம் வந்து ஒட்டிக்கொள்ள தன் மகனிடம் கூறி கடைசியாக ஒருமுறை தன் மகளையும் பேத்தியையும் அழைத்து வருமாறு கேட்டார். அவனும் அவர்களை தொடர்பு கொண்டு விடயத்தை கூறி அழைத்து வர வண்டி அனுப்பி விட்டான்.

வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும் கீழிறங்கிய அமுதவள்ளி இத்தனை வருடங்களுக்கு பிறகு தான் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்தபடி உள்ளே செல்ல தயங்கியபடி அப்படியே நிற்க அப்போது கார் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜபாண்டி ஓடிவந்து தன்‌ அக்காவை

“அக்கா..”

என்றழைத்தப்படி கட்டிக்கொள்ள அவளை அறியாமலேயே அவளது விழிகளில் விழிநீர் சிந்தின.

அதன்பிறகு மூவரும் உள்ளே செல்ல உடல்நலம் குன்றி படுக்கையில் படுத்திருந்த தன் அம்மாவை பார்த்த அமுதவள்ளிக்கு மீண்டும் அழுகை ஆர்ப்பரித்து கொண்டு வந்தது. அதேபோல பல வருடங்கள் கழித்து தன் மகளை பார்த்த வேதவள்ளிக்கும் ஆனந்தத்தில் விழிகளில் தன்னை அறியாமலேயே விழிநீர் சுறக்க அடுத்ததாக அவரது பார்வை உருவத்தில் தன்னை உரித்து வைத்தாற்போல் தன் மகளின் அருகில் நின்றிக்கொண்டிருந்த தன் பேத்தியின் மேல் பதிய அவளை அருகில் அழைத்து அவளது கன்னங்களை வாஞ்சையாக வருடியவர் மெல்லிய குரலில்

“உன் பேரு என்னம்மா??”

என்று கேட்க அதற்கு அவளது தாயான அமுதவள்ளி

“வேதவள்ளி ன்னு உங்க பேர் தான்மா வச்சுருக்கேன்”

என்று கூற, அப்படியே பேச ஆரம்பித்த தாயும் மகளும் நேரம் போவது கூட தெரியாது வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தனர். இரவு உணவு நேரம் வந்துவிடவே ராஜபாண்டி அனைவரையும் உணவு உண்ண அழைத்து சென்றான். உணவு உண்ணும் போதும் உறங்கும் போதும் வைத்த கண் வாங்காது தன் பேத்தியையே பார்த்துக் கொண்டிருந்தார் வேதவள்ளி.

இப்படியே இரண்டு நாட்கள் நகர மதிய நேரம் தன் தாய்க்கு மருந்து மாத்திரை கொடுக்க அமுதவள்ளி அவர் பக்கத்தில் வந்து அமர அவரையே வெகுநேரமாக பார்த்துக் கொண்டிருந்தார் வேதவள்ளி. இதை பார்த்த அமுதவள்ளி தன் தாயை பார்த்து

“என்னம்மா அப்படி பார்க்குற?? ஏதாவது வேணுமா??”

என்று கேட்க, உடனே வேதவள்ளியும் ஆம் என்று கூறி தன் மகனையும் அழைக்கும்படி கூறினார். உடனே அமுதவள்ளி தன் தம்பியை அழைக்க, அவனும் அழைத்த குரலுக்கு வந்து நிற்க அமுதவள்ளியை பார்த்தபடி தன் வெற்றிலை டப்பாவில் இருந்து இரு வெற்றிலையையும் ஒரு பாக்கையும் எடுத்துக்கொண்டு எழ முடியாமல் எழுந்து நிற்க முயற்சித்த வேதவள்ளியை பார்த்து அமுதவள்ளியும் ராஜபாண்டியும்

“என்னம்மா பண்றீங்க?? இப்ப எதுக்கு எழுந்துக்குறீங்க??”

என்று கேட்க அதற்கு பதில் ஏதும் கூறாது அருகில் இருந்த தூணை பிடித்தவாறு எழுந்து நின்ற வேதவள்ளி தன் மகளை பார்த்தபடி

“என் பையன் ராஜபாண்டிக்கு உன் பொண்ணு வேதவள்ளியை கல்யாணம் செய்து தர உனக்கு சம்மதமா??”

என்று கேட்டபடி தாம்பூலத்தை நீட்ட இதை சற்றும் எதிர்பாராத அமுதவள்ளியும் ராஜபாண்டியும் என்ன கூறுவது என்று தெரியாது நிற்க, உடனே ராஜபாண்டி தன் தாயை பார்த்து

“அம்மா, உனக்கு என்ன கிறுக்கு கிறுக்கு புடிச்சிருக்கா?? அந்த புள்ள வயசென்னா என் வயசென்னா..”

என்று கேட்க உடனே வேதவள்ளி

“என்னடா பேசுற.. எனக்கும் உங்க அப்பாருக்கும் கூட தான் 12 வயசு வித்தியாசம் நாங்க குடும்பம் நடத்தல.. உனக்கும் அவளுக்கும் என்ன ஒரு 15 வயசு வித்தியாசம் இருக்குமா??”

என்று கூறி மீண்டும் தன் மகளை பார்த்து

“நீ சொல்லுடாம்மா என் பையனுக்கு உன் பொண்ண தர சம்மதமா??”

என்று கேட்க அதற்கு அமுதவள்ளி

“திடீர்னு இப்படி கேட்டா நான் என்னம்மா சொல்றது?? அவ இன்னும் படிப்பை கூட முடிக்கல..”

என்று கூற அதற்கு வேதவள்ளி

“எனக்கும் ஊரை கூட்டி உறவை கூட்டி விமர்சையா கேட்கணும்ன்னு தான் ஆசை ஆனா அந்த ஈசன் எனக்கு அவ்வளவு நாள் கொடுக்கலையே.. அதுவும் இல்லாம அவ எங்க போகப்போறா.. வேத்து வீட்டுக்கா போகப்போறா?? நம்ம வீட்டுக்கு தான வரப்போறா.. அப்புறம் என்ன, எவ்வளவு படிக்கனும்ன்னு ஆசைப்படுறாளோ படிக்கட்டும். என் பேத்தி படிச்சா நம்ம வம்சத்துக்கு தானடாம்மா பெருமை.. அதுமட்டுமில்லாம எனக்கு அப்புறம் எவளோ வந்து இங்க நாட்டாமை பண்றத்துக்கு என் பேத்தி வந்து ஆளட்டுமே அப்படிங்குற ஒரு நப்பாசையும் தான்மா..”

என்று பல வருடங்களுக்கு பிறகு தன்னை பெற்று வளர்த்த அன்னை தன் முன்னே நின்று கேட்க அதற்கு மறுப்பு சொல்ல முடியாதவளோ தன்‌ அன்னையிடமிருந்து தாம்பூலத்தை பெற்று கொண்டு திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தாள்.

ராஜபாண்டி வெளியில் பார்க்க முரடன் போல தெரிந்தாலும் உள்ளத்தில் மென்மையானவன். சூரக்கோட்டை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் பெரிய தலைகட்டு குடும்பமாகவும் விவசாயம், தொழில் மற்றும் அரசியல் என அனைத்திலும் முதன்மையானவனாக வலம் வருபவன். இவனது வார்த்தைக்கு இதுவரை எவரும் மறுவார்த்தை கூறியது கிடையாது.

அமுதவள்ளியிடமிருந்து திருமண ஒப்புதல் கிடைத்த மறுநாளே திருமண வேலைகள் கலைக்கட்ட தொடங்கின. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பெரிய மனிதர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் பத்திரிகை வைத்து அழைக்கப்பட எண்ணி ஒருவாரத்தில் வெகு விமர்சையாக குறுகிய நேரத்தில் ராஜபாண்டி வேதவள்ளி திருமணம் நடந்தேறியது.

திருமணமான முதல் நாள் முதலிரவு அறைக்குள் ராஜபாண்டி புக, அங்கு வேதவள்ளி மெத்தையில் அமர்ந்தபடி படித்து கொண்டிருந்தாள். அப்போது உள்ளே நுழைந்த ராஜபாண்டியை பார்த்த வேதவள்ளி அச்சத்தில் எழுந்து நிற்க

“என்ன பண்ணிட்டு இருக்க??”

என்று கேட்ட ராஜபாண்டியின் கர்ஜனை போன்ற குரலை கேட்ட வேதவள்ளி திக்கி திணறியபடி

“நா..நாளைக்கு பரிட்சை இருக்கு மாமா.. அதுக்காக படிச்சிட்டு இருக்கேன்..”

என்று கூற இதை கேட்டவன் ஒன்றும் பேசாது விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் ஏறி படுத்தான். அதை பார்த்த வேதவள்ளி மீண்டும் ராஜபாண்டியிடம்

“நான் வேணும்னா வெளியே போய் படிக்கட்டுமா மாமா.. அங்க கொஞ்சம் வெளிச்சமா இருக்கும்”

என்று கூற இதை கேட்டவன்

“ஒன்னும் தேவையில்ல.. அதுக்கு லைட்ட போட்டுட்டு இங்கயே படி”

என்று கூறிவிட்டு உறங்க, அவளும் விளக்கை மிளிரவிட்டு அங்கேயே இரவு முழுவதும் அமர்ந்து படித்தாள்.

மறுநாள் காலை ஏழு மணியளவில் குளித்து முடித்த ராஜபாண்டி தன் அறைக்குள் புக அங்கு இரவு முழுதும் படித்துக் கொண்டிருந்த வேதவள்ளி அப்படியே புத்தகத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருப்பதை கவனித்தவன் சிறிது நேரம் அவளையே வைத்த கண் எடுக்காது பார்க்க அப்போது தான் சுவர் கடிகாரத்தில் நேரத்தை கவனிக்க அது 07:15 என்று காண்பித்தது.

அதை பார்த்ததும் அவளது பரிட்சைக்கு நேரமாவதை உணர்ந்து அவளை எழுப்ப அருகில் வர, ஏனோ ஒரு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு அவனால் அவளை நெருங்க முடியவில்லை. அதனால் அவனறையில் இருந்த அவனுடைய எப்.எம் ரேடியோவை ஆன் செய்து சத்தத்தை கூட்ட அதை கேட்டதும் கண்களை கசக்கியபடி எழுந்த வேதவள்ளி

“அம்மா அந்த ரேடியோவை நிறுத்தும்மா..”

என்று தன் வீட்டில் இருக்கும் நினைப்பில் கூற இதை கேட்டு மனதிற்குள் சிரித்த ராஜபாண்டி

“பரிட்சைக்கு நேரமாச்சு.. வெரசா கெளம்புனாதான் நேரத்துக்கு போய் சேர முடியும்.”

என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவனது குரலை கேட்டவளுக்கு குப்பென தூக்கிப்போட அப்போது தான் அவள் இருக்கும் இடம் புரிய நேராக குளியலறைக்குள் புகுந்தாள்.

சில நிமிடங்களில் பரிட்சைக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு பள்ளிச் சீருடையில் வெளியே வந்தவளை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு பரிட்சை நேரத்திற்கு முன்னதாகவே பள்ளிக்கு அழைத்துச் வந்தான் ராஜபாண்டி.

வேதவள்ளி பரிட்சை அறைக்குள் நுழைந்து பரிட்சை எழுதி முடிக்கும் வரை அவளுக்காக வெளியே காத்திருந்த ராஜபாண்டி இறுதி மணி அடித்தும் கூட அவள் வராததை உணர்ந்து உள்ளே செல்ல

“ஏய் என்னடி கழுத்துல தாலி இருக்கு.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா??”

என்று வேதவள்ளியின் தோழி தேவி கேட்க அதற்கு அவளும்

“ஆமான்டி என் பாட்டிக்கு உடம்புக்கு முடியலன்னு ஊருக்கு போனோம் அப்ப அங்கேயே எனக்கும் என் மாமாவுக்கும் கல்யாணம் செய்து வச்சுட்டாங்க”

என்று வேதவள்ளி கூற அதற்கு தேவி

“என்னடி இப்படி சொல்ற.. நீ அன்னைக்கு சொன்ன மாதிரி படிச்சு டாக்டர் ஆகுவன்னு பார்த்த இப்ப இப்படி சொல்ற..”

என்று கேட்க அதை கேட்ட வேதவள்ளியின் முகம் வாடியபடி தன் தோழியை பார்த்து

“அதுதான் டி எனக்கும் தெரியல.. இதுக்கு அப்புறம் நான் படிப்பனான்னு கூட எனக்கு தெரியாது..”

என்று கூற தன் தோழியின் முகம் வாடியதை கவனித்த தேவி அவள் வேதனையை மாற்றும் பொருட்டு

“சரி சொல்லு உன் மாமா பார்க்க எப்படி இருப்பார்.. ரோஜா படம் அரவிந்த்சாமி மாதிரி அழகா இருப்பாரா..”

என்று கேட்க அப்போது அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்த ராஜபாண்டியை கை காட்டி

“அதோ.. அவர் தான் டி என் மாமா”

என்று வேதவள்ளி காண்பிக்க சிறிது தொலைவில் நடந்து வரும் ராஜபாண்டியை பார்த்த தேவி

ஏய்.. என்னடி பார்க்கவே காட்டுமிராண்டி மாதிரி இருக்காரு இவரை எப்படி டீ நீ கல்யாணம் செய்துக்கிட்ட..”

என்று கேட்க அதேசமயம் தேவி கூறியது ராஜபாண்டியின் செவிகளை எட்டியிருக்க வேதவள்ளியிடம் வந்தவன் கோபமாக அவளை பார்த்து

“எவ்வளவு நேரம் காத்துட்டு இருக்குறது.. பரிட்சை முடிஞ்சதும் வரனும்ன்னு தெரியாதா??”

என்று அதட்டியபடி கேட்டவன் பக்கத்தில் நின்றிருந்த தேவியையும் முறைத்தவிட்டு வேதவள்ளியின் கையை பிடித்து இழுத்து சென்றான்.

இதே போன்று அனைத்து பரிட்சையையும் எழுதி முடித்த வேதவள்ளி மாவட்ட அளவில் முதல் பத்து இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றாள்.

இவ்விடயத்தை கேள்வியுற்ற வேதவள்ளியின் தோழி தேவி அவளின் நிலையை எண்ணி வேதனை கொண்டாள்.

பத்து வருடங்களுக்கு பிறகு…

தஞ்சை மாவட்டத்திலேயே பிரபலமான சுகப்பிரசவம் மருத்துவமனை என்னும் மருத்துவமனையில் தேவி தன் கணவரோடு அமர்ந்திருக்க, உள்ளிருந்த மருத்துவர் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த பேஷன்ட்டை பார்த்து

“நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் சொன்ன மாதிரி ஃப்லோ பண்ணுங்க உங்களுக்கு இன்னும் ரெண்டுல இருந்து மூணு மாசத்துல ரிசல்ட் தெரியும்..”

என்று குழந்தை வரம் கேட்டு வந்த ஒரு பெண்மணிக்கு அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் அறிவுரை கூறி மருந்து மாத்திரைகள் எழுதி கொடுக்க, அதை பெற்றுக் கொண்டு மனதில் இருந்த பயம் நீங்கி நம்பிக்கையோடு அந்த பெண்மணி அங்கிருந்து வெளியே சென்றார்.

அடுத்ததாக வரவேண்டிய நபரை அழைக்க தன் டேபிளில் இருந்த அழைப்பு மணியை அந்த மருத்துவர் அழுத்த, இருவர் எழுந்து உள்ளே செல்ல, அப்போது அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த தேவி தன் கணவனின் தோள் மீது சாய்ந்தபடி

“என்னங்க நமக்கு குழந்தை‌ பிறக்கும்ல??”

என்று கேட்க அதற்கு அருகில் அமர்ந்திருந்த கணவனோ

“நமக்கு கல்யாணமான இந்த அஞ்சு வருசத்துல நாமும் எங்கெங்கேயோ போய் பார்த்துட்டோம் இவங்களையும் ஒருதடவை பார்த்துடுவோம்”

என்று சலிப்புடன் கூற அதை பக்கத்திலிருந்து கேட்ட வயதான பெண்மணி ஒருவர் அவரை பார்த்து

“ஏன்பா அப்படி சலித்தபடி சொல்ற?? என் பொண்ணுக்கு 30 வயசாகியும் குழந்தை இல்லாம இந்த ஆஸ்பத்திரிக்கு தான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வந்தோம் இப்ப என் பொண்ணு 8 மாசம் முழுகாம இருக்கா”

என்று கூறியவர் மேலும்

“இந்த ஜில்லாவே இவங்கள கைராசி டாக்டர்ன்னு தான் கூப்டுவாங்கன்னா பார்த்துக்கோங்க.. அதனால கண்டிப்பா உங்களுக்கும் கூடிய சீக்கிரமே ஒரு குழந்தை பிறக்கும். கவலைபடாம நம்பிக்கையோட இருங்க..”

என்று கூற இவை அனைத்தையும் கேட்ட தேவியும் அவளது கணவனும் சற்று நம்பிக்கை அடைந்தனர். அதே நேரம் அவர்களது முறை வர உள்ளே சென்ற இருவரும் மருத்துவர் முன்பு அமர, அப்போது தேவியை பார்த்த மருத்துவர் அவரை உற்று பார்த்தபடி

“நீ.. தேவி தானே..”

என்று கேட்க அவளும் அவரை பார்த்து

“ஆமா.. நீங்க..

என்று கேட்க உடனே அந்த மருத்துவர்

ஏய்.. நான் தான்டி உன் ஸ்கூல் ப்ரெண்டு வேதவள்ளி

என்று கூற பல வருடங்களுக்கு பிறகு பார்த்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது வேதவள்ளியிடம் தன் கணவரை அறிமுகப்படுத்திய தேவி வேதவள்ளியை பார்த்து

“ஆமா அன்னைக்கு உன் காட்டுமிராண்டி மாமா முறைச்சுட்டு போன முறைக்கு உன்னை வெளியவே விடமாட்டாருன்னு நினைச்சேன்.. நீ எப்படி டீ டாக்டர் ஆன??”

என்று கேட்க இதை கேட்ட வேதவள்ளி

“இல்லடி, ஆக்சுவலா அன்னைக்கு நீ சொன்னது அவரு காதுல விழுந்துடுச்சு அதனால தான் அந்த கோபம் அவருக்கு. அன்னைக்கு பரிட்சை முடிந்து வீட்டுக்கு போகுற வழியில நான் என்ன படிக்கனும்ன்னு ஆசைப்படுறேனோ படிக்கலாம்ன்னு சொன்னாரு.. அதன்பிறகு நான் என் படிப்பை முடிச்சதும் எனக்கு இந்த ஹாஸ்பிட்டலயும் கட்டி கொடுத்து ஒருநாள் என்கிட்ட வந்து உனக்கு வேற கல்யாணம் பண்ற ஐடியா இருந்தா டைவர்ஸ் கொடுக்கவும் நான் ரெடின்னு சொன்னாரு.. ஆனா எனக்காக இவ்வளவு பண்ண என் மாமாவை விட்டுட்டு போக எனக்கு மனசு இல்ல.. அன்னையில இருந்து நானும் அவரும் சேர்ந்து எங்க வாழ்க்கையை சந்தோசமா வாழ ஆரம்பித்தோம்.”

என்று அவள் கூறி முடிக்கையில் அவர்களது மூன்று வயது குழந்தையுடன் உள்ளே நுழைந்தான் தஞ்சை எம்.எல்.ஏ. ராஜபாண்டி. தன் தோழி கூறிய அனைத்தையும் கேட்ட‌ தேவிக்கு இதுவரை காட்டுமிராண்டியாய் மனதில் பதிந்த ராஜபாண்டி இன்று இந்த நிமிடத்திலிருந்து காவலனாய் தெரிந்தான்.

***
நன்றி.
 

Fa. Shafana

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
38
காட்டுமிராண்டி காவலன் ஆனான்...
😍😍
 

Rishi24

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
14
வாவ் வாவ் செம செம ணா.. சூப்பரா இருக்கு.. அழகான கதை.. வாழ்த்துக்கள் 💙
 
Top