• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

AgniAaru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 3, 2022
Messages
20
மதியை விட பால முருகனின் நிலை மிகவும் மோசமாய் இருந்தது.. மீனா எங்கோ இருக்கிறாள் என்ற நினைவில் அவன் இருக்க, அவளோ மொத்தமாய் கொன்று விட்டுப் போயிருக்கிறாள். இந்த நிறை மதியோ அவனை அத்தனையையும் மறைத்து ஏமாற்றி இருக்கிறாள். இதையே திரும்ப திரும்ப யோசித்து அடுத்த இரு நாட்களும் அந்த அறைக்குள்ளேயே முடங்கி விட்டிருந்தான் பால முருகன். ‘செத்த பாம்பை அடிப்பது எவ்வளவு இரக்கமில்லாத செயலோ அதை தான் நிறை மதி தனக்கு செய்திருக்கிறாள்’, இது மட்டுமே அவனின் மூளைக்குள் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்தது.

அந்த வார இறுதி முடிந்து திங்கள் கிழமை நெருங்க நெருங்க பெண் மனம் பதற ஆரம்பித்தது. பால முருகன் வருவானா? மாட்டானா? , ஒருவேளை அவன் வரா விட்டால் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது.. என்ன காரணம் சொல்லி சமாளிக்கலாம் என தனக்குள்ளே யோசித்து அவருக்கு சந்தேகம் வராதவாறு நான்கைந்து காரணங்களையும் தயார் செய்து வைத்து இருந்தாள் நிறை மதி.

அவ்வப்போது புகுந்த வீடே அழைத்து யோசனையும் சொல்லி இருக்க அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்ற இமாலய நம்பிக்கையே வந்திருந்தது பெண்ணுக்கு.

தங்களின் பிரச்னையை விட தாயின் உடல் நலமே இப்போது பிரதானமாயிருந்தது நிறை மதிக்கு. ஆனால் நடந்தது வேறு.. யாரும் எதிர் பார்க்காதவாரு திங்கள் மாலை இவள் வரும் முன்னரே பால முருகன் வந்து சேர்ந்திருந்தான் வீட்டுக்கு.

கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தாலும் மற்றவர்கள் முன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை இருவரும். ஒருவேளை அமைதியாய் யோசித்தலில் தன் பக்க நியாயம் புரிந்து விட்டதோ என ஏதேதோ யோசனைகள் வந்து போயின பெண்ணுக்குள்.

வெளியே இயல்பாய் இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அறைக்குள் வந்ததும் அவன் காட்டிய ஒதுக்கத்தில் நிதர்சனம் முகத்திலறைந்தது. வீணாய் அவனிடம் வாக்கு வாதம் புரிய மனம் இல்லாதவளாய், அவள் அமைதியாய் இருக்க அதுவோ அவனுக்கு திமிராய் தெரிந்தது.

“ம்ம்ம் எது எப்படியானாலும் சிலருக்கு அவங்க அவங்க சுய நலம் தான் முக்கியம் போல.. யார் எப்படியிருந்தா நமக்கென்ன நடிக்கறேன்னு சொல்லிட்டோம் அதை நல்லா நடிச்சுக் குடுத்துட்டுப் போவோம்”, அவனின் வருகையால் நிம்மதியாய் இருந்த அவளின் தோற்றம் அவனைப் பேச வைத்தது.

அது தன்னை வருந்த வைப்பதற்காக தன்னை நோக்கி வீசப்பட்ட வார்த்தை தான் எனத் தெளிவாய்ப் புரிந்தால் அதை அமைதியாய் கடக்க முடிவு செய்தது பாவை மனம்.

அவளின் அந்த அமைதி அவனை இன்னும் ஆத்திரமூட்டியது.. அடுத்து எதுவோ சொல்ல வர, அதற்குள் மதிக்கு தொலைபேசி அழைப்பு வர போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள்..

பார்த்துக் கொண்டிருந்தவனின் பிபி எகிறியது.. அவள் பேசி முடித்து உள்ளே வருகையில் இவனுக்கு சரவணனிடமிருந்து அழைப்பு வர இவன் பேசுவதற்காக வெளியே போனான்.

“என்ன அண்ணி ஓகேவா”, வெண்ணிலாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது..

ஆம் அவன் பேச்சை ஆரம்பித்ததுமே இவள் வெண்ணிலாவுக்கு தனக்கு கால் செய்யுமாறு மெசேஜ் போட்டு இருக்க, முதலில் வெண்ணிலா அழைத்தவள், அவள் பேசி முடிக்கையில் சரவணனை வைத்து பால முருகனுக்கு அழைப்பு விடுத்தாள். குடும்பம் மொத்தமும் அடுத்த ஒரு மணி நேரம் இவனை ஆக்கிரமித்துக் கொள்ள, நிறை மதி நிம்மதியாய் தூங்க ஆரம்பித்தாள்..

அந்த வாரம் முழுவதுமே இப்படியே அவனிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் நிறை மதி. அவனையும் பள்ளி வேலைகள் இழுத்துக் கொள்ள அந்த வாரம் இருவரும் தனித் தனியே கொடி மங்கலம் வந்து சேர்ந்தனர்.

வழக்கமாக தேனூரில் அவனுக்கு பரிமாறுவது மதி தான். ஆனால் கொடி மங்கலம் வந்து விட்டால் அந்தப் பொறுப்பை தன் அத்தையிடம் விட்டு விடுவாள்.

“உங்க பையனுக்கு செய்யணும்னு உங்களுக்கும் இருக்கும்ல அத்தை”, என்பாள்.

“எம்புட்டு நேக்கா எங்கம்மாவையே வேலை வாங்குறீங்களே அண்ணி”, என்பான் சரவணன்.

“வெண்ணிலா உங்க சின்ன அண்ணன், நான் வச்ச ஆட்டுக் கால் சூப் நல்லாருக்கு நல்லாருக்குன்னு குடிச்சானே, அத செய்யும் போது ஒரு பல்லியை போட எனக்கு எவ்ளோ நேரமாகும்ன்னு அவனுக்கு தெரியுமா தெரியாதா?”, இவளும் பதிலுக்குத் திருப்பி கொடுத்து விடுவாள்.

“உசுரு தங்காது போலையே, ஓடிடுடா சரவணா.. ”, என அவன் பேசுவதும் வாடிக்கை தான்.

அதே போல் இந்த முறையும் இவள் விலகி நிற்க,

“இந்தா.. மதி,, உன்னைய கட்டி வச்சுட்டு இன்னும் நானே உம்புருசனுக்கும் உட்கார வச்சு சவரட்சினை செஞ்சா, நீ எதுக்கு இங்கன இருக்கணும்.. அஞ்சு நாள் ஆத்தா வீடே கதின்னு இருக்கற மாதிரி இன்னைக்கும் இருந்திருக்கலாம்ல.. காட்டு வேலை பாத்து காலெல்லாம் வலிக்குதுன்னு இங்கன வந்தா இங்கயும் நான் தான் எல்லாம் பாக்கணுமா.. இனி நீயே உம்புருசனை கவனிச்சுக்கோ.. என்னைய யாரும் எதிர் பாக்க வேணாம் புரியுதா.. இந்தா வெண்ணிலா, எம்புட்டு வாய பாத்துகிட்டு நிக்காம அந்த கோடாலி தைலத்தை கொண்டாடி..” என எண்ணையில் போட்ட அப்பளமாய் பொரிய, சரவணனே ஒரு கணம் குழம்பி விட்டான் தாயின் பேச்சில்.

பின்னே, வெள்ளிக்கிழமை மாலை வர, எம்மருவளும் , எம்மவனும் நல்லா வாழனும், அவதேன் எங்குல சாமி, இந்தா சரவணா மதினி என்ன சொன்னாலும் கேட்டுக்கிடனும், எதுத்துப் பேசப்பிடாது, அப்படி இப்படி என இவனின் காது தீயும் அளவு புகழ்ந்து தள்ளியது என்ன., இப்போது அந்த மருமகளிடமே சடைத்துக் கொள்வது என்ன..

மெதுவாய் அவரின் காதருகே குனிந்தவன் “நீ இப்போ நெசமாவே அண்ணிய திட்டுனியா? இல்ல உம்மவனையும் மருமவளையும் சேர்த்து வைக்க நடிக்கறீயா?, ” என்று கேட்க,

“சோறு வேணுமா? வேணாமாடா?”, பேச்சியம்மாளும் அதே குரலில் திருப்பிக் கேட்டார்.

“ரைட்டு விடு, எதிர் கேள்வி கேட்டலே சோத்துல கை வைக்குறது இவிங்க பொழைப்பா போச்சு.. அது என்ன சொத்தா வேணாம்ன்னு வீராப்பா சொல்ல” தனக்குள் புலம்பிக் கொண்டான் சரவணன்

“மைண்ட் வாய்ஸ் வெளிய வர கேக்குதுண்ணா”, வெண்ணிலா நேரம் பார்த்து வாற, “அடிங்க உன்ன” என சரவணன் அவளைத் துரத்த அனைவருமே அவர்களின் அழும்பில் சிரித்து விட்டிருந்தனர்.

எதேட்சையாய் நிறை மதியின் பார்வையை சந்தித்த பால முருகனின் சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போல் காணாமல் போனது.

பட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டு அவன் செல்ல, எதுவுமே நடக்காதது போல அந்த நொடியை கடந்து போனாள் நிறை மதி.

இப்படியாக இவர்கள் அடுத்த வாரத்தையும் கடத்த, தினமும் மதியிடம் பேசி விவரம் கேட்டுக் கொள்ளும் இந்து கொதித்துப் போனாள்.. ஊருக்கு செல்லும் முன் எப்படியாவது பால முருகனிடம் பேசி விடத் துடித்தாள் இந்து.எனவே நிறை மதியிடம் கூட சொல்லாமல் அந்த புதன் கிழமை தேனூரின் பள்ளிக் கூட வாசலில் வந்து நின்றாள்.

கடைசி வகுப்பு முடிந்து வெளியே வந்தவன், வழக்கம் போல மீனா கொடுத்த ஏழிலைப் பாலை மரத்துக்கு நீர் விட்டு விட்டு வெளியே வந்தவனின் வழியை மறைத்து நின்றாள் இந்து.

“நிறை மதி பத்தி பேசணும்”, எந்தப் பூச்சும் இல்லாமல் வந்தது அந்த நேரடித் தாக்குதல்.

“அவளைப் பத்தி பேச எனக்கு ஒண்ணுமில்லை” , அவனும் எதையும் ஒளித்து மறைக்க நினைக்கவில்லை.

“ஆமா ஆமா, அவ ஏமாத்துக்காரி, நீங்க பெரிய நியாயவாதிதான் , இல்லையா .. அதுனால இருக்காது தான்..”, இகழ்ச்சி அவளின் சொற்களில் விழுந்து கிடந்தது.

“இப்போ என்ன சொல்லணும் சொல்லுங்க, ரோட்ல வச்சு இப்படி கத்தாதீங்க..”, விட்டால் இவள் இன்னும் கத்துவாளோ என்று தோன்றியதால் சற்று இறங்கி வந்து பேசினான் பால முருகன்.

“நீங்க தாங்க சொல்லணும், அவ உங்கள என்ன ஏமாத்துனான்னு, சும்மா சும்மா அவளையே குத்தம் சொல்றீங்க நீங்க, நின்னு போராடாம, காதலிச்ச உங்கள நம்பாம, யார்கிட்டையும் எதையும் சொல்லாம, சாவு மட்டும் தான் ஒரே வழின்னு நினைச்சு அவ போய் சேர்ந்துட்டா.. அவளுக்கு என்ன பிரச்சனை, என்ன நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம, கல்யாண மண்டபம் வரை போயிட்டு அவளை கூட்டிட்டு வராம, அவகிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம , அவசரப்பட்டு, நீங்களா ஒரு முடிவெடுத்தது அங்க இருந்து கிளம்பி வந்து, இங்க உங்க அம்மா அப்பா ஒரு பொண்ண பார்த்து வைச்சிருந்த பொண்ண கல்யாணமும் பண்ணிப்பீங்க, நீங்க பண்ணதெல்லாம் சரி ஆனா என் மதி மட்டும் உங்க ரெண்டு பேருக்கு இடையில மாட்டிகிட்டு முழிக்கணும்.. ஏன்னா அவ பண்ணது மட்டும் தப்பு அதான.... உங்க அவசர புத்திக்கு அவ ஏங்க பலிகடா ஆகணும். இப்போ என்ன அவளுக்கு மீனா செத்தது தெரிஞ்சதால அவ ஏமாத்துக்காரி.. அப்போ காதலிச்சவ விட்டுட்டு போன உடனே இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி, நீங்களும் வாழாம அவளையும் வாழ விடாம, இப்படி தினம் தினம் மெண்டல் டார்ச்சர்’ பண்றீங்களே உங்கள என்ன சொல்லி திட்டட்டும் சொல்லுங்க.. நீங்க ஏன் உங்க முன்னாள் காதலைப் பத்தி மதிக்கிட்ட சொல்லல.. உங்கள தவிர வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா அவ குணத்துக்கு தங்கமா தாங்கி இருப்பாங்க.. அம்மா சீக்காளி, அப்பா இல்லாத புள்ள, கேட்க ஆள் இல்லைன்னா உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்ணா பேசலாம்னு நினைக்காதீங்க..நான் இருக்கேன், ஊர் மொத்தமும் சொந்த பந்தமும் இருக்கு.. அய்யா சாமி நீ அவ கூட வாழலன்னா கூட பரவாயில்ல, வார்த்தையால கொல்லாத.. ”, மனதில் இருந்த அத்தனையையும் கொட்டியவள், பாரம் நீங்கிய உணர்வுடன் திரும்பிச் செல்ல, இந்து பேசியவைகள் திரும்ப திரும்ப அவனின் செவியில் ஊர்வலம் போனது.

இந்து தன்னை வந்து பார்த்ததை இவனும் மதியிடம் சொல்லவில்லை.. வார்த்தையால கொல்லாத என்ற வார்த்தை அவனின் மனதை இன்னும் அறுத்துக் கொண்டிருந்தது. ஆனால் பொறுமையாய் யோசிக்கையில் அவளின் நியாயம் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் தொடங்கியது. புரியத் தொடங்கியதில் இருந்து பார்வைகள் அவளை ஆராயத் தொடங்கியது.. மனைவியாய் அல்ல, இத்தனை நாள் ஒரே அறையில் தங்கிய சக மனிதியாய் அவளைப் புரிந்து கொள்ள சொல்லியது அவனின் நியாய மனம்..

அடுத்த பதினைந்து நாட்கள் மதியின் அலுவலகம் முழுவதும் சிறப்பு வகுப்புக்காக பவானி செல்லவிருப்பதாய் இருக்க அதற்கான ஆயத்தங்களில் இருந்தது பெண்.
 

Apsareezbeena loganathan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
மூன்றாம் மனிதராய்
முன்நின்று
முடிவாய் பிரச்சினைகளை
முடித்து விட்ட இந்து சூப்பர்.....
 
Top