• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கோவிட் - மனதில் ஒரு பாரம் - தி.வள்ளி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
கோவிட்


மனதில் ஒரு பாரம்...


ஞாயிறு காலை சோம்பலாக விடிந்தது. மற்றவர்களுக்குத்தான் ஞாயிறு, திங்கள் என்ற பேதமெல்லாம். மருத்துவமனையை பொருத்தவரை இந்த பேதம் உள்ளிருப்பவர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதுவும் கொரோனா பெரும் தொற்று தமிழ்நாட்டையே ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்க...மருத்துவமனை ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது ...ஒய்ங்.. ஒயிங்...என்ற சத்தத்தோடு ஆம்புலன்ஸ் வரிசையாக வந்து மருத்துவமனை வாயிலில் காத்திருக்க .நெல்லை மருத்துவமனை முகப்பு மிகவும் பரபரப்பாகவே காணப்பட்டது


இரவு நேர பணியை முடித்துவிட்டு, கார்த்திக் வார்டை விட்டு வெளியே வர வேண்டியவன் இன்னும் அங்கேயே அமர்ந்திருந்தான்.அவன் ஏன் இன்னும் கிளம்பாமல் அங்கேயே அமர்ந்து கொண்டிருக்கிறான் என்று யோசித்தாள் டாக்டர் அஞ்சலி.


"கார்த்திக் நீங்க இன்னும் கிளம்பலையா ?" அஞ்சலி கேட்க.


"இல்லை அஞ்சலி! கொஞ்சம் வேலை இருக்கு."


கார்த்திக் அப்போதைக்கு அங்கிருந்து கிளம்புவதாக அஞ்சலிக்கு தோன்றவில்லை. அவள் நேற்றிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் ..அவன் அந்த ஐ .சி. யு வில் இருக்கும் ஐந்தாம் நம்பர் பேஷண்ட்டை விட்டு நகரவே இல்லை. ஒருவேளை சொந்தமாக இருக்குமோ? அவன் முகம் வாடியிருப்பதிலிருந்து அப்படித்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது அஞ்சலிக்கு.


அஞ்சலி போனபிறகு ஐ .சி. யு.க்குள் நுழைந்த கார்த்திக்..ஐந்தாம் நம்பர் படுக்கையை நோக்கி போனான். உள்ளே யாரும் இல்லை..ஐந்தாம் நம்பர் படுக்கையில் படுத்திருந்த மூதாட்டியின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்.... அந்த மூதாட்டியின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.


லேசாக கண் விழித்த அப்பெண்மணி" உடம்பெல்லாம் வலிக்குது.. மூச்சுவிட கஷ்டமா இருக்குப்பா.. "


கார்த்திக் "அம்மா!ஆக்சிஜன் வச்சிருக்கு...சிரமப்படாதீங்க! கொஞ்ச நேரம் தூங்குங்க சரியா போயிடும்... உங்களுக்கு ஒன்னும் இல்ல.. நீங்க நல்லாயிடுவீங்க..." என்றான் மெதுவாக. அவன் போட்டிருந்த கவச உடைகளை தாண்டி அந்த மூதாட்டிக்கு அவன் பேச்சு புரிந்ததாவென்று தெரியவில்லை.


எனினும் அவன் அருகாமை ஒரு ஆறுதலை கொடுக்க.... அந்த மூதாட்டி சற்று அமைதியாகி தூங்க ஆரம்பித்தார். நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியின் உடல் நிலையில் சற்றும் முன்னேற்றமில்லை. வீட்டில் இருந்த மகன் ,மருமகள், பிள்ளைகள் என எல்லோரும் தொற்றால் பாதிக்கப்பட ...அந்த தாய் தனியாக மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது.அவ்வப்போது வீட்டிலிருந்து அவருடைய உடல்நிலையை பற்றி போன் வரும்போது கார்த்திக் அவர்களிடம் பேசி, அவர் உடல்நிலையை பற்றி கூறி வந்தான்.


திங்கள் காலை... அந்த மூதாட்டிக்கு மூச்சு திணறல் அதிகமாக... கார்த்திக், அஞ்சலி மற்றும் எல்லோரும் அவரருகில் குழுமியிருந்தனர். மூச்சுத் திணறல் அதிகமாக மகன்....மகன்...என்று மூதாட்டி முனக ..கார்த்திக் சட்டென முகக் கவசத்தை கழற்றினான் .


"கார்த்திக் என்ன செய்றீங்க? மாஸ்க்க கழட்டாதீங்க" என்று அஞ்சலி பதறினாள்.


" அஞ்சலி உனக்கு தெரியாது. இவங்க அம்மா" என்று கதறினான் கார்த்திக்.


"அம்மா! நான் உன் கார்த்திக்... என்னை அடையாளம் தெரியலையா?" என்று உடைந்துபோய் அழுதான். ஆக்ஸிஜன் மாஸ்க்கை இறக்கிவிடச் சொன்ன மூதாட்டி...


" கண்ணா நீ என் கையை பிடித்த போதே நான் அத உணர்ந்திட்டேன்... நீ என் கார்த்திக்னு.. உன் காதல் கல்யாணத்தை பொறுக்கமுடியாம, உன்னை விலக்கி வச்சேன்... கடைசியில் உன்னை பார்க்க முடியாம போயிடுவோமோ என்ற தவிப்பில இருந்தேன். இப்ப நிம்மதியாக இந்த உலகத்தை விட்டுப் போயிடுவேன்."


கார்த்திக் அம்மாவை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதான். "அம்மா நீ என்னை புரிஞ்சுகிட்டு ஏத்துக்கும் போது நான் உன்னை இந்த நிலையிலா பாக்கணும்.மதுரையில வேலை பார்த்துகிட்டிருந்த என்னை இதற்காகவே இங்க அனுப்புன மாதிரி... "என்றவன் தன் போனை அவசரமாக எடுத்து தன்னுடைய குழந்தையின் படத்தை காட்டினான்." இதோ பாரும்மா! உன் பேத்தி. இது உன் மருமகள்" என்று காண்பிக்க... நடுங்கும் கரத்துடன் அவர்களை ஆசீர்வதிப்பதைப்போல அந்த படத்தை தொட... "நல்லா இரு.. கார்த்திக்" என்றவளின் உயிர் மகனின் மார்பிலேயே பிரிந்தது.


கதறி அழுத கார்த்திக் ..அண்ணனுக்கு தகவல் சொல்லிவிட்டு " அண்ணா உன் உடம்பையும், அண்ணி, குழந்தைங்க உடம்பையும் கவனிச்சுக்கோ... கொரோனா மரணம்...உனக்கும் நோய்தொற்று என்பதால் நீ இங்கு வந்து உடலை பெற்றுக்கொள்ள முடியாது... அதைப் பற்றி கவலைப்படாதே... நானே அம்மாவுக்கு இறுதிச் சடங்கு செஞ்சுடுகிறேன்" என்று கூறிய கார்த்திக்


தலைமை மருத்துவரிடம் விவரத்தைக் கூறி விடுமுறை கேட்க கண்ணீருடன் நடந்தான்...மனம் முழுக்க தாய்பாசமெனும் மன பாரத்தை சுமந்து கொண்டு ...


தி.வள்ளி

திருநெல்வேலி
 
Top