• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
857
அத்தியாயம் 10

எழுத்தில்லா கவியே
முள் இல்லா மலரே
பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே
என் நாட்கள் எல்லாமே
உன் நிழலாய் வாழுவேனே
என் காதல் முழுவதும் உனக்காகத்தான்
கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில்

காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான்

இரண்டு நாட்கள் கணமாகவே கழிந்தது புகழுக்கு. தபேரா அரூபியை பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. அவனுக்கு விரைவிலேயே குணமாகும் படியான மருத்துவத்தைத் தொடர்ந்தார். புகழ் எதாவது கேட்டால் சொல்லலாம் என்றுத் தபேராவும் யோசித்து வைத்திருந்தார்.

அவன் எதைப்பற்றியும் பேசவில்லை. ஊருக்கு போக வேண்டும் என்று மட்டும் ஓரிரு முறைச் சொல்லிக் கொண்டான்.
அன்றைய நாள் வழக்கம் போல வைத்தியர் மூலிகை பறிக்கக் காட்டிற்குள் சென்றுவிட, தனியே இருந்துப் போரடித்த புகழும், மெல்ல மெல்ல நடந்து அந்த அருவிக்கரைக்குச் சென்றான். அன்றைய மூலிகை வைத்தியத்திற்குப் பிறகு புகழ் மெல்ல எட்டு வைத்து நடக்கலாம் என வைத்தியரும் சொல்லிருக்க, அங்கு வந்திருந்தான்.

அவனுக்கும் உள்ளேயே அடைந்துக் கிடந்து மூச்சை முட்டுவது போலத்தான் இருந்தது. வெளியே வந்து மனதை சமன்செய்து சிறிது யோசிக்க வேண்டும் என்றென்னியே இங்கு வந்திருந்தான்.
கொட்டும் அருவியைத் தூர இருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். என் பலன் கொட்டித் தீர்ப்பதே என்பதுபோல் ஆர்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது அந்தக் காட்டருவி. ஏனோ மனம் லேசாவது போல் உணர்ந்தான்.

அப்போது அருவிக்குள் இருந்து ஒரு வயதானவர் வெளியே வருவதுபோல் தெரிய, கண்ணைக் கசக்கி மீண்டும் பார்த்தான்.இப்போது அவர் அருவியை விட்டு சற்று முன்னே வந்திருந்தார். அந்த மனிதரை எங்கையோ பார்த்தது போல் இருக்கிறதே என யோசனையுடன் நிற்க, அவரும் அவனை சமீபத்திருந்தார்.

முன்னால் நின்றவனை ஏற இறக்க ஒருமுறைப் பார்த்தவர், “டவுனுக்காரத்தம்பி மேலுக்குப் பரவாயில்லையா…? எட்டுபோடலாம்னு (நடப்பது) சொல்லிட்டாரா வைத்தியரு…” என்றார்

“பரவாயில்லீங்க பெரியவரே முன்னைக்கு இப்போ எவ்வளவோ நல்லாயிருக்குங்க. நானும் ஊருக்குப் போகனுங்களே, வீட்ல தேடிட்டு இருப்பாங்க. தகவலும் சொல்லல,” என்றான் யாரோ என்ற எண்ணத்தோடு…

“ஆமா தம்பி அம்மாயி சொன்னுச்சு, இன்னும் ரெண்டு மூனு நாள்ல கிளம்புவீங்கன்னு. உடம்ப பார்த்துக்கோங்க தம்பி, உங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு…” என,
அவனுக்கு அதெல்லாம் காதில் விழுந்தால்தானே அவர் அம்மாயி என்றதிலேயே நின்றவன் அப்போ ரூபியோட தாத்தாவா இவர். முகஜாடை ஒரே மாதிரியா இருக்கவும் தான் எங்கையோ பார்த்த மாதிரியா இருந்திருக்கு.

திசை தெரியாம தவிச்சுப் பறவைக்கு வழி கிடைச்ச மாதிரி இவரை எனக்கு கடவுள் காட்டிருக்கார்ன்னா, ஏதோ நல்லதா நடக்கப் போகுதுன்னு தானே அர்த்தம். இவர்கிட்ட பேசிப் பார்க்கலாமா…? என்று யோசனையோடு நின்றவனை,

ஆழ்ந்து பார்த்தவர், “என்னதம்பி…” என்னுகிட்ட பேசனுமா உங்களுக்கு…” என்றார்…
தன் எண்ணத்தைக் கண்டுகொண்டாரே எனத் தலையைக் குனிந்தாலும் இப்போது அதையெல்லாம் யோசித்துப் பயனில்லை என்று முடிவு செய்தவன். “ஆமா பெரியவரே ரூபி பத்தி சாரி அம்மாயி பத்தி பேசனும்னு நினைச்சேன்…” என்றான் ஒரு வழியாக…

“அம்மாயி பத்தி என்ன பேசனும் தம்பி உங்கக்கிட்ட வம்பு பண்ணாலா என்ன…?இல்லநீங்க…?” என்று யோசனையோடு நிறுத்த,

“இல்ல… இல்ல… அதெல்லாம் ஒன்னுமே இல்ல, அவங்க பெத்தவங்க இல்லாம நீங்கதான் வளர்க்குறீங்க சொன்னா, அவளோட முழு பொறுப்பும் நீங்கதான்னும் சொன்னா, உங்களை மீறி அவ சுண்டு விரல் நகத்தைக் கூட அசைக்க மாட்டேன்னு சொன்னா…” என வரிசைப் படிக்க,

பெரியவரின் முகத்தில் ஆயிரம் வோல்டேஜ் பல்ப் பிரகாசித்தது. அதைக் கவனித்துக் கொண்டே மேலேப் பேசினான்… எனக்கு உங்க இந்த கிராம மக்கள் பத்தி என்ன முறை இதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா அதுலயே ஊறிப்போன உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். புரியும். ஏன்னா என்னோட குடும்பம் எங்க ஊர்லயே ரொம்பவே பாரம்பரியமானக் குடும்பம். அவங்க என்னஎ திர்பார்ப்பாங்கன்னு எனக்கு ஓரளவு தெரியும்…”என்று நிறுத்தி அவரின் முகம் பார்த்தான்…

இப்போது அவர் முகத்தில் தீவிர சிந்தனைக்கோடுகள். சிறியவன் அவரையே பார்ப்பதை உணர்ந்து “மென்னு முழுங்காம மேல சொல்லுங்க தம்பி…” என பார்க்க,

இல்ல அது வந்து நீங்க… நீங்க ரூபிக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி வைச்சுருக்கீங்களா,” என்றான் தயக்கமாக,

“அது உங்களுக்குத் தேவையில்லாத சேதி தான் தம்பி. எதனால நீங்க இம்புட்டு சிரமப்பட்டு கேட்குறீங்க…” என்றதும் அவன் பேச முற்பட,

“இருங்க, முதல்ல உட்காருங்க நீங்க பேச ஆரம்பிச்ச விசயம் இப்போ முடியாது போல, உங்களுக்கும் மேலு வலிக்கும் இப்படி உட்காருங்க” என அங்கிருந்த ஒரு பாறையைக் காட்டி அவரே அழைத்து வந்து உட்காரவும் வைத்தார்…

இப்போ சொல்லுங்க தம்பி என்ன விசயம் உங்களுக்கு என்ன தெரியனும் என்ன வேணும்…” என்றார்…
“பெரியவரே நீங்க என்னைத் தப்பான ஆளா உருவகம் செய்திடக்கூடாது. அதை முதல்லயே சொல்லிடுறேன். எனக்கு உங்க பேத்தியை கல்யாணம் செய்துக்குற அளவுக்குப் பிடிச்சிருக்கு. இதை நான் அவக்கிட்ட கூட சொல்லல. கண்டிப்பா ஒத்துக்கமாட்டான்னு தெரியும், வீனா அவளோட மனசை கலைக்கத் தோணல, முதல்ல உங்கக்கிட்ட பேசிட்டு பிறகுதான், அவக்கிட்ட பேசனும்னு நினைச்சேன். அதனாலதான் கஷ்டமா இருந்தாலும் இந்த மூலிகைக் குளியல் வைத்தியத்துக்கு சரி சொன்னேன். சீக்கிரமா உடம்பைத் தேத்தி, உங்கக்கிட்ட வந்து பேசி, கேட்கனும்னு நினைச்சேன்…” என்றவன்,
தன்னைப் பற்றி தன்குடும்பம், தொழில், சொத்துவகை, திருமணம் நின்றது வரை அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டு, அவரையேப் பார்த்தான்.
அவனின் பேச்சைக் கேட்டவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனது தோற்றமே சொல்லியது “பெரிய இடத்துப் பையன்…” என்று இதில் அவன் கூறிய அனைத்தையும் கேட்க, பயம்தான் வந்தது.

அவரால் பேத்தியை தன் இனத்தைத் தாண்டி கொடுக்க முடியாது என்பது வேறு விசயம். ஆனால், தன் பேத்தியை பிடித்திருக்கிறது என்று வந்து நிற்கும் இவனிடம் என்ன சொல்ல யோசனைகள் ஓட, அவனையேப் பார்த்தார்…

“ஐயா… உங்களுக்கு நம்பிக்கை வரது சிரமம்தான். அந்த நம்பிக்கையை வர வைக்க நான் என்ன பண்ணனும் சொல்லுங்க, கண்டிப்பா செய்றேன்…” என்றவனிடம்,

“தம்பி உங்களுக்கு எங்க சனத்தைப் பத்தி தெரியாது. இங்க உள்ள மக்க எல்லாம் பழசுல ஊறிப் போனவங்க, உலகத்துல எவ்வளவோ விஞ்ஞனாம் வந்து தொழில்ல முன்னேறி இருந்தாலும் எங்கப்பாடு இந்தக் காடும், அதைச் சுத்தி இந்த ஆட்டை மேய்க்குறதும் தான். எத்தனையோ மக்கள் டவுனுல இருந்து இங்க வந்து போயிட்டாங்க, வந்தவங்க எல்லாரும் எங்கள ஏமாத்தி எங்க உசுரை உறிஞ்சுட்டுப் போன நாடோடி பயலுக, உங்க டவுனாலுகள தான் சொல்றேன்.”
“காரியம் ஆகனும்னுனா கால்ல விழுவானுங்க. காரியம் முடிஞ்சதும் அந்தக் காலைப் பிடிச்சு இழுத்து கீழேத் தள்ளிடுவானுங்க. இந்த மாதிரி ஆளுகள நெறைய பார்த்தாச்சு. மறுபடியும் அதை பார்க்க திரணியில்லை. நீங்க கவனிச்சீங்களா அம்மாயி தவிர வேறயாராச்சும் எங்க மக்க உங்களோட பேசுனாங்களான்னு” என்றதும் புகழும் யோசனையோடே “இல்லை” எனும் விதமாய் தலையாட்ட,

“ம்ம் இங்க கட்டுப்பாடுகள் அப்படித் தம்பி, யாரும் பேசமாட்டாங்க. என் பேத்தி கூட அந்த வைத்தியன் சொல்றதுனால தான் பேசுறா, ஏன்னா அந்த வைத்தியன் அவனுக்கு அப்புறம் அவதான் இந்த வேலையை பார்க்கனும்னு நினைக்கிறான். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு விட்டுட்டேன். இப்போ அது எதுல கொண்டு வந்து விட்டுருக்குப் பாருங்க. இதெல்லாம் சரிப்படாது. தம்பி மேலு சரியானதும் நீங்க கிளம்புங்க. காலப்போக்குல எல்லாம் சரியாப்போகும்..” என்ற பத்ரனின் நீண்ட உரையில் புகழின் மனம் சமாதானம் ஆகவில்லை…

அன்று அவன் உறங்கியதாக நினைத்துக் கொண்டு அரூபியும் வைத்தியரும் பேசியதைக் கேட்ட பிறகு தான் அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். தான் போகும் போது தன் மனைவியாக அவள் கூடவே வரவேண்டும் என்பதில் உறுதியாகவும் இருந்தான். இதில் பத்ரன் பேசியதைக் கேட்டதும் ஏனோ எரிச்சல் வந்தது.

அதே எரிச்சலில், “பெரியவரே நீங்க உங்க பேத்திக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்.

அப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு என் கூட மட்டும் தான் இருக்கும். அவ என்கூட மட்டும் தான் மகிழ்ச்சியா இருப்பா. ஏன்னாஅ வளுக்கும் என்னைப் பிடிக்கும் என்னை மட்டும் தான் பிடிக்கும்…” என்றான் கர்வமாய்…

சிறியவனின் பேச்சில் கோபமெல்லாம் வரவில்லை அவருக்கு, மாறாக ஒரு புன்னகை அதுவும் சட்டென மறைந்து உதடுகள் ஏளனமாக வளைந்தது. அதில் அவன் புருவம் சுருங்க,

“எனக்குத் தெரியும்” என் பேத்திக்கும் உன்மேல விருப்பம் இருக்குன்னு எனக்குத் தெரியும். தெரிஞ்சும் எதுக்கு அவளை அங்கே போகவர சம்மதிச்சேன்னு தெரியுமா…? அவ என் பேத்தி, என்னை மீறி போகமாட்டா. என்னை எங்கேயும் தலை குனிய விடமாட்டா. எனக்காக எதையும் செய்வா…” என்றார் அவனுக்கு மிஞ்சிய கர்வத்துடன்…

பெரியவர் பேசபேச புகழுக்கு மனம் ஏதோ போல் ஆகிவிட்டது. இத்தனை பேர், புகழ், பணம் என சம்பாதித்து என்ன பயன் ஒரு பெண்ணை விரும்பி தன் பின்னால் வரவைக்க முடியவில்லையே என அறிந்து துவண்டு போனான்…

அவர் சொல்வது உண்மைதான். அன்று அந்த தபேராவிடம் இதையேதானே அவளும் சொன்னாள். என்ன கொஞ்சம் மாற்றி. ஆனால், செய்தி ஒன்றுதானே. இப்போது என்ன செய்ய, நான் என்ன செய்ய…? ரூபி இல்லாமல் என்னால் இருக்க முடியுமா…?

முடியாது தான் கண்டிப்பா முடியாது அதற்கு இந்த இரண்டு நாட்களே சாட்சி. ஒன்னும் சொல்லத் தெரியாமல், கொட்டும்அ ருவியையேப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்…
அவனின் நிலையைப் பார்த்தவருக்கு பரிதாபமாக இருந்தது. ஏனோ அவருக்குப் புகழைப் பிடிக்கத்தான் செய்தது. ஏனென்றுத் தெரியவில்லை. ஒருவேளைத் தன் பேத்திக்கு பிடித்ததனால் கூட இருக்கலாம்.

அமைதியாக இருந்தவனின் அருகே வந்தவர், “தம்பி என் பேத்தி இல்லாம உங்களால இருக்க முடியும்னு நம்பிக்கை இருக்கா, யோசிச்சு சொல்லுங்க இது சட்டுன்னு எடுக்கக் கூடிய முடிவு இல்ல, வாழ்க்கையைப் பத்தின முடிவு…” என்றார் நிதானமாய்…

அவர் தனக்கு ஏதோ ஒருவகையில் உதவப் போகிறார் என்று புகழின் உள்மனது சொல்ல, அவரின் கையைப்பிடித்து, “என்னோட வாழ்க்கையில என் மனசுக்குள்ள வந்த முதல் பொண்ணும், கடைசி பொண்ணும் உங்கப் பேத்தி மட்டும் தான்… நானும் ரெண்டு பொண்ணுங்களோட பிறந்து வளர்ந்திருக்கேன். தப்பான எந்த எண்ணமும் என் மனசுல இல்ல…”

“ரூபி என் மனைவியா என் வாழ்க்கை முழுசும் வரனும்னு நினைக்கிறேன். என் உயிரைக் காப்பாத்திக் கொடுத்திருக்கா, இந்த உயிர்அவளுக்கு மட்டும்தான் சொந்தம். அவ என் வாழ்க்கையில் இல்லன்னா, நானும் இருக்கமாட்டேன்” என்றான் உருக்கமாக…
புகழின் பேச்சைக் கேட்ட பெரியவரின் முகத்தில் சிந்தனையின் சாயல். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அவனும், அவரின் அமைதியைக் கலைக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அவரேப் பேசினார். “தம்பி அம்மாயி இஷ்டம்தான் என்னோட விருப்பம், அவளுக்கு நான் மட்டும்தான் உலகமே. என்னைச் சுத்தியே தான் அவளோட ஒவ்வொரு பொழுதும் போகும். சொந்தபந்தம்னு நெறய இருந்தாலும் என்னை விட்டா அவளுக்கு அன்பைக் காட்ட யாரும் இல்ல…”
“பாசத்துக்கு ஏங்குற புள்ள தம்பி அவ. அப்படிபட்டவளுக்கு அவளை அன்பா அரவனைப்பா கடைசி வரைக்கும் உண்மையா இருக்குற ஒரு உறவைக் கொடுக்கனும்னு தான் எனக்கு விருப்பமே. அப்படி ஒரு ஆளைத்தான் நான் தேடுறேன்…”
“எங்க சனத்துல எத்தனையோ பேரு கேட்டு வந்தாங்கதான், ஆனால் எனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல, இந்த வைத்தியரும் அம்மாயி மேல அம்புட்டு பாசமா இருக்கான். அவளும் அப்படித்தான். நான் கூட சொன்னேன். என்ன மாதிரியே நீயும் என் பேத்தி மேல உசுரா இருக்க நீயேக் கட்டிக்கோன்னு…” என்றதும் அதுவரை அவரின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்தவன், கடைசிப் பேச்சைக் கேட்டு சட்டென்று எழுந்துவிட்டான்…

“என்னப் பேச்சு இது…” என்பதை முகத்தில் காட்டியபடி, அவரை முறைத்தும் பார்த்தான் புகழ்… அவனது செய்கையில் சிரித்தவர், மீண்டும் அவனை அமரவைத்து விட்டு, “முழுசா சொல்றதுக்குள்ள என்ன அவசரம்… அவசரம் ஆபத்து. முடிஞ்சவரை பொறுமையா இருக்கக் கத்துக்கோங்க…” என்று அவனுக்கு குட்டு வைத்தவர், பேச்சைத் தொடர்ந்தார்…

“நான் சொன்னதும் அவருக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும் போல, நீங்க என்ன நினைச்சுட்டு இப்படி பேசுறீங்கன்னுத் தெரியல. அவ சின்னப் பொண்ணு. என் வயசு என்ன…? அவ வயசு என்ன…? என் மக வயசு அவளுக்கு, அவளைப் போய் நீங்க எப்படி அப்படி சொல்றீங்கன்னு என் கூட சண்டை போட்டுட்டான். அவன் அப்படி பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. அதுக்குப் பிறகு இதைப் பத்தி பேசவே இல்ல…”
“எனக்கு அம்மாயி சந்தோசம் தான் முக்கியம்னு உனக்கு கட்டிக்கொடுக்க நினைச்சாலும் முடியாது. ஏன்னா இங்க இருக்குற மக்கள் அதுக்கு விடமாட்டாங்க. இங்க இருக்குற கட்டுப்பாடுகள் அப்படி. நானும் அதுல ஊறிப் போனதுனால தான் யோசிக்கிறேன். என்னால என் பேத்திக்கு ஒரு அசிங்கத்தைக் கொடுக்க முடியாது. அதுக்கு அவளையும் கொன்னுட்டு நானும் செத்துடலாம்…” என்றவரின் கைகளைப் பிடித்தவன்,

“ஐயா எதுக்கு இப்படி யோசிக்குறீங்க. இப்போ நான் என்ன செய்யனும், அதை மட்டும் சொல்லுங்க போதும். நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். ஆனா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நினைச்சு முடிவெடுத்து அதுக்குப் பிறகு சொல்லுங்க…” என்றான் புகழ்…

“தம்பி என் பேத்தியை இந்த மக்கள் ராணி மாதிரி உங்ககூட அனுப்பனும். அவங்களே இந்த முடிவை எடுக்கனும் அதுக்கு நீங்க என்ன செய்ய முடியுமோ செய்யுங்க…” என்றுவிட்டார்…

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசித்தவனின் முகம் பிரகாசமாகியது. “எஸ்… எஸ்…” என்றுத் தனக்குத்தானே சொல்லியவன் எதிரே இருந்தவரின் கையைபிடித்து, “இந்த ஊர் மக்கள் உங்கப் பேத்தியை, அவங்களா வந்து என்னோட மகாராணியா அனுப்பி வைப்பாங்க. அதுக்கு நான் முழு உத்திரவாதம் கொடுக்குறேன். கண்டிப்பா நடக்கும். அதுவரைக்கும் இதைப் பத்தி நீங்க ரூபிக்கிட்ட சொல்ல வேண்டாம். நான் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன். மூனே மாசம் தான் டைம் அதுக்குள்ள இங்க எல்லாத்தையும் சரி பண்ணிட்டு உங்க பேத்தியைக் கூப்பிட்டு போகணும்” என்றான் மகிழ்ச்சியாக.

புகழின் சந்தோசம் பெரியவரையும் தொற்றிக் கொள்ள, அவனின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவர், கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு, வைத்தியசாலையில் விட்டுவிட்டுக் கிளம்பினார்.

சற்று நேரத்தில் வந்த தபேராவிடம், தன்னுடையத் திட்டங்களைக் கூறியவன், சிறுமலையில் அதற்கான ஏற்பாடுகளை அவரைச் செய்ய சொல்லிவிட்டு, அடுத்த இரண்டாம் நாள் வெற்றியை வரவைத்து, கோவைக்கு கிளம்பியிருந்தான். அவனது ரூபியிடம் சொல்லாமலே..
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
286
Super super kka..
 
Top