• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சல்மா அம்ஜத் கான் - என் உயிரின் உயிரே

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
என் உயிரின் உயிரே

குழந்தை வரத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இக்கதை சமர்ப்பணம்...

அனைவரும் பயபக்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த கோவிலில் அவள் மட்டும் அழுதுகொண்டே வெளியேறினாள்.

அவள் நிலையறிந்த மனோ, அவளை ஆறுதல் படுத்த வெளியேறியபோது அவள் ஆட்டோவில் ஏறி சென்றிருந்தாள்.

கடவுளிடம் தன் எண்ணத்தை மனதில் வேண்டியவன் தன் பைக்கை வீட்டை நோக்கி பறக்க விட்டான்.

மனோ உள்ளே நுழைந்த போது அவனை ஆட்டி வைத்தது அவளது அழுகை.

அமைதியாய் அவளருகே சென்றவன் அவள் தோளை ஆதரவாகப் பற்றினான்.

" திவி, ப்ளீஸ்மா. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. அதையெல்லாம் நீ உன் தலையில எடுத்துக்காதமா.... நீ இப்படி அழுதா பிபி ஏறி திரும்ப மயங்கிருவமா"

" ப்ளீஸ், மனோ. என்ன கொஞ்சம் தனியா விடு. என்னால முடியலடா. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா...." என மீண்டும் அழ தொடங்கி விட்டாள்.

" அவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும். நீ ஏன் அதை எல்லாம் காதுல வாங்குற. நீ என்னோட தேவதைடி. நீதான்டி என்னோட குழந்தை. நமக்கு குழந்தையே பிறக்காட்டியும் பரவாயில்லைடி. எனக்கு நீ மட்டும் போதும்டி."

அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனை கட்டிக்கொண்டு மீண்டும் கதற ஆரம்பித்தாள்.

" ஏன் மனோ நமக்கு மட்டும் இப்படி இருக்கு. நமக்கு தான் எந்த பிரச்சனையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்கல. அப்புறம் ஏன் நமக்கு மட்டும் குழந்தை பிறக்க மாட்டேங்குது. நாம அப்படி என்னடா தப்பு பண்ணுனோம்.

யாரை பார்த்தாலும் ஏதாவது நல்ல செய்தி இருக்கான்னு தான் கேட்குறாங்க. இல்லன்னு சொன்னா உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் இருக்கும்லன்னு நக்கலா என்னை பாக்குறாங்க.

எனக்கு எப்படி இருக்கும்னு தெரியுமா...

இதுக்காகத்தான் வெளிய எங்கேயுமே போறது இல்ல. சரி மனசு அமைதியா இருக்குமேன்னு தான் கோயிலுக்கு போனேன்.

அங்க உங்க பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா.... 'நம்ம அசோக் பொண்டாட்டி அவளுக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்ததும் அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டு விலகிட்டா... அவள மாதிரியே எல்லாரும் குணம் படைத்தவர்களாக இருந்திற முடியுமா... எல்லாம் என் பேரனோட தலையெழுத்து. இந்த மலட்டு சிறுக்கி கிட்ட வந்து விழுகனும்னு இருக்கு.' அப்படின்னு தலையில அடிச்சுகிட்டாங்க.

நான் எப்படிடா உன்னை வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி தர முடியும்.

ஒருவேளை நீயும் அப்படி நினைக்கிறியா..." என்றாள், திவ்யா. அவன் உணர்ச்சிகளை அறியாதவளாய்.

" ஏய் லூசு அந்த லூசு சொல்லுதுன்னு இந்த லூசு என்கிட்ட வந்து கேக்குது பாரு. போடி...." என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

"இல்ல மனு. அது தான் சரியா இருக்கும். பேசாம நான் உன் லைஃப்ல இருந்து போயிடுறேன். நீ உனக்குன்னு ஒரு நல்ல லைப் ஸ்டார்ட் பண்ணி சந்தோஷமா இரு..." என புலம்ப மனோவின் கைகள் வெறித்தனமாக திவ்யாவை கன்னத்தில் பதிந்தன.

" என்னடி ஓவரா பேசுற. நான் அமைதியா இருக்கேன்னு சீண்டி பாக்குறியா.

உனக்கு மட்டும்தான் வலியா. எனக்கு இல்லையா. உன்னை மட்டும்தான் பேசுறாங்கன்னு நீ நினைக்கிறாயா. என்ன பேச மாட்டாங்களா.

உனக்கு என்னடி தெரியும். வெளிய போக முடியல. பசங்க எல்லாம் என்னை பார்த்து கேக்குறாங்க.

' மச்சி ட்ரீட் எதுவும் வைக்கிற ஐடியா இருக்கா இல்லையா. எவ்ளோ நாள் தான் டா பொண்டாட்டியோட டூயட் பாடுவ. காலாகாலத்துல குழந்தை பெத்துக்கணும்னு'

அவன்கிட்ட போய் சொல்ல முடியுமா. நான் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா என்னால முடியலன்னு.

சிரிச்சுட்டே 'ரெண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்'ன்னு சொல்லி தான் சமாளிக்கிறேன்.

நீயாவது பரவாயில்லை. எல்லாரும் வெளியே கேக்குறாங்க ன்னு வீட்டுக்குள்ள அடைஞ்சுக்குற.

என்னால அதை கூட பண்ண முடியலை. ஏன்னா , நான் சம்பாதிச்சா தான் என் பொண்டாட்டிய காப்பாத்த முடியும்.

இந்த வேலையை என்னமோ புடிச்சு தான் சேர்ந்தேன். ஆனா இப்ப எல்லாம் ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கு.

வேலைக்கு போனால் அங்கே டாக்டர் என்ன பார்த்து கேட்கிறான் 'என்ன மிஸ்டர் மனோகரன், ஒரு மெடிகல் ரெப்ரசென்டடிவ் ஆக இருந்தும் இந்த விஷயத்துல அலட்சியம் காட்டுங்களேன்'னு ஒவ்வொருவரும் டாக்டரும் ஒவ்வொரு கைனகாலஜிஸ்ட்டா ரெகமண்ட் பண்றாங்க.

நாமளும் எத்தனை ஹால்பிட்டல் தான் ஏறி இறங்குறது.

சரின்னு ஸ்டாக்கிஸ்ட் பாயிண்ட் போனா அவன் என்கிட்ட கேட்கிறான்

'மனோ இந்த கம்பெனியோட டாப்லெட் ட்ரை பண்றீங்களா. உங்களுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும்னு.'

என் வாய்ல வண்ண வண்ணமா வார்த்தை வரும். ஆனா அவன் கிட்ட சொல்ல முடியாது. ஏன்னா அவன் ஆர்டர் எனக்கு முக்கியம்.

அதுலயும் கூட ஒர்க் பண்ற பக்கிங்க இருக்கே ' நீ வெள்ளை பூடு சாப்பிட்டு பாரேன். பாதாம் சாப்பிட்டு பாரேன். பாய்சன் சாப்பிட்டு பாரேன்'ன்னு அட்வைஸ்.

அதுலயும் ஒருத்தன் முதல் இரவுக்கு டிப்ஸ் கொடுக்கிற மாதிரி பச்சையா பேசுறான்.அவன் கிட்டலா நான் இதுவரை பேசுனதே இல்லை. அவன்கிட்ட இருந்து இப்படி கேக்கும் போது எப்படி இருக்கும்னு தெரியுமா.... ச்சீ.. அதை சொல்ல கூட முடியல.

சரின்னு இதையெல்லாம் சமாளிச்சா மேனேஜர் வர்றான், "மனோகரன் உங்களுக்கு ஏதாவது ஆக்சிடென்ட் ஆச்சா....???? இல்ல அடி கிடி ஏதும் பட்டதா.... நாம வேணா யாருக்கும் தெரியாம ஒரு டெஸ்ட் பன்னி பாத்துருவோமா... எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு'ன்னு.

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியுமா உனக்கு.

எல்லாத்தையும் கேட்டுட்டு பல்ல கடுச்சுட்டு தானே உட்கார்ந்து இருக்கேன்.

இந்த ரெண்டு வருஷத்துல உன் கிட்ட ஏதாவது சொல்லி இருக்கேனா. எனக்கு எப்படி வலிச்சுதுன்னு உனக்கு தெரியுமாடி.

சிலபேரு நாக்க புடுங்கிட்டு சாகுற மாதிரி பேசுவானுங்க எல்லாத்தையும் கேட்டுட்டு , எங்க உன் முன்னாடி அழுதா நீ பலவீனமாய்ருவியோன்னு பாத்ரூம்லயும் நீ தூங்குனதுக்கப்பறம் மொட்ட மாடிலயும் போய் அழுவேன்டி.

இதெல்லாம் நடந்தாலும் உன்னோட முகம் மட்டும் தான்டி என்னை உயிர்ப்போடு வச்சிருக்கு.

நீ என்னை, உன்னை விட்டுட்டு போய் வேற வாழ்க்கையை ஆரம்பிக்க சொல்ற. என்னோட வாழ்க்கையே நீதானடி.

நானும் எவ்வளவு நாள் தாண்டி வலிக்காத மாதிரியே நடிக்கிறது. எனக்கும் குழந்தை வேணும். நான், நீ, நம்ம குழந்தைன்னு வாழ தாண்டி எனக்கும் ஆசை.

என்னையும் ஒரு குழந்தை அப்பானு கூப்பிடாதா. நான் வெளியே போய்ட்டு வரும்போது என் காலை கட்டி பிடிச்சுட்டு 'அப்பா ரவுண்டு'ன்னு கேக்காதான்னு ஏக்கமா இருக்கும்.

வெளிய ஏதாவது குழந்தைய அதோட அப்பாவோட பார்த்த அந்த அப்பா இடத்துல நான் இருக்க கூடாதான்னு அவங்க என் கண்ண விட்டு போற வரைக்கும் அவங்களை தான்டி பார்த்துட்டே இருப்பேன்.

ஆனால் அந்த குழந்தை உன்னை இழந்தால் தான் வரும்னா, அப்படிப்பட்ட குழந்தையே எனக்கு தேவையில்லைடி.

எனக்கு நீ போதும்டி. நீ மட்டும் போதும்." என அழுது கொண்டே அவனின் கைகள் அவள் கன்னங்களை சிறைபிடிக்க, அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

" சாரிடா உன்ன பத்தி நான் யோசிக்கவே இல்ல. நான் என்னை பத்தி மட்டும் யோசிச்சு ,முட்டாள் தனமா நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சுடுடா." என அவன் மார்பின் மேலும் புதைய,

அவள் தலையை கோதியவாறு,
"ஸ்ஸ்ஸ்... ப்ளீஸ்மா அழாதே."என அவளை ஆசுவாசப் படுத்தினான்.

" ஏன்டா,நமக்கு மட்டும் குழந்தையே பிறக்க மாட்டேங்குது." கேட்டாள்,விசும்பலுடன்.

அவளை மேலும் இறுக்கி, " ஏண்டி கவலை படற. நீ வேணா பாரு உன்ன மாதிரியே ஒரு குட்டி தேவதை நமக்காக வருவா." என கூறியவன், திடீரென அவள் சத்தம் முற்றிலும் நின்றதை உணர்ந்து அவளை அவனிடமிருந்து பிரிக்க அவள் கீழே சரிந்தாள்.

திவ்யா கண் முழிக்கும் பொழுது அவள் இருந்த இடத்தை பார்த்து குழம்பினாள்.

" சாரி மனு. நீ என்னை அழுது பீபி ஏத்திக்காதன்னு சொல்லியும் என்னால நீ இங்க வர வேண்டியதா போச்சு டா...." என அவனோ ஒரு குறுஞ்சிரிப்புடன், அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன்,

" இந்த தடவை உன்னால இல்ல. என் குட்டி தேவதையால வந்திருக்கோம்." என அவள் அடி வயிற்றில் கை வைத்து அவள் முகம் காண நிமிர்ந்தான்.

அவள் சிலையாக நிற்க, அவள் உதடுகளோ இவன் கூறியது உண்மையா பொய்யா, சிரிக்க வா வேண்டாமா என குழம்ப, அவள் மூக்கு உணர்ச்சியின் பிடியில் துடிக்க, அவள் கண்களோ நீரை சுரந்துகொண்டே இருந்தது.

அவன் எழுந்து அவள் நெற்றியில் முத்தமிட அவன் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டாள்.

" ஹாப்பியா..." என விலகி நின்று கேட்க, அவனை தன் அருகில் அமர வைத்தவள்,

" என் உயிரின்..." என்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு,

" உயிரே என் கிட்ட வந்து விட்டது. இனி எப்பவும் ஹேப்பி தான்." என்றவளின் விரல்கள் மென்மையாக அவளது அடி வயிற்றை வருடின.

அவளின் உயிரின் உயிரே அவளிடம் சேர்ந்துவிட்டது என்ற திருப்தியில் அவர்களின் வலிகள் மறைந்து போகும்.

வலிகள் மறைந்து போய்விடும் ஆனால் அது ஏற்படுத்திய காயங்களின் தழும்புகள் மறையாது.

மருந்தாய் இருக்க முயற்சி செய்யுங்கள்..... அதை மேலும் கீறி விடும் கத்தியாய் இருந்து விடாதீர்கள்....

***

என்றும் அன்புடன் ,
சல்மா அம்ஜத் கான்....
 
Top