• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதனைப் பெண்கள்-நந்தினி மோகனமுருகன்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566


பத்மாசினி:




சுதந்திர போராட்டத்தில் தன் குழந்தைகளையே பலியிட்ட ஒரு வீரத்தாயின் வரலாறு இன்று பலருக்கும் தெரியாது. அந்த தாயின் பெயர் பத்மாசனி. விடுதலைக்காக சிறை சென்ற முதல் பெண்.



கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக கணவன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்.



பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றார். இந்தியா முழுவதும் விடுதலை அக்னி ஜுவாலையில் எரிகிறது. இந்தியப் பெண்களே! இந்த அக்னியில் நீங்களும் இணைந்திடுங்கள் என்றே முழக்கமிட்டார்.



மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பத்மாசனி சிறை சென்று உணவருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். கர்ப்பவதிக்கான ஊட்டச்சத்து உணவு இல்லாததாலும் உடல்நிலை மோசமாக இருந்ததாலும் கர்ப்பம் கலைந்தது.



சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார். பத்மாசனி பேசும் போது அனல் தெறிக்கும். இவரின் பேச்சு என்றாலே அக்கம் பக்க ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அவரது குரல் வெண்கலம் போல் கணீரென்று இருக்கும். பேச்சில் உணர்ச்சியும் வேகமும் குவிந்துக் கிடக்கும். மரக்கட்டைக் கூட வீறுகொண்டு எழும். தொண்டர்கள் பாதி கூட்டத்திலே ஆவேசமாக எழுந்து, இப்போதே வெள்ளையர்களை கூண்டோடு அழித்துவிடுகிறோம் என்று புறப்படுவார்கள். அத்தகைய வீரம் அவரது பேச்சில் இருந்தது.



நாட்டின் விடுதலையை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தனை செய்யாத பத்மாசனிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்திருந்தன. தேச சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அவருக்கு தன் செல்வங்களை கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுமே ஒரு வயதை அடையும் முன்னே இறந்து போயிருந்தனர்.



அப்போது மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார். சுப்பிரமணியசிவா நடையாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்த போது கரு எட்டு மாதமாக வளர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் குழந்தைப்பிறக்கலாம் என்ற நிலை. தலைவர்கள் எல்லாம் தடுத்தார்கள். நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்கள்.



விடுதலையைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று கலந்து கொண்டார். வழிநெடுக சுதந்திரப் பிரச்சாரம், பாரதியார் பாடல்கள், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளின் வரலாறு என்று நடைப் பயணம் முழுவதும் சுதந்திர வேட்கை ஜோதி சுடர்விட்டு எரிந்தது. எட்டு மாத கர்ப்பத்துடன் நாற்பத்தி எட்டு மைல் தூரம் நடந்தே வந்தார்.



அந்த நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. கடுமையான குளிர், பாதையோரம் தங்குவதற்கு நல்ல இடம் வேறு இல்லை. பிறந்த மூன்றாவது நாளில் அந்த குழந்தையும் இறந்தது. அம்மையாரின் உடலும் மோசமாக பாதிக்கப் பட்டது. ஓய்வுக்காக உடல் கெஞ்சத் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்தார்.



உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கினார்.விடுதலைக்காகவே தனது மூன்று குழந்தைகளையும் பலிகொடுத்த இந்த தாய் இந்தியாவின் விடுதலையை பார்க்காமலே இந்த மண்ணை விட்டு மறைந்தார். தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் நாட்டைப்பற்றியே சிந்தித்த இவர் கடைசியில் கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டார். 14. 01. 1936 அன்று மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றார்.



ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்னும் உணர்வு மிக முக்கியமான ஒன்று.



அம்மா..!

ஒவ்வொரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்க முடியாது. கேட்ட உடனே மனம் குளிரும் சொல் இது. மனதெல்லாம் ஆனந்தம் பொங்கி வழிந்து, முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும் ஒரு உன்னத வார்த்தை.



பெண்ணிற்கு மட்டுமே அந்த கடவுள் அளித்திருக்கும் ஈடு இணையற்ற வரம் தாய்மை! தனக்கு பின் தனது குடும்பத்தின் வாரிசை உருவாக்கி அதற்க்கு உயிரும் உருவமும் கொடுத்து உருவாக்குவது பெண்கள் மட்டுமே.



உண்மையில் பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். தாய்மைப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! கஷ்டப்பட்டு பத்து மாதங்கள் சுமந்து பிரசவித்த குழந்தையை பார்த்த அந்த நிமிடம், தான் அனுபவித்த கஷ்டமெல்லாம் மறந்து ஆனந்த கண்ணீர் எட்டிபார்க்கும் தருணம் அது.



அப்படிப்பட்ட வலியையும் தான் பத்து மாதம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த குழந்தையை பற்றியும் பொருட்படுத்தாமல் அவர்களை விட நாடு தான் முக்கியம் என்று எண்ணிய பத்மாசினி தாயாரின் உள்ளத்தில் தேசப் பற்று எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தால் உடல் சிலிற்கிறது.

இந்திய சுதந்திரம், கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த மென்மையான அகிம்சை வழிப் போராட்டங்களால், பெறப்பட்டதல்ல. லட்சக்கணக்கான, ஆண், பெண்களின் உயிரை விலையாய் கொடுத்துப் பெறப்பட்டதாகும்.



மூல்மதி அம்மையார் :



'பிஸ்மில்' என்ற புனைப்பெயரில் எழுச்சிமிக்க எழுத்துக்களை தந்த புரட்சிக் கவிஞர் ராம் பிரசாத்.



இவரது தாய் தான், மூல்மதி அம்மையார்.ரயில் கொள்ளை வழக்கில் பிடிபட்ட, ராம் பிரசாத் பிஸ்மில் உட்பட, நான்கு பேருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள், தன் மகனை கடைசி முறையாக காண்பதற்கு, ராம் பிரசாத்தின் தாய் மூல்மதி சிறைக்கு வந்தார். தாயை இனிமேல் காண இயலாது என்ற எண்ணத்தில், கவிஞனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பார்த்த அன்னை பதறினாள்... வேதனையில் விளைந்த பதற்றமல்ல அது.'மகனே, ஏன் கண் கலங்குகிறாய். ஒரு காவிய நாயகனைப் பெற்றிருக்கிறேன் என்ற பெருமையில் அல்லவா திளைத்திருக்கிறேன்.



என் தவப்புதல்வனின் பெயரை உச்சரிக்கும் போதே, வெள்ளையனின் உடல் நடுங்குகிறது என்ற பேரானந்தத்தில் நீந்துகிறேன். லட்சிய அன்னை'ஆனால், மரணத்துக்கு என் வீரமகன் அஞ்சுவான் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. அழுகையோடு சாவைச் சந்திப்பவன்; புரட்சி நடவடிக்கைகளில் ஏன் ஈடுபட்டாய்?' என்று பொங்கினாள், அந்த புரட்சியாளனைப் பெற்றெடுத்த லட்சிய அன்னை.



'அம்மா, இது மரண பயத்தில் வந்த சோகக் கண்ணீர் இல்லை. வீரம் செறிந்த என் அன்னையை நினைத்து வந்த ஆனந்தக் கண்ணீர்' என்று பதிலளித்த ராம் பிரசாத் பிஸ்மில். துாக்கு தண்டனை நாளில் ஒரு நாயகனாக நெஞ்சுயர்த்தி, 'வந்தே மாதரம்' என்று வீர முழக்கமிட்ட படி, துாக்குக் கயிற்றின் முன் நின்றான். மகனின் வீர மரணத்துக்காக பெருமை கொண்ட அந்தத் தாய், தன் அடுத்த மகனையும் சுதந்திர வேள்வியில் ஈடுபடச் செய்தாள் என்கிறது வரலாறு.



பெற்ற பிள்ளைக்கு சிறு துன்பம் வந்தாலே கலங்கித் துடிக்கும் நாம், ஒரு சராசரித் தாயாக சிந்தித்தோம் என்றால், மூல்மதி அம்மையாரின் தியாகமும், வீர உணர்வும், நாட்டுப்பற்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இப்படி எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் கட்டமைக்கப்பட்டது தான், நம் சுதந்திரம் என்ற உண்மை உணர்வோடு, சுதந்திரத்தைப் போற்றி பாதுகாப்போம்.
 
Top