• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺1

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
இந்த படைப்பு முழுக்க முழுக்க எனது கற்பனையின் உருவாக்கமே....


சாதியில்லா தீபாவளி 1


காட்டூர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம்..இயற்கை அன்னை தன் கொடையால் அந்த கிராமத்தை செழித்து ஓங்க செய்திருந்தாள்..அந்த கிராமத்திலேயே பெரிய வீடுகளில் அதுவும் ஒன்று..சற்றே பழைமை தோய்ந்த வீட்டின் முன் இருந்த திண்ணையில் உட்கார்ந்து கோதுமை புடைத்துக் கொண்டிருந்தாள் அன்னம்..முகத்தில் சோகம் பரவிக் கிடந்தது..

வீட்டின் முன் களத்தில் ஒருபுறம் நெல் கொட்டப்பட்டு கிடக்க, மறுபுறம் மிளகாய் காய்ந்து கொண்டிருந்தது..நெல்லை சில பெண்மணிகள் கிளறி விட்டுக் கொண்டிருக்க, வற்றலை சிலர் கோணியில் அள்ளிக் கொண்டிருந்தனர்..வீட்டு கேட்டுக்கு வெளியே நின்ற டெம்போவில் இருந்து நெல் மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தனர்..

அத்தை,......என்ன அத்தை இம்புட்டு வேலைக்காரங்களை வச்சிகிட்டு நீ கோதுமை புடைச்சிட்டு இருக்க..........என்று கேட்டுக் கொண்டே வந்தாள் ராஜேஸ்வரி..

வாடி ஆத்தா, பிள்ளை இல்லாத சூனியத்தை இப்படி ஏதாவது செஞ்சிதானே ஆத்திக்கணும்..சும்மாவே இருந்தா கிருக்கு புடிச்சிருமோன்னு பயமா இருக்குடி..........என்று கூறிய அன்னம் பெரு மூச்சை இழுத்து விட்டாள்..

என்ன அத்தை மச்சான் ஞாபகம் வந்துடுச்சா?........... ராஜி கேட்க,

அவனை நான் எப்போடி மறந்தேன்..ஒரு தடவை என் புள்ளையயும் அவன் பெத்த முத்துகளையும் பார்த்துற மாட்டோமான்னு தானேடி ஒவ்வொரு நிமிஷமும் ஏங்கிட்டு கிடக்கேன்...........என்று சொல்ல மீண்டும் பெருமூச்சு தானாய் உறவாடியது..

ஏன் அத்தை மச்சான் ஃபோன் ஏதாச்சும் பண்ணுமா?........ ராஜி கேட்க,

அப்பா வீம்புதானே புள்ளைக்கும் இருக்கும்..பொறவு எப்படி ஃபோனு பண்ணுவான்..இவுக ரெண்டு பேர் மத்தியில என் பாடுதான் உலையில விழுந்த மீனாட்டம் ஆகி போச்சி......மீண்டும் மீண்டும் அனல் பெருமூச்சு..

ஆனாலும் மச்சான் ரொம்ப மோசம் அத்தை..ஊரை விட்டு போய் பத்து வருஷத்துக்கு மேலாவுது...என்னதேன் மாமா மேல கோவம் இருந்தாலும் உனக்காகவாச்சும் ஒரு போனாச்சும் பண்ணலாம்...ஹும்...எனக்கு எதுக்கு ஊர் வம்பு...ஏதோ மச்சான் பத்தி ஒரு சேதிய தெரிஞ்சி வச்சிகிட்டு உன்கிட்ட சொல்லாம இருக்க மனசு கேட்கல...அதான் வந்தேன்........என்று ராஜி சொன்னதும்,

"அடியேய் என்னடி பயமுறுத்துற, என் புள்ளைக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே",...........பதட்டமான அக்கறையுடன் அவசரமாய் கேட்டாள் அன்னம்..

"அட, அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை...இராணுவமே வந்தாலும் உன் மொவனை எதுவும் பண்ண முடியாது..எல்லாம் நல்ல விசயம் தான்...நம்ம மாரியாத்தா கெழவி பேரன் ராஜவேலு, இருக்கானே...அவனுக்கு இப்போ பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்காம்..ஊர் பூரா கெழவி தம்பட்டம் அடிச்சிட்டு திரியுது",..........என்று ராஜி சொல்ல,

அதுக்கு என்னடி இப்போ..என் புள்ளையை பத்தி கேட்டா நீ அவனை பத்தி பேசுற?...........என்று மகனை நினைத்து விசனப்பட்டாள் அன்னம்...

அய்யோ அதைத்தான் அத்தை சொல்ல வர்றேன்..கொஞ்சம் பொறுமையாத்தேன் கேளேன்.........

வெரசா சொல்லுடி, நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சுக்குதுல்ல........அன்னம்..

"அதான் அத்தை ராஜவேலு வேலைக்கு சேர்ந்துருக்குற கம்பனியில தான் நம்ம இளமாறன் மச்சானும் வேலை செய்யுதாம்..நேத்து மாரியம்மா கெழவி பேரனோட ஃபோன்ல வீடியோ கால் பேசியிருக்கு..ம்ம்ம்ம்...கெழவிக்கு வந்த வாழ்வை பாரேன்",...........என்று ராஜவேல் உள்ள பொறாமையில் இப்போது ராஜி பெருமூச்சை இழுத்து விட்டாள் ..

என்னடி சொல்ற?...என் புள்ளைய ராசவேலு பார்த்தானா?.........

"அட ராசவேலு மட்டும் இல்ல..நேத்து வீடியோ கால் பேசும் போது மாரியம்மா கெழவியும் பார்த்திருக்கு......இன்னிக்கி காத்தால இருந்து ஊர் பூரா இதுதான் சேதியா கெடக்கு...உனக்குத்தேன் தெரியல..என்ன பண்ண அத்தை..நீ பெத்த புள்ளய யார் யாரோ பாக்குறாக..பாவம்..... உனக்குத்தேன் பார்க்க கொடுத்து வைக்கல..அடுத்த மாசம் தீபாவளிக்கு ராஜவேலு ஊருக்கு வாரானாம்..ம்ம்...பாவம் அத்தை நீ இம்புட்டு வசதி இருந்து என்ன பண்ண?..ஒரு நல்ல நாள் விசேசத்தை கூட பெத்த புள்ளைகூட கொண்டாட முடியல.. ம்ம் எனக்கு எதுக்கு ஊர் வம்பு?...என் புள்ளைக என்னய தேடும்..நான் வாரேன்",.......எரிகிற நெஞ்சில் பெட்ரோலை ஊற்றி விட்டு போனாள் ராஜி..சிந்தனையில் ஆழ்ந்தாள் அன்னம்..

சட்டென்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு சிந்தனையோட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் அன்னம் ,
அன்று இளமாறனுக்கு இருபத்தெட்டாவது பிறந்த நாள்...இளமாறன் அன்னம், சொக்கநாதன் தம்பதியினரின் ஒரே தவப்புதல்வன்..அவன் பிறந்தநாளையொட்டி ஊர்க் கோவிலில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் சொக்கநாதன்..அன்னம் மணக்க மணக்க கோழிக்குழம்புடன் வேலையாட்கள் அனைவருக்கும் விருந்து வைத்தாள்...மதியம் சொக்கநாதனும் இளமாறனும் சாப்பிட்டு முடித்திருந்தனர்..அன்னம் கணவனுக்கு வெற்றிலை, பாக்கு மடித்து கொடுத்தாள்....

அன்னம்........ மாறன் சாதகத்தை எடுத்து கொண்டு வா..இன்னைக்கே ஆலமரத்தூர் சோசியர்கிட்ட கொடுத்து பார்த்துருவோம்..வர்ற ஆவணியில மாறன் கல்யாணத்தை முடிச்சிடலாம்............என்றார் சொக்கர்..

திடுக்கிட்டு கேட்டான் மாறன்,
இப்போ என்னப்பா கல்யாணத்துக்கு அவசரம்?.............

அவசரமா,.... ஏலேய், உன் சோட்டு பயலுக ரெண்டு பிள்ளைக்கு தகப்பனாயிட்டாய்ங்க,..ஆக வேண்டிய நேரத்துல கல்யாணம் ஆகியிருந்தா இப்போ நாலு பிள்ளைக்கு தகப்பன் ஆயிருப்பே..இப்போவே லேட்டுங்குறேன்................ சொக்கநாதன்...

அது சரி, கல்யாணம்ன்னா பொண்ணு பார்க்க வேண்டாமா?..............மாறன்..

எதுக்குடா?..அதேன் என் தங்கச்சி மொவ மலர்க்கொடி இருக்கால்ல.......என்று சொக்கர் பேசி வாய் மூடும் முன்,

மலரா........என்றான் அதிர்ச்சியாக..

ஆமா...நீயும் அவளோட ஒண்ணும் மண்ணுமா பழகிட்டு தான இருக்க... பொறவு என்ன?...........சாதாரணமாக கேட்டார் சொக்கர்..

அப்பா எனக்கு மலரை பிடிக்கும்..ஒரு ஃப்ரெண்ட்டா பிடிக்கும்..அவளை நான் எப்பவுமே அந்த மாதிரி நினைச்சி பார்த்ததில்லை.............மாறன்..

அப்போ இனி நினைச்சி பாரு........ சொக்கர்..

முடியாதுப்பா அவளை எப்பவும் அப்படி என்னால நினைச்சி பார்க்க முடியாது.......என்றான் மாறன்..

சற்று நேரம் அமைதி காத்தார் சொக்கநாதன்..

ஏய் அன்னம்,...இவன் சாதகத்தை கொண்டு வா......நம்ம தரகன் வைத்தியநாதன்கிட்ட கொடுத்து ஒரு நல்ல பொண்ணா பார்க்க சொல்றேன்.......என்றார் சொக்கநாதன்...

அம்மா ஒரு நிமிஷம் இருங்க,......என்று தாயை நிறுத்தியவன், தந்தையிடம் சொன்னான்,

எனக்கு நான் ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டேன்........என்று..

அதிர்ந்தார் சொக்கநாதன்..மனைவியை பார்த்து முறைத்தார்...அன்னத்தின் கைகள் நடுங்க தொடங்கிவிட்டன..ஏதோ விபரீதம் நிகழ போவதுபோல் ஒரு பிரமை மனதை ஆட்கொண்டது..

என்னடி பேசுறான் இவன்..எல்லாம் உனக்கு தெரிஞ்சுதான் நடக்குதா............ பொங்கினார் சொக்கநாதன்...

அம்மாவுக்கு எதுவும் தெரியாது..இது என் சொந்த முடிவு.......நிமிர்ந்து நின்றான் மாறன்..

தகப்பனும் மகனும் நேர் புள்ளியில் பார்வைகளை பரிமாறி கொண்டனர்..இருவர் முகத்திலும் பயம் இல்லை..மகனுக்காக இறங்கி வந்தார்
சொக்கநாதன்...

யாருடா அது?..நீ பிடிச்சிருக்குற பொண்ணு..சொல்லு..நம்ம அந்தஸ்துக்கு ஒத்துவருதான்னு பார்ப்போம்...........முறுக்கு குறையாமல் கம்பீரமாக கேட்டார்..

எழிலரசி...........என்றான் அவன்..அன்னத்தின் இதயம் நொறுங்காத குறை...பயத்தில் உறைந்து விறைத்தே போனாள்..

எழிலரசியா?...யாரு நம்ம கண்ணப்பன் மொவளா?.........சொக்கநாதன்...

இல்ல,.......நம்ம ஆட்டுப்பட்டி வச்சிருக்கிற முருகேசன் மகள் எழிலரசி ..........என்று மாறன் சொன்னதுதான் தாமதம், வீறு கொண்டெழுந்தார் சொக்கநாதன்...

யாரு? அந்த கீழ்சாதிக்கார பொண்ணா?..ஏலேய், உனக்கு கிறுக்கு புடிச்சிருச்சா..அவ என்ன சாதி நீ என்ன சாதிலே..அறிவு கெட்ட பயலே.................என்று சொக்கர் சொல்லி முடிக்கும் முன்,

ரெண்டு பேரும் மனுஷ சாதி..யாரும் இங்கே கீழ்சாதி இல்லப்பா..பூமியில பிறக்கிற எல்லா உசிரும் இங்கே ஒண்ணுதான்........என்று குரல் உயர்த்தினான் மாறன்..

நீ பேசலலே..அந்த சிறுக்கி.......என்று தகப்பன் ஆரம்பிக்கும் முன் மகன் முடித்தான்..

உங்க மருமகளை நீங்களே தப்பா பேசாதீகப்பா..அப்புறம் பொறவு ஃபீல் பண்ணுவீக........என்று..

இதுக்கு தாண்டி இந்த பயல வெளியூர் அனுப்பி மேல் படிப்பு படிக்க வைக்க வேணாம்னு சொன்னேன்..கேட்டியா..இப்போ என்ன பண்ணிட்டு வந்து நிக்கிறான் பாரு..........அன்னத்திடம் எகிறிய சொக்கநாதன், மகனிடம் சொன்னார்,

ஏலேய், இந்த சொக்கநாதன் உசுரோட இருக்கிற வரை நீ அந்த கீழ் சாதிக்காரியை கல்யாணம் பண்றது உன் கனவில் கூட நடக்காது.................சவால் விட்டார் சொக்க நாதன்..

சற்றும் சலனமின்றி நிதானமாக,

இந்த உலகமே எதிர்த்தாலும் எழிலரசியைதான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..அவ வயித்துலதான் எங்க அப்பா சொக்கநாதனோட பேரப்பிள்ளைங்க பொறக்கும்..என் பிள்ளையும் வளர்ந்து வந்து சாதியில்லாத கல்யாணம் பண்ணிக்குவான்..இது அத்தனையும் நீங்க உயிரோட இருக்கும் போதே நடக்கும்...........என்று மாறன் பேசி முடிக்கவும் சொக்கநாதன் அவனை ஓங்கி அறையவும் சரியாக இருந்தது..சற்றே அதிர்ந்த அன்னம் கையில் இருந்த கோதுமை சொளவை தவறவிட்டு நிகழுலகம் திரும்பினாள்..

கோதுமை மணிகள் தரையில் சிதறி தெறித்தது.....

தொடரும்.......

சக்தி.....
 
Top