• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺10

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
செயற்கை கலப்படமில்லாத இயற்கை காற்று, மாலையில் மலர்ந்த மல்லிகையின் வாசனையை வீட்டை சுற்றி பரப்பி கொண்டிருக்க, "நீ அழகா? நான் அழகா?", என்று பூமியில் பூத்திருந்த மல்லிகைக்கும் வானில் பூத்திருந்த நிலவுக்கும் ஆசை யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது..

அந்த வசீகரமான இரவின் இயற்கை சூழ்நிலையை கூட கவனிக்க விடாமல், எழிலின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது சொக்கநாதன் மதியம் பேசி சென்ற கூர்வார்த்தைகள்..எத்தனை கவலைகள் தன்னகத்தில் உறைந்து கிடந்தாலும், வீட்டின் அன்றாட பணிகளில் தன்னிச்சையாக மூழ்கி திளைத்திருக்கும் இல்லத்தரசியின் கைகள்..இங்கும் மூளை ஏதேதோ சிந்தித்து மனம் கவலை தாங்கி தவித்தாலும், எழிலின் கைகள் மட்டும் துணிகளை மடித்து, மாறன் அறையில் இருந்த அலமாரிக்குள் அடுக்கி கொண்டிருந்தது....

அமுதன் கையில் விளையாட்டு பொருளாக இருந்தது கைப்பேசி..ஆனந்தி விளையாட்டாக வரைந்து கொண்டிருந்ததொரு அழகிய ஓவியம்..பிள்ளைகளின் விளையாட்டு அங்கிருந்த மாறனின் கட்டிலில் அரங்கேறிக் கொண்டிருக்க எழில் அறையை ஒழுங்குபடுத்தும் பணியில் மூழ்கியிருந்தாள்..

எழிலு,......எழிலு........அன்பான மொழியில் அழைத்துக் கொண்டே வந்தாள் அன்னம்...

அத்தை...........பதில் குரல் கொடுத்தாள் எழில்..

ஆமா, இந்த பைய மாறன் எங்கே போயிட்டான்?..காத்தால போனவன் இன்னும் வரல..ஃபோன் ஏதாச்சும் பண்ணானா........
அன்னம் கேட்க,

ஆமா,அத்தை, அவங்க ஃப்ரெண்ட்ஸ்ஸை எல்லாம் பார்த்தாங்களாம்..மதியம் ஃப்ரெண்ட்ஸ் கூடவே சாப்பிட்டு ராத்திரிதான் வீட்டுக்கு வருவேன்னு அப்போவே ஃபோன் பண்ணி சொன்னாங்க,..வர்ற நேரம்தான்.........பதில் உரைத்தாள் எழில்..

ஒருமுறை அந்த அறையை சுற்றி பார்த்து விட்டு,
"ஆத்தீ...எம்புட்டு அழகா மாத்திப்புட்ட,..இந்த மாறன், ரூம்ல எதையும் சரியான இடத்தில வைக்க மாட்டான்..போட்டது போட்டபடி கெடக்கும்...நீ எம்புட்டு அலங்காரமாக மாத்திபுட்ட எழில்..இப்போதான் இந்த ரூமே அழகா இருக்கு.. இன்னிக்கு நீ பண்ண சமையலை சாப்பிட்டப்பவே உன் திறமை புரிஞ்சி போச்சிடி...............,தலைகுளிர பனிக்கட்டியை எழில் தலையில் வைத்தாள் அன்னம்",..அன்னத்தின் மனம் படித்தவளாக சிரித்தாள் எழில்..

இந்தாடி எழில்...இன்னிக்கி ராவுக்கு(ராத்திரிக்கு) புள்ளைகளை என்கூட படுக்க வச்சிகிடவா...............அன்பான குழைந்த குரலில் கேட்டாள் அன்னம்..மீண்டும் மர்மமாய் சிரித்தாள் எழில்..

என்னடி இது எதை கேட்டாலும் சிரிக்கிற?........ கேட்டு நின்றாள் அன்னம்..மீண்டும் சிரித்தாள் எழில்..

இந்தா இப்படி என்னை கேலி பண்ணி சிரிச்சா எனக்கு கோபம் வந்துடும்..சொல்லிட்டேன் ஆமா..............சிணுங்கி சொன்னாள் அன்னம்..

அய்யோ, கேலி பண்ணல அத்தை, நீங்க எதுக்கு இப்படி கேட்கிறீங்கன்னு எனக்கு புரியுது...அதான் சிரிச்சேன்.............சொல்லி சன்னமாய் சிரித்தாள் எழில்..

அப்படி என்னடி புரியுது உனக்கு?.........

மெதுவாக அன்னத்தின் காதுக்குள் சொன்னாள் எழில்,
இன்னிக்கு பெரியவங்க பேசினதை அமுதன் அவங்க அப்பாட்ட சொல்லிடுவான்னுதானே பிள்ளைகளை உங்ககூட படுக்க வச்சிகிறேன்னு சொல்றீங்க...............எழில் கேட்க, அசடு வழிய சிரித்தாள் அன்னம்..

ஏண்டி, இல்லன்னா என் பேர புள்ளைகளை என்கூட படுக்க வச்சிக்கணும்ன்னு எனக்கு ஆசை இருக்காதா?..............சொல்லி பாவமாய் முகத்தை வைத்து கொள்ள,

தாராளமா கூட்டிட்டு போங்க அத்தை, நீங்களாச்சி உங்க பேர பிள்ளைகளாச்சி..............அன்னத்தின் உரிமையை அவளுக்கே கொடுத்தாள் எழில்..

கண்ணுகளா,..இன்னிக்கு அப்பத்தா கூட தூங்குறீங்களா..........அன்பாய் குழந்தைகளிடம் கேட்டாள் அன்னம்..

நீங்க அப்பா சொல்ற மாதிரி எங்களுக்கு கதை சொல்வீங்களா..........கேட்டான் அமுதன்..

ம்ம்...உங்க அப்பன் சொல்ற கதையெல்லாம் நான் அவனுக்கு சொல்லிக்கொடுத்ததுதானே.. அப்பத்தாவுக்கு நிறைய கதை தெரியும்...............குழந்தைகள் மனம் கரைத்தாள் அன்னம்..

ம்ம்ஹும்...நான் வரல..அந்த தாத்தா பார்த்தால் திட்டுவாரு.........பயந்தாள் ஆனந்தி..சற்றே முகம் வாடிதான் போனது அனனத்துக்கு.

இனிமேல் புள்ளைககிட்ட கோபமா பேசக்கூடாதுன்னு அவுகள நான் மிரட்டி வச்சிருக்கேன்.தாத்தா எதுவும் சொல்ல மாட்டாக................சமாளித்தாள் அன்னம்..

ஏய் அவரை தாத்தான்னு சொல்லாதடி..நாம அப்படி கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது........தங்கைக்கு எச்சரிக்கை செய்தான் அமுதன்..

அவருக்கு பிடிக்கலைன்னாலும் அவர்தானே நம்ம அப்பாவோட அப்பா..அதை அவரால மாத்த முடியுமா?..அவருக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அவர்தான் நம்ம தாத்தா..அதையும் அவரால மாத்த முடியாது..அப்பா சொல்லியிருக்காங்கல்ல வயசில பெரியவங்களை மரியாதையா பேசணும்..நீயும் இனி தாத்தாவை தாத்தான்னே கூப்பிடு அமுதா..அதுதான் கரெக்ட்..........ஆனந்தி சொல்லி வாய் மூடும் முன் அவளை அள்ளி அணைத்து கொண்டாள் அன்னம்..

எழில்,..பெருமைக்கு சொல்லலடி, பிள்ளைகளை எம்புட்டு நல்லா வளர்த்துருக்க..என் மொவன் ஒரு பொண்ணுக்காக ஊர், உறவு, குடும்பம்ன்னு எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டானே..அப்படி என்ன அவ அவனுக்கு இனிச்சி போயிட்டான்னு பல நாள் நான் உன்னய வசை பாடியிருக்கேன்..ஆனா இப்போதேன் தெரியுது, உன் குணத்தை பார்த்துதேன் என் புள்ள நீதேண் வேணும்ன்னு தவம் கெடந்துருக்கான்............அன்னத்தின் புகழ் மொழி தாக்க வெட்கி போனாள் எழில்..

அவர்கள் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கும் போது அங்கு ஓடி வந்தான் வேலையாள் பாண்டி..

அம்மா,..... அய்யா, நம்ம தெருவுக்கு வந்துட்டாக....... மூச்சிறைக்க சொன்னான்..

சரிலே, நீ போ......என்று அன்னம் கூற சென்றான் பாண்டி.

எழில்...இருட்டிடுச்சி இன்னும் நீ மாடிப்படி இறங்கி கஷ்டப்பட வேணாம்..நானே உனக்கும் மாறனுக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்துடுறேன்................அன்னம் சொல்ல அர்த்தமாய் சிரித்தாள் எழில்..

கவலை படாதீங்க அத்தை..இனிமேல் பெரியவங்க இருக்கும் போது நான் இந்த ரூமை விட்டு வெளியே வரமாட்டேன்..............எழில் சொல்ல நிலைமையை எண்ணி பரிதவித்து போனாள் அன்னம்..பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றாள்..

குழந்தைகளுடன் கதை சொல்லி களித்திருக்கும் போது வீட்டுக்குள் வந்தார் சொக்க நாதன்...அவர் வாசலில் வரும்போதே குழந்தைகளின் பேச்சொலியும் சிரிப்பொலியும் வாசல் தாண்டி ஒலித்தது..உள்ளே வந்தவரின் கண்களை நிறைத்தது அந்த ஆனந்த காட்சி..அன்னத்தின் கழுத்தை கட்டி கொண்டு ஆனந்தி, அன்னத்தை முன்னும் பின்னும் ஊஞ்சலாட்டி கொண்டிருக்க, அமுதன் கால் நீட்டியிருந்த அன்னத்தின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான்..சத்தம் செய்யாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சொக்க நாதன்..வெகு நாட்கள் சூனிய மாயமாய் இருந்த வீட்டுக்குள் சில்லென்ற சிறு குருவிகளின் சங்கீதம் கேட்டு உள்ளுக்குள் பெருகிய சந்தோஷ உணர்வை அணை போட்டு தடுத்தது ஜாதி உணர்வு..அசையாமல் நின்றார்..சொக்க நாதனை பார்த்த ஆனந்தி அன்னத்தை இறுக பற்றிக் கொள்ள, அன்னம் சுதாரித்து நிமிர்ந்து பார்த்தாள்..மதுரை வீரனாய் மிடுக்கு குறையாமல் நின்றார் சொக்கநாதன்..

இந்தா, ஆனந்தி பயப்பட கூடாது..தாத்தா மீசைதேன் அய்யனார் மாதிரி இருக்கும்..ஆனால் தாத்தாவுக்கு பூ போல மனசு.............சொல்லி சொக்க நாதனின் இதயம் வருடினாள் அன்னம்..

ம்ம்க்கும்......தொண்டையை செருமி அன்னம் தாக்கிய பூ போன்ற இதயத்தை நிலை படுத்திக் கொண்டார் சொக்கநாதன்..

குழந்தைகளுக்கு புதிதாய் வாங்கிய விளையாட்டு பொருட்களை கொடுத்து அமர்த்தி விட்டு, வேகமாக சமையலறை புகுந்து கொண்ட அன்னம், கணவனுக்கு பிடித்தமான உணவை உற்சாகமாக பரிமாறினாள்..அன்னத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சொக்க நாதன்..

என்னது இது? கண்ணை சோத்துல வச்சி சாப்பிடுவீகளா??..இப்படி குறுகுறுன்னு பார்க்குறீக..மாறன் வீட்டுக்கு வர்ற நேரம் ஆவுது..சாப்பிடுங்க........வெட்கத்தில் சிவந்து பேசினாள் அந்த அறுபது வயது மூதாட்டி..

ஏண்டி உனக்கு இன்னும் பதினாறு வயசு பொண்ணுன்னு நெனைப்பா?..இவ நேத்து கல்யாணம் பண்ணி வந்த புது பொண்ணு..இவளை பார்க்குறாக...........சலித்துக் கொள்வது போல், மனைவி மேல் உருவான காதலை மறைத்து கொண்ட சொக்கநாதன் சொன்னார்,

நேத்து வரைக்கும் இப்போவோ அப்பாவோன்னு இழுத்துட்டு சீவன்(ஜீவன்) போற மாதிரி படுத்த படுக்கையா கிடந்த..இன்னிக்கு பருவ பொண்ணாட்டம் துள்ளி குதிச்சி வீட்டையே சுத்திட்டு வர்ற...எங்கேயோ இடிக்குதே..ஏதோ தப்பா இருக்கே.............. சந்தேகமாக பார்க்க எச்சில் விழுங்கினாள் அன்னம்..

ஓ...அப்போ அப்படியே படுத்த படுக்கையாக கிடந்து போய் சேர்ந்துடுவேன்...தூக்கி ஊர் சுடுகாட்டில் போட்டுட்டு அடுத்து எவளையாச்சும் கட்டிட்டு வந்துடலாம்னுதேன் இருந்தீகளோ.............லாவகமாக சொக்கநாதனின் பாச உணர்வை தூண்டி, பேச்சை திசை மாற்றினாள் அன்னம்..

என்னடி பொசுக்குன்னு இப்படி பேசிபுட்ட..நான் ஏக பத்தினி விரதன்டி............துடித்து சொன்னார் சொக்கநாதன்..

அப்போ உங்களுக்கு பொறந்த உங்க புள்ள மட்டும் எப்படி இருப்பான்?..காலையில் அந்த புள்ளைக்கிட்ட நெருப்பை அள்ளி கொட்டுற மாதிரி அப்படி பேசிப்புட்டீகளே..நீங்க பேசின வார்த்தையை மாறன் கேட்டா என்ன ஆகும்?................

என்னடி பூச்சாண்டி காட்டுறியா?..உன் மொவன் என் தலையை வாங்கிபுடுவானோ?? இந்தாடி நீயும் அவளும் ஒண்ணா?...........சொன்னவர் தீப்பார்வை பார்க்க,

சரிதேன், தெரியாம பேசிபுட்டேன் சாமி..சாப்பிடுங்க..நேரத்தோடு சாப்பிட்டு தூங்குங்க..இன்னிக்கு என் பேர பிள்ளைக என்கூடதேன் தூங்க போறாக..........தன் மகிழ்ச்சியை கணவனுடன் பகிர்ந்து கொண்டாள் அன்னம்..பகிர்ந்த மகிழ்வை சொக்க நாதன் பெற்றுக் கொண்டாரா? என்பதுதான் சந்தேகம்....

சொக்க நாதன் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே, ரஹீமின்(மாறனின் நண்பன்) பைக்கில் வந்து வீட்டு வாசலில் இறங்கினான் மாறன்..

ஓகே டா, மார்னிங் பார்க்கலாம்.........சொல்லி சென்றான் ரஹீம்..மாறன் வீட்டுக்குள் நுழைய,
ஹாலில் தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் சொக்கநாதன்..மகனின் வாசனை அறிந்தும் கண்களை சோற்றிலிருந்து பிரிக்கவில்லை சொக்கநாதன்..தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்..

வீட்டுக்குள் வந்த மாறனை பிள்ளைகள் ஓடி வந்து கட்டிக் கொண்டனர்...ஆனந்தியை வலது கையில் தூக்கி கொண்ட மாறன், தன் இடது கை புஜத்தை நீட்ட அதில் பிடித்து தொங்கினான் அமுதன்..தந்தையை கண்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்தன குழந்தைகள்..

அப்பா, இன்னிக்கி அம்மா,.........என்று அமுதன் வாயை திறக்கும் முன், அன்னம் முந்தி கொண்டாள்..

இம்புட்டு நேரம் எங்கயா போயிட்டு வர்ற?.............வேகவேகமாக கேட்டாள் அன்னம்..

ஃப்ரெண்ட்ஸ் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்லம்மா,..அதான் விடவே மாட்டேன்னுட்டாங்க..........என்றவன், சற்று சத்தத்தை குறைத்து கேட்டான்,

எழில் எங்கே மா..............

அவனின் வாய்மொழி சொக்க நாதனின் செவியை எட்ட தவறவில்லை.. சோற்றை பிசைந்த கை அசையாமல் நின்றது..

மேல ரூம்ல இருக்கா.............கணவன் காதுகளில் விழாதவாறு சொன்னாள் அன்னம்..

இந்தா ஆனந்தி, அமுதன் வாங்க அப்பத்தா கதை சொல்றேன்..........சொல்லி பிள்ளைகளை அன்னம் தன்வசம் இழுத்துக் கொள்ள, மாடியேறினான் மாறன்..

சோற்றை அழுத்தமாக பிசைந்தார் சொக்க நாதன்...(என்ன செய்ய முடியும் ?...கோபத்தை யாரிடம் கட்டுவது என்று தெரியவில்லை..மாட்டிக் கொண்டது சாதம்)..

மாறன் அறைக்குள் நுழையும் போது ஒரு நாற்காலியில் உட்கார்ந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள் எழில்.. சத்தமில்லாமல் வந்த மாறன், அவளின் பின்னால் நின்று அவளின் கண்களை பொத்த, துடித்து எழுந்து திரும்பி பார்த்தாள் எழில்..

ஏய், என்ன எழில் இது?..ஏன் இப்படி பயப்படுற?.............

சிரிப்பையே பதிலாக அளித்தாள்..

ஆமா,என்ன படிக்கிற........அவன் கேட்க, கையில் இருந்த டைரியை காட்டினாள்..

அட, இது எப்படி உனக்கு கிடைச்சது..இதை எங்க அப்பா எரிக்கலியா?...........புன்னகையுடன் கேட்டுக் கொண்டே டைரியை பிரித்தான் மாறன்..

என்னது இது? டைரி முழுக்க தத்து பித்துன்னு கிறுக்கி வச்சிருக்கீங்க..யாராவது படிச்சிருந்தா என்ன நினைப்பாங்க................

கிறுக்கலா?..ஏய் எழில் செல்லம், இது மொத்தமும் இந்த மாறன் எழில் மேல வச்சிருந்த காதல்......ஆமா இது எப்படி உன் கைக்கு கிடைச்சுது.............

அலமாரியை சுத்தம் பண்ணும் போது சாவி ஒண்ணு கிடைச்சது...அதை வச்சி இந்த கப்போர்டை திறந்தேன்..உள்ளே இது மட்டும் தான் இருந்துச்சி...........என்று கூறி சுவரோடு இருந்த ஒரு கபோர்டை கைகாட்டினாள் எழில்..

இதற்கிடையில் அன்னம் வந்து சாப்பாட்டை தந்து விட்டு சென்றாள்..இருவரும் உணவருந்தினர்...சாப்பிட்டு முடித்த மாறன் அருகில் கிடந்த நாற்காலியை, வாகாக இழுத்து, அதன் மேல் ஏறி பரண் மேல் கை விட்டு துளாவ, கையில் கிடைத்தது அந்த பெட்டி..அதை கீழே இறக்கி, தூசு தட்டி, கட்டிலில் வைத்து திறந்தான் மாறன்..அதனுள் இருந்தது இது போல் பல டைரிகள்... ஆறு வயது முதல் கல்லூரி பருவம் வரையிலான எழிலின் பல புகைப்படங்கள்..வியந்தே போனாள் எழில்..

என்னங்க இதெல்லாம்...........

என் காதல் சின்னங்கள்...........சொல்லி சிரித்தான் மாறன்..புரியாமல் பார்த்தாள் எழில்..

இதெல்லாம் அப்பா கண்ணுல பட்டா தோலை உரிச்சிடுவாருன்னு பயந்து யார் கண்ணிலயும் படாத மாதிரி, பரன் மேல ஒளிச்சி போட்டு வச்சிருந்தேன்..அப்பா இதை பார்க்கலைன்னு நினைக்கிறேன்...அதான் எல்லாம் தப்பிச்சிடுச்சி...............மீண்டும் புன்னகை சிந்தினான் மாறன்..

அதில் இருந்த டைரிகளை பிரித்து பார்த்த எழில், அதன் வருடங்களையும், அதில் எழுதப்பட்ட வரிகளையும் பார்த்து வியப்பின் உச்சிக்கே போய் விட்டாள்..மாறன் முகத்தில் அத்தனை பிரகாசம்...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த பத்து வருடங்களில், மாறன் முகத்தில் இல்லாத பிரகாசமும் மகிழ்ச்சியும் இன்று அவன் முகத்தில் ஒளிர்ந்ததை கண்டாள் எழில்..

சொந்த ஊர், வாழ்ந்து வளர்ந்த மண், உறவுகள், நண்பர்கள், சொந்த வீட்டில் கலந்த தன் வாழ்நாள் நினைவுகள் என்று அனைத்தும் மாறனுக்குள் இந்த சந்தோஷத்தை உருவாக்கியிருக்க வேண்டும் என்று சரியாக கணித்தாள் எழில்..

தயங்கியபடியே கேட்டாள்,
நீங்க என்னை எப்போல இருந்து லவ் பண்றீங்க............என்று...

அருகில் இருந்த மனையாளை தன் தோள் சேர்த்து சொன்னான்,
தெரியலியே,...எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்...ஒரு தடவை ஸ்கூல்ல நடந்த ஃபங்க்ஷன்ல, நீயும் நானும் சேர்ந்து ஒரு டிராமல ஆக்ட் பண்ணோம் ஞாபகம் இருக்கா?.................மாறன் கேட்க ஆம் என்று தலையசைத்தாள் எழில்..

அப்போ எடுத்துகிட்ட போட்டோவை காட்டி, எழிலும் நானும் சேர்ந்து எடுத்துகிட்ட முதல் ஃபோட்டோன்னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டேன்..அப்போ ஒரு ஃப்ரெண்ட் சொன்னான், ரொம்ப சந்தோஷப்படாதேடா, இன்னும் நாலு வருஷத்துல அவ அப்பன் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு..அப்புறம் நீதான் கஷ்டப்படுவேன்னு...வந்துச்சி பாரு கோபம், அவனை அடிக்கவே போயிட்டேன்...அப்போதான் புரிஞ்சுது, உன்னை என்னால யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு..நீ என் எழிலரசின்னு...அப்போவே முடிவு பண்ணிட்டேன் என் எழிலை நான்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு..................மாறன் சொல்ல அதிர்ச்சியில் சிலையாகி போனாள் எழில்..

அந்த வயசுல காதல்ன்னு பேசுனா நல்லா இருக்காதுல்ல..அதான் ஃப்ரெண்ட்டாவே பழகினேன்...சரி நீ டுவெல்த் முடிச்சதும் பேசிக்கலாம்ன்னு இருந்துட்டேன்..உனக்கு டுவெல்த் லாஸ்ட் டே எக்சாம் நடந்த அன்னிக்கு உன்கிட்ட லவ்வை சொல்லத்தான் வந்தேன்...அதுக்கு முன்னால உன் கூட படிச்ச இந்திரன் முந்திகிட்டு, அவன் உன்கிட்ட லவ்வை சொல்லிட்டான்...வந்த கோபத்துல அவனை அடிக்கலாம்ன்னு நான் நினைக்கும்போது, காதில் கேட்டுச்சு பாரு ஒரு இடி சத்தம்...பயந்துட்டேன் எழிலு..என்ன இருந்தாலும் ஒரு ஆம்பிளை பையனை அப்படியா அறைவ?.............மாறன் கேட்க, சிரிப்புடன் எழில் சொன்னாள்,

பின்ன, ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்ன்னு கூடவே சுத்திட்டு திடீர்னு வந்து லவ் பண்றேன்னு சொன்னா அறையாம என்ன பண்ணுவாங்க?.............என்று..

சேம் ஃபீலிங் எழில்..நான் பாட்டுக்கு உன்கிட்ட லவ்வை சொல்லி, நீ பாட்டுக்கு சப்புன்னு என்னை அறைஞ்சிட்டேன்னா என் மானம் மரியாதை என்ன ஆகிறது??.அதேன் எக்சாமுக்கு வாழ்த்து சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்..சரி, நம்ம எழில்தானே எங்கே போயிட போறா?..பொறுமையா பேசிக்கலாம்ன்னு நினைச்சா நீ சென்னைக்கு படிக்க போயிட்ட..அதான் நானும் நீ படிச்ச காலேஜ்லயே வந்து சேர்ந்தேன்..அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே.............தன் காதல் கதையை சொல்லி முடித்தான் மாறன்..

இத்தனை வருஷமா இதையெல்லாம் ஏன் சொல்லல?............சந்தேகம் கேட்டாள் எழில்..

உன்கூட எப்படியெல்லாமோ வாழணும்ன்னு நான் கண்ட பல வருஷ கனவெல்லாம் இந்த ரூம்லதான் இருக்கு..உன்னை பத்தின என் நினைவெல்லாம் இங்கே இருக்கும் போது நான் எதை சாட்சியாக வச்சி என் காதலை உன்கிட்ட சொல்லுவேன் எழிலு...அது மட்டும் இல்ல, வலியோட வாழ்க்கைய ஆரம்பிச்ச என் எழிலை சந்தோஷமா பார்த்துக்குறது மட்டும் தான் எனக்கு லட்சியமா இருந்துச்சி..அதுல இதெல்லாம் பேச தோணல...................என்று தன் உணர்வுகளை மாறன் சொல்ல உருகி போனாள் எழில்..தன்னை உயிராய் நேசிக்கும் தன் கணவனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தீக்குளிக்கலாம் என்று எண்ணி அவன் மேல் பெரும் காதல் கொண்டது எழிலின் உள்ளம்..

நான் கீழ்சாதின்னு தெரிஞ்சும் உங்களால எப்படி இவ்வளவு ஆழமா என்னை நேசிக்க முடிஞ்சது...............எழில் கேட்க, முறைத்தான் மாறன்..

என்ன எழில் இவ்வளவு படிச்சிருந்தும் கீழ்சாதின்னு பேசிட்டு இருக்க...உலகத்துல பிறந்திருக்கிற எல்லா மனுஷனும் ஒரே ஜாதிதான்.. மனுஷ ஜாதி...ஒருத்தர் மேல நம்ம மனசுல உருவாகிற அன்புக்கு சாதி தெரியுமா எழிலு..எனக்கு உன் மேல மட்டும்தான் இந்த பாசமும் பொசெசிவ்னேஸ்சும் வந்துச்சி...நான் என்ன பண்ணட்டும் சொல்லு..................சாதாரணமாக அவன் சொல்ல, அவன் மேல் காதல் கரை புரண்டோடியது எழிலின் இதயத்தில்..

நான் என் லவ்வை எப்போவோ உன்கிட்ட சொல்லிட்டேன்..நீதான் என்கிட்ட இன்னும் சொல்லல...என்னை லவ் பண்றியா............அவன் கேட்க,

ம்ம்..நமக்கு பேரன் பேத்தி பிறந்த பிறகு கேளுங்க...........சொல்லி பொய்யாக சலித்து கொண்டாள் எழில்..

அவளை அணைத்து தன் நெஞ்சில் புதைத்து கொண்டான் மாறன்...அவன் நெஞ்சில் புதைந்து உயிரில் உருகி கரைந்தாள் எழில்.......

தொடரும்....
மனித குலத்தை தழைக்க
செய்யும் காதலும்
சாதியுடன் அதன் போரும்.......


வன்முறை ஊற்றெடுக்கும்
மனித மனத்தில் தான்
மாறாத அன்பும் உதிக்கிறது

மனித மனம் பெற்றெடுக்கும்
மாசில்லா அன்புக்கு
சாதி உண்டோ............

சக்திமீனா என்கிற M.மீனாம்பிகை.....
 
Top