• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺4

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
கலெக்டர் அலுவலகத்தின் வாசலில், மாறன்,எழில் தம்பதியினரை கொலைவெறி கொண்ட கண்களோடு எதிர்கொண்டார் சொக்கநாதன்..


பயத்தில் மாறன் பின்னால் ஒளிந்து கொண்டாள் எழில்..எழில் தோளில் கைபோட்டு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக தகப்பன் முன்னால் நின்றான் மாறன்..


ஏலேய், நான் கெளரவமா வாழ்ந்த ஊருக்குக்குள்ள என்னய தலை குனிய வச்சிட்டல்ல...கேவலம் இந்த சின்ன சிறுக்கிக்காக.............என்று சொக்கநாதன் பேசிக்கொண்டிருக்கும் போதே, இடைமறித்த மாறன்,


போதும்....இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டிய தப்பா பேசாதீங்க..............என்று பேசி முடிக்கும் முன்,


என்னலே பண்ணிடுவ?...இப்போ சொல்லுறேன் இந்த நிமிஷத்துல இருந்து நான் உனக்கு அப்பனும் இல்ல..நீ எனக்கு மொவனும் இல்ல..என் சொத்துல ஒரு பிடி மண்ணு கூட உனக்கு கொடுக்கமாட்டேன்..என் வீட்டுல உனக்கு இடம் கிடையாது... இன்னயோட நான் பெத்து வளத்த என் மொவன் செத்துட்டான்............ஆவேசமாக கொதித்து கொந்தளித்தார் சொக்கர்..


மிக சாதாரணமாக சிரித்தான் மாறன்.
அந்தரத்துல சுத்துற பூமி கீழே விழுந்து சிதறி தெறிச்சாலும், நீங்கதேன் எனக்கு அப்பா..நான்தேன் உங்க மொவன்..எங்க அம்மா எனக்கு சொல்லியிருக்காக..நீங்கதேன் எனக்கு அப்பாங்கிறதை மறுக்கிற உரிமை உங்களுக்கு கிடையாது.. பொறவு என்ன சொன்னீக?..சொத்து..அது எங்க தாத்தா சம்பாதிச்சது..அதை எனக்கு இல்லைன்னு சொல்றதுக்கும் உங்களுக்கு அதிகாரம் கிடையாது..ஆனால் இந்த சாதி பெரியமனுசன் சொக்கநாதனோட மகன் என்கிற அந்தஸ்தையும், என் பரம்பரை சொத்து மேல எனக்கு இருக்கிற உரிமையையும், கொள்கைக்காக உதறி தள்ள இந்த இளமாறனுக்கு துணிச்சல் உண்டு..இப்போ சொல்லுறேன்,..பூமியில எல்லா மனுஷனும் சமம்தான்னு நீங்க புரிஞ்சிக்கிற வரைக்கும், என் எழிலை மனசார உங்க மருமொவளா நீங்க ஏத்துக்கிற வரைக்கும் நான் உங்க வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்.................நிதானமாக நிதர்சன வைராக்கியம் கொண்டான் மாறன்..


இந்த கீழ் சாதி பொறப்பை நான் மருமொவளா ஏத்துக்கிறதா?..இந்த உடம்பில கடைசி சொட்டு ரத்தம் உறையாம மிச்சம் இருக்கிற வரைக்கும் அது நடக்காது...............சாதியின் வீம்பை காட்டி வீம்பாக நின்றார் சொக்கநாதன்..


புன்னகை கொண்டு தாக்கி சொன்னான் மாறன்,
அதையும் பார்க்கலாம்... பொறவு,.....நான் பெங்களூர் போறேன்..அங்கே எனக்கு வேலை கிடைச்சிருக்கு.............என்று மாறன் சொல்ல,


அதை, ஏன்ல என்கிட்ட சொல்ற?..நீ எக்கேடு கேட்டு போனா எனக்கென்ன?.............அலட்சியமாக கோபம் கொண்டார் சொக்கநாதன்..


உங்களுக்கு பயந்து நான் இந்த ஊரை விட்டு ஓடிட்டேன்னு நீங்க நினைச்சிற கூடாதுல்ல...அதுக்குதேன் சொல்றேன்..பெங்களூர் போய் வீடு அரேஞ்ச் பண்ணி செட்டில் ஆனதும் என் அட்ரஸ்ஸை அனுப்புறேன்..உங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் வெட்டணும்ன்னு தோணிச்சின்னா...வாங்க,.நேருக்கு நேர் சந்திப்போம்..இல்ல, கோழை மாதிரி ராத்திரி தூங்கும் போது கொளுத்தணும்ன்னு தோணிச்சின்னா வந்து கொளுத்திடுங்க.....................என்று கூறி மாறன் அலட்சிய புன்னகை சிந்த, தோளில் கிடந்த துண்டை உதறிவிட்டு வீராப்பாய் சென்றார் சொக்கநாதன்..


அன்று இரவே பெங்களூர் பேருந்தில் இருவரும் பயணப்பட்டனர்...மாறன் தோள் சாய்ந்து ஆறுதலின் நிழல் கண்டாள் எழில்..எழிலின் பெண்மைக்குள் இருக்கும் தாய்மைக்குள் தன்னை தொலைத்தான் மாறன்...


காலிங் பெல் எழிலின் கவனம் கலைத்தது...கதவை திறக்க புன்னகையுடன் நின்றான் மாறன்...


ஏய் எழில் இன்னும் தூங்கலியா?..பெல் அடிச்ச உடனே கதவை திறந்துட்ட?........காலில் இருந்த ஷூவை கழட்டி கொண்டே மாறன் கேட்க,


கை கால் கழுவிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..........என்றாள் எழில்..


ஆஃபீஸ் கேண்டீன்லயே சாப்பிட்டேன்..நீ இன்னும் சாப்பிடாலியா............வேலை களைப்பு இருந்தாலும் உற்சாகமாகவே பேசினான்...அவள் முகத்தில் உற்சாகம் இல்லை..பதிலும் வரவில்லை..


என்னாச்சி எழில், நானும் காலையில் இருந்தே பார்க்கிறேன் உன் முகத்தில ஏதோ ஒரு சின்ன சோகம் தெரியுதே.............மாறன் சொல்லி கொண்டிருக்கும் போதே மணி 12 ஒலித்தது...


அவன் இரு கன்னங்களையும் கைகளில் தாங்கி அவன் முகம் பார்த்து, புன்னகை சிந்தி சொன்னாள்,


இனிய முப்பத்தி ஒன்பதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளமாறா...........என்று..


அவளை கட்டி கொண்டு, அவளின் முகம் பார்த்து,
ஓஹோ, இதுதான் விஷயமா?..மேடம் ஃபிளாஷ் பேக்குக்கு போயிட்டீங்களா.................என்று அவன் கேட்க தலை குனிந்தாள் அவள்..


எத்தனை தடவை சொல்றது..பழசை பத்தி நினைக்காதேன்னு..நாளைக்கும் இப்படியே இருந்து மூடு அவுட் பண்றதா ஐடியாவா?...........மாறன் கேட்க,


இருபுறமும் தலையை ஆட்டி,
ம்ஹும்....நாளைக்கு சினிமாக்கு போகலாம்..........என்று அவள் சொல்ல பிரகாசமாக சிரித்தான் அவன்..


அப்புறம், சொல்ல மறந்துட்டேன், ஊர்ல நம்ம மாரியம்மா பாட்டி பேரன், ராஜவேலு இல்ல, அவன் எங்க ஆஃபீஸ்லதான் ஜாயின்ட் பண்ணியிருக்கான்..பத்து வருஷத்துக்கு முன்னாடி சின்ன பையனா பார்த்தது..இப்போ எவ்வளவு வளர்ந்துட்டான் தெரியுமா?...........என்று உடை மாற்றிக் கொண்டே மாறன் பேச, அவனுக்கு உடை மாற்ற உதவி செய்தபடியே பேசினாள் எழில்...,


நம்ம மாரியம்மா கெழவி பேரனா?........என்று எழில் கேட்க,


ஏய்...........என்று மிரட்டல் தொனியில் சத்தம் கொடுத்தான் மாறன்..


ஊர்ல எல்லாரும் கெழவின்னு தான் சொல்லுவாங்க..அதான் நானும் சொன்னேன்...............பாவமாய் பேசினாள் எழில்..


அவளை இழுத்து அணைத்து, "எல்லாரும் தப்பு செய்தால் நீயும் செய்வியா?..பெரியவங்களை மரியாதையா பேசணும்",..............மூக்கோடு மூக்கு உரசி சொன்னான் அவன்..


"சரிடா மாறா"......என்று எழில் சொல்ல, இன்னும் ஆசையாய் அவளை தன்னுடன் சேர்த்தணைத்து இனிய காதல் கலை சொன்னான் இளமாறன்...


~~~~~~~~~~~~~~~~


காக்கையின் அழைப்பும், சேவலின் கூவலும், இளம் சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்று உரக்க கூறியது அன்னத்திடம்...


நீயும்தேன் தினம் கரையிற..வாசலை பார்த்து பார்த்து நான் ஏமாந்ததுதேன் மிச்சம்..என் புள்ளைய அந்த அய்யனார் சாமி எப்போ என் கண்ணுல காட்ட போகுதோ..இன்னிக்கி என் புள்ளைக்கு பொறந்த நாளு..கோயிலுக்கு போய் ஒரு அர்ச்சனை கூட பண்ண முடியாத பாவியா போனேன்..இதை தின்னுட்டு நீயாச்சும் என் புள்ளய ஆசிர்வாதம் பண்ணு..................... காக்கையை சனீஸ்வர பகவானாக நினைத்து உணவளித்து தன் ஏக்கத்தை கரைத்தாள் அன்னம்..


பம்பரமாய் சுழன்று வீட்டு வேலைகளை முடித்த அன்னம், சொக்கநாதனுக்கு பவ்யமாக சமைத்த உணவை பரிமாறினாள்..வேகமாக சாப்பிட்டு முடித்த சொக்கநாதன்,


இன்னிக்கு தோப்பில தேங்காய் வெட்டு இருக்குடி...ராவுக்குதேன் வீட்டுக்கு வருவேன்..அங்கே இங்கே நின்னு அந்த ஓடி போனவனை பத்தி பொலம்பினன்னு கேள்விப்பட்டேன், தொலச்சிபுடுவேன்................என்று கூறி துண்டை உதறி தோளில் போட்டு சென்று விட்டார் சொக்க நாதர்..


ம்க்கும்......இவுக மட்டும் அவன் நினைப்பு இல்லாமதேன் ராவுக்கும் பகலுக்கும் அவனை வைஞ்சிகிட்டே(திட்டிக் கொண்டு) திரியிராகளாக்கும்.................... கணவனை முன் போகவிட்டு பின் அழகு காட்டினாள் அன்னம்..தெருவில் சொக்கநாதன் தலை மறைந்ததுதான் தாமதம் சேலை முந்தானையை உதறி இடுப்பில் சொருகி கொண்டு வேகமாக தெருவில் இறங்கி நடந்தாள்..


இரண்டு தெரு கடந்து மாரியம்மா பாட்டி வீட்டை அடைந்தவள்,


சித்தீ...சித்தீ......என்று அழைத்துக் கொண்டே சர சரவென வீட்டுக்குள் சென்று, புழக்கடைக்கும் வந்துவிட்டாள்..


மாரியம்மா பாட்டிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும்.....திருமணம் செய்து வைத்த மகள் இரண்டு பிள்ளைகளை பெற்ற பிறகு இருதய நோயில் இறந்துவிட, இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு உடனே புது மாப்பிள்ளை ஆகிவிட்டான் மருமகன்..மகளின் இரு பிள்ளைகளையும் வெற்றிகரமாக வளர்த்து ஆளாக்கினாள் மாரியம்மா பாட்டி..மாரியம்மாவின் மகள்வழி பேரன் தான் ராஜவேலு..அவனுடைய தங்கை புவனா என்கிற புவனேஸ்வரி..


புழக்கடையில் மாட்டு தொழுவத்தில் மாட்டுக்கு வைக்கோல் வைத்துக் கொண்டிருந்தாள் மாரியம்மா பாட்டி..இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரிக்கு போகாமல் பாட்டிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் புவனா..


ஏய் சித்தீ............அலறிக் கொண்டே வந்தாள் அன்னம்..


அடியேய்.....ஏண்டி சித்தி சித்தின்னு ஏலம் போடுற?............கேட்டாள் மாரியம்மா பாட்டி...


உன்கிட்ட சண்டைப்பிடிக்கலாம்ன்னு வந்துருக்கேன்............என்றாள் அன்னம்..


ஏண்டி நான் என்ன தப்பு செய்தேன்............புரியாமல் கேட்டாள் பாட்டி..


பொறவென்ன!...என் புள்ளைய பார்த்துபுட்டு கமுக்கமா இருக்க..என்னய கூப்பிட்டு ஒரு எட்டு அந்த பைய முகத்த காட்டனும்னு தோணல இல்ல உனக்கு..............என்று சொல்லும் போதே அன்னத்தின் கண்கள் அழுகையை கொட்டியது..


இந்தா இந்தா... அடியேய், அழுவாதடி...உன் புருசன் அந்த மொராட்டு பையலுக்கு விசயம் தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும்ல்ல கிடந்து குதிப்பான்.. அதேன் அடுத்த தடவை போனு பேசும் போது, யாருக்கும் தெரியாமல், இந்த புள்ள புவனாவை அனுப்பி உன்னய கூப்பிடலாமுன்னு நினைச்சிட்டு கிடந்தேன்......................... பாட்டி சொல்லியவுடன்,


அடுத்து எப்போ பேசுவ?...இன்னிக்கி பேசுவியா?............ஆர்வமாய் கேட்டாள் அன்னம்..


நான் என்னத்தடி கண்டேன்..இந்த புள்ளைங்கதேன் கையில அந்த போனை வச்சிகிட்டு ஏதேதோ வித்தையெல்லாம் காட்டுது..இந்தா இவதான் போனு போடுவா... எதுன்னாலும் அவகிட்ட கேளு..........என்று புவனாவை கை காட்டினாள் பாட்டி...


அடியேய், இனி எப்போடி என் புள்ளகிட்ட பேசுவ..........தவிப்போடு புவனாவிடம் கேட்டாள் அன்னம்...


நான் எங்கே உன் புள்ளக்கிட்ட பேசுறேன்...நான் எங்க அண்ணங்கிட்ட இல்ல பேசுவேன்........புவனா சொல்ல,


ஏண்டி, என் புள்ள மட்டும் உனக்கு அண்ணன் இல்லையா?.............கேட்டாள் அன்னம்..


இப்படி எதையாவது சொல்லி என் வாய அடைச்சிபுடு..எப்போ வேணும்ன்னாலும் ஃபோன் பேசலாம் பெரியாத்தா.........என்று புவனா சொல்லி முடிக்கும் முன்,


இப்போ பேசலாமாடி.........பாவமாய் கேட்டாள் அன்னம்..


இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை, அண்ணன் ஆஃபீஸ் போயிருக்காதே...........என்று கூறி புவனா யோசிக்க,


அப்போ இன்னிக்கி பேச முடியாதா?.............ஏக்க பெருமூச்சு விட்டாள் அன்னம்..


ஏன் பெரியாத்தா அவசரப்படுற...கொஞ்சம் என்னய யோசிக்க விடேன்........என்ற புவனா சொன்னாள்,
வேலு அண்ணன்கிட்ட மாறன் அண்ணன் நம்பர் வாங்கி, மாறன் அண்ணனுக்கே ஃபோன் போட்டுடலாம்................என்று....


அன்னத்தின் முகம் பிரகாசமானது..போட்ட திட்டத்தை செயல்படுத்தினாள் புவனா..


மாறன் வீட்டு ஹாலில் சோஃபாவில் அமர்ந்து ஃபோனில் ஃப்ரீ ஃபையர் விளையாடிக்கொண்டிருந்தான் அமுதன்(மாறனின் 10 வயது மகன்)...அப்போது அந்த ஃபோனை தீண்டியது அன்னத்தின் காணொளி அழைப்பு(vedeo call)....சட்டென ஃபோனை ஆன் செய்ய திரையில் தெரிந்தாள் புவனா..


ஹாய், நீவு யாரு.........கன்னட மொழியில் கேட்டான் அமுதன்..


புரியாமல் விழித்தாள் புவனா..


நானு நின்னே கேளுவே....போனினல்லி மாத்தனாடி..ஆன்டி சோட்டி மாத்தனாடி(நான் உங்களைத்தான் கேட்கிறேன்..ஃபோன் பண்ணினால் பேசணும்..பேசுங்க ஆன்டி)...............என்று அமுதன் கன்னடத்தில் பட படவென்று பேச,


ஏதோ ஒரு பொடிப்பையன் ஃபோன் எடுத்து என்னென்னவோ பேசுறான் பெரியாத்தா..ராங்க் கால் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்.........என்று அன்னத்திடம் சொன்னாள் புவனா.


ஹலோ ஆன்டி, நான் ஒண்ணும் பொடிப்பையன் இல்ல..எனக்கு பத்து வயசு முடிய போகுது.............என்றான் அமுதன்..


முதல்லயே இப்படி அழகா தமிழில் பேசியிருக்கலாம்ல...யாருடா நீ?.........புவனா கேட்க,


நீங்க தமிழ்ன்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்?..நான் அமுதன், மிஸ்டர். இளமாறனோட மகன்.........என்றான் அமுதன்..அவன் அவ்வாறு கூறியது தான் தாமதம் சட்டென ஃபோனை தன்பக்கம் திருப்பி பார்த்தாள் அன்னம்..


அந்த சிறுவனின் முகத்தில் தன் கணவனின் சாயலை கண்ட மாத்திரத்தில் அணை உடைத்து நீர் கொட்டியது அன்னத்தின் கண்கள்..அந்த முதியவளை கண் சுருக்கி வியப்பாய் பார்த்தான் அமுதன்...இப்போது திரையில் புவனாவும் அன்னமும் தெரிந்தனர்..


ஹலோ ஆன்டி,..... நான் ஃப்ரீ ஃபயர் ஃபைனல் லெவெல்ல இருக்கேன்..டோண்ட் வேஸ்ட் மை டைம்..சீக்கிரமா நீங்க யாருன்னு சொல்லுங்க..இது யாரு புதுசா ஒரு ஓல்டு லேடி?...............அமுதன்..


டேய், ஓல்ட் லேடின்னு சொன்ன, உதைபடுவ...இவங்க உன் அப்பத்தா..............என்றாள் புவனா..


அப்பத்தா............வாய்க்குள் சொல்லி புரியாமல் பார்த்தான் அமுதன்...


டேய், அப்பா ஃபோன் எடுத்து என்னடா பண்ற...அங்கே யாருகிட்ட பேசுற... உன் கேர்ள் ஃப்ரெண்ட் வர்ஷாகூடத்தானே பேசுற?..இரு அம்மாகிட்ட சொல்றேன்............சொல்லிக் கொண்டே வந்தாள் ஆனந்தி(மாறனின் 8 வயது மகள்)..


இப்போது திரையின் ஒருமுனையில் அமுதனும் ஆனந்தியும் நிற்க மறுமுனையில் அன்னமும் புவனாவும்..


வர்ஷா இல்லடி..அப்பத்தா.........என்றான் அமுதன்..


அப்பத்தாவா?...........


டேய், யாருடா இந்த குட்டி தேவதை........அமுதனிடம் கேட்டாள் புவனா..


நான் உங்களுக்கு பொடி பையன் இவ குட்டி தேவதையா?............அமுதன் கேட்க, பெருமையாய் நின்றாள் ஆனந்தி..
இவ என் தங்கச்சி ஆனந்தி.........சொன்னான் அமுதன்..


என்ன பெரியாத்தா இப்படி அழுதுட்டு நிக்கதேன் ஃபோன் போட சொன்னியா?..உன் பேர பிள்ளைங்ககிட்ட பேசு............ அன்னத்திடம் சொன்னாள் புவனா..கண்களை துடைத்துக் கொண்டு பேசினாள் அன்னம்..


எய்யா...நீங்க ரெண்டு பேரும் வூட்ல தனியாவா இருக்கீக, உங்க அப்பனும் ஆத்தாளும் எங்கே?............கேட்டாள் அன்னம்..


மூதாட்டி பேசியது தமிழ்தான்...பிள்ளைகளுக்கு தான் சரியாக புரியவில்லை...திருதிருவென விழித்தனர்..


டேய், உங்க அப்பாவும் அம்மாவும் எங்கேன்னு கேட்கிறாங்கடா..........என்றாள் புவனா..


அப்பாவா.....அவரு அம்மாகூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாரு...........சட்டென அமுதன் சொல்ல, அவன் தலையில் கொட்டினாள் ஆனந்தி..


டேய் இப்படி பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்கல்ல?............. பொறுப்பாக தமையனை கடிந்து கொண்டாள் ஆனந்தி..சிரித்தாள் புவனா..


என்னடி சொல்றான் அவன்.......
புவனாவிடம் கேட்டாள் அன்னம்...


அதெல்லாம் உனக்கு புரியாது பெரியாத்தா..........என்று அன்னத்திடம் கூறிய புவனா,


ஏய் ஆனந்தி குட்டி, இவங்க உன் அப்பாவோட அம்மா..உனக்கு அப்பத்தா..அப்பத்தாவுக்கு உங்க அப்பாகிட்ட பேசணும்..நீ ஃபோனை அப்பாகிட்ட கொடுக்குறியா?................என்றாள்..


டேய் அமுதா, இவங்க அன்னம் பாட்டிடா...அப்பா அன்னிக்கி இவங்க ஃபோட்டோவை பார்த்திட்டு இருந்த போது அம்மா சொன்னாங்களே...உனக்கு ஞாபகம் இல்லையா?...............ஆனந்தி கேட்க, அன்னத்தின் பிம்பத்தை உற்று பார்த்தான் அமுதன்..


அட ஆமாடி...அதே முகம்..........என்று அமுதன் சொல்ல,


அவர்களின் உரையாடலில் மகனும் தன்னை இன்னும் மறக்கவில்லை என்று சற்றே மகிழ்ச்சி கொண்ட அன்னம், ஃபோனில் தெரிந்த மழலைகளின் பிம்பத்தை நெட்டி முறித்து முத்தமிட்டாள்..


டேய் அன்னம் பாட்டிக்கு அப்பாகிட்ட பேசணும்...அதனால்தான் அழுறாங்க..ஃபோனை கொடுடா...........என்று கூறி ஃபோனை பறித்துக் கொண்டு ஓடினாள் ஆனந்தி..பின்னால் ஓடினான் அமுதன்..


அங்கு வீட்டு பால்கனியில் இருந்த சோஃபாவில் மாறன் சாய்ந்து அமர்ந்திருக்க, அவன் மார்பில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் எழில்..எழிலை தன் நெஞ்சோடு அணைத்து அவளின் கைவிரல்களை நீவிக் கொண்டே ஏதேதோ மாறன் பேசிக் கொண்டிருக்க, ம் கொட்டிக் கொண்டிருந்தாள் அவள்..குழந்தைகள் ஓடி வரும் அரவம் கேட்டு விலகிக் கொண்டனர்..


அப்பா, அன்னம் பாட்டிக்கு உங்க கிட்ட பேசணுமாம்..............சொல்லிக் கொண்டே ஆனந்தி ஃபோனை மாறனிடம் நீட்ட, குழந்தையின் கூற்று புரியாமலே ஃபோனை கையில் வாங்கி, திரையை பார்த்து திடுக்கிட்டு எழுந்தான்...


அம்மா......என்று உதடுகள் முணுமுணுக்க, கண்களில் நீர் சுரந்தது..நடப்பதை புரிந்து கொள்ள எழிலுக்கு சில நொடிகள் ஆனது..


எய்யா....மாறா,......என்று பரிதவிப்பின் உச்சத்தில், பாச வெள்ளத்தில் அன்னம் அழைக்க, உணர்ச்சி பெருக்கில் இருவர் கண்களிலும் மடை உடைத்து வெளியேறியது கண்ணீர்..இதுவரை தகப்பன் அழுதறியாத குழந்தைகள் மாறனின் கழுத்தை கட்டிக் கொண்டு, அவனின் கண்ணீர் துடைக்க, காணக்கிடைக்காத காட்சியை கண்டு ஜென்மம் நிறைந்ததாய் உணர்ந்தாள் அன்னம்..


ஏன்யா......உங்க அப்பா பண்ணுன தப்புக்கு பத்து வருஷமா இந்த அம்மாவையும் சேர்த்து தண்டிச்சிட்டியே...இது நியாயமாய்யா?................அன்னம் கேட்க, அவளை எதிர்கொள்ளும் சக்தியற்றவனாக நின்றான் மாறன்..


கணவனின் கண்ணீர் கண்டு தானும் கண்ணீர் சுமந்தாள் எழில்....


பாசப் போராட்டம்
பனிப் பூவாய்
தொடரும்.....


சாதி கொண்டு
உயிர் பலி வாங்கும்
சாதி கெட்ட மானிடா


தாய்ப்பாசத்துக்கு
சாதி இல்லை தெரியுமோ?.....


சக்தி..........



Friends,


கதை எப்படி இருக்குன்னு ரெண்டு வார்த்தை எழுதுங்க.....உங்கள் விமர்சன வாக்கியங்களே என் வெற்றியின் சான்றிதழ்கள்....your stars and comments are my awards.....


சக்தி......
 
Top