• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺6

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
தொலைபேசியின் வழியே பாசத்தை பரிமாறிக் கொண்டு நாட்கள் சில அழகாக நகர்ந்தன..முன்பை விட மாறனின் முகம் மலர்ச்சியோடு காணப்பட்டது..மாறனின் மகிழ்ச்சி எழில் மனதிற்கு நிறைவை அளிக்க, அவளும் உற்சாகமாகவே காணப்பட்டாள்..

மாறனை திருமணம் முடித்த பிறகு இரண்டு வருடங்கள் தன் தாயை கூட நினைக்காமல் மாறன் நிழலிலேயே வாழ்க்கையை இனிக்க இனிக்க நகர்த்திய எழிலுக்கு திடீரென்று ஒருநாள் வந்தது, தாயின் தொலைபேசி அழைப்பு..ரஹீம் உதவியுடன் எழிலரசியின் தாய் தாயம்மா எழிலரசியை ஃபோனில் அழைத்து பேசினாள்...அப்போது எழில் வயிற்றில் ஆனந்தி ஆனந்தமாக ஊர்ந்த நேரம்..விஷயம் தெரிந்தால் மாறன் கோபித்துக் கொள்வானோ? என்று ஐயம் கொண்ட எழில், அவளாகவே தாய் ஃபோன் செய்த விஷயத்தை மாறனிடம் கூறினாள்..அவனோ மிகவும் சந்தோஷம் கொண்டான்..அதன் பிறகு எழில் அடிக்கடி தாயிடம் பேசுவது உண்டு..ஆரம்பத்தில் கோபம் கொண்டிருந்த தமையன் கோபாலும், காலத்தின் கரைப்பில் கோபம் கரைத்து தங்கையின் ஷேம லாபங்களை அடிக்கடி விசாரித்துக் கொள்வான்..தந்தை முருகேசன் மட்டும் இன்னும் கோபம் குறையாமல் இருந்தார்...

இவ்வாறு தான் அடிக்கடி தன் குடும்பத்துடன் பாசம் பகிர்ந்து வரும் நிலையில், மாறன் முழுவதும் அவன் குடும்பத்தில் இருந்து முறிந்து நின்றதால், ஒரு பெரும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தாள் எழில்..அன்னத்தின் இந்த பாச உறவாடல் எழிலின் குற்ற உணர்ச்சியை வெகுவாக குறைத்திருந்தது..முன்பை விட மகிழ்ச்சியாக பொழுதை கழித்தாள்..

இரவு உணவுக்கு பின் படுக்கையில் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான் மாறன்..கையில் பால் தம்ளருடன் வந்தாள் எழில்..மாறன் பால் தம்ளரை வாங்கி கொண்டான்..

அம்மா நீங்க குட்டி குழந்தையா இருக்கும் போது டிரஸ் போடாம தோட்டத்துக்கெல்லாம் போவீங்களா.. சீ நீங்க பேட் கேர்ள்............ஆனந்தி சொல்ல,

ஏய், விரல் சப்புறதை விட்டுட்டியே..........எடுத்துக் கொடுத்தான் அமுதன்..

அய்யய்யே....பெரிய பொண்ணா வளர்ந்த பிறகும் விரல் சப்புவீங்களா........ .ஆனந்தி கேட்டு சிரிக்க, மாறனை முறைத்தாள் எழில்..குறும்பாய் தனக்குள் சிரித்தான் மாறன்..

மாறனின் கை புஜத்தில் அடித்து சொன்னாள் எழில்,
குழந்தைகள் கிட்ட என்னை பத்தி என்ன சொல்லி கொடுத்துருக்கீங்க?.......மீண்டும் மீண்டும் அடித்தாள்...

ஏய் அடிக்காதே எழில், வலிக்குது..நீ ஆறு வயசுல டிரஸ் இல்லாம ஜட்டியோட, விரல் சப்பிகிட்டே ஆட்டு மந்தைக்கு வருவல்ல..அதைத்தான் சொன்னேன்..........சொல்லி சிரித்தான் மாறன்...குழந்தைகளும் கூடி சிரித்தனர்..மீண்டும் அவனது புஜத்தில் அடித்தாள்..சிரித்தான் மாறன்..

ஏய் அது மட்டும் இல்ல, உங்க அம்மா சின்ன பிள்ளையா இருக்கும் போது, ஆத்துக்கு குளிக்க வருவா...........என்று மாறன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனின் வாயை தன் கையால் பொத்தினாள் எழில்....அவளது கையை கடித்தான் மாறன்..கையை உதறி அவள் வலியில் கத்த, குழந்தைகள் கட்டிலில் குதித்து சிரித்தனர்..மாறனும் குறும்பாய் சிரித்தான்..

பொறவு மாங்கா தோப்பில மாங்கா திருடி சாப்பிட்டு என்கிட்ட மாட்டிகிட்டு திரு திருன்னு முழிப்பா பாரு...........என்று மாறன் சொல்ல, மீண்டும் அவன் வாயை தன் கையால் மூடினாள் எழில்..மீண்டும் கையை கடித்தான் மாறன்...துள்ளி குதித்த குழந்தைகள், மீண்டும் கூச்சலிட்டு சிரித்தன..முகம் சுணங்கினாள் எழில்..

தன்னருகில் உட்கார்ந்திருந்த எழிலை தன்னோடு சேர்த்து, காதுக்குள் சொன்னான் மாறன்,
"ஏய் இனிமேல் சென்சார் பண்ணி கதை சொல்றேன், ஓகேவா",........என்று...
வெட்கம் கொண்டு மீண்டும் கணவனை அடித்தாள் எழில்..குறும்பு கொப்பளிக்க சிரித்தான் மாறன்..வெகுநேரம் கேலியும் கூச்சலும் சிரிப்பொலியும் கலந்து நகர்ந்தது கதை நேரம்..இரு குழந்தைகளையும் தன் மடியில் போட்டு, எழிலை தன் மார்போடு அணைத்து மாறன் கதை சொல்லிக் கொண்டிருக்க, குழந்தைகளுக்கு முன் தூங்கியிருந்தாள் எழில்..மனைவியின் தலையை வருடியபடியே கதையை தொடர்ந்தான் மாறன்...

~~~~~~~~~~~~~~~~

தென்னந்தோப்பில் நின்று வேலையாட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார் சொக்கநாதன்..அப்போது மூச்சிறைக்க ஓடிவந்த பாண்டி சொன்னான்,

ஐயா,.....அம்மா மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துட்டாக..தலையில பலமான அடி..நம்ம இந்திரன் டாக்டரை கூட்டியார போயிருக்கான்...........என்று..

பதறி ஓடினார் சொக்கநாதன்..

வீட்டு வாசல் ஜனக் கூட்டத்தால் நிறைந்திருந்தது...பெரிய வீட்டம்மாவுக்கு தலையில் அடிபட்ட செய்தி காட்டுத்தீயாய் ஊரெங்கும் பரவியது...அங்காளி பங்காளிகள் இத்துடன் அன்னத்தின் கதை முடிந்தது, அடித்தது லாட்டரி என்று மனதிற்குள் குதூகலித்தாலும், முகத்தில் வராத கவலையை கஷ்டப்பட்டு வர வைத்தனர்..

மெய்யாக உள்ளத்தால் வருத்தம் கொண்ட சொக்கநாதன், வெளியில் காட்டிக் கொள்ளாமல், மிடுக்காக சமாளித்தார்..அந்த பழைய மச்சு வீட்டின் படுக்கையறையில் படுத்திருந்தாள் அன்னம்..தலையில் அடிபட்டு, போடப்பட்ட கட்டை தாண்டி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது..கண்கள் மூடி மயக்க நிலையில் கிடந்தாள்..மனைவியின் இந்நிலை கண்டு உண்மையில் உள்ளுக்கு பயந்துதான் போனார் மனிதர்..

பிறகு..........வாழ்வின் முதுமை காலத்தில் தனிமை கொடுமை அல்லவா!....தள்ளாடும் வயதில் மகனை தள்ளி வைக்கும் வீம்பு கொண்ட மனம், மனைவியின்றி வாழ்வதை கற்பனை செய்து பார்க்க கூட அஞ்சிதான் போகும்...சற்றே கலங்கி போனார் சொக்க நாதன்..ஒரு நொடி இத்தனை நாள் தன் இல்லாளின் பலம் கொண்டுதான் வாழ்ந்து கழித்தோமா?", என்ற ஐயம் தோன்றி மறைந்தது..

மாரியம்மா பாட்டி கூட்டத்தை விலக்கி தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்..

அடிப்பாவி மொவளே, பெத்த மொவன்தேன் பாதியில விட்டுட்டு ஓடிட்டான்..நீயும் இப்படி விட்டுட்டு போயிட்டா என் மருமொவன் கடைசி காலத்துல நாதியத்து போவானே..........என்று பதறி பாட்டி பேச, சொக்கரின் பயம் உச்சத்தை அடைந்தது..

அதன் பிறகே வந்தார் டாக்டர்..அன்னத்தின் தலையில் பட்ட காயத்துக்கு மருந்து வைத்து கட்டு போட்டார்...பிரஸர் சோதனை முதல் தேவையான சோதனைகள் அனைத்தையும் செய்த டாக்டர் சொன்னார்,
ஐயா, இவங்க கீழே விழுந்த அதிர்ச்சியில் மயங்கி இருக்காங்க.. பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல.. இஞ்செக்ஷன் போட்டுருக்கேன்..இன்னும் ஒரு மணி நேரத்துல கண் முழிச்சிடுவாங்க..........என்று..

கேட்டுக் கொண்டிருந்த பங்காளிகளுக்கு தான் ஏமாற்றமாகி போனது..சொக்கநாதன் சற்றே ஆஸ்வாச பெருமூச்சு விட்டார்..எல்லோரும் கலைந்து சென்றுவிட, பாட்டியும் சொக்கரும் மட்டும் அன்னத்துடன் இருந்தனர்..வெகுநேரம் ஆகியும் அன்னம் கண்விழிக்க வில்லை..சொக்கர் மீண்டும் பயப்பட ஆரம்பித்த சமயம்,

மாறா மாறா......என்று முனங்கினாள் அன்னம்..
முதலில் அன்னம் பேசிய வார்த்தை சொக்கர் காதில் விழவில்லை..

மாறா.....மாறா......என்று மீண்டும் முனங்க, அதை கேட்ட சொக்கர் கொதித்தார்..ஆனால் தலையில் அடிபட்டு மயக்கத்தில் கிடப்பவளை என்ன செய்ய முடியும்..கையை பிசைந்து நின்றார்..அன்னத்தின் முனகல் நிற்கவில்லை..

அத்தை, இவ எழுந்ததும் சாப்பிட ஏதாச்சும் கொடுங்க..........சொல்லி விட்டு சென்று விட்டார்...வீட்டை விட்டு வெளியேறிய சொக்கர் தலை மறையும் வரை, வாசலில் நின்று பார்த்த பாட்டி, மீண்டும் அன்னத்திடம் ஓடி வந்து,

இந்தாடி, அவன் போயிட்டான்.. எழுந்திருடி.........
என்று சொல்ல, பட்டென கண்விழித்தாள் அன்னம்..

ஏண்டி, மாடிப்படியில் இருந்து விழுந்தா மாதிரி நடிக்க சொன்னா, நெசமாவே அடிவாங்கி படுத்து கிடக்குறியே,................கேட்டாள் பாட்டி..

எல்லாரும் நம்புற மாதிரி நடிக்க வேண்டாமா சித்தீ..அங்கங்க அடி பட்டுருந்தாதானே தத்ரூபமா நம்புற மாதிரி இருக்கும்...இந்த தலையில் அடி பட்டது கூட பரவாயில்ல சித்தி..மாடி படியிலே உருண்டதுல, இந்த இடுப்பு வலிதேன் உசுரு போவுது..............சொல்லி இடுப்பை பிடித்தாள் அன்னம்..

தெரியும்டி,.. அதேன் விளக்கெண்ணெயோட வந்துருக்கேன்............சொல்லிக் கொண்டே அன்னத்தின் இடுப்பில் எண்ணெயை தடவினாள் பாட்டி..

அவுக,. நம்பிட்டாங்களா சித்தி........

இந்தா, நீ கண்ணு மூடி படுத்துருக்கையில அந்த பைய முகத்தை பார்க்கணுமே...பேய பார்த்த மாதிரி அரண்டு போயில்ல நின்னான்...இப்படியே படுத்துக்க, நான் சொன்ன மாதிரி அப்பப்போ அவனுக்கு வேடிக்கை காட்டு...பைய தானா வழிக்கு வருவான்.............சொன்னாள் பாட்டி..அந்நேரம்,

அத்தை....அத்தை.........அழைத்துக் கொண்டே வந்தாள் ராஜி..

ஆத்தீ இவளா, படுடி, கண்ணை மூடு,.........பாட்டி சொல்ல மீண்டும் கண் மூடி படுத்துக் கொண்டாள் அன்னம்...

~~~~~~~~~~~~~~~

பகல் முடிந்து இரவு உதயமாகி இருந்தது..வீட்டிற்குள் வந்த சொக்கர்,

அன்னம்,.....அன்னம்......அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார்..வீடே அமைதியில் சூனியமாக இருந்தது..

மீண்டும் குரல் கொடுத்தார்,
அன்னம்......அன்னம்......

டாக்டர் சொன்னது போல், அன்னம் குணமாகி இருப்பாள் என்பது சொக்கரின் நம்பிக்கை...அந்த நம்பிக்கையில் தான் அழைத்தார்..பதிலும் இல்லை, அன்னமும் வரவில்லை..

படுக்கை அறைக்கு சென்று பார்த்தார்..இன்னும் படுத்து கண் மூடியிருந்தாள் அன்னம்..அவளை தட்டி எழுப்பினார் சொக்கர், வெகுநேரம் அசைவில்லை...பயந்தவர் எவரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று நினைக்கும் போது,
மாறா மாறா..........என்று முனங்கினாள் அன்னம்...கோபம் வந்தாலும் கட்டுப் படுத்திக் கொண்டு, அன்னத்தை உலுப்பி எழுப்பினார்..கண்விழித்து எழுந்தவள்,

எப்போ வந்தீக,.... சாப்புட்டீகளா.......கேட்டுக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து நின்றாள்..
பயம் நீங்கி பெருமூச்சு விட்டவர்,
நீ என்னடி, இன்னும் தூங்கிட்டு இருக்க,.. சோத்தை எடுத்து வை........அவர் சொல்ல,

இந்தா எடுத்து வைக்கிறேன்......என்று சொல்லி முன் இரண்டடி நடந்து, மாறா.....ஏலே மாறா........என்று அலறிக் கொண்டு மீண்டும் பொத்தென்று தரையில் விழுந்து மயங்கினாள்..இல்லை இல்லை, மயங்குவது போல் நடித்தாள்..பதறி துடித்த சொக்கர்,

லேய்,.... ஏலே பாண்டி,........வேலைக்காரனை அழைத்தார்..ஓடி வந்தான் பாண்டி..

சீக்கிரம் ஓடி போய் டாக்டரை கூட்டியா..அன்னம் மறுபடி தலைசுத்தி விழுந்துட்டா.............அவர் சொல்ல ஓடினான் பாண்டி..

பிறகு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அன்னத்தை தூக்கி கட்டிலில் கிடத்தினார் சொக்கர்..கட்டிலில் படுத்த அன்னம்,
மாறா,...மாறா.....என்று விடாது சற்று சத்தமாகவே சொல்லி புலம்பினாள்..கண்கள் மட்டும் திறக்கவில்லை.. மிகத்திறமையாக நடித்தாள் அன்னம்..

அக்கம் பக்கத்தினர்,

இது வியாதி இல்லடி, புள்ள புள்ளன்னு தேடிட்டு கிடந்துச்சில்ல அதேன் சித்தி மாறன் ஏக்கத்துல இப்படி ஆயிடுச்சி..........என்றாள் ஒருத்தி..

பல வருஷ ஏக்கம்ல... அதேன், மொவன் நினப்புலதேன் பகல்லயும் மாடியிலிருந்து தலைசுத்தி விழுந்திருச்சி மதனி...............என்றாள் இன்னொருத்தி..

இப்படி நெஞ்சுக்குழிக்குள்ள ஏக்கம் விழுந்து படுக்கையில் விழுந்திருச்சின்னா புழைக்கிறது கஷ்டம்டி.. வயசாயிடுச்சில்ல..............சொன்னாள் அடுத்தவள்...உள்ளுக்குள் உருவான உதறலை மறைத்து தெம்பாக காட்டிக் கொண்டார் சொக்கர்..

டாக்டர் வந்து, மீண்டும் சோதனைகள் பல செய்தார்...அன்னம் சதா மாறா மாறா என்று ஜபிப்பதை மட்டும் நிறுத்தவில்லை..

பி.பி நார்மலா தான் இருக்கு,. டெம்பரேச்சரும் நார்மல்தான்...ஆனாலும் ஏன் இப்படி?......யோசித்த டாக்டர், சொக்கரிடம் கேட்டார்,

மாறா மாறான்னு புலம்புறாங்களே,..அது யார்?...........

மாறன்கிறது என் மொவன்தேன்..அவன் இப்போ உசுரோட இல்ல..செத்து போயி பத்து வருஷம் ஆச்சு............... வீரப்பாய் சொன்னார் சொக்கர்..மூடியிருந்த அன்னத்தின் கண்களில் நீர்க் கோடுகள் உருவாகின..

அட என்ன சித்தப்பா இது? என்னதேன் கோபம் இருந்தாலும் உசுரோட இருக்கிற புள்ளைய செத்துட்டான்னா சொல்றது...டாக்டர் சார், மாறன்கிறது இவுக மொவன்தேன், பத்து வருஷத்துக்கு முன்னாடி வேற்று சாதி பொண்ணை கட்டிகிட்டு ஊரை விட்டே போயிட்டான்...சித்தி அவன் பேரைதேன் சொல்லி பொலம்பிகிட்டு கிடக்கு.....................என்றாள் அங்கு நின்ற ஒருத்தி..

ஐயா ..இது உங்க குடும்ப விவகாரம்..நான் இதுல தலையிடக் கூடாது..இது மனசு சம்மந்தப்பட்ட விஷயம்..அம்மா புள்ள நினப்புலதான் தவிச்சிட்டு இருக்காங்க..இது ஆரம்ப ஸ்டேஜ்தான்...இப்போவே ஒரு தடவை உங்க புள்ளைய வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க..அம்மா சரியாயிடுவாங்க..இது நீடிச்சா சாப்பிடாம எனர்ஜி லெவல் குறைஞ்சி உடம்பு வீக் ஆயிடும்..வயசானவங்க.... அப்றம் உங்க இஷ்டம்.............சொல்லி சென்றார் டாக்டர்..

அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருவாரா சொக்கர்......
அன்னம் படுக்கையிலேயே கிடந்தாள்..உண்மையில் அப்படி படுத்திருப்பது அன்னத்துக்கு மிகவும் சிரமமாக இருந்தது..அவ்வப்போது பாட்டி வரும்போது மட்டுமே இயல்பாக இருக்க முடிந்தது..மற்ற நேரங்களில் மீண்டும் அதே மாறா புலம்பல், நடிப்பு என்று கிட்டத்தட்ட இரு வாரங்கள் கடந்திருந்தது... நாட்களின் நகர்வை பற்றி கவலைப்படாமல் விடாது நடித்தாள் அன்னம்..

~~~~~~~~~~~~~~~~

அன்று ஞாயிற்று கிழமை,
தினம் ஒருமுறை எழிலிடமாவது பேசி விடுவாள் அன்னம்..ஆனால் இரு வாரங்களாக அன்னத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை...சொக்க நாதன் இருக்கும் நேரத்தில் அன்னத்தால் ஃபோன் செய்ய இயலாது...அங்கு என்ன நிலைமையோ?....அன்னமே ஃபோன் செய்யட்டும் என்று காத்திருந்த மாறனுக்கு இன்று ஏனோ கவலை அதிகமானது...அடிக்கடி போனையே பார்த்துக் கொண்டிருந்தான்..எழில் அடிக்கடி மாறனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஃபோன் மணி ஒலிக்க ஓடி வந்து பார்த்தான் மாறன்..திரையில் புவனா..உடனே ஆன் செய்தவன்,

அம்மா................என்றான் சத்தமாக..

அண்ணா நான் புவனா...................சொன்னாள் புவனா..

என்னாச்சி புவனா, அம்மா ஏன் ரெண்டு வாரமா ஃபோன் பண்ணல..அங்கே ஒண்ணும் பிரச்சினை இல்லையே..அம்மா என்கிட்ட பேசின விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சி போச்சா?...அப்பா அம்மாவை ஏதாவது.................சொல்லி முடிக்கும் முன்,

அண்ணா, அதெல்லாம் ஒண்ணும் இல்லை.................ஆனால்.......என்று இழுத்தாள் புவனா..

ஆனால் என்ன புவனா??...என்ன ஆச்சு.......... பதறினான் மாறன்..

பெரியாத்தா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்துடுச்சி................என்று புவனா சொல்ல,

அய்யோ.......அம்மாவுக்கு என்ன ஆச்சி...............துடித்தான்..

பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல அண்ணா...தலையில் லேசான அடி..இப்போ காயம் ஆறிடுச்சி...ஆனால், அன்னிக்கி கீழே விழுந்ததில் இருந்து படுத்த படுக்கையா கிடக்கு...நிதம் உன் பேரை சொல்லிதேன் புலம்புது...நேரா நேரத்துக்கு சரியா சாப்புடுறதும் இல்ல...ஒருதடவை நீ வந்து பெரியாத்தாவை பார்த்தா பெரியாத்தா சரியாயிடும்ன்னு டாக்டர் சொல்லிட்டு போனாராம்... பாட்டி உன்கிட்ட சொல்ல சொல்லிச்சி................புவனா சொல்லி முடிக்க அதிர்ச்சியில் உறைந்து நின்ற மாறனின் கையில் இருந்த ஃபோன் நழுவி கீழே விழுந்தது..பதறி போன எழில் ஃபோனை கையில் எடுத்து காதில் வைத்தாள்..எதிர்முனையில் புவனாவின் பேச்சை கேட்டு அதிர்ந்தாள்....கணவனின் தோள் பற்றி ஆதரவானாள்..

என்ன பாட்டி இது?..மாறன் அண்ணன் ஒண்ணும் சொல்லாம ஃபோனை வச்சிடுச்சி..............பாட்டியிடம் சொன்னாள் புவனா..

மாறன் காதுல விஷயத்தை போட்டாச்சில்ல..இப்போ ஃபோனை உங்க அண்ணன் வேலுவுக்கு போடு...இனி மீதி கதையை அவன் பார்த்துகிடுவான்................. சொன்னாள் பாட்டி..

அதையே செய்தாள் புவனா..



பாசமும் பந்தமும்
பிரிவின்றி
தொடரும்....


ஒரு சாதி கொண்டு
மறு சாதி கொல்ல
உயிர் வதை கேட்கும்
புத்தி கெட்ட மானிடா

உன் உடலை இயக்கும்
உன் உயிருக்கு சாதியில்லை
உனக்கு தெரியுமா?.........

சக்தி......
 
Top