• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாத்தியில்லா தீபாவளி🌺🌺🌺3

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
எழிலின் தொடரும் நினைவலைகள்....

மாறன் மீது ஏற்பட்ட காதலை முழுவதும் ஏற்கவும் முடியாமல், முழுவதும் உதறி தள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் எழில்..ஆனால் மாறன் தன் உள்ளக்கிடங்கில் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாக இருந்தான்...எந்த தயக்கமும் இன்றி எழிலை தேடி சென்று சந்திப்பான்...அவனை நேரில் பார்க்கும் போது ஏன் வந்தாய் என்று வினவுபவள், அவன் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் வராமல் இருந்து விட்டால், தவித்து கிடக்கும் தவிப்பின் வலியை அவள் மட்டுமே அறிவாள்...நாட்கள் இப்படியே நகர, அன்று மாறனுக்கு இருபத்தி எட்டாம் வயது என்பதால் கோயிலில் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தார் சொக்கநாதன்....அன்னதான விருந்தில் கலந்து கொள்ள வந்த எழிலிடம்,கூட்டத்தின் நடுவில் அன்று மாறன் கண்களால் உறவாடியது அவர்கள் காதலில் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த அத்தியாயம்...அன்று இரவே தன் வாழ்வு தடம் புரண்டு வேறு திசையில் பயணிக்கப் போகிறது என்பதை எழில் அறியவில்லை..

அன்று எழிலரசியின் தாய் தாயம்மாவும் தந்தை முருகேசனும் குலதெய்வம் கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்ற சென்றுவிட, தமையன் கோபால் நண்பர்களுடன் இரவுக் காட்சிக்கு சென்று விட்டான்.. வீட்டில் தனியாக இருந்தாள் எழிலரசி...சிமெண்ட் சீட்டால் கூரை வேயப்பட்ட சிறிய வீடு அது..

நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழில் வேகமாக கதவு தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள்..இதயம் அதிவேகமாக துடித்தது...கதவு தட்டும் பேரிரைச்சல் நிற்பதாக இல்லை..பயந்து நடுங்கியபடி வந்து கதவை திறந்தாள்...வெளியே நின்று கொண்டிருந்த மாறனை கண்டதும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டவள்,

நீங்க தானா?..நான் பயந்தே போயிட்டேன்...இந்த நேரத்தில இங்கே ஏன் வந்தீங்க.......என்று கேட்க,

வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க.......கேட்டான் மாறன்..

அப்பாவும் அம்மாவும் கோயிலுக்கு போயிருக்காங்க..அண்ணன் நைட் ஷோ போயிருக்கான்...........என்றான் எழில்..

உடனே கிளம்பு, நாம் இங்கேயிருந்து போயாகணும் ..........என்று அவளின் கையை பிடித்தான் மாறன்..

நான் ஓடிப்போக சம்மதிக்க மாட்டேன்னு சொல்லியிருக்கேன்ல..இந்த அர்த்த ராத்திரியில கூப்பிட்டா உங்க கூட வந்துருவேன்னு நினைச்சீங்களா?.......அவள் கேட்டு முடிக்கும் முன்,

அய்யோ எழில், சொன்னா கேளு..இங்கே இருந்தா உன் உயிருக்கு ஆபத்து............என்று மாறன் சொல்லும் போதே, தூரத்தில் சிலர் கையில் ஆயுதங்களுடன் வருவது தெரிந்தது..அதன் பிறகு மாறன் தாமதிக்கவில்லை...அவளிடம் அனுமதியும் கேட்கவில்லை..கதவை இழுத்து பூட்டி விட்டு அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான்..சற்றே தொலைவில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் அவளோடு மறைந்து கொண்டான்..

வந்தவர்கள் வந்த வேகத்தில் வீட்டின் சீட் கூரையில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்தனர்...நெருப்பு வேகமாக பரவி வீடு (சா)தீப்பற்றி எரிந்தது.. தீ வெக்கையால் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் அலறும் சத்தம் அந்த ஆள் அரவம் இல்லாத களம் முழுவதும் எதிரொலித்தது..

நிகழ்வை கண்ட எழில் பயத்தில் நடுங்கி அழுது கொண்டிருந்தாள்...வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டிக்கும் தீ பரவ ஆரம்பித்தது..தான் ஒவ்வொரு நாளாய் பார்த்து பார்த்து வளர்த்த ஆடுகள் தீயில் மாட்டி கொண்டு அலறுவதை காண சகிக்காத எழில் அட்டுப்பட்டியை நோக்கி ஓட முயற்சிக்க, அவளை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகி போனது மாறனுக்கு..

"விடுங்க,...அதுங்க கத்துறதை பார்த்தால் உங்களுக்கு பாவமா இல்லையா...ஒவ்வொண்ணையும் குழந்தை மாதிரி வளர்த்தேனே..என் கண்ணு முன்னாலேயே இப்படி கருகி சாகுறதை பார்க்குறதுக்கா",.............என்று எழில் தன் ஆடுகளுக்காக கதறி அழுதது, ஆடுகளின் அலறலில் கரைந்து காணாமல் போனது...

"பிளீஸ்...அட்லீஸ்ட் பட்டியை அடைச்சு வச்சிருக்கிற கதவை மட்டும் திறந்து விட்டுட்டு வந்துடலாம்",..........என்ற அவளின் தவிப்பு புரிந்திருந்தாலும், இப்போது மற்ற எதையும் விட எழிலை காப்பாற்றுவதே முக்கியம் என்று நினைத்தான் மாறன்..தன் இரும்பு பிடிக்குள் அவளை பொத்தி காத்து நின்றான்..

அந்த சாதி பித்து ஏவிய ஏவலர்கள் அவ்விடம் விட்டு நீங்கியதும், எழிலை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்ற மாறன், அன்று இரவு முழுவதும் தன் நண்பன் ரஹீம் உதவியோடு எழிலை தன்னுடன் பாதுகாப்பாக தங்க வைத்துக் கொண்டான்..

மறுநாள் விடியல் புதிய விருட்சத்துக்கு விதையாய் விடிந்தது...

காவல் துறையிலும் சில சாதி வெறி கொண்ட பித்தர்கள், இருப்பதை தெரிந்து கொண்ட மாறன், எழிலரசியை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றான்.....

மறுபுறம் சொக்கநாதன் நள்ளிரவில் காணாமல் போன மாறனை ஊரை சுற்றி ஆள்களை அனுப்பி தேடினார்...சினிமா பார்த்து திரும்பிய கோபால் வீடு தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்..வீட்டிற்குள் இருந்த எழிலுக்கு என்னவாயிற்றோ என்று பதறியவன், தன் நண்பர்கள் உதவியுடனும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடனும் தீயை அணைத்து முடிப்பதற்குள் விடிந்திருந்தது..அதற்குள் குலதெய்வம் கோயிலுக்கு போன தாயம்மாவும் முருகேசனும் வந்துவிட, வீட்டை சோதனை செய்த தீயணைப்பு வீரர்கள், தீ பற்றி எறிந்த போது வீட்டிற்குள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தனர்... செய்தி சொக்கநாதனை அடைந்ததும் அவர் நடந்தது என்னவாக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டார்...கோபம் தலைக்கேறியது..அவரின் யூகத்தை நிரூபிப்பது போல் ஒலித்தது அந்த பழைய படைப்பு (old version) நோக்கியோ ஃபோன்.....பட்டனை அழுத்தி காதில் வைத்த சொக்கரின் கண்கள் வெறியை நிரப்பிக் கொண்டன..

முருகேசனுக்கும் கலெக்டர் அழைப்பு விடுத்திருந்தார்..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மீனாம்பிகை I.A.S முன் அமர்ந்திருந்தார்கள் இளமாறன், எழிலரசி மற்றும் ரஹீம்..ஏற்கனவே சில பொதுநல பணிகளில் ஈடுபட்ட போது, கலெக்டருடன் மாறனுக்கு நட்பு உருவாகி இருந்தது..

சொல்லுங்க, மிஸ்டர்..மாறன், எழில் வீட்டுக்கு ஆபத்துன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?............கலெக்டர் மீனா கேட்க, தலைகுனிந்தான் மாறன்..

வாட் இஸ் திஸ் மாறன், பதில் சொல்லுங்க.........மீனா..

எங்க அப்பா, அவரு கூட்டாளிங்க கூட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன்...எழில் வீட்டுக்கு தீ வைக்க போறதா பேசிக்கிட்டாங்க........மாறன் சொல்ல, அவனை பார்த்தாள் எழில்.. எழிலின் முகம் பார்க்க வெட்கப்பட்டு வேறு திசை பார்த்தான் மாறன்...

வெகு நேரம் சிந்தித்த பிறகு கலெக்டர் மீனா எழிலிடம் சொன்னாள்..

இதோ பாருங்க, மிஸ் எழில் இப்போ முடிவு உங்க கையிலதான் இருக்கு...பிகாஸ் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி நீங்க ரெண்டு பேர்தான்..நேத்து நைட்டு நீங்க மிஸ்டர். மாறன் கூட வீட்டை விட்டு வந்துருக்கீங்க..அஸ் ய கலெக்டராக நான் இதை உங்களுக்கு சொல்லி தரக் கூடாது..ஆனா இதை உங்களுக்கா மட்டும் இல்ல, இந்த ஊர் நன்மைக்காகவும் தான் சொல்றேன்..இப்போ உங்க முன்னாடி ரெண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு..

இப்போ நீங்க மிஸ்டர்.சொக்கநாதன் மேல கம்பிளைன்ட் கொடுத்தால், மிஸ்டர்.சொக்கநாதனை அரெஸ்ட் பண்ணிடலாம்..அவரு என்ன காரணத்துக்காக வீட்டை எரிச்சாருன்னு எல்லோருக்கும் தெரியவரும்..அஸ் யூசுவல் சாதி கலவரம் உருவாகும்..ரெண்டு சாதிக்காரனும் ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாவான்...

அப்படி நீங்க மிஸ்டர்.சொக்கநாதன் மேல கம்பிளைன்ட் கொடுக்கலைன்னா, நீங்க மிஸ்டர்.மாறனை கல்யாணம் பண்ணிக்கணும்..ஐ நோ யூ லவ் மாறன்........என்று கலெக்டர் மீனா சொல்ல, புரியாமல் விழித்தாள் எழில்..

எஸ் மிஸ்..எழில், தீயிலிருந்து உங்களை காப்பாத்ததான் மிஸ்டர்.மாறன் உங்களை வீட்டை விட்டு கூட்டிட்டு வந்தார்ன்னு சொன்னால், தீ வைக்க போறாங்கன்னு மாறனுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்வி வரும்...கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கிறது நம்ம ஊர் ஆளுங்களுக்கு ஈஸியான வேலை..சோ, நீங்க கம்பிளைன்ட் பண்ணாமலே சாதி கலவரம் வெடிக்கும்..ஊர் பத்தி எரியும்....

இதுவே நீங்க காதலிச்சு வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும், நடந்த தீ விபத்து பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னும் ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டா, இது உங்க பெர்சனல் விஷயம் ஆயிடும்... தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்கிற கேள்விக்கான பதிலை நம்ம ஊர் மக்களோட கற்பனைகிட்ட விட்டுடலாம்....பகை உங்க ரெண்டு பேர் குடும்பத்தோட முடிஞ்சிடும்...........என்று கலெக்டர் மீனா சொல்லி முடிக்க, அமைதி காத்தாள் எழில்...சில நொடி சிந்தனைக்கு பிறகு சொன்னாள்,

நான் மாறனை கல்யாணம் பண்ணிக்கிறேன்",............என்று.. நன்றியோடு எழிலின் முகம் பார்த்தான் மாறன்..

ரெஜிஸ்டரர் வரவழைக்க பட்டு, கலெக்டர் முன்னிலையில் மாறன், எழிலை பதிவு திருமணம் செய்து கொண்டான்..ரஹீம் வாங்கி வந்த பொன்தாலியை எழில் கழுத்தில் பூட்டி அவளை தன் வாழ்வின் துணையாக ஏற்றான் மாறன்..

அதன் பிறகே சொக்கநாதன் படையும், முருகேசன் படையும் அங்கு வந்து சேர்ந்தது...எழில் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து கொதித்தார் சொக்கன்..

யாரை கேட்டு இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சீக..எவ்வளவு துணிச்சல் இருந்தால் இந்த சாணி அள்ளுற கீழ்சாதிக்காரியை என் மொவனுக்கு கட்டி வச்சிருப்பிக........... கலெக்டரிடமே எகிறினார் சொக்கர்..

பெரிய மனுஷன்னு பார்த்தால் ரொம்பத்தேன் எகுறுறீக...எங்க சாதிய பத்தி பேசுற வேலை வச்சிக்காதீக....பொறவு நடக்குற கதையே வேற...........முருகேசன் அணியில் இருந்து சத்தம் கொடுத்தான் ஒரு வாலிபன்..

ஏலேய்,........யாருகிட்ட குரல் உசத்தி பேசுற...பேசின நாக்கை அறுத்துப்புடுவேன்...........சொக்கர் அணியில் இருந்து வந்தது பதில் குரல்..

நீ வெட்டுற வரை நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருப்போமா?... எங்களுக்கும் அருவா தூக்க தெரியும்............இது முருகேசன் அணி..

ஸ்டாப் இட்...இது ரெண்டு குடும்பத்துக்கு இடையில் நடந்த பெர்சனல் பிரச்சினை...இதை பேசி பேசி பொது பிரச்சினை ஆக்கிடாதீங்க...............சத்தமாக நியாயம் பேசினாள் கலெக்டர் மீனா..

அது எப்படி மேடம்,.. இவுக மகன் எங்க சாதி புள்ளைய காதலிச்சது தெரிஞ்சு எங்க சாதிக்காரன் வீட்டுக்கு நெருப்பு வச்சிருக்காக இந்த பெரியமனுசன்..பொறவு எப்படி இது தனிப்பட்ட பிரச்சினை ஆவும்...இது பொதுப்பிரச்சினைதேன்...எங்க சாதிக்கு நடந்த அவமானம்..இதுக்கு பதில் கேட்காம நாங்க விடமாட்டோம்............முருகேசன் அணி இளைஞன் கொதிக்க, கூட்டம் ஆமா, ஆமா என்று கத்தியது...

உங்க சாதி பொண்ணு எங்க புள்ளைய மயக்குன பாவத்துக்குதேன் சாமியே அவன் வீட்டை எரிச்சிருக்கு..நாங்க எதுக்குல இந்த சின்ன பைய வீட்டுக்கு நெருப்பு வைக்கணும்...........விவரம் தெரியாமல் சொக்கர் அணி இளைஞன் கொதித்தான்...இருவர் அணியும் மோதிக் கொள்ள தயாரானது...கூச்சல், குழப்பம்...அந்த கூட்டத்தை சமாதானம் செய்ய மிகவும் சிரமப்பட்டாள் மீனா..நிலமை கைமீறும் முன் அமைதி காக்க நினைத்து,

நீங்க யாராவது வீட்டுக்கு நெருப்பு வச்சவங்கள நேரில் பார்த்தீங்களா?...............சத்தமாக கேட்டாள் மீனா.

யாரிடமும் பதில் இல்லை...பதில் தெரிந்த சொக்கர் பேசவில்லை...

ராத்திரி வீட்டுல இருந்தது எழில்தான்..வீடு எப்படி தீ பிடிச்சதுன்னு அவளுக்கு தான் தெரியும்..அவளை பேச சொல்லுங்க...........முருகேசன் அணியில் எழுந்தது கேள்வி...

மீனா சொல்லி எழில் பேசினாள்.

நானும் மாறனும் அஞ்சு வருஷமா காதலிக்கிறோம்..எங்க வீட்ல சம்மதிக்காததால, நேத்து ராத்திரி அண்ணன் நைட் ஷோ போனதும், நான் வீட்டை விட்டு மாறன்கூட வந்துட்டேன்..எனக்கு வீடு தீப்பிடிச்சதை பத்தி எதுவும் தெரியாது...............என்று பொது நன்மை கருதி பொய் புகன்றாள் எழில்..

அடிப்பாவி, ஒரே பொண்ணுன்னு பாசமா வளர்த்ததுக்கு என் முகத்துல கரிய பூசிட்டியே............பெற்று வளர்த்த தந்தையின் ஆதங்கத்தில் வெடித்தார் முருகேசன்...

இப்போ புரியுதா?.. ஒயர் சார்ட் ஆகி தென்னை ஓலையில் தீ பிடிச்சதால் தான் தீ விபத்து ஏற்பட்டுருக்குன்னு ஃபையர் சர்வீஸ்ல இருந்து ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க..இவங்க காதலுக்கும் இந்த தீ விபத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..இது இவங்க ரெண்டு குடும்பத்தோட தனிப்பட்ட பிரச்சினை..இதை சாதிப் பிரச்சினை ஆக்கி ஊருக்குள்ள கலவரத்தை உருவாக்கிடாதீங்க..பொண்ணை பெத்தவங்களும் பையனை பெத்தவங்களும் மட்டும் இருங்க...மத்தவங்க வெளியே வெயிட் பண்ணுங்க...................என்று மீனா கூற கூட்டம் கலைந்து சென்றது..

"இதோ பாருங்க, இவங்க ரெண்டு பேரும் மேஜர், இவங்க விருப்பப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்க இவங்களுக்கு உரிமை இருக்கு..இவங்க சேர்ந்து வாழக்கூடாதுன்னு சொல்ல இங்கே யாருக்கும் உரிமை இல்லை..ஜாதிக்கு பயந்த இவங்க ரெண்டு பேரும் சட்டத்தின் பாதுகாப்பு தேடி வந்துருக்காங்க..சாதியில்லாத கல்யாணத்துக்கு சட்டம் என்னைக்கும் ஆதரவு கொடுக்கும்..உங்க ரெண்டு பேரால மாறன், எழில் உயிருக்கு ஆபத்து வராதுன்னு உறுதி சொல்லி கையெழுத்து போட்டுட்டு நீங்க கிளம்பலாம்",...................என்று முருகேசன் மற்றும் சொக்கலிங்கத்திடம் கையெழுத்து வாங்கி அனுப்பினாள் கலெக்டர் மீனா..கண்கள் வெறியை கக்கியபடி வெளியேறினார் சொக்கர்...மகள் செய்த துரோகத்தின் வலியேந்தி சென்றார் முருகேசன்....

பயமும்,கவலையும், குற்ற உணர்ச்சியும் ஆட்கொள்ள கண்களில் நீரேந்தி நின்ற எழிலிடம்,

எழிலரசி நீங்க படிச்சவங்க, உங்களால புரிஞ்சிக்க முடியும்.. சாதியில்லாத விதைதான் ஆரோக்கியமான விதை...இப்போ சமுதாயத்தில் தூவப்பட வேண்டியதும் இந்த ஆரோக்கியான விதைகள் தான்..ஆரோக்கியமான விதைகளில் தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்..நம்ம சமுதாயத்தை ஆரோக்கியமான சமூகம் ஆக்குவதற்கான முதல் அடியை நாம எடுத்து வைப்போம்..சாதி,மத,இன வேறுபாடு கடந்த ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வித்திடுவோம்.....................பாதை சொல்லி வழியனுப்பினாள் மீனாம்பிகை I.A.S...

எழிலும், மாறனும் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வரவும், சாதியின் கோபக்கனல் கொண்டு மகனை எரிக்க காத்திருந்தார் சொக்கநாதன்..

அவரை பார்த்து பயத்தில் மாறனின் கையை இறுகப் பற்றினாள் எழில்..ஆதரவாய் அவளின் கரம் பற்றினான் மாறன்.....



எழிலின் நினைவில்
சாதி நெருப்பு குளிர்ந்து
மலர் தூவும்............

சக்தி.......
 
Top