• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
23
செம்மஞ்சள் சாயம்
பாகம் - 01

நிசப்த கானம். வான் நட்சத்திரங்களும் அவளும் அவர்களும்.... அந்த முற்றத்தில்.

அந்த முற்றத்தை வெண்மாக்கோலங்களால் ஓவிய முற்றமாக மாற்றியிருந்தாள் அவள். குளித்து முடித்து வெள்ளை துணியினால் தலையை முடிந்த அவளைக் கண்டு விண்மீன்களும் கண்சிமிட்டி இரசிக்க அவளோ அந்த இராமரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்மனின் அறுபத்தைந்தாவது கலையாக பிரசவித்த இவள், அங்கு இசைக்கப்பட்ட இராம கானங்களுக்கும் இசைத்தாளங்களுக்குமே கலைவாணியாகத்தான் இருந்தாள் அந்த முற்றத்தில்.

இராமர் கம்பத்தை தூக்கிவந்த பக்தர்கள் பாதம் நனைய கம்பத்தைச் சுற்றி நீர் ஊற்றி, ஊதுபத்தியை புகைத்து, கற்பூரம் காட்டி, சாம்பூராணி புகை பரப்பி, முதல் நாள் தொடுத்து வைத்திருந்த மாலையை அணிவித்துவிட்டு இராமரை விழுந்து வணங்கி நின்றாள் கயல்.

இனி அடுத்தடுத்த வீடுகளுக்கெல்லாம் சென்று முடிக்க சூரியனும் உதயமாகி விடுவான். முதல் சுற்று பனிய லயத்திலிருந்து ஆரம்பித்திருந்தால் இவளது வீடு வந்து சேர சூரியனும் எட்டிபார்த்திருப்பான். பிரம்ம முகூர்த்தத்திலேயே அவளது வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று இவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத்தான் மேல் லயத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவள் வீடு இரண்டு காம்பரா வீடு. இரண்டு வீடுகள் ஒட்டியிருக்கும். மேல் லயத்திலிருந்து இவள் வீட்டு வழியாகத்தான் பனிய லயம் செல்ல வேண்டும்.

இவளது பூஜை முடிய கம்பம் பனிய லயத்தை நோக்கி புறப்பட்டது. இவளோ நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"கயல்...., இன்னும் வெளிய என்ன செய்ற? கம்பம் பனிய போய் எவ்ளோ நேரம்? கதவ மூடிட்டு உள்ள வா"

பாதி தூக்கத்திலேயே தாய் இலங்கேஸ்வரி கூவி அழைக்க,

கதவை மூடிவிட்டு உள்ளேச் சென்றவள் தலையிலிருந்த வெள்ளைத்துணியை அவிழ்த்து தலையை இரண்டு மூன்று முறை தட்டி , காயவிட்டாள். தலைமுடி ஓரளவு காய்ந்தபிறகு சாலையில் அக்கா, அம்மா,அப்பா, தம்பி என இருந்த அந்த வரிசையில் அம்மாவின் அருகில் இருந்த இடைவெளியில் இவளும் போய் படுத்துக்கொண்டாள்.

அனைவரும் நித்திரையில். மூச்சு சத்தம் மட்டுமே அந்த சாலையை நிரப்பியிருந்தது. கயல் கண்களை மூடினாள்.

ஆனால் தூக்கம் தட்ட வில்லை. எப்படி தூக்கம் வரும். விடிந்ததும் பனிய லயம், மேல் லயம் முற்றத்து கோலங்களை எல்லாம் பார்க்கச்செல்ல வேண்டுமே.
விடிந்ததும் தோழிகள் வந்துவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டு முற்றமும் கயலின் கண்களைத் தேடி வந்து காட்சியளித்தது. தோழிகளோடு சுற்றித்திரிவதற்காகவே நாளைய நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

கயலின் கண்கள் மூடிக்கொள்ள, விரைவாகவே சூரியனும் வந்து கதவை தட்டினான்.

இலங்கேஸ்வரி இடுப்பில் ஆடைக்கு மேல் ஓரு சாக்கை கட்டிக்கொண்டு, முதுகில் ஒரு கூடையையும் தொங்கவிட்டுக்கொண்டு பனிகளோடு தேவதையாக அந்த மலை வழியே தேயிலை தோழிகளைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றாள்.

குடு குடுவென ஓடும் வயது வந்த குழந்தைப்போல் அவள் அந்த குளிர் பனிக்குள் ஓடிக்கொண்டிருந்தாள். வெகுவாகச் சென்று தோழிகளை பிடிக்கத்தான் இந்த ஓட்டம்.

அவள் ஓட்டத்தையும்தான் நடந்தே வந்து பிடித்துவிட்டான் இலங்கஸ்வரியின் கணவன் இளங்கோ.

திரும்பி பார்க்காமலேயே தன்னை நெருங்கிவருவது கணவன் இளங்கோதான் என்பதை தெரிந்துக் கொண்டாள். அந்த நேரத்தில் அந்த வழியாக வேறு யார்தான் வரப்போகிறா? என்பதையும் தாண்டி, இது வழமையாக நடப்பதொன்றுதான்.

விடியல் முன்பே எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்து வைத்துவிட்டு, இளங்கோவிற்கும் ஒரு உணவுப் பொதியைச் சுற்றி வைத்துவிட்டு, அவளுக்கும் ஒரு பொதியை எடுத்துக்கொண்டு வேக வேகமாய் நடந்தும் ஓடியும் பாதி தூரம் சென்றப் பின் தான் இளங்கோ படுக்கையைவிட்டே எழுப்புவான்.

ஆனாலும்.... எப்போதுமே இந்த முச்சந்தியில் இலங்கேஸ்வரியை பிடித்துவிடுவான். சிலவேளை அந்தச் சந்தியில் அவர்கள் சந்திக்கொள்ளாவிட்டால் முழு நாளுமே இருவருக்கும் ஏதோ குறைப்போலத்தான் இருக்கும்.

இலங்கேஸ்வரி முன்னே நடக்க இளங்கோ பின்தொடர்ந்தான். அவளைக் கடந்துப் போக முடியாமல் இல்லை. அவளுடன் கதைக் கொடுத்துக்கொண்டே போவதற்காகத்தானே அத்தனை வேகமாய் வந்துச் சேர்ந்தான்.

" மேசையில ரொட்டி சுட்டு சுத்தி வச்சியிருந்தென். எடுத்துகிடிங்களாங்க?"

"அடி போடி, நீயும் ஓ சாப்பாடும். நா அந்த காஞ்சிப்போன ரொட்டிய எடுக்கல"

"ஓ.....அப்படியோ... அப்போ...சுடச்சுட ரொட்டி கொடுக்க யாரும் இருக்காங்களோ...? " என முகத்தைத் தூக்கிக்கொண்டு கோபப்படுவதுப் போல் பாசாங்குச் செய்தாள்.

"என்ன... இலங்கேஸ்வரியம்மாவுக்கு கோவம் வந்துருச்சி போலயே..." மனைவியை சமாதானம் செய்வதென்றால், இப்படிதான் அவள் பெயரை முழுமையாகச் சொல்லி அம்மாவையும் சேர்த்துக்கொள்வான்.

அவளும் இப்படி சொன்னதும் உள்ளூர சமாதானமாகிவிடுவாள். ஆனாலும் வெளியில் பொய் கோவத்தை தொங்கதொங்கவிட்டுக்கொண்டு உம்மென இருப்பாபாள்இன்றும் அப்படித்தான்.

" அடி....நீ வேற...,
ஏ பொண்ட்டி சமையல தவிர வேர யார் சமையல நா சாப்பிடப்போறே? உப்புச் சப்பு இல்லாட்டியும் அததான் சாப்பிடுவன்..." என அவன் சொல்ல,

ஒரு பக்கமாய் உதட்டை அசைத்து கருவிழிகளையும் அத்திசையில் வைத்து ஓரப்பார்வை பார்க்க, பின்னால் வந்துக்கொண்டிருந்த இளங்கேசும் அவளின் அந்த பார்வைக்காக அவளோடிணைந்து நடந்தான்.

"பிறகு யே சாப்பாடு எடுக்கலயாம்? பசிக்கும்தானே? பட்டினியா இருக்கப் போறிங்களோ?"

"அடி இல்லடி, நா இன்னைக்கு தொரயோட வாகனத்துக்கு பெட்ரோல் போட டவுனுக்கு போகனும். டவுன் போகும் போது வீட்டுக்குப் போய் சாப்புட்டுக்கிறன்"

"ஆமா....நீ சாப்பாடு எடுத்துகிடியா இலங்கேஸ்?"

"ஆமா ஆமா, எடுத்துகிட்டுத்தான் போறே. "


சிறியதொரு அமைதியின் பின்,

"ஆமான்டி...புள்ளங்களுக்கு என்ன செஞ்சி வச்சிட்டு வந்துருக்க? "

"ரொட்டிக்கு மாவு பெனஞ்சி வச்சிட்டு வந்திருக்கன். கயலுக்கும் நவீனுக்கும் சுட்டுகொடுக்கச் சொல்லி ரஞ்சிதாகிட்ட சொல்லிட்டு வந்தென் "

" அடி என்னடி, புள்ளங்க வெறும் ரொட்டியவா சாப்புடுங்க" கொஞ்சம் கடுகடுத்தான் இளங்கோ.

"அய்யே.... அவ்ளோ அக்கறையா இருந்தா காலைல வெல்லனா எழும்பி கூடமாட ஒதவி செய்யனும். நா ஒருத்தி எவ்ளவு வேலையத்தான் செய்றதாம் " என சொல்லி சற்றுத் திரும்பி இளங்கோவின் முகபாவத்தை அவதானித்துவிட்டு மீண்டும் திரும்பினாள்.

"அதெல்லாம் ரஞ்சிதா பாத்துக்குவா. புள்ளங்கள பத்தி யோசிக்காம, போய் கவனமா வேலைய செய்ங்க. அப்புறம் இதயே யோசிச்சிகிட்டு மெசின்ல ஏதும் கைய போட்டுறாம"

நடையை சற்று விரைவுபடுத்தி இலங்கேஸ்வரியை கடந்துச் செல்ல , சற்றுத்தூரத்தில் தேயிலை தொழிற்சாலையும் தென்பட்டது.

"சரி சரி.... எப்படியோ புள்ளங்க சாப்டால் சரிதான். நீயும் பொம்பளைகளோட கத பேசிட்டுகிட்டு சாப்புட மறந்துறாத. உழைக்கிறதே சாப்புட்றதுக்காகத்தான். புரியுதா ?"

"ம் ம்...."

இலங்கேஸ்வரியின் இந்த "ம்" கணவனின் அன்பை உணர்ந்த தருணத்தில், வார்த்தைகள் அமைதியாகி அடங்கிவிட்டப்பின் வெளிவந்த ஒரு ஓசையாகவே இருந்தது. .

ஒரு சிறு தூர அமைதியோடு தொழிற்சாலை வாயிலை அடைந்தான் இளங்கோ.

இவ்வளவுதான் இவர்களுக்கிடையிலான ரொமேன்ஸ் (ஊடல் கூடல்) மீண்டும் ஓடத்தொடங்கினாள் இலங்கேஸ்வரி.

பனிய லயப் பெண்கள் வரிசை இடதுபுறம் படையெடுத்து வந்துக்கொண்டிருந்தது. அதுபோல வலது புறமிருந்து மேட்டு லயப் பெண்கள் வரிசையும் வந்துக்கொண்டிருந்தது. இரண்டும் பிரதான பாதையில் இணைய இலங்கேஸ்வரியும் கடைசி நபராக இணைந்துக்கொண்டாள்.

கூடையின் நாடாவை தலையோடு மாட்டி, துணியினால் அதை போர்த்தியெடுத்திருந்தார்கள் பெண்கள். பாடசாலை மாணவர்கள் போல் வரிசையாக தொழிலுக்கு செல்லும் பெண்கள். பார்க்க மிக நேர்த்தியாக இருந்தது.

இந்த வரிசையில் ஒரு ஒழுங்கும் இருக்கத்தான் செய்தது. அதைவிட, மேலதிகாரிகளினால் சொல்லப்பட்ட இவ்வொழுங்கு வெறும் ஒழுங்கிற்காக நடைமுறைபடுத்தப்படுவதாகத் தெரியவில்லை.



பெண்கள் பச்சை செடிகளுக்குள் புகுந்துக்கொண்டார்கள். அதற்குள் அந்த பெண்கள் நீண்ட பரந்த மேல்நாட்டு வட்டச் சட்டையை அணிந்த பச்சை தேவதைகள் போல , மிக அழகாகவே இருந்தார்கள்.



வானம் முழு வெண்மையானது.

ரஞ்சிதா தம்பி ரமணனை தாயார் செய்து பாடசாலைக்கு வழியனுப்பிவைத்துக்கொண்டிருந்தாள். கயல் இன்னமும் படுக்கைமயிலிருந்து எழுந்திருக்கவில்லை. ரஞ்சிதா, கோலமிட்டிருந்த பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை கூட்டிப் பெருக்கிவிட்டு, அம்மா,அப்பா,தம்பி,தங்கை அனைவரும் சேர்த்து வைத்திருந்த உடுப்பு மூட்டையை துவைத்து பிழிந்து காயப்போட்டுவிட்டு, இரவு சாப்பாட்டோடு போடப்பட்டிருந்த சமையலறை பாத்திரங்களையெல்லாம் கழுவி அழகாக அடுக்கி வைத்துவிட்டு, சமையலறையையும் பெருக்கிவிட்டு, சாலையைப் பெருக்குவதற்காக தும்புத்தடியோடு சென்றாள் சாலைக்கு.

கயல், படுக்கையிலிருந்து எழும்புவதற்கான உத்தேசம் இன்றியே தூங்கிக்கொண்டிருந்தாள்.

"கயல்....இப்ப எத்தன மணி? இன்னும் தூங்குறியா? இப்ப எழும்பலனால் உன்னையும் சேர்த்துதான் கூட்டியெடுக்கப்போறேன் பாரு. "

என ஒரு போடு போட்டுவிட்டு சாலையோடு ஒட்டியிருந்த இன்னமொரு அறையை பெருக்கச் சென்றாள் ரஞ்சிதா.


"கயல் ..... கயல்......' என அழைத்தவாறே அனுமதியின்றியே உள் நுழைந்தார்கள் கயலின் தோழிகள்.

"அடி , எழும்புடி. பனிய லயத்துக்கு போறது இல்லையா? எங்கள வர சொல்லிட்டு நீ தூங்கிட்டுருக்க? "

அப்போதேதான் நேற்று பேசிக்கொண்டதெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது. உடனே படுக்கையைவிட்டு எழுந்தவள் பத்தே நிமிடத்தில் முகம் கழுவி, உடை மாற்றி, தலை வாரி வந்தாள்.



"வாங்கடி போவோம்" என கயல் முன்னால் செல்ல, தோழிகளும் கூடவே சென்றார்கள்.


"கயல் எங்க போற? அம்மா வந்தா ஏசும். " ரஞ்சிதா வாசற்படியில் இருந்து கேட்க,


"பனிய லயத்துக்குதான். சீக்கிரம் வந்துருவம். அம்மாகிட்ட சொல்லாத அக்கா பிளீஸ்...." என ரஞ்சிதாவின் பதிலுக்காக காத்திருந்தால் எங்கே தடுத்துவிடுவாளோ என்றெண்ணி நிற்காமல் ஓடியே சேர்ந்துவிட்டார்கள்.


படுக்கையை கூட மடித்து வைக்காமல் சென்றவளைப் பார்த்து சற்றும் கோபமோ சலிப்போ கொள்ளாத ரஞ்சிதா அவள் வேலைகளை தொடர்ந்தாள்.



வழியில் இருந்த தேயிலைச் செடிகளில் தேயிலைக் காய்களை பறித்து ஒவ்வொன்றாக வாயில் போட்டு கொறிந்துக்கொண்டே கதை பேசி பேசியே நடந்தார்கள் கயலும் அவள் தோழிகளும்.


இலங்கையின் அப்பிள் என சொல்லப்படுகின்ற பெயார்ஸ் பழங்கழையும் பறித்து ஒரு பையில் சேர்த்துக்கொண்டு அங்கிருந்த ஒரு கற்பாறையில் வட்டமாக அமர்ந்துக்கொண்டார்கள்.


ஒருத்தி இடுப்பில் மடித்து வைத்திருந்த உப்பை எடுத்து நடுவில் வைத்தாள். பெயார்ஸ் காய்களை எடுத்து வைத்தாள் இன்னொருவள். ஆளுக்கொரு காயை எடுத்து உப்பு தொட்டு சுவைத்து இரசித்து சாப்பிட்டார்கள். மிஞ்சும் காய்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. மீறி கொண்டுப்போனால், சென்ற இடம் வந்த இடம் எல்லாம் கேட்டு வீடுகளில் அர்ச்சனை செய்யத்தொடங்கிவிடுவார்கள். அதனால் அனைத்து காய்களையும் சாப்பிட்டு முடித்துவிட்டுதான் அந்த இடத்திலிருந்தே எழுந்தார்கள்.


எழுந்து சற்றுத் தூரம் நடக்க, பாதைக்கு குறுக்காக ஓடிக்கொண்டிருந்த தண்ணீர்க்காணில் கைகளை கழுவிக்கொண்டு நடை பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

ஒருவாராக லயத்தை நெருங்கிவிட்டார்கள்.

ஆமாம், அந்த தண்ணிக்காணை தாண்டி இரண்டடி வைத்தால் லயத்தின் ஒரு நுனியை தொட்டு விடலாம்.

அந்த தொங்கலிலிருந்துப் பார்க்கும்பொழுது ,

ஒரு பாதியாக நீண்ட வரிசைக் கட்டிடம் இருக்க மறுபாதியாக நீண்ட வரிசை முற்றங்கள் பூக்கோலங்களுடனும் மாக்கோலங்களுடனும் மிக அழகாக சிரித்துதுக்கொண்டிருந்தன.

கன்னிகள் ஒவ்வொரு கோலமாக பார்த்து அவர்களுக்குள் குசுகுசுத்துக்கொண்டு மதிபெண்களும் போட்டுக்கொண்டே வந்தார்கள்.

கயலின் கோலங்களை விட பிரமாண்டமான கோலங்கள் அந்த முற்றத்தில் இருக்க, வாலைக் கொஞ்சம் சுருட்டியே வைத்துக்கொண்டாள் கயல்.

கோலத்தையே பார்த்துக்கொண்டு வந்தவள் எதனுடனோ மோதி ஒரு சுற்றி சுற்றி தட்டுத்தடுமாறி நின்றாள்.

"ஹேய்.... உனக்கு கண்ணு தெரியலயா" தடித்த ஒரு குரல் பெண்களையே மிரட்டி ஒலித்தது.


"அய்யோ....சோரி அண்ணா, கோலத்தையே பாத்துகிட்டு வந்தேனா.....?" கண்களை பிதுக்கிக்கொண்டு வார்த்தைகளை இழுத்தாள் அவள்.


"கோலத்த பார்த்தா கண்ணு தெரியாதா உனக்கு?" பரிதாபம் இன்றியே மேலும் மிரட்டினான் அந்த காளை.

பயத்தில் பேச்சு வராமல் விழிகள் பிதுங்கி தடுமாறிக்கொண்டிருந்தாள்.


"ஆமா...., இது ஒரு வீடு. இது ஒரு வாசல். இதுக்கெல்லாம் ஒரு கோலம்.... இந்த கோலத்தையெல்லாம் உலகத்துல தூக்கி வச்சி கொண்டாடப்போறாங்கப் பாரு...." பொரிஞ்சித் தள்ளினான் இளங்காளை .

" ஹெலோ, அவ தெரியாமல் மோதிட்டா. அதுக்கு எதுக்கு இப்போ சம்மந்தமே இல்லாம கத்துறிங்க? வீட்டு வாசல்ல கோலம் போட கூடாதா? அதுல என்ன தப்பிருக்கு?
இல்ல.... கோலத்த பார்க்கத்தான் கூடாதா?

இடுப்பில் கைவத்துக்கொண்டு அந்த ஐந்தரை அடி ஆண்மகனான கதிர் பாரதியின் எதிரே நின்று பேசினாள் வாயாடி கயல்.

"இங்க பாருங்க, வாசல் நிறஞ்சி...எவ்ளோ அழகா இருக்குன்னு."
கைகளை முன்னோக்கி நீட்டி முழு வாசலையும் காட்டி பூரித்து பேசினாள் கயல்.


"கோலம் போட்றது தப்பில்ல, அத வீட்டு வாசல்லத்தான் போடனும். குதிர கட்டுற லயத்து காம்பரா முன்னாடி இல்ல " கோபத்தில் எதையோ சொல்லிவிட்டான் இளங்காளை கதிர் பாரதீ.


"இவெ(ன்) என்ன உலருரா? படிச்சி கூடிட்டா இப்படித்தான் போல... இரசணக்கெட்டவனா இல்ல இருக்கான்"

பெண்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டார்கள்.


"உங்களுக்கெல்லாம் .....சொல்லி புரியாது.... சரி இப்படியே கெடங்க" என அவன் நகர முற்படுகையில்,


"ம்... எங்கக்கிட்ட பேசி வெல்ல முடியுமா?" என்பது போல நக்கலாய் சிரித்தாள் கயல்.

"ச்சி போடி.." என அவளை ஒரு தள்ளு தள்ளிவிட்டு நகர்ந்தான் கதிர் பாரதி.




......தொடரும்......
பிரியமான தீ
பிரியபாரதீ
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
நைஸ் :)
 
Top