• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிங்கிள் பேரன்ட் - ஸ்ரீ விஜய்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
சிங்கிள் பேரண்ட்


அந்த மழைநேர பின்னிரவில் ரஞ்சனியை அவசரமாக எழுப்பியது, அவளின்கைப்பேசி!
நேரம் இரவு மூன்று!

பேசிய அடுத்தநிமிடம் இரவுஉடையிலிருந்து சல்வாருக்குள் புகுந்தவள் திரும்பிப்பார்க்க, கட்டிலில் அழகாய் தூங்கிக்கொண்டிருந்தாள் ரஞ்சனியின் பதினான்குவயது மகள் ராகவி.

தூங்கும் மகளின் நெற்றியில் முத்தம் வரைந்தவள் ஸ்டிக்கரில் குறிப்பெழுதி, கட்டிலின் தலைமாட்டில் வைத்துவிட்டு வெளியேவந்து, அந்த ஐந்தடுக்கு மாடிக்கட்டிடத்தில் லிஃப்ட்டின் துணையோடு கீழிறங்கி, போர்டிகோவில் இருந்து தன் நீலநிற பலெனோவை எடுத்து, ஆளரவமற்ற சாலையில் பயணித்தாள்.

காருக்குள் தெறிக்கும் தூறல்களுக்கு இடம்கொடுத்தவளின் மனதில் பழைய நினைவுகள்! அதையெல்லாம்தாண்டி மழையில் துளிர்த்திருக்கும் பூவிலையாய், வைராக்கியத்தில் வளர்ந்திருக்கும் தன் பொருளாதாரநிலை சிறுகர்வத்தைத் தந்தது.

பலெனோ நகரத்தின் பிரபலமருத்துவமனை ஒன்றில் போய்நின்றது. நிதானமாக இறங்கிநடந்தாள். வரவேற்பறையில் அரைத்தூக்கத்திலிருந்த பெண்ணிடம் விசாரித்து அவள்சொன்ன அறைஎண்ணைத் தேடி நுழைய, ஒரு வயதானஅம்மாள் ஆயாசமாக படுத்திருந்தார். செவிலி ஏதோவொரு ஊசியைக் குத்திக்கொண்டிருந்தாள். அவளின் பின்னே அந்த அம்மாளுக்கு சிசுருஷை செய்யும்பெண்!

"ரஞ்சனி வந்திருக்கேன்."

அடுத்த கணம் விழி மலர்த்தியவர், "ரரஞ்சனி…" என்று தீனமான குரலில் அவசரமாகக் கேட்க,

செவிலிப்பெண், "நான்தான் உங்களுக்கு கால் பண்ணேன் மேடம். இவங்க உங்கள பார்க்கணும்னு சொன்னாங்க." என்றாள்.

"இவங்களுக்கு?"

"யூட்ரெஸ்ல நீர்க்கட்டி! யூட்ரெஸ் ரிமூவ் பண்ணியாச்சு. பிபி, சுகர்னு எதுக்கும் குறைச்சலில்ல. இன்னிக்கு ஒருநாள் இருந்துட்டு நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகலாம்." என்றவள் அவரை ஒருமுறை பார்த்துவிட்டு தொடர்ந்தாள். "நைட் முழுக்க தூங்கல. ரொம்ப கில்டியாவே பேசிட்டு இருந்தாங்க. மருந்து குடுத்திருக்கேன். நீங்க கொஞ்சநேரம் பேசிட்டு தூங்க சொல்லுங்க." என்றவள் மென்னகையோடு நகர்ந்தாள்.

இதற்குள் அந்தம்மாள் அருகிருந்த பெண்ணின் உதவியோடு நிமிர்ந்து அமர்ந்திருந்தார். தன்முன் தாடை உயர, சாந்தமான முகத்தோடும் கனிவற்ற கண்களோடும் நிற்கும் ரஞ்சனியை ஏறிட்டார். "என் புள்ளைய நானே வளர்த்துக்குவேன்னு திமிரா போனியே? வளர்த்துட்ட போலிருக்குது?" என்றவரின் பேச்சில் தாக்குதலிருந்தாலும், கண்ணோரம் மையிட்டதைப்போல் கண்ணீர் வந்துநின்றது.

அறையில் சொந்தங்கள் யாருமில்லாமல் அவர் தனிமையிலிருப்பதை உணர்த்தும்பொருட்டு, "சொத்துல ஒத்தபைசா கூட கிடையாது. நகைநட்டெல்லாம் மத்த பேத்திங்களுக்குதான் குடுப்பேன்னு சொன்னீங்களே? குடுத்துட்டீங்க போலிருக்குது?" என்றவளின் பேச்சில் எள்ளலிருந்தாலும், முகத்தின் சாந்தம் துளியும்குறையவில்லை.

"என்னடீ குத்திக்காட்டுறியா?"

"உங்களை குத்திக்காட்டறது என் நோக்கமுமில்ல; அதுக்கெனக்கு நேரமுமில்ல! எதுக்கு என்னைப் பார்க்கணும் சொன்னீங்க?"

"ரஞ்சனி, ரா… ராகவி… என்பேத்தி… எப்டி இருக்கா?" என்றவரின் இத்தனைநேர நிமிர்வு நிலைகுலைந்து, தவிப்பாய் மாறியது.

பதினைந்து வருடங்களுக்குமுன், தன் கடைக்குட்டி மகன் காதல் என்று வேற்று ஜாதிப்பெண்ணான ரஞ்சனியை திருமணம் செய்துகொண்டதை ஜீரணிக்கமுடியாத வேதகற்பகம் அம்மாள், மகனைப் பிரிந்திருக்க முடியாது வேறுவழியின்றி அவளை தன்வீட்டிற்குள் அனுமதித்தார்.

வந்தவளை மற்ற மருமகள்களின்முன் வேலைக்காரியாகவே நடத்தினார். ஒருவருடம் அங்கே நரகத்தைப் பார்த்த ரஞ்சனிக்கு, ராகவி பிறந்ததில் சற்றுநிம்மதி! ஆனால் குரூர எண்ணம் கொண்ட கடவுள், ரஞ்சனியின் கணவனை ஒருவிபத்தில் தன்னோடு அழைத்துக் கொண்டார்.

இத்தனைநாட்களும் இந்தவீட்டில் யாருக்காக அனைத்துக்கஷ்டங்களையும் பொறுத்துப்போனாளோ, அவனே இல்லாதபோது, எதற்காக முதுகெலும்பற்று கிடக்கவேணுமென்ற வைராக்கியத்தில் மாமியாரை எதிர்த்து, கைப்பிள்ளையோடு வெளியேறினாள்.

அங்குள்ள யாருக்கும் அவள் தேவையில்லைதான்! வேதகற்பகத்திற்கு மட்டும் பேத்திபாசம் சிறிது இருந்தது. அதையும் மகள்களும் மகன்களும் சொத்தில் அந்தகுழந்தையும் பங்கிற்கு வந்துவிடுமென அஞ்சி அம்மாவை மூளைச்சலவை செய்துவிட்டனர்.

அதன்பின் ரஞ்சனி படித்த படிப்பை நன்கு உபயோகிப்படுத்திக்கொண்டாள். அவளின் நேர்மையான உழைப்பில் திருப்தியாக, அழகாக செல்கிறது வாழ்க்கை!

இப்போது ரஞ்சனி சொன்னது முற்றிலும் உண்மை! வேதகற்பகம் தன்சொத்துக்களை அவர் வாரிசுகளுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டார். அதனால்தான் இந்த தனிமை! மருத்துவமனையில் சேர்த்து, உதவிக்கு ஒருபெண்ணை வைத்துவிட்டு தங்கள் கடமை தீர்ந்ததென யாவரும் ஒதுங்கிக் கொண்டனர்.

இப்போதுதான் அவருக்கு மனிதர்களைப் படிக்க முடிந்திருக்கிறது. மனதின்மூலையில் சதா அரித்துக்கொண்டிருக்கும் குற்றஉணர்வும் குட்டிப்பேத்தியின் மீதான பாசமும் எல்லாவற்றையும்விட எங்கே பேத்தியைப் பாராமலேயே செத்துவிடுவோமோவென்ற அச்சமும்தான் ரஞ்சனியை அழைக்கச்செய்திருக்கிறது.

மழை சாலையைக் கழுவிவிட்டிருந்தது. மரணபயம் மாமியாரின் மனதைக் கழுவிவிட்டிருந்தது.

படுக்கையில்கிடப்பவரை எள்ளிநகையாட விரும்பாத ரஞ்சனி, "நல்லாயிருக்கா. காலைல கூட்டிட்டு வர்றேன்." என்றுவிட்டு திரும்ப,

"ரஞ்சனி, என்பேத்திக்காக என்நகைகள் எடுத்துவச்சிருக்கேன். தயவுசெஞ்சு மறுக்காம வாங்கிக்கோ!" என்று இறைஞ்சவே செய்தார்.

இன்று பேத்திக்காக இறைஞ்சும்இவர் அன்று, 'தன்னந்தனியாக ஒரு குழந்தையை அதுவும் பெண்குழந்தையை எப்படி பாதைமாறாமல் வளர்க்கிறாயெனப் பார்க்கிறேன்' என்று தன்பேத்தி என்பதை மறந்து சவால்விடுத்ததை நினைத்துப் பார்த்தாள் ரஞ்சனி.

நடக்கக் கற்றுக் கொடுத்ததுமுதல் நேற்றுகாலை பூப்பெய்தியவளுக்கு அணையாடை மாற்ற சொல்லித்தந்ததுவரை மனக்கண்ணில் வலம்வந்தது. இயல்பாகவே ஒருதாயாய் மனம் பூரித்தது. தன்னம்பிக்கை தந்த நிமிர்வில் 'சிங்கிள் பேரண்ட்' என்று அசாத்திய கர்வம் முளைத்தது.

 

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
சிம்பிள் நீட் அண்ட் நெத்தியடி கதை 😍😍😍...

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்ரீ 😍..
 

ஸ்ரீவிஜய்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 5, 2021
Messages
2
சிம்பிள் நீட் அண்ட் நெத்தியடி கதை 😍😍😍...

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்ரீ 😍..
உங்க கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மோகனா❤️❤️
 
Top