• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
இனிய நட்புக்களே 💐💐💐

எழுதிய ஐந்து கதைகளும் ஏனோ கிட்டத்தட்ட (?) ஆன்டி ஹீரோ சாயில் பூசிக் கொண்டது.

அந்த வர்ணத்திலிருந்து மாற்று வர்ணம் தீட்ட உங்கள் முன் களம் குதித்துள்ளான் புதிய கதாநாயகன் வசீகரன். அவன் பண்பாலும், அன்பாலும் காதலாலும் உங்களை வசீகரிப்பான்.


எந்தக் கதையாக இருந்தாலும், அந்தக் கதையில் பெண்ணை மிளிர வேண்டும் அதியாவுக்கு.

இளமையும், குறும்பும் செல்லமும் கூத்தாடும் கதாநாயகி ஜெயலட்சுமி பெருமாள்.

விடியலில் மறைந்திருக்கும் இரவு போல்... அவளுள் மறைந்திருக்கும் ஏக்கங்களை நீக்கி அவளுள் நீக்கமற நிறைவானா வசீகரன்?


ஜேபியின் ( ஜெயலட்சுமி பெருமாள் ) குறும்புகளையும், வசீகரனின் காதலையும் கொண்டாட வாருங்கள் 🙏🙏🙏🙏

அன்புடன்
அதியா ❤️



சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - முன்னோட்டம்


பெண்கள் மட்டுமே படிக்கும் அந்த உயர்ரக பாடசாலை, சிணுங்கியபடியே சலசலத்து ஓடும் நீரோடை போல் கலகலவென்று இருந்தது, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு துள்ளி வரும் புள்ளி மான்களால்.

பள்ளி மணி அடித்ததும் அந்த இடமே அமைதியாகிவிட்டது, பத்தாம் வகுப்பு 'அ' பிரிவு வகுப்பைத் தவிர. அந்த வகுப்பின் அறிவியல் ஆசிரியை, பிள்ளை பேற்றிற்காக விடுமுறை எடுத்து சென்றிருந்ததால், அவர்கள் வகுப்பு மட்டும் ஆள் இல்லாமல் ஆரவாரமாக இருந்தது.

புது அறிவியல் ஆசிரியை கண்மணி, தலைமையாசிரியரிடம் வேலைக்கு சேர்வதற்கான ஒப்பந்த கடிதங்களை எழுதிக் கொடுத்து விட்டு, அட்டெண்டர் கைகாட்டிய அந்த பத்தாம் வகுப்பு 'அ' பிரிவிற்குள் நுழைந்தாள்.

வருகைப் பதிவேட்டை பிரித்து வைத்து, ஒவ்வொரு பெயராக அழைத்தாள். அனைத்து மாணவியரும் சமத்தாக தங்களது பெயர் வரும்போது, "எஸ் மேம் " என்று கூறி, தங்கள் வருகையை பதிவு செய்தனர்.
கண்மணி, "ஜெயலட்சுமி.." என்று அழைத்தாள். கண்மணியின் அழைப்பில் அந்த வகுப்பே அமைதியாகிவிட்டது.

மீண்டும் ஒருமுறை "ஜெயலட்சுமி" என்று அழைக்க, அனைத்து மாணவியரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

" ஹலோ ஜெயலட்சுமி... " இந்த முறை கோபமாகவே வந்தது கண்மணியின் குரல்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்து, ஒரு கை மேல் எழுந்தது. தண்ணீருக்குள் மூழ்கி இருந்த தாமரை மெல்ல மெல்ல தண்ணீரை விலக்கி மேல் எழுவதைப் போல், அழகிய திருமுகம் ஒன்று கூட்டத்திலிருந்து எழுந்து நின்றது.

"ஓ.... நீதான் ஜெயலட்சுமியா?" என்றாள் கண்மணி காட்டமாக.

அந்த மலர்முகம், 'இல்லை' என்று தலையசைத்தது.

"வாட்?" மெல்ல மெல்ல கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது கண்மணிக்கு.

"தென். ஹூ ஆர் யூ?" கிட்டத்தட்ட கத்தினாள் கண்மணி.

ஒன்றோடு கட்டி அணைத்தபடி இருந்த அவளின் சிவந்த மெல்லிய இதழ்கள் பிரிவதற்கு முன், வகுப்பறையே அலறியது, "ஜெயலட்சுமி பெருமாள்" என்று.


அந்த அழகிய மலர் வதனத்தில் கர்வம் மிளிர, "எஸ் மேம். டோன்ட் கால் மீ ஜெயலட்சுமி. மீ... ஜெயலட்சுமி பெருமாள்.

என் பெயரை யார் சுருக்கினாலும் எனக்கு பிடிக்காது" என்று முகத்தை சுருக்கிய அந்த பிள்ளை நிலவைக் கண்டு, சிரிப்புடனே கண்மணியும், "ஓகே. ஜெயலட்சுமி பெருமாள்" என்றாள் சிறு வயதிலேயே மிளிரும் அவளின் நிமிர்வை ரசித்தபடி.

********
" ஏ புள்ள ஜெயா இங்க வா..." என்ற அன்னம்மாளின் குரல் கத்தலாய் ஒலித்தது.
காதில் விழாதது போல், எட்டி நடை இட்டாள்.

மீண்டும் அன்னம்மா தன் வாயை திறப்பதற்குள் அவர் முன் மண்டியிட்டு, தன் சுட்டு விரலை அவரின் இரு கண்களுக்கு இடையே கொண்டு நிறுத்தி, " ஏய் அப்பத்தா! என்னை ஜெயலட்சுமி பெருமாள் என்று கூப்பிடு. இல்லையென்றால் ஜேபி என்று கூப்பிடு. வேற பேர சொல்லி கூப்பிட்டு, என்னையும் எங்க அப்பாவையும் பிரிக்க பார்த்தால், உன் பல் செட்டை ஒளித்து வைத்து விடுவேன். அப்புறம் நீ பெப்பப பெப்ப தான். ஜாக்கிரதை!" என்றாள் ஜெயலட்சுமி பெருமாள் படு சீரியஸாக.

" அடி ஆத்தி! சிவப்பின்னு உன்னைய கூப்பிடனுமா? "


" ஏய் டமாரக் கிழவி! சிவப்பி இல்ல. ஜேபி!" என்றாள் மிதப்பாக.

" டேய் பெருமாளு, ஆண்டாள் பெத்த மக அழகா இருப்பான்னு நெனச்சா, இப்படி அறிவுல அண்டாவா இருக்காளே... டப்பி டுப்பி குப்பின்னு குறத்தி மக கூப்பிடுற மாதிரி கூப்பிட சொல்றாளே..." என்று இரண்டு கைகளையும் விரித்து அங்கலாய்த்தபடி பாட்டு பாடினார் அன்னம்மா.

"கண்ணம்மா..." என்றார் பெருமாள்.

" அப்பா! பாருங்கப்பா இந்த அப்பத்தாவை! என் பெயரில் இருந்து கூட உங்களை யாரும் பிரிக்க கூடாது" என்ற செல்ல மகள், தன் தந்தையின் மார்பில் சாய்ந்து செல்லம் கொண்டாடினாள்.

" டேய் கண்ணம்மா! பெரியவர்கள் அவர்கள் இஷ்டப்படி கூப்பிட்டுக் கொள்ளட்டுமே " என்றார் வாஞ்சையாக தன்மகளின் தலையை வருடியபடி.

"நோ... முடியவே முடியாது. என் பெயரில் கூட, என் உயிர் உடன் இருக்க வேண்டும். நான் மண்ணில் வந்த நொடி முதல் உங்கள் கைகளில் தானே இருக்கிறேன். நான்தான் பிறக்கும் போதே அம்மாவை முழுங்கி ஏப்பமிட்டு பிறந்து விட்டேனே. ஏவ்.... நம் இருவருக்கும் இடையே வரக்கூடாது என்று தான் அம்மா நமக்கு டாட்டா காட்டி விட்டார்கள். இல்லையா அப்பா!". 'ஆம் என்று சொல்லி விடுங்களேன்' என்ற ஏக்கத்தை கண்களில் சுமக்கும், தன் மகளை ஆதுரமாய் அணைத்துக் கொள்ளவே முடிந்தது அவள் பாசத்தில் கட்டுப்பட்ட தந்தைக்கு.

" பார்க்கிறேன்... பார்க்கிறேன்... இன்னும் எத்தனை நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன். உன் திமிரை அடக்க வரப்போற அந்த மகராசனுக்கு என் கையால தான் ஆரத்தி எடுப்பேன்" என்று அன்னம்மாள் வீர சபதம் எடுத்தார்.


" வெவ்வே... வெவ்வே..." என்று அவரை கிண்டலடித்தபடி பழிப்பு காட்டினாள் ஜே பி என்ற ஜெயலட்சுமி பெருமாள்.


**********
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா... "

அர்ச்சகர் விநாயகர் துதி பாடலை பாடிவிட்டு ஆரத்தி நீட்ட, கண் மூடி கடவுளோடு லயித்திருந்தான் வசீகரன்.

அவன் அருகில் நின்றிருந்த அவன் பெற்றோர்கள், வசுமதி மற்றும் தினகரன் மலர்ந்த முகத்துடன் தங்கள் மகனை நோக்கினர்.

வசுமதி மெல்ல வசீகரனின் தோளைத் தட்டி, " வசீ, ஆரத்தி எடுத்துக்கோப்பா!" என்றார் மென்மையாக.

மெல்ல கண்களைத் திறந்த வசீகரன், சிரித்த முகத்துடன் தன் முன் இருந்த தன் இஷ்ட தெய்வத்தை பணிவாய், வணங்கி விட்டு, ஆரத்தியை கண்களில் ஒத்திக் கொண்டான்.

" இந்த காலத்திலேயும் இவ்வளவு சிரத்தையாக, கடவுளை வணங்கும் உனக்குத் தகுந்தாற்போல், அமைதியான நல்ல ஆம்படையாள் கிடைப்பாள்" என்று அர்ச்சகர் ஆசீர்வாதம் செய்ய, "நச்" என்று தும்மி விட்டு, பிரகாரத்தை வலம் வந்தாள் ஜெயலட்சுமி பெருமாள்.

சிறகுகள் நீளும்...
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
முதலில் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் நட்பே 😊😊😊

வாழ்த்துக்கள் உங்களின் புதிய கதைக்களத்திற்கு 💐💐💐

பெண்களை மிளிரவைக்கும் அதியா என்னும் நட்பே, உங்களின் புதுப்பாவை ஜெயலட்சுமி பெருமாளும் இத்தொடரில் அளவில்லாமல் மிளிர்வாள் எனும் நம்பிக்கையோடு அடுத்த பதிவிற்காய் காத்திருக்கின்றேன் 🥰🥰🥰
 
Top