• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 1

பெண்கள் மட்டுமே படிக்கும் அந்த உயர்ரக பாடசாலை, சிணுங்கியபடியே சலசலத்து ஓடும் நீரோடை போல் கலகலவென்று இருந்தது, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு துள்ளி வரும் புள்ளி மான்களால்.

பள்ளி மணி அடித்ததும் அந்த இடமே அமைதியாகிவிட்டது, பத்தாம் வகுப்பு 'அ' பிரிவு வகுப்பைத் தவிர. அந்த வகுப்பின் அறிவியல் ஆசிரியை, பிள்ளை பேற்றிற்காக விடுமுறை எடுத்து சென்றிருந்ததால், அவர்களின் வகுப்பு மட்டும் ஆள் இல்லாமல் ஆரவாரமாக இருந்தது.

புது அறிவியல் ஆசிரியை கண்மணி, தலைமையாசிரியரிடம் வேலைக்கு சேர்வதற்கான ஒப்பந்த கடிதங்களை எழுதிக் கொடுத்து விட்டு, அட்டெண்டர் கைகாட்டிய அந்த பத்தாம் வகுப்பு 'அ' பிரிவிற்குள் நுழைந்தாள்.

வருகைப் பதிவேட்டை பிரித்து வைத்து, ஒவ்வொரு பெயராக வாசித்தாள். அனைத்து மாணவியரும் சமத்தாக தங்களது பெயர் வரும்போது, "எஸ் மேம் " என்று கூறி, தங்கள் வருகையை பதிவு செய்தனர்
.

கண்மணி, "ஜெயலட்சுமி.." என்று அழைத்தாள். கண்மணியின் அழைப்பில் அந்த வகுப்பே அமைதியாகிவிட்டது.

மீண்டும் ஒருமுறை "ஜெயலட்சுமி" என்று அழைக்க, அனைத்து மாணவியரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

" ஹலோ ஜெயலட்சுமி... " இந்த முறை கோபமாகவே வந்தது கண்மணியின் குரல்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்து, ஒரு கை மேல் எழுந்தது. தண்ணீருக்குள் மூழ்கி இருந்த தாமரை மெல்ல மெல்ல தண்ணீரை விலக்கி மேல் எழுவதைப் போல், அழகிய திருமுகம் ஒன்று கூட்டத்திலிருந்து எழுந்து நின்றது.

ஐந்தடி உயரம், வட்ட முகம், தீட்சண்யமான கண்கள், தோள்களில் புரண்ட இரட்டைச் சடையுடன் குட்டி அழகோவியமாய் காட்சி தந்தாள் பெண்ணொருத்தி.

"ஓ.... நீதான் ஜெயலட்சுமியா?" என்றாள் கண்மணி காட்டமாக.

அந்த மலர்முகம், 'இல்லை' என்று தலையசைத்தது.

"வாட்?" மெல்ல மெல்ல கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது கண்மணிக்கு.

"தென். ஹூ ஆர் யூ?" கிட்டத்தட்ட கத்தினாள் கண்மணி.

ஒன்றோடு கட்டி அணைத்தபடி இருந்த அவளின் சிவந்த மெல்லிய இதழ்கள் பிரிவதற்கு முன், வகுப்பறையே அலறியது, "ஜெயலட்சுமி பெருமாள்" என்று.

அந்த அழகிய மலர் வதனத்தில் கர்வம் மிளிர, "எஸ் மேம். டோன்ட் கால் மீ ஜெயலட்சுமி. மீ... ஜெயலட்சுமி பெருமாள். என் பெயரை யார் சுருக்கினாலும் எனக்கு பிடிக்காது" என்று முகத்தை சுருக்கிய அந்த பிள்ளை நிலவைக் கண்டு, சிரிப்புடனே கண்மணியும், "ஓகே. ஜெயலட்சுமி பெருமாள்" என்றாள் சிறு வயதிலேயே மிளிரும் அவளின் நிமிர்வை ரசித்தபடி.

பள்ளி முடிந்ததும் உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்தாள் ஜேபி.


" ஏ புள்ள ஜெயா இங்க வா..." என்ற அன்னம்மாளின் குரல் கத்தலாய் ஒலித்தது.

காதில் விழாதது போல், எட்டி நடை இட்டாள். மீண்டும் அன்னம்மாள் தன் வாயை திறப்பதற்குள் அவர் முன் மண்டியிட்டு, தன் சுட்டு விரலை அவரின் இரு கண்களுக்கு இடையே கொண்டு நிறுத்தி, "ஏய் அப்பத்தா! என்னை ஜெயலட்சுமி பெருமாள் என்று கூப்பிடு. இல்லையென்றால் ஜேபி என்று கூப்பிடு. வேற பேர சொல்லி கூப்பிட்டு, என்னையும் எங்க அப்பாவையும் பிரிக்க பார்த்தால், உன் பல் செட்டை ஒளித்து வைத்து விடுவேன். அப்புறம் நீ பெப்பப பெப்ப தான். ஜாக்கிரதை!" என்றாள் ஜெயலட்சுமி பெருமாள் படு சீரியஸாக.

" அடி ஆத்தி! சிவப்பின்னு உன்னைய கூப்பிடனுமா? "


"ஏய் டமாரக் கிழவி! சிவப்பி இல்ல. ஜேபி!" என்றாள் மிதப்பாக.

" டேய் பெருமாளு, ஆண்டாள் பெத்த மக அழகா இருப்பான்னு நெனச்சா, இப்படி அறிவுல அண்டாவா இருக்காளே... டப்பி டுப்பி குப்பின்னு குறத்தி மக கூப்பிடுற மாதிரி கூப்பிட சொல்றாளே..." என்று இரண்டு கைகளையும் விரித்து அங்கலாய்த்தபடி பாட்டு பாடினார் அன்னம்மாள்.

"கண்ணம்மா..." என்றார் பெருமாள்.

" அப்பா! பாருங்கப்பா இந்த அப்பத்தாவை! என் பெயரில் இருந்து கூட உங்களை யாரும் பிரிக்க கூடாது" என்ற செல்ல மகள், தன் தந்தையின் மார்பில் சாய்ந்து செல்லம் கொண்டாடினாள்.

" டேய் கண்ணம்மா! பெரியவர்கள் அவர்கள் இஷ்டப்படி கூப்பிட்டுக் கொள்ளட்டுமே " என்றார் வாஞ்சையாக தன்மகளின் தலையை வருடியபடி.

"நோ... முடியவே முடியாது. என் பெயரில் கூட, என் உயிர் உடன் இருக்க வேண்டும். நான் மண்ணில் வந்த நொடி முதல் உங்கள் கைகளில் தானே இருக்கிறேன். நான்தான் பிறக்கும் போதே அம்மாவை முழுங்கி ஏப்பமிட்டு பிறந்து விட்டேனே. ஏவ்.... நம் இருவருக்கும் இடையே வரக்கூடாது என்று தான் அம்மா நமக்கு டாட்டா காட்டி விட்டார்கள். இல்லையா அப்பா!". 'ஆம் என்று சொல்லி விடுங்களேன்' என்ற ஏக்கத்தை கண்களில் சுமக்கும், தன் மகளை ஆதுரமாய் அணைத்துக் கொள்ளவே முடிந்தது அவள் பாசத்தில் கட்டுப்பட்ட தந்தைக்கு.

" பார்க்கிறேன்... பார்க்கிறேன்... இன்னும் எத்தனை நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன். உன் திமிரை அடக்க வரப்போற அந்த மகராசனுக்கு என் கையால தான் ஆரத்தி எடுப்பேன்" என்று அன்னம்மாள் வீர சபதம் எடுத்தார்.

" வெவ்வே... வெவ்வே..." என்று அவரை கிண்டலடித்தபடி பழிப்பு காட்டினாள் ஜே பி என்ற ஜெயலட்சுமி பெருமாள்.

அன்னம்மாளின் கண்கள் பெருமாளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தது.

'தன்னை மட்டுமே உலகமாக நினைக்க வைத்து மகளை பழக்கி விட்டோமோ?' என்ற குற்ற உணர்வு வந்தது பெருமாளுக்கு. தாய் இல்லாத பெண் என்று மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தது சரியா? தவறா? என்ற பட்டிமன்றம் அவர் மனதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

மகள் சிறுபிள்ளையாய் இருந்தபோது தோன்றாத எண்ணமெல்லாம், அவள் வளர வளர அவரை மிரட்டியது.

தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய சொந்தங்களிடம் இருந்து தான் விலகியதோடு மட்டுமல்லாமல் மகளையும் விலக வைத்து விட்டதால் தன்னை மட்டுமே உலகம் என்று நினைக்கும் அந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை, கழுகுகள் பறக்கும் வானில் தனியே விட பயம் வந்தது அவருக்கு.

தன்னுடைய உள்ளங்கைச் சிறைக்குள் மகளை பத்திரமாக பொத்தி பொத்தி பாதுகாத்தார். சோப்பு கம்பெனி வைத்து நடத்தும் அவர், தன் மகளை தானே பள்ளிக்கு சென்று விட்டு விட்டு மீண்டும், தன்னுடனே வீட்டிற்கு அழைத்து வருவதை தன் வழக்கமாக வைத்திருந்தார்.

தன் தந்தையுடன் சோப் கம்பெனிக்கு செல்லும் ஜே பி, சோப்புக் கரைசல்களில் விதவிதமான சோப்புகளை தன் விருப்பத்திற்கு அச்சிட்டு, குண்டூசி மூலம் விதவிதமான உருவங்களை நுணுக்கமாக செதுக்குவாள். செப்பு உருவத்தில் அத்தனை கலைநயங்களுடன் இருக்கும் அந்த உருவச்சிலைகளை தன் மனதிற்கினியவர்களுக்கு பரிசளிப்பாள். அவ்வளவு சாமானியமாக யாரும் அவளிடம் இருந்து அந்த பரிசினை பெற்று விட முடியாது.

" அடியே அல்லிராணி! நித்தம் உன்கூடயே இருக்கேனே, என்ன மாதிரி ஒரு பொம்மை செஞ்சு தரக் கூடாதா? " என்று ஜாடையாக தன் ஆசையை சொன்னார் அன்னம்மாள்.

"ம்... அது அது அவங்க நடந்துக்கிற விதத்தில் இருக்கு அப்பத்தா. முதலில் இந்த ஜெயலட்சுமி பெருமாளை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்" என்றாள் தலையை சரித்து ஒய்யாரமாக.

"ஹான்... அது என்ன ஜூஸ்?" என்றார் அன்னம்மாள்.

" ஜூஸா! ஐயோ உன்னை வைத்துக்கொண்டு எப்படி தான் தாத்தா குப்பை கொட்டினாரோ? " என்று தலையில் கையை வைத்து கிண்டல் அடித்தாள்.

" அவருக்கு என்னடி? அவரு எம்பட நாயகன். என்னை கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்துனவரு " பெருமை பொங்க கழுத்தை நீட்டிப் பார்த்தார் அன்னம்மாள்.

"ஓ.... நாயகனா?"

"ஆமா..."

" பாட்டி மீன் பிடிக்கிறவங்களை என்னன்னு சொல்லுவாங்க?"

" இது கூட தெரியாதா கூறுகெட்டவளே! மீனவன்"

" அப்போ நாய் பிடிக்கிறவங்கள...? " கேள்வி கொண்டு சிரித்துக்கொண்டே ஓடிவிட்டாள் ஜே பி.

"நா..." என்று ஆரம்பித்த அன்னம்மாள், தன் நாக்கை கடித்து கொண்டு, ஓடும் பேத்தியை முறைத்துப் பார்த்தார்.

அவளின் அந்த பிரத்தியோகப் பரிசினை பெறுவதற்காகவே, அவளுக்கென ஒரு நண்பர் கூட்டமும் இருந்தது. அவள் வீட்டில் வைத்திருந்த ஒரு பொக்கிஷப் பெட்டியில், வெகு அபூர்வமான சிலரின் சோப்பு உருவச் சிலைகளை தனக்கென பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.


கதைகளில் கேட்ட, தன்னைக் கவர்ந்த மாந்தர்களை வடிவமைத்தாள், அந்த உருவங்களுடன் கற்பனையில் பேசிப் பேசி அவர்களின் குணாதிசயங்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டாள்.

கணவனின் மரணத்திற்குப் பிறகு, தன் நாட்டிற்காக போராடி இறுதியில் போர்க்களத்தில் உயிரை நீத்த ஜான்சி ராணி, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய முதல் இந்திய பெண்மணி வேலு நாச்சியார், புதுமைப் பெண்ணின் இலக்கணத்தை படைத்த பாரதி, கண்ணனின் காதலுக்காக ஏங்கிய மீரா என அவள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

அவளின் திறமையைக் கண்டு அதிசயக்காதவர் என்று ஒருவர் இருக்க வாய்ப்பே இல்லை. மகளின் ஆர்வத்தை புரிந்து கொண்ட பெருமாளும், அவளுக்கு கொடுக்கும் சோப்பு கரைசல்களுக்கு, பலவித நிறங்கள் கொடுத்து, உயர்ரக நறுமணப் பொருட்களை சேர்த்து தந்தார்.

தந்தையை விடுத்து தனியே படுக்க ஆரம்பித்த இரவுகளில், தூங்கும் முன் தன் பேழையில் இருந்து, கிளிசரின் சோப்பில் உருவாக்கிய தன் தந்தையின் உருவச் சிலையை நுகர்ந்து ரசித்து, அந்தப் பாசத்தின் வாசத்தை தன் காற்றுப் பையில் நிறைத்து கண்ணுறங்குவாள்.

அனைத்து பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் பங்கேற்க ஜெயலட்சுமியை அனைவரும் வற்புறுத்தி சேர வைத்தனர்.

முதல் முறை பேச்சுப்போட்டிக்கு பேசப் பழகும் போது சற்று பயந்து கொண்டே இருந்தாள். தனக்கு தைரியம் கொடுக்க, தன் படைப்பு மாந்தர்களிடம் கலந்துரையாடினாள். 'உன்னால் முடியும்' என்பதை விட 'பெண்ணால் முடியும்' என்றவளின் ஒவ்வொரு மாந்தர்களும் துணை நிற்க, எதிர்த்து நின்ற மாணவர்களை தன் பேச்சால் சாய்த்து விட்டு, பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றாள்.

வெற்றியுடன் வந்த ஜே பி யை அவளது பள்ளியின் முதல்வர், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு தந்தார்.

போட்டிக்காக தயாரிக்கும் கருத்துக்களில் பெண்மையை மையமாக எடுத்தாண்டாள். அவளின் நிமிர் பேச்சிலும், நிமிர்ந்த எழுத்திலும், ஆண்பால், பெண்பால் பாராது கலந்துகொண்ட போட்டிகள் அனைத்திலும் வெற்றி வாகை சூடினாள்.

அவள் கண்ட உலகம் அனைத்தும் பெண்ணைப் போற்ற, பெண்ணென்று பிறந்ததற்கு பேருவகை கொண்டாள்.

ஜேபியுடன் படிக்கும் தோழி ரூபினி, தன் பெற்றோர்களுக்கு தெரியாமல், பள்ளிக்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவரிடம் நட்பாக பழகி, பின் காதல் கொண்டு, வீட்டிற்கு தெரியாமல் தலைமறைவானாள்.

ரூபினின் பெற்றோர், பள்ளியிடம் எவ்வளவோ முறையிட்டும், 'பள்ளிக்கு உள்ளே நடக்கும் விஷயங்களைத் தவிர வேறு விஷயங்கள் தங்களுக்கு தெரியாது' என்று அவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். உடன் பயிலும் மாணவிகளை சந்திக்கவும் அனுமதி தரவில்லை.


பள்ளி முடிந்தவுடன் தன் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஏற வந்த ஜே பியை ரூபிணியின் பெற்றோர் அழைத்தனர்.

ஜேபி தன் தந்தையை பார்த்தாள். பெருமாள் சம்மதம் தர ரூபிணியின் பெற்றோர் அருகில் சென்றாள்.

'பாப்பா ரூபிணி உனக்கு தொலைபேசியில் அழைத்தாளா? அவள் எங்கே இருக்கிறாள் என்று உங்கள் யாருக்காவது தெரியுமா? " யாசகமாய் அவள் வாயில் இருந்து வார்த்தைக்கு காத்திருந்தார் ரூபிணியின் அப்பா.


"இல்லை" என்று தலையசைத்தாள் ஜேபி.

ரூபினின் அம்மா அவள் காலடியில் அமர்ந்து, " அவளுக்கு சரியாக சாப்பிடக்கூட தெரியாது. யாரிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுகிறாளோ, தயவுசெய்து உனக்குத் தெரிந்தால் சொல்லம்மா " என்று கண்ணீர் வடித்தார்.

அரையாண்டு கடைசி தேர்வு முடிந்ததும், " இன்று முதல் என் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே! பாய்.... " என்று கூவலுடன் ஆளுக்கு முதலாய் பறந்து சென்ற ரூபிணியை இன்று கோபத்துடன் நினைவு கூர்ந்தாள் ஜேபி.

அவளைக் கடந்து சென்ற ரூபிணியின் வகுப்பு தோழியரிடமும் இதே கேள்வியை கேட்டு கேட்டு யாரிடமாவது தகவல் வராதா என்று எதிர்பார்த்து ஏமாந்தனர் ரூபிணியின் பெற்றோர்கள்.

கோபத்துடன் நின்ற தன் மகளை பெருமாள் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கை, கால், முகம் கூட கழுவாமல் நேரடியாக தன் அறைக்குள் சென்று தனது, தன் பெட்டிக்குள் வைத்திருந்த ரூபிணியின் மெழுகு பொம்மையை எடுத்து, தண்ணீரில் நுரை பொங்க கரைத்தாள்.

பெற்றோரை துச்சமாக எண்ணி, ஓடிச் சென்ற அவளின் பொய்மை கலந்த அன்பு இனி எக்காலத்திற்கும் தேவையில்லை என்று முடிவு செய்தாள் ஜெயலட்சுமி பெருமாள். கரைத்த கரைசலோடு ரூபிணியின் நினைவுகளையும் சேர்ந்தே கரைத்தாள்.

அவளது உருவச் சிலைகளுக்கும், உணர்வுகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.

மதியம் உணவு இடைவேளையின் போது, மாணவியர் அனைவரும் தங்களது உணவினை பகிர்ந்து உள்ள தயாராகினர்.
அனைவரும் தங்கள் டிபன் பாக்ஸை திறக்க, ஜேபி மற்றும் டிபன் பாக்ஸை திறக்க முடியாமல் சிரமப்பட்டாள்.

" எங்க அப்பத்தா ரொம்ப இறுக்கமாக மூடிவிட்டார்கள் " என்று புலம்பினாள்.

" அப்படி என்ன சாதம் கொண்டு வந்திருக்கிறாய்? " என்று தோழியர் கேட்க, "எலி மிச்ச வெச்ச சாதம் தான்", என்றாள் ஜே பி.

"ஹான்..." என்று அனைவரும் அவளை ஒரு மார்க்கமாக பார்க்க, " எலுமிச்சை சாதம் பா... " என்றாள் கிண்டலாக.

" நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்? " என்று தன்னை முறைத்த தோழியிடம் வினவினாள் ஜேபி.

" மல்லிகை பூ மாதிரி இட்லி " என்றாள் பெருமையுடன் அந்தத் தோழி.

" அப்புறம் என்ன அதை தூக்கி தலையில வச்சுக்க வேண்டியது தானே... " என்று நக்கலடித்தபடி மாணவியர் தங்களது மதிய உணவு இடைவேளையை மகிழ்ச்சியாக கழித்தனர்.

அவர்களின் பேச்சுக்கிடையே ரூபிணி பற்றி பேசும்போது, காதலுக்காக அனைத்தையும் துறந்து, அவள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக தோழியர் சிலர் அவளது செயலை சிலாகித்து பேசினர்.

ஜே பி தன் கைகளை நீட்டி தடுத்தாள். " உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்பேன் " என்றாள்.

" ஓ தாராளமாக" அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.

" உங்களுக்கு இப்பொழுது வயது என்ன? "

"15" என்று அனைவரும் கோரசாக கத்தினர்.

" இப்பொழுது உங்களுக்கு வயது 45 என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்களை விட்டுவிட்டு இப்படி ஒரு காரியம் செய்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? " என்றாள் ஆளுமை நிறைந்த குரலில்.

அனைவரது தலையும் மறுப்பாக தலையசைத்தது.

" உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன் நன்றாக கவனியுங்கள். ஒருமுறை காட்டிற்குள் தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு ஒரு தாய் கோழி இரை தேடச் சென்றதாம்.

திடீரென காட்டில் தீப்பற்றிக் கொண்டதாம். மிகவும் கஷ்டப்பட்டு காட்டுத்தீயை அனைவரும் போராடி அணைத்தனர். தான் வளர்த்த கோழியைக் காணாத சிறுவன், அந்தக் காட்டிற்குள் சென்றானாம்.

கருகிய நிலையில் கோழி தென்பட, அதனை குச்சி வைத்து கலைத்தானாம்.

கருகிய அந்த கோழியின் சிறகுக்குள் இருந்து அதன் குஞ்சுகள் பத்திரமாக வெளியே கீச் கீச் என்று கத்திக் கொண்டு வந்ததாம். உயிர் போகும் நிலையிலும் தன் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு ரூபிணி கொடுத்த பரிசு என்ன? நன்றாக சிந்தியுங்கள்.

இனி ஒரு முறை அவளது செயலுக்கு நீங்கள் நியாயம் கற்பித்தால் உங்களது நட்பும் எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிட்டு, நிமிர்வாக செல்லும் ஜே பி யை அனைவரும் வியந்து பார்த்தனர்.


சிறகுகள் நீளும்...
 
Last edited:

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ஜெயலட்சுமி பெருமாள் 😎😎😎

தகப்பனின் சிறகுகளுக்குள்ளேயே வளர்ந்ததால் தானோ இத்தனை பிணைப்பும் நிமிர்வும் 🙄🙄🙄

காதல் என்ற சொல்லே கசப்பென்று நினைத்து விட்டாளோ காரிகை 🤔🤔🤔
 

shanmugasree

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
26
JP Sema intha age la evlo theerkama yosikura
 
Top