• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 24

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 24

கேட் வே ஆஃப் இந்தியாவில், எலிஃபெண்டா தீவிற்குச் செல்லும் படகில் ஏறி அமர்ந்தான் வசீகரன். அமர்ந்திருந்த படகின் அடித்தளத்தில் பல்வேறு மக்களின் உரத்த பேச்சுக் குரல்கள் அவனின் அமைதியைக் கலைக்க, படியேறி படகின் மேல் தளத்தில் வந்து, தடுப்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டு சுற்றி இருந்த நீலக்கடலைப் பார்க்க ஆரம்பித்தான்.

படகின் முன்னே செல்லும் அலைகள், தனது வருகையை ஜேபிக்கு அறிவிக்க விரைந்து ஒன்றன்பின் ஒன்றாக செல்வதைப் போல் கற்பனை செய்து மகிழ்ந்தான்.

தன்னைப் பார்த்ததும், உண்டாகப் போகும் ஜேபியின் முக மாறுதல்களை மனதிற்குள் வடிவமைத்து ரசித்தான்.

வசீகரன் அருகில் வந்த ஒருவர், "எலிஃபெண்டா தீவினை பார்வையிட்டு ஆறு மணிக்குள் படகிற்கு திரும்பி விட வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

"எலிஃபெண்டா தீவில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?" என்று ஹிந்தியில் அவருடன் உரையாடினான்.

"எலிஃபெண்டா தீவில் உள்ள ஏழு குகைகள் தான் அங்குப் பிரதானம். அந்தக் குகைகளில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. போர்ச்சுகீசியர்கள் துப்பாக்கி சுடுவதற்கு இந்த சிலைகளை இலக்காகப் பயன்படுத்தியதால், பல சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இருந்தாலும் அந்த சிற்பக்கலையின் நுணுக்கங்களை இன்றும் நாம் காணலாம். இந்தக் குகைகளை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. முதன் முதலில் இந்த குகையில் யானை சிற்பத்தைக் கண்டுபிடித்ததால் இதற்கு எலிஃபெண்டா குகை என்ற பெயர் வந்தது" என்றார்.

" இங்கே மணற்சிற்பங்கள் செய்யும் போட்டி நடைபெறுகிறதா? " என்றான் ஆர்வத்துடன்.

"யானைத் திருவிழாவை முன்னிட்டு பல போட்டிகள் நடைபெறுகின்றன. நடைபெறும் நடனத் திருவிழாவும் அதில் ஓர் முக்கிய அம்சம். எலிஃபெண்டா தீவிலும் சில போட்டிகள், தீவினைச் சுற்றியுள்ள கராபுரி, ராஜ் பந்தர் போன்ற கிராமங்களிலும் சில போட்டிகள் நடைபெறுகின்றன. நீங்கள் சொல்லும் போட்டி அங்குள்ள கிராமங்களில் நடைபெறலாம். ஏனென்றால் இந்தத் தீவில் ஆறு மணிக்கு மேல் தங்குவதற்கு அனுமதி கிடையாது. நீங்கள் இங்கே தங்க வேண்டுமென்றால் அருகில் இருக்கும் கராபுரியில் விசாரித்துக் கொள்வது நலம். மற்ற கிராமங்களுக்குச் செல்ல நீங்கள் தனிப்படகில் செல்ல வேண்டும்" என்று முடித்துக் கொண்டார்.

உயர்ந்து எழுந்த பாறைகளுக்கு நடுவில் படகு சென்றது. ஒரு மணி நேரம் கடந்த பிறகு படகு எலிஃபெண்டா தீவினை வந்தடைந்தது. தீவிலிருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் நடந்து, 120 படிகளைக் கடந்தால் எலிஃபெண்டா குகைகளுக்குச் செல்ல முடியும்.

வசீகரன் தன் அலைபேசியில் இருந்த மணற்சிற்ப போட்டிக்கான இடத்தினை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

முரட்டு ஜீன்ஸ் பேண்ட், மெலிதான டி-ஷர்ட், கண்களில் கூலர்ஸ், தோள்களில் மாட்டிக்கொண்ட பயணப் பொதியுடன் அவனது கால்கள் கராபுரி கிராமத்தை நோக்கி நடையிட்டது.

மணற்சிற்ப போட்டிக்கான இறுதி நாள் நாளை என்பதால், நூறு போட்டியாளர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்து ஐந்து போட்டியாளர்கள், மிகவும் தீவிரத்துடன் தங்கள் மணற்சிற்பங்களை செதுக்கி, சீர்படுத்தி, அழகுடன் மெருகேற்றிக் கொண்டிருந்தனர்.

அந்த இருபத்து ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக ஜேபி, முழு கவனத்துடன் தன்னைச் செதுக்குவது போல் மணல் சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு போட்டியாளர்களும், மிருகங்கள், மனிதர்கள், குழந்தைகள் என விதவிதமான உருவங்களை படைத்துக் கொண்டிருக்க, ஜேபி பல்வேறு கரங்கள் கால்களை பூமிக்குள் இழுத்துக் கொண்டிருக்க, சில கரங்கள் ஆடைகளை அகற்ற துடித்துக் கொண்டிருக்க, அவற்றையெல்லாம் கடந்த ஓர் சிறு பெண், தன் சிறகினை விரித்து வானோக்கி பறக்க முயல்வது போல் ஒரு தத்ரூபமான உணர்வுச் சிற்பத்திற்கு உயிர் ஊட்டிக் கொண்டிருந்தாள்.

தன் கடந்த காலக் கசடுகள் எல்லாம் சங்கிலிப் போல் தன்னைக் கட்டிப் போட்டிருக்க, அதிலிருந்து தன்னைத்தானே மீட்டு எடுத்துக் கொண்டு விட்டோம் என்று நினைத்தவளுக்கு, ஒரு இயல்பான திருமண பந்தத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது தான், சிறுவயதில் ஆழப் பதிந்த பாலியல் சீண்டல்கள், புதைந்து போயிருக்கும், மறைந்து போகாது என்ற உண்மையைப் பறைசாற்றியது.

அந்த நொடி முதல், இந்தக் கவலைகள், கசடுகளை எல்லாம் விட்டுவிட்டு வானில் சிறகடித்து பறக்க வேண்டும் என்ற ஆசை அவளுள் பிறந்தது. அவளின் எண்ணம் அவளின் கைகளில் மணற்சிற்பமாய் மலர்ந்தது.

கடற்கரை காற்றினால் மணற் சிற்பங்கள் பாதிப்படையாமல் இருக்க, கூரை போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

கடற்கரை காற்று, நாவில் வறட்சியை ஏற்படுத்த, நுனி நாக்கினால் உதட்டினைக் கஷ்டப்பட்டு ஈரப்படுத்திக் கொண்டு, தன் வேலையில் முனைப்பாய் இருந்தாள் ஜேபி.

ஆதாரம் இல்லாமல் தனித்து இரு இறக்கைகள் பறந்த வண்ணம் இருக்க, ஈரப்பசை இல்லாமல் அவைகள் உதிர்ந்து விடாமல் இருக்க நீர் தெளித்து அதனைக் கடினப்படுத்தியவள், மேலும் அதன் நுணுக்கங்களை செம்மைப்படுத்துவதில் கவனமானாள்.

உடல் ஓய்விற்கு கெஞ்சினாலும், அந்தச் சிற்பத்தில் தன்னை உணர்ந்தவள், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது, என் வானம்! என் சிறகுகள்! என்று அந்த மணற் சிற்பத்தோடு போராட ஆரம்பித்தாள்.

சில நிமிடங்கள் கடந்த நிலையில், தண்ணீர் தாகம் மேலிட, இரு கை விரல்களையும் மடக்கி, மூடிய விரல்களினால் இடையினை இருபுறமும் தாங்கி, கழுத்தினை பின்னோக்கிச் சாய்த்து, கண்களை மூடி உதடு பிரித்தாள் தன்னை ஆசுவாசப்படுத்தும் நோக்கத்துடன்.

அவளின் மெல்லிதழ்களின் மேல் சில்லென்ற ஓர் உணர்வு தோன்றியதை, அவளின் மூளை அவளுக்கு உணர்த்தும் முன், குளிர்ந்த நீர் அவளின் சங்குக் கழுத்திற்குள் வழிந்தோடியது.

புத்துணர்வு அவள் தேகம் எங்கும் பாய்ந்தோடியது. தாகத்தின் வேகம் பிரவாகமாய் மாற, அவள் பருகும் நீர், அவளின் மெல்லிதழ் என்னும் எல்லையைக் கடந்து, அவள் தேகத்தின் மேடு, பள்ளங்களில் சிந்திச் சிதறி வழிந்தோடியது.

சிதறிய துளிகளை எல்லாம் அவளின் ஆடைகள் அணைத்து, தன்னைத் தானே நனைத்தும் கொண்டது.

தாகத்தின் வேகம் குறைந்தாலும், அவளின் மூச்சுக்களின் வேகம் அதிகரித்ததைக் கண்டு, தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்த கரங்கள் இரண்டும் பின்வாங்க, ஜேபியின் கரங்கள் சட்டென்று அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டது.

அந்தக் கரத்தைப் பற்றியதும் அவளின் இதழ் பூக்கள் புன்னகையைச் சிந்தின.

" எவ்வளவு தூரம் உங்களைப் பார்ப்பதற்கு பயணப்பட்டு வந்திருக்கிறேன். தங்கள் விழி மலர்ந்து என்னைப் பார்த்தால் என்ன அம்மணி? " என்றான் வசீகரன்.

வசீகரனின் கரங்களைப் பற்றியவாரே முடியாது என்பதைப் போல், ஜேபியின் தலை இடவலமாய் அசைந்தது.

" நீங்கள் கொடுத்த க்ளுவை எல்லாம் சரியாகக் கண்டுபிடித்து வந்திருக்கும் என்னை பாருங்கள் அம்மணி" என்றான் வார்த்தைகளில் காதல் கோர்த்து.

பட்டென்று கண்களைத் திறந்து, "நீங்கள் ஏன் என்னைத் தேட வேண்டும்? நீங்கள் ஏன் என்னைக் கண்டுபிடிக்க வேண்டும் மிஸ்டர் வசீகரன்? " என்றாள் சற்று கோபமான குரலில்.

" ஏனென்றால் நீங்கள் திருடிக் கொண்டு வந்து விட்டீர்கள்" என்றான்.

"ஹலோ! நானா திருடி? அப்படி எந்த பொருளை உங்களிடம் இருந்து திருடிக் கொண்டு வந்து விட்டேன்?" ஜேபியின் குரல் சற்று உயர்ந்தது.

" என்னிடமிருந்து என்னைத் திருடி வந்து விட்டீர்கள். இதோ இப்பொழுதும் உங்கள் கைகள் என்னைச் சிறைப்பிடித்து உங்களோடு வைத்திருக்கிறதே " என்றான் உல்லாசமானக் குரலில்.

தானே உணராமல் வலியப் பற்றி இருந்த வசீகரனின் முரட்டுக் கரங்களைப் பார்த்தும், ஜேபியின் கைகளில் இருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்து அடங்கியது.

சடுதியில் தன்னை சமாளித்துக் கொண்டு, " தாகத்திற்கு அருந்த நீர் கொடுத்துவிட்டு, அதைப் பாதியில் பிடுங்கிக் கொண்டீர்கள் என்றால்... அதனால் தான் உங்கள் கைகளைப் பிடித்தேன்" என்றாள்.

" அதனால் என்ன அம்மணி திருமணத்தன்று நான் உங்கள் கைகளைப் பிடித்தேன். இன்று நீங்கள் என் கைகளைப் பிடிக்கிறீர்கள் அவ்வளவுதான். மேலும் உங்கள் கைகளுக்குள் என் கைகள் மட்டுமல்ல, முழுமையாக நானே சரணடையும் நாளுக்காக காத்திருக்கிறேன். என்று அந்த வாய்ப்பு கிடைக்குமோ? " என்றான் கேலிக்கூத்தாடும் குரலில்.

ஜேபி வசீகரனுக்கு பதில் கூறுவதற்குள் நீண்ட விசில் ஒலித்தது. போட்டியின் அன்றைய நாளுக்கான நேரம் முடிந்து விட்டது என்பதை அறிவித்தது.
" உங்களால் எனக்கு ஐந்து நிமிடங்கள் வீணாகிப் போனது தான் மிச்சம்" என்று அவனை குறை கூறிவிட்டு தன் பொருட்களை ஒழுங்குப்படுத்தி பைகளுக்குள் அடக்கினாள்.

அவள் செய்யும் வேலைகளில் குறுக்கிடாமல் அவளின் மணற் சிற்பத்தை பார்வையிட்டான் வசீகரன். பிரம்மாண்டமான அந்தச் சிற்பம் அனைத்து மணற் சிற்பங்களிடமிருந்து வித்தியாசமாகக் காணப்பட்டது.

அனைவரும் படுக்கை வசமாக தங்கள் சிற்பங்களை புடைப்புச் சிற்பம் போல் எடுத்துக் காட்டி இருந்தனர். ஜேபி மட்டுமே எழுந்து நிற்கும் சிலை போல் மணற் சிற்பத்தை உருவாக்கி இருந்தாள். அவளின் கலை நேர்த்தியை வெகுவாக ரசித்தான். அது அவளின் மறுபிரதி என்பது அவனுக்குத் தெரியாது அல்லவா!

தனது பொருட்களை ஒழுங்குப்படுத்தி முடித்தவள், தனது சிற்பத்தின் பாதுகாப்பை மேலும் ஒரு முறை உறுதி செய்துவிட்டு, போட்டியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட குடியிருப்பிற்குச் செல்ல ஆயத்தமானாள்.

வசீகரன் தன்னைத் தேடி வந்ததில், தன் மனதில் தோன்றியிருந்த வெறுமை, தனிமை அனைத்தும் பறந்தோடிப் போனதை நன்றாக உணர்ந்தாள். அதனைத் தாண்டி வசீகரனை நெருங்க அவள் மனது தடைவிதிப்பதை அவளால் மீற முடியவில்லை.

குளிரும் வேண்டும், வெப்பமும் வேண்டும் என்பது போல், வசீகரன் வேண்டும், வசீகரன் வேண்டாம் என்ற மன நிலையில் அவள் ஊஞ்சலாடினாள்.

அந்தத் துணியால் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் முன் நின்று கொண்டு, ஜேபியின் அழைப்பிற்காக வெளியே காத்திருந்தான் வசீகரன்.

தன்னைத் தேடவைத்தாயிற்று. தன்னைத் தேடி வரவும் செய்தாகி விட்டது. தன்னை வசீகரன் புறக்கணித்ததற்கு ஈடு கட்டியாகிவிட்டது. இதற்கு மேல் என்ன? என்ன? என்றவள் மனம் அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, பதில் அளிக்க முடியாமல் அவளின் மனம் தவித்துக் கொண்டிருந்தது.

" அம்மணி எனக்கு கடல் காற்று ஒத்துக் கொள்ளவில்லை. இந்தக் குளிர் காற்றில் நான் நடுங்கியே செத்து விடுவேன் போல! எனக்கு ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் தான் என் தாய் தந்தைக்கு தகவல் தர வேண்டும் இந்த ஒரு உதவியை மட்டும் எனக்காகச் செய்யுங்கள்!" என்றான் வெளியிலிருந்து சத்தமாக.

இங்கு வந்த முதல் இரண்டு நாட்கள் தான் எவ்வாறு குளிரில் கஷ்டப்பட்டோம் என்பதை நினைவுகூர்ந்தவள், எனக்காக தன் உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு, தான் கூறிய அனைத்துக்கும் தலையாட்டிய அந்த அன்பிற்கு சற்றே தலை வணங்கி, அவனை தன் கூடாரத்திற்குள் அனுமதித்தாள்.

ஒருவர் மட்டுமே தங்கும்படியாக இருந்த அந்த இடத்தில் இருவர் தங்கியதும், ஏற்பட்ட இட நெருக்கடியில் இருவரும் நெருங்கியே அமர்ந்திருந்தனர்.

வார்த்தை இல்லாத அந்த மௌனமான நேரங்கள் இருவரின் மனதிற்கும் அமைதியை வந்தது.

தனக்கு உணவாக கொடுக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளை வசீகரன் உண்பதற்குக் கொடுத்தாள்.

மெல்லிய ஒளியைச் சிந்திய அந்த பேட்டரி லைட்டில் இருவரும் உணவை எடுத்துக் கொண்டனர். உணவு உண்டு முடித்ததும் ஜேபி யின் உதட்டோரம் ரொட்டியின் சிறு துணுக்கு தெரிந்தது வசீகரனுக்கு.

இயல்பாக விரலினை நீட்டி அதனை துடைக்க நினைத்தவன், அந்த இதழ்களின் மென்மையை அவன் விரல்கள் உணர்ந்ததும், அவளின் கீழுதட்டில் கோடிட்டான்.

மங்கிய ஒளியில் மன்னவன் விரல்கள் மாயம் செய்ய, அதன் விதத்தில் சட்டென்று கண்மூடி, வலது புறத்து கன்னத் தசைகளைத் தன் வலது தோளோடு சாய்த்துக் கொண்டாள்.

மங்கையின் மயக்கம் மன்னவனையும் தொற்றிக் கொள்ள, அவளைத் தன் மார்போடு சாய்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான். தன் கைகளுக்குள் அடங்கியவளின் மென்மையில் பித்தம் கொண்டு, அவளைத் தரையில் வீழ்த்தி, அவளுள் விழாமல் வீழ்ந்தான்.

முதலில் ஆதரவாய் தோன்றிய அவனின் அணைப்பு, அவன் கரங்களின் தேடலில் தீயாய் அவளின் தேகத்தைச் சுட ஆரம்பித்தது.

மனதிற்குள் புதைந்திருந்த பிசாசு, பூதங்கள் எல்லாம் விஸ்வரூபம் எடுக்க, சட்டென்று அவனைத் தன்னிலிருந்து பிரித்து விட்டு, கூடாரத்தை விட்டு வெளியே ஓடி வந்தாள் ஜேபி.

உணர்வுகளின் பிடியில் இருந்தவனோ, தரையில் படுத்தபடியே, உச்சந்தலையில் இருந்து பின்னந்தலை வரை தன் முடியினை இரு கைகளாலும் கோதிவிட்டு தன்னை சமப்படுத்த முயன்றான்.

வெளியே வந்த ஜேபியின் கால்கள் இலக்கில்லாமல் சென்று இறுதியில் தன் சிற்பத்தின் முன் வந்து நின்றது.

அவளின் பின்னே வந்த வசீகரன், "ஏன்?" என்றான் ஒற்றைக் கேள்வியாக.

ஜேபி எந்த பதிலும் கூறாமல் தன் முன்னே இருந்த அந்த மணல் சிற்பத்தை நோக்கி தன் சுட்டு விரலை நீட்டினாள்.

"புரியவில்லை..."

" எனக்கும் புரியவில்லை மிஸ்டர் வசீகரன். தவறு செய்தவர்களுக்கு தானே தண்டனை கிடைக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்றும் தண்டனை கிடைக்கிறதே ஏன்? " என்றாள்.

"அம்மணி..." என்றான் அவள் கூறும் செய்தியை புரிந்து கொள்ள முடியாமல்.

"ம்... இனி இதற்கு ஒரு முடிவு கட்டத் தான் வேண்டும் மிஸ்டர் வசீகரன். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை " என்றவள் சிறு வயதில் தனக்கு நேர்ந்த, பாலியல் சீண்டலையும், அதிலிருந்து தான் மீண்டு வந்து விட்டாலும், திருமணம் என்ற பந்தத்தில் ஒன்ற முடியாமல் தவிப்பதையும் சலனமற்ற குரலில் கூறி முடித்தாள்.

இப்பொழுதுதான் ஜேபி எதற்காக தன் சிற்பத்தை நோக்கி கையைச் சுட்டிக் காட்டினாள் என்பதை புரிந்து கொண்டான் வசீகரன். பெண்மையின் மெல்லிய உணர்வுகள் எப்படி ஆண்களால் சிதைக்கப்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டான்.

ஜேபிக்கு பாசத்தை, பரிவை, காதலைத் தாண்டி தன்னிடம் அவள் எதிர்பார்ப்பது நம்பிக்கையுடன் கூடிய பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொண்டான்.

சிறகுகள் நீளும்...

 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அவளின் எதிர்பார்ப்பு புரிந்தது 👍🏼👍🏼👍🏼👍🏼