• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 15

" என்ன அமுதன், காமாத்திபுரா என்றவுடன் அதிர்ந்து எழுந்து விட்டீர்கள்! ஆம் காமாத்திபுரா, மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி தான்.

சிவப்பு விளக்கு பகுதி என்றதும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆடம்பர கட்டடங்களும், கண் கவர் விளக்குகளும் அங்கே கிடையாது. பழைய, வர்ணம் உதிர்ந்த, அழுக்கு படிந்த கட்டிடங்களும், குறுகிய தெருக்களும், சாதாரண கடைகளும் இருக்கக்கூடிய பகுதி தான். எங்கள் வீட்டுத் தெருக்களில் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். மொட்டை மாடியில் துணிகள் காய்ந்து கொண்டுதான் இருக்கும்.

தினக்கூலி போல், முகத்தில் அடர்த்தியாக போடப்பட்ட மேக் அப்பும், உதடுகளில் பூசப்பட்ட சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூச்சும், புருவங்களில் தீட்டப்பட்ட அடர்த்தியான கண் மையுமாக வேலைக்கு கிளம்பும் பெண்கள் அங்கே அதிகம் தான்.

மேக் அப்பில் அவர்கள் முகம் பளீரென காட்சியளித்தாலும், அந்த கண்களில் இத்தொழிலின் மீதான அவர்களது விருப்பமின்மையையும், துயரத்தையும் உங்களுக்கு பார்க்க முடியாது. சிரிக்கும் உதட்டிற்குப் பின் ஆண்டு கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் இறுகிப் பாறாங்கல்லாய் இருக்கும்.

இந்த மும்பையில் நீங்கள் வாழ்வதற்காக கட்டிடக்கலையை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி, அவர்கள் வாழ்வதற்கான ஒரே வழியாகக் கூட இருக்கலாம்.

சின்னஞ்சிறிய பெண் குழந்தைகள் கூட, பெரிய பெண்கள் போல் மேக்கப் போட்டு இருந்தாலும் அவர்கள் முகத்தில் குழந்தைத்தனமே எஞ்சி இருக்கும் தெரியுமா உங்களுக்கு?

அழுகி சீழ் பிடித்த புண்ணிற்கு கட்டுப்போட்டது போல் தான் இந்த காமத்திபுரா. இதில் துயரம் என்னவென்றால் இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை அமுதா.

சரி... என் கதையைச் சொல்வது என்று முடிவாகிய பின் அதனைத் தொடர்வது எனக்கு ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.

உங்களிடம் என் தோல்வி இந்த சலங்கைக்காகத்தான் என்றால், தோற்பதைக் கூட நான் பெருமையாக நினைக்கிறேன்" என்றவள் அதுவரை துவண்டிருந்த முகத்தில் நிமிர்வு மிளிர, படுக்கையில் இருந்து எழுந்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அதிர்ச்சியில் இருந்து மீளாத ஆரா தன் தலையை உலுக்கி தன்னை நிதானப்படுத்த முயன்றான். மங்கிய இருளும் அவன் அறிவை மங்கச் செய்ய, அறையின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்தான்.

ஒளிர்ந்த விளக்கில் குளிர்ந்தவள், தன் வலது கையை நீட்டி ஆராவை அமரும்படி சைகை செய்தாள்.

அவள் நிமிர்ந்து நிற்கும் நிமிர்வில் சங்கமித்ராவை சிறிதும் தவறாக எண்ண முடியவில்லை ஆராவுக்கு. தன் வலது புருவத்தை சுட்டு விரலினால் நீவியபடி, கயமை கலக்காத அவள் விழிக்கூர்மையில், அவள் கூறியதை புறந்தள்ளவும் முடியாமல் தவித்தவன், தன் பின்னங்கழுத்தை தேய்த்துக் கொண்டே கட்டிலில் மீண்டும் அமர்ந்தான்.

வெளிவரத் துடித்த வார்த்தைகளை உதடு கடித்து, மடித்து கட்டுப்படுத்தியவன், பின் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில், "என்னை ஏய்ப்பதற்காக, திசை மாற்றுவதற்காக பொய் கூறுகிறாயா மித்ரா? " என்றான்.

"அதனால் எனக்கென்ன லாபம் அமுதா?" என்றாள் விட்டேறியாக.

"காமாத்திபுரா... எந்த மாதிரியான இடம் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? சிறுவயதில் உன்னை யாரேனும் அங்கு ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டார்களா?" என்றான் கூர்பார்வையுடன்.

" நான் பிறந்ததே காமாத்திபுராவில் என்றால் என்ன செய்யப் போகிறீர்கள் அமுதா? " என்றாள் கேலி கலந்த குரலில்.

உச்சந் தலையில் சூடான ரத்தம் பாய்வதைப் போல் உணர்ந்த ஆரா, "ரைட்.... உன்னுடைய ஒவ்வொரு பதிலும் என்னை மிரட்டுகிறது என்ற உண்மையை நான் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் உன் தகவல்களுக்கும், உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. நீ கூறிய அந்தப் பெருமை மிகுந்த இடத்தில் பிறந்த உனக்கு சிறுமை சிறிதும் இல்லையே" என்றான் ஆராய்ச்சி பார்வையுடன்.

"காமாத்திபுரா என்றால் கற்பை இழந்த பெண்கள் மட்டும் வாழும் பகுதி என்று அர்த்தமா?" அவள் பற்களிடையே உரசிய வார்த்தைகளில் அனல் பற்றிக் கொண்டது.

" முழுவதும் இல்லை. ஆனாலும் அப்படித்தானே? " என்றான்.

அமர்ந்திருந்த இருக்கையின் இரு புறங்களிலும் இருக்கும் கைப்பிடியின் மேல் தன் இரு உள்ளங்கையையும் அழுத்தி பிடித்துக் கொண்டாள். " ஓ காசியில் பிறந்தால் கற்புடையவள். காமாத்திபுராவில் பிறந்தால் கற்பிழந்தவள் என்று அர்த்தமா அமுதா?" என்றாள்.

'அமுதா' என்று அவளின் அதிரடி குரலில், அவள் உதடுகள் விளிக்கும் போது, ' டேய் அமுதா ' என்று தன் அன்னை அதட்டுவதைப் போல் உணர்ந்தவனின் உதட்டில், மெல்லிய புன்னகைப் படலம் பரவ ஆரம்பித்தது. அவள் கேள்வியின் ஆழம் புரிந்தாலும், தன் இரு தோள்களையும் ஸ்டைலாக குலுக்கி உதட்டைப் பிதுக்கி சன்னச் சிரிப்பு சிரித்தான் ஆரா.

"என் வாழ்வைப் புரட்டிய, மிரட்டும் பக்கங்களை கண்டிப்பாக தூசி தட்டியே ஆக வேண்டுமா?" என்றாள்.

" சலங்கை வேண்டும் தானே? " என்றான் பதிலாக.

" திருமணத்திற்காக ஒரு ஊருக்கு புறப்பட்டு வந்தீர்களே அந்த ஊரின் பெயர் நினைவிருக்கிறதா? " என்றாள்.

ஆரா கண்களைச் சுருக்கி யோசித்து மெதுவாக தலையசைத்து, "நினைவில்லை..." என்றான்.

" அதுதான் என் அம்மாவின் சொந்த ஊர். அதன் பெயர் கன்னிராஜபுரம்" என்றாள் உமிழ்நீரோடு சுரந்த கசப்பை விழுங்கிக் கொண்டு.

" உன் அம்மா சுமித்ரா. ரைட்...? "

"ம்ஹூம்... எனது தாயின் பெயர் சுமித்திரை", என்றவள் கண்களின் சிறு ஓரம் பெருமை பொங்கி வழிந்தது.

" கன்னிராஜபுரம் ஒரு நெய்தல் நிலம். சுத்தமான கடற்காற்றும், கள்ளம் கபடம் இல்லா மக்களும், கடல் காற்றுக்கு தலையசைக்கும் பனை மரங்களும், கட்டு கட்டாய் கதை சொல்லும் கட்டு மரங்களும் நிறைந்த, அமைதியான பூமி அது" என்று ஆரம்பித்தவளின் காலச்சக்கரம் பின்னே சுழல ஆரம்பித்தது.

பொன்மணல் நிறைந்த கடற்பரப்பின் அருகே இடுப்பில் குடத்தை சுமந்தபடி பெண்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"ஏய் சுமி! இந்த உப்புக் காற்றில் பிறந்தாலும், நீ மட்டும் எப்படி இப்படி அழகாய் இருக்கிறாய்?" சுமித்திரையின் தோழி வைதேகி ஏக்கம் கலந்த பொறாமையுடன் கேட்டாள்.

" எனக்கு தலைக்கு சீவக்காய் தேய்த்து, சாம்பிராணி போட்டு பதமாய் முடியை உலர்த்தித் தருவார்கள் என் பெரியம்மா. வெட்டிவேர் போட்டு தைலம் காய்ச்சி அதனை பராமரித்து தருவார்கள் என் சித்தி. முகத்திற்கு சோப்பு கூட போட விடாமல் நலங்கு மாவு போட்டு மெருகேற்றுவார்கள் என் அத்தை. என் பாட்டி முகத்தில் சிறு பரு கூட வரவிடாமல் பலவகை மாவுகளை முகத்தில் பூசி என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். தாயாய்,

தந்தையாய் தாங்கும் என் செல்ல அப்பா. எனக்கு தாய் இல்லாத குறையை என் வீடு நிறைந்த சொந்த பந்தங்கள், நிறைவு செய்யும் போது, உடன் பாதுகாப்பாய் சுற்றம் துணை நின்று கூட்டுக்குடும்பமாய் வாழும் என் அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது வைதேகி" என்றாள் புன்னகையுடன் சுமித்திரை.

"ம்... என்னமோ போ. எப்படித்தான் அந்த வீட்டில் இத்தனை பேர் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கிறீர்களோ! " என்றாள் ஆச்சரியத்துடன்.

" புரிதலுடன் கூடிய அன்பு இருக்கும்போது ஏன் சண்டை சச்சரவு வரப்போகிறது? " என்றாள் சுமித்திரை தன் குடும்பத்தை நினைத்து பெருமையாக.

"இப்படி அழகு உன்னிடம் கொட்டி கிடப்பதால் தானே வடக்கில் இருந்து மாப்பிள்ளை திடீரென்று வானத்திலிருந்து குதித்து, உன்னை பெண் கேட்டு பரிசம் போட்டு சென்றிருக்கிறார்" என்றாள்.

அவள் பேசிய மற்ற பேச்சுக்கள் எல்லாம் மனதில் இருந்து அழிய, பரிசம் என்ற ஒற்றை வார்த்தையில் சுமித்திரையின் மனதில் திருமண மலர்கள் மலர ஆரம்பித்தது.

" ஆமாம்டி. பக்கத்தில் ஊரிலிருந்து எல்லாம் சொந்தங்கள் அடுத்த வாரம் வந்து விடுவார்கள். நீயும் என்னுடன் தங்கி விடுகிறாயா? என் அறையில் அவர் வாங்கித் தந்த பரிசு பொருட்கள் இல்லாத இடமே இல்லை. அதனை பார்ப்பதற்காகவாவது வா. உன் வீட்டில் சம்மதம் வாங்கட்டுமா?" என்றாள் உண்மையான ஆசையுடன்.

" வேண்டாம். என் வீட்டில் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் "

" சரி வைதேகி அவரைப் பார்த்தாயா? அவர் எப்படி இருக்கிறார்? " என்றாள் சுமித்திரை வெட்கம் மீறிய ஆர்வத்துடன்.

"ம்... ம்... என்னை இருந்தாலும் நம்ம பக்கத்து ஆம்பளையாள் மாதிரி பனைமர உயரத்துல, முறுக்கு மீசையை, கருப்பு கை முறுக்கிற மாதிரி இல்லை. வெள்ள வெளேர்னு, மொழுக்குனு மீசை இல்லாமல் இருக்கிறார். உனக்கு ஏத்த ஆளு தான். உனக்கு யோக ஜாதகம் தான் போ!" என்று நீட்டி முழக்கினாள் வைதேகி.

" அவருக்கு நான் இணையாக இருப்பேனா? " அச்சம் சுமந்த விழிகள் படபடக்க இடுப்பில் தாங்கி இருந்த குடத்தை இறுக்க பிடித்தபடி கேட்டாள் சுமித்திரை.

" அதுதான் பரிசம் போட்டு அடுத்த வாரம் கல்யாணம்ன்னு முடிவாயிருச்சு. இனி இணையாய் இருந்தா என்ன? இல்லாமல் இருந்தால் என்ன?. அது சரி ஒவ்வொரு முறை மாப்பிள்ளை வரும் போது உனக்கான அவரின் கவனிப்பு எப்படி சிறப்பாக இருந்ததா? " என்றாள் வைதேகி குரலைத் தாழ்த்தி.

விரல் நகம் கூட தீண்டாத தன்னவனின் கண்ணியம் தந்த கர்வத்தில், "நினைப்பைப் பார். என்னிடம் உதை வாங்கப் போகிறாய். வாடி போகலாம். எங்க வீட்டில் என்னை தேடுவார்கள்" என்று பேச்சை முடித்து விட்டு, வீடு திரும்பினர் இருவரும்.

அவர்கள் சென்றவுடன், காற்று பலமாக வீச, கடற்கரை அருகே ஒதுங்கி இருந்த சங்கில், அந்த காற்று நுழைந்து அபாய ஒலி எழுப்பியது. அந்தோ பரிதாபம் அது பெண்ணவளின் காதுகளில் நுழையவே இல்லை.

ஊரே மெச்சும் படி சுமித்திரையின் திருமணமும் முடிந்தது. தூரத்து உறவினர் ஒருவர் கொடுத்த ஜாதகத்தால் தான் மாப்பிள்ளை ஆனான் ஆதிஷ் குப்தா. பெற்றோர் இல்லாத காரணத்தால் படித்த பகட்டான மாப்பிள்ளை ஆதிஷை தங்கள் வசம் சுலபமாக வளைத்துக் கொள்ளலாம் என்று அந்த கூட்டுக்குடும்பம் மிகவும் எளிதாக நினைத்தது. அவனது பணிவான குணமும், அவர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

திருமண உடன்படிக்கையின் படி அவர்களின் பரம்பரை தொழிலான கருப்பட்டி வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டான் ஆதிஷ். வடமாநிலங்களுக்கு, தெற்கிலிருந்து ஏற்றுமதி செய்து அவன் அயராது பார்க்கும் உழைப்பில், தங்கள் தேர்வை எண்ணிப் பெருமிதம் கொண்டது அந்த கூட்டுக் குடும்பம். தங்கள் பாரம்பரியத் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற மாப்பிள்ளையின் மீது ஏகப்பட்ட மரியாதை ஏற்பட்டது அவர்களுக்கு.

திருமணம் முடிந்த அடுத்த கனம் முதல், பூலோகத்திலேயே சொர்க்கம் இருப்பதைப் போல் கொண்டாடி மகிழ்ந்தனர் மணமக்கள். தன்னைக் கொண்டாடும் குடும்பம், ஆதிஷையும் கொண்டாடுவதைக் கண்டு சந்தோஷம் அடைந்தாள் சுமித்திரை.

சுமித்திரையை விதவிதமாக புகைப்படம் எடுத்து அதை ஓர் ஆல்பமாக மாற்றி அடிக்கடி பரிசளித்தான். குறும்பாய் மிளிரும் சுமித்திரை, கன்னம் சிவக்கும் சுமித்திரை, வெட்கம் கொண்டாடும் சுமித்திரை, செல்லச் சண்டை போடும் சுமித்திரை என்று அவளது உணர்வுகளை அந்த நிழற்படங்கள் அழகாய் எடுத்துக்காட்டியது. கணவன் பரிசளித்த கண்ணியமான நவநாகரீக உடைகள் தந்த மிடுக்கில் தன்னை மகாராணி போல் உணர்ந்தாள் சுமித்திரை. தன்னை ஆராதிக்கும் கணவனின் அன்பில் பேச்சிழந்து நின்றாள் அந்தப் பேதை.

திருமணம் முடிந்து சரியாக மூன்று மாதம் ஆனவுடன், சுமித்திரை தன் குடும்ப உறுப்பினர் அனைவரையும், வீட்டின் வரவேற்பரையில் அமரச் செய்திருந்தாள். வெகு நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள் காலத்தை கடத்திக் கொண்டு.

"சுமி டியர் எதற்காக எல்லோரையும் இங்கே ஒரே நேரத்தில் வர செய்திருக்கிறாய்? வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை. என்னிடமும் இதைப் பற்றி எந்த விளக்கமும் கூறவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கும் நம் தொழிலைப் பார்க்க, இருக்கும் நேரமே நமக்கு போதாது. நீயும் நேரத்தை வீணடிக்காமல், சொல்வதை விரைந்து சொல்" என்றான் ஆதிஷ்.

கனத்த மவுனத்திற்கு பிறகு வாய் திறந்தாள் சுமித்திரை. " எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை. உங்கள் அனைவரின் நடவடிக்கையும் பிடிக்கவில்லை. நான் இங்கிருந்து என் கணவர் ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். என் சொத்தை உடனே எனக்குத் தாருங்கள் " என்றாள் சுமித்திரை இலக்கில்லா விழிகளுடன், யாருடைய கண்ணையும் நேர் நோக்காமல்.

"நம்முடைய சுமித்திரைக்கு எப்பொழுதுமே விளையாட்டு தான்" என்றார் சுமித்திரையின் அப்பா முருகவேல்.

அதிர்ந்த அந்த கூட்டுக்குடும்பம், சுமித்திரையின் தந்தை கூறியதைக் கேட்டு கலகலவென சிரித்தது.

" நிச்சயம் இது விளையாட்டு பேச்சு இல்லை..." என்றாள் உறுதியான குரலில்.

முருகவேல், " பாப்பா பெரியவர்கள் முன்பு இது என்ன பேச்சு. உனக்கு அப்பா நிறைய செல்லம் கொடுத்து விட்டேன். மாப்பிள்ளை சுமியை கூட்டிக்கொண்டு உள்ளே செல்லுங்கள்" என்று சுமூகமாகவே பிரச்சனையை முடிக்க எண்ணினார்.

" நான் சொல்வது உங்கள் ஒருவர் மூளைக்கு கூட எட்டவில்லையா? எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை. ஆதி உடனே கிளம்பலாம் நம் சொத்தை எடுத்துக் கொண்டு. இந்தச் சொத்து அனைத்தும் எனக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்து. எனக்கு அம்மா இல்லாததால் இவர்கள் அனைவரையும் என் தந்தை இணைத்துக் கொண்டார் என்னை வளர்ப்பதற்காக மட்டும். தொழிலிலும் அதிகமாகவே லாபம் கொடுத்து விட்டார். நான் தான் இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டேனே. சரியான காக்காய் கூட்டம் இப்பொழுதும் ஒட்டிக்கொண்டே இருக்கிறது " என்று முகத்தை திருப்பினாள் சுமித்திரை.

"சுமி... என்னடா? ஏன்டா இப்படி பேசுகிறாய்? நிதானமாக யோசித்துப் பேசு கண்ணம்மா" என்றார் முருகவேல் அவளை சமாதானப்படுத்தும் நோக்குடன்.

அதிர்ச்சியோடு அவளை நோக்கிய மொத்தக் குடும்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது, தன் தந்தை அருகில் வந்து நின்றாள் சுமித்திரை.

"இது என் தாய் வழி பாட்டன் சொத்து. என் தாய்க்குப் பிறகு எனக்கே சேர வேண்டும். இது நாள் வரை ஏமாற்றி உண்டு பிழைத்தவர்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள். இல்லை சொத்துக்கு ஈடான பணத்தை எடுத்து வையுங்கள் " என்றாள் அதிகாரமாக.

சுமித்திரையின் புது அவதாரத்தில் அதிர்ந்து நின்றது அந்த கூட்டுக் குடும்பம். ஆனால் அடுத்த நொடி அவள் கூறிய கூற்று உண்மையாய் இருந்ததால், அந்த சொத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத காரணத்தால், அவள் தந்த அவமானத்தில் திசைக்கு ஒன்றாகச் சிதறிச் சென்றனர்.

ஆண்கள் கூட்டம் தோளில் கிடந்த துண்டை உதறிக் கொண்டு முன்னே செல்ல, பெண்கள் கூட்டம், தங்கள் குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு, தயங்கித் தயங்கி சுமத்திரையின் கண்களை பாசமாய் வருடிய படியே வாசலை நோக்கிச் வெளியேறியது. தூரத்திலிருந்து அவள் பாட்டி அவளுக்கு ஆசீர்வாதம் செய்வது போல் சைகை செய்தார். வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் சுமத்திரை.


சுமித்திரையின் வயதை ஒத்த இளவயது சொந்தங்கள் எல்லாம் அவளின் திடீர் மாற்றம் கண்டு, கண்களில் வெறுப்பை உமிழ்ந்தபடி சென்றது.

வாசலில் வெளியேறும் தன் சொந்த பந்தங்களிடம் கையெடுத்து வணங்கி, மன்னிப்பை யாசித்தார் முருகவேல். முருகவேலுடன் இணைந்து ஆதியும் கெஞ்சிப் பார்த்தான். ஆனால் இதற்குப் பிறகும் இங்கே இருந்தால் அவமானம் மட்டுமே மிஞ்சும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். மேலும் தாங்கள் வளர்த்த சுமித்திரையின் வாயிலிருந்து நஞ்சு போன்ற இந்த சொற்களைக் கேட்டதும் அவர்கள் நெஞ்சம் விம்மி வெடித்தது. தங்களின் அன்பு, பாசம், வளர்ப்பு எல்லாம் பொய்த்து போனதை எண்ணி துக்கப்பட்டனர்.

சுமித்திரையோ கற்சிலைப் போல் கலங்காது பார்த்தாள். "ஏன் இப்படி புத்தி கெட்டு நடந்து கொள்கிறாய் சுமி? " கோபத்தில் வெடித்தான் ஆதிஷ்.

" மித்திரை கண்ணா! உனக்கு என்ன பிரச்சனை? அப்பாவிடம் சொல். நிச்சயம் நீ இப்படி பேசும் பெண் கிடையாது " என்று சுமித்திரையின் கையைப் பிடித்துக் கொண்டு மருகினார் முருகவேல்.

அவரிடமிருந்து கையைப் பிரித்துக் கொண்டு, தன் தந்தையின் முகத்திற்கு நேரே சொடுக்கிட்டாள் சுமித்திரை. "நான் வெளியேறச் சொன்னது உங்களையும் சேர்த்துதான்" என்றாள்.

" உன் மீது அன்பு வைத்ததைத் தவிர நான் வேறு எந்த தவறும் செய்யவில்லையே கண்ணம்மா " என்றார்.

" அது உங்கள் முட்டாள்தனம்" என்றாள்.

"பாப்பா நான் உன் அப்பாடா..." என்றார் முருகவேல் கண்ணீர் மல்க.

"யாருக்குத் தெரியும். சொல்ல வேண்டிய என் அம்மா நான் பிறக்கும்போதே இறந்து விட்டாரே" என்றாள் இளக்காரமாக.

"மித்திரை... " என்று பிறந்ததிலிருந்து அடிக்காத தன் மகளை அடிப்பதற்கு தன் கையை உயர்த்தினார் முருகவேல்.

வலது கை உயர்ந்திருக்க, இடது கையால் திடீரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தார். ஆதி அவரை தன் கையில் தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தான்.

சுமித்திரையோ அசையாமல் அந்த இடத்திலேயே சிலை போல் நின்றாள். மகள் காட்டிய புதிய பரிமாணத்தில் வாசல் தாண்டும் முன் அந்த தந்தையின் உயிர் தன் மகளைப் பார்த்துக் கொண்டே பிரிந்தது.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அச்சோ சுமித்திரைக்கு என்ன ஆனது 🙄🙄🙄🙄🙄🙄ஒருவேளை ஆதிஷ் மறைமுகமாக சுமித்திரையை தூண்டி விட்டிருப்பானோ 🤔🤔🤔🤔🤔🤔
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அழகிய கிராமத்தில பிறந்தவளின் முடிவு ஏன் சீரழிவு நிறைந்த இடத்தில் நிகழ்ந்தது 🤔🤔🤔

ஏன் இந்த மாற்றமோ சுமித்திரையிடம் 😲😲😲

ஆதிஷ் நல்லவனா 🤨🤨🤨
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அச்சோ சுமித்திரைக்கு என்ன ஆனது 🙄🙄🙄🙄🙄🙄ஒருவேளை ஆதிஷ் மறைமுகமாக சுமித்திரையை தூண்டி விட்டிருப்பானோ 🤔🤔🤔🤔🤔🤔
காரணம் இன்றி எந்த காரியமும் இல்லை நட்பே 😍
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
ஆதிஷ் வேலையாக இருக்குமோ.
கடலில் அடியே கனலை கக்கும் எரிமலை கண்ணுக்குத் தெரியாது...
ஆர்ப்பரிக்கும் அலையே கண்ணுக்குத் தெரியும் 🥺
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அழகிய கிராமத்தில பிறந்தவளின் முடிவு ஏன் சீரழிவு நிறைந்த இடத்தில் நிகழ்ந்தது 🤔🤔🤔

ஏன் இந்த மாற்றமோ சுமித்திரையிடம் 😲😲😲

ஆதிஷ் நல்லவனா 🤨🤨🤨
மழையில் ஓர்நாள் சாயம் பூசி நரியின் சாயம் வெளுத்துத்தான் போக வேண்டும் 👍
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Interesting
 
Top