• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 16

யாருமற்ற அந்த பெரிய வீட்டில், பூஜையறையில் வீற்றிருந்த தெய்வங்களை எல்லாம் வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்திரை.

அவள் வீட்டு வாசலில் இருந்து, தெரு வழியாக, அந்த ஊர் முழுவதும் சுமித்திரை அரக்கியாய் மாறிய கதை மாறி மாறி பேசப்பட்டது.

ஆதிஷ் அழுது கொண்டே தன் மாமனாரை இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றதைக் கண்ட ஊர் மக்கள், மகனாய் மாறிய மருமகனை புகழ்ந்தனர்.

தன் தந்தையைக் காண வரவில்லை சுமித்திரை. மருத்துவமனையில் இருந்து இடுகாடு கொண்டு செல்லும் முன், வாய்க்கரிசி போட கூட மகள் வரவில்லை. வீடு, வாசல் இல்லாமல் நிலைகுலைந்த கூட்டுக்குடும்பம், தங்கள் சொந்த பந்தங்களின் இல்லங்களில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்தது. ஆதிஷ் அவர்களை எவ்வளவு வற்புறுத்தியும் அவர்கள் சுமத்திரையின் வீட்டிற்கு வர முடியாது என்று மறுத்து விட்டனர்.

தன் மகன் இறந்த துக்கத்தில் ஊரே சோகமாய் இருக்க, சுமித்திரையின் பாட்டிக்கு மட்டும் அங்கே தனியாக இருக்கும் சுமித்திரையைக் காண உள்ளம் துடித்தது. 'அவள் உள்ளத்தில் இத்தனை நாள் இருந்த வஞ்சம் தான் இன்று வெளிவந்தது' என்று ஊரே அவளைத் தூற்றியது.

பிறக்கும் பொழுதே தாயை இழந்த அந்தக் குழந்தையை தன் கரங்களில் வாங்கிய போது, தன் மார்பு தேடி தவித்த அந்த செப்பு வாயா இப்படி பேசியது? அவரது மனம் மீண்டும் மீண்டும் சுமித்திரையின் பக்கம் ஏதோ நியாயம் இருப்பது போல் அவருக்கு அறிவுறுத்தியது.

ஆதிஷ் அந்த பெரிய குடும்பத்திற்கு உணவுகளை வரவழைத்து, அனைவருக்கும் விநியோகம் செய்து கொண்டிருந்தான். அவர்கள் மறுக்க மறுக்க, சுமித்திரைக்காக மன்னிப்பு வேண்டி நின்றான். ஒரு கட்டத்தில், 'சுமித்திரை பேசிய பேச்சுக்கு ஆதிஷ் என்ன செய்வான்?' என்று நினைத்த குடும்பம் அவன் உதவியை ஏற்றுக் கொண்டது. ஆதிஷ் அங்கேயே சுற்றிக்கொண்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தான்.

துக்கத்திலும், அடுத்து என்ன செய்வது என்ற கவலையிலும், அந்தக் குடும்பம் தவித்துக் கொண்டிருக்க, மனம் கனத்து இருந்த பாட்டி, யாரும் அறியாமல் மெல்ல சுமித்திரையின் வீடு நோக்கி வந்தார்.

வாசல் கதவு திறந்தே இருக்க, சுமித்திரையை அவரது கண்கள் தேடியது. கீழ்த்தளத்தில் எங்கும் சுமித்திரையைக் காணாமல், மேலே மாடியில் உள்ள அவளது அறைக்குச் செல்ல மாடிப்படிகளில் தளர்ந்த நடையுடன் எட்டு வைத்தார்.

தன் வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள், தன்னைப் பார்க்க சிறிதும் நினைக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தன்னறையை பூட்டாமல் இருந்தாள் சுமித்திரை.

வெறுமனே சாற்றி இருந்த கதவின் வழியே தெரிந்த சுமித்திரையின் கோலத்தில் பாட்டிக்கு நெஞ்சே அடைத்து விட்டது.

தன் உடலில் உடைகள் இன்றி, ஆள் உயரக் கண்ணாடி முன் நின்று, தன் நிர்வாணமான உருவத்தை பார்த்து எச்சில் உமிழ்ந்து கொண்டிருந்தாள் சுமித்திரை.

" செத்துப் போ!" என்று ஆவேசமான குரலில் கத்தினாள்.

மறு நொடியே தன் வயிற்றை பிடித்துக் கொண்டு, " பாப்பா பாவம்!" என்று தன் பிம்பத்தைப் பார்த்து அழுது கெஞ்சினாள்.

"அம்மாடி..." என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பாட்டி கீழே சிதறி கிடந்த சேலையை எடுத்து அவள் மீது போர்த்தினார்.

"பாட்டி... நீங்கள் என்னை நம்புகிறீர்களா? நீங்கள் என்னை பார்க்க வந்து விட்டீர்களா? ஐயோ என் அப்பா மட்டும் ஏன் என்னை நம்பாமல் போனார்? நான் என்ன பாவம் செய்தேன்!" என்று அரற்றினாள்.

அவள் நின்ற கோலமும், அவள் அழுத அழுகையும் புரியாமல் தவித்த பாட்டி பிறந்த குழந்தை போல் அவளை அணைத்துக் கொண்டே, தரையில் மடங்கி அமர்ந்து விட்டார்.

"ஏன்டா?" என்று பாட்டி கேட்ட ஒற்றை வார்த்தையில் அவர் வயிற்றினை கட்டிக்கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுக ஆரம்பித்தாள் சுமித்திரை.

பின் சட்டென்று தன் அழுகையை நிறுத்திவிட்டு, அறைக் கதவை ஒரு நொடி பார்த்துவிட்டு, தளர்ந்த தன் பாட்டியின் கைகளை எடுத்து தன் கழுத்தில் வைத்து, " பாட்டி என்னை கொன்று விடுங்கள். இந்தப் பாவியை கொன்று விடுங்கள். என்னால் சாக முடியவில்லை. என் வயிற்றில் இருக்கும் ஒன்றும் அறியாத பச்சை மண்ணை கொல்ல எனக்கு மனம் வரவில்லை. தயவுசெய்து என்னை எப்படியாவது கொன்று விடுங்கள்" என்று அவர் கைகளுக்கு அழுத்தம் தந்து, கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

" அடி பைத்தியக்காரி, பிள்ளை உண்டானால் நல்ல விஷயம் தானே! என் பிள்ளைக்கு ஆயுசு அவ்வளவுதான். அவன் போய் சேர்ந்து விட்டான். அந்தப் பழியை உன் மீது ஏன் போட்டுக் கொள்கிறாய்? சொத்து தானே கேட்டாய், பணம் தானே சம்பாதித்துக் கொள்வார்கள். உன் சொத்தை நீ கேட்டாய் அவ்வளவுதான். மனதை போட்டு அரட்டிக் கொள்ளாதே. புத்தி பேதலித்தவள் போல் இப்படி உடைகளை களைந்து இருக்கிறாயே. ஆதி தம்பி வந்தால் என்ன நினைக்கும்?" என்றார்.

"ஆதி" என்ற ஒரு வார்த்தையில் அவளது மதி விழித்துக் கொண்டது. தன் கரங்களை எடுத்து பாட்டியின் வாயில் வைத்து, தலையசைத்தாள் கண்ணீருடன்.

அவளின் நடவடிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக ஒன்றும் புரியாமல், 'ஏன்?' என்பது போல் பார்த்தார் பாட்டி.

"பாட்டி!" என்று மெதுவான குரலில் அவரை அடக்கியவள் , மட மடவென அரைகுறையாக உடம்பில் ஆடையை அணிந்து கொண்டாள். சத்தம் இல்லாமல் தன் பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

வீட்டின் முன் வாசலில் ஆதியின் வண்டியோ, இல்லை ஆதியோ வருவதற்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று ஆழம் பார்த்தாள்.

வேகமாய் துடிக்கும் தன் இதயத்தை வலது கை வைத்து தேய்த்து கொண்டே, "பாட்டி, அவன் நல்லவன் கிடையாது" என்றாள் முகத்தில் தோன்றிய அருவருப்புடன்.

" ஊரே அவனை தலையில் வைத்துக் கொண்டாடுகிறது உனக்கு மட்டும் ஏன் அவன் கெட்டவனாக தெரிகிறான் சுமித்திரை? " என்றார் குற்றம் சாட்டும் குரலில்.

ஒருமுறை கண்களை இறுக்கி மூடி, உள்ளங்கையை அழுத்தி மூடித் திறந்தவள், வானத்தைப் பார்த்து இரு கைகளையும் நீட்டி, " என்னைப் பெற்றவளே! என் துன்பத்திற்கு நீயாவது சாட்சி சொல்வாயா? மாட்டாயா? " என்று கதறியவளின் மூடிய கண்களின் ஓரத்தில் கண்ணீர் சுரந்தது.

உப்புக்காற்று அவள் கன்னங்களில் உரசி கண்ணீரைத் துடைக்க முயன்றது. வெண்மேகம் அவள் துன்பம் கண்டு கருத்து, தூறல் சிந்தி மூடி இருந்த இமையை திறக்கச் செய்தது.

உறுதியுடன் தன் பாட்டியின் கைகளை பற்றிக் கொண்டவள், "என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்றாள் இறுகிய குரலில்.

வாஞ்சையுடன் அவள் தாடையைத் தடவி, " கலங்காமல் மனதில் இருப்பதை சொல் சுமித்திரை" என்றார்.

" பாட்டி, கணவன் மனைவி இருவரும் இணைந்து இருப்பதை அடுத்தவர்கள் பார்த்து விட்டால் அந்த மனைவியின் நிலை என்ன? " என்றாள்.

" கொண்டவன் துணை இருந்தால், கண்டவன் என்ன சொன்னால் நமக்கு என்ன சுமித்திரை? " என்றார் தீர்க்கமாக.

"அந்தக் கொண்டவனே கதவை திறந்து, அடுத்தவர்களை பார்க்கச் செய்தால், என்ன செய்வாள் அந்தப் பெண்? " என்றாள் தழுதழுத்த குரலில்.

"பாப்பா... என்ன பேச்சு பேசுகிறாய்?" கோபத்தில் மூச்சு வாங்கியது பாட்டிக்கு.

" ஆம் பாட்டி திருமணமான நாள் முதல் அந்த ஆதி நாய், என் மச்சத்தை கூட மிச்சம் விடாமல் படம் எடுத்து வைத்திருக்கிறான். என்னுடன் அவன் கூடியதையும், நான்... நான்... அவனிடம் கூடியதையும் படம் எடுத்து வைத்திருக்கிறான். இந்த சொத்துக்களை விற்று நான் எடுத்து வராவிட்டால், ஒவ்வொருவரிடமும் அந்தப் படத்தை போட்டு காட்டுவேன் என்று மிரட்டுகிறான்.

அந்தப் படங்களில் அவன் எனக்கு ஒரு வித போதை வஸ்துவை கொடுத்துவிட்டு, என் நினைவில்லாமல் நானே... அவனை வெறிகொண்டு ஆட்கொள்வது போல் எடுத்திருக்கிறான்.
என்னை ஒரு காம பிசாசாக சித்தரித்து இருக்கிறான். நான் குழந்தை உண்டாகி இருப்பதை ஆசையுடன் அவனிடம் சொல்லும் போது, இதனை எனக்கு பரிசாய் கொடுத்தான் பாட்டி. பார்த்தவுடன் செத்தே போய் விட்டேன்.

நான் தற்கொலை செய்து கொண்டாலும், மொத்த குடும்பத்தையும் விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டினான். அவன் நிச்சயம் செய்வான் பாட்டி.

என்னை அப்படி மாமா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் பார்த்தால், என்னால் அவர்களை எதிர்கொள்ளவே முடியாது பாட்டி. ஐயோ! என்னை இப்படி கோழையாக வளர்த்து விட்டீர்களே அப்பா.

என் சொந்த பந்தங்களையும், சொத்துக்களையும் நான் காப்பாற்ற வேண்டும் என்றால் என் மானத்தை இழக்க வேண்டும்.

அவன் சுய ரூபத்தை சொல்லி விடத்தான் துணிந்தேன். ஆனால்... பெற்ற பெண்ணை அந்தக் கோலத்தில் கண்டால் என் தந்தை குற்ற உணர்வில் அப்பொழுதே இறந்திருப்பார். என் தந்தைக்கு அந்த குற்ற உணர்வை தரக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் நான் மிகவும் கேவலமானவள் பாட்டி. என் பிறப்பையே கேவலமாகப் பேசி என் தந்தையை நானே கொன்று விட்டேனே. ஐயோ! அப்பா... " என்று வாயை மூடிக்கொண்டு சத்தம் வராமல் ஏங்கி, ஏங்கி அழுதாள்.

சுமித்திரை எல்லாம் கூறி முடித்த பின் பேச்சிழந்து நிற்பது பாட்டியின் முறை ஆயிற்று. தன் வாழ்நாளில் இதுவரை இப்படிக் கேட்டிராத அந்த மூதாட்டி தன் பேத்திக்காக உடைந்து போனார்.

" மாராப்பு போட்டிருந்தாலும், மார் தளர்ந்து நின்றிருந்தாலும் பெண் என்றால் அவள் அங்கமே முதன்மையாய் பார்க்கப்படுகிறது. அதுவே அவளின் அடையாளமாய் இருக்கிறது. இதில் உன்னை குற்றம் கூறி என்ன பயன் தங்கம்? இப்பொழுது கூறியதை அன்றே என்னிடம் நீ கூறியிருக்கலாமே! ஒரு உயிரை நாம் காப்பாற்றி இருக்கலாமே!" என்றார் தன் இயலாமையுடன்.

' என்னால் யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் என் தந்தையையே நான் விழுங்கி விடுவேன் என்று எண்ணிப் பார்க்கவில்லையே. என்னை வெறுத்து விலக்கி வைப்பார் என்று தானே நினைத்தேன். என்னை இப்படி ஒரேடியாக விட்டுவிட்டு போய்விடுவார் என்று நினைக்கவில்லையே. அப்பா... என்னை யார் இப்பொழுது காப்பாற்றுவார்கள்?

அந்தப் பாவி என்னை அவன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது நான் வேறு எப்படி பேச முடியும்? உங்கள் மகளை உங்களுக்கே தெரியவில்லை என்றால் வேறு யாருக்கு தெரியப் போகிறது " என்று கதறி அழுத சுமித்திரையை சமாதானப்படுத்தும் வழி தெரியாது பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.

பின் ஒரு முடிவு எடுத்தவராக, "என்ன ஆனாலும் பரவாயில்லை சுமித்திரை. பெண்ணின் அங்கத்தை மட்டுமே பார்ப்பவனுக்கு அவன் தாயும் வேசியாகத்தான் தெரிவாள். எவன் என்ன நினைத்தால் என்ன? என்ன சொன்னால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு வா... " என்று அவள் கையைப் பிடித்து இழுத்தார் பாட்டி.

பெருத்த சத்தத்துடன் கூடிய சிரிப்பொலிவுடன் கைதட்டு ஒலி கேட்டதும், திடுக்கிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தனர் இருவரும்.

முன் வாசல் வழியாக வராமல், பின் வாசல் படிக்கட்டு வழியாக மொட்டை மாடி வந்த ஆதிஷ், இருவரின் சம்பாஷனைகளையும் கேட்டு புன்னகையுடன், இருவர் முன்பு நடந்து வந்தான் .

" இந்த தெற்கத்திப் பெண்களுக்கு தைரியம் அதிகம் தான் என்று நான் கேள்விப்பட்டதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் பாட்டி. என்முன் கூனிக்குறுகி இருந்த என் பொண்டாட்டியை, என் முன்னே நிமிர்ந்து நிற்கச் செய்து விட்டீர்களே!

எப்படி எப்படி என் அம்மா ஒரு வேசியா? எப்படி சரியாக கண்டுபிடித்தீர்கள் பாட்டி. ஆனாலும் உங்களுக்கு புத்தி கூர்மை கொஞ்சம் அதிகம் தான் " என்று கூறிக் கொண்டே அவர்களுக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைத்துக் கொண்டே நகர்ந்து வந்தான்.

அவன் கண்களில் தெரிந்த வெறியில் பாட்டிக்கு உள்ளே பயம் பற்றிக் கொண்டது. உடனே சுதாரித்து சுமித்திரையை தனக்குப் பின்னே நகர்த்தி, " தப்பித்து ஓடு சுமித்திரை!" என்று குரல் உயர்த்தினார்.

அனிச்சை செயல் போல் பாட்டியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு படியின் பக்கம் கால் எடுத்து வைத்தவள், "உன் தந்தையின் உயிர் பிரிவதைப் பார்த்தவள், உன் பாட்டியின் உயிர் பிரிவதைப் பார்க்க வேண்டாமா டியர்? " என்ற ஆதிஷின் குரலில் அப்படியே உறைந்து நின்றாள்.

"வேண்டாம்... நீ சொல்வதை அப்படியே கேட்கிறேன். என் பாட்டியை விட்டு விடு" என்று தரையில் மண்டியிட்டு அவன் முன் கையேந்தினாள்.

" அடடா என்னை பற்றிய அனைத்தையும் சொல்லிவிட்ட பின், இந்தப் பாட்டியை உயிரோடு விட்டால் என் திட்டம் எப்படி பலிக்கும்?" என்று தன் தாடையை தேய்த்தபடி, யோசனை செய்வது போல் பாவனை செய்தான்.

" இல்லை ஆதி, சொத்து முழுவதையும் உன் கையில் பணமாய் மாற்றி கொடுத்துவிட்டு, உன் கட்டுப்பாட்டிலேயே காலம் முழுவதும் வாழ்வதற்கு வாக்கு தருகிறேன். எந்த சூழ்நிலையிலும் இந்த வாக்கு மாற மாட்டேன். இது என் தந்தை மீது ஆணை" என்றாள் படபடக்கும் குரலில் வேகமாக.

மேகம் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு, "வேண்டாம்..." என்பது போல் இடி ஓசை எழுப்பியது.

"அப்படியா? உன்னை நம்பலாமா?" என்றான்.

" இதுவரை நீ கூறியதைத் தானே செய்து கொண்டிருக்கிறேன். இனியும் அப்படியே செய்து விடுகிறேன். என் பாட்டியை விட்டு விடு ஆதி " என்று கெஞ்சினாள்.

"உன் மானத்திற்காக உன் தந்தையையே கொன்றவள் நீ. அவர் மீது சத்தியம் செய்து கொடுத்தால்...
நன்றாக சிரிப்பு வருகிறது டியர். ஒன்றை நன்றாக புரிந்து கொள். நீ வாக்கு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், இனி காலம் முழுவதும், நீ என் கட்டுப்பாட்டில் தான்" என்றான் நக்கலாக.

" சுமித்திரை! இது நமது ஊர். இவனால் என்ன செய்து விட முடியும். பசுக்கள் சாதுவாக இருக்கும் என்று நினைத்து விட்டான். சேர்ந்து கூட்டமாக வந்தால் குள்ளநரி தலை தெறித்து ஓடத்தான் வேண்டும். பயப்படாதே! பாட்டி இருக்கிறேன். உன் மாமாவின் ஒரு அடிக்கு தாங்குவானா இந்தப் பயல். இவனைப் போய் இந்த ஊர் நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. இவன் முகத்திரையை இன்றே கிழிப்போம் வா!" என்று தன் தைரியத்தை ஒன்று திரட்டி அவளை அழைத்துக்கொண்டு படி இறங்க முற்பட்டார்.

ஆதிஷ் தன் வலக்கையால் சுமித்திரையை இறுக்க பிடித்துக் கொண்டு, இடக்கையால் பாட்டியை ஓங்கித் தள்ளினான். வலுவிழந்த அந்த மூதாட்டி படியில் உருண்டு, சுவற்றில் தலை மோதி, மயங்கிச் சரிந்தார் தலையில் ஏற்பட்ட ரத்தப்போக்குடன்.

கத்தக்கூட தோணாமல் அதிர்ச்சியில், விழிகள் அசையாமல் உயிர் வடிந்து நின்றாள் சுமித்திரை.

"என்ன டியர்! இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறாய்? இந்தப் பாட்டிக்கு நீ உண்மையை சொல்லவில்லை என்றால் இப்பொழுது உயிரோடு இருந்திருப்பார்கள். உன்னால் இல்லாமல் போய்விட்டார்கள்.

உன் குடும்பமே என் கையால் தான் உணவு உண்டு கொண்டிருக்கிறது. ஒரு துளி விஷம் போதும் அனைவரையும் சாய்த்து விடுவதற்கு. சுமி டியர், இன்னும் உனக்கு உண்மையைச் சொல்ல தைரியம் இருக்கிறதா?" என்று சிரித்த முகத்துடன், வார்த்தையில் தேன் தடவி, கத்தியைச் சொருகினான் அவள் இதயத்தில்.

இத்தனை அதிர்ச்சிக்குப் பிறகும், 'தன் உயிர் மட்டும் ஏன் இன்னும் பிரியாமல் இருக்கிறது?' என்று புரியாமல் திகைத்தவள், "பாட்டி..." என்று நடுநடுங்கும் குரலில் தன் பாட்டியை நோக்கி கை நீட்டினாள்.

கடைசி மூச்சுக்காக அவரின் நெஞ்சுக்குழி ஏறி இறங்க ஆரம்பித்தது. " ஐயோ பாவம்! ரொம்ப சிரமப்படுகிறார்கள் இல்லையா? நான் வேண்டும் என்றால் உதவி செய்யட்டுமா? " என்றான் ஏளனமாக.

மெல்ல படி இறங்கி, மூச்சுத்திணரும் பாட்டியைப் பார்த்து, " ரொம்ப பாவம் தான்... " என்று பரிதாபப்படும் பாவணையில் பேசிச் சென்றான்.

அவன் விலகியதும் விறுவிறுவென தன் பாட்டியின் அருகே வந்து அவரை தன் மடியில் வைத்த அடுத்த நொடி, அவர் உயிர்ப் பறவை பறந்து சென்றது.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
மனது மிகவும் கனத்து விட்டது ஆத்தரே 🥺🥺🥺

அன்பையும் பாசத்தையும் தேடும் பெண்களை வீழ்த்துவது தானோ, இவன் போன்றோரின் சாதனை 😡😡😡
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
இப்படி தான் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மனது மிகவும் கனத்து விட்டது ஆத்தரே 🥺🥺🥺

அன்பையும் பாசத்தையும் தேடும் பெண்களை வீழ்த்துவது தானோ, இவன் போன்றோரின் சாதனை 😡😡😡
அணுகுண்டின் சோதனையை ஆராய்ச்சி செய்கிறார்கள்...
பெண்மையின் சோதனைகளை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.... 🥺
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
இப்படி தான் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்.
முட்களிடையே சிக்கிக் கொண்ட நாணல் புல், தலையைக் கூட அசைக்க முடியாதாம்.... 🥺
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
ஆதிஷ் தான் மித்திரை இப்படி நடந்து கொள்ள காரணம்னு யூகித்தது சரியே 😔😔😔😔😔
உலகெங்கும் ஏதோ ஒரு மூலையில் தீர்க்கதரிசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் உங்களைப் போல.... 👍
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
பாவம் சுமித்திரை
 
Top