• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 5

ஆராவின் அதிரடி முடிவில் தேனம்மா நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தார்.
சங்கமித்ராவைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அவளின் மனோதிடத்தைக் கொண்டே தன் பேரனுக்கு மனைவியாக அவளை தேர்ந்தெடுத்தார்.

இதுவரை தன் பேரன் 'ஏன் சங்கமித்ராவை மணப்பெண்ணாக தேர்ந்தெடுத்தீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்காதது கண்டு, தன்மீது தன் பேரன் வைத்திருக்கும் அன்பில், நம்பிக்கையில் பெரு மகிழ்வு அடைந்திருந்தார்.

அவர் நினைத்திருந்தால் சங்கமித்ராவிடம் புரிதலுடன் பேசி, இந்தத் திருமணத்தை நடத்தி இருக்கலாம். ஆனால் தன் பேரனைப் பற்றிய மதிப்பு சங்கமித்ராவிடம் இம்மி அளவு கூட குறையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.


சங்கமித்ராவின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோமே என்ற ஒரு குற்ற உணர்வும் அவரை உள்ளே அரித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அவளுக்கு கிடைத்திருக்கும் மிஸஸ் ஆராவமுதன் என்ற அங்கீகாரம், அவரை சற்றே ஆசுவாசப்படுத்தியது.

பூதாகரமாக என்றோ ஒரு நாள் இப் பிரச்சனை வெளிவரும் நேரத்தில் சமாளித்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிவுடன் இருந்தார் பேரனின் மறுபக்கம் தெரியாமல்.

சங்கமித்ராவை தன்னோடு இருக்கச் செய்து, அவளது இறுக்கத்தை தன் அன்பால் இளகச் செய்து , தனக்குப் பின் இந்த வீட்டை நிர்வகிக்கத் தேவையான தகுந்த பயிற்சியை அவளுக்கு கற்றுக் கொடுத்து, தன் பேரனை அன்பால் கட்டியாளும் வித்தையை , தனக்குத் தெரிந்த அந்த மாயவித்தையை சங்கமித்ராவிற்கு குருவாய் போதித்து அவர்கள் இல்லறத்தை நல்லறம் ஆக்கும் வாய்ப்பை தட்டிப் பறித்த தன் பேரனை தட்டிக் கேட்காமல், கேட்க முடியாமல் தவித்தார்.


தயக்கங்களை எல்லாம் அழித்துவிட்டு மெல்ல தலையை நிமிர்த்தி தன் பேரனைப் பார்த்து, "இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கக் கூடாதா ஆரா? உன் பாட்டி பாவம் இல்லையா? " என்றார் சற்றே சோர்ந்த முகத்துடன்.

" அச்சச்சோ என் தேனம்மா! முதலில் நீங்கள் சொல்வதற்காகத்தான் திருமணம் முடித்தேன். பிறகு ஆற அமர யோசித்தேன் " என்றவனின் தலை லேசாக கோணலாக சரிந்து சிரிக்க ஆரம்பித்தது.

'வில்லங்கம் பிடித்தவன் என்ன சொல்லப் போகிறானோ?' என்று அவனைப் பார்த்தார் தேனம்மா.

" என் செல்ல தேனம்மாவின் மனது வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் தேவை இல்லாத அந்த லக்கேஜையும் என்னுடன் கூட்டிக்கொண்டு செல்கிறேன். இது எல்லாம் எனக்காகவா செய்கிறேன்?

உங்களுக்காகத் தானே செய்கிறேன். நீங்களே சொல்லுங்கள் அவளை விட்டு விட்டு சென்றால் நீங்கள் சந்தோஷப்படுவீர்களா? இல்லை அவளை என்னுடன் கூட்டிச் சென்றால் சந்தோஷப்படுவீர்களா? " என்றவனின் குரல் பாசத்தை அசால்ட்டாக அள்ளித் தெளித்தது.

பேரனின் மயக்கம் தரும் பேச்சில் தேனம்மாவின் தலை தாறுமாறாக எல்லா திசைகளிலும்ஆடத் தொடங்கியது.

" அச்சச்சோ என் செல்ல பாட்டி அம்மாவே, என் கண்களை நன்றாக பாருங்கள்" என்று பேசிக் கொண்டிருந்தவனின் சிரிக்கும் விழிகள் அசையாது உறுத்து விழிக்க ஆரம்பித்தது.

" அவளுக்கான அங்கீகாரத்தை கொடுக்கப் போவது நீங்களா? இல்லை நானா?" என்றான் அழுத்தமான குரலில்.

பேச்சிழந்து நின்றார் தேனம்மா ஆராவின் அதிரடிக் கேள்வியில்.

அவளைப் பார்க்காமலேயே ஒப்புக்காக திருமணம் முடித்து, அவளை மனையாள் என்று அறிந்த உடன் தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர நினைக்கும், துடிக்கும், முன்னுக்குப் பின் முரணான அவன் நடவடிக்கையில் குழம்பியே நின்றார்.

அதிரடிக்காரனின் அலட்டல் இல்லாத அழுத்தப் பேச்சில் யோசனையை தத்தெடுத்தது அவரின் முகம்.

' அவளது கடந்த காலத்தை பக்குவமாக தன் பேரனுக்கு புரிய வைத்து, தன் பேரனின் இருள் படிந்த மறுபக்கத்தை அவளை வைத்து மாற்ற வைத்து, அவர்களின் வாழ்வை சிறக்கச் செய்யலாம்' என்ற அவரின் எண்ணங்களை எல்லாம் சிதறச் செய்தான்.

தன் கண் மறைத்த மும்பை வாழ்வு, சங்கமித்ராவை பாதிக்குமோ?' என்ற கேள்வியை அவரது கண்கள் சுமந்து அவனைப் பார்த்தது.

அவரின் கேள்விக்கு பதிலாக, "மும்பையில் அவள் என்னுடன் இருக்கும் வாழ்வைப் பார்த்து நீங்கள் அதிரப் போகிறீர்கள்" என்றான் ஏளனக் குரலில்.


அவன் குரலின் பேதத்தை உணர்ந்த தேனம்மா, "உனக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லையா? " என்றார் நடுக்கம் சுமந்த குரலில்.

"வாவ்... என் பாட்டி என்னிடம் இந்தக் கேள்வியை எவ்வளவு சீக்கிரமாக கேட்டிருக்கிறார் பார் சிவா!" என்றான் பெருங்குரல் எடுத்து நகைத்தவாறு.


தன்னை நோக்கி வந்த ஆப்பில் சிக்கிக் கொண்டதை உணர்ந்த சிவா முழிக்க ஆரம்பித்தான்.

" தி கிரேட் பிசினஸ்மேன் ஆராவமுதன் பெயர் கூட தெரியாமல் ஒரு பெண்ணை மணந்திருக்கிறான் என்றால் எதற்காக? ம்... " என்று கூறிக்கொண்டே நாடியைத் தடவி யோசிப்பது போல் பாவனை செய்தான் ஆரா.

அவன் யோசனையின் பாதை விபரீதத்தை தத்தெடுக்கும் என்பதை நொடியில் உணர்ந்து கொண்ட தேனம்மா, " அது எனக்காக... எனக்காக மட்டுமே ஆரா..." என்றார் பெருமிதம் கலந்த குரலில் அவசரமாக.

" இப்பொழுது அவளை என்னுடன் அழைத்துச் செல்வது யாருக்காக?" என்று ராகமாக இழுத்தான் ஆரா.

"எனக்காக...." என்றார் தேனம்மா உள்ளடங்கிய குரலில்.

"ரைட்..." என்றான் ஒற்றை புருவத்தை மேலே உயர்த்திக் காட்டியபடி.

இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிவா தன்னிரு கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்.

"என்னடா? உன் காதலி கர்ப்பமாகி விட்டாளா? இல்லை ஓடிப் போய் விட்டாளா? இவ்வளவு சோகம்! "

மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து முறைத்த சிவா, "டேய்... உனக்கு சாதகமான பதிலை எப்படியும் எதிரில் இருப்பவரிடம் வாங்கி விடுகிறாயே. எப்படிடா?" என்றான்.

" கைலாசா போய் கற்றுக் கொண்டு வந்தேன்" என்று கூறி கண்ணடித்து சிரித்தான்.

ஆராவின் வசீகரிக்கும் சிரிப்பில் அவனோடு இணைந்து நகைக்க ஆரம்பித்தான் சிவா. தன் சிரிப்பை சட்டென நிறுத்திவிட்டு சுற்றும் மற்றும் பார்த்தான்.


தேனம்மா இனி தன் பேச்சு தன் பேரனிடம் எடுபடாது என்பதை தெரிந்து கொண்டு தன் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சங்கமித்ரா சற்று தள்ளி சமையலறை வாயிலில் இருந்தாள். ஆராவின் கைகளை இறுக்க பற்றி கொண்டு, அவனை எதிர்ப்புறம் திருப்பி, "டேய்! சாரா அங்கே இருப்பாளே! உனக்கு திருமணம் ஆனது தெரிந்தால் என்ன நடக்குமோ? எப்படிடா சமாளிக்க போகிறாய்?" என்றான் கிசுகிசுத்த குரலில்.

" அவளிடம் சொல்லிவிட்டு தான் திருமணத்திற்கு கிளம்பி வந்தேன். எங்கள் இருவருக்குமான திருமண ஏற்பாட்டை சாரா அங்கே தொடங்கி இருப்பாள் இந்நேரம் " என்றான் சிவா இழுத்ததில் கசங்கி இருந்த தன் சட்டையின் சுருக்கங்களை நீவிக்கொண்டு.

"ஹான்...." அதிர்ச்சியில் சிவாவின் கண்கள் விரிந்து நிலை குத்தி நின்றது.

" என்னடா அப்படி விழி விரித்துப் பார்க்கிறாய். வேண்டுமென்றால் சொல்லு உன்னையும் கல்யாணம் செய்து கொள்கிறேன். உன் காதலி தான் ஓடிப் போய் விட்டாளே!" என்றான் அவன் அதிர்ந்த தோற்றத்தை கிண்டல் செய்தவாறு.

" படுபாவி படுபாவி போலீஸ்ல மாட்டி கம்பி எண்ணப் போறடா. காத்து வாக்குல ரெண்டு கல்யாணம். மாப்பிள்ளை அதுலேயும் மூன்றாவது பொண்டாட்டியா நான் வேணுமா உனக்கு. உன்னை... " என்று அவனை அடிக்க ஆக்ரோஷமாய் பாய்ந்தான் சிவா.

ஆரா விலகியதில் சற்று தடுமாறிய சிவா பிடிமானத்திற்காக ஆராவை பிடித்துக் கொண்டு சோபாவில் சரிந்தான்.

சிவா ஆராவை அடிக்க கையை ஓங்க, பதிலுக்கு ஆராவோ முத்தமிடுவது போல் சிவாவை நோக்கி வர, இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சிவா தலையை நிமிர்த்த, கண் முன்னே சங்கமித்ராவின் பிரசன்னம். அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான் அவஸ்தையோடு.

ஆராவோ எந்த அலட்டலும் இல்லாமல் சோபாவில் ஒரு கையை தலைக்கு ஊன்றி பள்ளி கொண்ட பெருமாளாய் படுத்திருந்தான்.


சங்கமித்ரா எங்கே தன்னைத் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று அவஸ்தையுடன் நெளிந்தபடி நின்றிருந்தான் சிவா.

சங்கமித்ராவோ அழுத்தமான நடையுடன் சிவாவை நெருங்கி வந்தவள் அவனைக் கடந்து ஆராவின் அருகில் வந்து நின்றாள். இழுத்துப் பிடித்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியிட்டான் சிவா.

உணவு மேசையில் இடைவிடாது அதிர்ந்து கொண்டிருந்த ஆராவின் அலைபேசியை எடுத்து அவன் முன் நீட்டினாள். அப்பொழுது மீண்டும் அழைப்பு வர அதிர்வுடன் தொடுத்திரையில் ஆராவும், சாராவும் நெருங்கி இருக்கும் புகைப்படம் ஒளிர்ந்தது.

" உன்னுடைய எல்லை தெரிந்து அந்த வரைமுறையுடன் இருந்தால் உனக்கு நல்லது " என்று கூறி வெடுக்கென அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கினான்.

வந்த வேலை முடிந்தது என்பது போல் சங்கமித்ரா திரும்பிச் சென்றாள். அங்கே நடந்து கொண்டிருப்பதை பார்த்தும் பார்க்காமலும் இருப்பது போல் குறைக்கண் போட்டு பார்த்துக் கொண்டிருந்தால் சிவா.

"காதலி போன் போட, பொண்டாட்டி அதை எடுத்துக் கொடுக்க மஜா தான். எனக்கில்லை எனக்கில்லை இந்த கொடுப்பினை எனக்கு இல்லை" என்று வாய்விட்டு புலம்பினான் சிவா.


புலம்பியவனை பார்வையால் அடக்கி விட்டு, போனை எடுத்துப் பேசினான்.

" ஹலோ ஆரா ஹியர்... "

"ஓ.... மை ஸ்வீட் ஹார்ட்! நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அப்பாவிடம் நமது திருமண ஏற்பாட்டை ஆரம்பிக்க சொல்லி விட்டேன்"

"ம்...."

" என்ன ம்... முறைப்படி நீங்கள் வந்து பேச வேண்டாமா?" குழைந்து குழைந்து சினுங்கினாள் சாரா.

"ஓ...

"ஆரா..."

"மும்பைக்கு கிளம்பி வருகிறேன். ரைட். "

"வாவ்... ஆராவிற்காக இந்த சாரா எப்பொழுதும் காத்திருப்பாள்" என்றாள் குரலில் தேனைத் தடவி.

"ஆஹான்..."

" நம்முடைய கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு பெரிய கற்பனை கோட்டையே கட்டி வைத்திருக்கிறேன்.

ஆரா வெட்ஸ் சாரா. பெயர் பொருத்தமே சும்மா அசத்தலா இருக்கே. நம்முடைய ஜோடிப் பொருத்தம் அதற்கும் மேலே.

நான் வாங்கி வைத்திருக்கும் பரிசு பொருட்களை பார்த்து நீங்கள் நிச்சயம் அதிசயத்து போவீர்கள். அங்கே எனக்கும் பரிசுகள் வாங்கி இருப்பீர்கள்தானே?" என்று கொக்கி போட்டு கேள்வியுடன் நிறுத்தினாள்.

ஏற்கனவே தான் ஏடாகூடமாகக் கேட்டு தன்னை உதறி விட்டுச் சென்றவனிடம் பார்த்து பதமாக, அதே சமயம் அங்கே இருக்கும் அவன் மனநிலையையும் அறிய அந்த கேள்வியை கேட்டாள்.


அவள் போன் பேசும் அந்த நொடி வரை அவளைப் பற்றிய நினைவே இல்லாதவன், யோசனையுடன் நெற்றியை சுருக்கினான்.

"ஆரா டார்லிங்... அங்கே ஒரு பிரச்சனையும் இல்லையே..." அவன் பதில் வராமல் மெதுவாக இழுத்து பேசினாள்.

"மீட் யூ சூன் " என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

அவனை தன் கட்டுக்குள் கொண்டு வர வழி தெரியாமல், முழி பிதுங்கி நின்றாள் சாரா.

" சாராவை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய் என்றால் நடந்து முடிந்த இந்த கல்யாணத்தின் பதில் என்ன? " என்று சிவா சீரியஸாக கேட்க அசால்டாக தன் தோளை குலுக்கினான் ஆரா.

"ஊப்... உன்னுடைய முடிவுகள் என்றும் தெளிவாக, உறுதியாக இருக்குமே நண்பா. பெண் பாவம் பொல்லாதது. வாய் பேசாத பெண் போல் இருக்கும் இந்தப் பெண்ணையா நீ ஏமாற்றப் போகிறாய்? நீ தவறு செய்தால் அதை தட்டிக் கேட்கும் உரிமை எனக்கு உண்டு" என்றான் ஒரு உற்ற நண்பனாக.

"ஓ... வாய் பேசாத பெண். நீ பார்த்தாய்? சரி நல்லது. என்னில் உண்டான உரிமையை நான் யாருக்கும் அவ்வளவு எளிதாக தருவதில்லையே சிவா" என்று அவனை ஒரு மார்க்கமாக பார்த்தான் ஆரா.

" இதைப் பற்றி பேசக்கூடாது என்று என்னை மறைமுகமாக மிரட்டுகிறாய் "

" ம்ஹூம் நேரடியாக"

" எனது வாழ்க்கையில் நல்லது கெட்டதுக்கு என்று இருக்கும் ஒரே உயிர் நீ தான். இந்த உயிர் கூட நீ காப்பாற்றி கொடுத்தது தான். காதலை பெறுவதற்கு காதலி பின்னாடியே லோலோ என்று அலைந்து காதலை பெறுவது போல், உன்னிடம் நட்பை யாசகமாக பெற்றுள்ளேன். இந்த நட்பை என் உயிர் உள்ளவரை காப்பேன். அதற்காக உன் தப்பை... "

"ம்... தப்பை... " என்று அவனை ஊக்கினான் ஆரா.

" திருத்த முடியவில்லை என்றாலும் நிச்சயம் சுட்டிக்காட்டுவேன்" என்றான் உறுதியான குரலில்.

அவனுக்கு பதிலளிக்காமல் மௌனச் சிரிப்புடன் அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.


சங்கமித்ராவை தனது அறைக்கு அழைத்த தேனம்மா அவளிடம் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டினார். பின் தன்னை ஆள் மூச்சு எடுத்து சமன் செய்து கொண்டு, "அருகில் வந்து அமர்ந்து கொள் மித்ரா " என்றார்.

தேனம்மா ஓய்வெடுக்கும் கட்டிலில் அவர் அருகே அமர்ந்துவிட்டு, அவரை கண் நோக்கினாள்.

'நீங்கள் செய்தது சரிதானா? ஒப்பாத இந்த திருமணம் தேவைதானா?' என்ற அந்தப் பாவையின் பார்வை வீச்சு தேனம்மாவின் மனதில் குற்ற உணர்வை அதிகரித்தது.


'முற்றிலும் நனைந்த பிறகு குளிர் எடுக்கிறது என்றால் என்ன செய்வது?' தனக்குத் தானே சமாதானம் செய்துவிட்டு, "மித்ரா! இந்த மும்பை பயணம் உங்கள் இருவருக்கும் வாழ்க்கையின் நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும் " என்றார்.

"என் கதையின் முதலும், முடிவும் அங்கே தான் ' அவளின் உள்ளே ஒலித்த அந்தக் குரலில், மென் நகை பூத்தாள் சங்கமித்ரா.

சங்கமித்ராவின் புன்னகை கண்டு தேனம்மாவில் உள்ளம் பூரித்தது. இருவரின் வாழ்வும் இன்பமாய் இணைந்த பிறகு, இருவரின் பழைய ரணங்களும் ஆறிவிடும் என்று ஆறுதல் அடைந்தார்.

" உன்னிடம் ஒன்று கேட்பேன் எனக்கு மறக்காமல் தருவாயா மித்ரா? " என்றார் தேனம்மா.

' என்னவென்று அறியாமல் வாக்குத்தர மாட்டேன் ' என்று அழுத்தமாக அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.

'"மித்திரை " என்றார் தேனம்மா.

சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து நின்று, உடல் இறுக, உள்ளம் உருக அவரை விழி விரித்துப் பார்த்தாள்.

கட்டிலில் அமர்ந்தபடியே தேனம்மா தனது வலது கரத்தை நீட்டினார்.

சங்கமித்ராவின் கை தன் போக்கில் உயர்ந்து தேனம்மாவின் கையில் சரண் புகுந்தது.


அவளது கையை தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு, " இனி உன் வாழ்வில் எது நேர்ந்தாலும் என் பேரனை விட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய் மித்திரை. என் பேரனைப் பற்றி, யார் என்ன கூறினாலும், அது உண்மையாகவே இருந்தாலும் கொண்ட உறுதியில் நிலைத்து நிற்பேன் என்று சொல் மித்திரை.

அவன் வாழ்வின் பெண்அதிகாரம் நீ மட்டுமே. வேறு யாருக்கும் அனுமதியில்லை என்று எனக்கு உறுதி கொடு மித்திரை " என்று கண்ணீர் கசியக் கேட்டார் தேனம்மா.

" இந்த ஒரு சொல்லில் என் ஆதி முதல் அந்தம் வரை நீங்கள் அறிந்து கொண்டதை நான் புரிந்து கொண்டேன். என் வாழ்வில் எந்த சொல்லை இனி நான் கேட்கவே போவதில்லை என்று நினைத்தேனோ அந்த சொல்லின் பெயரில் நீங்கள் கேட்பதால் உங்களுக்கு உறுதி தருகிறேன்" என்றாள் அழுத்தமான குரலில்.


அகமகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தவர் எழுந்து சங்கமித்ராவை அணைத்துக் கொண்டார்.

"ஆனால்..."

" என்ன மித்ரா? ஆனால் என்ன?" என்றார் தேனம்மா பதைபதைப்போடு.

" என் வினைகளுக்கான எதிர் வினைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது " என்றாள் நிபந்தனை குரலில்.

" ஒரு மூடை பஞ்சு வாங்கி வைத்துக் கொள்ளப் போகிறேன். என்ன புரியவில்லையா? என் பேரன் இனி உன்னை பற்றி என்ன சொன்னாலும், காதில் நன்றாக வைத்து அடைத்துக் கொள்ளத்தான் " என்றார் புன்னகை முகமாக.

" நாம் எளிது என்று நினைப்பதெல்லாம் எளிதாக அமைவதில்லை. ஒரே சொல்லில் என்னை எளிதாக சாய்த்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம் " என்று அர்த்தத்துடன் தேனம்மாவை பார்த்தாள் சங்கமித்ரா.


சற்று சங்கடத்துடன் முகத்தை சுருக்கினார் தேனம்மா.

" நான் கொடுத்த வாக்கிற்காக எந்த எல்லைக்கும் செல்பவள். உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்"
தேனம்மா தலையை மெதுவாக 'ஆம்' என்பது போல் அசைத்தார்.

" என்னால் அத்துமீறி உங்கள் பேரனின் மனதில் நுழைய முடியாது. "

அவளை பாவம் போல் பார்த்தார் தேனம்மா.

" ஆனால் அவர் மனதில் நுழைய முயலும் தடைகளை தகர்க்க முடியும். என் மனம் ஒன்றை ஏற்றபின் அதில் என்றும் பின்வாங்காது. உங்கள் பேரனும் அதில் உள்ளடக்கம். உங்களுக்கு நான் கொடுத்த இந்த வாக்கே உங்களது முதலும் கடைசியுமான பிரம்மாஸ்திரம்" என்று அவனுடனான போர்க்களத்தில் தன் முதல் காலடியை எடுத்து வைத்தாள்.

புரிந்தும் புரியாமலும் அவள் தந்த உறுதியில் உளம் பூரித்தார் தேனம்மா.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அடேய் கிராதகா 😠😠😠 உனக்கு மனைவி இருக்க மறுமணம் செய்ய கிளம்பி விட்டாயோ 😡😡😡

என் சந்தேகம் உறுதியாகிவிட்டது 😜😜😜

அவள் மித்திரை எனில், அவளின் கடந்த கால வாழ்வு மும்பையில் தான் போல 🤔🤔🤔

தேனம்மாளுக்கு எப்படி அவளின் கடந்தகாலம் தெரிந்தது 🤨🤨🤨 மித்ராவின் பழைய வாழ்வின் தோற்றம் கண்டு தான், ஆராவுடன் திருமணத்தில் இணைக்க காரணமா 🙄🙄🙄

இனி ஆராவின் ஆட்டமா அல்லது மித்திரையின் ஆட்டமா 🧐🧐🧐

சுவாரஸ்யம் அதிகமாகிவிட்டதே 🤩🤩🤩
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அடேய் கிராதகா 😠😠😠 உனக்கு மனைவி இருக்க மறுமணம் செய்ய கிளம்பி விட்டாயோ 😡😡😡

என் சந்தேகம் உறுதியாகிவிட்டது 😜😜😜

அவள் மித்திரை எனில், அவளின் கடந்த கால வாழ்வு மும்பையில் தான் போல 🤔🤔🤔

தேனம்மாளுக்கு எப்படி அவளின் கடந்தகாலம் தெரிந்தது 🤨🤨🤨 மித்ராவின் பழைய வாழ்வின் தோற்றம் கண்டு தான், ஆராவுடன் திருமணத்தில் இணைக்க காரணமா 🙄🙄🙄

இனி ஆராவின் ஆட்டமா அல்லது மித்திரையின் ஆட்டமா 🧐🧐🧐

சுவாரஸ்யம் அதிகமாகிவிட்டதே 🤩🤩🤩
திகட்டாத தேன் தமிழ் நட்பே ❤️

இனிக்கும் சர்க்கரையை விட, சுவைக்கும் பாலை விட, தித்திக்கும் மதுரத்தை விட
அமுதமாய் இனித்தது தங்களின் பதிவு 😍😍😍😍

மித்திரை நுழைந்தால், ஆராவின் நித்திரை தொலைவது உறுதி 😂😂😂

பாராட்டும் பாங்கில் பாகாய் உருகி நிற்கும்
அன்பு அதியா ❤️
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
திகட்டாத தேன் தமிழ் நட்பே ❤️

இனிக்கும் சர்க்கரையை விட, சுவைக்கும் பாலை விட, தித்திக்கும் மதுரத்தை விட
அமுதமாய் இனித்தது தங்களின் பதிவு 😍😍😍😍

மித்திரை நுழைந்தால், ஆராவின் நித்திரை தொலைவது உறுதி 😂😂😂

பாராட்டும் பாங்கில் பாகாய் உருகி நிற்கும்
அன்பு அதியா ❤️
😍😍😍😍
என்றும் ஆவலோடும் அன்போடும் நட்பின் அடுத்த பதிவிற்காய் 🥰🥰🥰🥰
 
Top