• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 6

தேனம்மா தன் மருமகள் அன்றாடம் பூஜித்த அந்த முருகன் சிலை அருகே வந்தார்.

" இறைவா நெருப்பை அணைக்க நீரை பயன்படுத்தாமல், நெருப்பையே பயன்படுத்த துணிந்து விட்டேன். அக்னி முன்னால் கரம் பிடித்த இந்த இரண்டு நெருப்பு ஸ்வாலைகளையும் குளிர் தீபமாய் மாற்றிவிடு. என் மனதை குளிரச் செய்து விடு.

நான் செய்தது பிழை என்றால், என்னையே எரித்து விடு இறைவா. என் குலம் சிறக்க அருள் செய். தரையில் விழுந்த தங்கத்தை எடுப்பதால் அதன் மதிப்பு குறையப் போவதில்லை. அதேபோல் தான் என் பேரனும். அவனின் மதிப்பு அறிந்து அவனை சங்கமித்ரா ஆத்மார்த்தமாக ஒத்துக் கொள்ள வேண்டும்.சங்கமித்ராவையும் அவளுக்காகவே ஏற்றுக்கொள்ளும்படி என் பேரனை நீதான் மாற்ற வேண்டும்" என்று மனமுருக வேண்டினார்.

அப்போது உள்ளே நுழைந்த ஆரா, "இதோ இந்தச் சிலையிடம் வேண்டித்தான் என்னைப் பெற்ற புண்ணியவதி போய்ச் சேர்ந்தாள். அதற்காகத்தான் இத்தனை நாள் யாரையும் இந்தச் சிலை அருகே நெருங்க விடவில்லை. இப்பொழுது நீங்களும் என்னை விட்டுச் செல்ல தயாராகி விட்டீர்களா தேனம்மா?" என்றான் விழிகளில் வலிகளை சுமந்தபடி.

பேரனின் சிறு முகக் கசங்களையும் தாங்க முடியாமல், அதனை மாற்றும் விதமாக, " அட போடா! நானே என் கொள்ளுப் பேரனை பார்த்து ஹாய் சொல்லிவிட்டு, என் எள்ளுப் பேரனிடம் பாய் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் என்னை வழி அனுப்ப பார்க்கிறாயே?" என்றார் கிண்டலாக.

அவரின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டவனும் சிரித்துக் கொண்டு, "அச்சச்சோ கொள்ளுப் பேத்திகள் பிறந்தால் உங்கள் லட்சியத்தை என்னால் நிறைவேற்ற முடியாதே" என்றான் சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு.


"ஹான்... அது எப்படி? சங்கமித்ரா இங்கே வா..." என்று உரக்க அழைத்தார். கை வேலைகளை அப்படியே விட்டு விட்டு தேனம்மாவின் முன் வந்து நின்றாள் சங்கமித்ரா.

" நான் எனக்கு கொள்ளுப்பேரன் வேண்டும் என்று கேட்டால் நீ கொள்ளுப் பேத்திகளை பெற்றுத் தருவாயாமே! இதோ இந்த பொடிப்பயல் என்னை ஏளனம் செய்கிறான் " என்றார் இருவரையும் இணைக்கும் பொருட்டு.

தேனம்மாவை பார்த்தபடி நின்றிருந்த சங்கமித்ரா மெல்ல தன் தலையை திருப்பி, ஆராவை நேருக்கு நேராக பார்த்தாள். அவனிடமிருந்து பார்வையை சற்றும் திருப்பிக் கொள்ளாமல், "சொல்லுங்கள் பாட்டி. எத்தனை பேரன்கள் வேண்டும்? " என்றாள் ஹோட்டலில் இட்லி, தோசை ஆர்டர் எடுப்பது போல்.

இருவரும் சேர்ந்து ஆச்சரியம் மேலிட அவளைப் பார்த்தனர்.

ஆராவோ மெல்ல அவள் அருகில் வந்து குனிந்து, "ஓ... மேடம் எல்லாவற்றிருக்கும் எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள் போலவே. எல்லாவற்றிருக்கும்..." என்றான் அழுத்தமாக.

அவளோ தன் காதில் எதுவும் விழாதது போல், அவன் கேள்விக்கு பதில் சொல்வது அவசியம் அற்றது என்பது போல், தன் விரல் நகங்களை திருப்பி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

"என் பாட்டிக்கு கொள்ளு பேரன் என்றால் அது என் மூலமாகத்தான் புரிகிறதா? இல்லை என்னை மடக்கி போடும் ஆவல் வந்து விட்டதா? " என்று அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான்.

"ஓ... அப்படியா?" விழி விரித்து அதிசயம் போல் கேட்டாள்.

" பதில் தரும் அந்த குரல்வளையை என் கைகளால் நெரித்து விடுவேன். சாடை பேசும் உனது விழி அப்படியே நின்றுவிடும் ஜாக்கிரதை. என் உயிரில், உணர்வில் கலக்கும் பெண் நீ இல்லை. உன் முட்டாள்தனமான கற்பனைகளின் முடிவு விபரீதமாகவே இருக்கும்.
நான் விலை கொடுத்து வாங்கிய செருப்பு என் வீட்டு வாசலிலேயே இருக்கும்" என்றான் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமான வார்த்தைகளில்.

"வாசலில் கழட்டி போட்டாலும் அந்த செருப்பு தனியாக நடந்து போகாதாம், உடையவர் காலோடு ஒட்டிக்கொண்டு தான் செல்லுமாம்" என்றாள் அவனுக்கு சளைக்காத அதே மெல்லிய குரலில்.

தன் பேச்சில் அதிர்ந்து வாய் மூடி நிற்பவர்களையே கண்டு வந்த ஆராவமுதன், முதன் முறையாக தன்னை அதிரச்செய்யும் எதிர்வினையில், அவனின் புருவங்கள் இடுங்கியது.

அவளை மட்டம் தட்டும்போது, வார்த்தைகளால் அவள் தன் அறிவுக்கூர்மையை நிரூபிப்பதை எண்ணியவன், சிறு முறைப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தான்.

ஆனால் அவனது மனமோ, 'நீ என்னிடம் அகப்படும் நேரம், உன் தவிப்பை ரசிக்க நான் தயாராகவே இருப்பேன். உன் பதில்கள் சுவாரசியமாக இருந்தாலும், அது என்னுள்ளே உறங்கும் அகங்காரத்தை தூண்டும் விதமாகவே அமைகிறது.
அது உச்சத்தை தொடும் நேரம் உனக்கு அது உச்ச கால பூஜையாக இருக்கும். எதற்கும் சரியில்லாத நீ! என் சரிபாதியா?' ஏளனமாய் எதத்தாளமிட்டது.

" என்ன ஆரா! நீ அவளை மென்மையாய் கேள்வி கேட்பதும், அதற்கு மித்ரா தன்மையாக பதில் சொல்வதும், என் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. எனக்கு இது போதும்" என்று நடந்த உண்மை தெரியாமல் பேசினார் தேனம்மா.

"ம்...." என்று தன் பாட்டியின் கன்னம் பிடித்து செல்லம் கொண்டாடினான் பேரன்.

எப்பொழுதும் இந்த வீட்டிற்கு வந்தால் தன் அறையை விட்டு வெளி வராத பேரன், மித்ராவுடன் இணைந்து வீட்டை சுற்றி சுற்றி வருவது தேனம்மாவின் கவனத்தை ஈர்த்தது. வெகு அபூர்வமாக தன்னிடம் குறும்பு செய்த பேரனை எண்ணி அவரது மனம் ஆனந்தத்தில் திளைத்தது. தன்னிடம் கொடுத்த வாக்கை நிச்சயம் மித்ரா காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் சற்று கம்பீரமாகவே நடமாடினார்.

அதன்பின் சற்றும் தாமதிக்காமல் மும்பை கிளம்புவதற்கான ஏற்பாடுகளை சிவாவை முன்னிறுத்தி ஆரா மேற்கொண்டான்.

தனது பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் ஆரா. வரவேற்பறையில் சிவா உடன் அமர்ந்து கொண்டு தனக்கு நேரமாவதை உணர்ந்து, கைக்கடிகாரத்தை, மாடி அறையை பார்த்துக்கொண்டே எரிச்சலுடன் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான்.

சிவாவிடம் கண் ஜாடை காட்டி விட்டு, தேனம்மா மாடி அறைக்குள் நுழைந்தார். தயாராக இருந்த சங்கமித்ரா ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் அப்படியே நின்று இருந்தாள். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் சங்கமித்ராவின் கண்களில் சிறு தவிப்பினை கண்டு கொண்டார் தேனம்மா.

அவர் அருகே வந்த சத்தத்தில் தன் மோன நிலை களைந்தாள் சங்கமித்ரா. "மி...." என்று தேனம்மா ஆரம்பிப்பதற்குள் தன் வலது கையை நீட்டி, 'வேண்டாம்' என்பது போல் சைகை செய்தாள்.

" வாழ்க்கையின் அடுத்த நொடி ரகசியத்தை தெரிந்து கொள்ள சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

கீழே இறங்கியவள் ஆராவின் முன் வந்து நின்றாள். அனைவரும் காரில் ஏறிய பின், ஆரா முன் இருக்கையில் இருந்து பின் திரும்பி, சங்கமித்ரா முகத்தின் முன்னே சொடுக்கிட்டு, "என்னுடைய பேக் ஒன்று மிஸ் ஆகிறது. உள்ளே சென்று எடுத்து வா" என்றான் அதிகாரமாக.


காரில் இருந்து கீழே இறங்கி வீட்டினுள் சென்று பேக்கை தேடியவள் அது கிடைக்காமல் குழப்பமாக மீண்டும் காருக்கு வந்தாள்.

" அப்படி ஒன்று அங்கே இருந்தால் தானே கிடைப்பதற்கு! இனி என்னுடைய நிமிடங்களை வீணாக்கினால்.. வீணாக்கமாட்டாய் தானே!" என்றான் திமிர் பார்வையுடன்.

"இல்லை. இனி நான் எதையும் வீணாக்குவதாக இல்லை" என்றாள் நேர் பார்வையுடன்.

" ஐயோ நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று எனக்கு புரியவில்லை. அவள் ஏன் இப்படி ஒரு பதில் சொல்கிறாள் என்றும் புரியவில்லை. இந்த சட்டை, புது சட்டை. இல்லை என்றால் இந்நேரம் கிழித்து விட்டிருப்பேன். மும்பை செல்லும் வரை யாரும் எதுவும் பேசக்கூடாது. இது ராஜமாதா சிவகாமி தேவி மீது சத்தியம் " என்றான் சிவா கொதிநிலையில்.

ஆராவுக்கோ அவள் வார்த்தைகளில் ஏதோ முரண் தட்டியது. ' இனி எதையும் வீணாக்க மாட்டேன் என்றால், இதுவரை எதை வீணாக்கிக் கொண்டிருந்தாள்?' அவளுடைய புதிருக்கு விடை தேடாமல், புதிரையே உடைத்து விடும் யோசனையில் மூழ்கினான்.


விமானத்தில் முதல் தரவரிசையில் சிவாவும், ஆராவும் அருகருகே அமர்ந்திருக்க, சங்கமித்ரா சாதாரண வரிசையில் அமர்ந்திருந்தாள்.


விமானத்தில் ஏறி அமர்ந்த நொடியில் தோன்றிய பரவசத்துடன் கண்களை மூடி தன் உலகிற்குள் புகுந்து கொண்டாள் சங்கமித்ரா.

சரியாக இரண்டு மணி நேரத்தில் மும்பையில் தரை இறங்கியது விமானம். ஆரா இறங்கியதும் சாரா ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவள் இறுக்கி அணைத்ததில் கசங்கிய தன் கோட்டை நீவியபடி சரி செய்து கொண்டே தன் கூலர்சை கழட்டி சாராவை முறைத்தான்.

"நீங்கள் இல்லாமல் நான் தவியாய் தவித்ததில் கசங்கிய என் மனதை விட இது சற்று குறைவுதான் டியர்" என்று அவன் நெஞ்சத்தில் தன் கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கால்களை பின்னி, எக்கி உயர்த்திக் கொண்டு கண்களில் மயக்கத்தை வருவித்துப் பார்த்தாள்.

மையலுடன் பேசியவளின் தத்தை மொழியில், கர்வத்துடன் அவளின் கையணைத்துக் கொண்டு முன்னேறினான். சிவாவோ பின்னிருந்து கொண்டே அவன் முதுகை சுரண்டினான்.

அவன் கூற வருவதை புரிந்து கொண்ட ஆரா, "நீயே அழைத்து வா" என்று கட்டளையிட்டபடி தன் காரில் ஏறி கிளம்பி சென்றான்.

' கஷ்ட காலம்...' என்று மனதோடு முணுமுணுத்துக் கொண்டு திரும்பியவன் சங்கமித்ராவைப் பார்த்து திகைத்துப் போனான்.

பறவையின் சிறகைப் போல் தன் இரு கைகளையும் பின்னோக்கி விரித்து, தலையை வானோக்கி நிமிர்த்தி, குவளை மலர் நிறத்தழகியின் மலர்க் கண்கள் இமை மூடி, கூரான அவளின் நாசி, அரபிக் கடலின் ஈர காற்றை இதயம் வரை நிரப்பி எழில் கோலமாய் நின்றிருந்தாள் சங்கமித்ரா.

உதடுகள் துடிக்க உணர்ச்சிப் பெருக்கில் நின்றவளின் இமை மீது வான் துளிகள் அமர, மென் சிரிப்புடன் கண் திறந்து உயிர் கொண்ட ஓவியமாய் முன்னேறி நடந்து வந்தாள்.


'இதில் பரவசம் அடைய என்ன இருக்கிறது?' என்று நினைத்த சிவா அவளுடைய அருகில் வந்து, "நாம் செல்லலாம்" என்றான் அவளை சாதாரணமாக நினைத்துக் கொண்டு.

காரில் ஏறப் போகும்போது அதில் ஆரா இல்லாததை உணர்ந்தாள். "நீங்கள் கொஞ்சம் அவருக்கு போன் போட்டுக் தாருங்கள் " என்றாள் சிவாவிடம் நின்ற இடத்தில் அசையாமல்.

" அவன் ஒரு தொல்லை என்றால்... அவன் பொண்டாட்டி அவனை விட ஒரு இம்சை " என்று மெல்லிய குரலில் முனங்கிக் கொண்டே ஆராவிற்கு அழைப்பு எடுத்து அலைபேசியை அவளிடம் ஒப்படைத்தான்.

காருக்குள் சாரா அவன் தோள்களில் தொத்திக் கொண்டே அமர்ந்திருக்க, காரை லாவகமாக ஓட்டியபடி, சிவாவின் அழைப்பை ஏற்றவன், "சொல்லுடா" என்றான் அசால்டாக.

" மிஸஸ் ஆராவமுதன்... " என்ற சங்கமித்ராவின் கணீர் குரலில் கார் சடன் பிரேக்குடன் கிரீச்சிட்டு, அரைவட்டம் அடித்து நின்றது.

பிடிமானம் இல்லாத சாராவின் தலை முன்னே மோதி சிறு வீக்கத்துடன் காட்சியளித்தது.

"யாரது?" என்றான் ஆரா தன்னை சமாளித்துக் கொண்டு.

" நீங்கள் இப்பொழுது வந்து என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால்..."

" என்ன செய்ய முடியும் உன்னால்? "

" மிஸ்டர் ஆராவமுதனை காணவில்லை என்று மிஸஸ் ஆராவமுதன் காவல் நிலையத்திற்கு சென்று விடுவார் "

" அது சாட்சியும் தடையமும் இல்லாத நாடகம் என்று என்னால் நிரூபிக்க முடியும்"

" அது உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலை கிடையாது. பத்திரிக்கைக்கு பரபரப்பு தேவையே தவிர, உண்மையை யாரும் இங்கே ஆராய்ச்சி செய்யப் போவதில்லை. உண்மையை மட்டுமே எழுதப் போவதுமில்லை"

அவனின் மௌனம் அவனது பிடித்தமின்மையை எடுத்துரைத்தது.

"அப்பொழுது சரி. நீங்கள் தாராத, தர விரும்பாத அங்கீகாரத்தை இந்த ஊரும் உலகமும் இன்றே தந்துவிடும்"

" ஏ பட்டிக்காட்டு முட்டாள். பாஷை தெரியாத ஊரில் வந்து பஞ்சாயத்து செய்ய போகிறாயா? சரி உன்னால் முடிந்ததைப் பார்"

" நான் எங்கேயும் செல்லப் போவதில்லை மிஸ்டர் ஆராவமுதன். இதோ இந்த விமான நிலையத்தில் நான் அமர்ந்து கொண்டு சத்தியாகிரகம் செய்யப் போகிறேன். பாஷை தெரியாவிட்டால் என்ன? பெண்ணின் கண்ணீர் ஆயிரம் கதை கூறிவிடும். ஒரு சாம்ராஜ்யமே பெண்ணின் கண்ணீரில் அழிந்து விடுமாம்"

' அவளை தனக்கு இணையாக அழைத்து வர விரும்பாமல், விட்டு விட்டு வந்தால் சிவாவுடன் வீட்டிற்கு வந்து சேருவாள்' என்று அவன் போட்ட கணக்கு தவிடு பொடியாகியது. அவளின் அதிரடியான ஆரம்பத்தில் கோபம் தலைக்கேறியது.

தேவையில்லாத தலைவலியை அவன் இழுத்துக் கொள்ள விரும்பாமல், அவளோடு தன் பெயர் இணைந்து வெளியே பேசப்படுவதை விரும்பாமல், தன் காரை விமான நிலையத்தை நோக்கி திருப்பினான். அவன் கைகளோ இயலாமையில் காரின் ஸ்டியரிங் வீலை குத்திக்கொண்டே வந்தது.

"டார்லிங்..." என்றாள் சாரா தன் நெற்றியை தேய்த்து கொண்டே.

"யூ ஷட்அப்..." அதீத கோபத்தில் கத்தினான்.


புரியாமல் குழப்பத்திலிருந்த சாராவிற்கு விமான நிலையத்தில் கையைக் கட்டிக் கொண்டு சிவா உடன் நின்ற சங்கமித்ராவின் தோற்றமே உண்மையை எடுத்துரைத்தது.

" ஆரா... இவள் அவளா? " என்றாள் சிறு பரபரப்புடன்.

"எஸ்..." என்றான் சலித்த குரலில்.

" இவள் எப்படி மும்பைக்கு வரலாம்? என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. மீண்டும் ஊருக்கு அனுப்பி விடுங்கள்" என்று தன்னிலை மறந்து ஆராவிற்கு உத்தரவிட்டாள் சாரா.

'நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?' என்ற தோரணையில் பதில் அளிக்காமல் இருந்தான்.

அவனின் விரைப்பான தோற்றத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட சாரா, " சாரி டியர்... ஏதோ கோபத்தில்" என்று அவனை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் கன்னத்தில் முத்தமிட நெருங்கினாள்.


தன்னை மீறி செயல்படும் இரு பெண்களின் நடவடிக்கையில் சலிப்புத் தட்ட, "நோ..." என்று தன் கை கொண்டு சாராவை விலக்கினான்.

என்றும் தன் முத்தத்தை கர்வமாக ஏற்றுக் கொள்ளும் ஆரா, இன்று தன்னை ஒதுக்கித் தள்ளியதை அவமானமாக கருதிய சாரா காரின் முன் கதவை திறந்து விட்டு விறு விறுவென வெளியேறினாள்.

திறந்திருந்த முன் கதவின் வழியாக காரில் ஆராவின் அருகே நிமிர்ந்து அமர்ந்தாள் சங்கமித்ரா.


சங்கமித்ராவின் துணிச்சலிலும், நடவடிக்கையிலும் அசந்து நின்ற சிவா இருவருக்கும் கையசைத்து டாடா காட்டினான் தன்னை அறியாமல்.

காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு ஆராவின் கார் பறந்தது. தன் தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாத ஆரா நெருப்பைக் கக்கத் துடிக்கும் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தான்.

மும்பையின் கடற்கரையை ஒட்டி அமைந்ததும், ஆடம்பரப் பகுதியுமான கொலாபாவில் உள்ள அவன் வீட்டை அடைந்தான்.


வாட்ச்மேன் வெளிக்கதவை திறக்க, கார் உள்ளே சீறிப் பாய்ந்தது. வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் கால் மேல் கால் போட்டு வலது கை கொண்டு தொடையில் தட்டிக் கொண்டிருந்தான் ஆரா.

சங்கமித்ரா உள்ளே நுழைந்ததும் "நில்" என்ற கர்ஜனையில் கர்ஜனையில் அப்படியே நின்றாள்.

" வாருங்கள் மிஸஸ் ஆராவமுதன். இனி இந்த வீட்டை விட்டு நான் சொல்லாமல் ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்கக் கூடாது. இன்று முதல் இந்த வீடு உனக்கு சிறைச்சாலை.

என்னுடைய தேவைகளை ஒரு வேலைக்காரியாய் நீ செய்ய வேண்டும். உன்னுடைய ஒவ்வொரு வேளை உணவையும் என்னிடம் நீ கேட்டுப் பெற்றே உண்ண வேண்டும். அதாவது யாசகம் பெற்று. உன் ரத்தத்தில் உறைந்திருக்கும் திமிரை எல்லாம் கரைக்க வேண்டுமல்லவா?" என்றான் கடினக் குரலில்.

"முடிந்ததா?" என்று பதிலளித்தாள் ஒற்றை வார்த்தையில்.


கோப மிகுதியில் எழுந்து வேலைக்காரர்களிடம் சென்றவன், "இஸ் லட்கி கோ தப் தக் கானா நஹின் தேனா சாஹியெ ஜப் தக் மெயின் உஸ் ந காஹூன்" ( இந்தப் பெண்ணிற்கு நான் சொல்லும் வரை சாப்பாடு தரக்கூடாது) என்று உத்தரவிட்டு தன்னறைக்குச் சென்றான்.

அவன் தந்த அவமானத்தை தூசி போல் தட்டி விட்டு நிதானமாக வீட்டை சுற்றிப் பார்த்தாள். கண்ணாடி ஜன்னல்கள் வழியே தெரிந்த கடல் அலை, அவள் அருகே வருவதற்கு துள்ளிக் குதித்தது போல் எழுவதைக் கண்டு ஜன்னலின் அருகே கண்கள் பளபளக்க சென்றாள்.


சிறை எடுப்பாள்...
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
மும்பை வந்ததும் மித்ராவின் ஆளுமைமிக்க தைரியம் வந்து விட்டது போலவே 😃😃😃

வந்த உடனே இந்த தோல்வி தேவைதானா ஆரா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுவும் உன் சாரா முன்னால் 🤣🤣🤣 பேசாமல் மித்ராவையும் சேர்த்து கூட்டிகொண்டு முதலே சென்றிருக்கலாம் 😏😏😏

இனி வரவிருக்கும் அதிரடியாட்டத்திற்காக காத்திருக்கின்றேன் ஆத்தரே 😎😎😎
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
ஆஹா ஆராவையே மிஞ்சின ஆளுமை சங்கமித்ரா 👌👌👌👌👌👌
என்றென்றும் ஆதரவு தரும் பாரதி தோழமைக்கு நன்றிகள் 🙏
ஆணின் ஆளுமை மிடுக்காய்...
பெண்ணின் ஆளுமை அவனை மாற்றிவிடும் சொடுக்காய் ❤️
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மும்பை வந்ததும் மித்ராவின் ஆளுமைமிக்க தைரியம் வந்து விட்டது போலவே 😃😃😃

வந்த உடனே இந்த தோல்வி தேவைதானா ஆரா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுவும் உன் சாரா முன்னால் 🤣🤣🤣 பேசாமல் மித்ராவையும் சேர்த்து கூட்டிகொண்டு முதலே சென்றிருக்கலாம் 😏😏😏

இனி வரவிருக்கும் அதிரடியாட்டத்திற்காக காத்திருக்கின்றேன் ஆத்தரே 😎😎😎
என் அன்பு நட்பே...
பாராட்டும் உந்தன் பாசமிகு தோழமையில் தோள் சாய்ந்து சுகமாய், ஆற்றுப்படுகிறேன்😍

மேகங்களில் மின்னல் தீ உரசுவது போல்...
பற்றிக்கொள்ளும் அவர்கள் காதல் அதிரடி ஆட்டத்தில்...
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Sema ... Mass sangamithra
 
Top