• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"உன் அப்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உன் தாத்தாவையும், உன் சித்தப்பாவையும் சொல்ல சொல்லு...

சிவாகிட்ட மன்னிப்பெல்லாம் கேக்க வேண்டாம்... செஞ்சது தப்பு தான்... அது திரும்ப நடக்காதுனு மட்டும் சொல்ல சொல்லு பார்க்கலாம்...

என் அப்பாவை கொச்சையா பேசினதுக்கு என் அப்பாகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லு... இல்லே செத்து போயி சிவா அம்மாகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லு..." என்று தன் கடைசி வாக்கியத்தை அழுத்தம் கொடுத்து நிறுத்தி நிதானமாகக் கூறினான் கமல்.

இதில் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்து தான் கூறினான் அவன். இப்போது அவர்களுடன் இள ரத்தமான அம்முவின் அண்ணன் அகிலனும் சேர்ந்திருக்கிறான் என்பதையுமே ஊகித்து தான் அவ்வாறு கூறினான்.

அம்முவிற்கும் தான் தன் தாத்தனைப் பற்றியும், சிற்றப்பனைப் பற்றியும் நன்றாகத் தெரியுமே! கமல் சொன்ன விஷயங்கள் துளியும் நடக்கப் போவதில்லை... அதிலும் கடைசியாகச் சொன்ன செத்தாவது மன்னிப்புக் கேட்க சொல் என்ற வார்த்தை சற்றே திரிபு வாக்கியமாகி, செத்தாலும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றே தான் அவள் மனதில் ஓடியது.

அம்மு தன் எண்ண ஓட்டங்களுக்குத் தான் எங்கே கடிவாளம் கட்டுவது! அதனை எப்படிக் கட்டுவது என்று எதுவும் புரியாமல் தனக்குள்ளாகவே உழன்று கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் தன் குடும்பத்தாரை நினைத்து மனதை தறிகெட்டு ஓடவிட்டவள் இப்போது அந்த எண்ணங்களின் நாயகனாக தன் இன்னுயிர் நாயகனை நிறுத்தினாள்.

இவன் கேட்பதும் சரிதானே! மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் அதனை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்குத் தானே தெரியும் செய்த குற்றங்கள் மறக்கக் கூடியதா! மன்னிக்கக் கூடியதா! இல்லை தண்டனைக் கூறியதா! என்று...

நாவினால் சுட்ட வடு ஒரு போதும் ஆறப் போவது இல்லை... சொற்களுக்கும் சுவையுண்டு என்பது எவ்வளவு பெரிய உண்மை!!! பிறர் உதிர்த்த வார்த்தைகளை நாம் ஜீரணிக்க நினைக்கும் போது தான் நம்மால் அது எப்படிப்பட்ட கொடூரமான உணர்வு என்று உணர முடியும்... உடல் ஒவ்வா உணவு ஒன்றை, நா கசந்து தொண்டைக்குழியில் விள்ளல் எடுத்து விழுங்கி, ஹிருதயமதைக் கடக்கையில் இரும்பென திடம் கொண்டு, உதரம் செலுத்தி சமிபாடு செய்து, மலக்குடல் வழியே உடலைவிட்டு வெளியேற்றுவதை விட கொடுமையானது செவி வழிக் கேட்ட சொற்களை மூளையை விட்டு அகற்றுவது என்பது!

கமல் கூற விளைவதும் அது தானோ! சிவா அக்காவை வருத்தும் போதும், அவன் தந்தையை இழிவுபடுத்தும் போதும் ஒரு நொடி கூட யோசிக்காதவர்கள் செய்த தவற்றை ஒப்புக் கொள்ள கேட்கும் போது ஆயிரம் முறையேனும் யோசிப்பார்கள் தானே! தவறிழைத்தவர்களே அதனை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆயிரம் முறை யோசித்தால் மன்னிக்க நினைப்பவர்கள் ஒரு நொடி கூட எப்படி யோசிக்காமல் இருக்க முடியும்.... என்று உணர்த்த நினைக்கிறானோ! அவன் தந்தை இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறார் என்கிறானோ! என்ற எண்ணம் தோன்றிட கங்காதரனைத் திரும்பிப் பார்த்தாள் அம்மு...

இத்தனை நாள் கண்டிராத கங்காதரனின் மறுமுகத்தைக் காட்டியது கமலின் வார்த்தைகள். அவர் தன் பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர் என்பது சுற்றம் அறிந்த உண்மையே! அதில் தான் அவருக்கு எவ்வளவு பெருமை!!! அந்த நம்பிக்கையில் துளியும் காதலெனும் விஷம் கலந்திடாமல் தன் மறுப்பிதற்கு மறுப்பு சொல்ல முடியாதபடி அம்முவிற்கு செக்மேட் வைத்து நிற்கும் தன் செல்ல மகனை கர்வம் கொண்டு தலை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்...

இது அங்கிருந்த எத்தனை பேருக்குப் புரிந்ததோ இல்லையோ இருவருக்கு நன்றாகவே புரிந்தது. அம்முவின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக கர்ஜித்தான் கமல்.

"இதெல்லாம் செய்ய முடியாதுன்னா பின்னே எதுக்கு என் கண் முன்னாடி நிக்கிறே! கெட் லாஸ்ட் ஃப்ரேம் மை லைப் ஃபார்எவர்"

அவனது வார்த்தைகளில் பெண்ணவளின் கண்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீர் கூட வரண்டு போனது. அவனுக்கு பதிலளிக்கும் விதமாக தலையை மிகவும் மெல்லியதாக மேலும் கீழும் ஆட்டியவள், கமலின் கண்களை மட்டும் நோக்கியபடி, "லவ்-ஐ சொன்ன விதத்தை விட, ப்ரேக்-அப்-ஐ ரெம்ப அழகா மனசுல ஆழமா பதியிற அளவுக்கு சொல்லிட்டே கமல்... தாங்க்ஸ்..." என்றவள் சற்றும் பார்வையை மாற்றாமல் "போலாம் ப்பா" என்றாள்.

கண்ணீர் மட்டுமே தான் வற்றிப்போனதே ஒழிய அது பதித்துச் சென்ற தடமும், அது வடிந்து கரை பதித்திருந்த அவளது நெஞ்சமும் இன்னும் ஈரம் காயாமல் தான் இருந்தது... அந்த ஈரம் ஆணவனின் கண்ணிலும் பட்டு நெஞ்சைச் சுட்டது தான். இருந்தும் அம்முவைத் திமிராக ஒரு பார்வை பார்த்தே நின்றான். கமலின் கண்ணிமைகள் ஒரு முறை கூட இமைத்திடவில்லை. இமைக்கும் நொடியில் கண்ணை விட்டு மறைந்து விடுவாளோ என்று அஞ்சியதோ என்னவோ! அவன் இமைகள்...

💔💔💔💔💔

"ம்மா... டைம் ஆச்சு ம்மா... கடை திறக்க போகனும்... இன்னுமா பிரேக் ஃபாஸ்ட் ரெடியாகலே!" என்று உணவு மேசையில் அமர்ந்தபடி தன் முன்னே இருந்த காலி தட்டைப் பார்த்து கத்தினான் கமல்.

ஆனால் அந்த குரலுக்கு வந்து பரிமாறத் தான் அங்கே ஆள் இல்லை. "ம்மா" என்று மீண்டும் சத்தம் கொடுத்துப் பார்த்தான். ம்கூம்... சட்டென மூண்ட கோபத்தில் தட்டைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று எழுந்து சென்றுவிட்டான். வாசலை நெருங்குகையில் படியில் இறங்கிய படி "கமல்" என்று அழைத்தாள் மிதுன்.

காதில் விழுந்த போதும் நிற்காமல் நடந்தவனை, எதிரில் வந்து கொண்டிருந்த நேத்ரா தடுத்து கை பிடித்து அழைத்து வந்து உணவு மேசையில் அமர்த்தினாள்.

மிதுன் தட்டில் இரண்டு சப்பாத்தியை வைக்க, நேத்ரா காய்கறிக் குருமாவை ஓரமாக வைத்து சாப்பிடு என கண்களால் கட்டளை பிறப்பித்தாள்.

மனமே இல்லாமல் உணவில் கை வைத்தவன், பெயருக்கென்று ஒன்றை மட்டும் உண்டுவிட்டு போதும் என்று கூறி எழுந்து சென்றுவிட்டான். அதன்பிறகு கங்காதரன், பவன், ராம் மூவரும் வந்து அமர, வெண்பா ராமின் அருகே அமரந்து கொண்டாள்.

"கமல் சாப்பிட்டானா?" என்று அக்கறையாக வினவினார் கங்காதரன்.

நேத்ரா வாய் திறக்காமல் நிற்க, மிதுன் "சரியா சாப்பிடல மாமா... கடைக்கு நேரமாச்சுன்னு சீக்கிரம் போயிட்டான்."

"ம்ம்ம்... ஆமா மா... ஆடி மாசம் கோவில் திருவிழானு அம்மனுக்கு ஆடை சார்ந்துவாங்க... அடுத்தே ஆவணி மாசம் முழுக்க சுபமுகூர்த்தம் வேற... கொஞ்சம் வியாபாரம் பரபரப்பா தான் போகும்... சாப்பிட்டுட்டு வியாபாரத்தைப் பாத்தா கொஞ்சம் நல்லா இருக்கும்... உன் அத்தை ஒருநாளும் சாப்பாடு போடாம கடைக்கு விடமாட்டா... இப்போ அஞ்சு நாளா கிறுக்கு பிடிச்சிடுச்சு அவளுக்கு... சிவா ம்மா நீயும் இருந்துமா அவனை சாப்பிடாம போகவிட்டே" என்றார் வருந்தும் விதமாக.

நேத்ராவிற்கு என்ன பதில் சொல்வதென்றால் தெரியவில்லை... எப்படிச் சொல்வாள்! தன்னால் தான் அந்த ஒரு சப்பாத்தியாவது சாப்பிட்டுச் சென்றான் என்று பெருமை பீற்றிக் கொள்ளவா முடியும்...

அமைதியாக நிற்பவளிடம் "உன் அத்தைக்கு இருபத்து அஞ்சு வருஷம் கழிச்சு பொறந்த வீட்டு பாசம் பொங்கி வழியிது... மகன் சாப்பிடாம போறதைக் கூட கண்டும் காணாத மாதிரி அவன் கூட பேசாம திரியிறா!"

கங்காதரனின் மொழிகளுக்கு அடுப்படிக்குள் பாத்திரங்கள் உருளத் தொடங்கின. இந்த நிலையும் கங்காதரன் இல்லத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடப்பது தான். கங்காதரன் ராமிடம் பேசியதைக் கேட்க நேர்ந்த நிமிடத்திலிருந்தே விமலா அவருடன் பேசுவதை நிறுத்தியிருந்தார். தந்தையின் பிரதி பிம்பமாய் மகன் கோவிலில் பேசியவற்றைக் கேட்டு அவனுடனும் பேசுவதில்லை.

"மாமா... நீங்க சாப்பிடுங்க ஃப்ஸ்ட்..." என்று கூறி கங்காதரனை சாந்தப்படுத்தி உண்ண வைத்தாள். பவனும், ராமும் நேத்ராவைத் தான் கண்ணெடுக்காமல் பார்த்தனர்.

கடைக்குச் சென்ற கமலோ வியாபாரத்தில் மூழ்கிவிட, அவனது திறன்பேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவன் அந்த அழைப்பை ஏற்கலாமா கூடாதா என்று யோசித்துவிட்டு, பின் தொடுதிரையைத் தடவி அழைப்பை ஏற்று காதில் பொருத்தினான்.

"கமல்... அம்முவுக்கு என்னாச்சு? ஹாஸ்பிடலும் வரலே! கால் பண்ணினாலும் எடுக்க மாட்றா! எனித்திங் சீரியஸ்?" என்றான் தேவ்.

தேவ் அம்முவைப் பற்றி விசாரிக்கவும் அவனது முகத்தில் சிறு சலிப்புத் தட்டிட, "தெரியலே தேவ்,.. அவளை அவங்க அப்பா கூட்டிட்டு போரிட்டார்..." என்றான் முகத்தில் வேண்டா வெறுப்பைக் காட்டி...

"அதான் ஏன்? வீட்ல எதுவும் ப்ராப்ளமா?"

"அவ வீட்ல ப்ராப்ளமா இருந்தா உனக்கென்ன? அவ பேரண்ட்ஸ் பார்த்துப்பாங்க... அவ ஃபோனை எடுத்தா பேசு! இல்லேனா இம்சை விட்டதுனு சந்தோஷமா இரு" என்று சிடுசிடுப்பாக உரைக்கும் போது கூட அம்முவை ஆயிரம் முறையேனும் 'இம்சை' என்று செல்லமாக அழைத்து சீண்டியது நினைவில் வரத் தான் செய்தது.

"என்னாச்சு உனக்கு? உனக்கும் அவளுக்கும் சண்டையா? அவ ஊருக்குப் போனதுனால அவமேல கோபமா இருக்கேயா?"

தேவ் அவ்வாறு கேட்டப்பின் தான் கமலுக்கும் நியாபகம் வந்தது அம்மு அன்று அவள் தந்தையோடு காரில் ஏறிச் சென்றது இவனுக்கு எப்படித் தெரிந்தது! என்று... அதனை அவனிடமே இயல்பாக வினவினான்.

"அவ அவங்க அப்பா கூட கார்ல போனது உனக்கு எப்படித் தெரிஞ்சது தேவ்?எனக்கு இன்ஃபார்ம் பண்ணனும்னு உனக்கு எப்படி தோனுச்சு?"

ஒரே ஒரு நொடி தேவ் வேக மூச்சு எடுப்பது திறன்பேசியில் தெளிவாகவே கேட்டது.

"அது..... அன்னைக்கு மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணலாம்னு ஃப்ரெண்ட் கூட ஹாஸ்பிடல் வந்தேன்... அப்போ தான் பாத்தேன்... அவ கார்ல ஏறி போனா... உள்ளே போயி விசாரிச்சா அது அவங்க அப்பானும் லீவ் போட்டிருக்கானும் சொன்னாங்க... அதான் உனக்கு இன்ஃபார்ம் பண்ணலாம்னு மெசேஜ் பண்ணினேன்..."

என்ன தான் தேவ்வின் பதில் சரளமாக இருந்தாலும், அவனுக்கு தனக்கும் அம்முவுக்கும் நடுவில் இருக்கும் காதல் விவகாரம் தெரிந்திருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டான் கமல்.

"சரி நீ கவலைப்படாதே! அவ சீக்கிரம் வந்திடுவா" என்று அவனே மேற்கொண்டு ஆறுதலாக பேசினான்...

"எனக்கென்ன கவலை?... அவ திரும்ப வந்தா என்ன! வரலேனா என்ன!"

கமலின் பதிலில் குரூரமாகச் சிரித்த தேவ், பின் கவலை நிறைந்த குரலில் "உனக்கு என்ன தான் டா ப்ரச்சனை?" என்றான் அக்கறையாக...

"தேவ்... எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லே... நீ உன் ப்ரெண்ட் கிட்ட பேசனும்னு நெனச்சா தாராளமா பேசு... ஆனா இனி அவளை பத்தி என்கிட்ட பேசாதே!" என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.

கமலின் பதிலில் தேவ்வின் மூளை அடுத்தடுத்து பல திட்டங்களைத் தீட்டியது. தன் தந்திர புத்தியை எப்படி அம்முவிடம் காண்பிப்பது என்று திட்டமிட்ட படி அம்முவிற்கு அழைத்தான். வழக்கம் போல் இன்றும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

"என் கால்-ஐ அட்டென்ட் பண்ணாம எங்கே டி போயிருவே! இன்னும் எத்தனை நாளைக்குனு பாக்குறேன் நானும்..." என்று மனதோடு மொழிந்துவிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தவன் தனக்கு எதிரே வந்தவர்கள் மரியாதை நிமித்தமாக வாழ்த்து கூறி கடந்திட பதிலுக்கு கம்பீரமாக தலையசைத்துவிட்டு தன் அறையில் சென்று அமர்ந்தான்...

💗💗💗💗💗

அங்கே அம்முவோ ஐந்து நாட்களாக அவளது அறையைவிட்டு வெளியேறவில்லை. உணவு கிண்ணம் எப்படி உள்ளே செல்கிறதோ அப்படியே வெளியே வருவதுமாகத் தான் இருக்கிறது.

என்ன தான் கமல் கேலியாகக் கூறியிருந்த போதும், அவள் அவ்வீட்டு இளவரசியே... தாத்தன் முதற்கொண்டு பேரன் வரை அவளது நிலைகண்டு கலங்கி தான் நின்றனர். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை எனலாம்.

ஐந்து நாட்கள் நீர் ஆகாரம் மட்டும் பருகிக் கொண்டு உயிர் வாழ்பவளை ஒரு கட்டத்திற்கு மேல் காணப் பொருக்காத அவளது அண்ணன் அவளது அறைக்குள் நுழைந்தான்.

"ஏய் பொட்டகழுதே (இது வசவு சொல் இல்லை மக்களே! இன்னும் சிலர் ஊர் பக்கம் பாசமா பொட்டகழுதே, பொட்ட அப்படினு கூப்பிடுற வழக்கம் இருக்கு) என்ன உண்ணாவிரதம் இருக்கீங்களோ! அவ்ளோ உசத்தியா போயிட்டானோ அந்த பையல்... வீட்ல என்ன நடக்குது யார் செத்தா யார் இருக்கானு தெரியாம ரூமுக்குள்ள அடஞ்சு கெடக்க..." என்று நெற்றி சுருக்கி வினவினான்.

"யாரும் என்னை வந்து பாக்க வேண்டாம்னு நான் சொல்லலேயே! உயிரோட இருக்குறவங்களுக்கு என்னை பாக்கனும்னு தோனுச்சுனா வந்து பாருங்க, பேசுங்க..." என்றாள் நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்பது போல்"

"இது ஒன்னும் துக்க வீடு இல்லே தானே! பின்னே ஏன் மூஞ்சில இவ்ளோ சோகம்... நேரத்துக்கு சாப்பிட்டு, வேலைய பாக்க வேண்டி தானே!"

"எனக்கு என் கவலை... நீ உன் வேலைய பாத்துட்டு போயேன்"

"அதானே உனக்கு அவனைத் தவிர வேற என்ன கவலை. வீட்ல நீ சாப்பிடாம அம்மாவும் சாப்பிடல... அதை பத்தி உனக்கென்ன வந்தது... நீ நேரங்கெட்ட நேரத்துல தூங்கி எழறே! ஆனா அப்பாவும் தாத்தாவும் ராத்திரி ஃபுல்லா நீ முழிச்சிருக்கேனு, எங்கே எதுவும் ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிக்கிவேயோனு பயத்துல கண்ணு முழிச்சு கெடக்காங்க... அதைப் பத்தியெல்லாம் உனக்கென்ன கவலை... உன்னை வேண்டாம்னு சொல்லி தொறத்தி விட்டவனை நெனச்சுட்டு கெடக்குறது தான் உன் கவலை இல்லே..."

அகிலனின் கூற்றில் விறுவிறுவென்று கூடம் வந்தவள், சிற்றப்பனின் அறையை எட்டிப் பார்த்து, "சித்தி இங்கே வாங்க..." என்று அழைத்துவிட்டு,

"ம்மா.... தாத்தா... பாட்டி" என்று அனைவரையும் கத்தி அழைத்தாள். 'இவள் என்ன செய்கிறாள்!' என்ற சிந்தனையோடு அகிலனும் அவளுடன் கூடம் வந்து நின்றான்.

"எல்லாருக்கும் இப்போ சொல்றது தான்... நான் சாப்பிடலே, தண்ணி குடிக்கலே, தூங்கலேனு இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை... என் வேலைய எனக்கு பாத்துக்கத் தெரியும்... தாத்தா உங்களுக்கு இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்கோங்க...

காதல் தோல்வி சூசைட் பண்ணிப்பேன்னு நெனச்சோ இல்லே அர்த்தராத்திரில வீட்டைவிட்டு ஓடிப்போயிடுவேன்னு நெனச்சோ யாரும் எனக்கு காவல் இருக்கத் தேவையில்லை... இங்கேயே தான் இருப்பேன்... என் கண்ணா என்னை கூட்டிட்டுப் போக வருவான்.... நீங்க யாரும் மறுப்பு சொல்ல முடியாதபடி....." என்று தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி திமிராகவே உரைத்தார். இறுதியாக தன் அண்ணனின் கண்களை நேருக்கு நேர் பார்த்து "புரியுதா?" என்றாள் கர்வமாக.....

சீண்டல் தொடரும்.

வருவானா அவளது கண்ணன்!!!
தந்தையின் நம்பிக்கைக்குரியவன்,
தன்னவளின் நம்பிக்கையையும் நிறைவேற்றுவானா!!!
 
Top