• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 30

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"என் கண்ணா என்னை கூட்டிட்டுப் போக வருவான்.... நீங்க யாரும் மறுப்பு சொல்ல முடியாதபடி....." என்று தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி திமிராகவே உரைத்தாள். இறுதியாக தன் அண்ணனின் கண்களை நேருக்கு நேர் பார்த்து "புரியுதா?" என்றாள் கர்வமாக.....

அகிலனின் 'துரத்திவிட்டவன்' என்ற வார்த்தை தான் ஐந்து நாட்களுக்குப் பின் அவளைப் பேசத் தூண்டியிருந்தது... ஆனால் ஆவேசத்தில் பேசிவிட்டாளே ஒழிய கமல் வருவானா என்று எதிர் கேள்வி கேட்ட அவள் மனசாட்சிக்கு அவளது பதில் வழக்கம் போல் 'அவன் வரலேனா என்ன! நான் போறேன்... என்னை துரத்தி விட்டுட்டு அவன் மட்டும் நிம்மதியா இருந்திருவானா என்ன! இல்லே நான் தான் இருக்க விட்டுடுவேனா!' என்று கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் மறு குரல் எழுப்பியது மற்றொரு மனசாட்சி.

உள்ளே ஒலித்த குரலுக்கு ஏற்றார் போல் தாடையைத் திருப்பி, தலையை சிலுப்பி, கண்களை உருட்டி நின்றிருந்தவளின் அருகே வந்த அகிலன் அவளது தலையில் தட்டி, "என்ன? வருவானானு உனக்கே சந்தேகம் வந்திடுச்சா?" என்றான்.

தனக்குள் எழுந்த சந்தேகத்திற்கு தன்னிடமே பதில் இல்லை என்ற போதும், அவளது காதலின் மேல்.... கமல் அவள்பால் கொண்ட காதலின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவள் மீண்டும் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு, கோபம் துளிர் விட, "அவனைப் பத்தி எனக்கு தெரியும்... அவனால நான் இல்லாம இருக்க முடியாது... அப்படியே அவன் என்னைத் தேடி வரலேனா என்ன! நான் திரும்ப அவனைத் தேடிப் போவேன்." என்று திமிராகவே மொழிந்து விட்டு தனது அறை பக்கம் நகர்ந்தாள்.

"இனி ஒருமுறை வீட்டைவிட்டு வெளியே காலை எடுத்து வெச்சு தான் பாரேன்... காலை வெட்டிப் போடுறேன்..." என்று உறுமினான்.

நின்று ஒரு நொடி திரும்பிப் பார்த்தவள் கண்களோ 'முடிந்தால் செய்துகொள்' என்று எகத்தாலமாக அவனை நோக்கியது.

அகிலனுக்கு எப்போதுமே தன் தங்கையிடம் பிடித்த விஷயம் என்றால் அது அவளது அசட்டை தனம் தான். எப்போதுமே தனக்கு அடங்கிப் போக நினைக்காத அவளது துறுதுறு சேட்டைகளும், துடுக்குப் பேச்சும் கூட அவனுக்கு ரொம்பப் பிடித்த ஒன்று தான்.

சாதாரண அண்ணன் தங்கையைப் போல் எப்போதும் முட்டிக் கொண்டாலும், வழக்கம் போல் அவர்களது பாசம் இலைமறைக் காயாய் எப்போதும் எல்லா விஷயத்திலும் இருப்பதுண்டு. அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது என்னவோ கமலுடனான காதல் மட்டும் தான்.

தன் தோழியின் திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து கமலைப் பற்றியும், பெயர் தெரியாத கமலின் அன்னை தந்தை பற்றியுமே வீட்டில் பேசித் திரிந்தவள் அகிலனின் முறைப்பையும் பரிசாகப் பெற்றதுண்டு.

"என்ன? எப்போ பார் அந்த கே.கே பேமிலி மேட்டர் தான் நம்ம வீட்ல ரிப்பீட்டடு நியூஸ்-ஆ போயிட்டு இருக்கு?" என்றான் சிறு முறைப்போடு.

அலுத்துக்கொண்ட குரலில் "ஆமா 7×24 நியூஸ் சேனல் பார் நானு... எப்போ பார் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றதுக்கு!"

"அப்போ என்ன விஷயம்?... அவனைப் பத்தியே பேசிட்டு இருக்கே! ம்ம்ம் என்னவாம்?"

"என்னவாம்? ம்ம்ம் என்ன என்னவாம்?" என்று அவளும் ஒன்றுமே இல்லை என்பது போல் வினவினாள்.

பதிலுக்கு இளையாளை நக்கலாகவே பார்த்து "இது தான்...... என்னவாம்?" என்று அவளது திறன்பேசியில் மதுரை மருத்துவமனைக்கு ட்ரைனிங் டாக்டராக விண்ணப்பித்து அதற்கு ஒப்பந்தக் கடிதம் வந்ததை காண்பித்தான்.

"ஏன்? இப்போ என்ன மதுரைல ட்ரைனிங் போகக் கூடாதா?"

"ஓஓஓ... போலாமே... தாராளமா போலாம்... ஆனா இது என்னனு சொல்லிட்டுப் போ?" என்று சுனோவுடனான புலனக் குறுந்தகவல் பக்கத்தில் கமலைப் பற்றிய விவரங்களைக் காண்பித்தான்.

"டேய்... அக்கி... பக்கி... உன்னை யாருடா என் ஃபோன் எடுத்து பாக்க சொன்னது! கொடுடா!" என்று சண்டைக்குத் தயாரானாள்.

அகிலனுக்கு டா போட்டு அழைப்பது சுத்தமாக பிடிக்காத ஒன்று... இருந்தும் அவனை கடுப்பேற்றி அவனிடமிருந்து தன் திறன்பேசியை பரித்திடும் நோக்கிலேயே அவ்வாறு அழைத்தாள் அம்மு.

"டா சொல்றே நீ" என்று அவளை தலையில் குட்டு வைத்தவன், "இரு அப்பா, தாத்தா, சித்தப்பா எல்லார்கிட்டேயும் நீ எதுக்கு மதுரை போறேன்னு சொல்றேன்" என்று அவளது திறன்பேசியோடு பறந்தான்.

அவன் அவளது அறைவாசலை எட்டுவதற்குமுன் "அண்ணா... அண்ணா.... ப்ளீஸ் ண்ணா.... நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் ண்ணா...."

"அவ்ளோ நல்லவளா டி நீ... எப்படி ஐஸ் வெச்சாலும் கண்டிப்பா சொல்லத்தான் போறேன்."

"அம்மா அண்ணா என்னை டி னு சொல்றாங்க ம்மா..." என்று ஆளுக்கு முன்னதாக புகாரளித்தாள்.

"அடிப்பாவி மொதோ டா சொன்னது நீ"

"அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு... இதுக்கு மேல் நோ பஞ்சாயத்து... என் ஃபோனை கொடு"

"அப்போ என்ன விஷயம்னு சொல்லு... எதுக்கு மதுரைல அப்ளை பண்ணின?"

"சொல்லுவேன்.... ஆனா நீ வீட்ல யார்கிட்டேயும் சொல்லக் கூடாது?" என்று கண்டிஷன் முன் வைத்தாள்.

சற்று யோசித்து அவளை ஒரு மார்க்கமாக பார்த்து "ம்ம்ம்" என்றான்.

"சத்தியமா?" என்று குழந்தை போல் கை நீட்டி நின்றாள் அம்மு.

"விட்டா பால் பாட்டிலை வாயில தினிச்சு பால்வாடி போக சொல்லுவே போல... ஸ்கூல் பேபி மாதிரி சத்தியம் பண்ண சொல்லிக்கிட்டு" என்று சலித்துக் கொண்டு அவள் கைமேல் தன் கையை வைத்து "சத்தியமா" என்றான்.

"எனக்கு கமலை பிடிச்சிருந்துச்சா....... அதான் அன்னைக்கே........ அவன் கிட்ட" என்று ஒவ்வொரு வார்த்தையாக தன் தமையனின் முகத்தைப் பார்த்து தயங்கி தயங்கிக் கூறினாள். ஆனால் அகிலனோ எதுவானாலும் அவளாகவே சொல்லி முடிக்கட்டும் என்று கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.

"அன்னைக்கே..... அவன்கிட்ட.."

"ம்ம்ம் அப்பறம்"

"பிடிச்சிருக்கு சொல்லிட்டேன்..."

அகிலன் அவள் பேசி முடிப்பதற்காகவே காத்திருந்தவன், சட்டென சுற்றும் முற்றும் பார்த்தபடி "எங்கே அந்த அறுவா! உன்னை கண்டந்துண்டமா வெட்டி போடுறேன்... என்ன தைரியம் இருந்தா ஒரு அண்ணேங்கற பயம் கொஞ்சமும் இல்லாம லவ் பண்றேன்னு சொல்லுவே! உன்னை" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கையை முறுக்கிப் பிடித்து முதுகின் பின்னால் கொண்டு சென்று சற்றே குனியவைத்து அவளது முதுகில் ஓங்கி அடித்தான்.

"அம்மா...... அண்ணா அடிச்சிட்டான்..." என்று கத்தினாள் பிற்பிறந்தாள்.

"ம்ம்ம்... இன்னும் சத்தமா கத்து... வந்து என்னனு கேப்பாங்கல்ல... நானும் நீ ப்ரொப்போஸ் பண்ணிட்டு வந்ததை சொல்றேன்..."

"அண்ணா சத்தியம் பண்ணிருக்கே! நியாபகம் இருக்கட்டும்"

"நான் தான் சத்தியம் பண்ணும் போது சக்கரை பொங்கல்-னு சொல்லிட்டனே... அந்த சத்தியம் செல்லாது..." என்று அவளையும் விட குழந்தையாக உரைத்தான்.

அம்மு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு "அட பைத்தியமே" என்றிட, "குளிர்விட்டுப் போச்சு டி உனக்கு... இரு இப்பவே எல்லாரையும் கூட்டி பஞ்சாயத்து வைக்கிறேன்." என்றவன் நொடியும் தாமதிக்காது "தாத்தா, அம்மா, சித்தப்பா எல்லாரும் இங்கே வாங்க" என்று கத்தினான்.

அம்முவோ கூலாக இடுப்பில் கை வைத்து நின்று "சொல்லு, நானும் சொல்றேன்"

அகிலன் நக்கலாக "என்னனு?" என்றான்.

"இரு தம்பி எல்லாரும் வரட்டும் சொல்றேன்" என்று வெகு இயல்பாக நிற்க, அகிலன் மனதில் கிலி பரவியது.

"நீ என்ன சொல்லுவ? சொல்றதுக்கு உனக்கு என்ன தெரியும்?" என்றான்.

"இருக்கு.... எனக்கும் ஒரு மேட்டர் இருக்கு.... இதோ தாத்தாவே வந்துட்டாங்களே... பாருங்க தாத்தா என் கைய எப்படி புடிச்சிருக்கான்னு" என்று ஆளுக்கு முன்னதாக கண்ணீரோடு முந்திக் கொண்டாள்.

"கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போற புள்ளடா அவ... அழ வைக்காதே டா..." என்றார் பழனிவேல்.

பழனிவேலின் பின்னாலேயே உள்ளே வந்த கனகவேல், "டேய்... பொம்பல புள்ளைய ஏன்டா அடிக்கிறே! கையவிடு மொதோ" என்று சத்தமிட்டார்.

"ஹாங்... விடுறேன். அதுக்கு முன்னாடி இவ என்ன செஞ்சுட்டு வந்திருக்கானு கேளுங்க..."

இருவரின் பின்னால் நின்றிருந்த உமா "மொதோ அவனை வயசு புள்ளைய வாடி போடினு பேசுறதை நிறுத்த சொல்லுங்க மச்சான்" என்று கனகவேலிடம் குறைபட்டர்.

அதனைக் கேட்ட அகிலன், "ஹலோ மம்மி கம்ப்ளைன்ட் பண்ண கூப்பிட்டது நானு... ஆனா எல்லாரும் அவளுக்கு வரிஞ்சுகட்டிட்டு பேசிட்டு இருக்கிங்க... இது கொஞ்சமும் நல்லா இல்லே சொல்லிட்டேன்..."

கோமதி பேத்தியின் அருகே வந்து நின்று "நீ சொல்லு டா கண்ணம்மா... அண்ணே எதுக்கு உங்களை வையிராங்க"

"அவ்வ்வ்வ்... பாட்டி என்ன தப்பு செய்தேனு அவளை கேளுங்க... நான் ஏதோ வீண் புகார் சென்ன மாதிரி என்னை திட்டுற மாதிரியே கேக்குறிங்க..." என்று அவரவருக்கு ஏற்றார் போல் பதில் கூறிக் கொண்டிருந்தான்.

"என்னடா இங்கே பஞ்சாயத்து? தினம் இதே வேலை தானா!" என்றபடி இறுதியாக உள்ளே நுழைந்தார் தியாகு.

"சுத்தம்... இனி என் தலை தான் உருளும்... ஒரு பஞ்சாயத்தும் இல்லே ப்பா... எல்லாரும் சாப்பிட்டுட்டு தூங்கலாம் வாங்க..." என்று கூட்டத்தை சேர்த்த அவனே கலைக்கவும் முற்பட்டான்.

தன் இளையோள் வேறு தன்னைப் பற்றி அவளுக்கு ஏதோ தெரியும் என்று கூறியிருக்கிறாள். அது என்ன குண்டு என்று தெரியாமல் எப்படி வாய் திறப்பது என்ற யோசனை அவனுக்கு.

"நீ சொல்லு அம்மு" என்று தியாகு அம்முவைத் தூண்டவே, ஒன்றுமே அறியாதவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு தந்தையின் அருகே சென்று,

"அண்ணே ப்பா... ஃபோன்ல யாரோ ஒரு பொண்ணு கிட்ட, 'நீ என் பொண்டாட்டி டி'னு சொன்னாங்க ப்பா"

அகிலனோ பெரிய கேவலாக மூச்சை உள்ளே இழுத்தவன், அதனை வெளிவிட மறந்து மூச்சு முட்ட சிலையென நின்றான். சுற்றியிருந்தோர் அனைவரும் அவனைத் தான் முறைத்தனர்.

'இது நாம அடிக்கடி பினி கிட்ட சொல்றது வழக்கம் தானே... ஆனா இந்த பிசாசு எப்போ கேட்டுச்சுனு தெரியலேயே!' என்று யோசித்தபடியே தந்தையை சமாதானம் செய்ய முனைந்தான். "அப்.... ப்ப... ப்பா... அவ பொய் சொல்றா ப்பா"

"எவிடஸ் கூட இருக்கு... என் ஃபோன்ல"

"ஓஓஓ... அதான் துரை கையில இருக்கா உன் ஃபோன்!!???" என்ற தந்தைக்கு பலமாக தலையாட்டினாள் அம்மு.

அதனையே அகிலனும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து, "எங்கே பாக்கலாம்... இதுலே இப்போ இல்லேனு வை... உனக்கு கன்ஃபாமா அடி தான்... அவ சொல்றது இல்லைனா நான் காண்பிக்கிறதைப் பாருங்க ப்பா..." என்றபடி அவனே அவளது திறன்பேசி திறவு சொல் அழுத்தினான்.

நமக்கு தான் அம்முவையும் அவள் நடிப்பையும் பற்றி நன்றாகத் தெரியுமே! அதையே தான் இப்போதும் செய்தாள். கண்களை விரித்து வாயில் கை வைத்து அதிசயித்து, "என் பாஸ்வேர்ட் கூட தெரிஞ்சு வெச்சிருக்காங்க ப்பா.... அப்போ கண்டிப்பா டெலிட் பண்ணிருப்பாங்க... அதான் வேமா எடுத்து காண்பிக்க சொல்றாங்க..." என்றாளே பார்க்கணும்... மொத்த குடும்பமும் நம்பியது.

"நெனச்சேன் டா மவனே! 24 மணிநேரமும் இந்த சோப்பு டப்பா கூடவே நேரத்தை கழிக்கும் போதே நெனச்சேன்... இப்படி தான் எங்கேயாவது சிக்கிருப்பேனு...." என்று கனகவேலும்

"அகி... வயசு பிள்ளைய வீட்ல வெச்சுகிட்டு இதென்ன வேலை... அப்படி என்ன அவசரம் உனக்கு..." என்று உமாவும் தங்கள் பங்கை தொடங்கி வைத்தனர்.

"ஏன்டா படிச்சு முடிச்சிட்டு பொறுப்பா ஒரு வேலைக்கு போவே... இல்லே கடைக்கு ஒத்தாசையா வருவேனு பாத்தா, பொட்ட புள்ள பின்னாடி சுத்தீட்டு இருக்கேயா நீ! உனக்கு அடுத்து பொறந்தவ தானே அவ... எவ்ளோ பொறுப்பா டாக்டருக்கு படிச்சா... இப்போ வேலைக்கும் அப்ளை பண்ணி வேலையும் கெடச்சிருச்சி... ஆம்பலப்பையல் நீ உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்து நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கனும்னு நெனைக்காம, உனக்கு பொண்ணு பாத்து வெச்சிருக்கேயோ! தோலை உரிச்சிடுவேன் படவா!" என்று அம்மு சொன்னது உண்மையா பொய்யா என்று கூட விசாரிக்காமல் ஆளாளுக்கு அகிலனை திட்டத் தொடங்கினர்.

அம்மு தனக்குள் மூண்ட சிரிப்பை அடக்க முடியாமல் இதழ் மடித்து கிளுக் என குலுங்கி, அகிலனை பார்த்து மூக்கு சுரித்து பழிப்பு காட்டி நின்றாள்.

"நீ தான் பொறுப்பில்லாம, வேலையில்லாம திரியிறேயே!உன்னையெல்லாம் எப்படியா ஒரு பொண்ணு லவ் பண்ணுது?" என்று கோமதி முகவாட்டில் கை வைத்து அதிசயித்து கேட்க, அகிலன் கோமதியை தீப் பார்வை பார்த்தான்.

"ஓய் ஆச்சி... ஏன் உன் பேரனுக்கு என்ன குறைச்சல்! பொட்டபுள்ளைங்களுக்கு புடிக்கிற மாதிரி அழகா தானே இருக்காங்க?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள் ரூபினி... கனகவேலின் மச்சினன் மகள், அகிலன் மற்றும் அம்முவின் மாமன் மகள். அதே ஊரில் அடுத்த தெருவில் தான் இருக்கிறது அவளது இல்லம்.

ரூபினியும் எதிர்பாரா நேரத்தில் வந்து இணைந்து விட அகிலன் நிலை தான் கவலைக்கிடமாகியது. ஒரு கையால் முகத்தை மறைத்தபடி தலைகுனிந்து நின்றான்.

"வாடி மருமகளே... நீ தான் அவன் பொண்டாட்டியா?" என்று தன் தம்பி மகளை ஒரு மார்க்கமாக வரவேற்றார் பரிமளா...

"இதோ பாரு அத்தே... நான் ஒன்னும் உன் பையனுக்கு பொண்டாட்டியா ஆகனுமுனு ஆசைபடலே... இதோ நீங்களும், பெரியத்தையும் தான் என்னை வாய் நிறைய மருமகளே! மருமகளே!னு ஆசையா அழைக்கிறிங்க... சரி உங்க வீட்டுக்கு மருமகளாக வரத் தான் அப்படி அழைக்கிறிங்களோனு நெனச்சு தான் உன் மவன்கிட்ட அதுவும் உங்க ஆசைதான் சொன்னேன்... புரியுதா? என்ன தாத்தா? நான் சொல்றது சரிதானே!" என்று நேரம் பார்த்து பழனிவேலை தனக்கு சாதகமாக இழுத்தாள்.

ஏற்கனவே பேரனுக்கு ரூபியைத் தான் கட்டி வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர், இருவரும் விரும்புகின்றனர் என்றவுடன் சிரித்து தன் மகிழ்ச்சியை காண்பித்து பச்சை கொடி காட்டி விட்டார்.

"ஏன்டா திருடா... ரெண்டு பேரும் எங்க முன்னாடி பேசிக்க கூடமாட்டிங்க... ஆனா தனியா ஃபோன்ல பேசிக்கிற அளவுக்கு எப்போ வந்திங்க! சரியான திருட்டுக்கழுதைங்க" என்று உமா தன் மகனின் காதைத் திருகியபடி கூறினான்.

அதற்கும் அகிலன் சிரித்தானே ஒழிய பதில் கூறவில்லை. அந்த சிரிப்பில் சிறிய வெட்கம் கூட தெரிந்திட, கோமதி அவனது கன்னம் தடவி நெட்டி முறித்தார்.

"அது சரி... இத்தனை நாள் வீட்டுக்கு தெரியாம அவளை கூட்டிட்டு சுத்தினான்... இனி ஒளிவு மறைவு இல்லாம வெளிப்படையா சுத்துவான்... வெளங்கிடும்..." என்றார் கனகவேல்.

அவரது பேச்சை கேட்டு "அப்படி ஏதாவது ஊருக்குள்ள கேள்விப்பட்டேன்... அன்னைக்கே இந்த ஊருக்கு முழுக்கு போட்டுட்டு, வேலை தேடி சென்னை போனு விரட்டி விட்டுடுவேன்." என்றார் தியாகு.

"ப்பா... இயற்கை உரம் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கேன்... மண்புழு வளர்ப்பு... பக்கத்துலேயே சின்ன தோட்டமும் வைக்கலாம்னு இருக்கேன். முதலீடு கேட்டா தருவிங்க தான். இருந்தாலும் ஒரு முயற்சியா லோன் அப்ளை பண்ணிருக்கேன். அது போக மாட்டுகொட்டம், பால் பண்ணை அப்படினு கொஞ்ச கொஞ்சமா விரிவுபடுத்துற ஐடியா..." என்று தன் இத்தனை நாள் ஊர்சுற்றளுக்கு கிடைத்த பலன் என்று காட்டியிருந்தான்.

அவனது யோசனைகள் அனைவருக்கும் ஏதோ ஒரு சஞ்சலத்தைத் தர, அதனை பழனிவேல் வாய் திறந்தே கேட்டுவிட்டார். "ஏன்யா இது நமக்கு பழக்கம் இல்லாத வேலை!!! எப்படி சமாளிப்பே! அதுவும் இல்லாம உன் கூட படிச்ச பசங்க கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து வேலை பாக்கும் போது, நீ மட்டும் இந்த வேலை பார்த்தா அது உன்னை தானே தாழ்த்தி காமிக்கும்"

"நாம செய்யிற வேலைய நாம மொதோ உசத்தியா நெனைக்கனும் தாத்தா... இப்போலாம் பலபேர் நீங்க சொல்ற மாதிரி கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து சம்பாதிச்சு அந்த காசுல கடைசி காலத்துல இயற்கை விவசாயம் பண்றேன்னு கிளம்பி வந்திடுறானுங்க... வாழும் போது சொர்க்கத்தை தன் சுகத்துக்காக அழிச்சிட்டு, சாகும் போது சொர்க்கத்தை தேடி அலையிற வாழ்க்கை தாத்தா அது... இப்போ நான் ஆரம்பிக்கப் போற இந்த தொழில்-ல எனக்கு பெறுமை தான்... என்னால இதுல சக்ஸஸ் காட்ட முடியும்..." என்று உறுதியாகக் கூறினான்.

அவனது மன உறுதியைக் கண்ட பழனிவேல் தன் ஆளுமைத் திறமை தன் பேரனிடமும் மிளிர்வதைக் கண்டு பூரித்துப் போனார். "நல்லாயிருப்பயா!" என்று குரல் தளதளக்க உரைத்தவரிடம், "இன்னும் என்ன ஒத்தையா ஆசிர்வாதம் பண்றீங்க... ஜோடியா நில்லுங்க" என்று கோமதியை இழுத்து தாத்தாவின் பக்கத்தில் நிற்க வைத்துவிட்டு, சந்தடி சாக்கில் "பினி... வா இங்கே... தாத்தா, பாட்டி கால்ல விழுந்து கும்பிடு" என்று அதிகாரம் காட்டுவது போல் பாசாங்கு செய்து அவனும் ஜோடியாக விழுந்து வணங்கினான்.

"வீட்ல எல்லாரும் சம்மதிச்சிட்டாங்க தானேனு வரம்பு மீறிப் போனிங்க, அவ்ளோ தான் சொல்லிட்டேன்... டேய் அகி உனக்கு தான் முக்கியமா சொல்றேன், உன் தங்கச்சி கல்யாணத்துக்கு அப்பறம் தான் உன் கல்யாணம் புரியுதா?" என்று செல்ல மிரட்டல் விடுத்தார் பழனிவேல்.

எல்லாம் முடிந்து சுமூகமாகிவிட அம்முவிற்கு தான் சப்பென்று ஆனது. தன் அண்ணன் விரும்பும் பெண் யார் என்றே தெரியாத நிலையில் ஏதோ ஒன்றை பற்றவைத்து தான் பார்ப்போமே என்று நினைத்து தான் ஆரம்பித்தாள். எப்படியும் பெரிய கலவரம் நிகழும்... அதில் தன் விஷயத்தை மறந்து அகிலன் புறம் அனைவர் கவனமும் திரும்பும்... இப்படியே நாட்களை கடத்தி தன் கண்ணனைத் தேடிச் செல்ல நினைத்திருக்க, அகிலனின் காதல் விவகாரம் நொடிப் பொழுதில் பேசி தீர்ந்து முடிந்தும்விட்டது.

பேச்சு மூச்சற்று இப்படியே நழுவி விட வேண்டியது தான் என்று நினைத்து சத்தம் இல்லாமல் வெளியேற நினைக்கையில் தியாகுவின் குரல் அவளை அறை வாசலிலேயே நிறுத்தியது.

மகளின் சேட்டைகளையும் அறிந்திருந்த தியாகு, "இப்போ நீ சொல்லு... உன் தங்கச்சி என்ன செஞ்சா?" என்று அகிலனிடம் வினவிட, சட்டென திரும்பி அண்ணனைப் பார்த்த அம்மு கண்களால் கெஞ்சினாள். இப்போது பழிப்பு காட்டுவது அவனது முறையாகியது.

"தங்கச்சி ம்மா... அண்ணன் கிட்ட வாங்க" என்று பாசமாக அம்முவை அழைத்தான்.

அம்முவும் அகிலனை எதுவும் வெளிப்படையாக திட்ட முடியாமல் முனுமுனுத்தபடி அவன் அருகே வந்து நின்றாள்.

"ஒரு அண்ணனா தங்கச்சிக்கு பொருப்பா மாப்பிள்ளை பார்த்து வெச்சிருக்கேன். அதுவும் என் தங்கச்சி மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளை..." என்ற அகிலனை நம்புவதா கூடாதா என்று தெரியாமல் விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள்.

சீண்டல் தொடரும்.​