• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 33

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"நான் ஜகன் தேவ்... அம்மு ஃப்ரெண்ட். ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்ப்பிடல்ல ஒன்னா தான் வொர்க் பண்ணினோம்." என்றிட, அகிலனும் இயல்பாகினான்.

சிரித்த முகமாக "ஓஓஓ... அம்மு ப்ரெண்டா நீங்க? உக்காருங்க... இப்போ தான் வந்தா... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... இதோ ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுவா" என்றவன்,

சமையலறையில் தன் அன்னைக்கு சத்தம் கொடுத்தான். "ம்மா... எனக்கும் சேர்த்து காஃபி" என்று தனக்குத் தேவை என்பது போல் தேவ்வின் கவனிப்பையும் நினைவூட்டினான். மேலும் தேவ்வின் அருகிலேயே அமர்ந்து அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.

"என்ன விஷயமா வந்திங்க?"

"ஃபோன் பண்ணினா அம்மு எடுக்கிறது இல்லே... அதான் நேர்ல பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு வந்தேன்" என்று ஆரம்பித்து அவன் வந்ததன் காரணத்தையும் கூறினான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அகிலன் அன்னை கொடுத்துச் சென்ற குழம்பியைப் பருகிய படி, அம்முவிற்கு சம்மதம் என்றால் அவளை அழைத்துச் செல்லலாம் என்றும், வீட்டில் சம்மதம் வாங்கித் தருவது தன் பொருப்பு என்றும் வாக்குறுதி அளித்தான்.

அதில் ஓரளவு திருப்தியடைந்த தேவ் தனக்குத் தேவையான முழு உதவியையும் அகிலன் மூலமே சாதித்துக் கொள்ள நினைத்தான். "பட் இது ஒரு நல்ல ஆப்பர்ச்சியூனிட்டி... இதை அம்மு மிஸ் பண்ண வேண்டாமே! அம்மு இப்போ இருக்கிற நிலைமைல சம்மதிப்பாளானு தெரியலே! நீங்க எப்படியாவது அம்முவை சம்மதிக்க வைங்க ப்ளீஸ்" என்று வேண்டுதளாகக் கூறினான்.

அகிலன் சற்றே மூக்கு விடைக்க, "ஏன் இப்போ அவளுக்கு அப்படி என்ன இக்கட்டான நிலைம?" என்றான்.

"அம்மு கமலைப் பத்தின யோசனைல இருக்கானு எனக்கும் தெரியும்... அவ கமலை மறக்க கொஞ்ச நாள் ஆகும் தான். ஆனா அதுக்கு இந்த வேலை நல்ல உதவியாவே இருக்கும்... சொந்த பிரச்சனையை யோசிக்கக் கூட நேரம் இருக்காது. ரெண்டு வாரம் தான் வொர்க். அம்மு மனநிலைக்கும் அங்கே ஒரு நல்ல ச்சேஞ் கிடைக்கலாம்..." என்று அகிலனை சரியான இடத்தில் மடக்கினான்.

"அவனை பத்தி தெரிஞ்சிருக்கேன்னா! அவங்க லவ்-க்கு எதுவும் ஹெல்ப் பண்ண வரலேயே! அப்படி மட்டும் இருந்தது பொணமா தான் வெளிய போக வேண்டியிருக்கும்..." என்று புருவம் சுருக்கி மீசை துடிக்க திமிராக உரைத்து இருக்கையில் கம்பீரமாக சாய்ந்து அமர்ந்தான்.

தேவ்-வும் சளைக்காமல் சிரித்த முகமாக "எனக்கும் என் உயிர் மேல ஆசை இருக்கு. அது எல்லாத்துக்கும் மேல என்னோட ரிசர்ச்!!!!! அது எனக்கு ரொம்ப முக்கியம்... ஹண்ட்ரடு பெர்ஷன்ட் ஸக்ஸஸ் காமிச்சு சட்ட பூர்வமாக அறிவிக்கப்படும் போது அது என்னோட பேரைத் தான் சொல்லனும்... அதுக்காகவே நான் உயிரோட இருக்கனும்..." என்றான்.

கடந்த ஒரு மாதமாகவே தன் மறுப்புக்கு சம்மதம் சொல்லும் தங்கையின் செல்லப் பிடிவாதத்தைப் பயன்படுத்தி அகிலன் அம்முவின் சம்மத்தைப் பெற்றான். மேற்கொண்டு தேவ்விடம் கூறியது போல் குடும்பத்தாரின் சம்மதத்தையும் பெற்று அன்று இரவே தேவ்வுடன் சென்னை அனுப்பி வைத்தான்.
*********
ராம் கொடுத்த மறைமுக உந்துதலில் கங்காதரனிடம் பேசும் முடிவோடு இருவருக்குமாக நெல்லிக்கனி பழச்சாறு எடுத்துக்கொண்டு கங்காதரனின் அறைக்குச் சென்றாள். அவரது முகத்தில் தெரிந்த யோசனை முடிச்சுகளை கண்டபடி தான் உள்ளே நுழைந்தாள். ஆனால் அப்படி ஏதும் இல்லை என்பது போல் இருந்தது அவரது வரவேற்பு.

"குட் ஈவ்னிங் சிவா மா... டீ ஆர் காஃபியோட வருவேனு பாத்தா கசாயத்தோட வந்திருக்கேயே!" என்று இயல்பாக சிரித்த முகமாக வரவேற்றார்.

சிக்லெட் சிரிப்புடன் மெல்லமாக இடவலம் தலையசைத்து, "நல்லா பாருங்க மாமா... இது ஜூஸ் தான்... கசாயம் இல்லே" என்றாள்.

"ரெண்டும் ஒன்னு தான். ரெண்டையும் அளவா தான் குடிக்க முடியும்... அது புரியாம நீயும் உன் அத்தை மாதிரி பெரிய க்ளாஸ்ல எடுத்துட்டு வந்திருக்கேயே!" என்று சலித்துக் கொண்டாலும் அவள் நீட்டிய ட்ரேவிலிருந்து ஒரு பீங்கான் கோப்பையை எடுத்துக் கொண்டார்.

பதிலுக்கு சிரித்தாலும் தான் வந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தனக்குள் இரண்டு விதமாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவளை பேச ஊக்கியது அவரது வார்த்தைகள்.

"என்ன விசயம் டா? ஏதோ சொல்ல நெனச்சு தயங்குற மாதிரி இருக்கு!" என்றார்.

சுற்றி வளைத்துப் பேசி கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடிக்க விரும்பாமல் நேரடியாகவே வினவினாள் நேத்ரா. "மாமா நான் அம்முவை பாக்க போகலாம்னு இருக்கேன்"

"என்ன இது? எல்லாரும் ஆளுக்கு ஒரு முடிவோட தான் இருக்கிங்க போல..." என்று தன் வளர்ப்பு மகளும் கூட தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் கூறினார்.

"மாமா... ஃப்ஸ்ட் ஆஃப் ஆல் ஐ ஆம் ஸாரி டு சே திஸ் மாமா... எனக்கு உங்க கோபம் அர்த்தமற்றதா தெரியுது மாமா!

சிலரை சொல்லி திருத்தலாம்... பலருக்கு பட்டால் தான் புத்தி வரும். இன்னும் சிலர் தான் சொல்றதும், செய்யிறதும் மட்டும் தான் சரினு நினைக்கிறவங்க... அவங்களை எல்லாம் சாகுற வரைக்கும் திருத்த முடியாது.

நம்ம குடும்பத்தையும், நம்ம கமலையும் நம்பி வந்த பொண்ணோட மனசை நோகடிச்சு கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா விரட்டி விட்டிருக்கோம். அது தான் எனக்கு கொஞ்சம் மனசு உறுத்தலா இருக்கு. அவ இன்னமும் கமலைத் தான் நெனச்சுட்டு இருக்கான்னா அவளுக்கு நாம தோள்தட்டிக் கொடுக்குறதுல தப்பில்லையே!

அந்த வீட்லயும், வீட்டாளுங்களும் எப்படி நடந்துப்பாங்கனு யோசிக்காம, நாம பண்ண வேண்டியதை செய்வோம் மாமா... எனக்காக.... ப்ளீஸ்.... கமலும் அம்முவை ரொம்பவே விரும்புறான் மாமா... காலைல ஓடுவதும், ராத்திரி மெத்தையில உருளுறதும் எல்லாமே அவ நெனப்புல தான் மாமா...

அவன் கஷ்டபடுறதைப் பாத்து நாம வருத்தப்படக் கூடாதுனு நம்மகிட்ட இருந்து மறைக்கிறான். அவன் மறைக்கிறான்றதுக்காக அவன் கவலைப்படலேனு நாமளும் பொருள் எடுத்துக்க முடியாதே! அவனுக்காக மாமா... ஒரே ஒரு டைம் அம்முவையும் அவங்க குடும்பத்தையும் பாத்து பேசிட்டு வரேன்." என்று இடையில் எங்கேனும் அவர் மறுத்து விடக் கூடாது என்பதற்காக முழுமூச்சாக பேசி முடித்தாள்.

"நீங்க பேசி அவங்க கேட்பாங்க நினைக்கிறிங்களா?"

அவர் பன்மையில் விளித்தது நேத்ராவின் மனதில் சற்றும் பதியவில்லை. "ஒரு முயற்சி செய்து தான் பார்ப்போமே மாமா"

"உங்க ரெண்டு பேரோட முயற்சியும் வீண் தான்"

இப்போது தான் அவரது கூற்றை முழுதாக மூளையில் ஏற்றினாள். "ரெண்டு பேரா!" என்று அதிசயித்து வினவினாள்.

"ம்ம்... ஆமா இப்போ தான் கமலும் வந்தான். இதே மாதிரி தான் ஏதேதோ பேசி அம்முவை அழச்சிட்டு வரேன்னு சொல்லி கிளம்பி போயிருக்கான்..." என்றார்.

நேத்ராவிற்கு அதில் அளவுகடந்த மகிழ்ச்சியே. எங்கே தன்னையும், கங்காதரனையும் காரணம் காட்டி கடைசிவரை அம்முவை பிரிந்தே இருந்துவிடுவானோ என்று அஞ்சியிருந்தாள்.

"நீங்க ஓகே சொல்லிட்டிங்களா?" என்றால் விழிகளை விரித்து.

"ம்ம்... அவங்க தாத்தன் சம்மதம் சொல்லலேனா பரவாயில்லை... பொண்ணை மட்டும் தூக்கிட்டு வந்திடு, பாத்துக்கலாம்னு சொல்லிட்டேன்..." என்று வெகு இயல்பாக உரைத்தார்.

உற்சாக மிகுதியில் அவரை அனைத்துக் கொண்டாள் அவரது செல்ல மகள் "மா... ம்... மா..." என்ற கூவளுடன்.

"இது தான் முடிவுனு தெரிஞ்சும் ஏன் அம்முவை அனுப்பி வெச்சிங்க?"

தன் மகளை தோளோடு அணைத்து அவள் தலையில் தன் தாடை பதித்து, "ஏற்கனவே ஒருத்தி அந்த வீட்டை மறந்து என் இருப்பிடம் தான் அவள் கதினு இருக்கிறா! இதுல இன்னொரு பொண்ணும் அதே வீட்ல இருந்து வந்து என் விமலாவைப் போலவே கஷ்டபடனுமானு யோசிச்சேன்..." என்றிட நேத்ராவிற்கு மெல்லியதாக கண்கள் கலங்கியது.

சரியாக விமலாவும் அறைக்குள் நுழைய, ஒரு மாதமாகவே தன்னிடம் பேசாத மனைவியை வேதனையோடு ஏறிட்டார் கங்காதரன். அவரது பார்வையை உணர்ந்த நேத்ரா கங்காதரனிடம் இருந்து பிரிந்து,

"என்கிட்ட சொன்னதை அத்தைகிட்டேயும் சொல்லுங்க... சந்தோஷப்படுவாங்க..." என்று கூறி அறையைவிட்டு வெளியேறி கதவை தாழிட்டாள்.

கதவு தாழிடும் சத்தம் கேட்டு விமலா "அடியேய் இப்போ எதுக்கு டி கதவை பூட்டினே.... திறந்து விடு டி... தலைக்கு மேல வேலை கிடக்கு... அடியேய் சிவா..." என்று கதவின் அருகே சென்று கத்தினார்.

அதுயெல்லாம் காதில் விழுவதற்கு மறுபக்கம் அவள் இருந்தால் தானே! கமல் அம்முவைத் தேடிச் சென்ற விடயத்தை மிதுனிடமும், தன்னவனிடமும் பகிர்ந்து கொள்ள பறந்துவிட்டாளே!

"ஏய் நாச்சி" என்ற கங்காதரனின் அதிகாரக் குரலில் தன் கத்தலை நிறுத்திவிட்டு கங்காதரனை திரும்பிப் பார்த்தார். (இங்கே நாச்சி என்பது வீரப் பெண்மணியையோ அல்லது அவரது பரம்பரையையோ குறிப்பது அல்ல... நாச்சி என்பதன் பொருள் மனைவி)

திருமணமான புதிதில் விமலாவை நாச்சி என்று அழைத்தவர், குழந்தைகள் வளர்ந்த பின் அந்த அழைப்பை மறந்தே போனார் என்றே சொல்லலாம். பல வருடங்களுக்குப் பின் அவரது அழைப்பில் நெகிழ வேண்டிய விமலாவை ரௌத்திரம் கொண்டார்.

"உன் மகன் உன் மருமகளை அழைச்சிட்டு வர போயிருக்கான்" என்றிட விமலா சந்தேகமாகப் பார்த்தார்.

"நம்பு டி... பிடிவாதமா என்கிட்ட பேசாம இருந்து நீ நெனச்சதை என்னை செய்ய வெச்சுடேல... இப்போ சந்தோஷமா!" என்றார் கோபமும் சலிப்புமாக... அதில் விமலா கிளுக்கென சிரித்திட கங்காதரன் அவரை முறைத்துப் பார்த்தார்.

"ஏன் இப்போ முறைக்கிறிங்க? அவன் என் மகனா இருந்திருந்தா அன்னைக்கே அவ கைய பிடிச்சு நிறுத்தி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருப்பான்... அவனுக்கு சும்மா உங்களை மாதிரி வெத்து வீராப்பு" என்று சந்தடி சாக்கில் கங்காதரனையும் கேலி செய்தார்.

காதல் இன்றி அணுவும் அசையாது இப்பூவுலகில் என்பது போல் தலைவியின் பாரா முகம் தலைவனை நிச்சயம் நிலைகுழையச் செய்யும் என்பதனைத் தான் கேலியாக கூறினார்.

அதன்பின் அவ்வில்லத்தில் மகிழ்வுக்கு பஞ்சமில்லாமல் போனது. இளம் இரண்டு தம்பிதியினரும், அவ்வீட்டு கடைக்குட்டி கமலின் திருமணம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினர். விமலாவும் கங்காதரனும் யார்யார் அழைப்பது என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர்.
**********
இதோ தன் காதலைத் தேடி, தன் வாழ்வைத் தேடி கமலின் பயணம் கன்னியாகுமரி நோக்கி நீண்டு கொண்டிருக்கிறது. முக்கடலின் சங்கமத்தில் கடலன்னை மடி தவழும் குழந்தையாய் உதிக்கக் காத்திருக்கும் செங்கதிரோன் கமலின் வருகைக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ!

அங்கே அம்மு விருப்பமே இல்லை என்ற போதும் கூட தேவ்வுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறாள். தற்போது வேலை பார்க்கும் மருத்துவமனையில் விடுப்பு கூறிவிட்டு இரண்டு வாரப் பயணம் என்ற நம்பிக்கையில் தான் செல்கிறாள். அவளை அழைத்துச் செல்லும் தேவ் மட்டுமே அறிவான் இது இரு வாரப் பயணமா அல்லது அவளது நிறந்தரப் பயணமா என்று. விதி அம்மு கமல் வாழ்வில் இன்னும் என்னெஎன்ன மாற்றங்களை நிகழ்த்தவிருக்கிறதோ!

கமல் வெகுநாட்களுக்குப் பிறகு தன் திறன்பேசியில் அம்முவின் புலனப்பக்கம் சென்று, அவளது நலம் அறிந்து கொள்ள என்ன செய்தி அனுப்பலாம் என்று யோசித்தான்.

"நலமா?" ம்ஹூம்... "ஐம் ஃபீலிங் வெரி பேட் அமுலு அண்ட் மிஸ் யூ லாட் பேபி..." நோ நோ... "ஓடி போயி கல்யாணம் பண்ணிக்கலாமா!" ச்சே இது என்ன தெரிந்த மொழிகள் கூட கை கொடுக்கமாட்டேங்கிறதே! என்று அலுப்பு தட்டியது அவனுக்கு. பல விதமாக யோசித்து யோசித்து இறுதியில் ஒற்றை புள்ளி மட்டும் வைத்து அனுப்பி வைத்தான்.

அனுப்பிய நொடியிலிருந்து அவனுள் பல பதற்றங்கள். என்ன செய்வாள்! அதில் என்ன புரிந்து கொள்வாள்! ஒற்றை புள்ளியில் என் மனம் அவளுக்கு புரியுமா! புரிந்தாலும் என்னை ஏற்பாளா! முதலில் அவளிடமிருந்து பதில் வருகிறதா என்று பார்ப்போம்... அவளது பாதுகாப்பை அறிந்துகொண்டு அதன் மன்னிப்பு கேட்பது மணந்து கொள்ள கேட்பது எல்லாம்.... என்று தன் மனதிற்கு கடிவாளமிட்டான்.

அவன் ஆவலாக எதிர்பார்த்த அவளது குறுந்தகவலும் வந்தது. அதில் இரண்டு புள்ளிகள் இருக்க அதில் இந்த காதல் பித்தனுக்கு என்ன புரிந்ததோ! அவனது முகம் மின்சாரம் இல்லாமலேயே ஒளிரச் தொடங்கியது.

"இன்னும் கொடிய நெடிய மூன்று மணி நேரங்களே உள்ளன! அதன்பின் என் இம்சையரசியை என்னில் ஏந்தி அவளது பட்டுக்கரம் என்னை வதைக்க அதனைத் தாங்கி அவளது காதலில் கரைந்திட காத்திருக்கும் உன் கண்ணனாக உன் அருகில் இருப்பேன்..." என்று அனுப்பி வைத்தான்.

அவனது செய்தி பார்த்துவிட்டதன் அடையாளமாய் நீலநிற குறி கிடைக்க, தன் மகிழுந்தை துரிதப்படுத்தினான் கமல்.
**********
தன் அருகே மருந்தின் வீரியத்தில் மயக்கத்திற்கும் உறக்கத்திற்கும் இடையிலான ஒரு மந்தகாச நிலையில் அமர்ந்து பயணித்தவளின் திறன்பேசி எப்போதோ தேவ்வின் கைகளுக்கு இடம் மாறியிருந்தது. அவளுக்கும் வெளியுலகிற்கு இருக்கும் இணைப்பைத் துண்டிக்கத்தான் திறன்பேசியை பறித்திருந்தான். ஆனால் அதில் கமலின் குறுந்தகவல் தேவ்விற்கு அதிர்ச்சியே!

'இவளை ஏதாவது செய்ய நெனச்சாலே சரியா நாய் மாதிரி மோப்பம் பிடிச்சு வந்திடுறான்.' என்று பல்லைக் கடித்து முனுமுனுத்தவன், பதில் அனுப்பவில்லை என்றால் சந்தேகத்திற்கு இடமளித்தார்போல் ஆகிவிடும் என்று வெறுமனே இரு புள்ளிகள் வைத்து அனுப்பி வைத்தான்.

அதன் பதில் செய்தியாக கமல் அம்முவைத் தேடி கன்னியாகுமரி வருகிறான் என்ற செய்தியைக் கண்டு கோபம் கொண்டு திறன்பேசியை மொத்தமாக அணைத்து பின்இருக்கையில் தூக்கி எறிந்தான்.

சீண்டல் தொடரும்.