• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நல்லிரவில் அம்முவின் இல்லம் வந்தவன் சற்றும் யோசிக்காமல் கதவைத் தட்ட, வந்து திறந்தது அகிலன் தான்.

முன்பக்கம் மட்டும் சுற்றுச் சுவர் கொண்ட அந்த பெரிய கதவின் முன் நின்றிருந்த கமல் தாழ்ப்பாள் கொண்டு சத்தம் எழுப்பிட, உள் கதவைத் திறந்து அங்கேயே நின்றபடி சுற்றும் முற்றும் பார்வையை செலுத்திக் கொண்டே வினா எழுப்பினான் அகிலன்.

"யாரது?"

அகிலனைக் கண்டவுடன் அடையாளம் தெரியவில்லை என்ற போதும் அவனது இளமையை கருத்தில் கொண்டு அம்முவின் அண்ணன் என அறிந்து கொண்ட கமல், அவனை வம்பு வளர்க்க வேண்டி

"இந்த ரூபினிஇஇஈஈஈஈ..." என்று அவனது காதலி பெயரை இழுத்தான்.

அதில் நன்கு தூக்கம் கலைந்த அகி, "நீங்க யாரு? பினிக்கு என்னாச்சு?" என்றான் பதற்றமாக.

"இல்லே... அந்த பொண்ணுக்கு ஒன்னும் இல்லே..." சிறு இடைவெளிவிட்டு "நான் அதுக்கு அண்ணன் முறை தான். ஏதோ நீ அந்த பொண்ணை விரும்புறேயாமே!" என்று சாதாரணமாக சந்தேகம் போல் பேசியவன் சற்றே குரலை மாற்றி இறுகிய முகத்துடன், "அதான் வார்ன் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்..." என்று முறைத்தபடி கூறினான்.

அகிலனுக்கு கோபம் துளிர்விட, உள் கதவைத் திறந்தபடி "ஏய்! யாருடா நீ? என்ன திமிரா?" என்று விளக்கு சொடுக்கியை உயிர்பித்து படியில் இறங்கி முன்னால் வந்து நின்றான்.

"டேய் பொடியா! நீ உன் மாமன் மகளை விரும்பலாம்... ஆனா உன் தங்கச்சி அத்தை மகனை விரும்பினா மட்டும் வீட்டுக்குள்ள அடச்சி வைப்பேயோ! இதுல நீங்களும் உங்க இனமும் தான் பெரிசுனு மார்தட்டிக்க வேண்டியது..." என்றான் அதே விறைப்போடு.

அகிலனுக்கும் அப்போது இருளில் தெரியாத முகம் இப்போது வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்திட, வந்திருப்பது யார் என்று அறிந்து கொண்டான். கண்கள் நான்கும் முட்டிக் கொண்டன. கொஞ்சம் கூட பார்வை விலகாமல், நொடி கூட இமைகளை இமைக்காமல் கண்களில் கனல் தெரிக்கும் பார்வை இருவரிடமும்......

ஆனால் அந்த முறைப்பையும் தாண்டி ஏதோ ஒன்று இருவர் கண்களிலும்.... கண்ணுக்குப் புலப்படாத புரிதலும் கூட.

கதவு தட்டியது யாரென்று பார்க்கச் சென்ற மகனைக் காணவில்லையே என்று தவிப்போடு தேடி வந்த தியாகு கமலைக் கண்டவுடன் எதுவும் பேசாமல் வெளிக் கதவை திறக்க தாழில் கை வைத்தார். அகிலனின் "அப்பா..." என்ற கத்தல் தியாகுவின் முறைப்பில் அடங்கியது.

தியாகு கமலை உள்ளே அழைத்துச் சென்று அமருமாறு பணிந்துவிட்டு தன் பதியிடம் அருந்த தண்ணீர் எடுத்து வருமாறு பணிந்தார்.

இத்தனை வருடங்களாக அந்த இல்லத்தில் பழனிவேலின் வார்த்தைக்கு மாறாக எதுவும் நடந்ததில்லை. ஆனால் இன்றோ பழனிவேல் வாயடைத்து நின்றார். தன் மகள் வழிப் பேரனை நேரில் கண்டபின் உள்ளே வராதே என்று சொல்ல பாசம் இடமளிக்கவில்லை என்றால், உள்ளே அழைத்து வந்து அரவணைத்து நலம் விசாரிக்க அவரது வீம்பு இடமளிக்கவில்லை.

கோமதிக்கு பேரனை கட்டியணைத்து 'உன் அம்மா நல்லா இருக்காளா?' என்று விசாரிக்க தாய்ப்பாசம் ஆவலைத் தூண்டினாலும் தன் இயலாமையால் கணவனின் பின்னால் தலை கவிழ்ந்து நின்றிருந்தார்.

கனகவேலும் கூட தன் முறையற்ற வார்த்தைகளால் பிரிந்து சென்ற உறவு என்ற நினைவில் வருந்தி நின்றிருந்தார். இது அவருக்கு அடிக்கடி தோன்றும்ஒரு உணர்வு தான். அன்று தான் முறை தவறிப் பேசியதால் தான் குடும்பம் இரண்டாகியது என்று பலமுறை வருத்தமுற்றிருக்கிறார். ஆனால் நேத்ராவை இன்னமும் தன் குடும்பமாக நினைக்க அவருக்கு மனம் எழவில்லை.

அதனாலேயே இன்னமும் பழனிவேலுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார். இன்று தன் தங்கை மகனைக் கண்ணாரக் கண்ட போதும் கூட பெரியவர் பேசினால் தானும் பேசலாம் என்று ஓரமாக கைகட்டி நின்றிருந்தார் தன் ஆட்டியுடன்.

தாத்தனையும்,ஆச்சியையும் கண்ட கமல் அவர்களின் மேல் நிமிட நேரங்கள் தன் பார்வையை நிறுத்தினான். ஒரு நொடியேனும் தன்னைக் காண்கின்றனரா என்று... பழனிவேலும் பேரனின் பார்வை தன் மேல் படிந்திருப்பதை உணர்ந்து சுற்றி முற்றி தான் பார்த்தாரே ஒழிய அவன் புறம் திரும்பவில்லை.

இது இப்படி என்றால் அகிலனின் பார்வை முழுக்க முழுக்க கமலின் மேல் தான் இருந்ததது. கமலின் ஒவ்வொரு செயலையும் அடிமுதல் நுனி வரை, ஆதி முதல் அந்தம் வரை, ஓரவிழிப் பார்வை முதல் கடைவிழிப் பார்வை, முழுவிழிப் பார்வை என கமலின் அனைத்து செய்கையையும் கவனித்தான். தன் தங்கைக்கு இவன் மேல் எப்படி காதல் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சிப் பார்வை.

கமல் அந்த இல்லத்தில் பார்க்க விரும்பாத ஒரே நபர் தன் அன்னையுடன் பிறந்த சொந்த தாய் மாமனைத் தான். கனகவேலைத் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் கண்களை வீடு முழுவதும் சுழலவிட்டான். அவனவள் கண்ணில் படவில்லை என்றவுடன்,

'அமுலு...எங்கே டி இருக்க? இத்தனை நாள் உன்னை ஒதுக்கி வெச்சதுக்கு தண்டிக்கிறேயா? சாரி டி... தயவு செய்து கண்ணு முன்னாடி வாடி...' என்று தன்னவளுடன் தன் மனதிற்குள்ளாகவே பேசித் தவித்தான். டெலிபதி வேலை செய்யும் என்று நினைத்தானோ! என்னவோ! வீட்டிற்குள் நுழைந்த நொடியிலிருந்து மனதிற்குள் அவளது பெயரை நூறுமுறையேனும் உச்சரித்திருப்பான்.

அதற்குள் உமா தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த கையோடு, சாப்பிட அழைத்துச் சென்றார். அகிலன் அன்னையை முறைத்தாலும் அவர்களது உபசரிப்பை இப்போது தடுக்கத் தோன்றவில்லை அவனுக்கு.

உணவுண்ண அழைத்த உமாவிடம் ஓரளவிற்கு மேல் மறுக்க முடியாமல், அவனது வயிறும் 'என்னையும் கொஞ்சம் கவனியேன்' என்று கத்தத் தொடங்கியது. தன்னவளைக் காணும் ஆவலில் இளைப்பாறக் கூட எங்கேயும் நிறுத்தாமல் நேரே தன் தேவதையின் இல்லத்தில் வந்து நிறுத்தியவனுக்கு இப்போது தான் பசி என்பதே தெரிந்தது.

உமாவின் கை பக்குவத்தில் மொறுமொறு உருளை கிழங்கு மசால் தோசை நிமிடத்தில் தயாராகிடவே, வயிறார உண்டு முடித்தான். இன்னும் தன் கண்ணில் படவில்லை என்றால் தன்னவள் இங்கே இல்லையோ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு. 'இதற்கு மேல் தாங்காது.... வெட்கம் விட்டு கேட்டிட வேண்டியது தான்...' என்று நினைத்தவன் நொடியும் தாமதிக்காமல்,

"அத்தே அமுலு எங்கே இருக்கா த்தே?" என்றான்.

உமா அதிசயித்து விழி விரித்து அவனைப் பார்த்தார். பதிலுக்காக உமாவையே பார்த்துக் கொண்டிருந்த கமலுக்கு அவரது கண்களில் தெரிந்து பிரகாசம் கூச்சத்தை ஏற்படுத்த, மெல்லிய சிரிப்போடு தலை சொரிந்து மீண்டும் "அமுலு எங்கே?" என்றான்.

வந்ததிலிருந்து சிறு பார்வை, அல்லது அவ்வபோது யாரையேனும் முறைப்பது, உணவுண்ண அழைத்த போது கூட உறவுமுறையற்ற மறுப்பு, உண்ணும் வரை பேசாமலேயே சமாளித்தது என்று ஏதோ ஒரு ஒவ்வாமையுடன் தான் அமர்ந்திருந்தான்.

திடீரென்று அத்தை என்று அழைத்திடவேத் தான் அவர் அவனை சுவாரசியமாகப் பார்த்தது. உமா அவனது கூச்சம் கண்டு மேலும் கொஞ்சம் சிரித்தபடி, "ஏதோ ரிசர்ச் பண்ண அனுப்பி வெச்சிருக்கான் அவ அண்ணன்" என்றிட,

சில நிமிட நேரமேயானாலும் கமலின் மனதில் படர்ந்திருந்த இதம் மறைந்து பதைபதைப்பு ஏற்பட்டது. அவனது முக பதற்றத்தில் என்னவென்று விசாரித்த உமாவின் முகமும் மாறிவிட, சற்று தள்ளி நின்று இவர்களை கவனித்துக் கொண்டிருந்த அகிலன் அன்னையின் விழி நீரைக் கண்டு அருகே வந்தான்.

தன் அருகே வந்த மகனின் சட்டையை கொத்தாக பிடித்து "இப்போ நிம்மதியாடா உனக்கு? என்ன பாவம் டா பண்ணினா அவ? இந்த வீட்ல பிறந்தது தான் அவ செஞ்ச பாவம். ஆம்பளைங்க நீங்க எடுத்தது தான் இறுதி முடிவா இருக்கணும்னு பேசவே விருப்பம் இல்லாம, அந்த தேவ் முன்னாடி ஏனோதானோனு உக்காந்திருந்தவளை உசுப்பி விட்டு, அந்த கொலைகாரன் கூட அனுப்பி வெச்சுட்டியே டா!" என்று ஆதங்கமாக கத்தத் தொடங்கினார்.

அகிலன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என்னவென்று சொல்ல முடியாத உணர்வோடு, கமலை நோக்கினான். கமலோ தலை கவிழ்ந்து, விழிகள் மட்டும் சற்றே இடவலமாக அசைந்திட, சுருங்கிய நெற்றி அவன் ஏதோ யோசனையில் மூழ்கியுள்ளான் என்றுரைத்தது.

தங்கைக்கு என்ன ஆனதோ என்ற படபடப்பு அகிலனை கமலிடம் பேச வைத்தது. "அம்முக்கு என்னாச்சு?"

உமா தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார். "என் பொண்ணை என்ன செய்தானோ தெரியலேயே!" என்ற அவரது அழுகுரல் அனைவரையும் அவர் முன் நிறுத்தியது.

"என் பொண்ணோட இந்த நிலைக்கு நீங்க எல்லாரும் தான் காரணம்..." என்று தியாகுவையும் சேர்த்து தான் கூறினார். கமலிடம் செல்லும் நோக்கத்தோடு வேலைக்கு கேட்ட போது ஏதேதோ பேசி அவளை மனதை மாற்றிவிட்டதாக நினைத்து உண்மையை உணராது உணர்ச்சி வயமடைந்து உரைத்தார்.

உமாவின் இறுதி வார்த்தை கமலையும் தான் சுட்டது. கொடுத்த வாக்குப்படி அவளை பிரியாமல் இருந்திருந்தால் நிச்சயம் தேவ் இருவருக்கும் நடுவில் வந்திருக்கமாட்டான் என்று காலதாமதமாகவே தான் புரிந்தது அவனுக்கு.

தன் சிந்தனையில் ஊறி உழன்று கொண்டிருந்த கமலை நிகழ்விற்குக் கொண்டு வந்தது நேத்ராவின் அலைபேசி அழைப்பு. கமலின் பயணம் பற்றியும் அம்முவைப் பார்த்து பேசிவிட்டானா என்று விசாரிக்கவும் நேரத்தையும் பொருட்படுத்தாது, விழித்திருந்து கமலுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

ஆனால் கமலின் பின்னால் கேட்ட உமாவின் அழுகுரல் இங்கு நிலைமை சரியில்லை என்று உணர்த்திட, நேத்ராவும் பதற்றம் கொண்டாள்.

"கமல் என்னாச்சு? யார் அழறாங்க? ஆர் யூ ஆல்ரைட்?"

"ம்ம்.... ஹாங்.... எனக்கு.... நான்.... ஃபைன் சிவா.... ஆனா அமுலு" என்ற நொடியே கண்களில் கண்ணீர் வடிந்தது கமலுக்கு.

மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தவளோ அவனது இடையிலேயே நின்று போன வார்த்தைகளை வேறு விதமாக பொருள் புரிந்து கொண்டாள். "அம்முவுக்கு என்ன? எதுவும் செய்துகிட்டாளா?" என்று பதறினாள்.

"அம்மு இப்போ தேவ் கூட இருக்கா சிவா" என்றபொழுதே கமலின் மூளை அவளது நிலையை நினைத்து மீண்டும் குரல் நடுங்கி தரையில் சரிந்து அமர்ந்து சிறுவனைப் போல் வாய்விட்டு அழத் தொடங்கினான்.

"சிவா..... அவ குழந்தை சிவா... அவ பக்கத்துல ஓங்கி தட்டினாலே பயந்திடுவா... அவ உடம்புல போயி கத்தி வைக்கப் போறானுங்க... என்னால தாங்க முடியலே சிவா..." என்று மீண்டும் அழத் தொடங்கினான்.

"கமல் என்னாச்சு டா? தேவ் யாரு? நீ மொதோ அழாம நிதானமா என்னு சொல்லு?"

அவளது கேள்விக்கு அவனால் பதில் சொல்லக் கூட முடியவில்லை. தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அழுகையை அடக்கினான், ஆனால் மீண்டும் கண்ணீர் சுரக்கத் தொடங்கிடவே, "முடியலே சிவா... என் அமுலுவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, அவனை கொல்லாம விடமாட்டேன்." என்று அழுகையினூடே கத்தினான்.

கமல் உணர்ச்சி வயமடைந்து உளறுவதை உணர்ந்த அகிலன் அவனது திறன்பேசியை பரித்து, "ஹலோ" என்றான்.

அந்த கட்டைக் குரலுக்கு சொந்தக்காரன் யாராக இருக்கும் என்று உணர்ந்த நேத்ரா, சிறு வயது அகிலனின் முகத்தை மனதில் பதித்து "அகி..." என்றாள்.

அகிலனுக்கு பெரிதாக ஒரு உணர்வும் தோன்றவில்லை என்றபோதும், தன் தங்கையை மீட்க தேவ்-ஐப் பற்றி கூறத் தொடங்கினான்.

"நான் சொல்ற தகவல் சரிதானானு உங்களால அங்கே செக் பண்ண முடியுமானு பாருங்க... பேரு ஜகன் தேவ். தன்னோடு ரிசர்ச்காக @@@@@ யூனிவர்சிட்டி ல பி.ஹச்.டி முடிச்சிருக்கான். சென்னைல @@@@@ ஹாஸ்பிடலைத் தான் ரிசர்ச் சென்டரா யூஸ் பண்றான். லாஸ்ட் 2 ஆர் 3 வீக்ஸ் அம்மு கூட ட்ரைனியா ஜாயின் பண்ணிருக்கான். அவன் ட்ரைனியா ஜாயின் பண்ணதே அம்முவுக்காகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன். சோ அந்த ஹாஸ்பிடல்-ல கண்டிப்பா அவனைப் பத்தின சரித்திரம் முழுசும் தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். அவனை பிடிக்க முடியுமானு பாருங்க"

அகிலன் கூற்றை கேட்டப் பின் தான் கமலுக்குமே அந்த யோசனை வந்தது. நேற்று தனக்கு எச்சரித்த நபரோடு சேர்த்து இன்னும் ஒருவரும் அதே மருத்துவமனையில் தானே இருக்கிறார் என்று. உடனே தன் திறன்பேசியை பிடுங்கி அந்த நபரின் எண்ணையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்தான். மூன்றாம் முயற்சியில் தான் அந்த நபர் கமலின் அழைப்பிற்கு செவிமடுத்திருந்தார்.

அதே நேரம் அங்கே நேத்ராவின் தவிப்பைக் கண்ட ராம், என்னவென்று விசாரித்து, வீட்டில் அனைவருக்கும் விடயத்தைக் கூறி, மிதுன் மற்றும் பவன் இருவரையும் மதுரையில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு மீதி நால்வரும் கன்னியாக்குமரி பயணிப்பதாகக் கூறினான்.

முதலில் தடுத்தது கங்காதரன் தான். "வேண்டாம் மாப்ளே... நானும் விமலாவும் மட்டும் அங்கே போறோம். நீங்க இங்கேயே இருங்க"

"ஏன்?" ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் கேட்ட தோரணையில் கங்காதரனால் இயல்பாக பதில் சொல்ல முடியவில்லை. சற்று தயங்கியபடி, நேத்ராவை பார்த்து, "சிவாவை அவங்க..." என்று அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்த,

"அது அவ பிரச்சனை... அவளால அதை தனியா ஃபேஸ் பண்ண முடியலேனா அவளுக்கு துணையா நான் இருப்பேன். எங்க ரெண்டு பேராலையும் சமாளிக்க முடியாத போது எங்களுக்கு பின்னாடி எங்க குடும்பமா நீங்க நிள்ளுங்க... அதைவிட்டுட்டு துச்சமா பார்க்கிறவங்க பார்வையில இருந்து மறஞ்சு நிக்கிறதுக்கு பேர் ஓடா ஒழியிறது. என் மனைவி என்னைக்கும் அப்படி இருக்கக் கூடாது... பார்க்கிறவங்க பார்வை தாழ்கிற வரைக்கும் அவ உயர்ந்து நிற்கனும்... அந்நார்ந்து பார்க்குறவங்க தன்னால அவமானத்துல தலை குனிவாங்க..." என்று மெல்லிய குரலில் அழுத்தமாக உரைத்திட, கங்காதரனுக்கும் புதுத் தெம்பு வந்தது.

நேத்ராவை அலாதிப் பார்வை பார்த்து பூரித்து, "போலாம்" என்றார் கங்காதரன்.

இந்த இக்கட்டில் குழந்தைகளை தங்களுடன் அலைக்கழிப்பது பாதுகாப்பல்ல என்று உணர்ந்து அபிக்கு அழைத்து குழந்தைகளை வாரணாசி அழைத்துச் செல்லுமாறு கூறினான்.

மறுபக்கம் பவன் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனை டீன் Dr.சங்கருக்கு அழைப்பு விடுத்த படி அவரது இல்லம் நோக்கிச் சென்றான். அவரும் சற்றும் தயங்காமல் பவனுக்கு தன்னால் முடிந்தவரை உதவுவதாகக் கூறி, அவனது கேள்விகளுக்கு விடையளித்தார். அகிலன் கூறியற்றில் ஒன்றைத் தவிர அனைத்தும் உண்மையே.... தேவ்-விற்கு சென்னையில் ரிசர்ச் சென்டர் இருக்கிறது என்று கூறியது மட்டும் பொய் என்றிட, அடுத்த பீதி எழுந்தது அனைவருக்கும்.

சென்னையில் ரிசர்ச் சென்டர் இல்லை என்றால் அம்முவை எங்கே அழைத்துச் சென்றான்? அம்முவின் நிலை தான் என்ன?

சீண்டல் தொடரும்.

கமல் யாரை அழைத்து பேசியிருப்பான்? அவர் மூலமாகவாவது கமலுக்கு உதவி கிடைக்குமா?
 
Top