• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தங்கள் இருவரையும் கண்டு விரைந்து ஓடும் அந்த மர்ம நபரை பின் தொடர்ந்தனர் கமலும் அகிலனும். அந்த மர்ம நபரைப் போலவே ஒரு தொப்பியை அணிந்து அவ்வுருவத்தை விரட்டினர். அம்மர்ம உருவம் ஒரு இயந்திர படகில் ஏறிக் கொள்ள, இவர்கள் இருவரும் அதன் அருகில் நின்றிருந்த துடுப்புப் படகில் ஏறினர்.

இயந்திர படகு விரைந்து சென்றுவிட, துடுப்புப் படகின் கைதேர்ந்த படகோட்டி முடிந்த மட்டும் விரைந்து அந்த படகை பின் தொடர்ந்தார். கடலின் நடுவே இருந்த தீவைக் கண்டும், அத்தீவு முழுமைக்குமே அரண்மனை போல் இருந்த அந்த நவீன மாளிகையைக் கண்டும் இருவரும் வாய்பிளக்க, படகோட்டி இருவரையும் கண்டு நக்கலாக சிரித்தார்.

அவரது சிரிப்பைக் கண்ட கமலுக்கோ தானாக வலையில் வந்து விழுந்த உணர்வு. தன்னைப் பற்றி அறிந்த நபர் தன் வருகையை எதிர்பார்த்து, தனக்காக பறித்து வைத்திருந்த களிறுக் குழியில் தானாக வந்து விழுந்து விட்டோம் என்பதை இப்போது தான் அறிந்து கொண்டான் கமல்.

நிச்சயம் இங்கிருந்து கடலுக்குள் நீந்தி தப்பித்துச் செல்வது என்பது முடியாத காரியம் என்று உணர்ந்தவன், இங்கே தான் அம்மு இருக்கிறாள் என்பதையும் உறுதியாகக் கருதினான். இனி இங்கிருந்து வெளியேறுவது என்றால் அது தன் அமுலுவுடனாகத் தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் இக்கடலிலேயே உயிர் துறக்க வேண்டும் என்று முடிவேடுத்து, அணிந்திருந்த தொப்பியை கழற்றி, தன்னை அடையாளம் காட்டும் விதமாக மாளிகையின் புறம் முழுமையாக திரும்பி நின்றான்.

கமல் எதிர்பார்த்தது போலவே தேவ் தான் இருவரையும் வரவேற்றான். தேவ்-ஐக் காணக் காண கமல் மற்றும் அகிலன் இருவரின் ரத்தமும் கொதிக்கத் தொடங்கியது. உணர்ச்சி வயமடைந்த அகிலன் தேவ்வின் சட்டையைப் பிடிக்கச் செல்ல கமல் அவனை தடுத்து நிறுத்தினான்.

அதனைக் கண்டு வெற்றிச் சிரிப்பு சிரித்த தேவ், "பரவாயில்லேயே கமல்... இன்னமும் தெளிவா தான் இருக்கே... இந்நேரத்துக்கு பைத்தியம் பிடிச்சிருக்கும் நெனச்சேன். அப்படி ஆகியிருந்தா எனக்கும் இன்னொரு பேஷன்ட் கெடச்சிருக்கும்..." உதடு பிதுக்கி "ஏமாத்திட்டேயே!" என்றுரைத்து நக்கலாக சிரித்தான்.

மேலும் "நீங்க ரெண்டு பேரும் என்னை பாத்ததும் கண்டிப்பா அடிக்க வருவிங்கனு தெரியும்... அப்படி தாக்க வந்தா உங்களை அட்டாக் பண்றதுக்கு விஷ ஊசி கையில ரெடியா வெச்சிருந்தேன்... யூ க்ளவர் பாய்... உன் மச்சினனை காப்பாத்திட்ட..." என்று உரைத்து அகியை துச்சமாகப் பார்த்து வைத்தான் தேவ்.

இருவரும் பதில் கூறாமல் அவனை வெறித்தபடியே நிற்க, "என்ன மாமியார் வீட்டு கவனிப்பு நல்லா, வசதியா இருந்துச்சா?" என்று மீண்டும் அதே நக்கல்.

"அட உன் தமிழ்நாட்டு மாமனாரைக் கேக்கலப்பா... சேரளத்து மாமனார் எப்படி கவனிச்சார்? அத்தோட ரெண்டு பேரும் ஊருக்கு ஓடிருவிங்கனு பாத்தேன்... பரவாயில்லேயே அதுக்கப்பறமும் ஒரு வாரம் தாக்குபிடிச்சு வந்துட்டிங்களே!!! வந்து என்ன பண்ண? நோ யூஸ்... எல்லாம் கை மீறி போயிடுச்சே!!!"

அதற்கு மேல் அவனது பேச்சை கேட்க விரும்பாத கமல் நேரடியாக "என் அமுலு எங்கே?" என்றான்.

"ஹாங்... உன் அமுலு வா!!! ஆஆஆஆஹாங்... இனி அப்படி உரிமையா சொல்ல முடியாது டா கண்ணா... ஓஓஓ சாரி... சாரி... கண்ணானு உன் அமுலு தானே அழைப்பா... ஆனா பாரேன் இனி அவ அப்படி அழைக்கமாட்டா.... அதுவும் உன்னை...." என்றவன் அழகிய வெற்றிச் சிரிப்பு சிரித்தான்.

"அம்மு எங்கே டா?" என்று இம்முறை அகிலன் எகிற...

"ஹேய்.... ச்சில்... மே பி... அவளுக்கு உன்னை வேணுனா நியாபகம் இருக்கும்... எதுக்கும் இன்னும் ஃபோர் ஆர் ஃபைவ் டேஸ் இருந்து பார்த்துட்டு போயிடுங்களேன்!!!" என்றிட நால்வர் வந்து அகிலன், கமல் இருவரையும் இழுத்துச் சென்றனர்.

இருவரிடமும் இருந்த அனைத்து பொருள்களும் பறிக்கப்பட்டு, தனியறையில் அடைக்கப்பட்டனர். அவ்வறையில் ஒரே ஒரு தொலைக்காட்சி பெட்டி மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. இவர்கள் உள்ளே சென்ற சற்று நேரத்திலேயே அதுவும் உயிர் பெற்றது.

மற்ற விளக்குகள் அணைக்கப்பட, திரைகள் மூடப்பட்டிருந்த அந்த இருட்டு அறையில் தொலைக்காட்சித் திரை தெளிவாகவே ஒளிர்ந்தது. ஒரு பெரிய வராண்டா முதலில் ஒளிபரப்பாகியதுமே கமலுக்குப் புரிந்துவிட்டது, இப்போது இதில் வரப்போவது தன்னவளே! ஆனால் தன்னவளாக இருப்பாளா! என்ற கேள்வி தோன்றிட உள்ளுக்குள் ஐயம் உருவாகியது.

அவன் எதிர்பார்த்தது போலவே ஒரு அறையின் வாசல், மூடிய கதவுகள் என அடுத்த இடம் ஒளிபரப்பாகியது. கமலுக்கோ அவ்வறையின் வாசலில் தானே நேரில் நிற்பது போல் ஒரு பிரம்மை... மன அழுத்தம் அதிகரிக்க, தன் அமுலு உயிரோடு இருந்தாலே போதும் என்று வேண்டிக் கொள்ளும் அளவிற்கு அவனது மனம் மாற்றம் அடைந்திருந்தது.

கதவுகள் திறக்கப்பட, அம்மாளிகையின் வெளித் தோற்றத்திற்கு கிஞ்சித்தும் ஒத்துப்போகாத முற்றிலும் மாறுபட்ட மருத்துவமனை அமைப்புடன் இருந்தது அந்த அறை.

எது நடக்கக் கூடாது என்று நினைத்திருந்தானோ, எது நடந்திருக்கும் என்று அஞ்சி வர மறுத்தானோ அது நிகழ்ந்திருந்தது. ஆம் அம்முவிற்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. அவளது தலையில் வட்டவடிவில் பல வயர்கள் ஒட்டப்பட்டிருந்தது. தலை முழுதும் பெரிய கட்டுகள். செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு, உயிர் காற்றை அளவிடும் கருவி விரல் நுனியில் எப்போது நிலைத்திருந்தது.

முழு நீல நிற அங்கியுடன் படுக்கையில் கிடப்பவளைக் கண்ட அகிலனுமே வாய்விட்டுக் கதறினான். அவளை எழுப்புவதாக நினைத்தானோ என்னவோ! அவளது நாமத்தை மீண்டும் மீண்டும் உறக்க உச்சரித்தான் அவன்.

கமலின் மனம் தடதடக்க இதயம் அவன் உடல் முழுதும் இடம் மாறித் துடிப்பது போல் ஓர் உணர்வுடன், மூளை முதற்கொண்டு, கால் விரல் நுனி வரை உடலின் அனைத்து செல்களும் துடிக்கத் தொடங்கியது. அவ்விடமே அப்படி ஒரு நிசப்தம். தன்னைத் சுமந்திருந்த அவளது நெஞ்சுக்குழி ஏறி இறங்கிட அவள் உயிரோடு இருக்கிறாள் என்று அறிந்து கொண்டான் அவன்.

தரையில் கால் மடித்து அமர்ந்தவன், கண்ணீர் வடித்த கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க, திரையில் தேவ் தெரிந்தான்.

"என்ன? அவ உயிரோட இருக்கான்னு நிம்மதியா இருக்கா? எனக்கும் தான்..." என்றவனது முகம் கமலையும் விட பல மடங்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் பிரதிபலித்தது. பின்னே!!! அவளது உயிரில் தானே அவனது வெற்றி இருக்கிறது!!!

"நீ அவளை இவ்ளோ தூரம் தேடி வரும்போதே உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும் நெனைக்கிறேன்... ப்ரைன் டிரான்ஸ்ப்ளன்ட்.... இந்தியாவிலேயே!... ம்ஹூம்... வேர்ல்ட்-லயே ஃபர்ஸ்ட் ப்ரைன் ட்ரான்ஸ்ப்ளன்ட் சக்ஸஸ் ஆகி இருக்கும்... அதுவும் என்னால... எவ்ளோ பெரிய சக்ஸஸ்... அதை கொண்டாட எங்க பேமிலியும், ப்ரெண்ட்ஸ்ம் வேண்டாமா!

இன்னும் த்ரீ டேஸ்ல அம்மு கண்ணு முழிச்சிடுவா... அப்பறம் அவளது ஹெல்த் சம்மந்தமா சில டெஸ்ட், அதுக்கப்பறம் அவளோட மெமரிஸ் ரெக்கவர் பண்ண சில டெஸ்ட், அடுத்து அவ வேற எந்த ஹெல்த் இஷ்ஷூஸ் இல்லாம எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறானு பாக்கணும்... அது மட்டும் முடிஞ்சுட்டா இந்த ஆப்ரேஷன் சக்ஸஸ் தான்.

அப்பறம் நான் ப்ரைன் டிரான்ஸ்ப்ளன்ட் ஆப்ரேஷன்ல வேர்ல்ட் ஃபேமஸ் டாக்டர் ஆகிடுவேன்... என் சக்சஸ் எனக்கு எக்ஸாம்பில்லா, என்னை கௌரவிக்கிர விதமா என் கூடவே வரும்... ஹாங்... சொல்ல மறந்துட்டனே... இனிமே இவ உன் அமுலு இல்லை, என் ஹனி....." என்று தன் பின்னால் இருந்த அம்முவை சுட்டிக்காட்டி கூறினான்.

அவனது வார்த்தைகளில் துளியும் காதல் இல்லை. தனது வெற்றியை தன்னோடேயே தக்க வைத்துக் கொள்ளும் பரவசம் மட்டுமே இருந்தது. ஆனால் அவனது கூற்று புரியாமல் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த கமல் மற்றும் அகிலன் இருவரையும் பார்த்து,

"புரியலே! ஆப்ரேஷன்-ல உன்னைப் பத்தின நினைவுகளை அழிக்க சொல்லிட்டேன்..... நீ தலைகீழா நின்னு தண்ணிக் குடிச்சாலும், தண்ணீர் குடத்தை தலையில வெச்சிட்டு குட்டிக்கரணம் அடிச்சாலும் அவளுக்கு உன்னை நியாபகம் இருக்காது... உன் ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரையும் அவளோட மெமரிஸ்ல இருந்து எரேஸ் பண்ண சொல்லிட்டேன்.

இனி அவளுக்கு நியாபகம் இருக்கப் போறது எல்லாம், அவளோட ஃபேமிலி, ஸ்டடீஸ், அப்பறம் அவ என்னை பார்த்த அந்த ஃப்ஸ்ட் மொமென்ட்.... இதுல எதையாவது மாத்தனும்னு அவங்க ஃபேமிலி நெனச்சா, அப்பறம் அவளோட ப்ரைன் பஸ்ட் ஆகுறது கன்ஃபார்ம்... அழிக்கப்பட்ட ஒரு விஷயத்தை யோசிச்சு யோசிச்சே அவளே செத்தாலும் செத்திடுவா..."

இது அகிலனுக்கு தேவ் கொடுத்த எச்சரிக்கை குரலே!!!... அது அங்கிருந்த இருவருக்கும் புரியத் தான் செய்தது. தேவ் உரைத்ததைக் கேட்ட கமல் முன்னைவிட மோசமாக பித்துப் பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.

அகிலனுக்கும் அதே நிலை தான். தன் தாத்தனும், சிற்றப்பனும் எதிர்பார்த்தது போல் அம்முவின் வாழ்வில் இனி கமல கண்ணன் என்ற ஒரு அத்தியாயம் இருக்கப் போவதில்லை. அவர்களின் ஆசைப்படி, அவர்கள் கௌரவத்திற்கு இழுக்காக நினைக்கும் நேத்ராவுடன் அவர்களுக்கு எந்த வித ஒட்டுறவும் இருக்கப் போவதில்லை.

சொல்லப் போனால் அவனது குடும்பத்திற்கு இது நல்லதொரு அறிகுறி தான். கண்ணீர் இன்றி, கவலை இன்றி, தங்கையின் மன வேதனையைக் காண வேண்டிய அவசியம் இன்றி எளிதாக அவள் காதலை அவள் மனதிலிருந்து அகற்றிவிட்டான் தேவ். அதற்கு அவன் சந்தோஷப்படத் தான் வேண்டும். ஆனால் அவன் மனம் அதற்கு மாறாக கவலையைத் சுமந்திருந்தது.

அது ஏன் என்று அதனைப் பற்றி யோசித்து யோசித்து, கமலை கவனிக்கத் தவறினான் அகிலன். மேலும் இதனால் அவனுக்கு ஏற்பட்ட நன்மைகளை மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான்.

தேவ் கூறியது போல் மூன்று நாள் கடந்திருக்க, அன்று அம்மு கண் விழிக்க வேண்டிய நாள். ஆனால் அதற்கு முன்னதாகவே அவளது குடும்பம் அவ்விடம் வரவழைக்கப்பட்டிருந்தனர். வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்து வரக் கூறியிருந்தான் தேவ்.

எனவே அங்கே இருந்த கமலின் குடும்பமும் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூடுதலாக அகிலனை பல வாரங்களாக பார்க்க முடியாததால் அவனைத் தேடி அவன் இல்லம் வந்திருந்த ரூபினியும் அழைத்து வரப்பட்டிருந்தாள்.

அம்முவின் குடும்ப நபர்கள் அனைவரும் மற்றொரு அறையில் அடைக்கப்பட்டு அங்கும் பெரிய சுவர் திரை அமைக்கப்பட்டிருந்தது. யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற ஒன்றே அங்கே அனைவரையும் ஒன்று சேர்த்திருந்தது. ராம் நேத்ரா உட்பட அனைவர் மனதிலும் தோன்றிய ஒரு விஷயம் இப்படி ஒரு துன்பத்திற்கு பிறகுதானா இந்த குடும்பம் இணைந்திருக்க வேண்டும்!!! என்பது தான்.

அம்மு கண் விழித்திட, தேவ் அவன் தந்தை Dr.JD மற்றும் இந்த சிகிச்சைக்கு முழு ஆதரவு அளித்த Dr.போஸ் மூவரும் அவளை சூழ்ந்து நின்றிருந்தனர் முக கவசத்துடன் நின்றிருந்த, Dr.போஸ்-ஐ மீண்டும் மீண்டும் பார்த்து மிரண்டவள் மனது தன்னால் அடைக்கலம் தேடியது தேவ்விடம் தான்.

தன்னைத் தேடும் அம்முவின் இந்த செயல் தேவ்விற்கு முதல் நம்பிக்கையைக் கொடுத்தது. பரிசோதனைகள் முடிய, அம்மு தேவ்விடம் தன் கேள்விகளை அடுக்கினாள்.

"என்னாச்சு எனக்கு? எதுவும் ஆக்ஸிடன்ட் ஆ? ஆனா எனக்கு எதுவும் நியாபகம் இல்லையே!"

"டோன்ட் வொரி பேபி... பாஸ்ட் இஸ் பாஸ்ட்... நௌ யூ ஆர் ஆல்ரைட்... ஜஸ்ட் ட்ரஸ்ட் மீ" என்றவன் அவளது கன்னம் தட்டி ஆறுதல் கூறினான்.

தேவ் அங்கிருந்து நகர்ந்திட, அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து தன் கன்னம் தடவி சிரித்தவள் மனதில் ஏதோ ஒரு குறுகுறுப்பு.... அவளது முகத்தில் என்றும் இல்லாத ஒரு பிரகாசம் தெரிந்தது.

அனைத்தையும் திரையில் கண்ட கமல் மற்றும் அம்முவின் குடும்ப நபர்கள் விட்டால் தேவ்-ஐ அடித்துக் கொல்லும் கொலை வெறியில் இருந்தனர். அம்முவின் அன்னை உமா சர்ஜரியில் நடந்த உண்மை தெரியாமல், தன் மகளையும் சேர்த்து வசைபாடத் தொடங்கினார்.

"இவளுக்கு என்ன கேடு கெட்டுத் தொலஞ்சது... அந்த நாய் தான் தொடுறான்னா இவளும் இழிச்சிட்டு உக்காந்திருக்கா..." என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மகளின் நிலை நினைத்து கலங்கினார்.

"என் பொண்ணை என்ன செய்து தொலைச்சான்னு தெரியலையே! தலையில் இவ்ளோ பெரிய கட்டு போட்டு படுக்க வெச்சிருக்கானே! கட்டையில போறவன்... பிள்ளைய பொத்தி பொத்தி வளத்தது இந்த பொறம்போக்கு கையில கொடுக்கத் தானா!" என்று புலம்பிட, நேத்ரா தான் அவர் அருகில் வந்து

"ஆன்ட்டி... அம்மு-க்கு உடம்பு சரியில்லை... அவளோட ப்ரைன்ல ஏதோ ஆப்.... ஆப்ரேஷன் பண்ணியிருக்கான்... அவ நம்மலை மறந்து....." என்றாள் ஒரு மூச்செடுத்து "மறந்திரும்பா... அவளோடு மெமரிஸ் ரெக்கவர் பண்ண இன்னும் கொஞ்சம் ட்ரீட்மென்ட் எடுப்பாங்க... எல்லாம் நியாபகம் வந்த பின்னாடி அவ நார்மல் ஆகிடுவா" என்று சிகிச்சை பற்றி அறிந்தவள் தேவையானவற்றை மட்டும் உரைத்து நம்பிக்கை கூறினாள்.

நேத்ராவின் வார்த்தைகள் அவளை நன்கு அறிந்திருந்த கங்காதரன் மற்றும் விமலாவிற்கு சந்தேகத்தைக் தூண்டியது என்னவோ நூறு சதம் உண்மை தான். இருந்தும் இந்த சூழ்நிலையில் அவளையும் கேள்வி கேட்டு குடைந்திட அவர்கள் விரும்பவில்லை.

இங்கே மற்றொரு அறையில் அடைக்கப்பட்டிருந்த கமல் திரை ஒளிரத் தொடங்கியதிலிருந்து அம்முவை மட்டுமே தான் பார்த்தான். அகிலன் தான் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில், அம்முவின் பரிசோதனைகள் ஒருபுறம் சிறப்பாகவே நடந்தது என்றால், தேவ் அம்முவின் நெருக்கமும் சற்று இயல்புக்கு அதிகமாகவே இருந்தது.

அம்மு தேவ்-ஐ முழுமையாக நம்பி தன் உணர்வுகளை அவனிடம் கொட்டத் தொடங்கினாள். திடீரென ஏற்படும் வலி, ஏதேனும் நினைவு வந்தால் அவனிடம் முதலில் உரைப்பது என அவளது உணர்வுகளின் முதல் வெளிப்பாடு என்றும் தேவ்வாகத் தான் இருந்தான்.

தன் குடும்பம் மற்றும் அன்னை, தந்தை நினைவு வந்த போதும் கூட அதனை அவனிடமே தான் வினவினாள். அவனும் கூடிய விரைவில் அவர்களைக் காணலாம் என்று வாக்களித்தான்.

அதே போல் பல நேரங்களில் அவளது கண்கள் அவனது வருகைக்காக வாசலை நோக்கியே இருந்ததும் உண்டு. அவனைக் கண்டவுடன் அவளது இதழ்கள் தானாக, "உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தேன்..." என்று சர்வ சாதாரணமாக உரைத்தது.

அவனும் எதுவும் அறியாதவன் போல் கண்களில் அதிர்ச்சியும், ஆசையும் ஒருசேர பிரதிபலித்து அதனை வரவேற்றான். "குட்... இன்னைக்கு என்ன இன்ட்ரஸ்டிங் நியூஸ்? யார் நியாபகம் வந்தாங்க?"

"அதெல்லாம் இல்லை... பட் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்... சோ யாரும் நியாபகம் வரலேனாலும் பரவாயில்லை... உங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கட்டுமா?"

ஏன்? எதற்கு? என்று தெரியாமலேயே அவனது இதழ்கள் சிரிப்பில் விரிந்தது, அவனது மனதைப் போல... "ம்ம்ம்.... நான் இன்னைக்கு ஃபிரி தான். அதுவும் நீ பேசுறதை கேட்கனும்னா நாள் முழுக்க இங்கேயே இருக்கேன்"

அவனது பதிலில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் எழுந்து படுக்கையில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள். "நான் க்யூர் ஆகிட்டேனா?"

"ம்ம்ம்... 80% க்யூர்டு... இன்னும் 20% இருக்கே! அது நீ உன் ஃபேமிலிய பாத்ததும் எப்படி ரியாக்ட் பண்றன்றதைப் பொருத்து தான் சொல்ல முடியும்..."

முகம் சுருங்கி "என் ஃபேமிலி இப்படி என்னை பார்த்தா வருத்தப்படுவாங்க... உடம்பு மெலிஞ்சு, ஒல்லியா, மொட்டைத் தலையோட..." என்றால் ஆழ்ந்த குரலில் வருத்தமாக,

"இது தான் உன் கவலையா? அதை அப்போதைக்கு சரி பண்ணிக்கலாம்... ஃபீல் ஃபிரீ... ஆல்வேஸ் ட்ரஸ்ட் மீ..." என்று அவள் கையை தன் கைக்குள் வைத்து ஆறுதல் கூறினான்.

அவனது கைகள் தீண்டவும் அதனை வெறித்தபடி பேச்சற்று அமர்ந்திருந்தவளைக் கண்டு, காந்தச் சிரிப்பை உதிர்த்து அவளது கைகளுக்கு மெல்லிய அழுத்தம் கொடுத்தான். அதில் அவள் தன் கைகளை விடுவித்துக் கொள்ள நினைத்து இழுக்க, மீண்டும் அழுத்தம் கொடுத்து இறுகப் பிடித்துக் கொண்டான்.

அவனது பிடியில் அவன் முகத்தை ஏறிட்டவளிடம், "உன்னோட ஹாப்பினஸ்-க்கு ரீஸன் காதல் தானா?" என்றான் காந்தக் குரலில்.

கன்னங்கள் சூடேற, காது மடல் சிவந்து அவன் கண்களைக் காணத் தயங்கி, மெத்தை விரிப்பைப் பார்த்தபடி, கால் விரல்களை படுக்கையில் அழுத்தி, "காதல் பத்தி என்ன நினைக்கிறிங்க?" என்றாள்.

அவளது முகச் சிவப்புடன் கூடிய இந்த அடாதடியான நேரடி கேள்வி தேவ்-ஐத் திக்குமுக்காடச் செய்தது. இதைத் தானே அவளிடம் எதிர்பார்த்தான்... அவனது எதிர்பார்ப்பு இவ்வளவு சீக்கிரம் நிவர்த்தியாகும் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திடவில்லையே!!!

சீண்டல் தொடரும்.
 
Top