• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கமலின் இதழ் அணைப்பில் அம்மு மயங்கி சரிந்திட, தேவ் மற்றும் போஸ் இருவருக்குமே அப்படி ஒரு அதிர்ச்சி!!!கமலுக்குமே தான்.

"ஹேய் அமுலு!.... ஹேய்.... சாரி டி... அமுலு.... என்னை பாரு டா... அமுலு... உன்னை இனிமே டிஸ்டர்ப் பண்ணமாட்டேன் டி... இப்படி ஹெர்ட் பண்ணவும் மாட்டேன் டா... எழுந்திரி டா..." என்று அவளை தன் நெஞ்சோடு தாங்கி கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தான். காதல் பித்தும், காதலியின் நிலையும் அவனை பிதற்ற வைத்திருந்தது.

திரையில் அம்மு மயக்கமடைவதைக் கண்ட தேவ் உச்சக்கட்ட கோபத்தோடு அம்முவின் அறை நோக்கிச் சென்றான், "இடியட்.... என்ன காரியம் செய்து வெச்சிருக்கான்... என் சக்ஸஸை கெடுக்குறதுக்குனே வந்திருக்கான்... ஃபூல்..." என்று திட்டியபடி அறைக்கதவைத் திறந்தான்.

அதற்குள் இங்கே போஸ்-ம் அகிலனுக்கு சில கட்டளைகளை பிறப்பித்து தேவ்வைப் பின் தொடர்ந்தார்.

அம்முவின் அறைக்குள் நுழைந்த தேவ் கமலைத் தள்ளிவிட்டு, அம்முவை தன் கைகளில் ஏந்தி மெத்தையில் கிடத்தினான். அதற்குள் போஸ் உள்ளே நுழைந்து அம்முவைப் பரிசோதித்துவிட்டு, சற்றே ஆசுவாசம் கொண்டார்.

"அதிர்ச்சி மயக்கம் தான்... நத்திங் டு வொரி" என்று கமலை முறைத்தபடி கூறிவிட்டு, அவளை உறங்க வைக்க உறக்க மருந்து ஊசி மூலம் ஏற்றினார்.

தேவ்வும் சற்றே மூச்செடுத்துக் கொண்டு, "அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தது, உன்னை இங்கேயே கொன்னு போட்டிருப்பேன்" என்று கமலின் சட்டையை கொத்தாகப் பிடித்து ஆக்ரோஷமாக கத்தியபடி மொத்த பலம் கொண்டு மீண்டும் தள்ளிவிட்டான்.

தேவ்வின் எந்த செயலும் கமலின் சிந்தைக்கு எட்டவில்லை. தன் காதல் இன்னமும் உயிர் பெற்றிருக்கிறது என்று மட்டும் தான் அவன் மனம் நிந்தித்துக் கொண்டிருந்தது.

Dr.போஸ்-ம் "என்ன காரியம் டா செய்தே.... அவளுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆகியிருந்தா என்ன பண்றது!!!" என்று கடிந்து கொண்டார்.

அதுவும் அவன் மனதில் பதியவில்லை. போஸ்-ஐப் பார்த்து கண்கள் கலங்கி, "அவ என்னை கண்ணானு சொன்னா டாக்டர்" என்றான் முகம் கொள்ளா பூரிப்புடன்.

"அவளோட கண்ணனை கண்ணா சொல்லாம! வேற என்ன சொல்லுவா!!!" என்றார் அவரும் சற்றும் முறைப்பு மாறாமல்...

கமலுக்கு இத்தனை நாட்களாக சிறு பொறி சந்தேகமாக இருந்த செயல் இன்று உண்மை என்று ஊர்ஜிதம் ஆகிவிட, சந்தோஷ மிகுதியில் சட்டென Dr.போஸ்-ஐ தாவி அனைத்துக் கொண்டு "தாங்க் யூ டாக்டர்... தாங்க் யூ சோ மச்..." என்றான்.

அவன் அணைப்பில் வயோதிகம் காரணமாக அவரது எலும்புகள் சற்றே வலி எடுக்க, "அடேய்... நான் அமுலு இல்லை டா... என்னை விடுடா... முரடா..." என்றார் சிரித்துக் கொண்டே...

"சரியான இம்சை... ஒரு நிமிஷம் என்னை எவ்ளோ கதி கலங்க வெச்சுட்டா தெரியுமா! நொடிப் பொழுதும் இடைவிடாம என்னை இம்சிக்கப் பிறந்த என் இம்சை டாக்டர் இவ..." என்று சந்தோஷத்தில் கண்ணீர் வடிய வடிய துடைத்துக் கொண்டே பிதற்றினான்.

அங்கே நிகழ்பவை அனைத்தும் தேவ்விற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. கமல் அம்முவை நெருங்கியப் பின் தான் அவள் 'கண்ணா' என்று அழைத்திருந்தாள். அதனால் திரையில் பார்த்த எவருக்கும் அவள் உரைத்தது கேட்காமல் போனது.

இப்போது கமல் சொன்னதைக் கேட்டப்பின், 'அம்முவிற்கு எப்படி அவன் பெயர் நினைவில் இருந்தது!' என்று முதல் அதிர்ச்சி... அடுத்ததாக கமல் போஸ்-ஐ அனைத்து நின்றது... அதற்கு அடுத்ததாக போஸ் அவனுடன் இயல்பாகப் பேசியது... அனைத்தையும் அடுக்கடுக்காய் யோசித்தவன் போஸ்-ஐத் தாக்கச் செல்ல கமல் தேவ்வை ஒரு கை பார்த்திருந்தான்.

கன்னத்தில் ரத்தம் வடிய மண்டியிட்டு அமர்ந்திருந்த தேவ்வைக் கண்டு திமிராக உரைத்தான் கமல். "என்ன!! இத்தனை நாள் ஓரமாக உக்காந்து அழுதுட்டு இருக்கவும், அம்மாஞ்சினே முடிவு பண்ணிட்டியா? நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம் என் அமுலு ஒருத்திக்காக மட்டும் தான்..." என்று கூறி தேவ்வின் இதழ்கள் கிழிந்து ரத்தம் வரும் அளவிற்கு முடிந்தமட்டும் பலம் திரட்டி ஒரு அறைவிட்டான்.

போஸ் தேவ்வைப் பார்த்து "ஒரு டாக்டரா இருந்தும் நீ இவ்ளோ முட்டாளா இருப்பேனு நினைக்கல தேவ்" என்று ஏளனமாக உரைத்தார்.

தேவ் அவரை முறைத்துப் பார்க்க, "என்ன பாக்குறே! சின்ன விஷயம் தான் அதைக்கூட உன்னால கண்டுபிடிக்க முடியலே! அந்த அளவுக்கு சக்ஸஸ் கொடுத்த போதை, உன்னை மதி மயங்க செய்திருக்கு..... வெற்றியை என்றைக்கும் தலைக்கு ஏற்றாதே! அது அதலபாதாளத்தில் உன்னை அமிழ்த்திவிடும்!

அம்மு உன்னை எப்போவாச்சும் 'டாக்டர் சார்'னு அழைச்சிருக்காளா! அவளுக்கு நீ எப்பவும் 'தேவ்' தானே!!!அதை யோசிச்சிருந்தாளே இன்னேரம் நீ எங்களை முந்தியிருப்பே..." என்று இப்போதேனும் அவன் யோசிக்க வடிகால் அமைத்துக் கொடுத்தார்.

தேவ்விற்கும் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் விளங்கிற்று. நினைவுகளை அழிக்கும் சர்ஜரியைச் செய்தது போஸ் தான். அதனை அவருக்கு சாதகமாகப் பயன்படுத்தி கமலின் நினைவுகளை அழிப்பதற்கு பதிலாக தனது நினைவுகளை அழித்துவிட்டார் என்பதனை இப்போது தான் உணர்ந்தான்.

"யூ ச்சீட்டர்... துரோகி... என்ன சொல்லி உன் மனசை கலச்சான் இவன்? என்ன பணம் கொடுத்து வாங்கிட்டானா? அதை என்கிட்ட கேட்டிருந்தா நாய்க்கு போடுற மாதிரி நானே அள்ளி வீசியிருப்பனே!" என்று கோபத்தில் மட்டு மரியாதை இன்றி உரைத்தான்.

கோபம் கொண்ட போஸ் கண்களில் கனல் தெரிக்க, இதழ் துடிக்க ஆத்திரம் அடைந்தவர் அதனை அவர் வெளிப்படுத்தும் முன்பே கமல் தேவ்வைத் தாக்கியிருந்தான். கோபம் தீரும் வரை கால்களாயே உதைத்து அவனை சுருளச் செய்து, "யாரைடா நாய்ங்கறே! ரிசர்ச்ங்கற பேர்ல சக மனுஷன்னு கூட பாக்காமா ஒவ்வொருத்தரையா கொலை செஞ்ச பாவி நீ!!!... வாழ்நாள் முழுமைக்கும் உயிரை காப்பாத்த மட்டுமே துடிக்கிற இவரை பணத்தாசை பிடிச்ச நாய்னு சொல்றேயா!!!!" என்று திட்டிக் கொண்டே உதைத்தான்.

"கமல் காம் டௌன்... வா... இவனை வெளியே அழைச்சிட்டு போயிடலாம்... அம்முவுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்... அவ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று கூறி கமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அகிலன் ஜெயதர்மனை கட்டி வைத்திருந்தான்.

போஸ்-ஐக் கண்டவுடன் "துரோகி" என்ற வார்த்தை தான் முதலில் உதிர்த்தார் ஜெயதர்மன். "ஓஓஓ.... மை டியர் ஃப்ரெண்... யூனிட்டி இஸ் ஸ்ட்ரென்த்... அந்த ப்ராவெர்ப்க்கு ஒரு ஸ்டோரி சொல்லுவாங்க தெரியுமா!!! உங்க யூனிட்டிய உடைக்க அந்த கதைய பயன்படுத்திக்கிட்டேன்.

மூனு மாடு இருந்தாச்சாம், எப்பவும் ஒன்னா தான் சுத்துமாம்... ஒரு சிங்கம் அதை வேட்டையாட முடியாம தவிச்சதாம்" என்று கூறியபடி கமலின் தோளைத் தட்டி மறைமுக உவமை கூறினார்.

"அப்போ அந்த சிங்கத்துக்கு ஹெல்ப் பண்ண ஒரு நரி வந்ததாம்... அதோட தந்திரத்தை பயன்படுத்தி மூனு மாட்டையும் பிரிச்சுவிட்டுச்சு... சிங்கமும் மூனு மாட்டையும் தனித்தனியா வேட்டையாடுச்சாம்... இந்த கதைல ஒரு சின்ன ச்சேஞ் தான். இங்கே இரண்டு சிங்கக் குட்டிங்க..." என்று இப்போது அகிலனுக்கும் கமலுக்கும் நடுவே வந்து நின்று இருவர் தோளிலும் கை போட்டு நின்றார்.

"இங்கே தந்திர நரி இல்லே... கூடவே சுத்திட்டு இருந்த பசுத்தோல் போர்த்திய புலியோட சதி வேலை தான் இது... அநியாயம் தலை தூக்கும் போது ஆண்டவன் இறங்கி வரலேனாலும், அவரோட வாகனம் வந்தா போதுமே!!!" என்று மென்னகை பூத்தார்.

"உங்களுக்கெல்லாம் டாக்டர்ஸை பார்த்தா எப்படி தெரியுது!!! என்ன சொன்ன! என்ன சொன்ன! நான் துரோகியா? அப்போ நீ யாருடா? இத்தனை நாள் உன்னை நம்பி நீ காட்டின இடத்திலேலாம் கையெழுத்து போட்டுட்டு, உள்ளே உயிருக்கு போராடிக்கு இருக்க நம்ம சொந்தம் குணமாகி நம்மகிட்டயே வந்து சேர்ந்திடும்னு, ஐசியூக்கு வெளியிலே காத்துட்டு இருந்தவங்களுக்கு நீ செய்ததுக்கு பேர் என்ன?" என்று அவர்களது குற்றத்தை சுட்டிக் காட்டினார்...

"விடுங்க டாக்டர் தப்பு செய்றவன் அவனா தான் தன் தப்பை உணரனும்... இவனுக்களுக்கெல்லாம் ஒரு நாளும் தான் செய்றது தப்புன்னு புரியப் போறது இல்லே... இவனுங்களை சட்டத்துக்கிட்ட விட்டுடலாம்.... அவங்க பாத்துக்கட்டும்..." என்ற அகிலனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர் தந்தையும், மகனும்.

அந்த சிரிப்பே உரைத்தது சட்டம் அவர்கள் அடிமை என்று... அவர்களுக்கு மட்டுமா, சட்டத்தில் உள்ள ஓட்டை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து செல்வந்தர்களுக்கும் அது அப்படித் தானே...

"இவனுங்களை என்ன செய்யணும்னு நான் அப்பறம் சொல்றேன்... இப்போதைக்கு இவனுங்களை நாம அடச்சு வெச்சிருக்கிறது வெளியே இருக்க ரவுடிப் பசங்க யாருக்கும் தெரியக் கூடாது... அதுக்கு என்ன வலி"

"இந்த ரவுடிப் பசங்க நான் சொன்னாலும் கேட்டுப்பானுங்க... இந்த ரெண்டு பேர் கூடவும் சுத்தினதுக்கு இப்போதைக்கு நடந்த நல்ல விஷயம் அது மட்டும் தான்" என்று கமலுக்கு பதிலளித்தார் போஸ்.

"ம்ம்ம்... அப்போ நான் அமுலு கூட இருக்கட்டுமா?" என்றான் சம்மதம் கேட்கும் குழந்தையாய்.

"கூட மட்டும் இரு... இப்போ செய்த மாதிரி ஏடாகூடம் எதுவும் செய்து வெச்சிடாதே!" என்று கண்டிப்போடு கூறினார் போஸ்.

மீண்டும் ஒரு முறை தாங்க் யூ டாக்டர் என்று அவரை அணைத்தான் கமல். "டேய்.... என்னையே இந்த பாடு படுத்துறேயே... பாவம் டா அந்த பொண்ணு அம்மு... ஆனா ஊனா கட்டிப்பிடிச்சிடுறான்..." என்று அம்முவின் அண்ணன் என்ற ஒருவன் இருப்பதைக் கூட பொருட்படுத்தாது உரைத்தார்.

இதற்கிடையே கமல் ஜெயதர்மன் மற்றும் தேவ் இருவரையும் என்ன செய்ய வேண்டும் என்ற தனது திட்டத்தைக் கூறினான். அதன்படியே செய்திடலாம் என்று போஸ்-ம் அவனுக்கு சாதகமாக தான் செய்யக் கூடியவைகளை கூறிட, அகிலனும் கமலும் ஜெயதர்மன் மற்றும் தேவ் இருவரையும் கட்டி வைத்துவிட்டு தங்கள் குடும்பத்தைக் காணச் சென்றனர்.

சில பல வாரங்களுக்குப் பிறகு தங்கள் வீட்டு பிள்ளைகளைக் கண்ட சந்தோஷம் அவர்கள் குடும்பத்தையும் தொற்றிக்கொண்டது. இப்போது கோமதி தன் மகள் வழிப்பேரனைக் கொஞ்ச கணவரின் அனுமதி வேண்டி நின்றிடவில்லை. கமலைக் கண்ட மறுகணம் அவனை அணைத்துக் கொண்டார். அதே போல் கனகவேலும் தன் தந்தையின் நடவடிக்கையை புறம் தள்ளிவிட்டு கமலின் தலை கோதினார்.

கமல் இவர்களது திடீர் பசத்தில் அப்படி ஒன்றும் உருகி கரைந்திடவில்லை. மாறாக தான் சோர்ந்த போதெல்லாம் தன்னை அரவணைத்து நம்பிக்கை ஊட்டிய நேத்ராவையும், ராமையும் தான் கண்களால் அரவணைத்திருந்தான்.

அகிலனைக் கண்ட ரூபினி அவனது பெற்றோர்களுக்கும் முன் முந்திக்கொண்டு தாவிச் சென்று அவனை அணைத்திருந்தாள். "என்கிட்ட ஏன் சொல்லலே! இனி எங்கே போனாலும் என்னையும் சேர்த்தே கூட்டிட்டு போ! வாழ்வோ சாவோ அது உன் கூட மட்டும் தான்!" என்று அவனது நெஞ்சில் சாய்ந்து அழுது தீர்த்தாள் தன் பிரிவின் வலியை.

இவ்வளவு நேரம் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று மரியாதைக்காக ஒற்றைக் கையால் அவளை சற்றே தாங்கினார் போல் நின்றிருந்தவன், அவளது வார்த்தைகளில் மொத்தமாக அணைத்து தனக்குள் அவளை புதைத்துக் கொள்ள வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தான். நேரங்கள் கடந்தும் அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவளை அணைத்த படியே தான் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

கமலை விமலாவின் சொந்தங்கள் சூழ்ந்து கொள்ள, அகிலன் நேத்ராவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். நேத்ராவும் தன்னால் பிரிந்த சொந்தம் இணைந்துவிட்ட மகிழ்ச்சியில் விழியில் நீர் கோர்த்தபடி பார்த்திருந்தாள். எதார்த்தமாக அகிலனின் பார்வையைக் கண்டவள், அவன் தன்னை இங்கே அழைத்து வர மறுத்த நொடிகள் நினைவில் வர, தன்னையும் அறியாமல் உரிமையாக உதடு சுழித்து மறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சின்ன சிரிப்போடு நேத்ராவை நெருங்கியவன், "க்கா..." என்றான் மெல்லிய குரலில்... நேத்ரா தன்னைத் தான் அழைக்கிறானா! என்ற பெருத்த சந்தேகத்தோடு நின்றிருக்க, "சிவா க்கா.... சாரி, எல்லாத்துக்குமே சேர்த்து இது மட்டும் தான் உரிமையா கேட்க முடியும், கமலை மாதிரி மடியில படுத்து வலியை விரட்டிவோ, அரவணைப்பு கேட்டு அணைக்கவோ எனக்கு உரிமையில்லை..." என்றான் வலி நிறைந்த குரலில்.

அவனது பேச்சிலேயே அவனது வலியை உணர்ந்தவள், அதற்கு மேல் அவனை பேச விடாமல் அரவணைத்துக் கொண்டாள். அகிலன் தான் எதிர்பாராத நொடி நடந்த இந்த அணைப்பில் சிரிப்பும் அழுகையுமாக மாற்றி மாற்றி வெளிப்படுத்தி அவளை அணைத்துக் கொண்டான்.

அழுகையினூடே "சித்தப்பாவும், தாத்தாவும் செய்தது எனக்கும் பிடிக்கலே தான். ஆனா எனக்கு தாத்தாவை ரொம்ப பிடிக்கும்... அவருக்காக தான் உங்களை ஒதுக்கினேன். ஆனா நீங்க....."

"டேய்... சும்மா பில்ட் அப் கொடுக்காதே... பேபி அகி-க்கு இந்த சிவாவைத் தான் ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தான் அம்முவும்... இப்போ மாமா வீட்ல இருந்த கொஞ்ச நாள்ல எல்லார்கிட்டேயும் அவ்ளோ பாசமா இருந்தா.... என்ன ரீசன்லாம் தெரியாது.... என்கிட்டயும் ரொம்பவே க்ளோஸா இருந்தா... உங்க ரெண்டு பேருக்காக மட்டும் தான் மத்த எல்லாரையும் சகிச்சுகிட்டேன்....

நீ சொல்ற மாதிரி நான் ஒன்னும் பெரிய ஞானி இல்லே... மறப்போம் மன்னிப்போம்னு நெனைக்கிறதுக்கு..... சின்ன வயசுல பெரியவங்க சொல்றாங்களேனு வேணுனா அமைதியா இருந்திருப்பேன்..... ஆனா இனி அப்படி இல்லே... அவங்க கொள்கைய அவங்க ஃபாலோ பண்ணட்டும்... அது எனக்கோ என் கணவருக்கோ, முக்கியமா என் குழந்தைகளுக்கோ அவமானத்தை ஏற்படுத்துவதாக இருந்தா இப்போ இருக்குற மாதிரி சும்மா வேடிக்கை பார்த்துட்டு அமைதியா இருக்கமாட்டேன். என் வழக்கப்படி பாடம் எடுக்க வேண்டி வரும்..." என்று தன் திமிரை சற்றும் விட்டுக்கொடுக்காமல் உரைத்தாள்.

அவளது வெடுக்குப் பேச்சைக் கேட்ட அம்முவின் குடும்பத்தார் அனைவரும் வாயடைத்து தான் நின்றிருந்தனர், அருகில் நின்றிருந்த அகிலனுமே ஒரு நொடி ப்ரமிப்பாகத் தான் பார்த்தான்.

தன்னவளின் கர்வத்தில் தானும் தலை தூக்கி நின்று, காதலாய் அவளைக் கைப்பிடித்தவன், தற்போதும் கண்ணெடுக்காமல் பார்த்து வைத்தான். அகிலனின் தோள் தட்டி அருகே வந்து நின்ற ராம் "கவலைப்படாதே, அவ பூதக்கண்ணாடி மாதிரி பாசத்தை மட்டும் காட்டினா அவளும் பதிலுக்கு பல மடங்கு பாசத்தைக் காட்டுவா....." என்று அகிலனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, கமலிடம் திரும்பி

"உன் கூடப் பிறக்காதவளுக்கு உன் வீட்லயே உன் காதலால அவமானம் நடக்கூடாதுனு நீ நெனச்சது சரி தான். ஆனா தருவோட குணத்தை மறந்து அம்முவை ஒதுக்கினது ரெம்ப தப்பு டா" என்றவனது வார்த்தைகள் கமலுக்காக மட்டும் அல்லாமல் கங்காதரனுக்காகவும் தான் ஒலித்தது.

அவரும் அதனை உணர்ந்தவராய் ஆமோதிப்பாய் தலையசைத்தார். அந்த விடயத்தில் விமலாவின் 'அம்மு தான் இவ்வீட்டு இரண்டாம் மருமகள்' என்ற உறுதி மிகச் சரியே என்று கண்களால் பாராட்டவும் தவறவில்லை, வார்த்தைகளால் அதனை வடிக்கவும் மறக்கவில்லை.

சீண்டல் தொடரும்.
 
Top