• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
516

சோட்டுக்காரி -23

அறுவடைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. இந்தப் பத்து நாட்களாக முருக பவனமே அல்லோகலப் பட்டுக் கொண்டு தான் இருந்தது. அறுவடை, கதிரறுப்பு என வந்துவிட்டால், வீட்டினர் மற்ற விசயங்களை அனைத்தையுமே அப்புறம் பார்க்கலாம் என ஒத்தி வைத்து விடுவார்கள். அது நேர்த்திக் கடன் செலுத்துவது, கொண்டாட்டம், வம்பு, வழக்கு எல்லாத்துக்குமே பொருந்தும்.

தினமும் வயலில் வேலை செய்பவர்களுக்கு, வீட்டில் சமைத்துப் பரிமாறுவார்கள். இந்தச் சமயங்களில் சண்முகம் குடும்பமும், அக்காள் குடும்பத்தினருக்கு உதவ வந்துவிடுவார்கள். ஆள் வைத்து பெரிய வட்டங்களில் சமையல் செய்தாலும், அவர்களை வேவை வாங்குவதே பெரிய கலை தான். பரமநாயகி பின்கட்டிலேயே சேரைப் போட்டு உட்கார்ந்து விடுவார்.

ஜெகதா, காய்கறி, மளிகை பொருட்களுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள, கற்பகம் தான் எல்லா இடத்திலும் தேவைப் பட்டவராக இருந்தார். சண்முகம் அக்கா கேட்கும் பொருட்களை உடனடியாகத் தருவித்துத் தரும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இளமுருகு, மனோவுக்கு நாள் முழுதும் வயலில் வேலை சரியாக இருக்கும். இளமுருகுவாவது ரைஸ்மில்லுக்குச் சென்று வருவான். மனோகர் முழுநேரமும் வயலில் தான் பொறுப்பாக நிற்பான்.

நளினி, முதல் நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தவள், மற்ற நாட்களில் வேலைக்குச் சென்றுவிட்டாள். தெய்வா இவர்கள் வேலையைப் பார்த்து மலைத்துத் தான் போனாள். அம்மனிக்கு, அதிகப் பட்சம் தோசை வேண்டுமானால் ஊற்றத் தெரியும். மற்றது எல்லாம் பூஜ்ஜியம் தான்.

பெரிய, பெரிய பாத்திரங்களை மேலிருந்து இறக்கியதிலேயே அரண்டு போனாள். கற்பகம், தெய்வா பொறுப்பாகத் தன் பேத்தியை கவனித்துக் கொண்டதே, போதும் எனத் திருப்தியுற்றிருந்தார். போன முறை நலுங்கிக் கிடந்த, தேன்குழலியை சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது. அதற்காகவே நளினியை வீட்டில் நிறுத்தியிருந்தனர். ஆனாலும் தேன்குட்டி சிணுங்கிக்கொண்டே இருந்ததில் எல்லாருமே ஒரு அதிருப்தியில் இருந்தனர்.

ஆனால் இந்த முறை, தனக்கென வாய்த்த புது அம்மாவோடு ஆடிப் பாடி, சிரித்துத் திரிந்த தேனை பார்த்ததிலேயே, உற்சாகமாக வேலை செய்தனர். இந்த முறை பயிரும் நன்கு விளைந்து இருந்ததில் பெருமகிழ்வு.

அன்று பேக்டரியிலிருந்து வந்ததிலிருந்து, தெய்வாவின் முழு முதல் வேலை தேன்குழலி மட்டுமாகத் தான் இருந்தது. ஆம் வந்ததும், வராததுமாக இளாமாமாவோடு சண்டையும் போட்டாகி விட்டது. அதிலிருந்து அவனோடு டூகாய் தான்.

அவனும் நேரம் காலம் இல்லாமல் அலைந்ததால், முழுதாக தெய்வாவை சமாதனப் படுத்த நேரமில்லாமல், அவ்வப்போது சமாதானம் செய்து கொண்டே, அவளை மனைவியாக உணரவைத்துக் கொண்டும் வந்தான். இளமுருகும் முறுக்கிக் கொண்டிருக்கும் மனைவியை இளக்கிக் கொண்டு வர, அவனும் ஏதாவது செய்து தான ஆகவேண்டும்.

தெய்வா, அண்ணன்களுக்குப் பேக்டரியை ஒப்படைத்து வந்த நாளில், கற்பகத்திடம் இரண்டு மகள்களும், இளமுருகுவைப் பற்றி ஆளுக்கொரு பஞ்சாயத்தைச் சொல்லி வைத்திருந்தனர். மதியமே வரவேண்டிய இளமுருகு, தெய்வா பேக்டரிக்கு போயிட்டு வரேன், எனச் சொல்லியிருந்ததில், கற்பகமும் பதட்டமாகவே பார்த்திருந்தார்.

இரண்டு சக்கர வாகனத்திலேயே வந்து இறங்கவும், "இவ்வளவு தூரம், வண்டிலையே வந்தா, தெய்வாவுக்கு உடம்பு தாங்குமா?" என மகனைக் கடிந்து கொண்டவர்.

"உன் மகள், அம்மாவைக் காணோம்னு, தவிச்சிக்கிட்டு இருக்கா போ." என மருமகளை உள்ளே அனுப்பவும்.

"இனிமே, நோ ப்ராப்ளம் அத்தை. இருபத்தி நாலு மணிநேரமும் என் மகளோட தான் இருப்பேன். நானே பார்த்துக்குறேன்." என உள்ளே ஓடியவள், ஆத்தாவோடு உட்கார்ந்திருந்த மகளை, "பட்டுக்குட்டி, அம்மாவைத் தேடுனீங்களா?" எனக் குரல் கொடுத்துக் கொண்டே செல்லவும், கையிலிருந்ததைத் தூக்கிப் போட்டு விட்டு, "ம்மா!!!" என ஓடி வந்தது.

இளமுருகு, மேலோட்டமாக தெய்வா, பேக்டரி பொறுப்பை அவளது அண்ணன்களிடம் கொடுத்துவிட்டாள், என்று மட்டும் கற்பகத்திடம் சொல்லியவன், வீட்டுக்குள் வர, சமயம் வாய்க்கும் போது கேட்கலாம் எனக் கற்பகம் பொறுமை காத்தவர், இரவில் தெய்வா படுத்த பிறகு, சரோஜினி சொன்னதாக, "நளினி மாப்பிள்ளைக்கு விவசாயத்துக்காக வயலை தரேன்னு சொல்லியிருக்கியாம்." என வினவவும்,

"விசயம் வெளியே வந்திருச்சா. உன் மருமகள் ஓட்ட வாய்ம்மா." எனத் தெய்வாவை சலித்துக் கொண்டவன், "நான் ஏற்கனவே நினைச்சுக்கிட்டு தான்மா இருந்தேன். வள்ளிக்காகத் தான ஒவ்வொரு நிலத்தையா குடுத்தாங்க. நளினியும், ப்ரைவேட் கம்பெனில போய்க் கஷ்டப் பட்டுக்கிட்டு தான இருக்கா. நாளை பின்னக் குழந்தை, குட்டின்னு குடும்பம் பெரிசானா, மனோவும் சமாளிக்கனுமே. ஏன்மா, நான் யோசிச்சது தப்பா?" என்றான்.

"உன் யோசனை தப்பே இல்லை தம்பி. ஆனால் நான் இன்னும் மூனு பொட்டப் புள்ளைகளை வேற பெத்து வச்சிருக்கேனே. அதுக்குத் தான் பயப்படுறேன். ஒருத்திக்கு செஞ்சா, அடுத்தவ வேற ஏதாவது காரணம் சொல்லி வந்து நின்னு, உனக்குத் தான் தொல்லை குடுக்குங்க. அதுவும் நீ தெய்வா சொல்லி செஞ்சேன்னு தெரிஞ்சா, இன்னும் வம்பை இழுக்குங்க." எனக் கற்பகம் மகள்களை அறிந்து கவலைப் படவும்.

"அதெல்லாம் சமாளிச்சுக்கலாம் விடுங்கம்மா . நளினிக்கு குடுக்கிற மாதிரியே, எல்லாருக்கும் செஞ்சுடுவோம். என்ன பொண்டாட்டி தாசனாகிடுவேன்னு தங்கச்சிங்க பயப்படுங்க, தெய்வாவும் தான், நம்மளை விட்டுட்டு எங்கமா போவா. நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஐம்பது லட்சம் மதிப்புள்ள சொத்தையே விட்டுட்டு வந்தா." என மனைவியைப் பெருமையாக நினைத்தவன், அறைக் கதவை அடைத்து ஏசி ஆன் செய்திருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.

கற்பகம் மகனைப் பார்த்தவர், "உன்னை இப்ப பிடிச்சுக் கேள்வி கேட்கிறதில அர்த்தமே இல்லை. கிளம்பு." எனத் தனது அறையை நோக்கி அவர் நடக்க, "அம்மா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. சொல்ல வந்ததைச் சொல்லுங்க." எனக் கற்பகம் பின்னோடு வந்து கையைப் பிடிக்கவும், நின்று திரும்பியவர்,

"இதை, இந்த நேரம் கேட்கிறது சரி இல்லை. ஆனால், உன் தங்கச்சி சும்மாவும் இருக்க மாட்டா, அதுக்காகத் தான் கேட்கிறேன்." என்ற பீடிகையோடு,

"பணம் புரட்டனும்னா, என் நகையைக் கழட்டிக் கொடுத்திருப்பேனே தம்பி, வள்ளியோட தாலிக் கொடியை ஏன் கொண்டு போய் வச்ச. அதையாவது உன் தங்கச்சிக்குத் தெரியாமல் செஞ்சியா. குமுது குதிக்கிறா, அது அப்படியே மாமா காது வரைக்கும் போனா சங்கடம் தானே?" எனக் கற்பகம் மகனையும் குற்றம் சுமத்தமாட்டாமல் பேசவும்,

"அம்மா, பீரோல சும்மா இருக்கிற வள்ளி நகையை வைக்கக் கூடாதுன்னா, அப்பா உங்களுக்குப் போட்டதை மட்டும் கழட்டலாமா. வள்ளியே இருந்திருந்தாலும், என் மானம் சம்பந்தப்பட்ட விசயம்னா, கழட்டித் தான் கொடுத்திருப்பா. அறுவடை முடியவும், திருப்பிடுவேன். இதைப் பெரிசு படுத்தாதீங்கம்மா. குமுதுக்கும் சொல்லி வைங்க. ஏன் அவள் தினகரன் மாமாக்கு ஒரு தேவைனா, அவ கழட்டிக் கொடுக்கமாட்டாளா. அதையும் மீறி யாராவது கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்." என அவன் சொல்லவும், கற்பகத்துக்கு மகனின் இந்த மாற்றமே கவலையைத் தான் தந்தது. "என்னமோ தம்பி, இதுனால யாருக்கும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக்கோ." என்றபடி அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.

ஆனால், இதை யாருக்குத் தெரியாமல் அம்மாவும், மகனும் ரகசியமாகப் பேசியதாக நினைத்தார்களோ, அவள் பரமநாயகி ஆத்தா அறையிலிருந்து, மகளைத் தோளில் போட்டபடி வந்தவள் கேட்டுவிட்டாள் .தெய்வா அவனை முறைத்தபடி அவனைக் கடந்து தங்களது அறைக்குள் சென்றாள்.

"ஐய்யய்ய, அரைடிக்கெட்டு ரூமுக்குல்ல இருக்கான்னு நினைச்சேன். ஆத்தா ரூம்ல என்ன செஞ்சா?" என வாய்விட்டுப் புலம்பியபடி, வாசல் கதவுகள் தாழ் போட்டிருக்கிறதா என இருபுறமும் பரிசோதித்து விட்டு, மின் விளக்குகளை அணைத்து விட்டுத் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான்.

தெய்வா, தேன்குழலியை படுக்கப் போட்டு விட்டு, தானும் அருகில் படுத்துக் கொண்டவள், இளமுருகுக்கு இடமே விடாமல், தங்களிருவரையும் சுற்றி குஷன், தலையணைகளால் அணைக் கட்டி படுத்திருந்தாள். அதைப் பார்த்தவன், 'கட்டில்ல படுக்க நோ என்ட்ரி போடுறாளே, டெரராத் தான் இருக்கா.' என யோசித்தபடி வந்தவன், ஏதும் நடக்காதது போல் ,

"ஏய் அரை டிக்கெட், எனக்கும் கொஞ்சம் இடம் விடுடி, அம்மாவும் மகளுமே, இவ்வளவு பெரிய பெட்டையும் பிடிச்சிக்கிட்டீங்க." எனக் கட்டிலை நெருங்கி, தெய்வாவுக்கு அடுத்திருந்த தலையணையை எடுத்து விட்டு, அவன் உட்கார்ந்து, அவள் மேல் கை வைக்கவும்,

விழுக்கெனத் திரும்பியவள், "நீ யாருய்யா, எங்க ரூமுக்கு வந்திருக்க. இத்தனை நாள், எங்கப் படுத்தியோ, அங்கயே போய்ப் படு போ." என மரியாதை தேய அவள் சீறினாள் .

"மோஹி, எதுக்குடா இவ்வளவு கோபம். நான் சொல்கிறதை கேளு." என அவன் விளக்கம் தர வரவும், "நீங்க ஒன்னுமே சொல்ல வேண்டாம். நீங்க என்னை, எந்த இடத்தில வச்சிருக்கீங்கன்னு நல்லாவே தெரிஞ்சு போச்சு. அத்தைக்கிட்ட என்ன சொன்னீங்க, உங்க மானத்தைக் காப்பாத்திக்க, வள்ளியக்கா தாலிக் கொடியை வச்சிங்களா. அந்தப் பணத்தைத் தான என் அண்ணன்கள்ட்ட கொடுத்தீங்க." என்றவள், யோசித்துவிட்டு,

"இல்லை, இல்லை நான் தான ஈட்டிக்காரி, என்கிட்ட கொடுக்கத் தான் வந்தீங்க. இன்னும் வள்ளியக்காவை மட்டும் தான் உங்க ஒய்ஃபா நினைக்கிறீங்க. நான் உங்களுக்கு வேற யாரோ தான். ஓகே ஃபைன். நான் அப்படியே இருந்துட்டு போறேன். நான் என் மகளுக்காகத் தான் இந்த வீட்டுக்கு வந்தேன். முழு நேரமும் அதை மட்டும் பார்த்துக்கிட்டு ஒரு மூலையில இருந்துட்டு போறேன்." என அவள் கண்ணீரோடு திரும்பிப் படுத்துக் கொள்ளவும்.

"மோஹிமா, அப்படி இல்லைடா. இந்தப் பக்கம் திரும்பு. நான் சொல்றதை கேளு. என் தரப்பையும் கேட்கனுமா இல்லையா." என அவள் தோளைத் தொடவும்,

மேலும் குறுக்கி கொண்டவள், "ஒன்னும் வேண்டாம். நான் தான், ஒரு இடியட், பூஃல் , பைத்தியக்காரி, அறிவு கெட்டவ." என அடுக்கிக் கொண்டே அழவும். அவளை வலுக்கட்டாயமாக எழுப்பியவன், தன் பக்கம் திருப்பி, "நிச்சயமா, என் அரைடிக்கெட்டு, இடியட் தான். என்ன சொல்ல வர்றேன்னு காதிலையாவது வாங்குறியா?" என்றவனை முறைத்தவள்,

"காதிலையும் வாங்க வேண்டாம். கன்னத்திலையும் வாங்க வேண்டாம். நான் தான் பைத்தியம் மாதிரி உங்களை நினைச்சிட்டு இருந்திருக்கேன். அதையும் உங்ககிட்டையே சொல்லவும், உங்களுக்கு ரொம்ப ஏத்தமா போச்சு.

உங்களைப் பொருத்தவரை, நான் அரைடிக்கெட்டு, கொள்ளைக்காரி, ஈட்டிக்காரி, அப்புறம் என்ன சொன்னீங்க இம்சை, ஆக மொத்ததில, உங்க ஒய்ஃபா மட்டும் ஒத்துக்க மாட்டீங்க. ஓகே பரவாயில்லை,என் பொண்ணுக்காவது நல்ல அம்மாவா இருக்க ட்ரை பண்ணிக்கிறேன். அவளுக்காகவாவது, நான் இங்கேயிருக்கப் பர்மிஷன் கொடுங்க போதும்." என்றவள்,

"ஓ சாரி, இந்தக் கட்டிலுக்குத் தான் நீங்க பணம் குடுத்திட்டிங்கல்ல, நான் வெளியே போய்ப் படுத்துக்குறேன். எனக்கும் மானம், ரோசமெல்லாம் இருக்கு." என இறங்கப் போனவளை, இழுத்துப் பிடித்தவன், அவள் திமிரவும்,இறுக்கப் பற்றிக் கொண்டு சூழலை சகஜமாக்க, அவள் தலைமுடியை விளையாட்டாய் கலைத்து, "இந்த மண்டைக்குள்ள, என்னன்னத்தைத் தாண்டி யோசிப்ப, யோசிச்சவுடனே பட்டுனு வெளியவும் கொட்டிடுறது. பேசும் முன்ன, என்ன பேசுறோம்னு யோசிக்கவே மாட்டியா." எனக் கொஞ்சலாகக் கேட்கவும்,

"பேசுறதுக்குப் போய் யாராவது யோசிப்பாங்களா. டக்டக்குன பதில் சொல்லித் தான் டிகிரியே வாங்கியிருக்கேன்." எனப் பெருமை பேசிக் கொண்டவள், "பேச்சை டைவர்ட் பண்ணாதீங்க. என்னை விடுங்க." என அடம்பிடித்தாள்.

கணவன், மனைவி இருவரில் ஒருவர் கோபப்படும் அடுத்தவர் அடங்கி அமைதியாகப் பேசினாலே சுமூகத் தீர்வு வருமென, அவனது தாத்தா, தன்னைத் தேடி வந்து பஞ்சாயத்துக்கு அழைத்துச் செல்லுமிடங்களில் சொல்வதை நினைவில் நிறுத்தி, அவளிடம் பொறுமையாகவே பேசினான்.

"தெய்வானைத் தாயே, கொஞ்சம் சொல்றதை கேளு. உன் அண்ணனுங்க வேற, உனக்கு ஏதாவது ஒன்னுன்னா தொலைச்சு புடுவோம்னு மிரட்டிட்டு போயிருக்காங்க. நாளையிலிருந்து கதிர் அறுப்பு இருக்கு. வேலை தலைக்கு மேல இருக்கும். நீங்க தேன்குழலியோட அம்மாவா, உங்க கடமையைச் செய்யிங்க. மத்த பஞ்சாயத்தெல்லாம் அப்புறம் வச்சுக்குவோம். அதுக்கப்புறம் எப்படியும், தினம் ஒரு பஞ்சாயத்து ஓடும். நீங்க கோவிப்பீங்க. நான் கெஞ்சுவேன், நீங்க மலை இறங்குவீங்க, ரிபீட்டு தான். அதெல்லாம் கதிரறுப்புக்கு அப்புறம் வச்சுக்குவோம். தயவு செய்து உங்க கோபத்தை, உங்க மகளுக்கு, அந்தப் பக்கம் படுத்துகிட்டு காட்டுங்க. நாளைக்கு விடிய காத்தாலை எந்திரிச்சு வயலுக்கு ஓடனும். தூங்க விடுமா. ப்ளீஸ்!" எனக் கெஞ்சவும், அவனை முறைத்தவள் ,

"பொண்டாட்டியை, ஒழுங்கா சமாதானப் படுத்த கூடத் தெரியலை, தூங்க விடுமான்னு கெஞ்சுது கிழமுறுக்கு. இதில இதுக்கு இரண்டாவது கல்யாணம். போதாத குறைக்கு என்னை அரைடிக்கெட்டுன்னு வேற சொல்லுது." என வாய்க்குள் முணுமுணுத்தபடி, தேன் குழலிக்கு மறுபுறம், குசன்களை எடுத்து விட்டு, அந்தப் பக்கம் அவள் நகர்ந்து படுத்தாள்.

அவள் பேசியது காதில் விழுந்த போதும், 'ரொம்ப டெரராத் தான் இருக்கா. இளா வாயைக் கொடுக்காதடா, இன்னைக்குத் தப்பிச்ச. இனி போகப் போக இருக்கு. இதே மாதிரி மேனேஜ் பண்ணிக்கோ.' எனத் தன்னையே தேற்றிக் கொண்டவன், 'அரைடிக்கெட்டு, எங்கிருந்துடி வந்த. நீ அழுதா, மனசைப் போட்டு பிசையிது. மெல்ல, மெல்ல எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.' எனமனதில் அவளுக்கு உறுதியும் தந்தான்.
 

MEGALAVEERA

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
464
Nice epi
 
Top