• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
516

சோட்டுக்காரி -27

சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த அம்மன் தான், இளமுருகு குடும்பத்தாரின் வழிபாட்டு தெய்வம். பொதுவாகவே இந்தப் பக்கத்து மக்கள், சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா, ஆடி மாதத்தில் பாதயாத்திரை என வருவார்கள். முடிக் காணிக்கை செலுத்துவது, உப்பு, மிளகு, கண்மலர், கை, கால் என உடல் உருப்புத் தகடுகள், ஆடு, கோழி, தங்கள் வயல்களில் விளைந்த பொருட்கள் எனக் காணிக்கை செலுத்துவார்கள். மாவிளக்கு, துள்ளு மாவு, பொங்கல் வைத்தல், அடி பிரதட்சிணம், அங்கப்பிரதட்சணம் எனத் தங்கள் விருப்பத்துக்கு வேண்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

கற்பகமும் மகள்களுக்காகத் திருமணம் நன்றாக நடக்க, பேறுகாலம் என அத்தனைக்கும் இங்குத் தான் வேண்டிக் கொள்வார். இந்த முறை மகனுக்கு நல்லபடியாக மறுமணம் நடந்தால் சமயபுரம் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டிருந்தார். அதை நிறைவேற்ற ஒரு வேன் நிறைய வந்து இறங்கி விட்டனர்.

அன்றைய குடும்ப மீட்டிங்கிற்குப் பிறகு, சரோஜினி, வரதன், தினகரன் மட்டும் கிளம்பி விட, கற்பகத்தின் பேரன் பேத்திகள் அங்குத் தான் தங்கினர்.

கமலினி இருக்குமிடத்தில் தான் ரவிக்குமார் இருப்பான். எனவே முக்கால் வாசி மாடியிலிருக்கும் மாப்பிள்ளை அறைக்குச் சொந்தக்காரனும் அவன் தான். தனது வேலைகளை இங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தான். அவனிருப்பதால் முருக பவனமுமே பிசியாகத் தான் இருந்தது.

மருமகனில் ரவி மட்டுமே "அத்தை, இந்தப் பாத்திரம், அந்த லிகவிட். யூஸ் பண்ணுங்க." என அடுப்படி வரை சகஜமாக வரக் கூடியவன், அதனால் சாவகாசமாகவே அவர்கள் பொழுது சென்றது.

பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அவர்கள் வயலுக்கே சென்று, பம்ப் செட்டில் குளித்துத் துவைத்து ஆடி விட்டுத் தான் வருவர். தெய்வாவுக்கு இவை யாவுமே புது அனுபவமாகத் தான் இருந்தது. கமலினி வாய் ஓயாமல் பேசி வர குமுதினி சுழித்த முகத்தோடு மௌனமாகவே வருவாள். தெய்வாவே, நாத்தனார் பேசியதை மறந்து, சகஜமாகப் பழகிய போதும் குமுதினி, தெய்வாவை சற்று தள்ளியே நிறுத்தினாள்.

இதைக் கவனித்த இளமுருகு மனைவியிடம், "அவள் அப்படித் தான். நீ வள்ளி இடத்தைப் பிடிச்சிக்கிட்ட மாதிரி நினைப்பா!" என அவளைக் கண்டு கொள்ளாமல் விடச் சொன்னான். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், "அரைடிக்கெட்டு, என்னடா அன்னைக்கு, அப்படிச் சொல்லிட்ட. மாமாவுக்கு உன்னைப் பிடிக்கும்டா." என அவளை நெருங்கும் போதெல்லாம், "பிடிக்கிறது வேற, லவ் வேற மாம்ஸ். நீ இன்னும் பெட்டரா ட்ரை பண்ணு. கட்டிப்பிடிக்கிறது மட்டுமே காதல் இல்லை." எனச் சிரிப்பவளை, "நான் என்ன செய்யனும்னு சொல்லு.செய்யறேன்." என்பான்.

"நாலு நாள் நான் இல்லைனாலும் சமாளிச்சுக்குவீங்கல்ல?" எனச் சம்பந்தமில்லாமல் கேட்டவளை, "அதெல்லாம் நீ வரும் முன்னே சமாளிக்கலையா என்ன. ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் தேன்குட்டி தேடுவாளே, அவளை விட்டுட்டு போய்ட்டு வந்துடுவியா?" என வினவியவனைப் பார்த்து, சிரித்தவள்,

"இது தான் மாம்ஸ் அதுக்குப் பதில். நான் நாலு நாள் போறேன்னா, என் மகள் தேடும். ஆனால் நீங்க தேட மாட்டிங்கல்ல?" எனக் கண்களில் ஏக்கத்தோடு கேட்டவளை,

"மோஹி அப்படி இல்லைடா. நானுமே தேடுவேன். ஆனால் நீ முக்கியமான வேலையா தானப் போவ. நான் எப்படிப் போகாதேன்னு சொல்லுவேன்." என அவன் விளக்கம் சொல்ல, "போ மாமா, உனக்குப் புரியாது." எனக் கடந்துவிட்டாள்.

இளமுருகு தான், "முருகா, இந்த அரைடிக்கெட்டை புரிஞ்சுக்கவே முடியலையே ஐயா. நீ எப்படிச் சமாளிச்ச?" எனப் புலம்புவதைத் தவிர வேறு வழி இல்லை. ஏனெனில் தெய்வாவோடு தனிமை கிடைப்பதே அரிதாகிப் போனது. அவனது அக்காள், தங்கைகள் பிள்ளைகளும் கமலினியுமே ஏசி ரூமை ஆக்கிரமித்து இருக்க. குமுதினி அம்மாவின் அறையில் இருக்க, இவனுக்கு எப்போதும் போல் ஹால் தான்.

பத்து நாட்கள், ஆட்டம், பாட்டு, சினிமா, டிவி, ஸ்நேக்ஸ், சாப்பாடு என ஓடிக் கொண்டிருந்தது. அதிலும் இரவில் கற்பகம் பேரன் பேத்திகளுக்கு ஒரு குண்டாவில் போட்டு, சாதத்தைப் பிசைந்து உருட்டிக் கொடுக்க, பெரியவர்களும் ஆசைக்கு ஒரு வாய் வாங்கிக் கொள்வார்கள்.

மகள்கள் இருப்பதோடு, வடகம், வத்தல் போடும் வேலையையும் கற்பகம் ஆரம்பித்து விட்டார். இது மே மாத லீவில் வழக்கமாக நடப்பது தான். பெரிய பானைகளில் அரிசி, ஜவ்வரிசி, பச்சைமிளகாய், சீரகம் உப்பு சேர்த்து ஆட்டி , இரவிலேயே கிண்டி வைத்து விடுவார்கள். அதிகாலையில் வெயில் வரும் முன் மொட்டை மாடியில் பழைய வேஷ்டிகளை விரித்து , ஒருவர் முறுக்கு உழக்கில் மாவு அள்ளிப் போட்டுத் தர, மற்றவர் பிழிந்து எடுப்பார்கள். கமலினி, குமுதினி அழகாக முறுக்கு போல் வடகம் பிழிய, நளினி கோடு கோடாக இழுத்து விடுவாள்.

"லோட்டஸ், நானும் பிழியிறேன்." எனத் தெய்வா ஆர்வமாக வாங்கி உரலை அழுத்த, அழுத்தினால் இழுக்க வரவில்லை. இழுத்தால் அழுத்த வரவில்லை. அவள் படும் பாட்டில் குமுதினியே சிரித்து விட, நாத்திமார்கள், தெய்வாவை ஓட்டிக் குமித்தனர்.

மற்றொரு நாள் கஞ்சியாகக் காய்ச்சிய கூழ் வடகம், கரண்டியால் அள்ளி ஊற்றுவது தான். வெங்காயக் கிள்ளு வடகம். அதுவும் எளிதாக வர, தெய்வா ஆயகலைகளையும் கற்றுத் தேர்ந்தது போல் ஸ்டேட்டஸ் வேறு. கமலினி, "தெய்வா இதைச் சாப்பிட்டு பாரு!" என வடகம் கிண்டிய மாவின் ருசியையும், அது பாதிக் காய்ந்து உள்ளதின் ருசியையும் அறிமுகப்படுத்தினாள்.

"லோட்டஸ், உங்களை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு அக்கா தங்கச்சி இல்லையேன்னு ஒரே ஃபீலிங்க இருக்கு." என்ற தெய்வாவிடம், "இந்த ஒரு பக்கத்தை மட்டும் பார்த்திட்டு அந்த முடிவுக்கு வந்திடாத. சண்டை போட்டாலும், குடுமிப் பிடி தான். சத்தம் சிவன் கோவில் வரைக்கும் கேட்கும்." எனத் தங்கள் பெருமைகளைச் சொல்லிச் சிரித்தனர்.

கற்பகம், சமயபுரம் கோவிலுக்கு, மாவிளக்கு போட வேண்டும், என மட்டும் சொல்ல, குமுதினி தான் அம்மாவின் வாயை பிடுங்கி, அங்கப்பிரதட்சணம் செய்யவேண்டும் என்பதையும் வெளியே கொண்டு வர, இளமுருகு, கற்பகம் அங்கப்பிரதட்சனம் செய்வதாகச் சொல்லுவதை மட்டும் எதிர்த்தான். "கட்டாயம் செய்யனும் தம்பி." என அவர் வாதாடவும்.

"சரி, எனக்காகத் தானே வேண்டுனீங்க. நானே செய்யறேன்." என வேண்டுதலைத் தான் நிறைவேற்றுவதாகச் சொல்லி, மூன்று நாள் விரதமிருந்து, மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு தயாராகவே வந்துள்ளான்.

பரமநாயகி ஆத்தாவிலிருந்து முருகபவன ஆட்களோடு, சண்முகம், ஜெகதா, கணேசன், அவனது அப்பா,அம்மாவும் கோவிலுக்கு வந்தனர். நெல் ஒரு மூட்டையையும் காணிக்கைக்காகக் கொண்டு வந்தனர். வண்டி நிறுத்துமிடம் வந்து வேனை நிறுத்தியவர்கள், கோவில் கூட்டத்தைப் பார்க்கவும் விக்கித்துப் போனார்கள்.

“சித்திரை தேர்த் திருவிழா முடுஞ்சு எத்தனை நாள் ஆச்சு, இன்னும் கூட்டம் குறையலை பாரேன்.“ எனக் கணேசன் அம்மா, வியக்க. “நம்மளை மாதிரியே லீவு விடவும் வரலாம்னு எத்தனை பேர் வந்தார்களோ?“ என ஜெகதா அவருக்குப் பதில் தந்தார்.

கற்பகம் மகனிடம், “தம்பி ஆத்தானால இவ்வளவு தூரம் லயனில் சுத்தி வரமுடியாது. நீ நூறு ரூபா டிக்கெட் எடு.” எனச் சொல்லவும், “அம்மா, உன் மருமகன் ஆளுங்களை ஏற்பாடு பண்ணியிருக்கார், இரு வந்துருவாங்க“ எனச் சரோஜாவும்,

“ரவி மாமா யாரையோ தெரியும்னு சொன்னார்.“ என நளினியும் சொல்லவும், "ஆமாம் உன் மாமா சொல்றதை நீதான் நம்பு." என்றாள் கமலி. கோவில் வரை நடந்தனர்.

கணேசன் நெல் மூட்டையைத் தூக்கிக் கொள்ள, பிள்ளைகளை அவரவர் பத்திரமாகக் கை பிடியில் பிடித்துக் கொண்டனர்.

தெய்வா இன்று மாம்பழ மஞ்சளில், அடர் சிவப்பு கரையிட்ட பட்டுப் புடவைக் கட்டி, மாமியார் சொல் படி தனது நகைகளைப் போட்டிருந்தாள். தலைநிறைய பூவும், புது மஞ்சள் கயிறும், கை நிறைய வளையலுமாகக் கொள்ளை அழகோடு, ஒரு மாதத்தில் சற்றே பூசிய உடலோடு நின்றவளை, இளா சைட் அடித்துக் கொண்டே தான் வந்தான். “அரைடிக்கெட்டு, அம்சமா இருக்கடா. இறுக்கியணைச்சு உம்மாக் குடுக்கணும் போல இருக்கு, ஆனால் நீதான் அதையும் காதல் இல்லைனு சொல்லிடுவ.“ என அவள் செவியில் கிசுகிசுக்கவும், “இன்னும் பெட்டரா ட்ரை பண்ணு மாம்ஸ்!“ என்றாள் .

தேன்குழலியும் அம்மாவைப் போலவே மினி டிசைனில் நகையைப் போட்டிருந்தது. அதைப் பார்த்தால், அம்மா மகளுக்கு ஜோடியாக இளமுருகு செய்து கொடுத்திருக்கிறான் என்றே எண்ணுவார்கள்.

காலையில் கிளம்பும் முன் தேன் குழலி நகையையும் சேர்த்து இளமுருகு அடகு வைத்திருந்ததால், தன் செயினை மகளுக்குப் போட வந்தவள், யோசனையாகக் கணவனைப் பார்க்கவும். “ போடுமா.“ என்றான். “இல்லை இதுக்கும் ஏதாவது சொல்லுவீங்களே?” என அவள் குறை பட, “உன் மகளுக்கு நீ போடுற, அதுல தடை சொல்ல சட்டப்படி யாராலயும் முடியாது.” என்றான் இளா .

இவர்கள் சம்பாஷணையைக் கேட்ட கமலினி, நளினி , குமுதினி “அண்ணன் ஏன் இப்படிச் சொல்லுது.” என யோசிக்க. “வள்ளி மகளை, அவள் மகளா மாத்திட்டா.“ எனக் குமுதுவும், “அப்பத்தான், அண்ணி தேனு கிட்ட அன்யோன்யமா இருக்கும்னு சொல்லும்.” என்றாள் நளினி.

“இல்லைனா என்ன பண்ணிடுவாளாம், ஆனால் அவளுக்குனு ஒரு குழந்தை பிறந்துச்சு, அப்பறம் தெரியும் அவள் சாயம் என்னென்னு...” எனக் குமுது எதிர்மறையாகவே பேசிய போதும். “இவ ஒருத்தி, தெய்வாவை குறை சொல்ல எதுடா சாக்குன்னு தேடுவா.” என் தங்கையைத் திட்டிய கமலினி, ‘அண்ணன் சொல்றதுலே வேற எதோ அர்த்தம் இருக்கு.‘ என மனதில் உறுதிக் கொண்டாள்.

இன்று தேனுக்கும் மொட்டையடித்துக் காது குத்தலாம் என முடிவெடுத்து அவசரமாகச் சிறு தோடையும் வாங்கிக் கொண்டு வந்தனர். ஆனால் தெய்வாவுக்குத் தான், காது குத்தினால் இரத்தம் வருமே என ஒரே பயம்.

சிறுவர்கள் கையில் உப்பு மிளகு பொட்டலங்களை வாங்கித் தந்தவர்கள் அதனைச் செலுத்துமிடத்தில் காணிக்கையிட்டனர். நெல்லையும் காணிக்கையாகக் கொடுத்து விட்டு நிற்க, வரதராஜன் வந்தவர், “நாலு பேருக்கு தான் டிக்கெட் கொடுத்தாங்க. இன்னைக்குச் சித்திரை மாச சித்திரை நட்சத்திரமாம். யாரோ பெரிய கம்பெனிக்காரங்க செய்கிற வழக்கமான பூஜையாம். இந்த ஒரு பூஜைக்கே அஞ்சு லட்சம் கட்டுறாங்க, அது முடிஞ்சு தான் உள்ள போக முடியும்.“ என அவர் சொல்லிக் கொண்டிருக்க, தினகரன், “அப்ப மீதி ஆளுங்களுக்கு நூறு ரூபா டிக்கெட்ட எடுத்துடுவோம்.“ என்றான்.

வரதராஜன் சொல்வதைக் கேட்ட, தெய்வா எதோ நினைவு வந்தவளாகச் சுற்றும் முற்றும் பார்த்து யாரையோ தேடினாள். கற்பகம் “என்ன மா, பசங்க எல்லாம் இருக்குல்ல, கூட்டத்தில் தவற விட்டுடாதீங்க.“ என்றார்.

தெய்வா , மகளை இறுக்க பற்றிக் கொண்டு நின்றாள். ஏதோ சரியில்லை என உணர்ந்த இளமுருகு, மகளை தான் வாங்கிக் கொண்டு, அவளையும் அணைத்த மாதிரியே நின்றான். அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

சமயபுரத்துக்கும், அவளுக்கும், இந்த பூஜைக்கும் என்ன சம்பந்தம் பார்ப்போம்.
 
Top