• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
519

சோட்டுக்காரி -6

உள்ளூரிலேயே இருக்கும் மாமா சண்முகம் வீட்டிற்கு இன்று, மறுமுறையும் மறுவீடு செல்கிறான் இளமுருகு. தெய்வா உடன்பிறந்தவர்கள் இருந்தும் அவர்களோடு உறவு கொண்டாட அவள் விரும்பவில்லை என்பதை நேற்றைய அவளது பேச்சிலேயே உணர்ந்தவன், வெளியே சொல்லாவிடினும் உள்ளே வருந்துவாள் என மறுவீடு சடங்கிற்கான அவசியம் என்ன என முதலில் மறுத்தான்.

அம்மா கற்பகம் தான் "மறுவீடு போறோம்னு எதுக்கு நினைக்கனும், மாமா வீட்டுக்கு விருந்துக்குப் போறதா நினைச்சுக்கோவேன்." என்றவர் "தெய்வாவுக்கும் அப்பத் தான் எல்லாரோடையும் ஒரு ஒட்டுதல் வரும் தம்பி." என எடுத்துச் சொல்லவும்,

"இப்ப என்னமோ, எல்லாரும் அவளைத் தள்ளி வச்சிருக்க மாதிரி. எனக்கு மட்டும் தான் அவளைத் தெரியலை, மத்த எல்லாரும் கொஞ்சிக் குழாவிட்டுத் தான் இருக்கீங்க. அது பத்தாதாக்கும்." என ஆரம்பித்தான்.

"நேத்து, தெய்வா தான் யாரு என்னன்னு சொல்லியிருக்கும்ல தம்பி. என் சிநேகிதியோட மகள் தான். ரொம்ப வருஷம் கழிச்சு, வள்ளிக்கு ட்ரீட்மெண்ட்காகச் சென்னைக்குப் போனப்ப தான் அவளைச் சந்திச்சோம். அப்பவே தெய்வா, அம்மாவையும் பார்த்துக்கிட்டு, படிக்கவும் செஞ்சுக்கிட்டு அம்புட்டு சூட்டிகையா இருந்தது. அது அம்மா வடிவுக்குத் தான் பொழைக்க மாட்டம்னு தோனுச்சோ என்னமோ. தெய்வாவை அப்பவே என் கையில் பிடிச்சு கொடுத்துட்டா. எனக்கும் வள்ளிக்கும் அப்பவே அம்புட்டு உதவி பண்ணுச்சு, இப்ப கேட்கவா வேணும்." எனக் கற்பகம் சொல்லவும்

"அப்போ, அவள் தேனை தன் குழந்தைனு சொல்றதுக்கு என்ன அர்த்தம்?" என அவன், அம்மாவுக்கும் தெரிந்திருக்கிறதே தனக்குத் தெரியவில்லையே எனச் சந்தேகத்தோடு கேட்டான்.

"அதுக்கென்ன அர்த்தம், தெய்வா தேனை, தன் மகளா நினைக்கிது. சென்னையில் இருந்தப்ப, நானும் வள்ளியும் பேசிப் பேசியே உன் மேல ஆசையை வரவழைச்சிட்டமாம். அதுக்குப் பெத்தவங்களும் இல்லை. வள்ளியக்கா குழந்தையை என் குழந்தையா பார்த்துக்குவேன்னு வந்து நின்னது. இரண்டும் தாயில்லாத புள்ளைங்க. தாயா புள்ளையா இருக்கட்டும்னு பழகவிட்டேன். என் சினேகிதிக்கு அவள் மகளைப் பார்த்துக்கிறோம்னு வாக்குக் கொடுத்திருந்தேன். பெருமைக்குச் சொல்லலை, என் மகனை விட, தெய்வாவை பார்த்துக்க ஒரு நல்ல துணை கிடைக்காது, அதே போலச் சர்வ லட்சனங்களோட ஒரு பொண்ணு என் மகனை விரும்பி அவன் பிள்ளையோட சேர்த்து ஏத்துக்குறேன்னு பாசமா வரும் போது எந்த அம்மா வேண்டாம்னு சொல்லுவா. நீ மறு கல்யாணத்துக்கே பிடி கொடுக்கலை, அது தான் மத்தவங்களைச் சம்மதிக்க வைச்சு கடைசியா உன்கிட்ட வந்தேன். உன் அம்மாவா எனக்கு அந்த உரிமையில்லையா?" என அவர் கேட்கவும்,

"உங்களுக்கு உரிமையில்லைனு யார்மா சொன்னா, ஆனால் அவ தேனை தன்னோட?" என அவன் ஆரம்பிக்கும் போதே, எதிர் அறையிலிருந்து மகளைத் தூக்கி வந்த தெய்வா அவசரமாக அவர்கள் பேச்சில் இடை புகுந்தாள்.

"என்னத்தை, மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா. உங்கள் மகனுக்கு, நான் தேனை நல்லா கவனிச்சுக்கேவேனான்னு சந்தேகம், உங்களுக்கு நல்ல மருமகளா இருப்பேனான்னு சந்தேகம், என் நாத்தனாருங்களை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவேணான்னு சந்தேகம். நான் அரைடிக்கெட்டாம், இம்சையாம், அவர் தலையில என்னைக் கட்டி வச்சிட்டிங்களாம், நான் அவருக்குச் சுமையாம்." என அவள் முகத்தை உம்மென வைத்துக் கொண்டு அவள் அவனது குறைப் பட்டியலை வாசிக்கவும், "ம்மா அயாயே!" எனத் தேனு, தன் அம்மாவுக்குக் கன்னத்தில் முத்தம் தர, இங்குக் கற்பகம் மகனை ஆட்சேபனையாகப் பார்த்தார் .

"அம்மா, நான் அப்படி எல்லாம், எதுவுமே சொல்லலை. அவ கதை விடுறா. நைட்டே என்னை, என்ன பாடுபடுத்தினா, ஃபேன் எல்லாம் தூக்கிட்டுப் போனேன். உனக்கே தெரியுமில்லை." என இளமுருகு அம்மாவைச் சாட்சிக்கு அழைக்கவும்,

தெய்வாவுக்குக் கோபம் பலியாக வந்தது. கணவன், மனைவிக்குள்ளான பர்சனலே கிடையாதோ என மனதில் குமைந்தவள், மகள் கையிலிருப்பதால் பொறுமை காத்து , சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு,

"வள்ளியக்கா கூடக் குடும்பம் நடத்தும் போது, அவங்களைப் பத்தி இவர் இப்படி எதாவது சொல்லியிருக்காரா அத்தை. வள்ளியக்கா, என் மாமா, இப்படி, இப்படி, ஆஹா, ஓஹோன்னுல்லாம் சொன்னாங்க. அதெல்லாம் பொய்யா. ஒரு வேளை அவுங்க மாமன் மகள் பிடிச்சப் பொண்டாட்டி, அதுனால உங்க மகன் அனுசரிச்சிருப்பாங்க. என்னைப் பிடிக்காமல் தான கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அது தான் இப்படிப் பேசுறாங்க. பரவாயில்லை அத்தை. எனக்கு என்ன போக்கிடமா இருக்கு, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்." எனத் தெய்வா வார்த்தையில் ஜாலத்தைக் காட்டவும்,

அம்மாவுக்கு ஏதோ வருத்தம் என மட்டும் உணர்ந்த தேனு, அதைப் போக்கும் விதமாக "ம்மா!" என அழைத்து, தெய்வாவை முத்தமிட்டுச் சமாதானப்படுத்தியது.

"சின்னக் குழந்தைக்குத் தெரியுது, நான் பெத்ததுக்கு உன் அருமை தெரியலையே. நீ வாடாத் தங்கம், அப்படி ஒரு நாள் வராமலா போயிடும். இவனை அப்ப வச்சுக்குவோம்." எனக் கற்பகமும் மருமகளுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்ல, ஒரே நேரத்தில் தன் அம்மாவும், மகளுமே தெய்வாவுக்கு ஆதரவு தெரிவித்து அவள் கூட்டணியில் சேரவும் "அம்மா!" எனக் குரல் கொடுத்தவனை மூவருமே முறைத்தனர்.

"தெய்வா, பாப்பாவுக்கு இட்லியை ஊட்டிவிடுமா!" என அனுப்பி விட்டவர், அவள் மகளைத் தூக்கிச் செல்லவும், "தம்பி, வள்ளியை எப்படிப் பார்த்துக்கிட்டேன்னு எனக்குத் தெரியும். தெய்வாகிட்ட உனக்கு என்ன பிரச்சனை. முதல் கோணல் முற்றும் கோணல்னு போயிடக் கூடாதுப்பா, என் சிநேகிதி மகள்னு சொல்லலை, ரெண்டு மாசம் கூடவே இருந்து பார்த்ததாலத் சொல்றேன்.உண்மையிலேயே அது நல்ல புள்ளை " எனக் கற்பகம் கவலையாகச் சொல்லவும்

"அம்மா, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவ சின்னப் புள்ளையாட்டமா பேசுறாமா." என்றவனிடம் அவன் ஆத்தா, "ஐயா முருகு, பொண்ணுங்க புகுந்த வீட்டுக்கு வந்த புதுசில அப்படி, இப்படித் தான் இருக்குங்க, உன் அக்கா, தங்கச்சிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல நாங்க இருந்தோம், சரியா போச்சு. அதுவும் தாயில்லாத புள்ளை தானே, தெய்வா இப்பவும் பச்சை மண் தான், உனக்கு ஏத்தப் பொம்மையா நீதான் மாத்திக்கனும்." என வினையமாகப் பேரனுக்கு அறிவுரைச் சொன்னார்.

அவரை ஓர் பார்வை பார்த்தவன், "ஆத்தா, நீங்க டயலாக்கை மாத்திச் சொல்றீங்க. நான் தான் அவ இஷ்டத்துக்கு ஆட வேண்டியது இருக்கும்." என அவன் புலம்ப, "தாளம் ஒத்துப் போச்சுன்னா சரி தான்." எனக் கேலி செய்தார்.

வெளியே பூக்காரம்மா சத்தம் கேட்கவும், "போய் உன் சம்சாரத்துக்கு நாலு முழம் பூ வாங்கிக் கொடுத்துச் சமாதானம் பண்ணு." என அனுப்பி விட்டார்.

இளமுருகு வாசலுக்கு வந்தவனிடம், வழக்கமாகக் கொடுக்கும் பூக்காரம்மா, "புதுச் சம்சாரத்துக்குப் பூ வாங்க வந்தீங்களா?" என ஓர் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கவும்,

"அக்கா, இன்னைக்குத் தான் புதுசா பூ வாங்குறேனாக்கும். தங்கச்சிங்களைக் கட்டிக் கொடுத்த நாளிலிருந்து நான் தான வாங்குறேன்." என்றவன், வழக்கமாகச் சாமி படங்களுக்குக் கதம்பமும் சாஸ்திரத்துக்கு வெள்ளை பூவும் வாங்குபவன், ஆத்தா சொன்ன சொல் தவறாமல் மனைவிக்கும் சேர்த்து வாங்கினான்.

அதே கேலி கிண்டலோடு பூக்காரம்மா நகரவும், "இதுக்கு என்ன சொல்லப் போறாளோ?" எனப் புலம்பியவன் நினைவில் நேற்று அவள் ஆணைக்கிணங்க நகையைக் கழட்டியபோது, உணர்ந்த பூவின் மணமும் , பூவை மணமும் சேர்ந்தே நினைவில் வந்தது.

நகைப்போடே உள்ளே வந்தவனை, "புடிப் புடி, பட்டுக்குட்டியை அம்மா பிடிக்கப் போறேன்." என்ற படி வந்த தெய்வாவும், அதன் முன்னே குடுகுடுவென ஓடி வந்த மகளுமாக எதிரே வந்து மோதினர்.

"தேனு விழுந்திராதடா!!!" என மகளைப் பிடித்தவன், அதன் சட்டை நனைந்திருப்பதைப் பார்த்து மனைவியை முறைத்தான்.

"இதென்னடா இவ்வளவு ஈரம்?" என அவசரமாக மகளின் சட்டையை மனைவிக்கு ஓர் ஆட்சேபனை பார்வையோடு கழட்டினான்.

"தண்ணி குடிக்கிறோம்னு சட்டையை நனைச்சிக்கிட்டோம், என்னடா!" எனத் தெய்வா பதில் சொல்லவும்

"அது தெரியுது, வந்தவுடனே சட்டையை மாத்த வேண்டாமா, வேடிக்கை பார்த்திட்டு இருக்க!" எனக் கடிந்தவன், அம்மாவின் அறையிலிருந்து மற்றொரு சட்டை எடுத்துவர செல்லும் முன், கற்பகம் கொண்டு வந்தார்,

"கொடுங்க அத்தை." எனத் தலை வழியாகப் போடும் அந்தச் சட்டையை வாங்கி மாட்டி விட முனைய, "ம்மா, நாணாம்!!!" எனத் தேனு அப்பாவிடம் ஒட்டிக் கொள்ள, "ஏன்டா???" எனக் கேட்ட தெய்வா, கணவனின் முகத்தையும், மாமியாரையும் பார்த்தாள்.

"இது தலை வழியா போடுறதுமா, முகத்தை மறைச்சு போடுவோம்ல, அதுக்குத் தான் இந்த அடம்." எனக் கற்பகம் விவரம் சொல்லவும்,

"அதுக்குத் தான் வேணாமா, அம்மா உனக்குக் கஷ்டமே இல்லாமல் போட்டு விடுறேன்." என மகளையும், ட்ரெஸ்ஸையும் வாங்கியவள், "பட்டுக்குட்டி, தங்க குட்டி, நம்ம கண்ணாமூச்சி விளையாண்டப்போ, எப்படிக் கண்ணை மூடுனோம், அப்பாட்ட காட்டுங்க." எனவும் ,

தேனு கண்ணைச் சுருக்கி மூடிக் கொண்டு கண் மூடி, லேசாகத் திறக்கவும், "நோ சீட்டிங்க். திறக்கக் கூடாது." எனவும் சிரித்தபடி முகத்தை மூடிக் கொள்ள, தெய்வா வேகமாகத் தலைவழியே சட்டையை மாட்டியவள், "பட்டுக்குட்டி கை எங்க இருக்கு?" எனப் பேசி விளையாட்டு காட்டியே சட்டையைப் போட்டு விட்டாள் .

"பட்டுக் குட்டி, கண்ணைத் திறந்து அம்மாவைக் கண்டு பிடிங்க." என இளமுருகு பின்னால் சென்று கதவு அருகே மறைந்து கொள்ள,

சட்டையணிந்ததையும் மறந்து, தேன்குழலி அம்மாவைத் தேட கிளம்பியது. தினமும் சட்டைப் போடும் முன் அழுது ஆட்டங்காட்டும் மகள் இன்று சிரித்து விளையாடுவதிலேயே மனம் நிறைந்தவன், தானும் விளையாட்டில் சேர்ந்து ரகசியமாக அம்மாவை மகளுக்குக் காட்டிக் கொடுத்தான்.

"ஐயே, பட்டுக்குட்டி கண்டுபிடிச்சிட்டாளே, அம்மா அவுட்டு." எனத் துள்ளிக் குதித்து மகளை அள்ளிக் கொஞ்சியவளிடமிருந்து பேத்தியை வாங்கிக் கொண்ட கற்பகம், சுடிதாரிலிருந்தவளை, " தெய்வா சேலையைக் கட்டிக்கிட்டு நீயும் கிளம்பு. மதிய விருந்துக்கு அழைச்சிருந்தாலும், சாப்பிடுற நேரத்துக்குப் போகக் கூடாது. முன்னாடியே போயிடனும்." எனச் சொல்லித் தந்தார்.

"அத்தை, கிளம்புறேன். ஆனால் அவசியம் சேலைக் கட்டனுமா. சுடிதார்லையே போறேனே!!!" எனச் சலுகையாகக் கேட்கவும், கற்பகம் ஆட்சேபனையாகப் பார்த்தார்.

"அம்மா, இந்த அரைடிக்கெட்டுக்கு, சேலை, சுடிதார் எதுக்கு? ஒரு ப்ராக்கை போட்டு அனுப்புங்க. அதுவே சரியா போகும்." எனக் கேலி செய்தான் முருகு. அதில் ரோசமானவள்,

"நான் ஒன்னும் அரைடிக்கெட்டு இல்லை, சேலையே கட்டிட்டு வரேன்." என வீம்பாகச் சொல்லிவிட்டு அறைக்கு வந்தவளுக்குத் தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை.

"அம்மா, சேலைக் கட்டி பழகுடின்னு சொல்லும் போதே பழகியிருக்கலாம்." எனப் புலம்பிக் கொண்டே, பெட்டியை ஆராய்ந்தவள், கனம் குறைந்ததாக ஒரு மைசூர் சில்க் சேலையை எடுத்து வைத்து விட்டு, இளமுருகு கிளம்பி விட்டானா என நோட்டம் விட்டாள்.

கால் மணி நேரம் கழித்துத் தங்கள் அறைக்கு உடை மாற்ற வந்தவன், அவள் அப்போதும் தயாராகாமலிருக்க, ஒரு பார்வை மட்டுமே பார்த்தான். காலையில் எழும்போது இருந்த கோலத்திற்குப் பிறகு இருவருக்குமே, ஒருவரை ஒருவர் பார்ப்பதில் சங்கடம் இருந்தது.

ஆம் முதல் நாளிரவு, பெடஸ்டஸ் பேனையும் அவள் தலைமாட்டில் வைத்து ஆன் செய்துவிட்டு, கீழே படுக்கப் போனவன், ' மறுபடியும் மேல விழுந்தான்னா' என்ற யோசனையோடு அவளருகேயே தலையணை அணைக் கட்டி அடுத்துப் படுத்தான். ஆனால் காலையில் நளினி கதவைத் தட்டியதில் கண்விழித்த போது, இங்கலை, பிங்கலை நரம்புகள் பின்னிப் பிணைந்து உடலுள் ஓடுவது போல் இளமுருகு, தெய்வா இருவருமே கிடக்க இருவருடைய கூட்டு முயற்சியில் தான் விடுபட வேண்டிய நிலை. கண்விழித்த தெய்வாவும் தன்னிலை உணர்ந்து கண்ணை மூடி சுருக்கிக் கொண்டு அவசரமாக அவனிடமிருந்து உருவி கொள்ள, அவனும் பதட்டமாகவே விலகினான்.

"ரூம் பூரா கட்டில் போடனும் போல, இம்சை!" என்று விட்டுச் செல்ல, அவளுக்கு முகம் சுருங்கிப் போனது. வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு, குளியலறை புகுந்தவள், ட்ரெசிங் அறையையும் சேர்த்து அடைத்துக் கொள்ள, அறைக் கதவைத் திறந்து நளினியிடமிருந்து மகளை வாங்கிக் கொண்டான்.

தெய்வாவுக்கு , அவன் தன்னை அரைடிக்கெட் , இம்சை என்றதில் கோபம். அதை அவள் வெளிப்படுத்தும் விதமம், இளமுருகுக்கு சிறுபிள்ளை தனமாகவே தெரிந்தது. அதிலும், இவள் சேலை கட்டத் தெரியாது என்றால் , என்ன சொல்வான். தேவா எப்படி சமாளிப்பாள் , அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
 
Last edited:
  • Like
Reactions: dsk

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
519
Nice epi
ingali, pingalai narambugalna yenna???
உடலில் ஒன்றோடு ஒன்று பின்னிச் செல்லும் நரம்புகள். கோவிலில் பாம்பு இரண்டு பின்னியது போல் சிலை அதை தான் குறிக்கும்.
 
Top