• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
வான் பூக்குதே ஜதியோடு


அத்தியாயம் 2 :


இரண்டு வருடங்களுக்குப் பிறகு



"பிரச்சனை என்னைத் தேடி வருதா? இல்லை, நான் பிரச்சனையைத் தேடி போறேனான்னே தெர்லயே! கல்யாணந்தான் நமக்குச் சரியா வாய்க்கலன்னு பார்த்தா! இனி வேலையும் நமக்கு ஒழுங்கா வாய்க்காது போல"

சென்னை மாநகரம், பல்லாவரம் ஏரியாவின் எஸ்.ஐ ஆக இருந்து கொண்டு, இப்பொது போலீஸ் ரோந்து ஜீப்பிற்கு டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கமல், இதனை நூறாவது முறையேனும் நினைத்து மௌன கண்ணீர் வடித்திருப்பான்.

பின்னே பெரிய அதிகாரி அழைக்கிறார் என்று அவன் நினைத்து வந்தது என்ன? இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருப்பது என்ன?


"என்னா யா கமலு! பேரிலோருக்கக் கிக் வாழ்க்கை ல லேதாவா? ப்ரமோஷன் வாங்கினா தான் சம்சாரம் (குடும்பம்) நடத்துவேன்னு உன் பாரியா அம்மா வீட்டுக்குப் போயிருச்சாம். எங்கூட வற்ரியா வென்டனே வாங்கித்தரேன்"

'சுந்தரத் தெலுங்கும், ததுங்கிணத்தோம் தமிழுமா கலந்து கட்டி எவ்ளோ ட்ரிக்கா பேசி, கூட்டிகிட்டு வந்து கூடவே சுத்த வெக்கிறாரு யா இந்த மனுசன்'

பக்கத்தில் ஓங்கு தாங்காக வஞ்சமே இல்லாத உயரத்தோடும், அகண்ட வளர்த்தியோடும், ஊடுருவும் பார்வையைச் சுற்றிலும் வீசியப்படி அமர்ந்திருந்தவனைப் பார்த்தான் கமல்.


அவன் "புகழ்". பெற்றவருக்கும், மற்றவருக்கும் "வான்புகழ்" டிபார்ட்மெண்ட்டில் "ஸ்கெட்ச்" புகழ்.

ஸ்கெட்ச் என்பது, அவனது அடைமொழி. காவல் துறையில் நுழைந்த இத்தனை ஆண்டுகளில் இவன் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கப்பட்ட ரவுடிகளின் லிஸ்ட் பெரியது. இவன் கட்டம் போட்டுச் செயலில் இறங்கினால் அது எப்போதுமே தோற்காது என்பது காவல் துறையில் நிலவும் பேச்சு. அதனாலே இந்தப் பெயர்.

இரண்டு ஆண்டுகள் மதுரை கோயம்பத்தூர் எனப் பணியாற்றியவன், இப்பொது மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறான்.

டெபுட்டி கமிஷனர் ஆ போலீஸ், கிரைம் பிரான்ச்.

படித்தது கிரிமினலாஜி. இரண்டு வருடம் எஸ். ஐ பணி. பின் கிரைம் பிரான்சிற்கு மாற்றல்.

பிறந்தது சென்னை என்றாலும் ஆந்திராவையும் தமிழ் நாட்டையும் சேர்த்து பிசைந்த கற்சிலை இவன். தாய் காக்கிநாடா, தகப்பன் வீரம் விளையும் மதுரை.

சொக்கன் மீனாட்சியிடம் சொக்கி போனது போல், காஞ்சனாவில் அழகில் சொக்கி போன அழகர் சாமி, அவரைக் காதலித்து மணந்து, காவல் பணியின் காரணமாகச் சென்னையில் செட்டில் ஆனவர்.

கை சுத்தமும் நேர்மையுமான ஆள் அழகர் சாமி. அதோன்றே போதாதா? பணி இட மாற்றத்தால் அழகர் சாமி ஊர் ஊராகச் செல்ல வேண்டி இருக்க, வீட்டில் மீனாட்சி ஆட்சியே நடந்தது.

குடும்பத்தை அழகாக எடுத்து செல்வதே அழகர் சாமிக்கு போதுமாய் இருக்க, மொழி பற்றின போர் கொடியையெல்லாம் தூக்கவில்லை. அதை விடக் காக்கிநாடா காஞ்சனாவின் தெலுங்கில் அவருக்குமே மயக்கம் தான்.

அதிலும் லீவு நாட்கள் என்றாலே, வேலை அயற்சியைப் போக்கி கொள்ள வீட்டிற்கு ஓடி வந்துவிடும் அவரிடம்,

"நா பிரியமைன பாவா" என்று அன்போடு அழைத்து "நுவ்வு சாலா அலசிபோயிநட்லு கனிபிஸ்டுன்னாவே, சாலா எக்குவ பணியா"
(பார்க்க ரொம்பக் களைச்சுப் போய்த் தெரியறீங்களே! நிறைய வேலையா?)

அக்கறையை டன் கணக்கில் வழிய விட்டுக் காஞ்சனா தெலுங்கில் கேட்கும் அழகிலும், அவருக்குப் பிடித்த உணவாகச் செய்து பிரியத்தை வெளிப்படுத்தும் விதத்திலும், மூளை சூடெல்லாம் ஓடி ஒளிந்து விடும் அவருக்கு.

"ஏமி யா நுவ்வு அது தான் ஊர் ஊரா தூக்கி அடிக்கிறாங்கல்லே. உன் நேர்மையை மூட்ட கட்டி வெச்சா தான் ஏமிட்டி? ஒக்க பரதேசமு இருந்தோமா! சொந்தமா ஒரு வீட்டை கொன்னாமு ன்னு இருக்கலாமில்ல. எப்புடு செட்டில் ஆவறது. கொஞ்சமாவது குடும்பம் பத்தின அக்கறே உன்னாவா நீக்கு "

இந்த வகையான சராசரி பெண்ணாக என்றும் நடந்ததில்லை காஞ்சனா. பிக்கல் பிடுங்கல் செய்யாமல், அவர் நேர்மையாய் சம்பாரிக்கும் ஊதியம் வைத்து, மகனையும், தன்னையும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்பவரிடம், சொக்கி போகாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

அம்மாவிற்கும் மகனிற்க்கும் நேரடி பேச்சு பெரும்பாலும். தகப்பனிற்கும் மகனுக்கும் தொலை தொடர்பில் மட்டுமே பேச்சுக்கள். விளைவு புகழ் நாவில், தெலுங்கும் தமிழும் படாத பாடு பட்டாலும் வரவேற்கவே செய்தார்.

தன்னைப் போலவே மகனும் காவல் துறையில் பணியாற்றுவதில் மிகுந்த பெருமை அது ஒரு நிறைவை தந்ததோ என்னவோ, பணியில் இருக்கும் போதே, மாரடைப்பில் அவர் உயிரும் பிரிந்திருந்தது.

"எனக்கு ஹையரா நீ வரனும். உனக்கு நான் சல்யூட் அடிக்கணும் டா மவனே" சொல்லி மாய்பவர் அவன் அப்படியான வேலையில் சேரும் முன்னமே போய்ச் சேர்ந்திருந்தார்.

பணியில் இணைய இரண்டு நாட்கள் முன்னமே வந்திருந்தவன், இரவு பகலாகச் சென்னையை வலம் வந்து கொண்டிருக்கிறான். கண்களில் எப்போதும் ஒரு தேடல் இருந்தாலும், கூடவே குறு குறுவெனப் பார்வையைச் சுழல விட்டுகொண்டிருந்ததில் சுற்றுப்புறத்தை பற்றின ஆராய்ச்சி தான் மிகுந்திருந்தது.

இப்போதும் இரவென்றும் பாராமல் ரோந்தில் இருக்க,

'மனுசன் ஆப் டியுட்டிலே என் கடமை எம் ஜி ஆரா இருக்காப்ல னா? ஆன் டியூட்டில வந்துட்டா சிங்கம் சூர்யா தான் போலயே. அய்யய்யோ! அப்புறம் என் பாடு" கமல் அலறினாலும்,

இப்பொது அதை விட மிக முக்கியமான சந்தேகம் உதித்தது அவனுக்கு.

'ஆமா இவருக்குக் கல்யாணம் ஆயிருச்சா? இல்லையா? ம்ம்" இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தான் கமல்.

முறுக்கேறின தேகம், அவனது காபிக்கோட்டை நிறத்திற்கு எடுப்பாகவே தெரிந்தது. யோசனையோடு இருக்கிறான் நெரிந்திருந்த நெற்றியும், புருவமும் காட்டி கொடுத்தது. மழிக்கப் பட்டு இறுகி கிடக்கும் தாடையும், கீழ் உதட்டை அழுத்தமாகக் கடித்தபடி, கிரீடமாய் வீற்றிருக்கும் அடர் மீசையை இரு கைகளால் நீவி எடுத்து இழுத்து முறுக்கும் பாங்கு அவன் கம்பீரத்தை பத்திரம் பண்ணியது.

இப்படி அவனின் எல்லாம் கமல் கண் முன் எல்லாம் வந்து போக,

"ம்ம் இவ்வளவு வெறப்பா இருக்காருன்னா? மனுஷனுக்கு ம்ம்ஹும் நிச்சயமா கல்யாணம் ஆகி இருக்காது. இல்லைனா பேய் உலவுற இந்த நேரத்துல மனுசன் நகர் உலா வருவாரா? இல்ல வீட்டுகாரம்மா வரத்தான் விட்டுடுமா?" அவன் நிலை வைத்து ஒரு முடிவுக்கு வந்திருந்த கமல் பெருமூச்சோடு சாலையில் கண் பதித்தான்.

'எனக்குத் தான் விதி என் பொண்டாட்டி உருவத்துல வந்திருக்கு. அவராவது சந்தோசமா இருக்கட்டும். அடியே கனியமுது, ப்ரோமோஷன் மட்டும் கிடைக்கட்டும் உன்னிய ஜூஸ் பிழிஞ்சு எடுத்திடுறேன் இரு டி" கருவிகொண்டிருந்தவனை,

"ஏமி யா கமலு? மீரு ஏதைனா கண்ணுக்குன்னாரா? ஏமி தெரிஞ்சுது" புகழின் குரல் கலைத்தது.

"என்ன, என்னது சர்" ஒரு நொடி திடுக்கிட்டான் கமல்.

ஜீப்பில் ஏறியதிலிருந்து இடது பக்கவாட்டில் மட்டுமே பார்வை பதித்திருந்தவன், திடுமெனத் திரும்பி கேட்டால் அவனும் தான் என்ன செய்வான்.


"ரெண்டு நிமிஷாலு என்னே பாக்குறதும், ரோட்ட பாக்குறதுமா இருக்கே. பார்த்தே தானே? சூடலைனா எனுக்கு எப்டி தெரிஞ்சிருக்கும்? அன்டே ஏமி தெரிஞ்சது கேட்டேன்?"

'இதுக்கு ஆமாம்ன்னு சொல்லணுமா? இல்லைன்னு சொல்லணுமா? என்ன மாதிரி கேள்வி இது? ஏடு குண்டல வாடா குறை நாளும் நல்லா போக அருள் புரிப்பா'

"அதெப்டி சர் உங்களுக்கு. அது.. நீங்க.. அந்தப் பக்கம்" திணறியவன் "சர் ஆனாலும் நீங்க ரொம்பப் போலீசா இருக்கீங்க சர்"

"யோவ்" லேசாகப் புன்னகை புரிந்தான்.

"இதுலா போலீஸ் காரனுக்கே உண்டாலி அலர்ட் யா. இவ்வளவு நேரம் ஸ்டேடியா போய்ட்டிருந்த ஜீப்பு சின்னடி நேரமா தடுமாறுது. வண்டிலே எந்தப் பிரச்சனையும் இல்லே. அப்ப ஓட்றவன் கிட்டே பிரச்னே கதா. ரெண்டு நாளா காரணக் காரியம் தெரியாமல் என்கூடவே சுத்துறே. சுத்த வெக்கிறேன். அவுனு கதா. சோ சிம்பிள் யா. இதுக்குப் போய்"


'கேள்வி தான் அப்படின்னு பார்த்தா பதில் கூட அப்டியே வருது'

விழித்தாலும் புகழ் சாதாரணமாகச் சொல்லியதை கேட்ட கமலுக்குத் தான் அதன் அருமை தெரியும்.

"ஏய் நான் லா யார் தெரியுமா? என் திறமை தெரியுமா? எனக்கு உடம்பு முழுக்கக் கண் இருக்கு தெரியுமா? ஆ.. ஊ.. "

எனக் கெத்து காட்டி பந்தா செய்யாமல் புகழ் பேசினது அப்படியொரு நன் மதிப்பை தந்தது.

தன்னை விடப் பதவியில் ஒரு நிலை முன்னே இருப்பவர்கள் கூட, புதிதாக வந்திருந்த போது இவனிடம் விலகலையும் அதிகாரத்தையும் மட்டுமே காட்டி இருக்க, ஒரு சகஜ மனப்பான்மை, ஒரு வெளிப்படை தன்மையை, பார்த்த நொடியில் இருந்து புகழ் ஒவ்வொரு விஷயத்திலும் விதைத்த படி இருக்கவே, கமல் மொத்தமாய்க் கவிழ்ந்திருந்தான்.

ஹீரோ ரேஞ்சில் கொண்டு போய் வைத்து விட்டவன், ரசிகர் மன்றம் மட்டும் தான் வைக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் புகழுடன் இருந்தால் அதற்கான சாத்திய கூறுகள் உண்டு.


"அப்ப எல்லாம் தெரிஞ்சிகிட்டு தான் சுத்தல்ல விடுறீங்களா சர். ஆனாலும் அழுத்தம் சர் நீங்க. நான் பாட்டுக்கு ஸ்டேஷன் ல இருந்திருந்தாலாவது நாலு கேஸ் பாத்திருப்பேன்"

அவன் இவன் அளவிற்குத் தோழமையுடன் பேசவும் இவனிற்கும் தன்னைப் போல வந்தது.

"ஆஹான்.. அவுனா"

புகழ் அவனைப் பார்த்துச் சட்டெனக் கேட்ட அந்த வார்த்தையிலும், அதைக் கேட்கும் போது வெளிப்படுத்திய தோரணையிலும், ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாக வளைத்த விதத்திலும், அப்படியொரு ஆதிக்கம் வந்தமர்ந்திருந்தது.

புகழை எப்படி எடுத்துக் கொள்ளக் குழம்பியே போனான் கமல்.

வாயை மூடிக்கொண்டு இருப்பது வேலைக்கு நல்லது தனக்கே சொல்லி கொண்டான்.

வாகனம் பள்ளிக்கரணை இருநூறு அடி சாலையில் இருக்கும் பாலம் அருகே பயணித்தது. கிட்ட தட்ட கமல் எத்தனை முறை அவ்விரவிலேயே அவ்விடத்தைச் சுற்றி வந்தானென்று கேட்டால் கணக்கே இல்லை. சுற்றி முற்றி போனாலும் அங்கே தான் பயணிக்கச் சொன்னான் புகழ்.


"ம்ம்ப்ச் " அவனையும் மீறி சலித்துப் போய்க் கமல் உச்சு கொட்டி விடப் புகழின் காது விடைத்தது.

"வண்டிகோ ஸ்டாப் செய் கமல்"

சடன் பிரேக் போட்டு அனிச்சையாக வாகனத்தை நிறுத்திய பிறகே உணர்ந்தான், புகழ் சொன்னதைச் செய்திருக்கிறோமென.

சற்று உதறலுடன் கமல் அவனைப் பார்க்க, சரியாக அந்நேரம் வாட்ஸப்பில் செய்தி வந்ததற்கான ஒலி வர " சரியா அஞ்சு நிமிஷாலி டைமு நீக்கு டானிலோபலா (அதுக்குள்ள) முடிச்சிருக்கணும்"

சொன்னதோடு முடிந்ததெனப் புகழ் இறங்கி வாகனத்தின் எங்கோ வெளிச்சத்தைப் பார்த்தபடி பேனட் மேல் விரல்களால் தாளம் போட, இங்குச் செய்தியை முழுக்கப் படித்துக் கிரகித்த கமலுக்கு வியர்த்துக் கொட்டியது.


அவன் வரையில் ஸ்டேஷனுக்கு வரும் கேஸ்களைப் பார்ப்பதும், விசாரிப்பது மட்டுமே இது வரை. இரண்டொரு முறை கொலை குற்ற வழக்குகளைப் பார்த்திருக்கிறான்.

"யோவ் உனக்கெல்லாம் அனுபவம் பத்தாது யா" என்ன? ஏது? யாரென்று பார்ப்பதற்குள்ளே, அதுவும் வந்த வேகத்தில் கை மாறி விடும்.

'பார்க்க விட்டாதானே அனுபவம் வரும். போங்க யா நீங்களும், உங்க அனுபவமும்' சலித்துக்கொள்ள மட்டுமே முடியும்.


ஆனால் இது?

செய்யவிருக்கும் காரியம் அத்தகையது. இப்பொது புரிந்தது, பணியில் சேர்ந்து முழுதாக ஒரு வருடம் கூட முடித்திருக்காத தன்னைத் தான் தான் வேண்டுமென்று கேட்டு அழைத்துக்கொண்டது.

"சர்.. சாரி சர்.. ஏதோ தெரியாம" அவன் முன் வேகமாய்ப் போய் நிற்க "ஏமையா பயமாருக்கா" லேசாகப் புன்னகைத்தப்படியே புகழ் கேட்டதில் அவன் அனுமதி இல்லாமலே தலை இல்லையென ஆடியது.

"இப்புடு சலிச்சுக்காம ஓட்டுவியா? வெல்டாமா?" (போலாமா)

அதற்கும் ஆடியது கமலின் தலை. இதற்கு மேல் கேட்டால் பதில் வராது. கேட்கவும் கூடாது. இதைச் சொன்னதே பெரிய விஷயம் அவன் அறிந்ததே.

"சூடு ஸ்வெட் ஆகுது .. தொடச்சுக்க" என்றவன் "போய் ரெண்டு டீ தீஸ்க்கொன்னு வா, குடிச்சிட்டுப் போவலாம் " சொல்லிவிட்டு அங்கேயே கை கட்டி நின்று கொண்டான்.


கமலுக்கு முகம் மட்டுமல்ல. இன்னும் சில மணி நேரத்தில் நடக்கபோவதை நினைத்து உடலுமே வியர்த்தது. உடை வரைக்கும் தொப்பலாக நனைத்திருந்தது.

"ஊப்ப்ப்ப்" நீண்ட மூச்சொன்றை இழுத்து விட்டான் கமல். இதெல்லாம் மிகவும் புதிது. ஏதேதோ சினிமா காட்சிகள் எல்லாம் ஒரு முறை வந்து போனது கண் முன்.


ஆர்வம் ஒரு பக்கம். உதறல் ஒரு பக்கம்.

"மனுஷன் எவ்ளோ கெஷுவலா இருக்காரு"

ஒரு முறை புகழை திரும்பி பார்த்தான். உடல் மொழியில் அவ்வளவு நிதானம். ஒரு காலை வாகனத்தின் மீது வைத்து, மற்றொரு காலை அழுத்தமாகப் பூமியில் ஊன்றி, கைகளைக் கட்டி வானத்தை எங்கோ வெறித்து நின்றிருந்தான்.

"இது போல எத்தனை பார்த்திருப்பாரு! இந்த நிதானம் கூட இல்லைனா எப்டி! கத்துக்க டா கமல் கத்துக்க"

இரவு நேரத்து பணி இருக்கவே,அங்கிருக்கும் தொழில் நுட்ப பூங்கா ஜக ஜோதியாக வெளிச்சம் கொண்டு இயங்கி கொண்டிருக்க, அங்கிருக்கும் டீ கடையும் விழித்திருந்தது.

கம்பெனியில் வேலை செய்யும் சிலர், வேலை அலுப்பை உதறவும், நிலவும் குளிருக்கு இதமாகவும் சிகரெட்டை இழுத்தபடி தேநீர் குடித்துக் கொண்டிருக்க,

கமல் தெரிந்து செய்தானோ! அல்லது அது தான் நடக்குமென இருந்ததோ! புகழ் டீ சொல்லி இருந்ததைக் கவனம் கொள்ளவில்லை. அவன் எப்போதும் அருந்தும் சுக்கு மல்லி காபி இரண்டை வாங்கி நகர்ந்திருந்தான்.

"சர்" புகழிடம் நீட்டியவன் அவன் வாங்கவும், டிரைவர் சீட் பக்கம் நகர்ந்து கமல் அருந்த ஆரம்பித்து விட்டிருந்தான். ஆனால் புகழுக்கு தான் தொண்டையில் சிக்கி கொண்டது. சுக்கின் காரத்தையும் மல்லியின் மணத்தையும் நாவு ருசி பார்த்து, சுதாரித்து உமிழும் முன்னே, காபி தொண்டைக்கு இறங்க, சுவை சுண்டி இழுப்பதற்குப் பதில் எதையெதையோ கிளறி விட்டிருந்தது.


எதிர்பார்க்கிவில்லை அவன். மூச்சுக் குழாயில் காபிதண்ணி தவறிபோய் இறங்கி இருக்க, ஏற்கனவே மென்னியை பிடித்து இறுக்கி கொண்டிருந்தவளின் நினைவலையும் அதோடு சேர்ந்து இறங்கியது. கண்களில் நீர் திரள, மூக்கில் நீர் வர, உயிர் வரை ஏதோ ஒன்று சென்று உருவி எடுக்கப் பலமாக இருமினான். இருமிக்கொண்டே இருந்தான்.

"என்னாச்சு சர்" கமல் தலை தெறிக்க ஓடி வந்தவன் முதுகை தட்டி கொடுப்பதா வேண்டாமா குழம்பி நின்று பின் கையில் இருந்த கப்பை வாங்கிப் பேனட் மீது வைத்தான்.

"என்னத்தயா வாங்கிட்டு வந்த நேனு ஏமி கேட்டேன் " திட்ட கூட முடியவில்லை. இருமியப்படியே தலையில் தட்டி தன்னைத் தானே சுதாரிக்கப் பார்க்க, ம்ம்ஹும் ஒன்றும் சரியான பாடில்லை. நெஞ்சை நீவி விட்டப்படியும் குனிந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டும் அப்படியொரு இருமல் இருமினான்.


இப்பொது கொஞ்சம் இருமல் மட்டுபட ஆரம்பித்திருக்க, அண்ணார்ந்து மூச்சை ஒன்று கூட்டி நன்றாகத் தொண்டைக்குள்ளே உறுமி சற்று நிதானத்திற்கு வந்தவனுக்கு,

"யாரோ உன்னை நினைக்கறாங்க போல ய்யா! அது தான் பொரையேறுது! என்ன அப்டி பாக்குற! நிஜமா யா! மனசார ஒருத்தவங்களைப் பத்தி நினைச்சா அவங்களுக்குப் புரை ஏறுமாம்! "

கேட்டுவிட மாட்டேனா தவித்ததும், கேட்டுவிடக் கூடாதென வைராக்கியம் கொண்டிருந்த இனிமையான குரல் காதோரம்.

கூடவே "சரியாயிரும்.. சரியாயிரும். மெல்ல.. மெல்ல" எப்போதோ முதுகை நீவி விட்ட போது அனுபவித்த இதம் இப்போதும் தீண்டி சென்றது.

அடுத்த நொடி பரபரப்புக்குள்ளாகி இருந்தது மூளை. தன்னைப்போல வெடுக்கெனத் தலை திருப்பிச் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டான். வெற்றிடம் தான் வரவேற்றது. எங்கே அவள்? அதற்குள் எங்கே சென்றாள்? இப்பொது உணர்ந்தேனே! உணர்ந்தேனா? கற்பனையா? அலைபாய்ந்தது கண்கள். மிடுக்கை மீறி தவிப்பை உடல் மொழி வெளிப்படுத்த மீண்டுமொரு புரையேறல்.

'எந்துக்கு டி என் உயிர வாங்குற' தலையில் தட்டி கொண்டிருந்தவனிடம்

"சர் மறுபடியும் மறுபடியும் யாரோ உங்களை ரொம்ப நினைக்குறாங்க போலச் சர்" எடுத்து வந்த தண்ணீர் பாட்டிலை நீட்டி சொன்ன கமலை, முறைத்த முறைப்பில் அவன் எரியவில்லை அவ்வளவு தான். அப்படியொரு காரம் அதில்.

முறைத்து விடுக்கென்று புகழ் வாங்கித் தொண்டையில் விட்டுக் கொள்ள 'ஒரு காபியை குடிக்கத் தெரியல, மொறைப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல' நினைத்து மட்டுமே கொண்டான் கமல்.


சொல்லி இருந்தால் தெரிந்திருக்கும் சங்கதி!

ஏனென்றால் அந்தக் குரல் இதையும் சொல்லி இருந்ததே அன்று! அப்போது சிரித்தான்! இன்றோ கொன்றிருப்பான்!

அமைதியாகக் கமல் நகர்ந்து விட, தலையின் பின் பக்கம் இரண்டு கைகளையும் கோர்த்து, எதையோ மறக்க நினைத்து, நினைத்ததை முடியாமல் நடையோ நடையென்று நடந்தான்.

அவ்வப்போது இருமல் வேறு எட்டி பார்த்தது. அவ்வளவு எரிச்சல் மிக, அப்போது சரியாகப் பேனட் மேல் வைத்திருந்த கப் பார்வையில் பட, அடுத்த நிமிடம் விசிறி அடித்திருந்தான் பூமியில்.

இது போல் அவளையும் வீசி எறிய முடியவில்லை என்றதன் உண்மை தந்த எரிச்சல்! அவள் தன்னைத் துச்சமென வீசி விட்டு சென்று விட்டாளேயெ
ன்ற கோபம்! எல்லாம் உந்த முரடனாய் மாறி இருந்தான்.
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,926
தெலுங்கு பாஷை தான் கொஞ்சமோ கொஞ்சம் 🙄🙄🙄🙄🙄புரியலை சகி, ஒரு S.I க்கு இந்த கதியா வரணும் கமலு நீ ரெம்ப பாவம் 😧😧😧😧😧😧😧
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Super sis
 
Top