• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320

அத்தியாயம் 3

வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தாலும், சூரியன் எட்டி கூடப் பார்க்க முடியாது கருமேகங்கள் சூழ்ந்து, மழையைத் தூவி கொண்டிருந்த அருமையான காலை.

மூடியிருந்த சாளரத்தையும் தாண்டி ஊடுருவி வரும் குளிர்.

ஈரப்பதமான காற்றோடு கலந்து வந்த நாசி நிரப்பும் மண் வாசம்.

விடியல் என்னவோ அழகாகவே இருந்தது. ஆனால் விடிந்த நாள் புகழுக்கு அழகானதா? என்றால் சந்தேகமே.

இன்னும் காஞ்சனாவுடன் சுமூகமாகவில்லை. தாயை பார்க்கவென அவன் வீடு வர, அவரானால், மகன் வீடு வந்து சேர்ந்ததைக் கண்களில் நிரப்பிக்கொண்டு, அறைக்குள் புகுந்து கொண்டார்.

கமலை போகச் சொல்லியவன்,

"ம்மா.. ஏன்டி ம்மா.. நுவ்வு! கதவத் திறம்மா! உன்ன பாக்க நான் வந்தா நீ பாட்டுக்கு உள்ளுக்கப் போய்ட்டே" புகழ் எவ்வளவோ கதவை தட்டியும் திறக்கவில்லை.

"இப்புடு நீ திறக்கலே உடைச்சிட்டு உள்ள வருவேன்! என்னைத் தெரியுமில்லே" சொன்னதோடு ஓங்கி தட்டவும் ஆரம்பித்த பிறகு தான் திரு வாய் மலர்ந்தர்.

"இதி அக்கறே ரெண்டு நாளா எங்கடா போச்சு! வந்துட்டான் பெருசா பாசம் இருக்கவனாட்டம்! போ போய்த் தூங்கு போ" என்றிருந்தார், அதுவும் போனால் போகிறது என்பது போல் தான்.

"உனுக்கு என்னைத் திட்டணும் அன்டே! முகத்தைப் பாத்து திட்டு! வா.. ம்மா! காஞ்சனம்மா"

"உன்ன தூங்கு சொன்னேன் ரா"

அதற்கு மேல் ம்ம்ஹும் சத்தமே இல்லை. அவ்வளவு தான். இனி என்ன செய்தும் அவரைப் பேச வைத்து விட முடியாது என அவனுக்குத் தெரியும்.

அதோடு நாள் முழுக்க அலைந்ததும், சதா யோசித்து மூளைக்கு வேலை தந்ததும், அப்படியொரு அயர்வை தந்திருக்க, கொஞ்சம் ஓய்வு கொடேன் உடலும் மூளையும் கெஞ்ச, அவனும் அமைதியாகப் படுத்துக் கொண்டான்.

இதோ விடிந்தும் விட்டது. தன் வரவை ரிப்போர்ட் செய்ததோடு சரி. இன்றைக்குப் பதவியைச் சார்ஜ் எடுத்து, பணியில் முறையாகச் சேர நேரத்திற்குச் செல்ல வேண்டும். அதோடு இன்னும் சில வேலைகள் வரிசை கட்டி இருந்தது.

அதை விட முக்கியமான கடினமான விஷயம் ஒன்று உள்ளது. அது காஞ்சனாவை சமாதானம் செய்து வழிக்குக் கொண்டு வருவது. அவ்வளவு சீக்கிரம் வழிக்கு வருபவர் அல்ல என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் அப்படியே விட முடியாதே.

தவறு மொத்தமும் அவன் மீது. எந்த ஊரிற்கு மாற்றல் ஆனாலும்..

"என் பாவா கூட என்னை அலைகழிக்கலே ரா! நீ படுத்துற பாடுருக்கே! உன் மூஞ்சிய பாக்காம எனுக்கு வேற சோறு இறங்கி தொலையாது" அசாராமல் திட்டி கொண்டாவது வந்து விடுவார். அப்படியிருக்க இவன் பாட்டிற்குக் கிளம்பி சென்னை வந்தது தவறு தானே!

வேண்டுமென்று செய்யவில்லை. மேலிடத்தில் அப்படியொரு உத்தரவு. அவன் ஏற்கனவே சம்பந்தப்பட்டிருந்ததால் அவனை வைத்தே முடிக்க ஏற்பாடு. அதுவும் காதும் காதும் வைத்தது போல்.

இதையெல்லாம் சொல்லிகொண்டிருக்க முடியாது. சொன்னாலும் "இத கூடச் சமாளிக்க முடில னா என்ன ரா போலீஸ் காரன் நுவ்வு" வெறுப்பேற்றி பார்ப்பார். அவருக்குத் தெரியும் இவ்வேலை எவ்வளவு கடினம் என. ஆனாலும் பிடி கொடுக்கமாட்டார். இருக்கும் ஒரே சொந்தம்.

அடித்தாலும் பிடித்தாலும் அவர் தான். வேலை நேரங்கள் தவிர்த்து அவரோடு பேசாமல் இவனுக்கு எதுவும் ஓடாது. அதற்காகவே இழுத்து வைத்துப் பேசுவான்.

வீட்டிலும் கஞ்சி சட்டையாக இருக்கும் காக்கி சட்டை அல்ல அவன். அதற்காக நினைத்ததும் சுலபமாக நெருங்குபவனும் இல்லை.

எங்கே எதில் யாரிடம் இயல்பாய் இருக்க வேண்டுமோ அங்கு அவன் இயல்பு தானாய் வெளிப்படும்.

எங்கே எதில் யாரிடம் நிமிர வேண்டுமோ அங்கே தனி நிமிர்விருக்கும். தனக்கென ஒரு பாதை. தனக்கென ஒரு விதி அமைத்து அதன் படி நடப்பவன்.

ஏற்கனவே ஒரு உறவு இல்லையென்று ஆகி விட, இன்னொரு உறவு இருக்கிறதா, இல்லையா தெரியாது ஊசலாட்டத்தில் இருக்க, இருக்கும் இந்த உறவிடம் முகம் திருப்ப அவன் தயாராக இல்லை.

உணர்ந்த பிறகு, உறவின் அருமை புரிகிற போது, கைக்கு அது கிடைப்பதில்லை! பொட்டில் அடித்து, பொறி கலங்க அந்த ஒருத்தி உணர்த்திச் சென்றுவிட்டாளே!

இதெல்லாம் தூக்கம் கலைந்தும் கலையாமலுமொரு வித உணர்வில் சிந்தைக்குள் ஓடிகொண்டிருக்க,

சரியாக அந்நேரம் அந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

அவனையே ஒரு உலுக்கு உலுக்கி குலைத்து போடும்! அவன் தூக்கத்தைக் கலைக்காதா?

ஆறு மணிக்குச் சரியாகப் பாட ஆரம்பித்தால் அடுத்து ரிப்பீட் மோடில் தான் இருக்கும்.

வெறுமை சூழும் அவனின் கடினமான நேரத்தை இட்டு நிரப்பிச் சாந்த படுத்தும் பாடலும் இது தான். இலகுவான நேரத்தில் ஏதேதோ எண்ணங்களைத் தருவித்துப் புரட்டி போடும் பாடலும் இது தான்.

அவளைப் போல்.

எந்த உணர்வை எப்போது தருவாள் இன்னவரை பிரித்தறிய முடியவில்லையே. வெறுக்கும் நேரத்தில் அரவணைப்பாள். அருகாமை வேண்டுமென நெருங்கும் நேரத்தில் விலகி ஓடுவாள். நேற்று கூட அப்படித்தானே.

தேடி தேடி களைத்து போய், அதிகபட்ச கோபத்துடன் இருந்தவனை, வாரி அணைத்தாளே.

இப்போதும் அந்தச் சுக்கு காபியின் காரம் தொண்டையில் அமர்ந்து, கரகரத்துக் கரகம் ஆடி கொண்டிருக்கிறதே.

அவள் அறிமுகப்படுத்தி வைத்த சுவை. அவள் விட்டு போனதிலிருந்து தொட்டு கூடப் பார்த்ததில்லை.

நேற்று ஏன் திடீரென்று?

என்ன உணர்த்துகிறாள்?

மீண்டும் புரியா உணர்வு ஆட்கொள்ள, எழுந்து அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான்.

என்னைப் பிச்சிவாடினி சேஸ்துன்னாவு டி நுவ்வு! நா பிரியமைனா!

(பயித்தியமா ஆக்குற டி நீ என் பிரியமானவளே)

சரிந்து போக இருந்த மனதை, ஒன்று கூட்டி இறுக்கினான்.

இப்படி அவளிலிருந்தே இன்னும் மீள வில்லை. இதில் காஞ்சனா இப்பொது இவனிற்குத் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று வேறு நிற்கிறார். இவனாகப் பேச போனால் அதைச் சாக்கிட்டு இந்தப் பேச்சை ஆரம்பிப்பார். தயக்கம் இருந்தாலும்..

"இந்த அம்மாகிட்ட மாட்டிக்காம மாட்லாட (பேச) வெச்சிடணும்"

முடிவெடுத்தவன் ஒரு வழியாகப் போகிறோமென்று அறியாமலே வேலைக்குச் செல்ல ஆயத்தமானான்.

ஏற்கனவே ஆளை அசரவைக்கும் தோற்றம் அவனது. இப்பொது காவல் அதிகாரி உடுப்பில் அவன் வசீகரம் கூடியிருந்தது.

அவன் திண்மைக்கு அத்தனை கன கச்சிதமாகப் பொருந்தி நின்றிருந்த மகனை காஞ்சனா கண்ணிமைக்காமல் பார்த்திருந்தார்.

அதற்காகத் தானே, புகழ் வேண்டுமென்றே கதவை திறந்து வைத்துக் கொண்டு போன் பேசுகிறேன் பேர்வழி என்று நடை பயிலுகின்றான்.

அவன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே பேச, அந்த உடல் மொழியில், இவன் என் மகன் பெருமிதம் வழிந்தது காஞ்சனாவிற்கு.

இதை விட்டால் காஞ்சனாவை வேறு எவ்வழியிலும் வழிக்குக் கொண்டு வர முடியாது. மகனின் கம்பீரம் மேல் அத்தனை பெருமை உண்டு அவருக்கு எப்போதும்.

"ஆள் மயக்கி ரா நுவ்வு" கன்னத்தில் குத்தி சொன்னாலும் "என் கண்ணே பட்டுடும்" மகனுக்குத் திருஷ்டி கழிப்பார் கூடவே.

இப்போதும் அதையே கையில் எடுக்க, புகழின் கணக்கு தப்பவில்லை. ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவர் இவன் கிளம்பிவதை பார்த்து, நைசாகப் பேப்பர் படிப்பது போல் பாவனைச் செய்து, மெல்ல டைனிங் டேபிள் சேரில் மகனை பார்க்க தோதாக அமருவதைப் பார்த்து, மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

"ஓகே! நீங்க கை வைக்க வேண்டாம்! நானே பாத்துக்றேன் அவனுங்கள! வந்துட்டே இருக்கேன்" சொன்னவன்..

"ஏமிம்மா டிபன்" வந்து அமர, அவர் அமைதியாகப் பேப்பருக்குள் முகத்தைப் புதைக்க,

சரியாகத் தொலைக்காட்சியில் பரபரப்பான செய்தி ஒன்று ஒளிபரப்பாகத் தொடங்கி இருந்தது.

அது, மறைந்த பிரபல தொழிலதிபர் சத்யமூர்த்தியின் மருமகனும், வினோதினி இண்டஸ்டரீஸ் ப்ரைவேட் லிமிட்டட் சாம்ராஜ்ஜியத்தின் மேனேஜிங் டைரெக்ட்டருமான ஸ்ரீ பிரசாத் மரணம் குறித்த செய்தி.

இது மாதிரி எத்தனையோ செய்திகள், சம்பவங்கள் கடந்து வந்தவன், எந்தப் பாவனையும் காட்டாமல் அறிந்து கொள்ள மட்டுமே பார்த்தான்.

சற்று நேரம் அதில் கவனம் பதித்தவன், காஞ்சனா இன்னும் அதே இடத்தில் இருப்பதைப் பார்த்து,

"உன்ன தாம்மா! காஞ்சனாம்மா! டிபன் எங்க" பேப்பரை விலக்கி கேட்டான் மகன்.

பார்வையை நிமிர்த்தி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அமைதியாக எழுந்து செல்லும் போதாவது சுதாரித்திருக்கலாம் புகழ்.

ஆவி பறக்க அமர்ந்திருந்தது அவன் பார்த்ததுமே காத தூரம் ஓடும் உணவு ஒன்று. கூடவே ஒரு அப்ளிகேஷன் பேப்பர்.

முதலில் சிவப்பேற ஆரம்பித்திருந்த புகழின் முகம், மெல்ல மெல்ல இறுகி இறுக்கமானது. அது எதற்கென்று பிரித்தறிய முடியவில்லை என்றாலும், அது தானே காஞ்சனாவிற்கும் வேண்டும்.

'நேனு மீ அம்மனு டா! என்கிட்டயே வா' என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவு தான். கோவம் சுர்ரென்று ஏறிவிட, உணவை தட்டி விட்டு வேகமாக எழுந்திருந்தான் மகன்.

"வேணும்னே என்னை வெறுப்பேத்தி பாக்குற ல்ல நீ! நடத்து உன் இஷ்டத்துக்கு" என்றவன் கிளம்ப,

"எடின்னு சூஸ் செய்து குடுத்துட்டு போ ரா" என்றார் காஞ்சனா, கிண்ணம் ஒரு பக்கம், உணவு ஒரு பக்கம் சிதறி கிடந்ததைப் பார்த்த படியே படு கூலாக.

"அப்டியே உன்ன கொன்னுடுவேன்" கழுத்தை பிடிப்பது போல் புகழ் வேகமாக வர,

"ம்ம் செய் ரா நிம்மதி" வாகாக அவரும் கழுத்தை நீட்ட, இப்பொது மகன் தளர்ந்து போனான்.

"ஏம்மா இப்டி செய்றே" அப்படியே அமர்ந்து அன்னை முகம் தாங்கினான். அசரவில்லையே அவர்.

"அப்ப கல்யாணம் பண்ணிக்கோ"

"அதுகோசரம் ஓல்டேஜ் ஹோம் போறேன்னு நிப்பியா நீ? இதுலே அப்ளிகேஷன் வேறே" சுக்கு நூறாய் கிழித்துப் போட்டான்.

"ரேய்" எனச் சத்தம் போட்டவர் "அவுனு ரா அப்டித்தான் செய்வேன். இங்க தனியா இருக்கேன். அங்கயும் இருந்துட்டு போறேன். எங்கருந்தாலும் என்னை நான்தான பாத்துக்கணும்"

பிள்ளையின் தனிமையின் வலி அவர் காணாததா! எதையோ மறக்க முடியாமல் திணறுகிறான் என அவர் உணராததா! அதற்காக அப்படியே விட முடியுமா! தன் தனிமையை முன் வைத்து, கெஞ்சி, கொஞ்சி இப்பொது மிஞ்சலை கையில் எடுத்திருக்கிறார்.

"ம்ம்ப்ச்" புகழுக்கு தலை விண்ணு விண்ணென்று வலித்தது. என்னவென்று சொல்லுவான்? ஏற்கனவே ஒருத்திக்கு நான் கணவன் என்றா? இல்லை அவளைத் தொலைத்து மருகுகிறேன் என்றா? நம்புவாரா? ஒரு முடிவுக்கு வந்தவன்,

"இப்ப ஏமி ம்மா! எனக்கு விவாஹம் பண்ணனும் அண்டே! சரி! வேலை இருக்கு முடிச்சுட்டு வர்றேன்! பேசலாம்"

அப்போதாவது வழிக்கு வருவாரா பார்க்க, அவர் நகருவதாய் இல்லை. வயிற்றைக் கிள்ளிய பசிக்கு நீரை வார்த்துக் கிளம்பினான்.

"எது பத்தி ரா நுவ்வு டெய்லி ஒரு பாட்டையே ரிப்பீட் மோட் லே கேட்டுனுருப்பியே அது பத்தியா"

"அதி ஏவன் டி அதி, கோடி வருசம் முடியலாம்" என ஆரம்பித்து மேலே மேலே கேட்டதை அச்சுப் பிசகாமல் பாடலின் வரியை சொன்னாரே பார்க்கலாம் அப்படியே அவன் நடை நின்றது.

"நீ கேட்டு கேட்டு எனுக்கு மனப்பாடம் ஆயிபோயிந்தி ரா. ஆம்பளே புள்ளைய பெத்துட்டு, அதுக்கு அர்த்தம் தெலுசுக்கோ நான் பட்ட பாடிருக்கே. ஷ்ஷ்ஷப்பா! அது ஏன் டா அதி பாட்டு மட்டும் வெச்சி வெச்சி கேக்குற, லவ் பெயிலியரா ரா நுவ்வுக்கு"

வியர்த்து போன முகத்தைச் சேலை தலைப்பால் வீசியப்படியே, மிதப்பாக இன்னும் என்னென்ன பேசி இருப்பாரோ!

"ம்மா" என அலறிக் கொண்டு வந்தவனுக்கு வேறு வழியே இல்லை. இவன் தான் அவர் வழிக்குப் போனான்.

"தோ பாரு காஞ்சனம்மா! ச்சாலு இந்துக்கே ச்சாலு! நான் எதுவும் பண்ணலே. எல்லாம் அண்ணா தான். அவன் தான் சொன்னான். நான் கவனிச்சுக்கறேன் நீ இப்போவே கெளம்பி வான்னு"

"தப்பு தான்! வந்திருக்கோ கூடாது. உலகமே அழிஞ்சு போற மாதிரி அவன் பில்டப் பண்ணி என்னை வெச்சு செஞ்சான்! உன் பங்குக்கு நீயும் வெச்சி செஞ்சுட்டே! இந்துக்கு மேல தாங்க மாட்டேன்! இத்தோட நிறுத்திக்கோ" புகழ் காலில் விழாதது ஒன்று தான் குறை.

"இப்போவும் சொல்ல மாட்டேல்ல ரா" ஏற இறங்க ஒரு முறை புகழை பார்த்தவர், படுத்தினது போதுமென்று நினைத்தாரோ?

"யாரு ரா! உன் அண்ணா! தீபனா" எனக் கேட்டார். அவன் ஆமாமென்று பாவமாகத் தலையசைக்க,

"ரெண்டு பேரும் ஒன்னா வேலே செய்யறீங்களா! குடி கெட்டுச்சு போ!"

"ஆமா அவன் பெரிய இவன். அவன் சொன்னானாம். இவன் வந்தானாம். அவனை முதல்ல கோங்குரா சட்னி கொண்டு போன என் கேரியரை கொடுக்கச் சொல்லு ரா! எங்கப்பா சீதனம் வெச்சது வேற"

'இது எப்ப' என்பது போல் புகழ் பார்க்க..

"கோயம்பத்தூர் வீட்டுக்கு வந்திருந்தப்போ உன் கல்யாணத்தைப் பத்தி பேசும் போது, நான் அவன்கிட்ட பேசுறேன் ம்மா ன்னு லன்ச் மூக்கு பிடிக்க ஒரு கட்டு கட்டிட்டு, போதாதுக்கு லஞ்சமா கோங்குரா சட்னி செய்யச் சொல்லி கையோட வாங்கிட்டுப் போனான் டா அவன்"

அவனே ஒரு மொட்ட பையன். அவன் எப்டி பேசுவான்னு யோசிக்காம, நானும் செஞ்சு குடுத்தேன் பாரு. என்னே சொல்லணும்" சொல்லி முடித்திருக்க

அவர் சொன்ன வார்த்தையிலும், சொல்லிய பாவனையிலும் புகழுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வர,

"பங்கம் செய்றம்மா நீ அசால்ட்டா! அண்ணன் மட்டும் இத கேட்டிருக்கணும்"

சொல்லும் நேரம் பார்த்துச் சரியாகத் தீபனே அழைத்திருக்க, இன்னுமே சிரிப்பு வந்திருந்தது அவனிடம்.

 
Top