• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320

இளந்தீபன். கமிஷனர் ஆப் போலீஸ். க்ரைம் பிரான்ச்.

எஸ் ஐ ஆக இருந்தவனுக்குள் க்ரைம் பிரான்ச் பிரிவில் சேர வேண்டும் என்ற ஆசை, அவனுக்குள் விழுந்தது தீபனை பார்த்து தான்.

அவன் சாதனைகளைக் கண்டு வியந்து, தனக்கான பாதை இது தான் என முடிவெடுத்தான். அதோடு புகழின் தந்தை தீபன் எஸ் ஐ ஆக இருக்கும் போது உடன் பணி புரிந்தவர். அதனால் நல்ல பழக்கம்.

எல்லாரையும் விட அழகர் சாமி வயதில் மூத்தவராய் இருக்க, தானாய் ஒரு பந்தம் அவரோடு உருவாகி இருக்க, வேலை வீடு வரைக்கும் உறவை வளர்த்தது.

அதோடு தீபனுக்கும் காஞ்சனா என்றால் தனிப் பிரியம். வீட்டிற்கு வந்தால் வாய்க்கு வாய் "பங்காரம்மா" என அழைத்தே காஞ்சனாவை ஒரு வழி செய்வான்.

அதனால் அவனும் ஒரு பிள்ளை போல் தான் அவருக்கு.

சிரிப்பு என்பதே அரிதாகி போன புகழின் முகத்தில், இப்பொது அது விடுவேனாவென அமர்ந்திருக்க ரசித்துப் பார்த்தார் காஞ்சனா.

அதை உணர்ந்தானோ என்னவோ புகழ் புன்னகையை அடக்கி 'அண்ணா வம்ப நீங்களே விலைக்கு வாங்கறீங்களே' இரண்டு மூன்று முறை கட் செய்ய,

"எனக்குத் தான் அடங்க மாட்டேன்றே! அதையாவது அட்டென்ட் செய்து பேசு ரா அடங்காதவனே! முக்கியம்னு தானே உடாம கால் செய்றான்"

"ண்ணா உங்க தலையெழுத்து நீங்களே எழுதிக்கிறீங்க! ஞான் எந்து செய்யு!" திடீரென்று மலையாளத்திற்குத் தாவியவன் அழைப்பை ஏற்றான்.

"எந்தா டா! எத்தன தவனா ஞான் போன் கால் செய்யுன்னது! சார் அத்தனா பிஸியோ"

எடுத்ததுமே மலையாளத்தில் பொறிந்தான் இளந்தீபன்.

"ண்ணா நான் பின்னே விளிக்காம்" புகழ் போனை அணைக்கப் போக,

"நான் பேசறேன் குடு ரா" காஞ்சனாவின் குரலில் "தொலஞ்சேன்" என்று அந்தப் பக்கம் விழித்த இளந்தீபனுக்கு அரண்டு கொண்டு வந்தது.

"டேய் அம்மா பக்கத்துல இருக்காங்களா! பரைய மாட்டியா"

"அதனால தான் கட் செய்சேன்! உங்களுக்கு அவங்க மேல ரொம்பப் பாசம் போல! விடாம கால் செய்றீங்க! இப்பதான் என்மேல பாச மழை பொழிஞ்சாங்க! நீங்களும் உங்க பங்குக்கு வாங்குங்க! பேசறீங்களா! கொடுக்கவா"

"எப்பா டேய் கோடி கும்பிடு! கொடுத்திடாத டா"

"அவ்வளவு பயமா! அப்ப தரணுமே!

"டேய்! அம்மா டா! உனக்கு அம்மா னா! எனக்கு யாரு? பயம் இருக்காதா?" உடனே சரண்டர் ஆனான் தீபன்.

"அடடா! ஆனா பாருங்க, நம்புற மாதிரி இல்லையே! அவங்க வேற சொல்றாங்க! கொங்குரா, கேரியர் ன்னு என்னவோ சொன்னாங்களே! ண்ணா உங்களுக்குத் தெரியுமா" அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே,

"ஒரேய் போன குடு ரா அவன்ட நான் பேசணும்" காஞ்சனா போனை பறிக்க வந்தார்.

"ம்மா ஏம் செஸ்துன்னாரு" (ம்மா என்ன செய்றீங்க)

"அவன் உன்கிட்டே பேசுறேன்னு பொய் சொல்லிட்டான் ரா. அவன் பேசவெல்லாம் வேணாம் என் கேரியரை மட்டும் குடுக்கச் சொல்லு" சின்னப் பிள்ளை போல் சொல்லி, வெறுப்பேற்றி விளையாட, இளந்தீபனுக்கு இங்கே வியர்த்துக் கொட்டியது.

சிரித்துக்கொண்டே "ம்மா இவ்ளோ நேரம் என்னை வெறுப்பேத்தினது பாத்தலே! அண்ணா பாவம் ம்மா விட்டுடு" போனை எடுத்துக்கொண்டு விலகி வந்த புகழ்,

"சொல்லுங்க ண்ணா" என்று ஆரம்பிக்கவும் தான் மூச்சு வந்தது தீபனுக்கு.

"ஏன் டா ஒருத்தன் போன் செய்யுன்னது குத்தமா டா! ஒரு கேரியர்னாலே என் கரியரே டோடல் டேமேஜ்" பொறிந்து எடுத்தான்.

"நீங்க விடாம போன் செய்துட்டு என்னைத் திட்றதெல்லா அந்யாய ண்ணா" சிரிப்பை அடக்கிக்கொண்டே சொல்ல, அதைப் பார்த்துக்கொண்டே கையில் டீ கோப்பையைத் திணித்து விட்டுப் போனார் காஞ்சனா.

"மனுஷன் பேசுவானா டா உங்ககிட்டயெல்லாம்! உனக்குப் போன் பண்ணாதே தப்பு டா!" தீபன் போனை வைக்கப் போக,

"என்னை வர வெச்சத்தையும் சேர்த்துக்கோங்கண்ணா" புகழின் குரல் தடுத்தது.

"அப்படிச் செய்தது எவ்வளவு நல்லதா போச்சு தெரியுமா" தீபன் எதையோ மனதில் வைத்து பேச,


"உங்களுக்கா" புகழ் கேட்டதில் வேறெதையோ சொல்ல வந்து மறைத்து,

"ம்ம் மக்களுக்கு" என்றவன்.

"ஏற்கனவே ப்ரேஷர் ஏறிப் போயிருக்கேன் நீயும் படுத்தாதே டா" சலித்துக் கொள்ள,

"என்னாச்சு ண்ணா அந்த அமைச்சர் பிரச்சனை செய்தானா" அப்படியே புகழின் தோரணை மாறி இருந்தது.

"அத விடு! அது தெரிஞ்ச விஷயம் தானே. அதனால தானே டிஜிபி ரகசியமா செய்யச் சொன்னதே. அவனால ஒன்னும் செய்ய முடியலன்னு துள்ளுறான்"

"மிரட்டினானா? என்ன ண்ணா சொன்னான்"

"என்ன பேசுறதா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்க! சொன்னது உனக்கும் மேல பெரஇடம்ன்னு யார் செய்யச் சொன்னது சொல்லவும், பாக்கணுமே மனுஷன் மூச்சு பேச்சே இல்லை"

"அவனை அன்னிக்கே உள்ள தள்ளி இருக்கணும் ண்ணா. பதவியை வெச்சிக்கிட்டு எப்படியெல்லாம் ஆடுறானுங்க.

"விடு கூட்டணி ஆட்சில இருந்துட்டு ஒன்னும் செய்ய முடியாதுன்னு தானே இவ்வளவு மெனக்கெடலும், உன்ன வர வெச்சதும்"

"நீங்க சொல்லலைனா வந்திருக்கவே மாட்டேன் ண்ணா"

"டேய் ரொம்ப நல்லவனாட்டம் சம்சாரிக்காத! ரெண்டு முறை டிரான்ஸ்பர் ரிஜெக்ட் செய்தவன் நீ"

அவன் அமைதியாய் இருக்க, ஏனென்று தெரியாதா தீபனுக்கு!

"சரி நேர்ல வா! அதை விட டைம் க்கு வா! வர ல்ல! உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் டா"

"இல்லை ண்ணா லேட் ஆவும்"

"திருந்தவே மாட்ட டா நீ"

"மாட்டேன் ண்ணா! உங்க தம்பியாச்சே" போனை அணைத்து விட்டு, அப்படியே ஒரு தலையசைப்பை காஞ்சனாவிற்குக் கொடுத்து, கிளம்பிய புகழை பார்த்து கொண்டிருந்தவருக்கு அத்தனை கர்வம் முளைத்தது.

புகழ் அடுத்து வந்து சேர்ந்தது, நேற்று பிடித்த சரவணனையும் முருகனையும் வைத்திருந்த இடத்திற்குத் தான்.

அவன் இயல்பு மறைந்து இறுக்கம் வந்திருந்தது. தோரணையில் கண்களில் கடுமை ஏறியிருக்க, பார்வையில் எப்போதுமிருக்கும் ஆராய்ச்சி, வந்தமர்ந்தது இப்போதும்.

என்ன விசாரித்தும் வாயை திறக்க முடியவில்லை எனக் காலையிலேயே தகவல் வந்திருந்தது, அவன் ஆத்திரத்தை கிளறி விட்டது.

இதற்கும் அவர்களைத் தனித் தனியாக வைத்து, அடித்துத் துவைத்ததில் உடலில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் ரத்தம் கன்றி, வீங்கி, எனச் சிறப்பான கவனிப்பு தான். ஆனாலும் மசியவில்லை.

"என்னா புகழு! உன் ஆளுங்களால ஒன்னும் செய்ய முடியலைன்னு உன்ன வர வெச்சிட்டானுங்களா! நீ மட்டும் என்ன கிழிக்கப் போற" புகழை பார்த்ததுமே சரவணன் வாயை விட்டான்.

கண் இமைகள் தடித்து, வாய் கிழிந்து, கடவாய் பல் இரண்டு காணாமல் போனதில் கன்னம் வீங்கின பின்பும், சரவணனின் திமிர் பேச்சு குறையவே இல்லை. இளக்காரமாக வேறு சிரித்தான்.

"கிழிக்க வரலே டா! உன்னே தச்சி தோரணம் கட்டி தொங்க போட வந்திருக்கேன்!" பதிலுக்கு நக்கலாகச் சிரித்த புகழ், மீசையை இரு கைகளாலும் பிடித்து இழுத்து முறுக்கினான்.

சரவணன் புரியாமல் பார்க்க, புகழ் அவன் ஆள் ஒருவனிடம் கண்ணைக் காண்பிக்க, அவன் வெளி சென்று மறைந்தான்.

"பில்டப் லா பலமாருக்கு புகழு! ஆனா பாரு அவ்ளோ லேசு இல்லப்பா இந்தச் சரவணன். எனக்கும் ஆளு இருக்கு தெரியுமில்ல"

அமைச்சர் ஒருவரின் பேரை சொல்லி அவன் தானே எனக் கேட்க சரவணன் முகம் லேசாக இருண்டது.

"என்ன சரியா சொல்டேனா" புருவம் தூக்கி கேட்டான் புகழ்.

"ஒன்னு தெரியுமா அந்தாளு என் டார்கெட்டே இல்லை. பேரு தான் பெரிய அமைச்சர் உன்னைப் புடிச்சாச்சு தெரிஞ்சதும், பொறில எலி மாதிரி தானா வந்து சிக்கிகிட்டான். இப்ப அடிக்கிற அடி ல அங்க வீங்கணும்! என்ன ஆரம்பிப்போமா"

நீளமாய், உருளையாய் அடித்து நவுத்தவெனவே செய்திருப்பார்களோவென இருந்த கொம்பு ஒன்றை அவன் தாடையில் தட்டி கேட்டான்.

"விடிய விடிய அடி வாங்கிருக்கேன் ஒன்னையும் என்கிட்டருந்து வாங்க முடியல. நீ என்ன புதுசாவா அடிக்கப் போற! அடிச்சிக்க" அமர்ந்திருந்த வாக்கிலே நெஞ்சை நிமிர்த்தித் திமிர,

"உன்னே அடிக்கப் போறேன்ன்னு சொல்லவே இல்லையே ப்பா சரவணா! இப்புடு சூடு "

சொல்லிகொண்டிருக்கும் போதே முருகனை அழைத்து வந்து, சரவணனின் எதிரில் கம்பத்தோடு சேர்த்து நிறுத்தி கை கால்களைக் கட்டினர்.

அவர்களை வெளியே இருக்கச் சொன்னவன் "அடி உதவுற போலே அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க பழமொழி கேள்வி பட்ருக்கியா சரவணா! இல்லையா இப்புடு நேர்ல சூடாலி!" கொம்பை தடவி கொடுத்தப்படியே புகழ் கேட்க அவனுக்குப் புரிந்து போனது.

"வேணாம் புகழு! என் தம்பிய விட்டுடு! அவனுக்கு ஒன்னும் தெரியாது! எல்லாம் நான் தான் டீல் செய்றது" திமிராய் பேசினவன்,

"அய்யோ! சார்! சாஆஆஆஆர்! வேணாம் சார்! விட்டுடுங்க சார்! அய்யோ என்னால பாக்க முடியலையே!" எனச் சரவணன் கதறும் வரை, கதற கதற அடித்தான், அவன் தம்பியை.

எங்கே அடித்தால் எங்கு நெறி கட்டும் வித்தை அறிந்தவன் புகழ். தனித் தனியாய் விசாரிக்கும் போது இருந்த தெனாவட்டு, இப்பொது இருக்கிமிடம் தெரியாமல் காணாமல் போனது.

அடித்த அடி தாளாமல் முருகன் அரை மயக்க நிலைக்குப் போக, அதைப் பார்க்க வைத்தே சரவணனுக்கு மயக்கத்தை வர வைத்திருந்தான்

"ஒன்னு விடாம எல்லாத்தையும் சொல்றியா! அப்ரூவர் ஆகுறியா!" கேட்டு கேட்டு அடித்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் தாள முடியாமல், எல்லாவற்றையும் சொல்லி அப்ரூவர் ஆகிறேன் சரவணன் சொன்ன பிறகும்,

"ஏண்டா நாங்க கஷ்டப்பட்டுப் புடிச்சா, நீ அப்ரூவர் ஆகி நோவாம நோம்பு கும்பிடுவே, நான் வேடிக்கை பாக்கணுமா!" என அதற்கும் அடித்தான் முருகனை. நிறுத்தவேயில்லை.

"என்னயா சொல்லலைனாலும் மாட்ட அடிக்கிற போல அடிக்கிறாரு! சொன்னாலும் சொல்லுவியா ன்னு அடிக்கிறாரு!" வெளி வரைக்கும் கேட்ட சத்தத்தில் அவன் துறை ஆட்களே அதிர்ந்து தான் போயினர்.

உயிர் போனால் அவர்களுக்கும் சிக்கல் ஆகிற்றே. பயந்து தீபனுக்கு அழைத்திருந்தனர்.

"சர்! சர்.. கமிஷனர் உங்ககிட்ட பேசணுமாம் கைப்பேசியை நீட்டின பிறகே அடி பலமாக விழவில்லை.

பேசி முடித்தவன் "இப்போ சொல்லுவான். இவனோட சகவாசம் வெச்சிருந்தவனுங்க அத்தன பேர் லிஸ்ட் டீடெயில்ஸ் எல்லாம் வாங்குங்க" என்றவன்,

"ஒன்னு விடாம சொல்றே! எதுனா மறைச்சன்னு எனுக்குத் தெரிஞ்சுது மவனே நீ இருப்பே உன் தம்பிய பரலோகம் அனுப்பிச்சிருவேன்! அர்த்தமாயிந்தா!" மிரட்டினவன்

"அவன் தப்பிக்க உன்ன என்ன செய்யவும் தயங்க மாட்டான் அந்த அமைச்சர்! நீ மட்டும் சாவ போறியா? இல்லே உயிரோட அவனையும் சேர்த்து கம்பி எண்ண போறியா? நீயே முடிவு பண்ணிக்கோ" மூளை சலவை செய்து விட்டு போக

சரவணனுக்கு மூளை இருட்டடிப்பு செய்தது போல் ஆனது.

'உயிராவது பாக்கி இருக்கும்' என்று மட்டுமே யோசனை போக, எல்லாம் சொல்ல ஆரம்பிக்க, அங்கே கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்பில் இருந்தது.

பின்னே காலையில் இருந்து செய்தி மாற்றிச் செய்தி வர, அதைத் தொடர்ந்து பரபரப்பு சம்பவங்களும் நடக்க, வேறெப்படி இருக்கும்.

புகழ் சரவணனையும் அவன் தம்பியையும் பிடித்தது அவர்கள் வட்டாரத்தில் எப்படியோ கசிந்திருந்தது.

"மனுஷன் ரிப்போர்ட் செய்த கையோட வேலைல இறங்கி இருக்காரு யா! அவனுங்கள எங்க வெச்சுருக்காரு ன்னே யாருக்கும் தெரியல!"

"இதுல விஷயம் என்னன்னா நம்ம ஆளுங்களும் சிக்கி இருக்காங்க போல! அவனவன் திருடனுக்குத் தேள் கொட்டின விதமா முழிக்கிறானுங்க! எப்டி, எங்க பிடிச்சாரு! அவன் எப்டி மாட்டினான் ஒன்னுமே தெரியல யா!"

அவர்களுக்குள்ளே ஆயிரம் பேச்சுகள் நிலவ, போதாக்குறைக்கு சமூக நலத்துறை அமைச்சரும் கமிஷனரை பார்க்க வந்திருக்க, சும்மாவா? இடமே அல்லோல கல்லோல பட்டுகொண்டிருந்தது.

அரசல் புரசலாக வெளி வந்த செய்திக்கும், இவர் வரவிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ! அறிந்து கொள்ளப் பத்திரிகையாளர் கூட்டம் குழுமியிருந்தது.

ஆக மொத்தம் இரண்டிலும் புகழ் பெயரே அடிப்படுகிறது என அறியாமல், சார்ஜ் எடுக்கக் கமிஷனர் அலுவலகம் வந்திறங்கினான் புகழ்.

அவனை அடையாளம் கண்டு, சில காவலர்கள் வந்து வணக்கம் வைத்து, அவன் முதுகுக்குப் பின் கிசு கிசுத்து போக, புருவம் சுருக்கினான். ஏதோ சரி இல்லையென்று உணர்வு தோன்றியது. இடத்தைப் பார்வையால் அளந்தான்.

அங்கங்கு நிறுத்தி இருந்த கார்களும், நின்றிருந்த செகியூரிட்டி ஆட்களும் சொன்னானர் அவன் யூகம் சரியென்று.

அப்படியொரு கோவம். வேகமாகப் படியேற, யாரென்று தெரியாவிடினும் யூனிபார்மிற்கும் அவன் மிடுக்கையும் கண்டு சிலர் வணக்கம் வைத்து போக, யாருக்கும் சிறு தலையசைப்பு இல்லை.

இவன் வேகத்தைப் பார்த்து அதில் கவரப்பட்டு,

"சர்! நீங்க தான் டெபுடி கமிஷனர்ரா ஜாயின் செய்யப் போற வான்புகழ் சாரா" இரண்டு மூன்று பத்திரிக்கையாளர்கள் அவன் முன் வந்து மைக்கை நீட்டினர்.

"காலைலேருந்து ஆபிஸ் பரபரப்பா இருக்கு. நீங்க தான் காரணம் சொல்றாங்க. உண்மையா" ஒருவன் கேட்க,

"சமூக நலத்துறை அமைச்சர் வந்திருக்காரே. இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கா!"

இப்படியாக மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டவர்களுக்கு, ஒரு நிமிடம் ஆழமான, அமைதியான பார்வையைத் தந்தவன் வேகமாக அவர்களைக் கடந்திருந்தான்.

இது தான் அவன் பதில். அவன் இப்படித் தான். பத்திரிகை ஆட்களுக்கும் இவனுக்கும் எப்போதுமே ஒத்து போகாது.

அவர்கள் யூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல நான் ஆள் இல்லை என்றே நினைப்பான். அப்படி அவனிடம் வாய் விடப் போக ஓரிரு முறை வாக்குவாதமும் நடந்ததுண்டு.


"இரிடேட்டிங் இடியட்ஸ்!" நடையை எட்டி போட்டவனுக்கு அப்படியொரு எரிச்சல் மண்டியது.

கமிஷனர் அறை வர அங்கிருந்த காவலாளி இவனைக் கண்டு சல்யூட் அடித்தவன் "சர்! சர் கூட அமைச்சர் பேசிட்டு இருக்கார் சர்" என்றான் மெதுவாக.

"யாரையும் அலோ பண்ணாத" அமைச்சர் சொல்லி சென்றதை சொல்லவா முடியும். காதை சொறிந்து தயக்கமாக அவர் நிற்க,

"சோ வாட்" என்றவனுக்குப் பொறுமை பறி போகும் நிலை.

தாடை இறுக அவன் பதிலளித்த வேகமே பயத்தைக் காவலாளிக்கு தர "சாரி சர்' என்றவன் கதவை திறந்து விட்டான்.


முறைத்துக் கொண்டு அவன் நுழைந்த விதமே 'இன்னைக்கு இருக்கு எனக்கு' என்ற முடிவுக்கு வர வைத்தது.

புகழ் வேகமாக உள் செல்லவும், சரியாக அமைச்சர் மாணிக்க வாசகம் வெளி வரவும் சரியாக இருந்தது.

அறை வாசலிலேயே அவனைப் பார்த்து விட "அடேடே தம்பி நீங்களா! இப்பதா சர்கிட்ட உங்கள பத்தி பேசிட்டு இருந்தேன். இல்ல சர்" இளந்தீபனை பார்த்து கேட்டவர்,

"நூறு ஆயுசு தம்பி உங்களுக்கு! அப்புறம் இன்னைக்குத் தான் நீங்க டியூட்டி ஜாயின் செய்யப் போறதா சர் சொன்னாங்க! வாழ்த்துகள்!" கை நீட்ட அவன் தந்தால் தானே.

அவரையும் கையையும் ஏற இறங்க பார்த்தவன் முகத்தில் இகழ்ச்சியாய் ஒரு சிரிப்பு.

 
Last edited:
Top