• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தா. கோ - மேழி போற்றுதும்! மேழி போற்றுதும்!!

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
மேழி போற்றுதும்! மேழி போற்றுதும்!!

மௌனமான இரவு, விட்டில்பூச்சிகளின் இரைச்சல் மட்டும் தொடர்ந்து பத்துநிமிடமாக கேட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் காதுகள் அதை உணரவில்லை.

பெருமழையின் முன்வரும் குளிர்காற்று ஸ்பரிசத்தை மோதி, நாசியில் நுழையும் போது, மனிதமனம் உணரும் ஒரு இன்பம் அவர் இப்பொழுது உணரவில்லை..


கண்கள் சுருக்கி, தலையை வலப்பக்கம் சாய்த்து, தன் கணவன்
அருகில் வந்து, "மாமா..." என்றபடி கணவனின் தோளில் கைவைத்தாள்.


அந்தத் தீண்டலில் உடல் சிலிர்த்து, மனைவியின் முகம் பார்த்து, இரண்டுமுறை இமை அசைத்து," சொல்லும்மா..." என்றான்.

"என்ன மாமா... ஏன் முகம் வாடிபோய் கிடக்கு... அதையே நினைச்சிட்டு இருக்கிகளா??.. ஒருவாய் கூட சாப்டல... பச்ச தண்ணி பல்லுல படல..

பொழுது விடிஞ்சி, பொழுது போனா... அதயே நினச்சிட்டுக் கிடக்குறீக... மனசு கிடந்து தவிக்கு எனக்கு... போட்டும் மாமா... விடுங்க... என்ன இப்போ..அவன் படிப்புக்குத் தான..." என்றாள்.

"இல்லம்மா... அது ஒன்னும் இல்ல எனப் பாதிகுரலில் பதிலளித்து, பத்து நொடி அமைதிக்குப் பின்,

"வெள்ளாம பாக்காம வறண்டுக் கிடக்க பூமி பாக்க, பெத்த ஆத்தா பசிக்குக் கஞ்சி குடுக்க முடியாத பாவிப்பய மாறி நா இருக்கேன்.

எப்புடி இருந்த பூமி...முப்போகம் விளஞ்சி, மூணு ஊருக்குச் சோறு போட்ட பூமிய.. இன்னக்கி, விதைக்காம வெறும் நிலமா வெச்சிருக்குற, வெறும்பயலா போயிட்டேனே.. " என்று தொடர்ந்த கனகசபையின் பேச்சைப் பாதியிலே நிறுத்தினாள் மீனாட்சி.


"மாமா... என்ன பேசுறீக... என் மாமன் என்ன விவசாயம் பாக்கற்துக்குத் தெம்பு செத்து கிடக்கற்தாலயா நிலத்த விக்குது... இப்ப கூட நாம விவசாயம் பண்லாம்... ஆனா, புள்ள படிப்புக்கு விக்கற்தால தான் அப்டியே விட்டுட்டோம்.

விவசாயம் பண்ணி நம்ம புள்ளய இஞ்சினிரிங் வர தேன படிக்க வெக்க முடிஞ்சிது.. புள்ள மேல படிக்க போது, அதுக்குப் பணம் தேவ னு தான நிலத்த விக்குதோம்..

நாள ஒரு காலம் புள்ள நல்லா சம்பாரிச்சா அவன் நல்லா இருக்க போறான்... கஷ்டப்பட்ட காலம் லாம் நம்ளோட போட்டும்...

அந்த முனியப்பன் என் புள்ளக்கி நல்லவழி காட்டாமயா போய்டுவாரு,
நீ படு மாமா" என்று சொல்லி கனகசபை முதுகில், இரண்டு முறை தட்டிகொடுத்தாள்.

"மழ வற ஆரம்பிச்சிடுச்சு... உள்ள வந்து படுங்க, வாங்க மாமா" என்று சொல்லிக்கொண்டே வீட்டுற்குள் நடந்துகொண்டே,

"புள்ள நாளக்கி வரான்...அவன் முன்னாடி இப்படி இருக்காதீங்க மாமா...புள்ள மனசு நோவும்..." என்றாள்.

"முனியப்பா...நல்லவழி காட்டுய்யா" எனப் புளம்பிக்கொண்டே படுத்தாள்.

நடு இரவின் மௌனம் கலைத்த மழையும், இவர் தூக்கம் கலைத்த துக்கமும் இரவு முழுதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.... கண்கள் மூடியபடியும், காதுகள் திறந்தபடியும் இரவுமுழுதும் படுத்துக்கொண்டு இருந்தார் கனகசபை.

காலை...

"மீனாட்சி....பஸ்டேன்ட் போயு புள்ளய கூட்டிட்டு வரேன்... நீ வெரசா கோழிக்குழம்பு வெச்சிடுத்தா" என வாசலில் நின்று சொல்லிய கணவனிடம்...

"ஒரு நிமிசம் இருங்க மாமா.. என்று ஒலியை முதலில் அனுப்பிவிட்டு, ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்து , தண்ணீ குடிச்சிட்டு போங்க மாமா..."எனக் கூறிக்கொண்டே கனகசபை அருகில் வந்தாள்.

தண்ணீர் குடித்துவிட்டு, மனைவியை நோக்கி மந்தகாசம் சிந்தினார்.

"பாத்து சூதானமா போய்ட்டு வாங்க மாமா" என்றாள்.

"சரி ஆத்தா...வரேன்" என்று விரைந்தார்.

பேருந்தை நோக்கி காத்திருந்த கனகசபையின் வலது தோளினைப் பின்னிருந்து ஒரு கைத்தொட்டது.

திரும்பி ,"செந்திலு..." எனச் சிரித்துக்கொண்டே "பஸ் வந்துடுச்சாப்பா" என்று கேட்ட தந்தையைப் பார்த்து,

"ஆமாப்பா..." என்றான்.

"படிப்புலாம் நல்லபடியா முடிஞ்சிதாய்யா..இனி மேல என்னப்பா படிக்கப்போற..." எனத் தொடர்ந்த தந்தையின் பேச்சை நிறுத்தி,

"முதல்ல வீட்டுக்குப் போலாம் வாங்கப்பா, வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்" என்றான்.

"ஆமா.. நான் ஒருத்தன்.. புள்ளய ரோட்லயே நிக்கவெச்சி பேசிட்டு இருக்கன்.வாய்யா...வந்து வண்டில ஏறு" என்றார் கனகசபை.



வண்டிசத்தம் கேட்டு, சமையலறை விட்டு, தூக்கி சொருகிய புடவையோடும், சமையலறை வெப்பத்தில் வியர்வை நனைத்த ரவிக்கையோடும் , அம்மியில் மசாலா அரைத்த சிவந்த கையோடும் ஓடிவந்து...

"இராசா..... ஐயா... " எனக் கூறிக்கொண்டே, மகனின் கன்னங்களில் இரண்டு கைகளை வைத்து, தன் கன்னங்களில் இரண்டு கண்ணீர்த்துளிகளை வைத்தாள்.

"என்னய்யா... மெலிஞ்சிபோய்ட்ட... கன்னமெல்லாம் ஒட்டிப்போச்சே.. என் ராசா... வாய்யா சாப்டுய்யா வா" என வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.


உண்டுவிட்டு அம்மாவுடன் அலாதி இன்பத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.



திடீரென ஒரு குரல்....

"செந்தில் அம்மா...... இருக்கீங்களா..."
என ஒரு அவசர குரல் வாசலில் ஒலித்தது..

"என்னாச்சி... அண்ணாமல அம்மா... ஏன் பதட்டமா இருக்கீக" எனக் கேட்டாள்.

"சேதி தெரியுமா.... அன்னக்கிளி வூட்டுக்கார் தூக்குல தொங்கிட்டாராம்" என்றாள் அந்தப் பெண்.

"ஆத்தி... என்ன சொல்லுத... புள்ளைக்குக் கண்ணாலம் வெச்சிட்டு இப்படி பண்ணீட்டாரே.... வாங்க அண்ணாமல அம்மா போலாம்..." என்றாள்.

சத்தம் கேட்டு வந்த செந்தில், விஷயம் தெரிந்து அதிர்ந்து, மூவரும் அன்னக்கிளி வீட்டிற்குச் சென்றனர்.

ஊர் மக்கள் அனைவரும் அன்னக்கிளி வீட்டைச் சுற்றி கூடியிருந்தனர். விஷயம் தெரிந்து கனகசபை வந்தார்.

"ஏன்ய்யா... என்னாச்சி... போன வாரம் கூட சந்தைல பாத்தன்...கலகலனு பேசனாப்புல... ஏன்ய்யா இப்டி பன்னாரு.. "எனக் கனகசபை கேட்க…

"அத ஏம்ய்யா கேக்குற... இந்தா..இத படிச்சிப்பாரு" என ஊர்மக்களில் ஒருவர் தந்தார்.

"செந்திலு... இதப்படிய்யா" எனக் கனகசபை தந்தார்.


முனியப்பன் துணை

குமுதா.... உன் அப்பன மன்னிச்சிடுத்தா... உனக்குக் கண்ணாலம் பண்ண கூட வக்கில்லாத பயலாய்ட்டன்... விவசாயம் பண்ண பேங்க்ல கடன் வாங்குனன்... வருச கணக்கா வட்டியே கட்டுனேன்.. முடியலத்தா..முடியல...
கடனக்கொடுக்க, நிலத்த வித்துட்டன்..எப்டியாச்சும் உனக்குக் கண்ணாலம் பண்ணிடலாமுனு ஏறாத படியில்ல... கேக்காத ஆளில்ல...ஆனா யாரும் கடனே தரல ஆத்தா.விவசாயம் பண்றவன நம்பி எப்டி கடன் தரர்துனு கேக்குதாக... எனக்கு மவளா பொறந்ததுக்ககு, நீ காலத்துக்கும் கண்ணாலம் ஆகாம இருக்க கூடாது ஆத்தா... நான் செத்தா கவுர்மண்ட் செத்த விவசாயி வீட்டுக்குப் பணம்தரும், வீட்ல இருக்க ஒருத்தர்க்கு கவுர்மண்ட் வேல தரும்னு நம்புறன்... வர பணத்துல கண்ணாலம் பண்ணி,வேல பாத்து பொழச்சிக்க ஆத்தா. இந்த கையாலாகாத அப்பனால இவ்ளோ தா முடியுது ஆத்தா...


என அன்னக்கிளி கணவன் எழுதிய கடிதத்தைப் படித்து முற்றுப்புள்ளி பக்கத்தில் தன் இரண்டு கண்ணீர்த்துளிகளை வைத்தான் செந்தில்.
இந்த நிகழ்வால் மிகவும் பாதிக்கப்பட்டான் செந்தில்.

செய்தியாளர்கள் பலர் வந்துவிட்டனர். தமிழகத்தின் பரபரப்பான நாளாக மாறிவிட்டது அந்த நாள்.

பல செய்தி ஊடகங்களில் விவாத பொருளாக மாறிப்போனது இந்த நிகழ்வு.

அரசியல் தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்தனர், நிதியுதவி செய்தனர், குமுதாவிற்கு அரசு வேலை தந்தனர் .

குமுதாவின் தந்தையின் ஆசை நிறைவேறியது என ஊரில் அனைவரும் நினைத்த போது, விவசாயத்தால் ஒருவர் ஏன் இறக்க வேண்டும் என செந்தில் மட்டுமே நினைத்தான்.

வீடு திரும்பிய பின்...

கனகசபை தன் மகனிடம், "ஐயா... செந்திலு... அப்பா ஒன்னு நல்லா யோசிச்சி சொல்றன்.கேளுய்யா..." என்றார்.

நெற்றியைச் சுருக்கியபடி அப்பாவைப் பார்த்து "சொல்லுங்கப்பா" என்றான்.

நீ மேல படிக்க நம்ப நெலத்த வித்துடலாம்ய்யா...

என கனகசபை சொன்னதும்,

"அப்பா... என்னப்பா...நீங்களா இப்டி பேசற்து...நம்ம நெலத்த உங்க ஆத்தானு சொல்லுவிங்களே, நீங்க எப்டி இப்டி பேசுறீங்க" எனக் கோபபட்டான்.

"ஆமாம்யா... வெள்ளாம பாக்காம வெறிச்சோடி கிடக்க பூமிபாக்க என்ற மனசு தாங்கல... ஆனா, நாள ஒருநாள் உன் வாழ்க்க இந்த பூமி மாறி ஆயிட கூடாதில்ல... நீ மேல படிக்கணும்யா...பெத்த ஒத்த புள்ளக்குக் குறவெச்சிட்டான் கனகசபனு ஊரு பேசுனா, என்ற கட்ட வேகாதுய்யா" என்று சொல்லி கண்களில் கண்ணீர் படிய நின்றார் கனகசபை.

"அப்பா....நான் லோன் போட்டு படிக்கிறன்..என்ன இப்ப..." என்று சொன்ன செந்திலின் பேச்சைப் பாதியிலே நிறுத்தி,

"ஐயா...அப்பா சொல்றன்ல... கடன் வாங்கிட்டு காலத்துக்கும் என்ற புள்ள கஷ்டப்பட கூடாது,

அப்பா ஒன்னு சொன்னா நல்லா யோசிச்சிட்டு தான் சொல்லுதன்.நாளக்கி திங்ககிளம... 7.30-9.00 இராகுகாலம் போனதும், ரிஜிஸ்டர் ஆஃபீஸ் போனும்யா...எதுவும் பேசாத... வெரசா கிளம்பு காலைல...

அன்னக்கிளி வீட்டுக்குப் போய்ட்டு வரன்..போலீஸ்லாம் வந்துச்சி...என்னாச்சினு பாத்துட்டு வரன்" என்று சொல்லி விட்டு நடந்தார்.

மௌனமாக தன்நிலத்தின் மீது நடந்து கொண்டிருந்த செந்திலின் காதுகளில் காற்று வந்து சேர்த்தது, "டேய் செந்திலு.... எப்படா வந்த" என்று கேட்டுக்கொண்டே வந்த செந்திலின் நண்பர்கள் பூபதி மற்றும் காளமுத்துவின் குரலொலிகளை.

"கால்ல தான்டா...சரி...அன்னக்கிளி அப்பா ஏன்டா இப்டி பன்னாரு.... என்னடா இது... " என சொல்லி உச்சிக்கொட்டினான் செந்தில்.

"அட ஏன்டா...இது நம்ம ஊர்ல நாலாவது சாவுடா" என்று கூறி பெருமூச்சு விட்டான் காளமுத்து.

"என்னடா சொல்ற..." அதிர்ச்சியில் புருவங்கள் உயர்த்தி நின்றான் செந்தில்.

"அப்பா உன்கிட்ட எதுவுமே சொல்லலயா... நம்ம தமிழய்யா மருமகன், மூனாவது தெரு சுந்தரம், கமலா அக்கா புருஷன், இப்ப குமுதா அப்பா" எனக் கூறி கோபமுகம் சிந்தினான் பூபதி.

"ஏன்டா... அவ்ளோ நெருக்கடி எப்டி டா... சாவுற அளவுக்கு என்னடா ஆச்சு..." என்று கேட்டான் செந்தில்.

"கைல காசு இல்லாம கடன் வாங்கி விவசாயம் பாக்றாங்க... விளைச்சல் பெருகுது...ஆனா, சரியான வருமானம் மட்டும் இல்ல...வட்டிகட்ட முடில.. அளவுக்கு அதிகமா கடன் தொந்தரவு... இப்டி எல்லா பக்கத்துல இருந்தும் அடிச்சா என்னடா பன்னுவாங்க..." என்று கூறி முகஞ்சுருக்கினான் காளமுத்து.

விவசாயம் இந்த மண்ணோட தொழில்...

இத காப்பாத்தற்து விவசாயியோட வேல இல்லடா...

விவசாயத்தையும், விவசாயியையும் காப்பாத்த வேண்டிது பசிக்குச் சோறு சாப்பட்ற ஒவ்வொரு உசுரோட கடமை டா...


விதைக்கறவன் வீட்டு அடுப்படில உலைகொதிக்க வழியில்லனா...இங்க யாருக்கும் சோறு சாப்படுற அருகதையே இல்லடா...

நாம எல்லாரும் தான்டா இத மாத்தனும்..அத விட்டுட்டு நிலத்த வித்துட்டா, நம்ம விவசாயிக்கு உதவாம நாமளே கொன்னுட்டா எல்லாம் சரி ஆயிடுமா...

பெரிய பிரச்சனையே அதுக்கப்றம் தான்டா...

இப்ப நெலத்த விக்றோம்.. ஆனா,ஐநூறு வருஷம் கழிச்சி எல்லாம் கிடைக்கும் ட்ரெஸ், ஷூ, கார், பெரிய வீடு எல்லாம்...

ஆனா சாப்பாட்டுக்கு?? ....

இந்த மண்ணுல விதைக்க ஆளில்லாம, குடிக்க கஞ்சி இல்லாம, நம்ம அடுத்த தலமுற அழுவனுமாடா...


இல்ல, வெளிநாட்டு உணவுளாம் இங்க பெரிய பெரிய கடையா வந்து, இந்த மண்ணோட சீதோஷனத்துக்கு பொருந்தாத சாப்பாட, சாப்பிட்டு சாப்பிட்டு முப்பது வயசுக்குள்ளே சாகணுமாடா நம்ம புள்ளைங்க...


அதுவா நம்ம இலட்சியம்,அதுவா நம்ம விவசாயிகளோட மரணத்துக்கு நாம தர போர அஞ்சலி??...


இந்த நெலத்தலாம் வித்துட்டு பணத்துக்குப் பின்னால போயி அப்டி என்னடா வாழ்ந்துடபோறோம்..."

என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் செந்தில்.

"இப்ப என்னடா பண்லாம்...நம்லால என்ன முடியும்?"
எனக் கேட்ட காளமுத்துவைப் பார்த்து...

"விவசாயம் பண்ண முடியும் டா... எவனோ ஒரு கம்பெனிகாரன் கிட்ட கைகட்டி வேல பாக்கற்த விட, நம்ம பூமில கௌரவமா விவசாயம் பாப்போம்..

இது நம்ம பூமிடா... இத இழந்துட்டு நிக்க கூடாது" எனச் சொல்லி, தான் நின்றுகொண்டு இருக்கும் அந்த விவசாய மண்ணினைக் கையில் எடுத்து, தன் நாசியின் அருகே கொண்டு சென்று நுகர்கிறான் செந்தில்.

அந்த மண்ணின் பரிமளம் அவன் மூளையின் முதல் நரம்பை முத்தமிடுகிறது.

அந்த இன்பம் புதிது அவனுக்கு.

கண்ணை மூடி, மண்ணை நுகரும், மகனின் அருகில் வந்து அவன் தோளில் வைத்து,

"ஐயா ..." என்றார் கனகசபை.

கண்ணைத் திறந்து, எந்த முகச்சலனமும் இன்றி, தந்தையின் கண்களைப் பார்த்து, "கலப்பைய எடுங்கப்பா... விவசாயம் பாக்கலாம்" என்று ஒருமுறை சொன்ன மகனின் குரல் இரண்டு முறை ஒலித்தது கனகசபை காதில்.

"என்னப்பா சொல்ற...." எனக் கேட்ட கனகசபையைப் பார்த்து சிரித்தன செந்திலின் உதடுகளும், மேற்கில் செவ்வானமும்.

நால்வரும் வீட்டினுள் சென்று, கலந்து பேசினர். பூபதி மற்றும் காளமுத்துவின் அப்பாவும் வந்தனர்.

"உழுவற்துக்கு நிலம் இருக்கு, உழைக்க ஒடம்புல தெம்பிருக்கு, இந்த ஊருக்கு நம்ளோட அரும புரியும் ஒருநாள். அதுவர ஒழைப்போம்.அதுக்கப்றம் இதுதான் நம்மள காப்பாத்தும்னு எல்லாரும் விவசாயிக்கு உதவ வந்துடுவாங்க,அப்போ விவசாயம் தான்ப்பா மிகப்பெரிய வணிகசந்தை".

"வாங்கப்பா உங்க ஆத்தாவுக்குச் சோறு போடலாம்" என்று சொன்ன மகனைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சொறிந்தார் கனகசபை.

"ஆமாய்யா கனகசப... புள்ள சொல்றது சரிதான்ய்யா.... எல்லாரும் கம்பெனி வேலைக்குப் போய்ட்டா, யாருயா விவசாயம் பாக்கற்து" என்றார் பூபதியின் அப்பா.

"சரிதான்ய்யா..." என்று ஆமோதித்தார் காளமுத்துவின் அப்பா.

தன் மகனைப் பக்கவாட்டில் அரவணைத்தபடி கனகசபை மனம் நெகிழ்ந்து, அனைவரையும் பார்த்து, "ஆமாம்யா...இது நம்ம தொழில்யா... பணக்கஷ்டத்தால நாம இத விட்டுட்டா... நாளக்கி எல்லாரோட சேந்து நம்ம புள்ளங்கலும் தானய்யா கஷ்டப்படும். நம்ம புள்ளைங்களுக்குக் காசுபணம் சேத்து வெக்கற்த விட விவசாயம் சொல்லித்தர வேண்டியது தான்ய்யா முக்கியம்.

நாம விவசாயம் செய்யற்தோட சேத்து, நம்ம ஊரு சின்னப் புள்ளைங்களுக்கும் சொல்லித் தரனும்ய்யா...

படிப்போட சேத்து, விவசாயம் எப்டி செய்யற்துனு நம்ம ஊரு புள்ளைங்களுக்கும் சொல்லித் தரனும்ய்யா...

முதல்ல நம்ம மக்கள் ஒத்துக்காதுதான்ய்யா... நாம ஆரம்பிப்போம்..

கஷ்டம்தான்ய்யா... எனக்குத் தெரியுது... இந்தக் காலத்துல விவசாயம் பண்றது போராட்டம் தான். யாரயும் கொற சொல்லி ஒன்னும் ஆகாதுய்யா...

இனி நம்ம ஊர்ல விவசாயத்தால ஒரு உசுரு கூட போக கூடாதுய்யா...என்ன பிரச்சனனாலும் விவாசாயிங்க நாம ஒன்னா இருப்போம். யாரு கைவிட்டாலும்,

அந்த முனியப்பன் நமக்கு நல்லவழி காட்டுவான்" என்றார்.

செந்தில் திடீரென ஒரு மரப்பலகை எடுத்து, 'இங்கு விவசாயம் சொல்லித்தரப்படும்' என எழுதி வீட்டிற்கு முன் வைத்து, "இனி நீங்க தான்ப்பா எங்களுக்கு வாத்தியார்" எனக்கூறி புன்முறுவல் அளித்தான்.

"முதல்ல இந்தப் பலகையைப் பாக்கும் போது நம்ள பைத்தியக்காரன்னு தான் சொல்வாங்க... கூடிய சீக்கிரம் நம்ம மக்களுக்கே புரியும்ப்பா இதோட அத்தியாவசியம் என்னனு" என்ற மகனைப் பார்த்து, பிரபஞ்ச ஒளியை மிஞ்சும் ஒரு பெருமைமிக்க முகவொளியை வீசினார் கனகசபை.

அடுத்த நாள்....

காலை ஐந்து மணிக்கு கலப்பை எடுத்துக்கொண்டு நிலத்திற்குச் சென்று நிற்கின்றனர் கனகசபை,செந்தில்,பூபதி,காளமுத்து.

சூரியனின் மெல்லிய இளங்கதிர்கள் செந்திலின் நெற்றிப்பொட்டைத் தொட்டது.

இளங்காலை குளிர்காற்றும், இளங்கதிர் வெம்மையும் சேர்ந்து அவன் ஸ்பரிசத்தைத் தீண்ட ,

கத்தும் குயிலோசை அவன் காதுகளில் விழ, அவன் வலது கை கலப்பையைப் பிடித்து கொண்டிருக்க,

அவனுக்குத் திடீரென ஞாபகம் வந்தது பாரதியின் புதிய ஆத்திச்சூடியில்,

'மேழி போற்றுதும்!' என்ற வரி.

தன் கையில் இருந்த ஏர்கலப்பையைப் பார்த்து, இரு முறை,

"மேழி போற்றுதும்! மேழி போற்றுதும்!!"

எனச் சொல்லி, ஏர்கலப்பையை முத்தமிட்டான்.அந்தப் பேரானந்தத்தில் அவன் இரு கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தை முத்தமிட்டு கொண்டிருந்தன அவன் அறியாமலே!

வணக்கம். இச்சிறுகதை முழுக்க முழுக்க என்னால் இயற்றப்பட்டது என்றும்,வேறு மொழியில் இருந்து தழுவியது இல்லை என்றும் உறுதிமொழி அளிக்கிறேன்.

***
 
Top