• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தித்திப்பாய் சில பொய்கள் - 14.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
361

பகுதி – 14.


பேருந்து தஞ்சையை நோக்கி பயணிக்க, அன்புவின் உடல் மட்டுமே அங்கே இருந்தது. மனம் முழுவதும், கீர்த்தியை விட்டு வர மாட்டேன் என சண்டித்தனம் செய்தது.

‘நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? செய்வதையும் செய்துவிட்டு, இப்படி கோழை மாதிரி..’ அப்பொழுதும் உள்ளங்கையால் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். அருகில் அமர்ந்திருந்தவர் அவனை வித்தியாசமாகப் பார்த்ததை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

‘கீர்த்தி.., கீர்த்தி..’ மனம் விடாமல் புலம்பியது. இவ்வளவு நாட்களாக தன்னையே தான் ஏமாற்றி வந்திருக்கிறோம்.., தன்னை உணர்ந்த தருணம், அவனால் ரசிக்க முடியவில்லை.

‘எதற்காக இப்படிச் செய்தேன்? அப்படியென்ன வேகம் எனக்கு? என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கா தரம் தாழ்ந்து போனேன்?’ தன்னையே கேட்டுக் கொண்டான்.

அந்த நேரம்.., அவள் தனக்கு யார் என புரிய வைத்துவிடும் வேகம்.., அது மட்டுமே தன்னை அவ்வாறு செயல்படத் தூண்டியது என்பதை நினைத்தால், மனதுக்குள் பாரம் அழுத்தியது.

தன் செய்கையில், ஒரு சிறு எதிர்ப்பு கூட இல்லாமல் தன் கைகளுக்குள் அவள் குழைந்த விதம், தன்னோடு ஒட்டிக்கொண்ட அவளது செய்கை, அவள் மனதுக்குள் தான் முழுதாக இருப்பதை அவனுக்கு பறைசாற்ற, இந்த அன்புக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே.., மனம் பாரமாய் அழுத்தியது.

பயணம் முழுவதும் ஒரு பொட்டு கூட அவனால் உறங்க முடியவில்லை. இமைகளை அழுத்தமாக, பிடிவாதமாக மூடிக் கொண்டாலும், விழிகளுக்குள் வந்து நிற்கும் அவளை என்ன செய்து தவிர்க்க?

கூடவே.., தான் செய்ய வேண்டியது என்னவென்றும் நினைத்துக் கொண்டான். கையில் இருக்கும் பணம் நிச்சயம் போதாதுதான்.., ஆனால், இதை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக தான் நினைத்ததை நிறைவேற்ற முடியும்.., நம்பிக்கை பிறந்தது.

தஞ்சை வந்து இறங்கி, ஊருக்குச் செல்லும் கடைசி பேருந்தை கடைசி நொடியில் பிடித்தவன், பேருந்து சற்று வெறுமையாக இருக்கவே ஒரு இடத்தில் சென்று அமர்ந்தான்.

அவன் ஏறியதைப் பார்த்த அங்கே இருந்த சிலர், ஒரு நொடி புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவர்கள், அடுத்த நொடி, விழிகள் பிரகாசமாக, “கங்கம்மா மகன் செல்வம் தானே நீ.., இத்தனை வருஷம் எங்கப்பா இருந்த? இப்போதான் ஊருக்கு வர வழி தெரிஞ்சதா?” ஒரு பெரியவர் வாய் திறக்க,

“ஆமா மாமா.., செல்வம்தான்..” தயக்கமாய் உரைத்தவன், அவரை அடையாளம் கண்டு கொண்டு, முறை சொல்லியே உரையாடினான்.

“எப்படி வாழ்ந்த குடும்பம்.., இப்படி சிதஞ்சி.., ஊரை விட்டே போய்.., தாங்கலையேப்பு..” வேகமாக அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

ஊருக்குள் அவனை அன்பு என யாருக்கும் தெரியாது.., அந்த ஊருக்குள் அவன் செல்வம்தான். அவன் தாய் கங்கம்மா வாய் நிறைய அன்பாக அழைத்த பெயர்.., சென்னையில் அந்த பெயரை பயன்படுத்த கூட அவனால் முடியவில்லை. நினைவுகள் துரத்துகையில் சில மாறுதலுக்காக பெயரைக் கூட விட வேண்டி இருந்தது.

“மாமா.., எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்.., அதுக்குத் தானே வந்திருக்கேன்” தெளிவாகவே உரைத்தான்.

“சரி பண்ணனும்.., உன் அப்பனும், ஆத்தாளும் நிம்மதியா இருக்கணும்னா நீ செய்யணும். ஏதாச்சும் வேணும்னா கேளுவே.., நான் ஒத்தாசை பண்ணுதேன்” அவர் உரைக்க, “உங்ககிட்டே கேக்காமையா..?” அதன் பிறகு பெரும் அமைதி.

மேலும் சிலர் உரையாட, அவர்களிடமும் உரையாடிக் கொண்டிருக்க, ஊரே வந்துவிட்டது. பேருந்தில் இருந்து இறங்கியவன், தன்னோடு இறங்கிய அவரைப் பார்த்துவிட்டு, “மாமா.., உங்களுக்கு அடுத்த ஸ்டாப் தானே..” கேள்வியாக ஏறிட்டான்.

“அரை பர்லாங்கு போய்க்கிட மாட்டனா.., நீ வா..” அவனுக்கு முன்னால் இருந்த ஒத்தையடிப் பாதையில், அவனுக்கு முன்பாக நடந்தார்.

அவர் அன்பில் நெகிழ்ந்தவன், அமைதியாக அவரைப் பின்தொடர, “செல்வம், உன்னை எங்கேயெல்லாம் தேடினோம் தெரியுமா? உங்க அத்த.., பாரிஜாதம்.., கொள்ள நாள் உன் வீட்டிலேயே பழியா கிடந்தா. என் மருமவன நான் அனாதையா விட்டுப் போட்டனேன்னு ஒரே அழுகை.., ஹம்..” கடந்த கால நினைவுகளை அலசினார்.

மனம் பாரமாக, இப்பொழுது கீர்த்தியின் நினைவு கூட பின்னுக்கு போய்விட்டது. “பாத்தியா.., எல்லாம் உன் வயல் தான்.., பண்ணையார் நெல் போட்டிருக்கார்.., அறுவடை சமயம்..” ஒரு பெருமூச்சு அவரிடம்.

கால்மணிநேர நடை.., சற்று தூரத்திலேயே தன் வீட்டைப் பார்க்க, வீட்டின் முகப்பில் விளக்கு எரிவது தெரிந்தது. “பாத்தியாவே.., பாரிஜாதம் இன்னும் விளக்கு போடுது..” அன்புவின் கண்கள் கலங்கிப் போயின.

அவனது அத்தையின் வீடு, அவன் வீட்டில் இருந்து கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது. வீட்டின் முற்றத்தில் அவன் கால் வைக்கவே, “பாரிஜாதம்.., இங்கே வா.., யார் வந்திருக்கான்னு பாரு. உன் வேண்டுதல் வீண் போகலத்தா..” வந்தவர் குரல் கொடுக்க, சட்டென அங்கே தீ பற்றிக்கொண்ட வேகம் தெரிந்தது.

வெளியே வந்த பெண்மணி, ஒரு நொடி, கையை கண்களுக்குமேல் குடையாக்கி பார்த்தவர், அடுத்த நொடி, “எய்யா.., செல்வம்.., என் ராசா வந்துட்டியா..? இந்த அத்தை மண்ணுக்குள்ள போக முன்ன என்னை பாக்க வந்துட்டியா..?” பெரும் கதறலோடு, தன் வயதையும் மீறி ஓட்டமாக ஓடி வந்தார்.

“அத்த பாத்து..” தன் கையில் இருந்த பேகை கீழே போட்டவன், ஓடிபோய் அவரை தாங்கிக் கொண்டான்.

“பாரி.., மெதுவா.., கோட்டி கணக்கா இருட்டுக்குள்ளே எங்க போற..?” அவரது கணவர் பதறிபோய் பின்னால் வந்தார்.

“செல்வம்.., நீதானாய்யா.., இப்படி துரும்பா இளைச்சு போயிட்டியே.., உன் அம்மா பாத்தா உசுரையே விட்டிருப்பாளே.., இந்த அத்த உன்ன பாக்க மாட்டான்னு கண் காங்காம போயிட்டியே..” அவன் முகம் முழுவதும் வருடியவர், அப்படியே மடிந்து அமர்ந்து ஒப்பாரி வைத்தார்.

“அத்த.., அழுவாத.., அதான் வந்துட்டேனே..” அவன் குரல் கலங்கிபோய் இருந்தது. கூடவே, அவன் கண்களிலும் கண்ணீர்.

“மாப்ள..” அவன் மாமா மாரிமுத்து அவன் அருகில் வந்தவர், மேலே பேச முடியாமல், குரல் அடைக்க, அப்படியே அவன் அருகில் நின்றுவிட்டார்.

“செல்வம்.., ஒரு போன் போடணும்னு உனக்குத் தோணலையா? அரை உசுரா ஆயிப் போனமே..” அவனை இழந்து பரிதவித்த துக்கம் அவர் வார்த்தைகளில் வழிந்தது.

“மன்னிச்சுடு அத்த..” அவனால் வேறு எதையும் சொல்ல முடியவில்லை.

“சுளுவா சொல்லிப்போட்ட.., ஒத்த தகவலும் இல்லாம..” ஓவென கதறினார். அவன் இருக்கிறானா? இல்லையா? எங்கே இருக்கிறான்? என தெரியாமல், மூன்று வருடங்களாக காத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே.

“ஏபுள்ள பாரிஜாதம்.., வந்த புள்ளையை கவனிக்கத விட்டுபோட்டு, இப்படி ஒப்பாரி வைக்க.., அதான் வந்துட்டானே.., வீட்டுக்குள்ள கூட்டி போ..” வந்தவர் அதட்ட, அப்பொழுது கூட அவர்கள் தெளியவில்லை.

“செல்வம்.., சொல்லு.., இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்னு சொல்லு.., இங்கதான் இருப்பேன்னு சொல்லு..” எங்கே அவன் மீண்டும் போய்விடுவானோ என்ற பயம் அவரிடம். அவனை இறுக அணைத்துக் கொண்டார்.

“வந்த புள்ளைகிட்டே என்ன பேசுதா பாரும்.., ஏய்.., எந்திரி, மொதோ அவனுக்கு குடிக்க ஏதாச்சும் கொடு..” மாரிமுத்து குரல் கோபத்துக்குச் செல்லவே, அப்பொழுதுதான் சற்று தெளிந்தார்.

அவன் எழுந்து, பாரிஜதத்தையும் எழுப்ப, “மாமா.., எப்படி மாமா இருக்க?” தன் அத்தையின் கடைசி மகள், கவிதாவின் குரல் கேட்க, சட்டென திரும்பிப் பார்த்தான்.

அந்த மெல்லிய வெளிச்சத்திலும், அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது அவனுக்குத் தெரிந்தது. அவன்மேல் உயிரையே வைத்திருந்த ஜீவனில் ஒன்று. அவனைத்தான் கட்டிக்கொள்வேன் என ஒரு காலத்தில் அவனையே சுற்றியவள்.

“நல்லா இருக்கேன் கவி.., நீ..?” அவளிடம் வினவ, தன் வயிற்றை ஒரு முறை பார்வையால் வருடியவள், “ரொம்ப நல்லா இருக்கேன் மாமா” அவள் கண்களும் கண்ணீரில் மிதந்தது.

“சரிவே.., நான் போறேன்.., காலைல வர்றேன்..” வந்தவர் கிளம்பிவிட்டார்.

கவிதா, அன்புச்செல்வனின் வீட்டுச் சாவியைக் கொண்டு வந்திருக்க, வீட்டை அவளே திறந்து விட்டாள். மாரிமுத்து அவன் கொண்டு வந்திருந்த பேகை தூக்கிக் கொள்ள, வீட்டுக்குள் அடி வைத்தவன், கால்கள் தள்ளாட, அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான்.

எவ்வளவு முயன்றும், அவனால் தன் துக்கத்தை அடக்க முடியாமல், நெஞ்சம் விம்மியது. அந்த வீட்டின் வெறுமை முகத்தில் அறைய அப்படியே இறுகிபோய் அமர்ந்துவிட்டான்.

அவனது அந்த நிலை அனைவரின் நெஞ்சத்தையும் பாரமாக, “செல்வம்.., அழுதுடுய்யா..” அவன் நிலை ஒருவித பயத்தை கொடுக்க, அவன் அத்தை பதட்டமாய் குரல் கொடுத்தார்.

அதற்கு மறுப்பாக அவன் தலை அசைக்க, அங்கே மீண்டும் ஒரு பெரும் ஒப்பாரியே நடந்தேறியது. அவர்களது சத்தத்தில், அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவருமே கூடிவிட்டார்கள்.

“எய்யா.., நீ கலங்காத உனக்கு ஆத்தாளா நான் இருக்கேன்..” பாரிஜாதம் அவனை தாங்கிக் கொண்டார். சொல்லப்போனால் அவனது அந்த தோற்றமும் அமைதியும், அவரை அதிகம் கலவரப்படுத்தியது.

“செல்வம் வந்துட்டான்..”, “செல்வம் வந்துட்டான் போல..”, “கங்கம்மா ஆத்மா இப்போ சந்தோஷப்படும்..”, “பாவிப்பய.., அப்போ கொஞ்சம் சூதானமா இருந்திருக்கலாம்..” விதம் விதமான பேச்சு, வீடு முழுவதும் ஆட்கள் கூடிவிட்டார்கள்.

அடுத்த ஒருமணி நேரம்.., ஒரு வழியாக கடக்க, “சரி எல்லாம் போங்க.., காலையில் பேசிக்கலாம்..” கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க, ஒரு வழியாக கூட்டம் கலைந்தது.

“கவிதா.., மாப்ளைக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா..” மாரிமுத்து குரல் கொடுக்க, அதற்குள் ஒரு வயதான பெண்மணி, கையில் டம்ப்ளரோடு அங்கே வந்தார்.

“ராசா.., மொதோ இதைக் குடி..” அவன் தோள் தொட்டு உலுக்கினார்.

“பாட்டி.., எப்படி இருக்க..?” தன் அருகில் அமர்ந்த அவர் கைகளை பற்றிக் கொண்டான்.

“உன்னை பாக்கத்தான் இந்த உசுரை வச்சிருக்கேன்.., அழுவாத ராசா.., உங்க அம்மா எங்கயும் போகல, இங்கனதான் இருக்கா. சின்ன புள்ளையாட்டம்..” அவனை கடிந்து கொண்டாலும், தன் சேலை முந்தானையால் தன் கண்களை துடைத்துக் கொண்டார்.

ஒரு வழியாக உணர்வுப் போராட்டம் ஒரு முடிவுக்கு வர, “பாரி.., மாப்பிளைக்கு சாப்பாடு எடுத்துட்டு வா.., அப்படியே ஒரு பாயும் தலகாணியும் எடு.., போ..” மனைவியை விரட்டினார்.

மனைவி செல்லவே, அங்கே இருந்த திண்ணையில் மாரிமுத்து அமர, அந்த நாலு கட்டு வீட்டை பார்வையால் அலசினான். பழைய வீட்டை இடித்துவிட்டு, புதிதாக கட்டியபொழுது கூட, நாலு கட்டு வீடாகவே கட்டிய தன் பெற்றவர்கள், பரண் வைத்து, வீட்டின் நடுவில் முற்றம், மழையோ, வெயிலோ, வீட்டுக்குள்ளும் அடிக்கும்.

சொல்லப்போனால்.., சைவம் படத்தில் வருமே.., அதே போன்ற வீடு. கீழே மூன்று அறைகள். மேலே இரண்டு அறை, மீதி இடம் பரண் போல உபயோகப்படுத்தி வந்தார்கள்.

வீடு அவ்வளவு சுத்தமாக இருந்தது. அதுவே சொன்னது.., பாரிஜாதம் அந்த வீட்டை பராமரிக்கும் விதத்தை. ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தவன், இறுதியாக பெற்றவர்களின் அறைக்குள் நுழைந்தான். பழங்கால தேக்குமரக் கட்டில்.., உபயோகிக்காத காரணத்தால், சற்று பூஞ்சை படந்து காணப்பட்டது.

பெற்றவர்களின் புகைப்படம், ஒரு பக்கம் இருக்க, அதில் வாடிய மாலைக்குள் மலர்ந்து சிரித்தவாறு அவனுக்கு காட்சி அளித்தார்கள். நின்றிருந்த கண்ணீர் மீண்டும் வரவா என மிரட்ட, நொடியில் சம்மாளித்தவன், அவர்கள் புகைப்படத்தை கைகளால் வருடினான்.

அங்கே இருந்த அலமாரியைத் திறக்க, சற்று புழுங்கிய வாடையோடு இருந்தாலும், அவர்களது உடமைகள் காட்சியளித்தது. டிராயரைத் திறக்க, தாயின் மேனியை அலங்கரித்த தாலி, கம்மல், காப்பு.., என இருக்க, மென்மையாக வருடினான்.

“மாமா.., சாப்பிட வா மாமா..” கவிதாவின் குரல் அவனைக் கலைக்க, அனைத்தையும் பூட்டிவிட்டு, மெதுவாக திரும்பி நடந்தான்.

“கவிதா.., இது எத்தனாவது மாசம்..?” மென்மையாக வினவ, “இதுதான் மாசம் மாமா.., இன்னும் பத்து நாள்ல டேட் கொடுத்திருக்காங்க..” உரைத்தவள், அவனுக்கான உணவை கூடத்தில் எடுத்து வைத்தாள்.

பாயில் அமர்ந்தவன் முன்னால் இலை போட்டவள், சூடாக தோசைகளை எடுத்து வைத்தாள். “அவசரத்துக்கு சட்டினிதான் பண்ண முடிஞ்சது மாமா..” சற்று கவலையாக உரைக்க,

“எனக்கு தண்ணி ஊத்திபோட்ட சாதமே போட்டிருக்கலாமே.., இந்த நேரம் எதுக்கு வீணா சிரமம்..?” கேட்டவன் உணவில் கை வைத்தான்.

“உனக்கு பழசு போடுறதா?” பழைய நினைவில் அவள் கண் கலங்க, “உன் மாமன் பழையதுதான் மூணு வருஷமா சாப்ட்டான்..” அவன் உரைக்க, மெல்லியதாக விசும்பவே துவங்கி விட்டாள்.

இங்கே இருந்த வரைக்கும் பழையது என்றால் முகத்தை அவ்வளவு சுழிப்பான். காலை, மாலையில் டிபன் இல்லை என்றாலும், சூடாக அவனுக்கு உணவு வேண்டும். கங்கம்மாவும் அவன் கேட்பதை சிரமம் பாராமல் செய்து கொடுப்பார்.

“ஏய் கவி.., அவனுக்கு சாப்பாட்ட போட்டுட்டு, என்னத்துக்கு அவன் முன்னாடி உக்காந்து அழுவுற.., இப்பதான் உன் அம்மாவை சரி கட்டினேன்.., இப்போ நீயா..?” மாரிமுத்து வெளியில் இருந்தே குரல் கொடுத்தார்.

“விடு மாமா.., நம்ம கவிதா தானே..” மாமன் மகளுக்கு பரிந்து வந்தவன், “மச்சான் என்ன பண்றார்? எப்போ கல்யாணமாச்சு..?” மெதுவாய் விசாரித்தான்.

“பக்கத்து ஊர்ல விவசாயம்தான் பண்றார். அந்த ஊர் மும்பர் வேற.., ஒரு வருஷம் ஆச்சு மாமா..” அவள் உரைக்க, அவன் உணவை முடித்துக் கொண்டான்.

“என்னமாமா.., அதுக்குள்ளே எழுந்துட்ட..?” சற்று பதறிப் போனாள்.

“வயித்தில் இடமில்லை கவிதா. எனக்கு போதும்..” அவன் உரைக்க, கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் மனம் கனத்துப் போனது.

முற்றத்தில் கை கழுவியவன், “அத்தைய எங்கே காணோம்..?”

“அவ அங்கன இருந்து இன்னும் ஒப்பாரி வைக்கா. அதான்.., அழுது முடிச்சுட்டு வான்னு சொல்லியிருக்கேன்..” மாரிமுத்து உரைக்க, “ஏன் மாமா இப்படி பண்ற..?” கடிந்து கொண்டவன், அவர்கள் வீட்டுக்கு நடந்தான்.

கவிதாவும் உடன் வர, “சந்தோசமா இருக்கியா கவிதா. மச்சான் உன்னை நல்லா பாத்துக்கறாரா?” அவள் தன்மேல் வைத்திருந்த நேசம் அவனை அவ்வாறு கேட்கத் தூண்டியது.

“வெள்ளந்தி மனுஷன் மாமா. அவருக்கு நான்னா உசுரு..” தான் கேட்டதுக்கு நேரடியாக அவள் பதில் சொல்லாமல் தவிர்ப்பதை உணர்ந்து கொண்டாலும், அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

‘அக்காவதான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்ட.., என்னையவும் அதே மாதிரி ஏமாத்திடுவியா மாமா..?’ ஒரு காலத்தில் அழுகையினூடே அவள் வினவியதும்,

‘உங்கள மாதிரி கருவாச்சிகள நான் கட்டிக்கவா..? நான் செவத்த புள்ளையதான் கட்டிப்பேன். ஒழுங்கு மரியாதையா அத்த சொல்ற பையனுக்கு கழுத்த நீட்டுற ஆமா..’ தயவே இல்லாமல் தான் பேசிய பேச்சுக்களும் அசந்தர்ப்பமாய் நினைவிலாட, ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

ஒரு விதத்தில் அவர்களுக்கு தான் எந்த நம்பிக்கையும் கொடுத்து ஏமாற்றவில்லை என்பது மட்டுமே ஆறுதலாக இருந்தது. அவன் வீட்டுக்குள் வரும் முன்னர், “அம்மா.., தோசை ஊத்தாதே.., மாமா இதையே சாப்பிடல” குரல் கொடுத்தவாறு, தன் நிறைமாத வயிற்றை சுமந்துகொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

“ஏய்.., என்னடி சொல்லுத? நீ ஒழுங்கா சொல்லியிருக்க மாட்ட..” கோபமான அவர் குரலும், கூடவே, ஒரு மூக்குறிஞ்சலும் கேட்க, “அத்த, எனக்கு நெசமாவே போதும்..” உரைத்தவன் அடுக்களைக்குள் நுழைந்தான்.

“செல்வம்..” மேலே சொல்லும் முன்னர் அழுகை குறுக்கிட, “நாளைக்கு அழுவதுக்கு கொஞ்சம் மிச்சம் வை.., இன்னிக்கே மொத்த தண்ணியையும் ஊத்தணுமா?” மாரிமுத்துவின் குரலில், வேகமாக முகத்தை துடைத்துக் கொண்டார்.

மாரிமுத்து, பாரிஜாதத்துக்கு மூன்று மகள்கள்.., அன்புச்செல்வனைத்தான் தங்கள் மகனாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தர்கள். தங்களது ஒரு மகளுக்கு அவனை மணாளனாக மாற்ற விரும்ப, அதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்து, கொஞ்சம் கூட கோபம் கொள்ளாமல், அவன் விருப்பத்துக்கு விட்டு விட்டார்கள்.

“மாமா.., சும்மா அத்தையவே அதட்டுற.., இதையெல்லாம் பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்க..” சற்று கோபமாகவே உரைத்தான்.

“உன் அத்த சும்மாவே எனக்கு அடங்கிருவா.., இப்போ நீ வேற கூட்டா.., எனக்கு திண்ணைதான்..” துண்டை உதறி தோளில் போட்டுக்கொள்ள,

“காலம்போன காலத்தில் மனுஷனுக்கு பேச்சைப் பார்.., போங்க..” அங்கே சற்று இயல்பு திரும்பியது.

“மாப்ள.., இங்கனயே படுக்கியா.., இல்ல..” அவர் கேட்டு முடிக்கும் முன்னர்,

“நான் அங்கேயே படுத்துக்கறேன் மாமா. அத்தைய பாக்கத்தான் வந்தேன். அத்த, சும்மா அழுவாதே.., காலையில் இங்கே.., உங்கிட்டே கொஞ்சம் பேசணும்.., வர்றேன்..” அவன் கிளம்ப, அவனோடு நடந்தார் மாரிமுத்து.

“மாமா.., நீயெங்க என்னோட வர.., இங்க ஆம்பளைத் துணை வேணும்..., நீ இரு.., நான் போறேன்..” அவன் கிளம்ப பிடிவாதமாக அவனோடு கிளம்பினார்.

“மாமா.., நான் இனிமேல் எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்..” அவன் உரைக்க,

“இனிமேல் நீ போனாலும் நாங்க விடுறதா இல்ல. உன் கால்ல சங்கிலியைக் கட்டியாவது போட்டுட மாட்டோம்..” அவனை பிரிந்து இருந்த வருத்தம் அவர் குரலில் நிரம்பி வழிந்தது.

வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்தவர், “நீ வீட்டுக்குள்ள படுத்துக்க மாப்ள, நான் இங்கனயே படுக்கேன்..” அவர் அங்கேயே படுத்துவிட, பாயை எடுத்து திண்ணையில் விரித்தவன், “நானும் இப்படியே படுக்கறேன் மாமா..” படுத்தவன், விட்டத்தை வெறித்தான்.

‘அடுத்து என்ன செய்யப் போகிறோம்?’ சிந்தித்தவன், செய்ய வேண்டிய வேலைகள் ஒவ்வொன்றாக பட்டியலிட்டவாறே கண்ணயர்ந்தான். அவனைப் பார்த்தவாறே சற்று நேரம் இருந்த மாரிமுத்து, ‘மாப்ள என்ன முடிவுல இருக்கான்னு தெரியலையே..’ அதே யோசனையில் தானும் விழி மூடினார்.

தித்திக்கும்...........
 

Lakshmi murugan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
311
இப்படி உறவுகள் கிடைக்க அன்பு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
 

Kothai Suresh

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
38
இந்த மாதிரி அன்பான உள்ளங்கள் இருக்க என்ன குறை அன்புக்கு
 
Top