• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தித்திப்பாய் சில பொய்கள் - 15.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
363
பகுதி – 15.

அந்த காலை மிகவும் அழகாக விடிந்தது அன்புவுக்கு. கோழி கூவும் ஓசையில் கண் விழித்தவன், பாயில் இருந்து வேகமாக எழுந்து அமர்ந்தான்.

இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. நேரம் அதிகாலை ஐந்தாக இருக்கலாம் என அவன் கணிக்க, அப்பொழுது தன் மாமா மாரிமுத்து படுத்திருந்த கட்டிலைப் பார்க்க, அது வெறுமையாக காட்சியளித்தது.

‘மாமா எங்க போனாரு..? சொல்லாமலே போயிட்டாரு..’ யோசனையாக எழுந்தவன், அத்தை வீட்டை நோக்கி நடந்தான்.

“அத்த..” வெளியில் இருந்தே குரல் கொடுக்க, “செல்வம்.., என்ன.., இம்புட்டு வெள்ளனே எழுந்துட்ட..? தூக்கம் வரலையா?” கேட்டவர் தன் முந்தானையில் கை துடைத்தவாறே வெளியே வந்தார்.

உள்ளுக்குள் வருந்திப் போனான். இங்கே இருந்த வரைக்கும் ஏழு மணிக்கு முன்னர் அவன் எழுந்த நாளே கிடையாதே. சிந்தையை ஒத்தி வைத்தவன், “மாமா எங்கத்த..?” கேட்டவன், முற்றத்தில் இருந்த தண்ணீரால் முகம் கழுவத் துவங்கினான்.

“நம்ம வாழைத் தோப்பில் இன்னைக்கு குலை வெட்டுறாக.., அங்கதான் போயிருக்கார். இனிமேல் லோட் ஏத்திட்டு ஒரு எட்டு மணிக்கா வருவார். நீ வா.., உனக்கு காப்பி தர்றேன்..” அவனை வீட்டுக்குள் அழைத்தார்.

“இல்லத்த.., நானும் தோப்புக்கு போயிட்டு வர்றேன்..” அவர் பதிலை எதிர்பாராமல் அவர் வீட்டுக்கு வலதுபக்கம் இருந்த பாதையில் திரும்பி நடக்கத் துவங்கினான்.

அவரது மறுப்பை கேட்கக் கூட அவன் அங்கே இருக்கவில்லை. ‘ஆத்தா.., புள்ளைக்கு துணை இரும்மா..’ வேகமாக வேண்டுதலை வைத்தார். கூடவே, “செல்வம்.., உன் புல்லட்டு வீட்டுக்கு பின்னாடிதான் நிக்குது.., எடுத்துட்டு வேண்ணா போ..” அவர் குரல் கேட்க சட்டென நின்றுவிட்டன.

தன் வண்டியில் அமர்ந்து ஊரைச் சுற்ற அவனுக்கும் ஆசைதான். ஆனால், அதற்கு முன்னர், தான் செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டும்’ எண்ணியவன், “அதை பிறகு பாத்துக்கறேன்.., உடனே அதை எடுக்க முடியாது” உரைத்தவன் நடந்தான்.

பரிஜாதத்தின் வீட்டுக்கு பின்னால் இருக்கும் மாட்டுக் கொட்டகையைக் கடக்க, “ம்மா.., ம்மா..” ஒரு காளையின் குரல் அவனைத் தீண்டியது.

சட்டென நின்று திரும்பிப் பார்த்தவன், “எலேய் கருப்பா..” அந்த காளையைப் பார்த்ததில் அவனுக்கு அவ்வளவு சந்தோசம்.., அது குரலில் வழிய, சற்று பெரிய கூக்குரலாகத்தான் அது வெளிப்பட்டது.

அவன் குரலைக் கேட்ட காளையோ.., ஒரே பாய்ச்சலில் தன்னை கட்டியிருந்த கயிறை அறுத்துக்கொண்டு அவனை நோக்கி பாய்ந்து வந்தது, அந்த கருப்பு நிறக் காளை.

வந்த வேகத்தில்.., சற்று நிதானித்து.., அவன் நெஞ்சில் தன் முகத்தால் ஒரே முட்டு.., கூடவே.., “ம்மா..” ஒரு குரல் வேறு. அவனை அப்படியே சுழற்றி சுழற்றி முட்டியது.., தன் நாவை நீட்டி ஒரு முறை அவன் தலையை நக்கி கூட வைத்தது.

“கருப்பா.., நீ இங்கதான் இருக்கியா..? பெரியவனாயிட்ட.., உன்கூட இனிமேல் சண்டை போட முடியாது போல..” கேட்டவன், தன்னைவிட ஒருஅடி உயரமாக வளர்ந்துவிட்ட அதன் கொம்பை பிடித்து, அடக்கும் விதமாக பலம் கூட்ட, தன் இரநூறு முன்னூறு கிலோ எடையை வைத்து, அவனை நெட்டித் தள்ள முயலாமல், அவனிடம் பின்வாங்கிப் போனது.

“எலேய் விட்டுக் கொடுக்குறியா..?” கேட்டவன் அதன் கழுத்தை கட்டிக்கொள்ள, அதுவும் அவனை அழுத்தமாக உரசிக் கொண்டது.

“செல்வம்.., உன்னைய இன்னும் மறக்கல பாத்தியா? யாருக்குமே அடங்காது. உன்கிட்டே எப்படி நிக்குது பாரேன். நாலு பேருக்கு கை மாத்தியும், எப்படியும் கயித்தை அத்துட்டு இங்கே வந்துடும். கடைசியா நாங்களே வச்சிருக்கோம்..” பாரிஜாதத்தின் கண்களில் கண்ணீர்.

“அத்த.., செவல காள..?” அவன் கேள்வியாய் நிறுத்த, அதுவும் இங்கனதான் இருக்கு. என்ன.., இவன் அளவுக்கு அவன் முரடு கிடையாதே.., அதான் கயித்த அத்துட்டு வராமல், கத்திகிட்டு கிடக்கான். அவனையும் ஒரு எட்டு பாரு..” அவர் உரைக்க, மறுக்காமல் கொட்டகைக்கு விரைந்தான்.

“செவல..” அவன் குரல் கொடுக்க, அதுவும் சற்று குதித்துக் கொண்டு அவனை நோக்கி வர முயன்றது.

“செல்வம்.., நீ இரு.., நான் அவனை வெளியே கூட்டி வர்றேன்.., உள்ள சாணியா இருக்கு..” பாரிஜாதம் உள்ளே செல்ல முயல, அவரைத் தடுத்தவன்,

“இனிமேல் இதையெல்லாம் பழகிக்கணும் அத்த.., நீ விடு..” உரைத்தவன், அதைப் போய் தடவிக் கொடுத்தான். அதைப் பார்த்த கருப்பன்.., அவன் முதுகில் முட்ட, “பொறாமையைப் பாரேன் உன் தம்பிக்கு..” பாரிஜாதம் உரைக்க, அதன் கழுத்தை மறு கரத்தால் தடவிக் கொடுத்தான்.

அந்த காட்சியைப் பார்க்கவே அவ்வளவு பாந்தமாக இருந்தது.

கருப்பன் அவர்கள் வீட்டில் இருந்த லஷ்மி என்ற பசுவுக்கு பிறந்த காளைக் கன்றுதான். பொதுவாக காளைக் கன்றை ஒரு வருடமோ, ஆறு மாதத்திலோ விற்று விடுவார்கள். ஆனால், முதல் முறையாக அன்புச்செல்வன் அந்த காளைக் கன்றோடு உறவாடவே. அதை விற்காமல் விட்டு விட்டார்கள்.

அது கன்றுகுட்டியாக இருந்த பொழுதே அதோடு விளையாடுவது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். மல்யுத்தம், கயிறு இழுப்பது என அனைத்தையும் அதோடு விளையாடுவான்.

அவன் ஊருக்குள் எங்கே சென்றாலும் அவனோடு செல்லும் அளவுக்கான நெருக்கம். அவன் அழைத்தால், கயிறை அறுத்துக்கொண்டு அவன் குரல் கேட்ட திசையில் பயணித்து, அவனை வந்தடையும்.

“கருப்பா.., வாழைத்தோப்பு போறேன்.., வர்றியா...?” அவன் கேட்க, கொம்பில் இருக்கும் சலங்கை சப்திக்க தலையை அசைத்தது.

“பாரு செல்வம்.., நீ பேசுனா எப்படி கேட்டுக்குதுன்னு. நான் சொன்னா என்னைய முட்ட வரும்.., எலேய் கருப்பா.., எப்படியும் நான்தானே உனக்கு தண்ணி காட்டணும்.., இன்னைக்கு உனக்கு பருத்திக்கொட்டை கிடையாது போ..” அவள் உரைக்க, மேல் உதட்டையும், கீழ் உதட்டையும் அகலமாக விரித்து, அவளுக்கு அளவம் காட்டியது.

அதைப் பார்த்த அன்புச்செல்வன் வாய்விட்டு சிரிக்க, “அதுக்கு இருக்க குசும்பை பாத்தியாலே..” அதன் முதுகில் ஒன்று வைக்க, தன் வாலால் அவரை அது திருப்பி அடித்தது.

அதைப் பார்த்தவன், “கருப்பா.., சும்மா இரு..” அவன் அதட்ட, வேகமாக வாலை தாழ்த்திக் கொண்டது.

அதற்குள் கவிதா காபி கொண்டுவந்து கொடுக்க, “நீயும் எழுந்துட்டியா..?” கேட்டவன் அதை வாங்கிப் பருகினான். குடித்துவிட்டு டம்ப்ளரை அவளிடம் கொடுத்தவன்,

“வர்றேன் அத்த, கவிதா.., வாடா கருப்பா..” அவன் நடையை எட்டிப் போட, அவன் பின்னால் ஒரு பாதுகாவலனாய் தொடர்ந்தது கருப்பன்.

“எம்மா.., மாமா இனிமேல் இங்கே இருந்து போகாதே..” கவிதா கேள்வியாக இழுக்க,

“நானும் அப்படித்தான் நினைக்கேன். அவன் என்ன நினைக்கான்னு தெரியலையே” பெருமூச்சை வெளியிட்டவர் வேலையைப் பார்க்கத் துவங்கினார்.

பதினைந்து நிமிட நடையில், வாழைத்தோப்புக்குச் செல்ல, அங்கே வேலை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. “மாமா..” குரல் கொடுத்தவன் அங்கே செல்ல, “வா மாப்ள.., என்ன வெள்ளனே எழுந்துட்ட போல.., நானே வந்திருப்பேனே.., நீ எதுக்கு அலையிற?” கேட்டவர், குலை வெட்டுவதில் கவனமானார்.

“நீ ஏன் மாமா வெட்டுற? அதான் ஆளுங்க இருக்காங்களே..” அவரைத் தடுத்தான்.

“ஆளுங்க இருந்தா என்ன மாப்ள.., நாமளும் கூட செஞ்சா ஒரு கூலி குறையுமா இல்லையா..?” கேட்டவர் வேலையை நிறுத்தவே இல்லை.

“எனக்கும் ஒரு அருவா கொடு மாமா.., நானும் வெட்டுறேன்..” அவன் உரைக்க, பட்டென தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தி அவன் முகம் பார்க்க, நிச்சயம் அதில் விளையாட்டுத்தனமில்லை. அதில் ஒரு உறுதியும், பிடிவாதமும் தெரிய, தன் இடையின் பின்னால் தொங்கிய இன்னொரு அருவாளை அவனிடம் கொடுத்தார்.

“எப்படி வெட்டணும்னு தெரியுமா மாப்ள?” அவர் இழுக்க,

“நான் இந்த மண்ணுலதான் மாமா பொறந்தேன்.., வளந்தேன்..” உரைத்தவன், வாழை மரத்தின் நடுவில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டி, வாழையைச் சாய்த்தவன், குலையை கையால் பிடித்து, லாவகமாக ஒரே வெட்டில் வெட்டிப் பிரிக்க, மாரிமுத்து முகத்தில் அப்படி ஒரு நிம்மதியும், சந்தோஷமும்.

‘இனிமேல் என் மாப்ள பிழைச்சுப்பான்.., அவன் அப்பன் பேரை காப்பாத்துவான்..’ மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

அதே நேரம்.., கருப்பனோ.., “ம்மா..” குரல் எழுப்ப, “கருப்பா.., உனக்கு இங்கே வேலை இல்லை.., அப்படி ஓரமா இரு..” தன் வேலையைத் தொடரப் போனான்.

“மாப்ள.., சட்டையை கழட்டி வை.., நல்ல சட்டை கறைபட்டா போகாது..” அவர் உரைக்க, மறுக்காமல் தன் சட்டையை கழட்டி வைத்தவன் வேலையைத் தொடர்ந்தான்.

உடல் உழைப்பு அவனுக்கு சற்று பழக்கம்தான் என்றாலும், கை உழைப்பு புதியதாயிற்றே. சற்று களைத்தாலும், அதை ஒற்றி வைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.

வாழைக் குலைகள் அனைத்தையும் வெட்டி, ஒரு இடத்தில் குவித்துவிட்டு, வண்டி வரவே, அனைத்தையும் ஏற்றி, கட்டி.., நிமிர்கையில் சூரியன் அதன் கதிர்களை நன்றாக பாய்ச்சத் துவங்கி இருந்தான்.

“மாப்ள.., அசத்திட்ட..” அவன் தோள் தட்ட, தன் சட்டையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டவன், அவரோடு நடந்தான்.

“மாமா.., தென்னந்தோப்பு பக்கமும் ஒரு பார்வை பாத்துட்டு போவோமா?” அவன் கேட்க, சற்று ஆச்சரியமாக அவனைப் பார்த்தாலும், உற்சாகமாகவே அவனோடு சென்றார்.

“மாமா.., தென்னையெல்லாம் ரொம்ப வளந்துடுச்சு இல்ல..” கேட்டவன், அந்த தோப்பை சுற்றி வந்தான். தோப்பின் மூலையில் தென்னம் மட்டை, பாழை என குவிந்திருக்க, மறு பக்கம் தேங்காய் நார் குவிக்கப் பட்டிருந்தது.

“மட்டை எல்லாம் ஏன் மாமா அப்படியே கிடக்கு?” அவன் கேட்க,

“கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல கொடுத்தா காசு கம்மியா வரும் மாப்ள, இப்போ இதை மொத்தமா வித்தால், இதுவே ஒரு நாலு அஞ்சாயிரம் கிடைக்கும் அதன். ரெண்டு நாள்ல ஆள் வந்துடுவாங்க..” உரைத்தவர், அவனது வயல்காடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

“வயக்காடு மொத்தமும் அடமானத்தில் இருக்கு செல்வம். பண்ணையார் தான் வெள்ளாம பண்றார்...” அவர் குரலில் அவ்வளவு வருத்தம்.

தன் பார்வையை சுழற்ற, கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வயல்காடு விளைந்து, கதிர் முற்றி, தலை சாய்ந்திருந்தது. எப்படியும் ஒரு வாரத்தில் அறுவடை இருக்கும் என்பதை கணித்துக் கொண்டான்.

அவர்களது பம்புசெட்.., கிணறு, தொட்டி.., தாய் தந்தை இளைப்பாறிய மரம், வாய்க்கால்.., ஒவ்வொன்றையும் பார்க்க, மனம் கனத்துப் போனது. அவன் அமைதியைக் கலைக்க அவரும் விரும்பவில்லை.

சற்று நேரத்தில் தெளிந்தவன், “வா மாமா.., வீட்டுக்கு போகலாம்..” உரைந்தவன், நடந்தான்.

கருப்பனும் பின்தொடர, “மாப்ள.., என்னவே.., இவன் உனக்கு துணைக்கு வர்றான். என்னையெல்லாம் நெட்டி தள்ளிடுவான். இவன குளிக்க வைக்க கூட எனக்கெல்லாம் அம்புட்டு பயம். உன்கிட்டே என்னன்னா.., நாய்க்குட்டி மாதிரி வர்றான்..” அவர் குரலில் ஒரு பூரிப்பு.

“என் தம்பி மாமா.., உனக்குத் தெரியாதா..?” அவன் சொல்ல, அவர்கள் தன்னைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்பதை அறிந்தது போல், மாரிமுத்துவை திரும்பி ஒரு பார்வை பார்த்தது.

வீட்டுக்கு வரும் வழியில், வேப்பம் குச்சியை உடைத்து, பல் துலக்கியவாறே வந்து, வாய் கழுவிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

“பாரி..” மாரிமுத்து குரல் கொடுக்க, “வாங்க.., லோடு போயிடுச்சா? விலை என்ன சொன்னாக? எப்போ கைக்கு காசு வரும்..?” ஒவ்வொன்றாக கேட்க, அனைத்துக்கும் பொறுமையாக பதில் கொடுத்தவர், “பத்து மணிக்கு காசோட இங்கே வர்றேன்னு சொல்லியிருக்கான்.., நீ சாப்பாட்டை எடுத்து வை..” தோளில் இருந்த துண்டால் தரையை தட்டிவிட்டு அமர்ந்து கொண்டார்.

அன்புச் செல்வனும் அவரோடு அமர, தட்டில் சூடாக இட்டிலி பரிமாறப் பட்டது. அமைதியாக அவற்றை உண்ண, மாரிமுத்து, ஜாடையாக மனைவியைப் பார்த்து ஜாடை பேச, ‘பொறுங்க..’ என்பதுபோல் கணவனிடம் கண் காட்டியவர், அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார்.

அவர்களது மௌன பாஷையை கண்டு கொண்டவனுக்கு, சட்டென கீர்த்தியின் நினைவு. ‘இனிமேல் அவள் முகம் பார்த்து யார் பேசுவா?’ உண்பதை நிறுத்தி அவன் அமைதியாக,

“மாப்ள.., சாப்பிடு..” மாரிமுத்துவின் குரல் அவனைக் கலைக்க, அமைதியாக உண்டு முடித்தவன், கை கழுவிவிட்டு, அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தான்.

பெரியவர்கள் அவன் முகம் பார்க்க, கவிதா வாசல் பக்கம் நின்றிருந்தாள். “மாமா.., இரு வர்றேன்..” உரைத்தவன், தான் நேற்று கொண்டுவந்த பையை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தான்.

பேகைத் திறந்தவன், உள்ளிருந்து இரண்டு இரண்டாயிரம் ரூபாய் கட்டுக்களை எடுத்து வெளியே வைத்தவன், இரண்டு ஐநூறு ரூபாய் கட்டையும் எடுத்து வெளியே வைத்தான்.

பெரியவர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொள்ள, “மாமா.., பண்ணையார் வீட்டுக்கு போகணும்.., யாராவது பெரிய மனுஷங்களை கூப்பிடணும்னாலும் ஏற்பாடு பண்ணு மாமா. பாதி நிலத்தையாவது மீட்கணும்..” தீர்மானமாக பேசும் அவனை, ஆச்சரியமும், அதிர்ச்சியும் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“மாப்ள.., இது..?” பாரிஜாதத்தால் கண்களை நம்ப முடியாமல், கண்ணீர் வழிந்தது.

“என்னோட மூணு வருஷ உழைப்பு அத்த.., சாப்பிடாமல், உடுக்க துணி வாங்காமல், நான் உழைச்சு சம்பாதிச்ச காசு..” குரல் நெகிழ்ந்து, கூடவே ஒருவித உறுதியை பறை சாற்றியது.

அவர்கள் கண்கள் சட்டென கலங்கினாலும், அவன் உழைப்பின் அருமை தெரிந்து வந்திருக்கிறான் என்பதில் அப்படி ஒரு நிறைவு.

“பாரி.., உள்ள போய் எடுத்துட்டு வா..” மாரிமுத்து மனைவியை ஏவ, உள்ளே சென்றவர், தானும் இரண்டு லட்சம் பணத்தோடு வெளியே வந்தார்.

“மாமா.., இது..” அவன் திணற,

“உன் தோப்பு, தோட்ட காசுதான். அப்படியே எடுத்து வச்சிருக்கோம். என் நிலத்தை எல்லாம் குத்தகைக்கு விட்டிருக்கேன். அதில் வர்ற வருமானம் எனக்கு போதும். உன் தோட்டத்துலதான் உழைக்கேன். என் மச்சான் காட்ட அப்படியே விட முடியுமா?” அவர் உரைக்க, அவரைத் தாவி அணைத்துக் கொண்டான்.

“மாமா.., நான்..” அவன் கலங்கிப் போக,

“செல்வம்.., உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போறேன். விடுலே.., வாழைத்தோப்பு காசு ஒரு அறுபதாயிரம் வரும். ஆனா.., அதை விதை நெல்லு வாங்க வச்சுக்கலாம். இப்போ இருக்கதை பண்ணை கிட்டே கொடுத்துட்டு, முக்கா காட்ட மீட்கலாம். மிச்சத்த ஆறே மாசத்தில் மீட்டுடலாம்.

“நான் நாலு பேத்த கூட்டி வர்றேன்.., இப்போ போனாத்தான் அவர வீட்ல புடிக்க முடியும். வெளியே கிளம்பிட்டா பொறவு கஷ்டம்.., இரு வர்றேன்..” துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் பண்ணையார் வீட்டுக்கு ஒரு பத்துபேர் செல்ல, அவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தவர்போல், அவர்களை எதிர்கொண்டார் பண்ணையார்.

“அட.., வாங்க.., வாப்பா செல்வம்..” அவர்களை வரவேற்றவர், “அம்மாடி, காப்பித்தண்ணி கொண்டுவா..” உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.

“சொல்லுங்க.., ஊர் பெரியவங்க எல்லாம் சேர்ந்து வந்திருக்கீங்க” பேச்சை அவரே துவங்கினார்.

“நம்ம செல்வம்.., அடமானம் வச்ச நிலத்தை மீட்கலாம்னு வந்திருக்கான். மொத்தம் எவ்வளவு என்னன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்” வந்தவர் உரைக்க, பண்ணையார், அங்கே இருந்த கணக்காளனைப் பார்க்க, வேகமாக அவன் உள்ளே சென்றான்.

அதே நேரம்.., வீட்டுக்குள் இருந்து, கையில் ஒரு டிரேயோடு வெளியே வந்தவள், அந்த கூட்டத்துக்குள் அன்புச் செல்வனை கண்களால் தேடினாள். தேடியவன் பார்வைக்கு கிடைக்க, அவள் முகத்தில் அப்படி ஒரு நாணம்.

காபியை அவர்களிடம் கொடுக்க, “அட.., நம்ம சந்தியாவா..? நீ எப்போம்மா திருச்சியில் இருந்து வந்த? காலேஜ் எல்லாம் நல்லபடியா போகுதா?” வந்தவர் கேட்டார்.

“ரெண்டு நாள் ஆச்சு சித்தப்பா.., காலேஜ் நல்லா போகுது. இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சுடும்..” ஓரவிழிப் பார்வை அன்புச்செல்வனிடமே நிலைத்தது.

அன்புவின் பார்வை அவளை ஏறிட்டு பார்க்கவும் இல்லை, அவள் பேச்சில் நிலைக்கவும் இல்லை. மாறாக, வந்த வேலை எப்படி முடியும்? என்பதிலேயே இருந்தது.

முதல் கவலையே.., பண்ணையார் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, விளைநிலத்தை அவனிடம் கொடுக்க வேண்டும் என்பதே பெரும் கவலையாக இருந்தது.

ஒரு வேளை அவர் மறுத்துவிட்டால்.., அந்த நினைவே கொடூரமாக இருந்தது. நிச்சயம் அடுத்த ஒரு வருடத்தில் அவனால் அந்த மூன்று லட்சத்தை சம்பாதித்துவிட முடியும். ஆனால்.., அந்த ஒரு வருடம் என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது.

ஒற்றை இரவுக்குள்.., ஓராயிரம் நினைவுகள்.., கூடவே, ஒரு பக்கம், கீர்த்தி என்ன ஆகியிருப்பாள்? என்னைத் தேடி வீட்டுக்கு போயிருப்பாளா? அலைபேசியில் அழைத்திருப்பாளா? அதிலேயே உழன்றது.

அவன் பார்வை தன்மேல் விழாத தவிப்பில், சற்று கோபமாகவே நடந்து சென்றாள் சந்தியா. அவனோ, கையில் இருந்த காபியை கூட அருந்த முடியாமல் அமர்ந்திருந்தான்.

உள்ளே சென்ற பணியாள், கையில் சில பேப்பர்களோடு வெளியே வர, அதை பண்ணையாரிடம் கொடுத்துவிட்டு, அவர் காதுக்குள் ஏதோ சொல்லிவிட்டு விலகி நின்றான்.

“மாரிமுத்து.., உனக்குத் தெரியாதது இல்லை. மொத்தம் பத்து லட்ச ரூபா கொடுத்தேன். ஒத்த ரூபா கூட திருப்பி வரலை. வட்டிக்கு பதிலா, அவங்க காட்டில் வெள்ளாமை பண்ணேன். அது இந்த ஊருக்கே தெரியும். முதல்ல என்கிட்டே அடமானம் வச்ச நிலம் இருபது ஏக்கர்.

“அதில் இரண்டாம்தர பயிர் நல்லா வரும். கொஞ்சம் செம்மண் காடு..., அதுக்கு அடுத்து ஒரு பத்து ஏக்கர்.., அடுத்து.., அஞ்சு அஞ்சா வச்சாக.., நீங்க எதை மிக்க வந்திருக்கீக..? மொத்தமாவா.., இல்ல சில்லரையாவா?” அவர் கேட்க, அவ்வளவு நேரமாக அமைதியாக இருந்த செல்வம் வேகமாக நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஐயா.., முதல்ல வச்ச இருபது ஏக்கரை கடைசியா திருப்பிக்கறேன்.., மிச்சத்தை இப்போ வாங்கிக்கறேன். ஒரு ஒரு வருஷம் டைம் கொடுங்க, அதையும் மீட்டுடுறேன்..” வேகமாக படபடத்தான்.

சற்று நேரம் தாடையைத் தடவி யோசிக்க, அந்த பணியாள் மீண்டும் வந்து அவரது செவியில் மீண்டும் எதையோ சொல்லிவிட்டு, வீட்டுக்குள் பார்வையைச் செலுத்த, அங்கே நின்றிருந்தாள் சந்தியா.

‘ப்ளீஸ்ப்பா..’ அவள் பார்வையால் கெஞ்ச, தன் முறுக்கு மீசையை நன்றாக முறுக்கியவர், “அந்தக் காட்ல..” இழுத்து நிறுத்தி, அவர்கள் முகம் பார்க்க,

அவர் என்ன சொல்லப் போகிறாரோ.., என்பதுபோல் பதைப்பாக பார்த்திருந்தான் அன்புச்செல்வன்.

தித்திக்கும்...........
 

Kothai Suresh

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
39
பண்ணையார் குடுத்துடுவாரா? சந்தியா இவன் மேல ஆசை படறாளா?
 

Lakshmi murugan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
318
சந்தியாவை வைத்து பேரம் பேசுவாரோ.
 

Sumathi mathi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
35
Wow awesome
 
Top