• வைகையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தித்திப்பாய் சில பொய்கள் - 19.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
374
பகுதி – 19.

அந்த சூழ்நிலையை எப்படி கையாளவென்று இருவருக்கும் தெரியவில்லை. மனதுக்குள் இருக்கும் நேசத்தை வாய் வார்த்தையாய் கொட்டிவிட முடியாத சூழல். அவன் சொல்லவேண்டும் என அவளும், அவள் உயரத்துக்கு தான் தகுதியில்லை என அவனும் உள்ளுக்குள் தங்கள் நேசத்தை ஒளித்து வைத்தார்கள்.

நேரம் செல்லச் செல்ல, அவளை விட்டு போக முடியாமல் தவித்தவன், “இப்படியே என்னோட வந்துடுறியா கீர்த்தி..?” தன்னை மீறி கேட்டுவிட்டிருந்தான் அன்பு. அவன் முகத்தில் இருந்து இம்மியளவு கூட பார்வையை திருப்பாத அவளுக்கு, அவன் சொன்னதைக் கேட்டு அவ்வளவு ஆனந்த அதிர்ச்சி.

தான் சொன்ன வார்த்தைகளின் பொருள் அவனுக்குப் புரியவில்லை. ஆனால், அவள் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சியும், நம்ப முடியாத தன்மையையும் காண, வேகமாக தன் வார்த்தைகளை அலசினான்.

“அன்பு.., என்ன கேட்டீங்க..?” வேகமாக அவனை நெருங்கி நின்றாள்.

“அது.., என்னோட.., எங்க ஊருக்கு வறீங்களா? ஒரு பத்து நாள்.., எங்க ஊரை சுத்திப் பார்க்கலாம். கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும். என் அத்தையும் உங்களை பாக்கணும்னு சொன்னாங்க..” வேகமாக உரைத்தான்.

‘பொய்.., பொய் சொல்கிறான்.., இதற்கு முன்னர் வேறு பேசினான்..’ எண்ணியவளுக்கு, அவனது மரியாதைத்தன்மை அழைப்பும், விலகலும் சட்டென ஒரு சோர்வைக் கொடுத்தது.

ஆனாலும், அவன் உரைத்த பொய் அவ்வளவு பிடித்தது. அவன் மறைத்த உண்மை அதைவிட பிடித்தது. அதே நேரம், அவனோடு இருக்கும் வாய்ப்பை இழக்கவும் மனம் விரும்பவில்லை.

“என்ன திடீர்ன்னு மரியாதையெல்லாம்..?” அவனை கூர்மையாக பார்த்தவள், அழுத்தமாக வினவ, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

“இல்ல.., என்னவோ திடீர்ன்னு.., அப்படி..” அவள் கண்களை பார்த்து அவன் எப்படி பொய் உரைப்பதாம்? வார்த்தைகளை நிறுத்தி விட்டான்.

“என்னை கீர்த்தின்னே கூப்பிடுங்க.., அப்போதான் வருவேன்.., இல்லன்னா வர மாட்டேன்..” அவளது போலி மிரட்டல் அள்ளிக்கொண்டு போனது.

அவள் சம்மதத்தை கேட்ட பிறகுதான், அவளது பெற்றவர் பற்றிய நினைவே வந்தது. “உங்க அம்மா அப்பா ஒத்துப்பாங்களா?” அவன் குரலில் அவ்வளவு கவலை.

“கேட்டுப் பார்த்தால் தானே ஒத்துப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியும்? கேட்டுப் பாருங்க..” இரு பொருள்பட அவள் உரைக்க, அதை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

அவளோடு கீழே வர, மகளது சந்தோசம் பொங்கும் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் முகத்தில் இப்படி ஒரு நிறைவையும், சந்தோஷத்தையும் அவர்கள் கண்டதே இல்லை.

‘அவனோடு இருந்தால் சந்தோஷமாக இருப்பேன்..’ என அவள் சொன்னது வெறும் வாய் வார்த்தை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

“அப்பா.., உங்ககிட்டே இவர் என்னவோ கேக்கணுமாம்..” கீர்த்தி உரைக்க, உள்ளுக்குள் பொங்கிய ஆவலை மறைத்தவாறு அவனை ஏறிட்டார்கள்.

“சொல்லுங்க..” மாணிக்கம் உரைக்க,

“சார்.., கீர்த்தியை.., ஒரு பத்து நாள் எங்க ஊருக்கு கூட்டி போகவா?” அவன் கேட்க, அவர்கள் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம் படர்ந்தது. அது அவர்கள் முகத்திலும் வெளிப்பட சற்று பயந்து போனான்.

எங்கே அவர்கள் அவளை அனுப்ப மறுத்து விடுவார்களோ என அஞ்சியவன், “சார்.., கண்டிப்பா அவங்களை நல்லா பாத்துப்பேன். அவங்களை எப்படி அழைச்சுட்டு போறனோ.., அதே மாதிரி திருப்பி அனுப்ப வேண்டியது என் பொறுப்பு.., ஐ பிராமிஸ்..” இப்படி கேட்பது சரியா தவறா என்னும் பட்டிமன்றமே அவன் உள்ளத்தில் ஓடியது.

“அதெப்படி தம்பி.., வயசுப் புள்ளையை..” மாணிக்கம் வேகமாக மறுக்க, மகளது கண்டனப் பார்வையை அவரால் எதிர்கொள்ள முடியாமல் சட்டென அமைதியாகிவிட்டார்.

“நீங்க நினைக்கிற மாதிரி நான் தனியா எல்லாம் இல்லை. என் அத்தை, மாமா, மாமாவோட மூணு பொண்ணுங்க.., எல்லோரும் இருக்காங்க. நீங்க வேண்ணா அவங்க கிட்டே பேசறீங்களா?” கேட்டவன், தன் சட்டைப் பையில் இருந்து அலைபேசியை வெளியே எடுத்தான்.

அதே பழைய மொபைல்.., அவள் பார்வை அவனிடம் நிலைத்திருக்க, அவள் பார்வையை உணர்ந்தவன், “ஊர்ல பழைய சிம் வொர்க் ஆகலை. இப்போ புது நம்பர் போட்டிருக்கேன்..” சங்கடமாக உரைத்தவன், அலைபேசியில் எண்களை அழுத்தினான்.

அங்கே அழைப்பு எடுக்கப்படவே.., “அத்த.., நான்தான். இங்கே கீர்த்தி அம்மா பேசணும்னு சொன்னாங்க.., ஒரு நிமிஷம்..” அத்தையிடம் எப்படியும் மாணிக்கம் பேசமாட்டார் என்பதால், சாந்தியிடம் நீட்டினான்.

“வணக்கமுங்க.., நான் செல்வத்தோட அத்தை பாரிஜாதம் பேசறேன். நல்லா இருக்கீங்களா? கீர்த்தி எப்படி இருக்கு..?” என்னவோ ஆண்டு காலம் பழகியவரைபோல் இருந்தது அவரது பேச்சு. சாந்திக்கு அப்பொழுதே அவரைப் பிடித்துப் போனது.

“நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்.., நீங்க..?” அவர் அளவுக்கு சாந்தியால் வெளிப்படையாக உரையாட முடியவில்லை.

“எங்களுக்கென.., மாப்ள இல்லாததுதான் குறையா இருந்தது. இப்போ அவன் வந்துட்டானே. செல்வம் சொன்னான்.., அவன் காச்சலா கிடந்தப்போ பாப்பாதான் உதவி செஞ்சதுன்னு.., எங்களுக்கு பாப்பாவை பாக்கணும்.

“செத்த அனுப்பி வைக்கியளா? எனக்கும் மூணு பொட்டப்புள்ளை இருக்கு, என் கண்ணுக்குள் வச்சு பாத்துப்பேன். நீங்க கவலைப்படவே வேண்டாம்..” ஒரு வயதுப் பெண்ணை அடுத்த வீட்டுக்கு, அதுவும் தெரியாதவர்கள் வீட்டுக்கு அனுப்புகையில், ஒரு தாயின் உள்ளம் அவள் பாதுகாப்பை எண்ணி எவ்வளவு கவலைப்படும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

எனவே அதற்கு ஏற்றவாறே உரையாட, சாந்திக்கு பெரிதாக மறுக்கத் தோன்றவில்லை. ஏற்கனவே அன்புவைப் பற்றி ஆதியோடு அந்தமாக விசாரித்து தெரிந்தவர்கள் ஆயிற்றே. கூடவே, அதைப் பற்றி கூட ஓரளவு வீட்டில் அலசி விட்டார்கள்.

அவன் ஊரில் இருக்கையில் பொறுப்பற்று திரிந்ததும், அதன் பிறகு சொத்துக்கள் கைவிட்டு போன பிறகு, சென்னையில் வந்து உழைத்ததும், அதன் அருமையை தெரிந்ததும் அவர்களுக்குத் தெரியாதா என்ன?

செல்வம் கூட, “இப்படி தாந்தோனியா இருந்த அவன் இனிமேல் அப்படி ஆக மாட்டான்னு என்ன நிச்சயம்..?” மனைவியிடம் கேட்டார்.

அதற்கு, “என்னங்க.., ஒருத்தன் எப்போவேண்ணா, எந்த நிமிஷம் வேண்ணா தப்பு செய்யலாம். ஆனால், தன் தவறை உணர்ந்து திருந்தியவன் எந்த காலத்திலும் அதைச் செய்ய மாட்டான்..” அடித்து பேசினார்.

அவர்களை குடும்பத்தோடு அழைக்க பாரிஜாதத்துக்கும் ஆசைதான். ஆனால், அன்பு, தான் ஒரு நிலையை அடையாமல் அவர்களிடம் பேசுவது அவ்வளவு நன்றாக இருக்காது என உரைத்த பிறகு, அவன் பேச்சை அவரால் மீற முடியவில்லை.

மேலும் சில நிமிடம் உரையாட, “கண்டிப்பா அனுப்பி வைக்கறோம்..” சாந்தி உரைத்துவிட்டு அலைபேசியை வைத்துவிட்டார்.

“அம்மா.., அக்காவோட நானும்..” வேகமாக வாசன் இடைபுக, கீர்த்தியின் மறுப்பான தலை அசைப்பில் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்திவிட்டான்.

அதை உணராத அன்பு, “ஓ.., தாராளமா வா வாசன். உனக்கும் ரொம்ப புடிக்கும்...” உற்சாகமானான்.

“இல்ல.., எனக்கு ஸ்கூல் இருக்கு..” வேகமாக பின்னடைந்தான்.

“இப்போதான் வாரேன்னு சொன்ன.., அதுக்குள்ளே..” அன்பு குழம்பிப் போனான்.

“இல்ல தம்பி.., ஒரே நேரத்தில் ரெண்டுபேரும் இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. நீங்க கீர்த்தியை முதல்ல அழைச்சுட்டு போங்க. பிறகு நாங்க வர்றோம்..” அவர் பேச்சுக்கு அங்கே மறுப்பு இருக்கவில்லை.

அன்புக்கு அவ்வளவு சந்தோசம், நிம்மதி. தான் கேட்ட விஷயம் அவ்வளவு சுலபமாக முடிந்துவிடும் என அவன் நினைத்திருக்கவில்லையே. அந்த நொடியே அவளை தன்னோடு அழைத்துச் செல்லும் வேகம்.., கால்கள் தரையில் பதியவில்லை.

மறுநாள் காலையில் செல்லலாம் என அவர்கள் சொல்ல, நள்ளிரவு கிளம்பினால், விடியக்காலம் ஊர் சென்றுவிடலாம் என அவன் சொல்லவே, அதற்குமேல் அவர்களால் மறுக்க முடியவில்லை.

நேரம் இரவைத் தொட்டிருக்க, இரவு உணவை அங்கேயே சாப்பிடச் சொன்ன அவர்களிடம் தன்மையாக மறுத்துவிட்டு, தான் இரவில் வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

கீர்த்தி தன் பெட்டியை பேக் செய்ய, குடும்பமே அவளோடு இருந்தது. “அம்மாடி, மாப்ள கிட்டே இப்பவே பேசிடவா?” மாணிக்கம் தாங்க முடியாமல் கேட்டுவிட்டார். மகளது முகத்தில் இருந்த மகிழ்ச்சி சிறிது கூட வாடாமல், தாண்டவமாடினால் அவரும் என்னதான் செய்வார்.

“இல்லப்பா.., பத்து நாள்ல அவரே உங்ககிட்டே பொண்ணு கேப்பார்.., எனக்கு நம்பிக்கை இருக்கு..” அவன் சற்று நேரத்துக்கு முன்னர் தன்னிடம் கேட்டு, பிறகு மறுத்ததை நினைத்துக் கொண்டு சொன்னாள்.

“நீ சொன்னால் சரிதான்..” அவர் அமைதியாகிவிட, “கீர்த்தி, தெரியாத இடம், புது மனுஷங்க.., அங்கே யாராவது ஏதாவது சொல்லிட்டாலும், நீ எதையும் பெருசா நினைக்கக் கூடாது..” தாயின் உள்ளம் பரிதவித்தது.

“இல்லம்மா.., உங்க பொண்ணு இப்போ தெளிவா இருக்கா. நீங்க கவலைப் படாதீங்க. அதோட, அன்பு என் கூடவே இருக்கார்.., என்னை பாத்துப்பார்” அவர்களுக்கு தைரியம் சொன்னாள்.

என்னதான் இருந்தாலும் அவர்களால் அவ்வளவு சீக்கிரம் சமாதானம் அடைய முடியவில்லை. அவளுக்காக தங்களை தேற்றிக் கொண்டார்கள்.

டிரைவர் இரவில் உறங்கி சற்று ஓய்வெடுத்திருக்க, இரவு பதினோரு மணிக்கு அவர்கள் தங்கள் பயணத்தை துவங்கினார்கள். அன்புக்கு அவள் காரில் செல்வது பெரும் தயக்கமாக இருந்தாலும், அவளை பேருந்தில் அழைத்துச் செல்வது முற்றிலும் முடியாத காரியம் என்பதால் அவளோடு கிளம்பிவிட்டான்.

காரின் முன்னிருக்கையில், டிரைவரோடு அவன் அமர்ந்துகொள்ள, பயணம் சுகமாகவே துவங்கியது. அவனிடம் எதையாவது உரையாடவேண்டும் என்றால் அவளுக்கு பரவாயில்லை, அவனுக்கோ, முகம் திருப்பி, அவளிடம் உரையாடவேண்டி இருந்தது.

பயணம் துவங்கிய ஒருமணி நேரத்தில், டிரைவர் சாலையோர டீக்கடையில் வண்டியை நிறுத்த, அன்புவை பின்னிருக்கையில் அமரச் சொன்னாள்.

சற்று திடுக்கிட்டவன் அவள் முகம் காண, “உங்களுக்குத்தான் பின்னால் திரும்பி பேசுறது கஷ்டமா இருக்கும் அதான்..” அவனுக்கு விளக்கம் கொடுக்க, அதை ஏற்றுகொள்ள முடிந்தாலும், ஏதோ ஒரு தயக்கம்.

அவன் தயக்கம் உணர்ந்து, அவள் முகத்தை வெளியே திருப்பிக் கொள்ள, அவள் செய்கையைப் பார்த்து அவனுக்கு சிரிப்புதான் வந்தது. ஆனாலும், மறுக்காமல் அவள் அருகில் ஏறி அமர்ந்தவன், எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருந்தான்.

காரின் அசைவை வைத்து அவன் தன் அருகில் அமர்வது தெரிந்தாலும், எதுவும் பேசவில்லை. சீட்டின் மேல் இருந்த அவளது வலக் கரத்தை மெதுவாக பற்றிக்கொள்ள உள்ளம் பரபரக்க, அதை அடக்கியவாறு, கட்டு போட்டிருந்த இடத்தை மென்மையாக வருடினான்.

‘எனக்காகவா இது..? அப்படி என்ன நடந்திருக்கும்?’ தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையாக அவளை நினைக்க முடியவில்லை. மாறாக.., இப்படிச் செய்ய எது தூண்டியது என்பதே அவனது கேள்வியாக இருந்தது.

அவள் கரத்தை பற்றி, தன் கைகளுக்குள் பொதிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல்.., அதை அடக்கி, ஒற்றை விரலால் மென்மையாக வருடினான். அவன் தன்னை தொட்டு அழைப்பான், என எதிர்பார்த்தவள், அது நடக்காமல் போகவே, மெதுவாக, ஓர விழியாய் அவனைப் பார்த்தாள்.

அவன் பார்வை முழுவதும் சீட்டில் இருக்க, ‘என்ன?’ என்பதுபோல் பார்க்க, அவன் செய்கையை கண்டு கொண்டவளுக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவன் கண்களில் தெரிந்த கவலை, அவளை வருத்தியது.

சீட்டில் இருந்த தன் கரத்தை எடுத்தவள், அவன் பக்கம் பாராமல், கையை மட்டும் அவன் பக்கம் நீட்டினாள். அவள் முகம் பார்த்தவனுக்கு தன் கவலை மறைந்து புன்னகை அரும்பியது.

மென்மையாக அவள் கரத்தை பற்றிக் கொண்டவன், அவள் இங்கே பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, அந்த கட்டின்மேல் பட்டென இதழ் பதித்தவன், வேகமாக நிமிர்ந்து அமர்ந்தான். அவனுக்குத் தெரியாதே.., அவளுக்கு புலன்கள் அனைத்தும் பல மடங்கு உன்னிப்பாக செயல்படும் என்று.

அவன் செய்கையை, அவள் பாராமலேயே அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ‘ஏன்.., இதை எனக்குத் தெரிய கொடுத்தால் என்னவாம்?’ காதல் மனம் மெல்லமாய் சிணுங்கியது.

அவள் கரத்தை மெல்லியதாய் அழுத்த, அவள் தன்னைப் பார்க்கவே, கைகளால், காது நுனியை பற்றிக் கொண்டவன், “சாரி.., இனிமேல் நீ சொன்ன உடனே கேட்டுக்கறேன்..” வார்த்தையால் மட்டுமல்ல, பார்வையாலும் கெஞ்ச, சட்டென சிரித்தவள், அவன் கரத்தை விலக்கி விட்டாள்.

“காந்தாரி..” அவன் முனக, முதல் முறையாக அந்த அழைப்பின் பின்னால் இருந்த காரணத்தை அறிய விரும்பினாள்.

“அன்பு, அதென்ன அடிக்கடி காந்தாரின்னு சொல்றீங்க. அப்படின்னா என்ன?” அவனிடம் கேட்க, விழித்தான்.

‘அடப்பாவி.., நான் இதழசைவில் முனகுறது கூட இவளுக்கு புரியும்னு நினைக்காமலே போயிட்டேனே..’ மனதுக்குள் எண்ணியவன், “ஊருக்கு போயிட்டு சொல்றேன்..” அப்போதைக்கு ஜகா வாங்கினான்.

சரித்திரத்தில், திருதிராஷ்டிரர் மனைவி காந்தாரி என்று இருந்தாலும், அவன் அழைக்கும் காந்தாரிக்கு பின்னால் ஒரு மிளகாய் வகை இருந்தது. பிறந்த குழந்தையின் குட்டி விரலில் பாதியளவு கூட இருக்காத சிறிய வகை, ஆனால் அதன் காரம்.., சுள்ளென இருக்கும்.

சாதாரண பச்சை மிளகாயை விட, பல மடங்கு காரம் உடையது. கீர்த்தியை முதலில் பார்த்து, அவளது கோபத்தை பார்த்தவுடன், அவனுக்கு ஏனோ அந்த மிளகாயின் நினைவுதான் வந்தது. எனவேதான் தன்னை மீறி அவ்வாறு அழைத்துவிட்டான். இதை எப்படி அவளிடம் சொல்லுவான்? எனவே அமைதியானான்.

டீ குடித்துவிட்டு வந்த டிரைவர் மோகன், அன்பு பின்னிருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான். ஏற்கனவே சற்று அரசல் புரசலாக அன்பு விஷயம் அவனுக்கும் தெரியுமாகையால் பெரிதாக அதிர்ந்து போகவெல்லாம் இல்லை.

ஆனால், கீர்த்தியால் அதிக நேரம் காலை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க முடியாது. பொதுவாகவே அவர்கள் குடும்பமாக வெளியே செல்வதாக இருந்தால் இனோவா கார்தான் உபயோகப் படுத்துவார்கள். நடு இருக்கை முழுவதும் கீர்த்தி கால் நீட்டி அமர்ந்திருப்பாள்.

பின்னால் வாசனும் சாந்தியும் இருக்க, டிரைவர் இருக்கைக்கு பக்கம் மாணிக்கம் அமர்ந்து கொள்வார். இப்பொழுது இதை எப்படி அவனிடம் சொல்வது? சொன்னால் கீர்த்தி அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பதுதான் அவனது பெரும் கவலையாக போயிற்று.

அவன் பார்வையில் இருந்தே, அவன் நினைப்பதை யூகித்தவள், “மோகன்.., காரை எடுங்க..” அவள் அழுத்தமாக உரைக்க மறு பேச்சின்றி காரை கிளப்பினார்.

மேலும் சற்று நேரம் அன்புவோடு உரையாட, அவளை அறியாமலே கண்கள் செருகியது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தூக்கம். அவளும் எவ்வளவோ முயன்று பார்த்தாள்.., ஆனால் முடியவில்லை.

முந்தினநாள் மருத்துவமனையில் இருந்தவள், கொஞ்ச நேரம்தான் உறங்கியிருந்தாள். அதற்குமேல் அவளால் உறங்க முடியவில்லை. மனதின் அலைப்புறுதலில் உறக்கம் எப்படி வரும்? ஆனால் இன்று, அவன் அருகாமையை ரசிக்க மனம் விரும்பினாலும், உடல் ஒத்துழைக்க மறுத்தது.

“கீர்த்தி.., தூங்கு..” இதழசைவில் அவன் முணுமுணுக்க, அரை உறக்கத்தில், ‘சரி..’ என்பதாக தலை அசைத்தவள், இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டாள். அப்பொழுது, வலது கால் வலிக்கவே, முயன்று அதை தவிர்த்தவள், சாய்ந்து உறங்க முயன்றாள்.

உறக்கமும் அவளைத் தழுவிக் கொள்ள, உறக்கத்திலேயே அவளது கரம், காலை அழுத்தமாக பிடித்துவிட, கூடவே புருவம் சற்று சுருங்கி, அவள் வலியை பறைசாற்ற, சற்றும் யோசிக்காமல், அவள் காலை தன் கால்மேல் தூக்கி வைத்துக் கொண்டான்.

இப்பொழுது இன்னும் சற்று வசதியாக அவள் சாய, இரு கால்களும் அவன் தொடையில் இடம் பிடித்தது. கொஞ்சம் கூட தயங்காமல் அவன் செய்த செய்கையை, மோகனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

அன்புவின் கைகள், அவள் காலை மென்மையாக வருடி அழுத்தமாக ஒரு நொடி பற்றியவன், அடுத்த நிமிடம், தானும் வசதியாக சாய்ந்து, அவள் கால்மேல் தன் கரங்களை வைத்துக் கொண்டான்.

“அண்ணே.., பேச்சுத் துணைக்கு ஆள் வேணுமா? முன்னாடி வரவா?” அன்பு கேட்க,

“இல்ல தம்பி.., நீங்க தூங்குங்க.., நான் நிதானமாகவே வண்டி ஓட்டுறேன். எனக்கு இதுதானே வேலையே.., அதனால் கஷ்டமில்லை..” அவன் குரலில் அப்படி ஒரு சந்தோசம்.

ஒரு ஆள் சுய நினைவில் இருக்கும்பொழுது செய்யும் உதவிக்கும், அவர்கள் உறக்கத்தில் இருக்கும் வேளையில், அவர்களுக்கு தேவையானதை நிறைவாக செய்வதற்கும் வித்தியாசம் உண்டே.

அன்புவின் செய்கையில் ஒரு சதவீதம் கூட எதிர்பார்ப்போ, பிரதிபலனோ இருக்கவில்லை. மாறாக, கீர்த்தியின்மேல் அவன் கொண்ட பாசம் மட்டுமே தெரிந்தது. எனவேதான் அவருக்கு அவ்வளவு சந்தோசம்.

“சரிண்ணே.., தூக்கம் வந்தால் ஒரு குரல் கொடுங்க..” சொல்லிவிட்டே விழி மூடினான். தாங்கள் பேசுவது அவளுக்கு கேட்காது என்பதால், சாதாரணமாகவே அவர்கள் உரையாடினார்கள்.

அன்பு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, “தம்பி.., தம்பி..” மோகனின் குரல் அவனைக் கலைக்க, வேகமாக விழி திறந்தான்.

“சொல்லுங்கண்ணே.., தூக்கம் வருதா? நான் வேண்ணா காரை ஓட்டவா?” கைகளால் முகத்தை அழுந்த தேய்ந்து, தூக்கத்தை விரட்டினான்.

“அதெல்லாம் இல்ல தம்பி.., இங்கே இருந்து எந்த பக்கம் போகணும்னு தெரியலை அதான் கூப்ட்டேன்..” கார் அப்பொழுது நிதானமாக ஊர்ந்துகொண்டிருந்தது.

“அண்ணே இங்கே வந்துட்டீங்களா? இங்கே இருந்து ரெண்டாவது லெப்ட்ல திரும்புங்க..” அப்படியே அவன் பாதை சொல்ல, அப்பொழுதும் கீர்த்தியின் காலை கீழே விட மனமில்லை. அதையும் மோகன் கவனித்தான்.

இறுதியில் ஊர் வர, கார் சற்று மேடு பள்ளமான இடத்தில் அதிகமாக குலுங்க, அந்த குலுங்கலில் கண் விழித்தாள் கீர்த்தி. முதலில் அவள் கவனத்தில் பதிந்ததே.., தான் படுத்திருக்கும் விதம்தான். கிட்டத்தட்ட முழுதாக கால் நீட்டி படுத்திருந்தாள்.

கால்கள் இரண்டும் அவன் மடியில் இருப்பதை அவளால் தெளிவாக உணர முடிந்தது. சற்று திடுக்கிட்டு எழுந்து அமர முயல, “குட்மார்னிங்.., காரோட குலுங்கலில் எழுந்துட்டியா..? தூங்கு.., இன்னும் கால்மணி நேரமாகும்” வெகு சாதாரணமாக அவன் உரைக்க, அவளுக்குத்தான் என்ன சொல்வது, செய்வது என்றே தெரியவில்லை.
 

Lakshmi murugan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
418
இத்தனை காதலை வைத்துக் கொண்டு எப்படி தான் இவ்வளவு நாட்கள் இருந்தாரோ.
 

sumiram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 20, 2022
Messages
50
Arumaiyana ud. Parkkama eppadi than irunthano ivlo kathal vaithu kondu.
 

Kothai Suresh

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
48
இதுதான் காதலென்பதா, சோ ஸ்வீட்
 

saru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
62
Lovely update
 
Top