• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தித்திப்பாய் சில பொய்கள் - 3.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
363
பகுதி – 3.

தன் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்புப் பிழம்பை அணைக்கும் வழி தெரியாமல் கீர்த்தி குமுறிக் கொண்டிருக்க, அவள் மனநிலை புரியாமல், அவளிடம் அன்பு விலாசம் கேட்க, சட்டென ரியாக்ட் செய்திருந்தாள் கீர்த்தி.

அவளது செய்கை விளைவித்த அதிர்ச்சியை விட, அந்த விலாசம் பறிபோய்விடக் கூடாதே என்ற எண்ணத்தில், சட்டென அதைத் தாவிப் பிடிக்கப் பாய்ந்திருந்தான் அன்பு.

“ஏய்.., என்ன பண்ற..?” ஒரு நொடி பதறியவள், அவனை பிடிக்க முயல, அதற்கு முன்பாகவே அவன் செயல்பட்டிருந்தான்.

அவனது நல்ல நேரமோ.., இல்லை அவளது நல்ல நேரமோ.., எதுவோ ஒன்று.., அப்பொழுது வந்த கார் சடன் பிரேக்கில் நின்றுவிட, பேப்பரை எடுத்தவன், ஒரு சிறு மன்னிப்பு வேண்டலோடு நகர்ந்திருந்தான்.

காரில் இருந்தவன் எதையோ சொல்லப் போக, அவனது கெஞ்சலான பார்வையில், கையை உயர்த்தி.., ‘ஒகேயா..’ எனக் கேட்டவாறு காரை கிளப்பிச் சென்றார்.

அவன் ஓரத்துக்கு வரவே.., அவ்வளவு நேரமாக ஸ்தம்பித்த நிலையில் நின்றவள், அவன் தன் எதிரில் வந்த பிறகே உயிர்வரப் பெற்றாள்.

“ஏய்.., லூசா நீ.., ஒரு பேப்பருக்கு வேண்டி..” அவ்வளவு நேரமாக இழுத்து வைத்திருந்த மூச்சை அவள் வேகமாக வெளியேற்ற, பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு சற்று பரிதாபமாகத்தான் போயிற்று.

“மன்னிச்சுக்கோங்க.., இந்த ஏரியா எனக்கு புதுசு.., பக்கத்தில் வேற யாரும் இல்லையா.., அதான் உங்ககிட்டே விலாசம் கேக்க வேண்டியதா போச்சு.., மத்தபடி.., தப்பா எல்லாம் எதுவும் இல்லை..” தன்னை புரிய வைத்துவிடும் நோக்கில், தன்மையாகவே உரைத்தான். தன் கோபத்துக்கான அவனது எதிர்வினை அவளை சற்று குறுகச் செய்தது.

ஆனாலும்.., அந்த நிமிட படபடப்பு அடங்காமல், “அதுக்கு.., இப்படித்தான் செய்வாங்களா? ஒரு நாலு வரி அட்ரஸ் உன் மனசில் நிக்காதா? ஏதாவது ஆகித் தொலைச்சால்..?” நடக்கவிருந்த விபரீதம் அவள் கண்முன் நிழலாடியது.

“அட விடுங்க.., என்ன செத்தா போய்டுவேன்..” தன் கையில் இருந்த மண்ணை தட்டி விட்டவன், வண்டியில் ஏற முயல,

“செத்துப் போனால் கூட பரவாயில்லை.., ஆனா.., ஏன் உயிரோட இருக்கோம்னு நினைக்கிற அளவுக்கு ஆனா..?” அவள் நிலை கண்முன் நிழலாட பொங்கியிருந்தாள்.

வண்டியில் ஏறப் போனவன், சட்டென ஒரு நொடி தாமதித்து அவள் முகம் நோக்க, தான் உளறிவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தவளாக, “உனக்கு அட்ரஸ் கேக்க வேற ஆளே கிடைக்கலையா? என்னைப் பார்த்தால் உனக்கு கூகிள் மேப் மாதிரி தெரியுதா? ரோட்ல ஒரு பொண்ணு நின்னுடக் கூடாது உடனே..” அவனது அசையாத பார்வையில் சட்டென பேச்சை நிறுத்தியவள், அதே வேகத்தில் அவனுக்கு முதுகு காட்டி திரும்பியிருந்தாள்.

அவள் நடையைத் தொடர, மனமோ.., ‘ஹையோ.., எதுக்கு நான் இப்படி ரியாக்ட் செய்யறேன்..’ நடக்கவிருந்த விபரீதத்தால் அவள் தேகம் நடுங்கிக் கொண்டிருந்ததால், அவளால் நிலையாக நடக்க முடியவில்லை.

அவள் நடையில் தெரிந்த வித்தியாசம்.., வார்த்தைகளில் தெரிந்த வலி, அவனை ஒரு மாதிரி ஆட்கொள்ள, அவளது தள்ளாட்டம் நிஜமாய் அவனை பதறச் செய்தது.

அவள் கோபத்தையும் பொருட்படுத்தாமல், தன் வண்டியைக் கிளப்பி, அவளுக்கு முன்பாகச் சென்றவன், “என்னங்க.., ஒரு நிமிஷம் நின்னுட்டு போங்க. தண்ணி குடிக்கறீங்களா? நான் உங்களை தொந்தரவு பண்றேன்னு தெரியுது.., ஆனாலும்..” தன்மையாகவே உரைத்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

“போடா..” வெடுக்கென அவள் உரைத்துச் செல்ல, இப்பொழுது திடுக்கிட்டான். அவ்வளவு நேரத்தில், முதல் முறையாக அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில், தன் வார்த்தைகளின் கனத்தில் ஸ்தம்பித்துதான் போனாள்.

அவள் கால்கள் அங்கிருந்து அகல, ‘ஐயோ.., அவன் பின்னால் வந்து ஏதாவது சொன்னால் என்ன செய்வது..?’ சட்டென ஒரு பயம் முளைவிட்டாலும், ஒரு மனமோ.., அவன் அப்படிச் செய்ய மாட்டான் என உரைக்க, சற்று தூரம் சென்றவள் மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.

அவனோ.., ‘அம்மாடியோ.., காந்தாரி...’ அவன் மனம் முதல் முறையாக ஒரு பெண்ணைப் பற்றி கமெண்ட் அடிக்க, அதற்குமேல் அவள் பின்னால் செல்ல மனமின்றி கிளம்பிவிட்டான்.

கீர்த்தி திரும்பிப் பார்க்கையில் கண்டது அவனது முதுகையே. அவ்வளவு நேரம் இருந்த மனநிலை சட்டென மாறியிருக்க, ஒரு மாதிரி மனம் இலகுவாகி இருந்தது.

அது எதனால் என அவளுக்குப் புரியவில்லை. முதல் முறையாக தன்னை நேருக்கு நேராக பார்க்கும் ஒருவனின் கண்களில், இரக்கம் இல்லாததாலா? இல்லை, தன்னையும் அவன் சக மனுஷியாக உணர்ந்து இயல்பாக உரையாடியதாலா? இல்லையென்றால் அவனது உரத்த குரலை தான் உணராததாலா என அவளால் பிரித்தறிய முடியவில்லை.

ஆனால்.., நடையில் ஒருவித நிதானம் வந்திருக்க, மனநிலையும் அவ்வாறே இருந்தது. உடனடியாக வீட்டுக்குச் சென்று அறையில் முடங்க மனமின்றி, அருகில் இருந்த பார்க்குக்கு சென்றாள்.

அங்கே காலியாக கிடந்த பெஞ்சில் அமர, அங்கிருந்த ஊஞ்சலில் சிறு குழந்தைகள் விளையாடுவதைக் காணவே, தன்னை மறந்து அவர்களையே பார்த்திருந்தாள்.

சற்று நேரம் அதில் லயித்திருக்க, திடுமென அவள் தோளில் ஒரு கரம் விழ, யார் என ஏறிட்டாள். பொதுவாக அவளைத் தெரிந்தவர்கள் அவளை அழைப்பதே அவள் தோளில் கரம் வைத்துதான் என்பதால், அவள் திடுக்கிடவெல்லாம் இல்லை.

“கீர்த்தி.., நீ.. கீர்த்தி தானே..” நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு உற்சாக முகத்தை எதிர்கொண்டாள்.

“ஆமா..., நீங்க..?” அந்த முகம் எங்கேயோ பார்த்து மறந்த முகமாக இருக்கவே தயக்கமாகவே உரைத்தாள்.

“என்னைத் தெரியல..? அக்ஷயா.., உன்னோடவே ப்ளஸ்டூ வரை படித்தேனே.., ரியல்லி.., உன்னை நேர்ல பாக்கும்போது மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்..” அவள் கரத்தை மென்மையாக பற்றிக்கொள்ள, இந்த சந்திப்பில் நேர்ந்த பூரண மகிழ்ச்சியை அவளால் உணர முடிந்தது.

‘அக்ஷயா..’ கீர்த்தியின் ஞாபக அடுக்குகள் பள்ளிக்காலத்தில் நுழைய, தன் காதுக்கருகில் ‘ஊ..’ என ஓலமிட்டுச் செல்லும் அக்ஷயாவை அவள் அடையாளம் கண்டு கொண்டாள்.

அவள் முகத்தில் இருந்தே, தன்னை அடையாளம் கண்டுகொண்டாள் என்பதை உணர்ந்தவள், ஒரு நொடி மௌனமானாள்.

“கீர்த்தி.., சின்னப் பிள்ளையில் ஏதோ விளையாட்டா செய்தது.., கொஞ்சம் விவரம் வந்தப்போ, அது தப்புன்னு திருத்திக்க நினைத்தேன். ஆனா..” அவளிடம் ஒரு பெருமூச்சு எழுந்தது.

தோழி தன் பேச்சை கவனிக்கிறாளா? தான் பேசுவது அவளுக்கு புரிகிறதா என அவளை ஏறிட, கீர்த்தியின் முகத்தில் இருந்த ஒருவித அழுத்தம், அவளுக்கு தான் பேசுவது புரிகிறது என்பதை உணர்த்த, அவள் கரத்தை மேலும் அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

சில நொடி மௌனத்தில் கழிய, “அம்மா.., இந்த அக்கா யாரும்மா..?” ஒரு குட்டி தேவதையின் வருகை அவர்களை கலைத்தது.

“நீயே கேளேன்...” அக்ஷயா மகளிடம் உரைக்க..,

“நீ யாரு..?” கீர்த்தியிடம் அவள் நேரடியாக வினவ, “நான் கீர்த்தி.., நீங்க..?” கேட்டவள் குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டாள்.

“நான்.., பவி.., பவி பாப்பா..” கை கொட்டி கிளுக்கிச் சிரித்தாள்.

“நீ அழகா இருக்க..” இமைகளை கொட்டி, ஒருவித ஆசையாக அவள் முகம் நோக்கிய குழந்தை, மென்மையாக அவள் கன்னம் வருடி அவளை உணர்ந்து கொள்ள முயன்றது.

அதை ஒரு புன்னகையில் கடந்தவள்,“என்ன படிக்கறீங்க..?” குழந்தையிடம் அவள் ஒன்ற, “எல்கேஜி.., டி செக்ஷன்.., நீ..?” கேட்டவள், அவள் இடக்காதின் அருகில் இருந்த அடையாளத்தைப் பார்த்து.., உனக்கும் அடி பட்டுடுச்சா..? எனக்கும்...” உரைத்தவள், அவள் கையில் இருந்து இறங்கி.., வேகமாக தன் காலை ஆராய்ந்தவள்,

“இதோ.., எனக்கும் அடி பட்டுடுச்சு..” அவள் குனிந்து உரைத்ததால் அவளது வார்த்தைகள் புரியவில்லை என்றாலும், அவளது செய்கை அவள் சொல்ல வந்ததை உணர்த்த,

“அச்சோ.., பவி பாப்பாவுக்கும் அடி பட்டுடுச்சா..? எப்படி பட்டுச்சு..?” குழந்தையாக மாறி அவள் வினவ,

வேகமாக அவள் கரத்தை அழுத்திய அக்ஷயா, “ஐயோ.., அதை மட்டும் கேக்காதே.., இன்னைக்கு முழுக்க கதை சொல்லுவா.., உன்னை விடவே மாட்டா..” அவள் இடைபுகுந்தாள்.

“அம்மா.., நீ போம்மா.., நான் சொல்றேன் நீ கேளு..” கீர்த்தியின் முகம் பற்றி திருப்பியவள், தாயை முறைத்தவாறே அவளிடம் உரைக்க, சில வருடங்களுக்குப் பிறகு, மனம் விட்டு சிரித்தாள் கீர்த்தி.

பொதுவாக குழந்தைகளிடம் ஒரு குணம் உண்டு.., அவர்கள் ஒருவரிடம் ஒன்றைச் சொல்ல விரும்பினால், அவர்கள் தங்கள் முகம் பார்த்தால்தான் சொல்ல வந்ததை உரைப்பார்கள்.., இல்லையா.., அவர்கள் பார்க்கும் வரைக்கும் விடவே மாட்டார்கள்.

கேட்பதற்கு காது மட்டும் இருந்தால் போதும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தன்னிடம் முழுதாக ஒன்ற வேண்டும் என்பதே முக்கியமாக இருக்கும்.

கீர்த்தியின் பேச்சும், சிரிப்பும், குழந்தையின் கேள்விக்கு அவள் பதில் கொடுத்த விதமும், இவ்வளவு சின்ன வயதில், தன் குழந்தைக்கு இருக்கும் புரிதல் கூட தனக்கு அப்பொழுது இல்லையே என வெட்கினாள் அக்ஷயா.

இப்பொழுது கீர்த்தி காதில் ஹியரிங் மெஷின் வைத்திருந்தால் மட்டுமே அவள் வித்தியாசமாக பார்த்திருப்பாள் என்பது அப்பொழுது அவளுக்குப் புரியவில்லை.

“விடு அக்ஷயா.., அவ சொல்லட்டும்..” அவளிடம் பதில் உரைத்தாலும், பார்வை பவியிடமே நிலைத்திருந்தது.

அவள் கண்களைக் காணுகையில், சம்பந்தமே இல்லாமல், சற்று நேரத்துக்கு முன்னர் பார்த்தவனின் கண்கள் நினைவிற்கு வர, ‘இப்படித்தானே அவனும் பார்த்தான்..’ எண்ணம் செல்லும் திக்கில் திடுக்கிட்டாள்.

அதை அக்ஷயா கண்டுகொள்ளவில்லை.., மாறாக.., “இல்ல கீர்த்தி.., இன்னும் இவ டிபன் கூட சாப்பிடலை.., எழுந்த உடனே இங்கே வந்தால் தான் ஆச்சுன்னு ஒரே அடம்.., அதான் கூட்டி வந்தேன். அது மட்டும் இல்லை, அம்மா வேற காணோம்னு தேடிட்டே இருப்பாங்க..” நிலைமையை விளக்கினாள்.

“ஓ..” அவ்வளவு நேரம் இருந்த இதம் தொலைய, அக்ஷையாவே சங்கடமாக உணர்ந்தாள்.

அவளை வீட்டுக்கு அழைக்க ஆசைதான்.., ஆனால்.., அவ்வளவாக நெருங்கிப் பழகாத கீர்த்தியை சட்டென எப்படி அழைப்பது என்ற தயக்கம். அழைத்தால் வருவாளா என்ற தடுமாற்றம்..,

அவளது தடுமாற்றம் பவியிடம் இருக்கவில்லை. “அக்கா.., நீங்க எங்க வீட்டுக்கு வாங்க.., நான் எப்படி அடி பட்டதுன்னு சொல்றேன். வாங்க..” அவள் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

“கீர்த்தி.., வீட்டுக்கு வாயேன்.., அங்கே அம்மா மட்டும்தான்..” முடிவை அவளே எடுக்கட்டும் என மென்மையாகவே அழைத்தாள்.

“இல்ல.., இன்னொரு நாள் வர்றேன்..” அவள் மறுக்க, பவியோ.., “அதெல்லாம் முடியாது.., நீ வா.., வீட்ல எனக்கு போர் அடிக்கும்..” அவளை விடுவதாக இல்லை.

“இல்லடா செல்லம்.., அக்கா இன்னொரு நாள் வர்றேன்..” இத்தனை வருடங்களில் அவள் சொந்தங்களின் வீட்டுக்கு கூட சென்றதில்லை, அப்படி இருக்கையில்.., பல வருடங்கள் கழித்து, அதுவும் பள்ளியில் தன்னை கேலி செய்த தோழியின் வீட்டுக்கு செல்வது என்றால்.., அது அவளால் இயலாத காரியமாகவே பட்டது.

“அப்போ நான் உன் வீட்டுக்கு வர்றேன்..” பவி தன் பிடிவாதத்தை வேறு விதத்தில் அரங்கேற்ற, என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடிப் போனாள்.

“அது வந்து..” அவள் மறுக்கத் துவங்கவே..,

“முடியாது.., நீ வா..” குரல் உயர்த்தி அழுகைக்கு தயாரானாள்.

“கீர்த்தி.., ஜஸ்ட்.., வீட்டுக்குள்ள இல்லன்னாலும்.., வீடு வரைக்குமாவது வாயேன்.., இங்கே.., கிட்டதான்.., நாலு தெரு தள்ளிதான் வீடு..” இப்பொழுது அக்ஷயா சிறிதாக கெஞ்சினாள்.

“இல்ல.., நான்..” இப்பொழுதும் அவள் பெரிதாக தயங்க,

“எனக்குத் தெரியும்.., நீ ஏன் தயங்கறன்னு.., நான் அந்த பழைய அக்ஷயா இல்லை.., ப்ளீஸ்..” தன் தவறை சரி செய்துவிடும் வேகம் அவளிடம் அதிகம் இருந்தது.

“வா.., வா..” பவியின் பிடிவாதம், ஒரு வாறாக அவளை இளகச் செய்தது.

“சரி வர்றேன்..” அவள் உரைக்க.., “ஏ.., ஜாலி.., ஜாலி..” குதித்து கும்மாளமிட்டாள் குழந்தை.

பார்க்கை விட்டு வெளியே வந்தவர்கள் மெதுவாக நடக்க, கீர்த்தியின் நடையில் தெரிந்த வித்தியாசத்தில், “உனக்கு கால்லயும் அடி பட்டுடுச்சா?” பவியின் கேள்விக்கு, மென்மையாக தலை அசைத்தாள்.

“எங்கே.., நான் வேண்ணா ஊதவா? எனக்கு அடிபட்டா அம்மா அப்படித்தான் செய்வாங்க..” உரைத்தவள், அவள் காலுக்கு அருகில் குனியப் போக,

“வேண்டாம்..” அவள் பதறி விலகும் முன்பு, “ஏய் வாயாடி.., சும்மா இருக்க மாட்ட..” குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்டாள் அக்ஷயா.

“சாரி.., அவளுக்கு..” அக்ஷயா சங்கடமாக உரைக்கத் துவங்கவே, “குழந்தை தானே..” அவளைத் தாங்கி உரைத்தவள், அவளோடு நடக்கத் துவங்கினாள்.

‘தன்னோடு படித்தவள், அவளுக்கு மூன்று வயதில் குழந்தை என்றால்.., மேலே படிக்கவில்லையா..?’ கேள்வி ஒரு பக்கம் குடைந்தாலும் தானாக அவளிடம் எதையும் கேட்கவில்லை.

குழந்தை அவள் கைகளில் இருந்து இறங்கி முன்னால் நடக்க, கீர்த்தி.., அமைதியாக வரவே.., “எங்க அப்பாவுக்கு ஹார்ட் பிராப்ளம் இருந்தது. அவர் கடைசியா ஆசைப் பட்டது என்னோட மேரேஜ்.., சோ.., காலேஜ் முதல் வருஷம் சேர்ந்த உடனேயே கல்யாணம்.., என் மேரேஜ் முடிந்த ஒரே மாசத்தில்.., எல்லாம் முடிஞ்சுடுச்சு. இப்போ அம்மா தனியாதான் இருக்காங்க.

“இப்போ நான் ரெண்டு மாசம், அதான்.., அம்மா வீட்டில் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்னு வந்திருக்கேன். என் ஹஸ்பன்ட் வீடு பூந்தமல்லி..” தன்னைப் பற்றிய விளக்கத்தோடு அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள்.

அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டவள், தன்னைப்பற்றி எதையும் விளக்க முனையவில்லை.

“வந்துட்டோம்..” பவி ஓடி வந்து அவள் கரத்தை பற்றிக்கொள்ள, மெல்லிய புன்னகையோடு அவளது இழுப்புக்கு உடன்பட்டாள்.

ஏனோ புதிய மனிதர்களை சந்திப்பது பெரும் ஆறுதலையும், மாறுதலையும் அவளுக்கு அளித்தது. அதுவும் இன்று காலை முதல், அதிலும் அவனைக் கண்ட பிறகு.., என எண்ணுகையிலேயே, தன் பிரம்மையோ என தலையை உதறிக் கொண்டாள்.

“என்ன ஆச்சு.., டயடா இருக்கியா..?” அவள் தோளை உலுக்கி, அக்ஷயா வினவ, “இல்ல.., ஏதோ ஞாபகம்.., சரி.., நான் கிளம்பறேன்..” காம்பவுண்ட் கேட்டின் அருகே அவள் விடைபெற முயன்றாள்.

“கீர்த்தி.., உள்ளே வந்து ஒரு காபி குடிச்சுட்டு போலாமே.., பழசெல்லாம் மறந்துட்டு.., புதுசா.., லெட்’ஸ் பீ ப்ரண்ட்ஸ்..” சிறு ஏக்கமும், எதிர்பார்ப்பும் இழையோட கேட்டாள்.

“பாட்டி.., புது அக்கா வந்திருக்காங்க வா..” வீட்டுக்குள் சென்றிருந்த பவி, அக்ஷயாவின் தாயை கையோடு அழைத்து வந்திருந்தாள்.

“பவி.., பாட்டியே வர்றேன்..” தன் வயதை மீறி அவளுக்கு இணையாக வந்து கொண்டிருந்தார்.

இவர்களை காம்பவுண்ட் கேட் அருகே பார்க்கவே.., “உள்ளே வாம்மா.., ஏன் வெளியே இருந்தே பேசறீங்க..” அவரது அழைப்பு கேட்கவில்லை என்றாலும், அவரது வரவேற்பான தலையசைப்பு புரிய, சிறு சங்கடமாக உணர்ந்தாள்.

“கீர்த்தி.., ப்ளீஸ்..” அக்ஷயாவின் கெஞ்சல் இப்பொழுது வெளிப்படையாக வெளிப்பட, எதார்த்தமாக, உள்ளார்ந்த அன்போடு அழைக்கும் அவர்களது அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை.

“அக்கா.. வா..” பவி ஓடிவந்து அவளை கை பிடித்து இழுத்துச் செல்ல,

“பவி.., அவங்களே வருவாங்க விடு..” எங்கே மகள் அவளை கீழே தள்ளி விடுவாளோ என சட்டென ஒரு பயம் அவளை தொற்றிக் கொண்டது.

எதிர்பாராமல் பவி இழுத்ததில் சற்று தடுமாறினாலும், தன்னை சுதாரித்தவள் அவளோடு கூட நடந்தாள்.

“வாம்மா..” பவியின் பாட்டி வரவேற்பாக அழைத்துவிட்டு உள்ளே செல்ல, அவர் பின்னால் தானும் நுழைந்தாள்.

“உக்காரும்மா.., அம்மாவும் பொண்ணும் எப்போ போனாங்க. இப்போ வராங்க. பொண்ணுக்கு பசிக்கும்னு பொறுப்பு வேண்டாம்..” அவர் உரைத்தவாறே கிச்சனுக்குச் செல்ல, அவர் திரும்பி நடந்தவாறே உரைத்ததால் அவளால் அவர் பேசியதை புரிந்துகொள்ள முடியவில்லை.

“என் பொம்மை பாக்கறியா...? என்கிட்டே நிறைய இருக்கு. டேடி வாங்கிக் கொடுத்தாங்க..” அவளைக் கலைத்து, தங்கள் அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றாள் பவி.

“பவி.., நான் இங்கேயே இருக்கறேன். நீ போய் எடுத்துட்டு வா..” குழந்தை உள்ளே ஓட, வரவேற்பறையில் அவள் நிற்க, “கீர்த்தி.., வா.., வந்து உட்கார்..” அங்கிருந்த சோபாவை காட்ட, சற்று தயக்கமாக அதில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஒரு நிமிஷம்..” அவள் உள்ளே செல்ல முயல, “எனக்கு எதுவும் வேண்டாம்..” கீர்த்தியின் வேகக் குரல் அவளை தடுத்தது.

“ஜஸ்ட் காபி தான்..” உரைத்தவள் உள்ளே சென்று மறைந்தாள்.

அதே நேரம்.., வெளியே அழைப்புமணியின் ஓசை கேட்க, “நான் பாக்கறேன்..” பவி அறைக்குள் இருந்து குரல் கொடுத்தவாறு வாசலுக்கு விரைய, பெரியவர்கள் உள்ளே இருக்கையில், இவள் எங்கே வெளியே ஓடுகிறாள் என குழந்தையின் பின்னால் விரைந்தாள்.

பவி வேகமாக கதவைத் திறக்க, “இப்போ எதுக்கு டோரை ஓப்பன் பண்ற?” கேட்டவள், அவளைத் தடுக்க முயன்றாள். அவளுக்கு அழைப்பு மணியின் ஓசையோ, இல்லை, குழந்தையின் பேச்சோ கேட்டிருக்க வில்லையே.

“வெயிட்..” அவளுக்கு முன்பாக கையை நீட்டிய குழந்தை வேகமாக கதவை அகலமாகத் திறந்தாள்.

எதிரில் நின்றவனுக்கோ., குழந்தை தெரியாமல், அந்தப் பக்கம் நின்ற கீர்த்தி மட்டுமே தெரிய, “ஐயோ காந்தாரி..” இதழசைவில் அவன் முனக, அதை சரியாக மொழி பெயர்த்தவளோ, சிறு முறைப்போடு அவனை எதிர்கொண்டாள்.

தித்திக்கும்.............
 

sumiram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 20, 2022
Messages
43
Arumaiyana ud. Correct ah antha veetukku vanduirukkan. Avan pechum purindu vittadu.
 

Kothai Suresh

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
39
நைஸ் எபி, கரெக்டா அந்த வீட்டுக்கே வந்திருக்கான்
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
363
நைஸ் எபி, கரெக்டா அந்த வீட்டுக்கே வந்திருக்கான்

கொரியர் கொண்டு வந்திருக்கான்.......
 

Lakshmi murugan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
319
மறுபடி மறுபடி சந்திக்கிறார்களே.
 

Marlimalkhan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 4, 2021
Messages
182
Super ma
 
Top