• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தீஞ்சுவை 2
மூன்று மாதங்களுக்கு முன்பு



அதிகாலைப் பொழுதின் இனிமையை சுகித்தபடி கையில்லா பனியனும், முழங்காலுக்கு மேலேறிய அரைக்கால் ட்ரௌசரும் அணிந்துகொண்டு ஒரு கோப்பை தேநீரோடு சூரிய உதயத்தை ரசித்த வண்ணம் நிலாமுற்றத்தில் போடப்பட்டிருந்த தூக்கனாங்குருவிக் கூடு போன்ற ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள் மஹன்யா.



அன்றைய பணிகளின் வரிசைப்பட்டியலை கைகடிகார நினைவூட்டியில் பதிவு செய்திருந்தவற்றை மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொண்டே தேநீரை ருசித்தாள். கணினியின் கரகரத்தக் குரலேயானாலும் அந்த பெண்ணின் குரலை முழுவதுமாக கேட்டே ஆகவேண்டிய கட்டாயம் அவளுக்கு. அது முடிந்தவுடன் தன் வலது கை மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள்.



தன் தந்தை நடைபயிற்சி முடித்துவிட்டு இல்லம் திரும்பியிருப்பார் என்று அவரது அன்றாட பணியின் நேரத்தையும் சரியாகக் கணித்து, கை கடிகாரத்தின் மூலமே தந்தைக்கு அழைப்பு விடுத்து பேசினாள்.



அதீத அன்புடன் வந்த நலவிசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல் அவள் தாய் அறிவுரையை ஆரம்பித்தார். "மஹி.... நீ இந்த படிப்பு தான் படிப்பேன்னு பிடிவாதமா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டெல்லிலே படிச்சே... சரி போகட்டும்னு பாத்தா இப்போ மும்பைல தான் வேலைக்குப் போவேன்னு இதுலேயும் பிடிவாதம் பிடிச்சு அங்கே தனியா இருக்கே... பெத்தவ எனக்கு தான் பக்கு பக்குனு இருக்கு..."



"ம்மா.... பொண்ணுங்க ஸ்பேஸ்ஷிப்ல பறக்க ஆரம்பிச்சே பல வர்ஷம் ஆச்சு... அதை மொதோ நியாபகம் வெச்சிக்கோ... நீ தான் இன்னமும் அந்த கேட்டடு கம்யூனிட்டி அப்பார்ட்மென்ட்டை விட்டே வெளியே வர பயப்படுறேனா என்னையும் அப்படியே இருக்க சொல்லாதே..."



"என் பயம் உனக்கு புரியாது! ஒவ்வொரு நீயூஸையும் கேக்கும்போதும் உன்னை நெனச்சு நான் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்குறது உனக்கு எங்கே தெரியப் போகுது! இப்படியெல்லாம் மூர்க்கத்தனம் நிறைந்த மனிதர்களும் இந்த உலகத்துல தான் இருக்காங்கன்னு நினைக்கும் போது பொண்ணை பெத்தவளா என் பயத்தை யார் தான் குறை சொல்ல முடியும்!!!" என்று ஆதங்கமாகக் கூறினார்.



"சும்மா சொஸைட்டிய காட்டி பயமுறுத்தி பொண்ணுங்களை வீட்டுக்குள்ள அடக்கி வைக்க நெனைக்காதே ம்மா… மூர்க்கத்தனமான மனிதர்களை மட்டும் தான் மீடியா வெளியே காண்பிக்கிது… மனிதர்களிலேயும் நல்லவங்க இருக்காங்க… அது நாலு பேர்கிட்ட பழகினாத் தான் தெரியும்..."



"நீ என்ன சொன்னாலும் என் பயம் போகாது… இப்போ இருக்கிற யங்ஸ்டர்ஸ் லைஃப் ஸ்டைல்லையும் என்னால ஏத்துக்கவும் முடியாது. அதுக்கு காரணம் உனக்கும் எனக்குமான வயசு வித்தியாசம்... நான் வளர்ந்த சூழ்நிலை வேற, நீ வாழுற சூழ்நிலை வேற... சரி அதைவிடு நீ எப்போ இங்கே வர்றே? அதை மொதோ சொல்லு"



மஹன்யா தன் இல்லம் செல்வதே ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான். அதுவும் ஒரு வாரம் தான். விஷேஷ நேரத்திலாவது இருபது நாள் சேர்ந்தார் போல் வரலாமே என்று கேட்டாள் அவளிடமிருந்து வரும் பதில் 'உன் அட்வைஸை ஏழு நாள் கேக்குறதே போர் ம்மா… இதுலே டூ வீக்ஸ் கன்டினியூயஸ்ஸா கேட்டேன் அவ்ளோ தான், நானும் உன்னை மாதிரி வீட்டுக்குள்ளேயே அடஞ்சிட வேண்டியது தான்' என்று கேலி போல் கூறிச் சிரிப்பாள். அவளைப் பொறுத்தவரை யாரும் அவளை அடக்க நினைக்கக் கூடாது. அடக்கிடவும் முடியாது…



"இப்போதைக்கு வர முடியாது. அதை சொல்லத் தான் கால் பண்ணினேன்... இன்னைக்கு எங்க ஹோட்டலோட மேனேஜ்மெண்ட் கை மாறுது... புது மேனேஜ்மெண்ட் வந்தவுடனே லீவ் போட முடியாது... சோ இந்த மந்த் ஊருக்கு வரலே..."



சட்டென அம்மாவின் குரல் வாடியது "அப்போ இன்னும் ஆறு மாசம் அங்கே தான் இருக்கப் போறியா!"



"எஸ் மாம்…. சிக்ஸ் மந்த்ஸ் உன் அட்வைஸ் இல்லாம ஜாலியா என்ஜாய் பண்ணப் போறேன்…"



"நீ என்ஜாய் பண்ணுவே! உனக்கென்ன வந்தது! உன்னை பாக்காம தவிக்கிறது நாங்க தானே!!! எங்களுக்கு இருக்குறது நீ ஒரே பொண்ணு தான். அதுவும் எங்க கூட இல்லேனா எப்படி ம்மா! பேசாம நீயும் இங்கே ஏதாவது வேலை தேடிக்கோயேன்… இங்கே இல்லாத பீச் ரெஸார்ட்ஸ்ஸா, ரெஸ்டாரன்ட்ஸ், ஃபைவ் ஸ்டார், எவன் ஸ்டார் ஹோட்டல்ஸ்ஸா எல்லாமே இங்கேயே இருக்கும் போது நீ ஏன் அங்கே கஷ்டபடனும்… சொல்லப்போனா சொந்தமா ஒன்னை ஆரம்பிக்கிற அளவுக்கு வசதியும் இருக்கும் போது நீ ஏன் யாருகிட்டேயோ போயி வேலை பாக்கனும் மஹிம்மா!"



"மாம்... நீங்க ஒத்த பிள்ளையோட நிறுத்திக்கிட்டதுக்கு நான் ஒன்னும் செய்யமுடியாது... இப்போ கூட எனக்கு ஒன்னும் ப்ரச்சனையில்லே... சீக்கிரமா தம்பியோ, பாப்பாவோ ரெடி பண்ணிக்கோங்க... ஆனா என்னை மட்டும் உங்க கூட இருக்க சொல்லி கட்டாயப்படுத்தாதிங்க.... உங்களோட எந்த கட்டுப்பாடுக்கும் நான் அடங்கமாட்டேன்.... அது உங்களுக்கும் தெரியும்... நாம மொதோ தொழிலாளியா இருந்தாத் தான் சிறந்த முதலாளியா இருக்க கத்துக்கு முடியும் ம்மா… ஓகே எனக்கு டைம் ஆகிடுச்சு... பைய் டாட்... பைய் மாம்... நாளைக்கு பேசுறேன்." என்று அழைப்பைத் துண்டித்து தன் காலைப் பணிகளைத் தொடர்ந்தாள்.



இஸ்த்திரி செய்யப்பட்ட வெள்ளை நிற சட்டையும் உடலோடு ஒட்டிய கருப்பு நிற குட்டைப் பாவாடையும், அதனுள் தோல் நிறத்தில் ஸ்டாக்கின்ஸ், மற்றும் கருப்பு நிற கழுத்துப்பட்டையும், திருத்தமாக வெட்டப்பட்ட கூந்தலை புரவி வாலிட்டு அடக்கி, தன் நேர்த்தியான உடை அலங்காரத்திற்கு தேவையான முக அலங்காரத்தையும் முடித்துக் கொண்டு, வாடகைத் தானுந்தில் ஏறிச் சென்றாள்.
 
Top