• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல்? - 10

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 10

கிட்டத்தட்ட பல மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற மனிதரை நித்யகல்யாணி பெங்களூரில் பார்த்திருக்க முடியுமா? அவரது இந்த விபத்திற்கும், அஷோக்கிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக் கூடுமா?

ஒருவேளை இப்படி எதுவுமே இல்லாது, வேறு எவரையாவது நித்யகல்யாணி பெங்களூருவில் பார்த்திருப்பாரா? என்று எண்ணியபடி மிகவும் குழப்பமானதொரு மனநிலையில் இருந்தான் சத்யா.

அவனால் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தாது இங்கிருந்து செல்லவும் இயலவில்லை. அதே சமயம் அங்குத் திருச்சியில் ஏதேனும் பிரச்சனை வருமோ என்றும் அஞ்சியவன், அங்கும் அடிக்கடி தொலைபேசி மூலம் அடிக்கடி அங்கிருந்தவர்களிடம் விசாரித்து அறிந்து கொண்டான்.

இப்படியான ஒரு பரபரப்பான மற்றும் பதட்டமான நிலையில் சத்யா ஒரு விஷயத்தை முற்றிலும் மறந்தே போனான். அது என்னவென்றால், இங்கு நித்யகல்யாணிக்குத் துணையாகத் தனது ஜுனியர் ஒருவனை அனுப்பியிருந்தான் அல்லவா சத்யா? அவனிடம் இங்கு என்ன நடந்தது? எப்படித் தனியாக நித்யகல்யாணி மட்டும் காரில் சென்று விபத்துக்கு உள்ளானார் என்று எதையுமே அவன் இன்னமும் விசாரிக்கவில்லை.

இத்தனைக்கும் சத்யாவின் ஜுனியர் - வெற்றி.. சத்யா இங்கே வந்ததிலிருந்து, அவன் அருகிலேயே வந்து ஏதோ கூறுவதற்குத் துடித்துக் கொண்டு தான் இருந்தான்.

நடந்த விஷயங்களின் அதிர்வினால், சுற்றிலும் நடந்து கொண்டிருப்பது எதையுமே சத்யா கவனிக்கவில்லை. எனவே அவன் வெற்றி தன்னிடம் பேச விரும்புவதையும் கண்டுகொள்ளாதே இருந்தான்.

ஒரு கட்டத்தில் தான் சத்யாவிற்கு வெற்றியின் ஞாபகமே வர, அவனைத் தேடிச் சென்றான் சத்யா.

அவனும் நித்யகல்யாணி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அருகிலேயே தான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தான். தினமும் காலை மருத்துவமனைக்கு வருவதும், நாள் முழுவதும் அங்கேயே இருப்பதும், இரவு வேளையில் மட்டும் மீண்டும் ஹோட்டலுக்குச் செல்வதுமாக இருந்தான் வெற்றி. இரவில் ஒரு முறை மருத்துவமனைக்கருகே வந்து பார்த்தும் போவான்.

இப்பொழுது வெற்றியை தேடி சத்யா வரவுமே.. பரபரப்பான வெற்றி, சத்யா எதுவும் கேட்கும் முன்பாகவே.. "சார்.. நானும், நீங்க இங்க வந்ததுல இருந்து உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு காத்துட்டு இருந்தேன். ஆனா, நீங்க என்ன கண்டுக்கவே இல்ல?" என்று குறையாகக் கூறி நிறுத்தினான்.

அதற்குச் சத்யாவோ.. "என்ன விஷயம் வெற்றி.. இங்க நடந்த டென்ஷன்ல என்னால எதையும் நிதானமா யோசிக்கவே முடியல. இப்போ சொல்லு.. என்ன விஷயம்? எப்படி ஆண்ட்டி தனியா கார் ஓட்டிட்டு போனாங்க? அப்படி அவங்க எங்க தான் போனாங்க?" என்று படபடத்துப் போய்க் கேட்க, வெற்றியும் தனக்குத் தெரிந்ததைக் கூறலானான்.

"சார்.. மேடம் இங்க வந்து ஒரு நாலஞ்சு நாள் நார்மலா தான் இருந்தாங்க. அவங்க காரை கூட நான் தான் ஓட்டிட்டு போனேன்..

ஆனா, நீங்க மேடம்க்கு போன் பண்ணி அங்க காலேஜ்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னதும் கொஞ்சம் டென்ஷன் ஆனாங்க. ஆனாலும் அந்தப் பையன், ஷங்கரோட அப்பா.. தானாவே நம்ம மேடமுக்கு போன் செய்து, மன்னிப்பு கேட்கவும் கொஞ்சம் சமாதானம் ஆனவங்க.. உங்ககிட்டயும் நடந்ததைச் சொன்னாங்க.

ஆனாலும் அடுத்த நாள் மீட்டிங்கை அட்டன் பண்ணிட்டு வந்தவங்க கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாங்க. அவங்க பெர்சனல் செகரெட்டரிகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்துட்டு இருந்தாங்க. ரொம்பவும் யோசனையில இருந்தாங்க.

அதைப் பற்றி நான் கேட்டதுக்குக் கூட, அப்படியெல்லாம் எதுவும் இல்லைனு சமாளிச்சுட்டாங்க. நானும் அதை நம்பி உங்ககிட்டயும் எதுவும் சொல்லல. ஆனா, அடுத்த நாள் அவங்க காரை எடுத்துக்கிட்டுத் தனியா கிளம்பவும், அவங்களைத் தடுத்து, நானே காரை ஓட்டிட்டு வரேன்னு சொன்னதும் பயங்கரக் கோபம் வந்துடுச்சு அவங்களுக்கு.

'நான் என்ன பச்சை குழந்தையா? எங்க போனாலும் பிசின் மாதிரி கூட ஒட்டிட்டே வருவீங்களா?'ன்னு கேட்டவங்க, தானும் கூட வரதா சொன்ன அவங்க செகரெட்டரியை பார்த்து கோபமா முறைச்சாங்க பாருங்க.. அந்தப் பொண்ணு அப்படியே பயந்து நடுங்கிடுச்சு.

ஆனாலும், நான் அவங்க சொன்னதைக் கேட்காம, இன்னொரு வாடகை கார்ல அவங்க பின்னாடியே போகவும் கொஞ்ச தூரத்துலையே என்ன கண்டுபிடிச்சுட்டாங்க அவங்க. அதனால பாதி வழியிலேயே வண்டியை நிறுத்தி என்ன கண்டபடி திட்டி திரும்ப ஹோட்டல் ரூமுக்குப் போகச் சொல்லிட்டாங்க.

நான் அப்படி ஹோட்டல் ரூமுக்கு வந்து உங்களுக்கு இதைப் பத்தி சொல்லலாம்னு போன் பண்ண நினச்ச நேரத்துல போலீஸ்ல இருந்து ஒரு போன்.

நம்ம மேடமுக்கு ஆக்சிடென்ட் ஆனதா போலிஸ் சொன்னால்க. இந்த விஷயத்தைக் கேட்டதும் எனக்கு ஒரு நிமிஷம் என்ன செய்யறதுன்னே தெரியல. கெட்டதுலயும் ஒரு நல்லதா.. மேடம், நான் அவங்கள பின் தொடர்ந்து போனப்போ என்கிட்ட இருந்து என்னோட போன வாங்கிக்கிட்டாங்க.

அதுல கால் லிஸ்ட்ல இருந்த அவங்க செகரட்டரி நம்பரை பார்த்து தான் போலீஸ் அந்த நம்பருக்கு கால் செய்தாங்க. அதனால தான் எங்களுக்கு அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயமே தெரிஞ்சுது.." என்று கூறி முடிக்கவும், குழப்பத்துடன் புருவம் சுருக்கினான் சத்யா.

மனமெல்லாம் குழப்ப மேகங்கள் சூழ்ந்து கொள்ள.. "எதுக்குத் தனியா போகணும்னு நினைச்சாங்க? அப்படி எங்க தான் போகணும்னு நினைச்சாங்க? அவங்க ரெஸ்ட்லெஸ்ஸா இருந்ததா வெற்றி சொல்றானே.. அப்படி எந்த விஷயத்துனால ரெஸ்ட்லெஸ்ஸா இருந்திருப்பாங்க?

ஒருவேளை புகழிக்கு நடந்த விஷயத்தை நினச்சு கவலையா இருந்திருப்பாங்களோ? ஆனா, அந்த ஓரச்சனையும் தான் ஓரளவுக்குச் சுமூகமான முடிஞ்சுடுச்சே.. அவங்க அப்படி யாரை தான் பார்க்க போயிருப்பாங்க? கடைசியா.. 'அவரை இங்க பார்த்தேன்'னு வேற சொன்னாங்களே.. அது யாரா இருக்கும்?" என்று சிந்தனைவயப் பட்டிருந்தவனுக்கு, நித்யகல்யாணியின் செகரட்டரியின் ஞாபகம் வர, வெற்றியை விளித்து, அந்தப் பெண் சீதாவை அழைத்து வரும்படி பணித்தான்.

பயத்துடன் நடுநடுங்கி வந்தவளைப் பார்த்த சத்யாவிற்கு, இவள் ஏன் இவ்வாறு பயந்து நடுங்குகிறாள் என்ற எண்ணம் உதித்தது.

அவளை அழைத்து விசாரிக்கவும் தான்.. நித்யகல்யாணிக்கு இப்படி நடந்ததில் அவள் மிகவும் அச்சமுற்றிருக்கிறாள் என்ற விஷயமே சத்யாவிற்குப் புரிந்தது.

ஏனென்றால், சத்யா அழைத்ததுமே அவனருகே வந்தவள்.. "சார்.. நம்ம மேடம யாரோ கண்டிப்பா கொல்லத் தான் பார்த்திருக்காங்க.." என்று அழுகையினூடே கூறவும், சட்டென மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தே போனான் சத்யா.

"ஏய்.. என்ன? என்னம்மா சொல்ற நீ?" என்று திகிலுடன் வெற்றி அவளிடம் கேட்க.. அந்தச் சீதாவோ.. "ஆமா சார்.. மேடம் இங்க வந்து சில நாட்கள் கழிச்சு ஒரே குழப்பமா இருந்தாங்க. அப்பறம் ஒரு நாள் அவங்களுக்கு ஒரு போன் வந்ததா ஹோட்டல்ல இருந்து சொல்லவும், அத அட்டன் பண்ணி பேசினவங்க முகம் வெளிறி போச்சு.

நானும் அப்போ அவங்க ரூம்ல தான் இருந்தேன். அப்போ தான் நம்ம காலேஜ்ல வேற பிரச்சனை நடந்திருந்ததால, நானும் மறுபடியும் காலேஜ்ல தான் ஏதாவது பிரச்சனையோன்னு அவங்ககிட்ட 'என்ன மேடம் ஆச்சு'ன்னு கேட்டதுக்கு, பதில் எதுவும் பேசாம அமைதியா என்ன அங்கிருந்து போகச் சொல்லிட்டாங்க.

ஆனா, அடுத்த நாள் காலையில அவங்களுக்கு ஒரு பார்சல் வந்துச்சு.. அந்தப் பார்சல்ல ஒரு போன் இருந்துச்சு. ஆனா அந்தப் பார்சலை பிரிக்கறதுக்குக் கூட நம்ம மேடமுக்கு அவ்வளவு பயமா இருந்துச்சு11. கையெல்லாம் நடுக்கத்தோடு அந்தப் பார்சலை பிரிச்சாங்க அவங்க.

அதில இருந்த போனை பார்க்கவும் கொஞ்சம் நிம்மதியானங்க. ஆனா, உடனே அந்தப் போனுக்கு ஒரு கால் வரவும், உடனே மறுபடியும் அவங்களுக்கு உடம்பெல்லாம் வியர்த்துடுச்சு. அந்தக் கால அட்டன் பண்ணி அவங்க பேச போனப்போ, அங்க பயத்தோட அவங்களையே பார்த்துட்டு இருந்த என்ன, என்னோட ரூமுக்கு அனுப்பி வச்சாங்க.

அப்பறம் அவங்க யார்கிட்ட பேசினாங்கன்னு எதுவுமே தெரியல. மறுநாள் காலையிலேயே அவங்க எங்கேயோ கிளம்பிப் போகவும், நானும் வெற்றி சாரும் அவங்க கூட வரோம்னு சொன்னதும் பயங்கரமான கோபம் வந்துடுச்சு அவங்களுக்கு.

அதனால நாங்களும் இங்கேயே இருந்தோம். ஆனா, கடைசியா போலீஸ்கிட்ட இருந்து அவங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆனதா போன் தான் வந்துச்சு. அதனாலா தான் சார் சொல்றேன்.. யாரோ அவங்கள திட்டம் போட்டு கொலை செய்யப் பார்த்திருக்காங்க." என்று கூறவும் திகைப்பாய் இருந்தது வெற்றிக்கும், சத்யாவிற்கும்.

ஆனால் அந்த முதல் திகைப்பு மாறியதும், சத்யா வெற்றியைத் தான் முறைத்தான்.

"நீ எல்லாம் எதுக்கு எனக்கு ஜுனியர்ன்னு வெளில சொல்லிட்டு இருக்க? எவ்வளவு நம்பிக்கையோட அவங்களுக்குப் பாதுகாப்பா இருக்க உன்ன இங்க அனுப்பினேன். ஆனா நீ இப்படிக் கோட்டை விட்டுட்டியே.." என்று அவன் திட்ட, அமைதியாய் தலை குனிந்தான் வெற்றி.

பின்பு சீதாவிடம் திரும்பிய சத்யாவோ.. "ஆண்ட்டி ஒரு போன் பார்சல் வந்துச்சுன்னு சொன்னியே.. அதை, அவங்க வெளில போகும் போது கூடவே எடுத்துட்டு தான் போனாங்களா? என்று கேட்க, சற்று யோசித்த சீதாவோ, "ஆமாம் சார்" என்றாள்.

"அப்படின்னா, அந்த ஆக்சிடென்ட் ஆனப்போ அவங்ககிட்ட அந்தப் போன் இருந்திருக்கணுமே.. அப்படி எதையுமே போலீஸ் நம்மகிட்ட சொல்லவும் இல்ல, போலீஸ் திருப்பித் தந்த ஆண்ட்டியோட பொருள்ல அந்தப் போனும் இல்ல" என்று யோசித்த சத்யா, இதைப் பற்றி வெற்றியிடமும், சீதாவிடமும் கேட்க, அவர்களும் சத்யாவின் கருத்தை ஆமோத்தித்தனர்.

"சரி இந்த விஷயத்தை எல்லாம் நீ போலீஸ்கிட்டயாவது சொன்னியா?" என்று அவன் கேட்க, அதற்கு வெற்றியோ.. "போலீஸ் எங்ககிட்ட எல்லாம் விசாரணை நடத்தவே இல்ல சார். இது ஏதோ சாதாரணமான ஆக்சிடெண்ட்டா தான் கேஸை முடிச்சாங்க." என்று சலிப்புடன் கூறினான்.

இறுதியாக.. "சரி.. இந்த ஆக்சிடென்ட் எங்க நடந்துச்சு?" என்று சத்யா கேட்க, வெற்றியோ.. "சிட்டிக்கு வெளில தான் சார். மேடம் போன காரை ஏதோ லாரி இடிச்சுட்டு போய்டுச்சுன்னு போலீஸ் ரிப்போர்ட் சொல்லுது. நான் அதைப் பற்றி விசாரிச்சதுல, அது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. அந்த வழிய பொதுவா யாரும் அதிகமா பயன்படுத்த மாட்டாங்க.

எப்போவாது யாராவது வந்து போனா தான் உண்டு. அப்படி வந்தவங்க தான் நம்ம மேடமை பார்த்து உடனே பக்கத்துல இருந்த கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது. அப்போ தான் அவங்ககிட்ட இருந்த போனை எடுத்துப் போலீஸ் நம்பரை கண்டுபிடிச்சு எங்களுக்குக் கூப்பிட்டது. நான் அங்க போனதும் தான், மேடமை இந்த ஹாஸ்பிடலுக்கு மாத்திட்டோம்.

ஆனா, இப்போ சீதா சொன்னதை வச்சுப் பார்த்தா.. அவங்ககிட்ட இருந்த இன்னொரு போனை யாரோ எடுத்திருக்காங்க. அப்போ அந்த ஆக்சிடென்ட் வெறும் ஆக்சிடென்ட் இல்ல.." என்று கூறினான் வெற்றி.

அவனது கருத்தை ஆமோத்தித்தான் சத்யாவும்.

இப்படி இங்கே இவர்கள் அனைவரும் நித்யகல்யாணியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த வேளையில், திருச்சியில் ஷங்கரை சத்தமின்றிச் சிறையில் இருந்து விடுவித்திருந்தார் அவன் தந்தை.
 
Top