• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல்? - 13

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 13

ஜெகன், சத்யாவைப் பார்த்து.. அவன் தான் குற்றவாளி என்பதைப் போலக் கூற, அங்கிருந்த அனைவருக்கும் பெரும் திகைப்பாகிப் போனது. அப்பொழுது தான் அரை மயக்கத்திலிருந்து விழித்த புகழிக்கும் ஜெகனின் வார்த்தை திகைப்பை உண்டாக்கியது.

அவள் தான் முதலில், "சார்.. யாரைப் பார்த்து என்ன சொல்லறீங்க? நீங்க போலீசுன்னா யார் மேல் வேணாலும் சந்தேகப்படுவீங்களா?" என்று கேட்க, அப்பொழுது தான் தன் சுயத்திற்கு மீண்ட சம்பத்தும்.. "அதான சார்.. இவரே இவ்வளவு நாள் பெங்களூருல இருந்துட்டு இப்போ தான் இங்க வந்திருக்காரு.. அவரைப் போய் இப்படி சொல்லறீங்க?" என்று கேட்டான்.

ஆனால் இதற்கு சத்யா எந்த மறுமொழியும் கூறவில்லை. அவனது மனமெங்கும் அம்பரி காணாமல் போன செய்தி தான் முழுக்க முழுக்க அடைத்துக் கொண்டிருந்தது.

இத்தனை நாட்களாய் மனதிற்குள் அவள் மீது நேசம் இருக்கிறது என்பதை அவன் உணர்ந்தே இருந்தாலும்.. இதோ, இப்பொழுது அவளைக் காணவில்லை என்றான பிறகு.. அதிலும், அவள் காணாமல் போனதிற்கு அவனே காரணம் என்று ஒருவர் கூறுகின்ற பொழுது தான், அம்பரியின் இன்மையை அவன் முழுமையாக உணர்கிறான்.

சுற்றிலும் காற்றில்லாத உலகம் தன்னை சூழ் கொண்டதாய் உள்ளுக்குள் மூச்சுக்குத் தவித்துக் கொண்டிருந்தான். கையிலிருந்து வழிந்துவிட்ட நீருக்காய் எங்கும் பாலைவனப் பயணியாய் துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.

"அவ காணாம போனதுக்கு நான் தான் காரணமா? ஆமா.. நான் தானே இப்போ எந்தப் பிரச்சனையும் இல்லன்னு அவகிட்ட சொன்னது.." என்று உள்ளுக்குள் மருகியவன், ஜெகனிடம் திரும்பி.. "அவ காணாம போனதுக்கு நான் தான் காரணம்ன்னு ஏன் சொல்லறீங்க?" என்று நடுங்கும் குரலில் கேட்க, அந்த ஜெகனோ இவனை மேலும் கீழும் நோக்கிவிட்டு, "உங்களுக்கும், அந்தப் பொண்ணுக்கும் ஏதோ கனெக்ஷனாமே?" என்று கேட்க, கடுப்புடன் கண்களை மூடித் திறந்த சத்யா.. "சொல்ல வந்தத நேரடியா சொல்லுங்க சார்.." என்று எகிற, அந்த ஜெகனோ.. "இல்ல அந்தப் பொண்ணு இன்னைக்கு காலையில கிளம்பறப்போ உங்களுக்கு தான போன் பண்ணினா?.. சோ உங்க மேல எங்களோட முதல் சந்தேகம் விழுந்திருக்கு" என்று கூறினான்.

இதைக் கேட்ட சத்யா, ஆத்திரத்தின் உச்ச கட்டத்திற்கு சென்றாலும்.. முயன்று அமைதியை தருவித்துக் கொண்ட குரலில்.. "அதனால என் மேல சந்தேகப்படறீங்க இல்லையா சார்?" என்று கேட்டான்.

அதற்கு அந்த ஜெகனும் ஆம் என்று தலையசைத்துவிட்டு.. "சோ.. எங்ககிட்ட கேட்காம நீங்க இந்த ஊரைத் தாண்டி எங்கயும் போகக் கூடாது. எப்போ விசாரணைக்கு கூப்பிட்டாலும் வரணும்." என்று அதிகாரமாய்க் கூற, இவன் எதுவும் பேசாது வேகநடையுடன் வெளியேறிவிட்டான்.

அதற்கு ஜெகன், சத்யாவை முறைத்துப் பார்க்க, இருவரையும் மனதில் பயத்தோடு பார்த்த சம்பத்தோ.. சத்யாவின் பின்னே வெளியே ஓடி வந்தான்.

"சார்.. சார்.. சத்யா சார்.." என அவன் அழைக்க, வேகமாக சென்று கொண்டிருந்தவனோ சட்டென நின்று திரும்பிப் பார்த்தான்.

ஓடி வந்து கொண்டிருந்த சம்பத், சத்யாவின் அருகே வந்து லேசாக மூச்சு வாங்கியபடி நின்று.. "சார்.. என்ன சார் அந்த ஆள் பேசிட்டு இருக்கும் போதே இப்படி பாதியில் வந்துட்டீங்க? அவர் ஏதவாது கோவிச்சுகிட்டா, நமக்கு தான நஷ்டம்?" என வினவ, சம்பத்தை ஒரு மார்க்கமாகப் பார்த்த சத்யாவோ.. "ஆமா.. உங்களுக்கும், இனியாவுக்கும் என்ன சம்மந்தம்?" என்றான் சந்தேகக் கண் கொண்டு.

அதைக் கேட்டதும் சற்று தலை குனிந்த சம்பத்தோ.. "இது இப்போதைக்கு வெளில தெரியவேணாம்னு நினைச்சோம். ஆனா, தெரியவேண்டிய சூழ்நிலையாகிடுச்சு.

வந்து.. எனக்கும், இனியாவுக்கும் வீட்டுல கல்யாணம் பேசியிருக்காங்க." என்று சம்பத் கூறியதும் சத்யாவுக்குள் மெல்ல அதிர்வலை உண்டாகியது.

"ஹோ.. சரி.. ஆனா, ஏன் இந்த விஷயம் வெளில தெரியாக் கூடாதுன்னு நினைச்சீங்க? காதல் கல்யாணமா உங்களோடது?" என்று சத்யா கேட்க, அதை அவசரமாய் மறுத்தான் சம்பத்.

"சே.. சே.. இல்ல சார். வீட்டுல முடிவு செய்தது தான். போன செமஸ்டர் லீவ்ல தான் பொண்ணு பார்த்து, கல்யாணம் முடிவு செய்தாங்க. ஆனா, இப்போ இனியா படிச்சுட்டு இருக்கறதால, அவளோட படிப்பு முடிஞ்ச பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு முடிவு செய்திருந்தோம்.

ஆனா இனியாவுக்கு.. இப்படி அவளோட ப்ரொபசரையே கல்யாணம் செய்துக்கறதுல தயக்கம் இருந்துச்சு. நான் அந்த அளவுக்கு டீப்பா யோசிக்கல. ஆனா, அவ யோசிக்கறதும் சரின்னு பட்டுச்சு. அதனால, அவளுக்காக காலேஜ் முடியற வரைக்கும் இந்த விஷயத்தை வெளில சொல்ல வேண்டாம்னு நினைச்சோம்.." என்று அவன் விளக்க, சத்யாவுக்கு இப்பொழுது அனைத்தும் தெளிவாக விளங்கியது.

இருந்தாலும், "ஆனா.. இன்னைக்கு புகழிக்கு உடம்பு சரியில்ல.. அம்பரியும் காலேஜ் போயிருக்கா.. இந்த நிலைமையில ஏன் இனியா உங்கள ரகசியமா பார்க்க வரணும்?" என்று கேட்க.. சம்பத்தின் முகம் எதையோ நினைத்து கோபத்தில் சிவந்தது.

"எல்லாம் இந்த பெரியவங்க செய்யறது தான் சார். இனியாவுக்கு இன்னும் ஒரு வாரத்துல பரீட்சை ஆரம்பிக்கப் போகுது. ஆனா, அதுக்குள்ளே ஏதோ ஜோஸ்யக்காரன் சொன்னான்னு நாள் சரியில்ல.. அது சரியில்லைன்னு இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணத்தை வச்சுக்கலாம். கல்யாணம் முடிஞ்ச பின்னாடி அவ இங்க திரும்ப வந்து பரீட்சை எழுதட்டும்னு சொல்லிட்டு இருக்காங்க.

இதுல ரெண்டு வீட்டு சைடும் ஒத்துமையா இருக்காங்க. அதனால எங்க ரெண்டு பேருக்கும் தினமும் டார்ச்சர் தான். நான் எங்க வீட்டுல ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. இனியா பரீட்சை முடிஞ்சு பிறகு தான் கல்யாணம்னு.

ஆனா இப்படி என்கிட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு, என் வீட்டுலயும் சரி, அவ வீட்டுலயும் சரி, அவளுக்கு போன் போட்டு தொந்திரவு பண்ணிட்டு இருக்காங்க.

அவ ஏகப்பட்ட டிப்ரஷன்ல படிக்க முடியாம.. எதையும் யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க முடியாம இருக்கா. அதனால தான் அவள நேர்ல பார்த்து.. நானே எல்லாத்தையும் கவனிச்சுக்கறதா சொல்லி.. இனி யார் போனையும் எடுக்காதேன்னு பேசிட்டு இருக்கறதுக்குள்ள, அந்த ஷங்கர் வந்து பிரச்சனை பண்ணியிருக்கான்." என்று கூறி சம்பத் நிறுத்த, அப்பொழுது தான் ஷங்கரின் நினைவே வந்தது சத்யாவுக்கு.

"அதான? அந்த ஷங்கர் மறுபடியும் வந்து என்ன பிரச்சனை பண்ணினான்?" என்று அவன் கேட்க, சம்பத் மேலும் தொடர்ந்தான்.

"அந்த ஷங்கருக்கு பயங்கர குடி வெறி சார். பயங்கரமா தண்ணியடிச்சுட்டு, புகழிய எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு இங்க புகழி வீட்டுக்கு வந்திருக்கான்.

அவனுக்கு தகுந்த மாதிரி, புகழி கூட, அம்பரியும் இல்ல, இனியாவும் இல்ல. அதே சமயம் புகழிக்கும் உடம்பும் சரியில்லாம மாத்திரை சாப்டுட்டு தூங்கிட்டு இருந்திருக்கா.

அந்தச் சமயத்துல வீட்டுக்குள்ள புகுந்தவன், புகழியை தூக்கிட்டு வெளிய வரப் பார்த்திருக்கான். அப்போ தூக்கத்துல முழிச்சி புகழி, சத்தம் போட்டாலும், அவ ரொம்ப வீக்கா இருந்ததால அவளால ஷங்கர் கிட்ட போராட முடியல.

ஆனா, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் வந்து புகழியை காப்பாத்தி இங்க ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்து.. அந்த ஷங்கரையும் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்காங்க." என் விளக்கமளித்தான்.

"அப்போ இந்த இடைப்பட்ட நேரத்துல தான் அம்பரிக்கு ஏதாவது ஆகியிருக்கணும்?" என்று கேள்வியாய் சத்யா கேட்க, அவனையே கூர்ந்து நோக்கினான் சம்பத்.

"எனக்கு அம்பரியை யார் கடத்தியிருப்பாங்க? எதுக்காக கடத்திருப்பாங்க.. என்ன மோட்டிவ்ன்னே புரியலை சார். அவளுக்கு யார்கிட்ட இருந்தும், எந்த பிரச்னையும் இதுவரைக்கும் இல்ல. நல்ல பொண்ணு. தைரியமான பொண்ணும் கூட.." என்று யோசனையின் ஊடே சம்பத் பேசிக் கொண்டிருக்க.. சத்யாவோ,

"அம்பரி காணாம போனதுல இருந்து இப்போ வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு எனக்கு விளக்கமா சொல்றீங்களா சம்பத்?" என்று கேட்டான். அதன் படி சம்பத்தும் நடந்ததை விளக்க ஆரம்பித்தான்.

"புகழிக்கு இப்படி ஆகிடுச்சுன்னு பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இனியாவுக்கு போன் பண்ணி சொல்லவும், நாங்க பயந்து போய் உடனே இங்க ஹாஸ்பிடலுக்கு வந்துட்டோம் சார். ஆனா அப்போ தான் இனியா, அம்பரி போனுக்கு கூப்பிட்டு சொல்ல முயற்சி பண்ணினா.

அப்போ அம்பரி போன் எடுக்கல. அப்போ தான் அவளுக்கு லேசா சந்தேகம் வந்துச்சு. ஏன்னா, காலேஜ்ல போன் யூஸ் பண்ணக்கூடாதுன்னாலும், ஒரு நோட்ஸ் எடுத்துட்டு வர போனதால அம்பரி போன் எடுத்துட்டு தான் போயிருந்தா.

ஆனா, இனியா அவளுக்கு போன் பண்ணின நேரத்துக்கு, அவ காலேஜை விட்டு வெளில வந்திருக்கணும். ஆனா, அவ போன் நாட் ரீச்சபிள்ளையே இருந்துச்சு. அப்பறம் இங்க புகழியை விசாரிக்க இதோ.. இந்த இஸ்பெக்டர் ஜெகன் தான் வந்தார்.

அவ காலேஜ் போய் ரொம்ப நேரமாகவும் தான் நாங்க பயந்துட்டு அம்பரியை பத்தி சொல்ல, அவர் உடனே எங்களை பத்தி விசாரிச்சு.. எங்களையே சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டார்.

அடுத்து நீங்க வந்ததும் இப்போ சந்தேகம் உங்க மேல வந்து விழுந்துடுச்சு. எனக்கேன்னமோ இவங்க குற்றவாளியை கண்டுபிடிக்கற மாதிரி தெரியல. இவங்க தான் குற்றவாளியை உருவாக்கறாங்க.." என்று சம்பத் வெறுப்புடன் கூற, சத்யாவோ.. "இவங்க குற்றவாளியை கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி, நம்ம அம்பரியை கண்டுபிடிக்கணும் சம்பத்.." என்று கூறியபடியே தனது போனை எடுத்தவன்.. சற்று தள்ளிச் சென்று யாருக்கோ போன் செய்தான்.

"ஹாய் டீம்.." என்று அவன் குரல் கொடுக்க, மறுமுனையில் இருந்ததோ ஆண்களும், பெண்களுமாக மொத்தம் பத்துப் பேர்.

அதில் முதலில் பேசிய ஒருவன், "சார்.. இந்த நம்பருக்கு கூப்பிட்டு இருக்கீங்கன்னா.. அப்போ ஏதோ முக்கியமான பிரச்சனையா?" என்று நேராக விசயத்திற்கு வர.. சத்யாவோ.. "எஸ் பிரவீன்.. நம்ம டீம் எல்லாரையும் கூட்டிட்டு நாளைக்கு காலையில நீங்க திருச்சியில இருக்கணும்" என உத்தரவிட்டான்.

அவன் உத்தரவிட்ட அடுத்த ஒருமணிநேரத்தில் அந்தப் பத்துப் பேரும், திருச்சியை நோக்கிய பயணத்தில் இருந்தனர்.

இங்கு அந்த இன்ஸ்பெக்டர் ஜெகன், அம்பரியைத் தேறும் முயற்சியில் இறங்காது, எப்படியாவது சத்யாவை இந்த வழக்கில் சிக்க வைத்துவிடும் நோக்கில் தான் இருந்தான்.

அதன் படி தேவையில்லாத ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு, சத்யாவின் நேரத்தையும் கெடுத்துக் கொண்டிருக்க, சத்யாவுக்கும், சம்பத்துக்கும் கோபம் தான் பெருகியது.

அப்படியே அந்த இரவு முழுக்க கழிய, மறுநாள் காலையில் புகழியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட, புகழியையும், இனியாவையும் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, உடன் இருவரின் பெற்றோர் இருந்தாலும் அவ்வப்பொழுது தாங்கள் வந்து பார்த்துக் கொள்வதாய் வாக்களித்துவிட்டு சத்யாவும், சம்பத்தும் வெளியே வர, அந்த வீடு இருக்கும் தெருவிலேயே அவர்களை மடக்கிப் பிடித்தது ஜெகனின் போலீஸ் வாகனம்.

"இங்க என்ன செய்யறீங்க?" என்று மிதப்பான கேள்வியுடன் ஜெகன் அந்த வாகனத்தில் இருந்து இறங்க.. சத்யா அவனையே முறைக்க, சம்பத் தான்.. "புகழிய அவ வீட்டுல விட வந்தோம்.." என பதிலளித்தான்.

"ஹ்ம்ம்.." என்று விட்டு ஏற இறங்க ஜெகன், சத்யாவைப் பார்க்க.. சத்யா தனது பார்வையை விளக்காது அவனையே முறைத்துக் கொண்டிருந்தான்.

"ஹ்ம்ம்.. வாங்க வந்து ஜீப்புல ஏறுங்க.." என சத்யாவையும், சம்பத்தையும் அதிகாரமாய் ஜெகன் அழைக்க.. இப்பொழுதும் சம்பத் தான் பதட்டமாகி.. "எதுக்கு சார்? எதுக்கு இப்போ தேவையில்லாம எங்கள கூப்பிடறீங்க?" என்று எகிற.. அதற்கு ஜெகனோ.. "என்ன சார்.. என்கிட்டயே முறைக்கறீங்க? எப்போ விசாரணைக்குக் கூப்பிட்டாலும் நீங்க வரணும்னு சொல்லியிருக்கேன்ல?" என்று திமிராய் கேட்க, அப்பொழுது அங்கு வந்து நின்றான் ஒருவன்.

அவனைப் பார்த்த சத்யாவுக்கோ.. விழிகள் வெளியே தெறித்து விழுந்துவிடும் போல அதிர்ச்சி உண்டானது.
 
Top