• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல்? - 14

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 14

வந்திருந்த அந்த நபரைக் கண்டதும், உள்ளுக்குள் பெரும் திகிலுடன், பயத்தையும் உணர்ந்தான் சத்யா. ஆனால் அவனைக் கண்டுகொள்ளாத அந்த நபரோ, நேராக ஜெகனிடம் சென்று.. "நீங்க தான இங்க காலேஜ்ல பொண்ணு மிஸ்ஸிங் கேச விசாரிக்கற இன்ஸ்பெக்டர்?" என்று வினவ, அதற்கு அந்த ஜெகனோ, "ம்ம்.. ஆமா.." என்று பதிலுரைத்தான்.

மேலும்.. "அப்போ.. ஏன் சார் இவங்களை விசாரிச்சுட்டு இருக்கீங்க? போய் நிஜமான குற்றவாளியை கண்டுபிடிங்க.. போங்க.." என்று அதட்டலாய்க் கூற, ஜெகனுக்கு வந்ததே கோபம்!

"யோவ்.. யாருயா நீ? எனக்கு ஆர்டர் போடற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? முதல்ல உனக்கும், இந்தக் கேஸுக்கும் என்ன சம்மந்தம்?" என்று எகிற, அந்த மற்றொரு நபரோ அமைதியாக, "நான் தான் அந்தக் காலேஜ் ஓனர் நித்யகல்யாணியோட புருஷன்" என்க.. இங்கு ஜெகனுக்கு மட்டுமல்லாது, சம்பத்துக்கும் விழிகளைத் தட்டி விழிக்கக் கூட முடியாத ஒரு அதிர்ச்சி.

உடனே சம்பத் திரும்பி சத்யாவைப் பார்க்க, சத்யா அமைதியாக.. "
ஆமாம்" என்று மட்டும் தலையசைத்தான்.

ஆனால் இன்ஸ்பெக்டர் ஜெகனோ.. "இத்தனை நாள் இல்லாம.. இப்போ வந்து திடீர்னு நீங்க தான் நித்யகல்யாணி மேடமோட கணவர்ன்னு சொல்லறீங்க? இதை எப்படிச் சார் நான் நம்பறது?" என்று கேட்க, தனது சட்டைப் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான் அசோக்.

அது அசோக்கும், நித்யகல்யாணியும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம். அது ஏதோ ஒரு கோவிலில் எடுக்கப்பட்டிருக்க, அசோக், நித்யகல்யாணியின் நெற்றியில் திலகமிடுவது போல இருந்தது அந்தப் புகைப்படத்தில்.

அதைக் காண்பித்த அசோக்.. "எங்க கல்யாண போட்டோவே உங்களுக்குக் காட்டியிருப்பேன். ஆனா, அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய போட்டோ.. அதுல உங்களுக்கு எங்களை அவ்வளவா அடையாளம் தெரியாது. அதனால தான் இந்தப் போட்டோவ காண்பிக்கறேன். இப்போ நம்பறீங்களா?" என்று கேட்க, உடனே முகமெல்லாம் மலர்ந்தது ஜெகனுக்கு.

"ச்சே.. ச்சே.. இனிமேலும் எப்படிச் சார் உங்கள நம்பாம இருக்க முடியும்? நீங்க நித்யகல்யாணி மேடமோட கணவர்ன்னா.. இனி நீங்க சொல்றதத் தான நாங்க கேட்க முடியும்?" என்று வழிசலாய் அவன் கூற, இங்குச் சத்யாவிற்கும், சம்பத்துக்கும் கடுப்படித்தது.

ஆனால் அசோக்கோ.. மிகவும் பெருந்தன்மையுடன்.. "இப்போ எல்லா அதிகாரமும் சத்யாகிட்டத் தான் இருக்கு. சோ, அவன் என்ன சொல்றானோ அதன் படி நீங்க செய்யுங்க. ஆனா, இவ்வளவு தூரம் எங்களுக்காகக் கஷ்டப்படற அவனை மட்டும் சந்தேகப்படாதீங்க.." என்று உணர்வுப்பூர்வமாகக் கூற, அதைக் கேட்டு சத்யாவுக்குப் புருவம் உயர்ந்தது.

ஆனால் சம்பத்தோ.. இப்பொழுது தான் அசோக்கின் மீது சந்தேகமே கொண்டான்.

எனவே அவன் ஜெகனிடம்.. "கட்டின பொண்டாட்டிய அத்தனை கொடுமைப்படுத்தின மனுஷனுக்கு இப்போ என்ன பாசம் வந்துச்சு? இன்னும் இங்க இருந்து ஏதாவது தேருமான்னு பார்க்க வந்திருக்காரான்னு அவரை விசாரிக்காம, அவர் சொல்றது தான் இனி சட்டம்ன்னு பேசிட்டு இருக்கீங்க?" என்று சீறினான்.

ஆனால் அதற்குள் இடை புகுந்த சத்யாவோ.. "சார்.. சம்பத் சார்.. என்ன பேசறீங்க நீங்க? எந்த மனுஷனா இருந்தாலும் தப்பு செஞ்சா.. பின்னால திருந்தித் தான ஆகணும்? அப்படித் திருந்தி வந்தவரைப் போய் நீங்க காயப்படுத்தறீங்களே? அதுமட்டுமில்லாம நித்யா ஆன்ட்டியும் கூட, அசோக் அங்கிள் திருந்தியிருப்பாருன்னு தான் சொன்னாங்க. அவங்களுக்கு அவங்க புருஷனப் பத்தி தெரியாதா என்ன? அவங்களே அங்கிளை நம்பும் போது, நமக்கென்ன?" என்று அசோக்குக்கு ஆதரவாய் பேச.. அதைப் பார்த்த அசோக்கின் விழிகளில் நிறைவு தெரிந்தது.

"விடு சத்யா.. நான் என் கல்யாணிக்கு செய்த கொடுமைக்கு எனக்கு என்னைக்கும் மன்னிப்பே இல்லை. அதெல்லாம் நான் ஜெயில்ல இருந்த காலதத்துல தான் உணர்ந்துக்கிட்டேன். ஜெயில்ல இருந்து வெளில வந்ததுக்கு அப்பறம்.. என்னோட தேடல் ஆன்மிகமயமாகியிடுச்சு.

கோவில், குளம்னு சுத்திட்டு இருந்த எனக்கு, திடீர்னு என் கல்யாணி ஞாபகம் வந்துடுச்சு. அப்பறம் அவளைப் பார்க்கலாம்னு அங்கேயும் இங்கயும் தேடி அலைஞ்சு, ஒருவழியா அவளைப் பெங்களூருல பார்த்தேன்.

ஆனா, அவளை நேரா நான் போய்ப் பாக்கறதுக்குள்ள.. அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ப்ச்.. ப்ச்.. என்ன செய்யறது? இறைவனோட விளையாட்டு அப்படி இருக்கு.

ஆனா அவளைப் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கணும்னு நான் நினைக்க, அவளோ.. இங்க காலேஜ்ல இவ்வளவு பிரச்சனைன்னு என்ன இங்க போகச் சொன்னா.. அதனால தான் ப்பா உனக்குத் துணையா இங்க ஏதாவது உதவி செய்யலாம்னு நான் இங்க வந்தேன்.." என்று கூற, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சத்யாவுக்கு உள்ளம் நெகிழ்ந்தது.

"அடடா.. பரவாயில்ல அங்கிள்.. விடுங்க.. தப்பு செய்யாத மனுஷன் யாரு இங்க? எனக்கு என் ஆன்ட்டியோட வாழ்க்கை சீராகணும். இப்போ தான் நீங்க வந்துட்டீங்க இல்ல? இனி எல்லாமே நலம் தான்.." என அவன் கூறி முடிக்க.. அதுவரை இவர்களின் வாயை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ஜெகனோ.. 'என்னங்கடா இவனுங்க விக்ரமன் படம் ஓட்டிட்டு இருக்காங்க..' என்று மனதிற்குள் எண்ணியவாறு,
"சார்.. அப்போ உங்களுக்குச் சத்யா சார் மேல நம்பிக்கை இருக்கு? நாங்க இவரை விசாரிக்க வேண்டாம்?" என்று கேட்க, அதற்கு அசோக்கோ.. "வேணாம் சார்.. எனக்கு எங்க சத்யா மேல அபார நம்பிக்கை இருக்கு." எனக் கூறி முடித்துவிட, ஒரு கையாலாகாத எரிச்சல் பார்வையுடன் அங்கிருந்து கிளம்பினான் ஜெகன்.

இங்குச் சத்யா, அசோக்கை அவர்களது வீட்டிற்குப் போகும்படி கூறிவிட்டு, சம்பத்துடன் அவனது பைக்கில் வர, பின்னால் அமர்ந்திருந்த சம்பத்துக்கோ, சத்யாவின் செய்கை மிகுந்த வெறுப்பாய் இருந்தது.

"ஒருத்தன் என்ன தப்பு பண்ணினாலும், அவன் ஆம்பளைங்கறதுக்காகவே அவனை மன்னிச்சுடுவீங்க இல்ல சார்?

அதிலும் அந்த ஜெகன்.. அவனுக்கு நித்யகல்யாணி மேடம் மேல கூட இவ்வளவு மரியாதை இல்ல. ஏன்னா, அவங்க புருஷனை விட்டுட்டு இருக்காங்க. ஆனா, தப்பு செஞ்ச இந்த அசோக் திரும்பி வந்ததும் எப்படி வழியறான்?

ஆனா நீங்க அவனையே மிஞ்சிட்டீங்க சார்.. அங்கிள்.. அங்கிள்ன்னு என்ன ஒரு கொஞ்சல்? உங்களுக்கெல்லாம் ஒரு ஆம்பள தப்பானவனா இருந்தாலும், அவன் தன்னோட மனைவி கூட இருந்தா போதும். இல்ல?

இங்க ஆண் தப்புச் செய்திருந்தாலும், பெண் தப்புச் செய்திருந்தாலும், மன்னிப்பு கொடுக்கற நிலையில் இருக்கறது ஆண் தான் இல்லையா சார்?

ஒரு பொண்ண விட்டுட்டு அந்த ஆண் போயிட்டான்னா அங்க பொண்ணு மேல தான் தப்பு.. அதே சமயம் ஒரு ஆணை விட்டுட்டு பொண்ணு போய்ட்டா, அங்கேயும் பொண்ணு மேல தான் தப்பு.. என்னங்க சார் நியாயம் இது.

இந்தக் கண்ணோட்டத்துல தான் இந்த உலகத்துல முக்கால்வாசிப் பேர் இருக்காங்க.. ஆனா, நீங்க நித்யகல்யாணி மேடமோட வலியை, அவஸ்தையை நேர்ல பார்த்தவர். அப்படிப்பட்ட நீங்களே இப்படி அவர் திரும்ப வந்ததுல சந்தோஷப்பட்டு அவர் திருந்தினத்துக்காக நிம்மதின்னு நினைக்கறீங்க.

இதை நான் உங்ககிட்ட இருந்து நிச்சயமா எதிர்பார்க்கல சார்.." என்று அவன் மூச்சு விடாது பொரிந்துக் கொட்ட, அதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்யாவோ, நிர்ச்சலமாய்ச் சிரித்தான்.

"இப்படிச் சிரிச்சா என்ன அர்த்தம்?" என்று மீண்டும் சம்பத் எகிற, சத்யாவோ.. "ஒருத்தரோட வாழ்க்கையை இன்னொருத்தங்க வாழ முடியாது சம்பத் சார்.

அவங்கவங்க என்ன சூழ்நிலையில இருக்காங்களோ, அதுப்படித் தான் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும்" என்று கூற, பின்னால் அமர்ந்திருந்த சம்பத்துக்கோ, "என்ன தான் மனுஷங்களோ.." என்று வெறுப்பாய் இருந்தது.

சம்பத்தின் வெறுப்பை இன்னமும் அதிகப்படுத்தும் விதமாக, அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்பரியைத் தேடும் பணியில் சத்யா, அந்த அஷோக்கையும் உடன் கூட்டிச் சென்றான்.

காரணம் கேட்டதற்கு, "அவர் தான இனிமே இந்தக் காலேஜை பார்த்துக்கணும். அதுமட்டும் இல்லாம, இங்க நிறையப் பேருக்கு என் மேலேயும் சந்தேகம் இருக்கு.. அந்தச் சந்தேகம் இவருக்கும் வந்துடக் கூடாது இல்லையா?" என்று சத்யா கேட்க, சம்பத்துக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லாது போனது.

எனவே உடனே.. "சார்.. அந்த ஆளுகிட்ட இருந்து நம்ம மேடமையும், காலேஜையும் காப்பாத்தறதுக்குத் தான் நீங்க இங்க வந்தீங்கன்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்று முறைப்புடன் கேட்க, அதற்குச் சத்யாவோ.. "அதெல்லாம் அப்போ சம்பத் சார்.. இப்போ தான் அங்கிள் திருந்திட்டாரே?" என்று பதில் கேள்வி கேட்டான் அவன்.

அதற்குச் சம்பத் பதில் கூறும் முன்னரே.. அங்கு வேகமான நடையுடன் வந்து சேர்ந்தார் அசோக்.

விரைவாக வந்தவர், நேரடியாகச் சத்யாவிடம் வந்து.. "சத்யா, அந்த ஜெகன் ஏதோ முக்கியமான விஷயம் பத்தி பேசணும்னு வர சொல்லியிருக்கார். கூடவே அம்பரியோட அப்பா, அம்மாவையும் கூடக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கார்." என்று கூறவும், சத்யாவின் நா வறண்டது.

அம்பரி காணாமல் போன அன்றே, அன்றைய தினத்தில் நடந்த விபத்துகள் எல்லாவற்றையும் சத்யா ஆராய்ந்திருந்தான். ஆனால் அதில் இவர்கள் பயப்படும்படியான எந்தத் தகவலும் இல்லை என்கவும் அப்போதைக்குச் சற்று நிம்மதியுற்றே இருந்தான் அவன்.

ஆனால் இப்பொழுது போலீஸ், ஒரு முக்கியமான விஷயம் என்று கூறி வரச் சொல்லவும், அதிலும் அம்பரியின் பெற்றோரையும் உடன் அழைத்து வரும்படி சொல்லவும் உண்மையில் உள்ளுக்குள் உதறிவிட்டது சத்யாவுக்கு.

அப்போதைய நிலையில் சத்யாவின் நிலையை அப்படியே புரிந்து கொண்டது என்னவோ சம்பத் தான். எனவே நடுங்கும் சத்யாவின் விரல்களைப் பற்றிக் கொண்டவன்.. "கவலைப்படாதீங்க சத்யா சார்.. பயப்படாம வாங்க.." என்று அவனுக்குத் தைரியம் கூறி கூட்டிக் சென்றான்.

அவர்கள் அனைவரும், அம்பரியின் பெற்றோருடன் சென்றது என்னவோ ஒரு அரசு மருத்துவமனை தான். அங்குச் சென்று இறங்கியதுமே, ஏற்கனவே அங்கு வந்து நின்றிருந்த ஜெகன், அம்பரியின் பெற்றோரை தனியே அழைத்து, அவர்களிடம் மெதுவாக ஏதோ கூற அவர்கள் இருவரும் வாய் விட்டு கதறினர்.

"ஐயோ அபி.." என்று கதறியபடி அம்பரியின் தாய் மயக்கமடைந்து கீழே விழ, அவருக்கு உதவி புரிய இரண்டு பெண் செவிலியர்கள் ஓடி வந்தனர்.

சத்யாவுக்கு மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து இருந்த சந்தேகம், அப்பொழுது ஊர்ஜிதமாகியது. இத்தனை நாட்கள் மனதில் கொண்ட தைரியமெல்லாம் நொடிப்பொழுதில் அடிசுவடு இன்றி மொத்தமாகக் கரைந்துவிட, கண்களெல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.

சம்பத் சத்யாவின் கரத்தை மட்டும் பற்றியிருக்கவில்லை என்றால், அவனும் நிச்சயமாய் மயங்கியே கீழே விழுந்திருப்பான்.

ஏனென்றால், இப்படிப் பிணவறையின் முன்பு தன் மனம் விரும்பிய ஒருத்தி உள்ளே பிணமாக இருப்பாளோ என்ற பயம் அவனை மொத்தமாய் உருக்குலைத்திருந்தது. இத்தனை நாட்களாய் அவள் மீத்திருந்த நேசம் அவனுக்குப் புரிந்திருந்தாலும், அவளைத் தேடுகையில், எப்படியிருந்தாலும் அவளைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற உறுதியுடன் சாதாரணமாய்த் தான் இருந்தான் அவன்.

ஆனால், இன்றோ மனதிற்குள், உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்ற அம்பரியின் தந்தை வெளியே வந்து ஜெகனிடம் மறுப்பாய் தலையசைக்க.. அப்பொழுது தான் நின்றிருந்த சுவாசம் மீண்டதாய் உணர்ந்த சத்யா.. அந்தக் கணம் அப்படியே தரையில் சரிந்தான்.

மனதில் கொண்டிருந்த அழுத்தம் நீங்கியதன் சிறு வெளிப்பாடு அந்த மயக்கம். இதுவரையிலும் அம்பரிக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததால் உண்டான ஆசுவாசம் அந்த மயக்கம். ஆனால் அந்த மயக்க நிலை தெளியும் முன்னர், அவனை எழுப்பினான் ஜெகன்.

இவன் மெல்ல விழிகளைத் திறந்து பார்க்க.. சத்யாவின் முன்னே நின்றிருந்த ஜெகனின் கையிலிருந்ததோ அம்பரியின் மொபைல் போன்.
 
Top